எது நிஜம்?

 

இரவு நேர புழுக்கம் நித்திரையைத் தாலாட்டாமல் எழுப்பியது. இப்படி கொஞ்சநாளாக கொஞ்ச காலமாக ஏதோ எனக்கு வந்து கதை சொல்லுவது போல பிரமை. அதுவும் மற்ற நேரம் காலம் இல்லாது இரவு பன்னிரண்டு மணி அடித்து முடிந்த கையோடை தொடங்கி விடும். காலில் இருந்து உடம்பில் வழியாக ஊர்ந்து வந்து தலை வழி ஏறி பிடரிப் பக்கம் சென்று இனம் புரியாத சங்கீத மொழியில் ஏதோ சொல்லத் தொடங்கி விடும்.

இதோ தொடங்கி விட்டது. அக்கம் பக்கம் என்னையறியாமால் புரள்கிறேன், கவிழ்கிறேன், நிமிர்கிறேன், பிறகு படுக்கிறேன். தலையை ஆட்டுகிறேன். பிறகு புரள்கிறேன். ஏதோ ரிமோட் கருவியினால் யாரோ இயக்க அவர்களின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவது போல் நிறைவேற்றி கொண்டிருக்கிறேன். எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது. நான் செய்து கொண்டிருப்பதை நானே மூன்றாம் ஆள் பார்ப்பது போல் பார்க்கிறேன். சிரிப்பாக இருக்கிறது மறுபுறம் நம்ப முடியாமால் இருக்கிறது. கனவோ என கிள்ளிப் பார்க்கிறேன்.

இல்லை மறுபுறத்தில். வாயால் மூக்கால் மூச்சின் வேகத்தை மாற்றி கூட்டி குறைத்து ராகலாபனை செய்து இதமான தூக்கத்தை அனுபவித்து வீட்டில் உள்ளவர்கள் தூங்கி கொண்டிருக்கிறார்கள். இது கனவல்ல நிஜம் தான் என்று நினைக்க வைத்து கொண்டிருக்கிறது. அஜீரணக் கோளாறால் ஏற்படும் வினையா என்று ஏப்பம் விட்டு பார்க்கிறேன். அது திரும்ப வந்து காலினூடாக வந்து வயிற்று பாகத்தினூடாக வந்து பிடரியில் ஏறுகிறது. கம்ப்யூட்டரில் தெரியும் அலை வரிசை மாதிரி ஏற்ற இறக்கத்துடன் ஒலி, ஒளிக்கீற்றை கக்கிக்கொண்டு பிடரி மண்டையில் ஏறிக் கொண்டிருப்பது தெரிகிறது. அந்த ஏப்பம் வேறு விதமான வினோத ஒலியாக மாற்றி படுக்கையை விட்டு எழுப்பி நகர கட்டளை இடுகிறது. நானும் எல்லாம் சொல்லி வைத்தாற்போல் அது சொல்வதை செய்கிறேன். மறுக்க விரும்பனாலும் மறுக்க முடியாமல் செய்து கொண்டிருக்கிறேன்.

ஏன் இப்படி? மீண்டும் கனவா என்று சந்தேகம் கொள்கிறேன். வீட்டுக்கு வெளியே உள்ள மாமரத்தின் உச்சத்தில் வழமையாக தூக்கம் போடும் சாமக்கோழி ஒன்று கொக்கரக்கோ என்று மூன்று முறை கூவி இது நிஜம் தான் என்று அறிவுறுத்துகிறது. இந்தக் கோழி என்ன நிஜத்தை அறிவுறுத்துகிறது எனக்கு? நான் என்ன முட்டாள் பேர்வழியா? இல்லையே

நான் இந்த ஊருக்கு அண்மையில் மாற்றாலாகி வந்த ஒரு அதிகாரி என்பது நிஜம். நான் சொல்வதை தலையால் சுமந்து செய்யக் காத்திருப்பவர்கள் பலர் இருப்பதை பகலில் எனது அலுவலகத்துக்கு வந்து பார்த்திருந்தீர்கள் என்றால் உங்களுக்குத் தெரிந்து இருக்கும். காலையில் அவள் ஒருத்தி வந்து என்னமாய் சாகசம் மாயாலாலம் பண்ணினாள் தனது அலுவலை இலகுவாக என் மூலம் விரைவில் முடிப்பதற்கு. எப்படி சிரிக்க சிரிக்கப் பேசி என்னிடம் நெளிந்தாள். உண்மையில் அவள் பார்ப்பதற்க்கு இந்த கோயிலுள்ள பெண் விக்கிரத்துக்கு ஆடை அலங்காரம் செய்தவள் மாதிரி இருந்தாளே. அவளின் சாகசத்துக்கு எல்லாம் மசிந்தேனா நான்.

என்னை ஏதோ செய்து விடுவள் போல அல்லவா நடந்து கொண்டாள். நானோ எந்த வித கலை ரசனை இல்லாத கல் போன்றல்லவா நடந்து கொண்டேன். காவலாளியை அழைத்து அவளை நாயைத் துரத்துவது போல் அல்லவா துரத்தி விட்டேன். அப்பொழுது கூட அவள் என்னைத் திரும்பிப் பார்த்த பார்வை இருக்கிறதே, அதுவும் எவனையும் சுண்டி இழுக்கக் கூடிய காந்தப் பார்வை அல்லவா!

அந்த பார்வை கண்ணில் இப்பொழுதும் கருவிழிகளில் நடமாடுகிறது. இதோ நானே பார்க்கின்றேனே பிரமை இல்லை உண்மையே என எனக்கு பட்டுக்கொண்டே இருக்கிறதே. இதோ சகதர்மணியின் குறட்டை சத்தம் கேட்கிறதே அதன் மூலம். இது நிஜம் என மீண்டும் ஒரு பாகத்தில் வந்து உணர்த்தி கொண்டிருக்கிறதே.

என் கண்களில் இருப்பதை அவள் எழும்பி கண்டு விடுவாளே என அச்சமும் என்னுள் வந்து போகிறது. கண் அசைவை அந்த ஜன்னல் வழியாக விட்டு எனது கருவிழிகளில் நடமாடுவதை வெளியே அகற்ற முயல்கிறேன். அந்த முயற்ச்சிக்கு பிடரியில் இப்பொழுது வந்து கதை சொல்லும் சங்கீத மொழி வந்து ஆணையிட்டு உதவி செய்கிறது.

ஜன்னலுக்கு வெளியே அந்த இருளைக் கிழித்து மங்கிய நிலா வெளிச்சம் பொழிந்து கொண்டு இருக்கிறது. தூரத்தில் தெரியும் பனம் கூடல் வரையும் ஒரு பாதை போய் கொண்டிருக்கிறது. அதற்கு அங்கால் எங்கு போகிறது? யாருக்குத் தெரியும்? இந்த அரசாங்க பங்களாவுக்கு வந்து தங்கி எண்ணிக் கொள்ளும் நாட்கள் தானே ஆகிறது! யாரோ சொன்னார்கள், சவக்காலையில் முடிகிறது என்றது காலையில் வாட்ச்மேன் சொன்ன மாதிரி ஞாபகம். அது நிஜமோ என்று தெரியாது.

அந்த ஒற்றையடிப் பாதையில் நின்று என்னை அழைக்கிறாள். பலத்த சத்ததத்துடன் அழைக்கிறாள். எனது காது அடைத்து விடும் மாதிரி இருக்கிறது. இந்த சத்தத்திலும் தூக்கம் கெடாமால் அதே ராக ஆலோபனையுடன் மற்றவர்கள் தூங்கி கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. அவள் மீண்டும் கட்டளை இடுவது போல அழைக்கிறாள். இம்முறை அவளைத் தவற விடக் கூடாது என நினைத்துக் கொள்கிறேன். எனது பிடரியில் இப்ப வந்து தொந்தரவு செய்து கொண்டிருக்கும் அதுவும் அந்தக் கட்டளையை ஏற்று கொண்டு நடக்கச் சொல்லுகிறது.

யாருக்கும் தெரியாமால் பூனை அடி எடுத்தது போல் எடுத்து வர முயற்சிக்கிறேன். அந்த அடி நிலத்தில் முட்டாமல் நகர்கிறது. அவள் பின்னால் நகர்ந்து கொண்டிருக்கிறேன். பனங்கூடல் தாண்ட மறைந்து விட்டாள். பிறகு தெரிவாள், மறைவாள். அவளைத் தேடி எவ்வளவு தூரம் நடந்தேனோ தெரியவில்லை. நடந்து கொண்டிருந்தேன்.

இப்பொழுது யாரோ பாறாங்கல்லால் அடித்து விட்ட மாதிரி பிடரியில் வலி. தலையை தடவி பார்க்கிறேன். இரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது. மெல்லிதாக கண்ணை விழித்துப் பார்க்க முயற்சிக்கிறேன். ஒரு கட்டாந்தரையில் படுத்திருக்கிறேன். விடிந்து விட்டது தூரத்தில் ஒரு பைத்தியக்கார தோற்றத்துடன் நிற்கும் பிச்சைக்காரி என்னை திட்டி கொண்டு இருந்தாள்.

என்னைப் பற்றி என்ன நினைச்சே என்று தொடங்கி ஏதோ ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

கண்ணைக் கிறக்கியது. வலி தாங்கமால் துடித்துக் கிடந்த இடத்தில் மீண்டும் விழுந்து கிடந்தேன். இப்ப மேலும் சில குரல்கள் கேட்டன.

இவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்து கொண்டு ஒரு பிச்சைக்காரிக்குப் பின்னால் போய் தொந்தரவு செய்து இருக்கிறானே என்றது ஒரு குரல்.

இவ்வளவு பெரிய ஆளாய் இருந்து கொண்டு இவ்வளவு சீப்பாய் நடந்து கொண்டிருக்கிறானே என்றது மற்றொரு குரல்.

இவனை எல்லாம் இந்த சுடலையிலை வைத்தே சாம்பலாக்கி போட்டு போக வேண்டும் என்று சொன்னது இன்னொரு கடுமையான குரல்.

விட்டுடுங்க. ஐயாவுக்கு கொஞ்ச காலமாக நித்திரையில் நடக்கிற வியாதி இருக்கிறது. இரவு ஆனால் தூக்க கலக்கத்தில் நடக்கத் தொடங்கி விடுவார். அப்ப ஒன்றுமே தெரியாது ஐயாவுக்கு என்று கெஞ்சியது எனக்குப் பழக்கப்பட்ட குரல் ஒன்று.

அந்த கணத்தில் தான் முதன் முதலாக எது நிஜம் என்று எனக்குத் தெரிந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)