Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கடத்தல்காரன்

 

ரயில் செம்பவாங் ரயில்நிலையத்தில் நின்றபோது தான் அந்தச் சீனன் ஏறினான். காலில் அணிந்திருந்த சப்பாத்து மட்டும் தான் மிகவும் பழையதாக தூக்கியெறிய வேண்டிய நிலையில் இருந்தது. தோளில் தொங்கிய பழுப்புநிறத் துணிப்பை புதியதாகப் பளிச்சென்றிருக்க, மொட்டையடித்து ஒரே வாரமாகியிருந்தது போன்ற அரை அங்குலக் கேசமும், புதியதும் இல்லாத மிகப் பழையதுமில்லாத அவனது உடைகளும் கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகத் தான் அவனைப் பார்க்கும் யாருக்கும் தோன்றுமே தவிர வித்தியாசமாக எதுவுமே இல்லை அவனிடம். வீட்டில் அணிவது போன்ற எளிய அரைக்கால் சட்டையும் காலர் இல்லாத வெள்ளை டீ சட்டையும் வாழ்வில் ஒருமுறை கூட தீவை விட்டு கடல்கடக்காத உள்ளூர்வாசி தான் என்று எடுத்துக் காட்டின. உள்ளே நுழையும் போது, கூட்டமே இல்லாத மதிய நேரத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறிய தேவையில்லாத அவனுடைய அவசரமும் பரபரப்பும் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ‘டிரெயின் டோர்ஸ் க்ளோஸிங்,.. கிக் கிக் கிக்க்கிகிக்,..’

தோள் பையிலிருந்து கசங்கிய ஒரு ப்ளாஸ்டிக் பையை எடுத்து அதற்குள் கையிலிருந்த ஈர மடக்குக் குடையை வைத்துச் சுருட்டிப் பைக்குள் திணித்தான். எதிர் வரிசையில் உட்கார இடமிருந்தும் மத்திய வயது அலுவலர் அருகில் சென்று நின்று கொண்டு அவர் காதில் ஏதோ சொல்லக் குனிந்தான். அதைச் சற்றும் எதிர்பாராத அவர் சடாரென்று துணுக்குற்றவர் பட்டென்று சுதாரித்துக் கொண்டு சில கணங்கள் கவனமாகக் கேட்டார். அவரது முகம் முதலில் லேசான எரிச்சல் காட்டி அதைத் தொடர்ந்து அலுப்பையும் வெளிப்படுத்தியது.
யார் காதிலும் விழுந்து விடாமல் பேசுவதில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தான் போல. தன் உதட்டசைவில் பிறருக்கு சொல்வது தெரிந்து விடும் என்ற கவனத்துடன் வாயசைவதைக் கூட தன் கைவிரல்களால் மறைத்துக் கொண்டான். முகத்திலிருந்து அவன் கையை எடுத்ததும் நன்றாகப் பின்னால் சாய்ந்து அமர்ந்து அவனை முறைத்தார். மேலும் கீழும் பார்த்தார்.

’எத்தனை பேரப் பார்த்திருப்பேன், இதெல்லாம் என்னை என்ன செய்து விடும்’, என்ற அலட்சியத்துடன் பார்த்துவிட்டு சீனன் நகர்ந்து நடந்தான். அதன் பிறகு, அவன் போகுமிடமெல்லாம் பார்வையைத் திருப்பி அவனையே கூர்ந்து நோக்கியவராக உட்கார்ந்திருந்தார் அவர். ‘யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்,.. இஃப் யூ ஸீ எனி சஸ்பிஷியஸ் லுக்கிங் ஆர்டிக்கிள் ஆர் பெர்ஸன், ப்ளீஸ் இன்ஃபார்ம் த ஸ்டாஃப்,..’
மெதுவாகப் பேசினால் தூரத்தில் இந்தியாவிலிருக்கும் மனைவிக்குக் கேட்காமல் போய்விடுமென்று நினைப்பவர் போல இந்திய நாட்டு ஊழியர் ஒருவர் சத்தமாக, “ஒருவாரந்தான மீனா ஆவுது, அதெல்லாம் இனிமே தாம்மா தெரியும். ம்,. கவலப்படாத, தினமும் கூப்டுவேன். நீ பாப்பாவ எப்பவும் நல்லா கவனமாப் பாத்துக்க”, என்று தொடங்கி தொடர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டு போனார். சிலர் சீனன் மீதிருந்த பார்வையைக் கொஞ்சநேரம் இவர் மீது திருப்பினர். ”மெதுவாப் பேசினாலும் இந்தியாவுல இருக்கற உங்க மனைவிக்கு நல்லாவே கேட்கும்ங்க”, என்று சொல்லத் தோன்றியது.

சீனன் இன்னொருவரிடம் பேசவென்று அருகில் போகவும் இயோ ச்சூ காங்கில் ரயில் நிற்கவும் சரியாக இருந்தது. பயணி இறங்கிவிட்டார். ஓர் அரிய பயனரை இழந்த விற்பனையாளரின் ஏமாற்றத்தை முகத்தில் ஒரேயொரு நொடி காட்டிய சீனனின் நோக்கம் தான் என்னவென்று கைபேசி, ஐபாட், பீஎஸ்பீ, மடிக் கணி, கணியட்டை என்று எதிலும் புதையாத நிகழ்காலத்துப் பயணிகளில் சிலர் யோசித்தனர். ஒரேயொரு யுவதி மட்டும் தன் குறுஞ்செய்தி அழுத்தல்களுக்கு இடையேயும் சீனன் குறுக்கும் நெடுக்கும் நகருந்தோறும் லேசாக நிமிர்ந்து பார்த்துக் கொண்டாள். அருகில் யாரோ ஒருவருடைய கைபேசி நாய்க்குட்டியாகி சன்னமாகக் குரைத்தது.

தோ பாயோவில் ஏறிய மலாய்ப் பெண்மணியைப் பார்த்துப் புன்னகைத்தான் சீனன். அந்த மாது தனக்குத் தெரிந்தவரோ என்று சற்றே யோசிப்பவர் போலத் தோன்றியது. சீனன் தணிந்த குரலில் ‘ஹாய் மேம்’, என்றான். அவரும் தயக்கத்துடன் புன்னகைத்தபடியே அமர்ந்து கொண்டார். அடுத்த இருக்கையில் உட்கார்ந்து அவர் காதில் ஏதோ கூறினான். முன்பு சீனரிடம் பேசியதையே தான் சொன்னானா இல்லை வேறெதுவுமா என்று யோசித்த பயணிகள் ஒருவருக்கொருவர் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர். சீனனை ஏற்கனவே அறிந்திருந்தவர் போலிருந்த ஒரு மூதாட்டி, “எப்பவும் இவனுக்கு வேற வேலையில்ல,..”, என்று தொடங்கி அருகில் அமர்ந்திருந்த இன்னொரு பெண்மணியிடம் சீனத்தில் அவனைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

சீனன் பேசிக் கொண்டிருக்கும் போதே மலாய் மாது விரல்களை விரித்துக் காட்டி முடியாதென்ற பாவத்துடன் தலையாட்டினார். ஒரேயொரு கணம் அவன் முகத்தில் ஏமாற்றம் மின்னியது. ஏமாற்றத்தை முகத்தில் காட்ட விரும்பாதவனாக வலுவில் அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி எழுந்தான். இதற்குள் தூங்காத, கண்மூடாத மேலுமதிக பயணிகளின் கவனம் இவன் பக்கம் திரும்பியது. என்ன நடக்கிறதென்று அறியும் ஆவல் சிலருடைய முகங்களிலும் முன்பைவிட அதிகமாக அப்பியிருந்தது. யாருடைய கைபேசியோ, ‘முன்பே வா என் அன்பே வா’ என்று இனிமையாகச் சிணுங்கி அழைத்தது.

வெளிநாட்டு இந்திய ஊழியர் சட்டென்று பரபரப்படைந்தார். எந்த நிறுத்ததில் ரயில் நிற்கிறதென்று தெரியாத அவர் வேறு யாரிடமும் கேட்கவும் தயங்கியவரைப் போல திருதிருவென்று விழித்தார். வாசித்தறியும் முயற்சியில் குனிந்து வெளியே வெளியே பார்வையை ஓட்டி பெயர்ப்பலகையைத் தேடினார். தமிழ் பேசக் கூடியவரோ தான் கேட்பதைப் புரிந்து கொள்ளக் கூடியவரோ யாரும் அருகில் இருப்பாரா என்று ஆராய்பவரைப் போல உள்ளுக்குள்ளும் சுற்றுமுற்றும் பார்த்தார்.

அடுத்த நிறுத்தத்தில் ஏறியவர்களுடன் மழையின் ஈரவாசமும் உணவுப் பொட்டலங்களிலிருந்து குபீர் மசாலா வாசமும் சேர்ந்தே வந்தன. ரயிலுக்குள் நடக்கும் எதையுமே உணராத ஒரு ஜோடி தன்னுடைய சிறு உலகை சின்ன அசைவுகளாலும் சங்கேதங்களாலும் நிரப்பியபடி இருந்தது. மற்ற யாருக்கும் அச்சிறு உலகைப் பற்றிய கவனமுமில்லை; அக்கறையுமில்லை.

ஒரு சீனப் பெண்மணி இடது புறம் அவரது சிறிய மகளுடன் உட்கார்ந்து கொண்டாள். சிறுமியின் இடப்புறமிருந்த இருக்கை காலியாக இருக்கவே சீனன் அங்கே பாய்ந்தமர்ந்தான். அந்தத் தாயை நிமிர்ந்து பார்த்தான். அவரோ அவனைப் பொருட்படுத்தவேயில்லை. தன் பைக்குள்ளிருந்து சால்வையை எடுத்து அழகாக மடித்து தோளைச் சுற்றி போர்த்திக் கொண்டார். மகளைப் பார்த்து, “டு யூ வாண்ட் டு வேர் யுவர் ஸ்வெட்டர் டார்லிங்?”, எனக் கேட்டதற்கு சிறுமி, “நோ”, என்று சொல்லிவிட்டு அம்மா மீது செல்லமாகச் சாய்ந்து கொண்டது. “வுட் யூ வாண்ட் டு ரீட்?”, என்றதற்கும் சாய்ந்தவாறே தலையாட்டி மறுத்து விட்டது.

அந்தத் தாயின் பார்வையை எப்படியாவது பெற்றுவிடும் நோக்கில் அவரையே உற்று நோக்கியவாறே அமர்ந்திருந்தான் சீனன். சிறுமி அம்மாவிடம் எதையோ சொல்லத் திரும்பிய போது அவன் அவரைப் புன்னகைத்தான். அந்தப் புன்னகை அவரை ஒன்றுமே செய்யவில்லை. சிறுமி மட்டும் வெகுளியாகச் சிரித்தாள். உள்ளே நிலவிய அமைதியைக் கிழித்த கைக்குழந்தையின் கூர்மையான வீரிடல் இரண்டு கதவுகள் தாண்டிக் கேட்டது.

சிறுமியின் தலைக்கு மேலே தன் தலையைச் சாய்த்தவாறே அந்த அம்மாவின் காதில் சொல்ல ஆரம்பித்தான். கண்களையும் உதடுகளையும் லேசாகச் சுழித்து ஒரு பார்வை பார்த்தாரே தவிர ஒரு சொல் கூட உதிர்க்கவில்லை. கதவருகே இருந்த இருக்கை காலியானதுமே சட்டென்று மகளை வலப்பக்கமாக மாற்றி உட்கார வைத்துக் கொண்டார். சிறுமி உட்கார்ந்திருந்த இருக்கையில் உடனேயே பருமனான ஒரு மலாய் ஆண் அமர்ந்தது அந்தத் தாய் முகத்தில் நிம்மதியைக் கொணர்ந்தது போலிருந்தது. கனமாக உட்கார்ந்தவர் அடுத்த கணத்திலேயே கண்களை மூடித் தலையைப் பின்புறம் சாய்த்துக் கொண்டு விட்டார்.

பயணிகள் எல்லோருக்கும் சீனன் ஒவ்வொருவர் காதிலும் சொன்னது தான் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் மிகுந்து போலத் தெரிந்தது. ஒவ்வொருவர் கற்பனையும் அவரவர் மனப்போக்கில் விரிந்தது. குழுவாகச் சேர்ந்து வந்திருந்த பயணிகள் கதவருகே நின்றபடி அவர்களுக்குள் கிசுகிசுத்தனர். கலகலவென்று சிரித்துக் கொண்டே சீனனையும் இடையிடையே ஒரு பார்வை பார்த்துக் கொண்டனர். ஏதும் ஊடக விளையாட்டோ என்று சந்தேகித்த ஒருசிலர் சுற்றுமுற்றும் கேமராவைத் தேடியபடி ஒரு கண்ணைச் சீனன் மேல் வைத்திருந்தனர்.

யாருடைய பார்வையும் சீனனை ஒன்றும் செய்யவில்லை. அவன் தன்னியல்புடன் வேறு யாரிடம் போய்ப் பேசுவோமென்று பயணிகளை ஆராய்ந்தபடி இருந்தான். ’ஈட்டிங் ஆர் டிரிங்கிங் இஸ் நாட் அலௌட் இன் ஸ்டேஷன்ஸ் அண்ட் டிரெயின்ஸ்,..’ அதுவரை சாவகாசமாக ‘பன்’னை மறைத்து மென்று கொண்டிருந்த பள்ளி மாணவன் பரபரப்புடன் சட்டென்று கடைசி பாதியைத் தன்வாய்க்குள் அடைத்துக் கோண்டான். எதிர்ப்பக்கத்தில் அதைக் கவனித்த ஒரு மாணவி நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

பயணிகளைக் கூர்ந்து நோக்கியவாறே அமர்ந்திருந்தான் சீனன். நிறுத்ததில், சடாரென்று எழுந்து கொண்டான். அடுத்த கதவுக்கருகே கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த வெள்ளைக் காரரிடம் சென்று ஏதோ சொல்லிக் கொண்டே கைகுலுக்கினான். மென்னகையுடன் கைகுலுக்கியவருக்கு அருகில் கம்பியைப் பிடித்தபடி நின்று கொண்டான். காதருகில் குனிந்து அவன் சொன்னவற்றை புன்னகையுடன் தீக்ஷை பெறும் கவனத்துடன் கேட்க ஆரம்பித்தார். சட்டென்று அந்த வெள்ளை முகத்தில் ஒரு மஞ்சள் புன்னகை விரிந்தது. அந்தப் புன்னகை ஒரே கணத்தில் மறையவும் முடியாமல் தேய்ந்து சலிப்பைக் காட்டியவாறு அப்படியே உறைந்தது. வெள்ளைக்காரருடைய முகபாவம் சீனனை மிகவும் குழப்பியிருக்க வேண்டும். அவர் முகத்தையே பார்த்தவாறு சில நொடிகள் நின்றான். தோபிகாட் நிறுத்தத்தில் எதிர் திசையில் வரவிருந்த ரயிலுக்குக் காத்திருந்த பயணிகளுக்காக, ‘உங்கள் பாதுகாப்பை முன்னிட்டு அன்புகூர்ந்து மஞ்சள் கோட்டுக்குப் பின்னால் நில்லுங்கள்’ என்று வேண்டினார்கள். உள்ளே நுழைந்து இருக்கையைப் பிடிப்பதே வாழ்வின் குறிக்கோள் போல பொறுமையின்றி நின்றவர்களைக் கடந்து ஒன்றுமே நடக்காதது போல அந்த வெள்ளைக்காரும் இறங்கி நடந்தார். வெள்ளைக்காரருக்குப் பின்னால் வெளியேறிய இந்திய நாட்டு ஊழியர் அவன் அவரிடம் பேசியதையெல்லாம் தெளிவாகக் கேட்டிருப்பார் போலும்.

சீனனுடைய கையில் இரண்டு வெள்ளி தாளை அழுத்தி விட்டு, வேறு யாரும் பார்த்து விடக் கூடாதே என்று அஞ்சியவர் போல விருட்டென்று வேகமாக விரைந்தார்.

- மே 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
வெள்ளிக்கிழமை மாலைகள் குதூகலத்தையும் திங்கட்கிழமை காலைகள் மிகுந்த மனச்சோர்வையும் கொணர்ந்தன. பள்ளிக்குப் போக வேண்டுமென்ற நினைப்பே என் வயிற்றின் அமிலக் கொதிப்பை அதிகரித்தது. பள்ளியை மிகவும் அஞ்சினேன். ஏதோ வேற்று கிரகத்தில் இருப்பது போன்ற அசௌகரிய உணர்வுடனேயே பள்ளியில் எனது ஒவ்வொரு ...
மேலும் கதையை படிக்க...
இலையுதிர்காலம் 1946. குவாமிங்தாங் படைகளுக்கெதிராக ஒரு சிறு தாக்குதல் நடத்துவதென்று எங்கள் கடலோரப் போர்ப் படையின் தலைவர் முடிவெடுத்ததுமே, போர்ப்படைப் பிரிவினருக்கு உதவவென்று எங்கள் நாடகக் குழுவிலிருந்து சிலர் அனுப்பப் பட்டனர். நான் பெண் என்பதாலோ என்னவோ, முதலுதவிப் பிரிவில் என்னை ...
மேலும் கதையை படிக்க...
மின் தூக்கியில் நான்காவது மாடிக்குப் போகும் வழியில், "நா பாஸாயிட்டேன்னு சொல்லிட்டாங்கல்ல. இன்னும் என்ன டெஸ்ட்ன்றீங்க?", என்று தீவிர முகபாவத்துடன் கேட்ட கமலாவிடம், "இது மெடிகல் டெஸ்ட். நாளைக்கி தான் உனக்கு அப்பாயிண்ட்மெண்ட் கெடச்சிருக்கு", என்றேன். நாங்கள் நேராக அங்கே போயிருக்க ...
மேலும் கதையை படிக்க...
'என்ன சட்டம், என்ன ஒழுங்கு, இந்த ஊருக்கு இணையே இல்ல' இதையே ஓராயிரம் முறை சொல்லியிருப்பேன். காலை வைக்கக் கூசும் ரயில் நிலையத்தரைகள், எறும்பின் சுறுசுறுப்புடன் பல இனமுகங்கள், சாலையில் வரிசையாய் வழுக்கிக் கொண்டோடும் வாகனங்கள், விண்ணைத்தொட்ட கட்டிடங்கள், கருத்துடன் வளர்க்கப்படும் ...
மேலும் கதையை படிக்க...
“பேசாம தற்கொல பண்ணிக்லாம்னு தோணுது, மிஸிஸ் வாங்”, என்று முனகினார். சட்டென்று என் மூளை ஸ்தம்பித்தே விட்டது. உடம்பு சரியில்லையோ. எழுபதைக் கடந்த ஒரு மூதாட்டியின் வாயிலிருந்து இப்படியான சொல் வருவதென்றால்? என்ன சொன்னார் என்றே புரியாதபடி முதலில் மிகுந்த மென்குரலில் ...
மேலும் கதையை படிக்க...
தூரத்தே தெரியும் வான் விளிம்பு
அல்லி மலர்கள்
திரைகடலோடி,..
ஈரம்
நெய் பிஸ்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)