கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 27,872 
 

ஜெர்மி இன்னும் நம்பமுடியாமல் தனக்கு எதிரே டேபிளில் அமர்ந்திருந்த -அவனுடைய மனைவியாக ஒத்துக் கொண்டுவிட்ட-அரபெல்லாவைப் பார்த்தான். வெய்ட்டர் பக்கத்தில் வர ‘எனக்கு ஒரு எஸ்பிரஸ்ஸோ அப்புறம் என்னோட வருங்கால மனைவிக்கு-அவனுக்கே அப்படிச் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது-ஒரு மின்ட் டீ’ என்றான்.

‘வெரி குட் ஸார்!’ – வெய்ட்டர்

அந்த ஹோட்டலுக்குள் அமர்ந்திருந்த கூட்டத்தை தலையை திருப்பி திருப்பி பார்த்தான் ஜெர்மி. அரபெல்லாவுக்கு வந்த கையசைப்பும் பறக்கும் முத்தங்களையும் பார்த்தால் அவளுக்கு அங்கே ரெகுலராக வருகிற எல்லாரையும் தெரியும் போல. ஜெர்மி இந்த ஹோட்டலுக்கு இதுவரை வந்ததில்லை. அவன் ஸீட்டில் சாய்ந்து அமர்ந்து ரிலாக்ஸாக இருக்க முயற்சித்தான்.

அரபெல்லா அவனை வெட்கமாகப் பார்த்து வைக்க, முதல் முறை அவளை சந்தித்த நினைவுகள் மொத்தமாய் கிளர்ந்து வந்தன.

முதலில் அவர்கள் சந்தித்தது அஸ்காட்-பெர்க்க்ஷைரில் குதிரை ரேஸ் நடக்கிற இடத்தில்..அவள் உள்ளே இருந்து வெளியே பார்த்துக் கொண்டிருக்க, அவனோ வெளியே இருந்து உள்ளே…எப்போதும் அவன் அப்படித்தான். திடீரென்று அவனைப் பார்த்து புன்னகைத்தாள்-அவளுடைய ஃபேவரைட் அதுவென்று பிறகு தெரிந்தது-அவன் காதில் கிசுகிசுப்பாக ‘டிரம்பெட்டரில் உன் பணத்தை கட்டு’ என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். அவள் போன திசை, குதிரை ரேஸ் நடக்கும் இடத்தில் ப்ரைவேட் பாக்ஸஸ் இருக்கும் இடம். பணம் கொழுத்தவர்கள் அமர்ந்திருக்கும் இடம்.

அவளுடைய யோசனையை நம்பி பணத்தை டிரம்பெட்டரின் மீது கட்டிவிட்டு-அது அவனின் இரண்டு நாள் சம்பளம்-ஸ்டாண்டுக்கு வந்து குதிரைகளை பார்க்கும் முன்பே ரிஸல்ட் தெரிந்துவிட்டது 5-1. நல்ல லாபம்!

அவளுக்கு நன்றி சொல்லலாம் என்று அவசரமாய் திரும்பி போனவன்-இன்னும் ஒரு டிப்ஸ் கிடைக்குமா?-அவளைக் காண முடியாமல் ஏமாந்தான்.

அடுத்து ‘டெய்லி எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் கொடுத்திருந்த டிப்ஸை நம்பி பணத்தை கட்ட, புஸ்ஸென்று போய்விட்டது. நாளை பத்திரிக்கையில் ‘இதுவும் ஓடியது’ என்று நியூஸ் வரப் போகிற குதிரை.

ஜெர்மி மறுபடியும் வந்தான் அவளைப் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில். ரேஸ் கோர்ஸ் முழுதும் விலை உயர்ந்த சூட்களில் வந்திருந்தவர்களால் நிரம்பி வழிந்தது. பணக்காரர்கள் எல்லாரும் பார்க்க ஒரே மாதிரி இருந்தார்கள். அவர்களின் மனைவிகளும் கேர்ள் ஃபிரன்ட்களும் புதிதான உடைகளில், அலங்காரத் தொப்பிகளில் ஒரே மாதிரி தெரியக்கூடாது என்று பிடிவாதமாக வந்திருந்தார்கள். சிவப்பு நிற உடை அணிந்திருந்த குதிரைஜாக்கியிடம் குனிந்து பேசிக் கொண்டிருந்த உயரமான பணக்கார துரை ஒருவரின் பக்கத்தில் அவள் நின்றிருந்ததைக் கண்டுபிடித்துவிட்டான். அவள் அவர்கள் பேசுவதை கேட்பது மாதிரி தெரியவில்லை, சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் ஜெர்மியைக் கண்டு கொண்டதும் அதே புன்னகை அவனுக்கு மறுபடி கிடைத்தது. நெட்டையனிடம் ஏதோ சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு தாண்டி அவனிடம் வந்தாள்.

‘என் யோசனையை கேட்டு நடந்தீர்களா?’ என்றாள்.

‘யெஸ்…யெஸ்..தாங்க் யூ! எப்படி அவ்வளவு உறுதியாக சொன்னீர்கள்?’ என்றான்.

‘அது என் அப்பாவினுடைய குதிரை..அதான்!’

‘அடுத்த முறையும் அதிலேயே பணம் கட்டலாமா?’

‘நிச்சயம் வேண்டாம்! உறுதியா தெரியாம எதிலேயும் கட்டாதீங்க! என்னை இன்றைக்கு டின்னர் கூட்டிட்டுப் போவீங்களா? அதுக்கான பணம் ஜெயிச்சீங்கதானே!’ ஜெர்மியால் உடனே அதற்கு பதில் கொடுக்க முடியவில்லை அவனால் முதலில் அதை நம்பமுடிந்தால் தானே. சரியாகத்தான் கேட்டோமா? பதட்டமாக கேட்டான் ‘நீங்க எங்கே போகணும்னு விரும்பறீங்க?’

‘ஐவி, இரவு எட்டு மணிக்கு. பை தி வே…என் பேர் அரபெல்லா வார்விக்’. வேறு ஏதும் சொல்லாமல் ஹை ஹீல்ஸ் டக் டக்கென்க திரும்பிப் போய் தன் இடத்தில் நின்று கொண்டாள்.

அவள் நைட் டின்னருக்கு கூப்பிட்டது இருக்கட்டும் ரெண்டாவது முறை அவனைப் பார்த்ததே அவனுக்கு ஆச்சர்யமான விஷயம். அவளே டின்னருக்கான பணத்தை கட்டிவிட்டிருந்தாள். அவனுக்கு அதிலே நஷ்டம் ஏதுமில்லை

சொன்ன நேரம் தாண்டி சில நிமிடத்தில் அரபெல்லா ரெஸ்டாரன்டுக்குள் நுழைந்தாள். அவள் வந்ததுமே அக்கம் பக்கத்தில் இருந்த டேபிள்களிலிருந்து ஆண்பார்வைகள் அவளைப் பின் தொடர்ந்து கடைசியில் ஜெர்மியிடம் வந்து முடிந்தன. ஜெர்மி முதலில் டேபிள் புக் செய்ய வந்தபோது அவனை அனுமதிக்கவேயில்லை ரெஸ்டாரன்ட் ஆட்கள். கடைசியில் அவள் பேர் சொன்னதும் தான் தெரிந்தது ஏற்கனவே புக் ஆகியிருக்கிறது என்று. அவள் அவன் பக்கத்தில் வருமுன்னரே அவன் எழுந்து நின்றான். அவனுக்கு எதிரில் உட்கார்ந்ததும், வெய்ட்டர் அவளருகே வந்து

‘வழக்கம் போல தானே மேடம்?’ என்றான்.

ஜெர்மியைப் பார்த்த கண்ணை எடுக்காமலேயே ‘ஆமா’ என்றாள்.

அவளுடைய ஃபேவரைட்டான ‘பெலினி’ வந்து சேர்ந்தபோது ஜெர்மி கொஞ்சம் ரிலாக்ஸாகி இருந்தான். அவள் அவன் சொன்னதையெல்லாம் கேட்டு, அவனின் ஜோக்குகளுக்கு சிரித்து, அவன் வேலை செய்கிற பேங்க் வேலை பற்றி எல்லாம் கேட்டாள்.அவன் பேங்க் பற்றி நிறையச் சொன்னான் (அவனுடைய பதவி பற்றியும் வருமானம் பற்றியும் மிகையாக அளந்துவிட்டிருந்தான்).

டின்னர் முடிந்தது-கொஞ்சம் காஸ்ட்லியாகவே இருந்தது அவன் எதிர்பார்த்ததை விட-அவளை பெவிலியன் ரோடில் இருந்த அவள் வீட்டுக்கு காரில் கொண்டு போய் விட்டான். ஆச்சர்யம் அவனை வீட்டுக்குள் வந்து ஒரு காபி குடிக்குமாறு கேட்டதுதான். பேராச்சர்யம் அவர்கள் கடைசியில் படுக்கையில் ஒன்றாக விழுந்ததுதான்.

ஜெர்மி முதன் நாள் டேட்டிங்கின் போதே எந்தப் பெண்ணுடனும் சல்லாபித்ததேயில்லை. ஆனால் அன்று அதுதான் நடந்தது. மறுநாள் காலை அவன் கிளம்பிய போதும் அவன் நினைக்கவேயில்லை அவள் மறுபடி கூப்பிடுவாள் என்று. அன்று மதியமே அவனை வீட்டுக்கு லஞ்சுக்கு அழைத்தாள். அடுத்த ஒரு மாதத்தில் அவர்கள் ஒரு இரவு கூட பிரிந்திருந்ததே இல்லை.

ஜெர்மிக்கு அவளிடம் பிடித்திருந்ததே, அவனால் அவள் எப்போதும் போகக்கூடிய பெரிய இடத்துக்கு எல்லாம் கூட்டிப் போகமுடியாமல், ஒரு சைனீஸ் அல்லது இண்டியன் ரெஸ்டாரன்டுக்கு கூட்டிப் போனாலும் அவள் சந்தோஷமாக வந்து, பில்லிலும் பாதியைப் பகிர்ந்து கொண்டாள். ஒரு நாள் இரவு அவனிடம் ‘நான் உன்னை காதலிக்கிறேன் நீயும் தானே?’ என்று கேட்டது இன்ப அதிர்ச்சி

ஜெர்மி ஒரு போதும் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொண்டதில்லை இந்த ஒரு மாதத்தில். அவளும் தன் ‘ஸெட்’டில் உள்ள நபர்களிடம் ஜெர்மியை அறிமுகப்படுத்தியதே இல்லை. ஆனாலும் முழங்காலில் நின்று கொண்டு ஒருநாள் டான்ஸ் ஃப்ளோரில் அவளிடம் ‘கல்யாணம் பண்ணிக்கிறியா’ என்று சொன்னபோது அவள் ‘யெஸ்’ சொன்னாள். நம்பவே முடியவில்லை.

நாளைக்கு உனக்கு ஒரு மோதிரம் வாங்கித் தருவேன்’ என்றான் வறண்டு போய் இருக்கிற பேங்க் பேலன்ஸைப் பற்றியெல்லாம் யோசிக்காமல். அதுவும் அவளைச் சந்தித்த பிறகு படு மோசமாகப் போய்க்கொண்டிருந்தது.

‘ஒரு நல்ல மோதிரத்தை திருடறதை விட்டுட்டு எதுக்கு விலை கொடுத்து வாங்கிக்கிட்டு’ என்றாள் அரபெல்லா கூலாக.

அவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தாலும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிட்டது… அவள் ஜோக்கடிக்கவில்லை!

அந்த விநாடியில்…அந்த விநாடியில்தான் அவன் அவளிடமிருந்து விலகிப் போயிருக்கவேண்டும். அவனால் அவளை இழக்க முடியாது அதனால் தொடர்ந்தான். இந்த தேவதையை கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்நாள் முழுதும் வாழ ஒரு மோதிரம்தானே திருடணும் அது ஒரு சின்ன விலைதான் என்ற முடிவுக்கு வந்தான்.

‘எந்த மாதிரி மோதிரம் நான் திருடணும்?’என்றான் இன்னும் அவளை நம்ப இயலாமல். (சீரியஸ்தானா?)

‘இருக்கிறதிலேயே காஸ்ட்லியானதா. இன்ஃபாக்ட் எனக்குப் பிடிச்சதை நான் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வச்சிருக்கேன்.’ என்றவள் தன்னிடம் இருந்த டீ பீர்ஸ் (De Beers) கேட்டலாக்கை கொடுத்தாள். நாப்பத்து மூணாம் பக்கத்தில் இருக்கு. அதுக்கு பேரு கேன்டைஸ் டயமண்ட்.’

‘நான் இதை எப்படி எடுக்கணும்னும் ஏற்கனவே திட்டம் போட்டு வச்சிருக்கியா?’என்று கேட்டான் ஜெர்மி அந்த மஞ்சள் நிற வைரத்தின் போட்டோவைப் பார்த்தபடியே.

‘அது ரொம்ப ஈஸி டார்லிங்! நீ செய்ய வேண்டியது எல்லாம் என்னோட இன்ஸ்ட்ரக்க்ஷனை ஃபாலோ பண்றதுதான்’அதை அடுத்து அவள் முக்கியமான விஷயங்களை அவனிடம் சொல்லி முடிக்கும் வரையில் ஜெர்மி வாயைத் திறக்கவேயில்லை.

இதுதான் நடந்தது. இப்படித்தான் அவர்கள் இப்போது இந்த இடத்தில் வந்து அமர்ந்திருக்கிறார்கள். ஜெர்மி விலை உயர்ந்த சூட் மற்றும் டை அணிந்து, அதி உயர்ந்த வாட்ச் அணிந்து –இவையெல்லாம் அரபெல்லாவின் அப்பாவினுடையது-அமர்ந்திருந்தான்.

‘இதெல்லாம் இன்னிக்கு ராத்திரிக்குள் அது இருந்த இடத்துல கொண்டு போய் வச்சாகணும். இல்லேன்னா அப்பா என்ன ஏதுன்னு கேள்வி கேக்க ஆரம்பிச்சிடுவார்’

‘கண்டிப்பாக’ என்றான் ஜெர்மி பணக்கார உடையில் இருந்த சந்தோஷத்தில்.

வெய்ட்டர் திரும்பி வர, இரண்டுபேருமே பேச்சை நிறுத்தினார்கள். அவள் முன்னே ‘மின்ட் டீ’யை வைத்துவிட்டு ,அவனுக்கு காபியை வைத்தான். ‘வேற ஏதாவது?’

‘நோ…தாங்க்ஸ்’

‘நீ ரெடியா இருக்கியா?’ அவள் முழங்கால் அவனின் முழங்கால்களை இடித்தது. அஸ்காட்டில் அவன் பெற்ற அதே புன்னகையுடனிருந்தாள்.

‘ம்..ரெடி!’ என்றான் நம்பிக்கையாக.

‘குட்..நீ வரும் வரை நான் இங்கேயே இருப்பேன். இந்த நாள் எனக்கு எவ்வளவு முக்கியமானது தெரியுமா?’ என்றாள். மறுபடி புன்னகை.

ஜெர்மி ஆமோதிப்பதாக தலையாட்டிவிட்டு எழுந்தான். ஏதும் பேசாமல் அந்த ஹாலைவிட்டு வெளிவந்து காரிடாரில் நடந்து, சுழன்று கொண்டிருந்த கதவின் ஊடாக ரெஸ்டாரன்டை விட்டு வெளியேறினான். ஒரு சூயிங் கம்மை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். பதட்டம் தணிய உதவியது. பொதுவாக இது அரபெல்லாவுக்கு பிடிக்காது. இப்போது சரி என்று சொல்லியிருந்தாள். அவன் நெர்வஸாக பிளாட்ஃபார்மில் கொஞ்ச நேரம் நின்று, டிராஃபிக்கை கவனித்துவிட்டு ரோட்டை க்ராஸ் செய்தான். உலகின் அதிகமான வைரங்களை விற்கிற நிறுவனமான De Beers-ன் கடைக்கு அருகே வந்ததும் தோன்றியது…இதுதான் கடைசி சான்ஸ்! அவன்நினைத்தால் அவளை விட்டு போய்விடலாம். ஆனால் அவளின் நினைவு விடவில்லை.

De Beers கடையில் கதவு மணியை அடித்தபோதுதான் உணர்ந்தான் உள்ளங்கை எவ்வளவு வியர்த்து இருக்கிறது என்று. அரபெல்லா அவனை எச்சரித்திருந்தாள் ஏதோ ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குள் போகிறமாதிரி எல்லாம் உள்ளே போய்விடக்கூடாது. அவர்களுக்கு உன்னுடைய தோற்றம் பிடிக்கவில்லை என்றால் கதவையே திறக்கமாட்டார்கள் என்று. அதனால்தான் அவளுடைய அப்பாவின் காஸ்ட்லியான உடையை,வாட்ச்சை,கழுத்து டையை அவனுக்கு அணிவித்திருந்தாள். இந்த டை’தான் அந்த கதவை திறக்கும் என்று சொல்லியிருந்தாள். உன் உடையையும் வாட்ச்சையும் பார்த்த பிறகுதான் ப்ரைவேட் ரூமுக்கு அழைப்பார்கள் என்றும் சொன்னாள். அப்போதுதான் அவர்கள் நம்புவார்கள் நீ அவர்களின் கஸ்டமராக தகுதியான நபர் என்று.

அவள் சொன்னது சரி!. காவலாளி திறந்ததும் அவனை ஒரு தடவை பார்த்துவிட்டு பின்னர் கதவை விரியத் திறந்து, ‘குட் மார்னிங் ஸார். ஹவ் மே ஐ ஹெல்ப் யூ?’ என்றான்

‘நான் ஒரு என்கேஜ்மென்ட் மோதிரம் வாங்கணும்’ என்றான்.

‘தயவு செய்து உள்ளே வாருங்கள்’.

நீண்ட வராந்தாவில் அவனோடு நடந்தான். சுவரில் மாட்டப்பட்டிருந்த, அந்த நிறுவனம் 1888 ல் ஆரம்பித்ததில் இருந்து என்ன நடந்தது என்று காண்பித்த போட்டோக்களைப் பார்த்துக் கொண்டே வந்தான். காவலாளி ஜெர்மியை இன்னொரு நெட்டையான ஆளிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தான். அடர்ந்த கறுப்பு சூட்,வெள்ளை சர்ட்,கறுப்பு டை அணிந்த அந்த ஆள் பணிவாக குனிந்து ‘குட் மார்னிங் ஸார்!’ என்றார். ‘என் பெயர் குரோம்பி’. ஜெர்மி சின்னதாய் இருந்த ஒரு ப்ரைவேட் ரூமுக்குள் அவனோடு நுழைந்தான். அந்த அறையின் மத்தியில் ஒரு முட்டை வடிவ டேபிள் ஒன்று இருந்தது கறுப்பு வெல்வெட் துணி போர்த்தப்பட்டு. நல்ல சொகுசான நாற்காலிகள் இரண்டு பக்கமும் இருந்தன. ஜெர்மி நாற்காலியில் அமரும் வரை காத்திருந்த குரோம்பி பின்னர் அவனுக்கு எதிரே அமர்ந்தார்.

‘உங்களுக்கு காபி ஆர்டர் செய்யட்டுமா?’

‘நோ…தாங்க் யூ’ ஜெர்மி தவிர்த்தான். (அரபெல்லா : ‘அநாவசியமாக நேரத்தைக் கடத்தக்கூடாது’)

‘ஹவ் மே ஐ ஹெல்ப் யூ டுடே ஸார்’ என்றார் அதே பணிவுடன் ஏதோ ஜெர்மி ரெகுலர் கஸ்டமர் என்பதாகவே.

‘எனக்கு திருமணம் ஆகப் போகிறது.’

‘கங்கிராஜூலேஷன்ஸ் ஸார்’

‘தாங்க் யூ’ கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தது அவனுக்கு.’ ‘எனக்கு ஒரு மோதிரம் வேணும் அதுவும் ஸ்பெஷலா இருக்கணும்’ என்றான். அவள் சொன்னமாதிரியே.

‘நீங்கள் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள் ஸார்.’ என்று சொல்லிவிட்டு டேபிளின் அடியில் இருந்த ஒரு பட்டனை அழுத்த…

கதவு உடனே திறந்து அவரைப் போலவே அடர்ந்த கறுப்பு சூட்,வெள்ளை சர்ட்,கறுப்பு டை அணிந்த இன்னொரு ஆள் ரூமுக்குள் நுழைந்தான்.

‘பேட்ரிட்ஜ், இவர் என்கேஜ்மென்ட் ரிங்க்ஸ் பாக்கணுமாம்’

‘ஓகே ஸார்’ என்றபடியே வந்தவேகத்தில் மறைந்தும் விட்டான்.

‘இந்த வருடம் நல்ல க்ளைமேட்…இல்லையா?’ என்றபடி போனவன் வரக் காத்திருக்க ஆரம்பித்தார் குரோம்பி.

‘மோசமில்லை’ என்றான் ஜெர்மி.

‘நீங்கள் இந்த தடவை விம்பிள்டன் பார்க்க போவீர்கள்தானே?’

‘யெஸ்..யெஸ்…விமன்ஸ் ஸெமி ஃபைனலுக்கு டிக்கெட்ஸ் கிடைத்திருக்கிறது’ என்றான் லேசான நிம்மதியுடன். இதுவரை ஸ்கிரிப்ட் படி போய்க்கொண்டிருக்கிறது!

சிறிது நேரம் கழித்து, கதவு திறந்து, அதே நபர் கையில் பெரிய பெட்டி ஒன்றை தூக்கிக் கொண்டு வந்தான். அதை டேபிளின் நடுவில் வைத்துவிட்டு அவன் போகும் வரை ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்த குரோம்பி, கதவு சாத்தப்பட்டதும் தன் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த சங்கிலியில் கோர்த்திருந்த சிறு சாவியை எடுத்து பெட்டியைத் திறந்தார். உள்ளே மூன்று வரிசைகளில் இருந்த வைரங்களைப் பார்த்ததும் ஜெர்மிக்கு மூச்சு நின்று போனது. அவன் இதுவரை இந்த மாதிரி பார்த்தது கிடையாது.

அரபெல்லா அவனிடம் சொல்லியிருந்தாள். நேரடியாக உன் ‘ரேஞ்ச்’ என்ன என்று கேட்க மாட்டார்கள் அதற்குப் பதிலாக வெவ்வேறு வகையான வைரங்களை உன்னிடம் காண்பித்து விலை சொல்லி அதன் மூலம் உன்னுடைய வாங்கும் தன்மையை கணிப்பார்கள் என்று.

ஜெர்மி பெட்டியில் உள்ளவற்றை கூர்ந்து கவனித்தான். கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு, கீழ் வரிசையில் இருந்த ஒரு மோதிரத்தை எடுத்தான். மூணு எமரால்ட் வைரங்கள் தங்கத்தில் பதிக்கப்பட்ட மோதிரம்.

‘ரொம்ப அழகா இருக்கு’ என்ற ஜெர்மி அதன் கற்களை பார்த்தான். ‘இது என்ன விலை?

‘ஒன் ட்வென்டி ஃபோர் தவுசண்ட்’ பவுண்ட்ஸ் ஸார். என்றார் குரோம்பி அது ஏதோ சின்ன அமௌண்ட் என்கிற மாதிரி. ஜெர்மி அதை எடுத்த இடத்திலேயே வைத்தான். பின்னர் பார்வையை அதற்கு மேலே உள்ள வரிசைக்கு கொண்டு போனான். அதில் இருந்த இன்னொரு மோதிரத்தை எடுத்து பின்னர் அதை கண்ணுக்கு வெகு அருகில் கொண்டுபோய் கவனித்தான். ‘டூ சிக்ஸ்டி நைன் தவுசண்ட் பவுண்ட்ஸ் ஸார்’ அதே குரலில் ஆனால் கொஞ்சம் சந்தோஷம் தெரிந்தது. கஸ்டமர் சரியான திசையில்தான் நகர்கிறார் என்று.

ஜெர்மி அதையும் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு, அந்த பெட்டியில் தனியாக இருந்த பெரிய வைரக்கல் ஒன்றின் மீது பார்வையைப் போட்டான். அது முதல் வரிசையில் இருந்தது. அதை எடுத்து பழையபடி மிக அருகில் வைத்துப் பார்த்து ‘என்ன அற்புதமான வைரம்’ புருவத்தை உயர்த்தி சொல்லி விட்டு ‘இதைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?’ என்றான்.

‘கண்டிப்பாக’

‘எய்ட்டீன் பாய்ன்ட் ஃபோர் கேரட், குஷன் கட் மஞ்சள் நிற வைரம் இது. இப்போது சமீபத்தில்தான் ரோட்ஸ் சுரங்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. அமெரிக்காவின் ஜெம்மாலஜி இன்ஸ்டியூட்டால் அங்கீகரிக்கப்பட்டது. அதன் ஒரிஜினல் கல்லிலிருந்து எங்களின் மிகச் சிறந்த ஆம்ஸ்டெர்டாம் கொல்லரால் வெட்டி பட்டை தீட்டப்பட்டது. இது தனித்துவமான வைரம். நிச்சயம் தனித்துவமான ஒரு பெண்ணிடமே இருக்கவேண்டிய ஒன்று.’

ஜெர்மி கடைசியாய் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை முன்னமே யூகித்திருந்தான். ‘இதற்கு தனித்துவமான விலையும் இருக்கிறது’ என்றார் குரோம்பி.

அவன் அதை அவரிடம் கொடுக்க, பெட்டியில் அதன் இடத்தில் வைத்தார்.

‘எய்ட் ஃபிப்டி ஃபோர் தவுசண்ட் பவுண்ட்ஸ்’

‘உங்களிடம் ‘லூப்’ (Loupe) இருக்கிறதா? ‘என்று கேட்டான் ஜெர்மி. ‘நான் இதை நன்றாகப் பார்க்கவேண்டும்.’ அரபெல்லா அவனிடம் சொல்லியிருந்தாள் இந்த வார்த்தை வைர வியாபாரிகள் பயன்படுத்துகிற வார்த்தை. அது சின்ன பூதக்கண்ணாடியைக் குறிக்கிறது. வைரங்களை கூர்ந்து பார்க்க உதவும். இதைச் சொன்னால்தான் அவர்கள் இவன் அடிக்கடி வைரங்களில் புழங்குபவன் என்று நம்புவார்கள்.

‘இருக்கிறது ஸார்!’ என்ற குரோம்பி, அவர் பக்கத்தில் இருந்த மேஜை டிராயரைத் திறந்து ஒரு சிறிய பூதக்கண்ணாடியை எடுத்தார். அவர் திரும்பி பார்த்தபோது ‘கேன்டைஸ் டயமண்ட்’ அதன் இடத்தில் இல்லை. முதல் வரிசையில் அது இருந்த இடம் காலியாக இருந்தது.

‘உங்களிடம் ‘லூப்’ (Loupe) இருக்கிறதா? ‘என்று கேட்டான் ஜெர்மி. ‘நான் இதை நன்றாகப் பார்க்கவேண்டும்.’ அரபெல்லா அவனிடம் சொல்லியிருந்தாள் இந்த வார்த்தை வைர வியாபாரிகள் பயன்படுத்துகிற வார்த்தை. அது சின்ன பூதக்கண்ணாடியைக் குறிக்கிறது. வைரங்களை கூர்ந்து பார்க்க உதவும். இதைச் சொன்னால்தான் அவர்கள் இவன் அடிக்கடி வைரங்களில் புழங்குபவன் என்று நம்புவார்கள்.

‘இருக்கிறது ஸார்!’ என்ற குரோம்பி, அவர் பக்கத்தில் இருந்த மேஜை டிராயரைத் திறந்து ஒரு சிறிய பூதக்கண்ணாடியை எடுத்தார். அவர் திரும்பி பார்த்தபோது ‘கேன்டைஸ் டயமண்ட்’ அதன் இடத்தில் இல்லை. முதல் வரிசையில் அது இருந்த இடம் காலியாக இருந்தது.

‘வைரம் உங்களிடம் இருக்கிறதா?’ என்று சாதாரணமாகவே கேட்டார் குரோம்பி.

‘இல்லையே’ என்றான் ஜெர்மி. ‘இப்போதுதானே உங்களிடம் கொடுத்தேன்.’

அடுத்து ஒரு வார்த்தை கூட பேசப்படாமல் அந்தப் பெட்டி திடீரென்று மூடப்பட்டது. அவர் டேபிளின் கீழே இருந்த பட்டனை அழுத்தினார். இந்த முறை அவர் காத்திருந்த விநாடிகளில் அவனிடம் எதுவுமே பேசவில்லை. சில விநாடிகளுக்குப் பின், கதவு திறந்து, இரண்டு பாக்ஸர்கள் போல இருந்த ஆட்கள் தோன்றினார்கள். ஒருவன் கதவு பக்கத்திலேயே நின்று கொள்ள இன்னொருவன் ஜெர்மிக்குப் பக்கத்தில் வந்து நின்றான்.

‘நீங்கள் வைரத்தை திருப்பிக் கொடுத்துவிட்டால் ரொம்ப நல்லது’ என்றார் குரோம்பி உறுதியான, உணர்ச்சியற்ற குரலில்.

‘என்னை இப்படி யாரும் அவமானப் படுத்தினதே இல்லை’ என்றான் ஜெர்மி அவமானப்பட்ட உணர்வுடன்.

‘நான் இன்னும் ஒரே ஒரு சான்ஸ் தர்றேன். திருப்பிக் கொடுத்துட்டா உங்க மேல புகார் எதுவும் கிடையாது. இல்லேன்னா…’

‘நானும் அதைத்தான் சொல்றேன். நான் கடைசியாக வைரத்தைப் பார்த்தது அதை உங்களிடம் கையில் கொடுத்த போதுதான்.

ஜெர்மி அந்த இடத்தைவிட்டுப் போக முயற்சிக்க, அவன் பின்னால் இருந்தவன் அவன் தோளின் மீது கைவைத்து அழுத்தி மீண்டும் உட்கார வைத்தான். அரபெல்லா சொல்லியிருந்தாள் நீ அவர்களுக்கு ஒத்துழைப்பு தரும்வரை ,அவர்கள் சொல்வதை செய்யும் வரை ஏதும் வன்முறையாக நடக்க மாட்டார்கள் என்று. அப்படியே ஸீட்டில் அமர்ந்திருந்தான் அசையாமல். குரோம்பி இருக்கையில் இருந்து எழுந்து அவனிடம் ‘என் பின்னாடி வாருங்கள்’ என்றார்.

ஒரு பாக்ஸர் கதவைத் திறந்து ஜெர்மியை வெளியே விட்டான் இன்னொருவன் அவனை பின் தொடர்ந்தான். அந்த வராந்தாவின் முடிவில் ஒரு அறை இருந்தது. இந்தக் கதவின் மீதும் ‘ப்ரைவேட்’ என்று எழுதியிருந்தது. பாக்ஸர் கதவைத் திறக்க அவர்கள் உள்ளே நுழைந்தனர். அந்த அறையிலும் ஒரு டேபிள்தான் இருந்தது. ஆனால் வெல்வெட் விரிப்பு அதன் மீது இல்லை. அந்த டேபிளுக்குப் பின்னே ஒரு மனிதன் நாற்காலியில் இவர்களுக்காகவே காத்திருந்ததாகப் பட்டது. அவன் ஜெர்மியை வரவேற்று எதுவும் சொல்லவில்லை. அங்கே இன்னொரு நாற்காலியும் இல்லை இவனை உட்காரச் சொல்ல.

‘என் பெயர் க்ரேஞ்சர்.’ என்றான் உறுதியான குரலில். ‘நான் De Beersல் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பதினைந்து வருடமாக இருக்கிறேன். இதற்கு முன்னால் போலீஸ் இலாகாவிலும் டிடெக்டிவ் ஏஜென்ஸியிலும் இருந்திருக்கிறேன். நான் பார்க்காத குற்றமில்லை. கேட்காத கதைகள் இல்லை. நான் உனக்கு எதுவும் சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இதிலிருந்து தப்பித்து போய்விடலாம் என்று மட்டும் கனவு கூட காணாதே யங் மேன்’ என்றான்.

ஸார்…ஸார்…என்று கூப்பிட்டவர்கள் எவ்வளவு சீக்கிரம் ‘யங் மேன்’ என்று வந்துவிட்டார்கள் என்று யோசித்தான் ஜெர்மி.

க்ரேஞ்சர் மீண்டும் ’என் கேள்விகளுக்கு,விசாரணைக்கு ஒத்துழைக்கப் போகிறாயா? இல்லை போலீஸை கூப்பிடவேண்டுமா. போலீஸ்தான் எனில் லாயரையும் கூப்பிடவேண்டும்.’

‘என்னிடம் மறைக்க எதுவும் இல்லை அதனால் ஒத்துழைக்கவே விரும்புகிறேன்.’ – அரபெல்லாவின் ஸ்கிரிப்ட்.
‘அப்படின்னா…உங்களோட, ஷூஸ், பேன்ட், ஜாக்கெட் எல்லாவற்றையும் கழட்ட முடியுமா?’

ஜெர்மி தன் ஷூக்களை உதறினான். க்ரேஞ்சர் அவைகளை எடுத்து டேபிளின் மீது வைத்தான். ஜாக்கெட்டைக் கழட்டி பத்திரமாக அவனிடம் கொடுத்தான் அதனுள் ஏதோ விலை மதிப்பில்லாத பொருள் இருப்பது போல. தன்னை எந்த மாதிரிதான் சோதனை செய்யப் போகிறார்கள் என்று தெரியாமல் நின்றான்.

க்ரேஞ்சர் அவனுடைய சூட்டின் ஒவ்வொரு பாக்கெட்டையும் கைவிட்டு வெளியே எடுத்துப் பார்த்துவிட்டு, தையல் மடிப்புகளையும் பரிசோதித்தான். பொறுமையாக நிதானமாக நேரம் எடுத்துக் கொண்டு அதைச் செய்தான். ஒரு கர்ச்சீஃப்பைத் தவிர வேறெதுவுமில்லை. ஒரு க்ரெடிட் கார்டோ,பர்ஸோ ஒன்றுமில்லை. அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பழையபடி சூட்டை டேபிளில் வைத்தான். ஜெர்மியிடம் ‘உங்கள் கழுத்து டை’ என்றான் அமைதியாக.

கழுத்து டை’யின் முடிச்சை தளர்த்தி கழற்றிவிட்டு அதை டேபிளில் வைத்தான். டையின் மடிப்புகளில் தன் வலக்கை விரல்களை ஓட்டி பரிசோதித்தான் க்ரேஞ்சர். மீண்டும் ஆச்சர்யம்! ஒன்றுமில்லை. ‘உன் சர்ட்?’. ஜெர்மி சர்ட் பட்டனை மெதுவாக விடுவிக்க ஆரம்பித்து கழற்றி அவன் கையில் கொடுத்தான். இப்போது பேன்ட்டும் சாக்ஸூமாய் நடுநடுங்கிக் கொண்டிருந்தான்.

க்ரேஞ்சர் சர்ட்டை செக் பண்ண ஆரம்பித்ததும் முதன்முறையாக அவன் முகத்தில் புன்னகை வெளிச்சம் அதன் காலரைத் தொட்டதும் வந்தது. ஆனால்…காலரைத்தொட்டு இழுத்ததும் இரண்டு காலர் ஸ்டிஃப்னர் (காலர் விறைப்பாக இருக்க வைப்பது) வெளிவர அவைகளை ஏமாற்றத்துடன் மேசையின் மீது வைத்தான். அரபெல்லாவின் யோசனையே யோசனை என்று மனதில் அவளைப் புகழ்ந்தான் ஜெர்மி. ஜெர்மியிடம் சட்டையைக் கொடுக்க அவன் அதை வாங்கி மறக்காமல் காலர் ஸ்டிஃப்னர்களை அதனுள் வைத்தான்.

‘உங்க பேன்ட்டை கழட்டுங்க ப்ளீஸ்!’

பேன்ட்டை இறக்கி கழட்டிக் கொடுத்தான். இன்னொரு தடவையும் க்ரேஞ்சர் ஏமாறுவான் என்று தெரியும். அவன் அதைத் திருப்பிக் கொடுக்க அதை அணிந்து கொள்ள ஆரம்பித்தான். ‘கடைசியாக உன் சாக்ஸ்!’ என்றான் க்ரேஞ்சர். அதுவும் டேபிளுக்குப் போனது. இப்போது க்ரேஞ்சரே நம்பிக்கை இழந்து அவைகளை பரிசோதித்தான். பின்னர் அவனின் ஷூக்களை செக் பண்ணினான். தட்டிப்பார்த்து, அழுத்திப்பார்த்து, இழுத்துப்பார்த்து, ஒன்றும் பிடிபடவில்லை. ஜெர்மி ஆச்சர்யப்படும் வகையில் மறுபடி ஒரு தடவை சர்ட்டையும் கழுத்து டையையும் கழட்டச் சொன்னான். அதுவும் முடிந்ததும் டேபிளின் பின்னேயிருந்து சுற்றி வந்து ஜெர்மியின் முன் நின்றான்.

க்ரேஞ்சர் தன் கழுத்தை ஒரு பக்கம் சாய்த்து, ஜெர்மியை ஒரு பார்வை பார்த்தான். பின்னர் கழுத்து நேரானது. இரண்டு கைகளையும் தூக்க, ஜெர்மி தன்னைத் தாக்கப் போகிறான் என்று நினைக்கும்போது, பதிலாக தன் விரல்களை ஜெர்மியின் தலைமுடியில் வைத்து அழுத்தி அழுத்தி மண்டை ஓட்டை பரிசோதித்தான். சிறு வயதில் ஜெர்மியின் அப்பா செய்கிற மாதிரி தலைமுடியைக் கலைத்து விட்டான். ஆனால் விளைவு என்னவோ அவன் கை லேசாக ஜெல் ஒட்டி பிசுபிசுப்பானதும் சில முடிகள் கைகளில் ஒட்டிக் கொண்டதும்தான்.

‘ம்..கைகளைத் தூக்கு’ கத்தினான். ஜெர்மி தன் கைகளை முடிந்த அளவு நேராக உயரே தூக்க, க்ரேஞ்சரால் அவனுடைய அக்குள் பகுதியில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. க்ளீன் ஷேவ்ட். ஜெர்மியின் பின்பக்கம் போனான். ‘ஒரு காலைத் தூக்கு’ கட்டளையிட்டான். அவன் வலது காலை பின்பக்கமாக தூக்க, கால் பாதத்துக்கு அடியில் எதுவும் ஒட்டப்பட்டிருக்க வில்லை. விரல்களுக்கிடையிலும் ஏதுமில்லை. ‘அடுத்த கால்’ என்றதும் …அதேபோல…ஒன்றுமில்லை.

சுற்றி வந்து அவன் முகத்தைப் பார்த்தான். ‘வாயைத் திற’ பல்டாக்டரின் க்ளினிக்கில் இருக்கிற மாதிரி நினைத்து ஜெர்மி படு அகலமாய் திறக்க, வாயில் ஒரு பென் டார்ச்சை அடித்து அந்த வெளிச்சத்தில் பற்கறைகளைத்தான் பார்க்கமுடிந்தது. தங்கப் பல் கூட எதுவும் இல்லை. க்ரேஞ்சரால் ஏமாற்றத்தை மறைக்க இயலவில்லை. ‘என்னோடு அடுத்த ரூமுக்கு வா’ என்றான்.

‘என் டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டு வரட்டுமா?’

‘இப்ப கிடையாது’ உடனே பதில்.

ஜெர்மி அவனைப் பின்தொடர்ந்தான் என்ன என்னவெல்லாம் டார்ச்சர் கொடுக்கப் போகிறான்களோ என்ற நினைப்பில். அந்த ரூமில் வெள்ளை கோட் அணிந்த நபர் ஒரு படுக்கைக்கு அருகில் நின்றிருந்தார். ‘தயவு செய்து நீங்கள் அப்படியே இதில் படுக்க முடியுமா? ஒரு எக்ஸ்ரே எடுக்கணும்’ என்றார்.

‘ஹேப்பிலி!’ என்றபடி அந்த படுக்கையின் மீது ஏறி படுத்தான். சில விநாடிகள் கழித்து ‘க்ளிக்’ சத்தமும் அதைத் தொடர்ந்து இரண்டு பேரும் ரிஸல்டை செக் செய்வதையும் கேட்க, பார்க்க முடிந்தது. ஜெர்மிக்குத் தெரியும் எக்ஸ்ரேயில் ஒன்றும் வராது என்று. கேன்டைஸ் வைரத்தை முழுங்குவது அவர்களின் திட்டத்திலேயே இல்லை.

அந்த வெள்ளை கோட் மரியாதையாக ஜெர்மியிடம் ‘நன்றி’ என்றான். க்ரேஞ்சர் ‘நீங்கள் உடைகளை அணிந்து கொள்ளலாம்’ என்றான் செத்துப்போன மூஞ்சியுடன்.

ஜெர்மி டையை அணிந்து முடித்து, க்ரேஞ்சரை பின்தொடர்ந்து மறுபடி விசாரணை அறைக்கு வந்தார்கள். அங்கே குரோம்பியும் இரண்டு பாக்ஸர்களும் காத்திருந்தார்கள்.

‘நான் இப்போது இந்த இடத்தை விட்டு போக விரும்புகிறேன்’ உறுதியாகச் சொன்னான் ஜெர்மி.

க்ரேஞ்சர் ஆமோதிப்பாய் தலையாட்டினான். உண்மையில் அவனைப் போக விட சம்மதமில்லை. ஆனால் இருக்கச் சொல்ல எந்த க்ளூவும் இல்லை.
குரோம்பியை நேருக்கு நேராய் கண்களைப் பார்த்து சொன்னான் ஜெர்மி. ‘விரைவில் என் லாயரிடமிருந்து நோட்டீஸை நீங்கள் எதிர்பார்க்கலாம்’ குரோம்பியின் முகம் இறுகிப்போவதை கவனிக்க முடிந்தது. அரபெல்லாவின் ஸ்கிரிப்ட் பிழையில்லாதது.

இரண்டு பாக்ஸர்களும் அவனைப் பின்னால் வந்து அவன் வெளியேறும் வரை தொடர்ந்தார்கள். அவன் தப்பிக்க முயற்சியே எடுக்கவில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. ஜெர்மி கடையின் வெளியே வந்து பிளாட்பார்மில் விரைந்து கொண்டிருந்த கூட்டத்தில் கலந்தான். ஒரு பெருமூச்சு விட்டு இதயத்துடிப்பு நார்மலாவதை உணர்ந்து, பின்னர் ரோடை க்ராஸ் செய்தான். விரைந்து நடந்து அரபெல்லா காத்துக் கொண்டிருந்த ரெஸ்டாரன்டுக்கு வந்து அவள் முன்னே அமர்ந்தான்.

‘உங்களுக்கு வந்த காபி ஆறிப் போய்விட்டது டார்லிங்’ என்றாள் அரபெல்லா அவன் ஏதோ டாய்லட்டுக்குப் போய் விட்டு திரும்பி வந்தது மாதிரி. இன்னொன்னு ஆர்டர் பண்ணனும்’ என்றாள்.

அப்போது வந்த வெய்ட்டரிடம் ‘மறுபடி ஒண்ணு’ என்று சொல்லிவிட்டு
‘ஏதாவது பிரச்னையா’ என்று கிசுகிசுத்தாள் அரபெல்லா.
‘நோ!’ என்றான்.கொஞ்சம் குற்றவுணர்வு இருந்தது ஜெர்மிக்கு அதேசமயம் பரபரவென்றிருந்தது. ‘எல்லாமே திட்டப்படி!’ என்றான்.

‘குட். இப்போ என்னோட முறை’ என்ற அவள் ஸீட்டிலிருந்து எழுந்து சொன்னாள் ‘அந்த வாட்சையும் என்னிடம் இப்பவே கொடுத்து விடுங்கள். இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள அதை நான் திருப்பி வைக்கணும்’
ஜெர்மி விருப்பமில்லாமல் வாட்ச்சைக் கழட்டிக் கொடுத்துவிட்டு, அப்ப ‘டை’ என்றான்.

‘இப்ப இங்கே எடுக்க வேண்டாம்’. குனிந்து அவன் உதடுகளில் மெதுவாக முத்தமிட்டுவிட்டு, ‘நான் உன் இடத்துக்கு எட்டு மணிக்கு வருவேன். அப்ப திருப்பிக் கொடு’ என்றாள். கடைசியாக ஒரு புன்னகையை கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் அரபெல்லா, De Beers கடையின் வாசலில் நின்றிருந்தாள். உடனே கதவு திறந்தது. விலை உயர்ந்த நெக்லஸ், நவீன கைப்பை, காஸ்ட்லியான லேடீஸ் வாட்ச் இவைகளெல்லாம் அரபெல்லாவை ரொம்ப நேரம் கதவு திறக்க காத்திருக்க பொறுமையில்லாதவளாக காட்ட, புரிந்து கொண்டு உடனே திறந்தான் காவலாளி.

உள்ளே காலடி எடுத்து வைக்கும் முன்னே ‘நான் என்கேஜ்மென்ட் மோதிரங்கள் பாக்கணும்’ என்றாள். ‘உள்ளே வாங்க மேடம்’ என்றான்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் ஜெர்மிக்கு என்ன என்னவெல்லாம் உபசரிப்புகள் நடந்ததோ அவைகளெல்லாம் அவளுக்கும் நடந்தது. பின்பு அரபெல்லா குரோம்பியிடம் சொன்னாள். ‘ஹோப்லெஸ்…என்னால் முடிவு செய்ய இயலவில்லை. நான் அவரைத்தான் கூட்டிட்டு வரணும். அவர்தானே பில் பே பண்ணப் போறவரு’

‘ஆஃப் கோர்ஸ் மேடம்’

‘இன்னிக்கு அவர் லஞ்ச்சுக்கு லீ கேப்ரைஸ் வர்றாரு. அதுக்குப் பிறகு நாங்க ரெண்டு பேரும் இங்கே வர முடியுமான்னு பார்க்கிறோம்’ என்றாள்.
அந்த உதவியாளன் ‘உங்கள் வரவுக்காக காத்திருக்கிறோம் மேடம்’ என்று வைரங்கள் இருந்த பெட்டியை மூடினான்.

‘நன்றி குரோம்பி’ என்றவள் கிளம்புவதற்காக எழுந்தாள்.
உதவியாளன் அவளை வாசல் வரை வந்து வழியனுப்பினான். அவளிடம் உடைகளை கழட்டவெல்லாம் எதுவும் சொல்லவில்லை. கொஞ்ச தூரம் நடந்த பிறகு, டாக்ஸி பிடித்து வீட்டுக்கு வண்டியை விடச் சொன்னாள். மணியைப் பார்த்தாள். கண்டிப்பாக அப்பா வருவதற்குள் அவரது வாட்சை அதே இடத்தில் வைத்துவிடலாம். அவருக்கு அவரோட டை’தான் திருப்பிக் கிடைக்காது.

டாக்ஸி சீட்டில் சாய்ந்து உட்கார்ந்த அரபெல்லா , கையை விரித்து உள்ளங்கையில் அமர்ந்திருந்த அந்த மஞ்சள் வைரத்தைப் பார்த்தாள். ஜெர்மி ஒரு எழுத்து விடாமல் அவள் சொன்னதை செய்திருக்கிறான்.

அவள் தன் நண்பர்கள் வட்டத்தில் விளக்கவேண்டும் ஏன் ஜெர்மியை திருமணம் செய்ய இயலவில்லை என்று. அவன் தன் ‘ஸெட்’டில் சேரமுடியாதவன். அதற்கு தகுதியானவன் அல்ல என்பதை சொல்லவேண்டும்.

ஜெர்மியை தன் நினைவுகளிலிருந்து விரட்டி, விம்பிள்டன் மேட்ச் பார்க்க அவளோடு வரப் போகிற நபரைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள். அவன் ஏற்கனவே அவளுக்குப் பிடித்தமான கம்மல்களை ‘தருவதாக’ சொல்லியிருந்தான்.

அன்றைய இரவு குரோம்பி, De Beers ஐ விட்டு கிளம்பும் போதும் யோசித்துக் கொண்டே இருந்தார். எப்படி அவன் அதை எடுத்தான் என்று. சில விநாடிகள் தானே அவர் வைரத்தை விட்டு விலகியிருந்தார். வெகு சில விநாடிகள் மட்டுமே!

‘குட் நைட் டோரிஸ்’ அவரைக் கடந்து போன குப்பை கூட்டுகிற அந்த பெண்மணியைப் பார்த்துச் சொன்னார்.

‘குட் நைட் ஸார்’ என்ற டோரிஸ் கதவைத் திறந்து வராண்டா, மற்றும் ரூம்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். இங்கேதான் உலகின் மிகச் சிறந்த வைரங்களை வாடிக்கையாளர்கள் அமர்ந்து பார்வையிடுகிறார்கள். அதனால் அறைகள் நூறு சதவிகிதம் சுத்தமாக இருக்கணும் குரோம்பிக்கு. ஒரு புள்ளி கூட தெரியக்கூடாது என்று ஒரு முறை டோரிஸிடம் சொல்லியிருக்கிறார். அவள் டேபிளின் மீது இருந்த வெல்வெட் விரிப்பை நீக்கி மேற்புறத்தை துடைக்க ஆரம்பித்தாள். முதலில் மேலே, பிறகு அதன் விளிம்பில்…பிறகு..! அப்போதுதான் அவள் அதைப் பார்த்தாள்.

டோரிஸ் குனிந்து உடம்பை வளைத்து கிட்டவே நெருங்கிப் பார்த்தாள். அவளால் நம்பவே முடியவில்லை. ஒரு பெரிய சூயிங் கம் டேபிளின் விளிம்பிற்குக் கீழே,உள்ளே ஒட்டப்பட்டிருந்தது. அவள் அதை சுரண்டி எடுக்க ஆரம்பித்தாள். முழுவதுமாக சுரண்டி எடுத்து அது இருந்ததற்கான அடையாளமே தெரியாதபடிக்கு நீக்கியபின், தான் கொண்டு வந்த குப்பை பெட்டியில் போட்டுவிட்டு, வெல்வெட் விரிப்பை மறுபடி டேபிளுக்கு அணிவித்துவிட்டாள்.

‘என்ன மோசமான பழக்கம்!’ என்று ரூமின் கதவை சாத்திவிட்டு வராண்டாவை வாக்குவம் க்ளீனரால் துடைக்க ஆரம்பித்தாள் டோரிஸ்.

– கதையின் ஒரிஜினல் பெயர் ; STUCK ON YOU , இது நிஜத்தில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்கிறார் ஜெஃப்ரி ஆர்ச்சர்

நன்றி: மாயன்:அகமும் புறமும் (http://ahamumpuramum.blogspot.com/2012/01/blog-post_24.html)

Print Friendly, PDF & Email

2 thoughts on “‘ஒட்டி’ உறவாடி

  1. கதை விறுவிறுப்பாக இருந்தது..ஆனால் நாயகி ஏன் நாயகனை நிராகரிக்கிறாள் என்று மட்டும் புரியவில்லை..

  2. அற்புதமான தளம். சில நாட்களுக்கு முன்புதான் முதன்முதலாக வந்தேன். தரமான சிறுகதைகளை தொகுத்து தருகிறீர்கள். வாழ்த்துக்கள். பின்னூட்டங்கள், ஹிட்ஸ் பற்றி கவலைப்படாமல் இச்சேவையைத் தொடருங்கள். எனக்குத் தெரிந்தவர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *