எண்ணம்போல் படம்

 

“என்ன அருண்! இன்னைக்கு யாரைப் பார்த்து கதை சொல்லப் போற?”

“தயாரிப்பாளர் ஏ. கே. தெரியுமா?”

“தெரியுமா-வா? அவரைத் தெரியாம தமிழ்நாட்ல யாராவது இருப்பாங்களா? விஜய்காந்த் பாணியில புள்ளி விவரம் சொல்றேன், சரியான்னு சொல்லு. 125 படங்கள் தயாரிச்சிருக்கார், அதுல 50 படங்கள் 200 நாள்கள், 55 படங்கள் 100 நாள்கள் ஓடிச்சு. 20 இயக்குநர்கள், 12 இசையமைப்பாளர்கள், 15 ஹீரோக்கள், 30 ஹீரோயின்களை அறிமுகப்படுத்தி இருக்கார், தமிழ் சினிமா வரலாற்றில் இவர் இல்லாத அத்தியாயம் கிடையாது. இப்ப இருக்கற சமீபத்திய ட்ரெண்டையும் புரிஞ்சிகிட்டு வெற்றிப்படமா குடுக்கற ஒரே பழைய தயாரிப்பாளர் – அழகுக் கண்ணன், சுருக்கமா ஏ. கே. போதுமா?”

மூச்சுவிடாமல் சொல்லி முடித்தான் முரளி. பலமாகக் கைதட்டிவிட்டு, “கன கச்சிதம்டா. நான் எப்பவும் சொல்றதுதான் – நீதான்டா என் படத்துக்கு வசனகர்த்தா, எனக்கு இயக்குநர் வாய்ப்பு கிடைச்சா” என்றான் அருண்.

“டேய்! நானும் எப்பவும் சொல்றதுதான் – உனக்கு வாய்ப்பு கிடைச்சா சுனாமி மாதிரி மத்த எல்லா இயக்குநர்களையும் ஓரங்கட்டிட்டு, தமிழ் சினிமா-ங்கற ராஜ சிம்மாசனத்தில உட்காருவ. அது தமிழ் சினிமாவையே புரட்டிப் போடற முக்கிய நிகழ்வுடா, கொஞ்சம் பொறுமையா இருப்போம். சரி, ஏ. கே. ஸார் கதை கேட்கறேன்னாரா?”

“ஆமாண்டா. 10 மணிக்கு வரச்சொன்னார்”

“சீக்கிரம் கெளம்பு. எல்லாம் நல்லபடியா நடக்கும்டா”

அருண் தயாராகும் நேரத்தில், அவனது நதி மூலம் ரிஷி மூலம் பற்றி தெரிந்து கொள்ளலாம். பூர்வீகம் பொள்ளாச்சிக்கு பக்கத்தில் ஒரு கிராமம். அப்பாவுக்கு மளிகைக் கடை வியாபாரம், ஓரளவுக்கு வசதி. அம்மா குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். ஒரு அக்கா, அங்கேயே ஒரு பள்ளியில் கணக்கு ஆசிரியை. அண்ணன், அப்பாவுக்கு உதவியாக வியாபாரத்தை கவனித்துக் கொள்கிறார். அருண் பொறியியல் படித்தான், எப்போதும் சினிமா மோகம். பள்ளி, கல்லூரியில் இவன் நாடகம் இல்லாத விழாக்கள் இல்லை. ஆனால் அவன் நடிக்கமாட்டான். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு நிறுத்திக் கொள்வான். மற்றவர்களை இயக்குவதிலும் விதவிதமான கதைகள் எழுதுவதிலும்தான் அவனுக்கு ஆர்வம் அதிகம். கல்லூரி முடித்ததும், அம்மா மற்றும் அக்கா மூலமாக அப்பாவையும் அண்ணனையும் சம்மதிக்க வைத்து, வேலைக்குப் போகாமல், இயக்குநராகும் கனவில் சென்னைக்கு வந்து ஏழு வருடங்கள் ஆகிறது. நண்பர்கள் உதவியுடன் தங்க இடம் ஏற்பாடு செய்து கொண்டு, சில இயக்குநர்களிடம் உதவியாளனாக இருந்து, தொழில் கற்று, தனி இயக்குநராக வாய்ப்புத் தேட ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. பல பேரிடம் கதைகள் சொல்லி விட்டான், ஒன்றும் தேறவில்லை.

அருண் தயாராகி விட்டான்.

“நல்லா பண்ணு மச்சான். என்ன கதை சொல்லணும்னு ஒத்திகை பார்த்துட்டியா?”

“ஆமாண்டா. மூணு விதமான கதை வெச்சிருக்கேன். பார்க்கலாம், என்ன சொல்றாருன்னு”

பேருந்து பிடித்து நுங்கம்பாக்கம் வந்தான். அவர் வீட்டு முகவரி தேடி வந்து சேர்ந்த போது கடிகாரம் ஒன்பது முக்கால் என்றது. வாயிற்காப்போன் விவரம் கேட்டு, ஏ. கே. வின் உதவியாளனிடம் தனித் தொலைபேசியில் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டு, உள்ளே அனுமதித்தான். வரவேற்பறையில் உட்கார வைக்கப்பட்டான். மனதுக்குள் மூன்று கதைகளையும் ஒருமுறை ஓட்டிப் பார்த்துக் கொண்டான். நகம் கடித்துக் காத்திருந்தபோது, கடிகாரம் பத்து மணி அடித்து ஓய்ந்தபோது, உள்ளே அழைக்கப்பட்டான். அந்தக்கால நடிகர் எஸ். வி. ரங்காராவ் போல ஆஜானுபாகுவாக பஞ்சு நாற்காலியில் அமர்ந்திருந்தார் ஏ. கே. அவர் முன் போய் பணிவாக நின்றான். உட்காரச் சொன்னார்.

“எனக்கு திடீர்ன்னு வேற வேலை ஒண்ணு வந்துடுச்சி அருண்…… ”

அவர் சொல்லி முடிப்பதற்குள், ‘இன்றைக்கும் ஏமாற்றமா?’ எனப் பதறினான்.

அவர் தொடர்ந்தார் – “ஆனா உன்னை ஏமாத்த விரும்பல. ஒரு பத்து நிமிஷம் தரேன். என்னை அசத்தற மாதிரி ஒரு கதை சொன்னா, இப்பவே அட்வான்ஸ் குடுத்துடுவேன்”

அருண் நம்பிக்கையாக நிமிர்ந்து உட்கார்ந்தான். தயாராக வைத்திருந்த கதைகளை ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தான். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டார். அவன் சொல்லி முடிக்கட்டும் என காத்திருந்தவர், பிறகு பேசினார்.

“அருண்! நீ சொன்ன எல்லா கதைகளும் நல்லாருக்கு. ஆனா…….. எல்லாமே குடும்பக் கதையா இருக்கு, காதல் கதை உட்பட. நீ சொன்ன சண்டைக் கதையும் கூட குடும்பத்தைச் சுத்திதான் இருக்கு. இப்ப இருக்கற ட்ரெண்ட் கொஞ்சம் வேற. அதுக்கு இந்த மாதிரி கதைகள் வேலைக்கு ஆகாது. அதுவும் நான் இப்ப பிரம்மாண்ட சாகச கற்பனைக் கதைகளை படமா எடுக்கலாம்னு நினைக்கறேன். அது மாதிரி ஏதாவது கதை இருக்கா?”

“கொஞ்சம் நாள் குடுங்க ஸார். ஒரு நல்ல கதையோட வர்றேன்”

வெளியே வரும்போது மனசு தோய்வாக இருந்தாலும், நடந்த நிகழ்ச்சியில் ஒரு நல்லதை கவனித்தான். பத்து நிமிடம் மட்டும்தான் இருப்பதாகச் சொன்னவர், முழுதாக மூன்று மணி நேரங்கள் பொறுமையாக அவன் கதைகளைச் சொல்லி முடிக்கும் வரை கேட்டுக் கொண்டிருந்தார். இது அவனது நம்பிக்கையைக் கூட்டியது – ‘நல்ல கதை சொன்னால் நிச்சயம் இவர் வாய்ப்பு தருவார்’.

நடையைத் துரிதப்படுத்தி பேருந்து பிடித்து அறைக்கு வந்தான். தனக்குப் பிடித்த பாட்டு கேட்டுக் கொண்டு, கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு முகம் கழுவி உட்கார்ந்தான். அவர் சொன்னதை நினைத்துப் பார்த்து, விறுவிறுவென எழுத ஆரம்பித்தான். இரண்டு மணி நேரங்கள் போனதே தெரியவில்லை, காலிங்பெல் அடித்தபோதுதான் கவனித்தான், முக்கால்வாசி எழுதியிருந்தான். கதவைத் திறந்தால், முரளி.

“என்னடா சொன்னார் ஏ. கே. ?” சுருக்கமாகச் சொன்னான்.

“விடு மச்சான், ஒரு வாரத்துல அவர் கேட்ட மாதிரி கதைய எழுதிடுவியே”

“இப்பவே எழுதிட்டேன்டா”

“டேய், கலக்கறடா. எங்க சொல்லு, கேட்கறேன்”

இதுவரை எழுதியதைச் சொன்னான்.

அவனைத் தூக்கி தட்டாமாலை சுழற்றினான் முரளி.

“சூப்பர்டா. உடனே அவரைப் போய் பாருடா”

“இருடா. இன்னும் ரெண்டு நாள் டைம் எடுத்துகிட்டு நல்லா மெருகேத்திட்டு அப்புறம் போறேன்”

இரண்டு நாள் கழித்து, அவரைச் சந்திக்க நேரம் வாங்கிக் கொண்டு, அவர் கேட்ட மாதிரியே சாகசக் கற்பனைக் கதையைச் சொன்னான். எல்லாம் கேட்டுக்கொண்டு பொறுமையாகச் சொன்னார்.

“அருண்! உண்மைலயே கதை ரொம்ப அருமையா இருக்கு, ஆனா, இந்த மாதிரி கதைகள் படமாக்க ரொம்பச் செலவாகும். நான் எதிர்பார்த்தபடி பணம் சேர்க்க முடியல, அதனால இப்போதைக்கு இந்தப் படம் எடுக்க முடியாது, ஸாரிப்பா”

மனம் நொந்து வெளியேறினான். முரளி அவனைத் தேற்றினான்.

சில மாதங்களில் இன்னும் விதவிதமான கதைகள் பத்து எழுதினான். ஏ. கே., தன்னால் படமெடுக்க முடியாவிட்டாலும் தன் நண்பரான ஆசைத்தம்பியிடம் அருணைப் பற்றி சொல்லி, கதை சொல்ல அவரிடம் நேரம் வாங்கினான். அருண் அவருக்கு நன்றி சொல்லி ஆசைத்தம்பியிடம் கதை சொல்லக் கிளம்பினான்.

அவன் எழுதிய பத்து கதைகளில் சிறந்த இரண்டே கதைகளைத் தேர்ந்தெடுத்துச் சொன்னான். சொல்லி முடித்து அவரது பதிலுக்காக படபடப்பாகக் காத்திருந்தான். அவனை அங்கேயே காத்திருக்கச் சொல்லி விட்டு உள்ளே சென்றார். அவன் நகம் கடிக்கலானான். பதினைந்து நிமிடங்கள் தவிக்கவிட்டு வந்தார்.

“முன்பணம் பிடி அருண். உன் விருப்பம் போலவே படம் எடு. என் தலையீடு அறவே இருக்காது. லாபம் கொஞ்சமாவது வரட்டும், மத்தபடி நீ கதைலயோ, மத்த விஷயங்கள்லயோ எந்த சமரசமும் செஞ்சுக்க வேண்டாம். தொழில்நுட்பக் குழு முதல் நடிகர், நடிகைகள் வரைக்கும் எல்லாம் நீயே முடிவு பண்ணிக்கோ. என் மேலாளர்கள் குழு படம் முடியற வரைக்கும் உன்கூடவே இருந்து உனக்கு எப்பவெல்லாம் என்னென்ன தேவையோ அதையெல்லாம் செஞ்சு குடுப்பாங்க. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நம்ம படம் பல வருடங்கள் மக்கள் ஞாபகம் வெச்சிருக்கற மாதிரி இருக்கட்டும். அது போதும் எனக்கு”. என்ன பேசுவதென்று தெரியாமல் அவர் காலில் விழுந்தான். பதறி விலகினார்.

“உன்னை மாதிரி நல்ல படைப்பாளிகள் யாருக்கும் பணியத் தேவையில்லை அருண். மரியாதை மனசுல இருந்தா போதும்”

நன்றி சொல்லி வெளியே வந்ததும் முதலில் ஏ. கே. ஸாருக்கு தொலைபேசியில் விஷயம் சொல்லி நன்றி நவின்றான்.

“நல்லா பண்ணுப்பா. அடுத்த படம் கண்டிப்பா நாம பண்ணலாம்”

முரளியிடம் விஷயம் சொன்னதும் அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. மளமளவென காரியங்கள் நடந்தன. நடிகர்களைத் தேர்வு செய்து தயாரிப்பு மேலாளர்களிடம் அவர்களின் தேதிகளை வாங்கச் சொன்னான். முக்கிய நடிகர்களிடம் மட்டும் கதைச் சுருக்கத்தைச் சொன்னான். அதற்கே அவர்கள் அரண்டுவிட்டார்கள், நிச்சயம் தேதி ஒதுக்குவதாகச் சொன்னார்கள். தனக்குத் தெரிந்த, முதல் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நண்பர்களை, தொழில்நுட்பக் குழுவில் சேர்த்துக் கொண்டான். திரைக்கதையை தனியாகவே எழுதிவிட்டு, பின் முரளியுடன் சேர்ந்து வசனம் எழுதினான்.

ஒரு நல்ல நாளில் படப்பிடிப்புக்குக் கிளம்பினார்கள். பணம் நிறைய செலவு செய்யக் கூடாது என ஆரம்பத்திலேயே முடிவெடுத்தான். பெரும்பாலும் இந்தியாவிலேயே படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தனர். மூன்று மாதங்கள் போனதே தெரியவில்லை, அசுர உழைப்பைக் கொட்டினார்கள். படப்பிடிப்பு முடிந்தது. தயாரிப்பு மேலாளர்களே இவன் குழுவினரின் உழைப்பைப் பார்த்து வியந்தனர், இவனைப் பற்றி ஆசைத்தம்பியிடம் ரொம்ப புகழ்ந்தார்கள். அவர் அருணுடனே அடுத்த படம் எடுப்பது என மனதில் நினைத்துக் கொண்டார்.

மூன்றே வாரங்களில் படத்தொகுப்பு மற்றும் பிற தயாரிப்புப் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாரானது. ஆசைத்தம்பிக்கு படம் ரொம்பப் பிடித்தது, உடனே அடுத்த படத்திற்கு முன்பணம் கொடுத்தார். ஏ. கே. வின் படத்திற்குப் பிறகு இவரது படத்தை இயக்க முடிவு செய்தான். தேவையான அளவுக்கு மட்டும் விளம்பரம் செய்து படத்தை வெளியிட்டார் ஆசைத்தம்பி. நேர்மறை விமர்சனங்கள், இணைய வாசிகள் படத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது, வாய் வழிப் பரவல் இவற்றின் மூலம் படத்தின் மதிப்பு எகிறி கொழுத்த லாபம் சம்பாதித்தது. அது மட்டும் இல்லாமல் ‘வணிகரீதியான சமரசங்கள் இல்லாத நல்ல படம்’ என்ற பெயரையும் மறுகருத்து இன்றி பரவலாகச் சம்பாதித்தது. அருண் கோரிக்கை வைக்காமலே படத்தை விருதுகளுக்கு அனுப்ப ஆயத்தமானார் ஆசைத்தம்பி. படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அவனுடன் பகிர்ந்து கொள்ள முடிவெடுத்தார், அருண் மறுத்து தன் சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டான்.

ஊரிலிருந்து அருணின் குடும்பத்தினர் அனைவரும் சென்னைக்கு வந்து அவனுடன் சில வாரங்கள் தங்கிச் சென்றனர். அவனுக்குக் கிடைத்த புகழ், வசதிகள் இவற்றை எல்லாம் தாண்டி அவன் நினைத்தபடியே இயக்குநர் ஆனதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

ஏ. கே. வுடனான அடுத்த படத்திற்கு கதை, திரைக்கதை வேலைகளில் மூழ்கினான். தனது ஊரைத் தள்ளி இருந்த ஒரு கிராமத்தில் பள்ளி நண்பன் வீட்டில் தங்கி எழுதினான். அந்த வேலையில் கண்ணாக இருந்ததால் முரளி மற்றும் அவனது தொழில்நுட்ப குழுவில் எவரிடமும் பேசவில்லை. சில மாதங்கள் பொறுமையாக நேரம் எடுத்துக்கொண்டு நன்றாக மெருகேற்றினான்.

அடுத்து வசனம் எழுத, காணொளிக் கோணங்கள் விவாதிக்க சென்னை வந்து, அவனது குழு ஆட்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யும்போது ஒரு விஷயம் பேரிடியாக கேள்விப்பட்டான். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அவனது குழுவின் முக்கிய ஆட்கள் அனைவரும் ஒரு வேனில் உல்லாசப் பயணம் செல்கையில் விபத்து ஏற்பட்டு ஒட்டு மொத்தமாக அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவனுக்கு பூமியே பிளந்தது போல இருந்தது. முழுதாக இரு மாதங்கள் ஆகின, அவன் இயல்பு நிலை திரும்ப. ஆசைத்தம்பியைப் பார்த்து, அவர் முன்பு கொடுப்பதாக இருந்த லாபத்தின் பங்கை வாங்கிக்கொண்டு இறந்த தன் குழுவினர்களின் குடும்பத்திற்கு பிரித்துக் கொடுத்தான். ஆசைத்தம்பியும் தன்னால் முடிந்தவரை மேலும் பணம் கொடுத்தார்.

ஏ. கே. சொன்னார் – “வேணும்னா இன்னும் சில மாதங்கள் எடுத்துக்கோ, மறுபடியும் அதே மாதிரி ஒரு குழுவை சேர்க்கணுமே”. அவன் இரண்டே வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கலாம் என வாக்களித்தான். அருண் உதவி இயக்குநர் ஆகப் பணியாற்றியபோதும் அதன் பிறகும் தான் சந்தித்த பலரை ஞாபகப்படுத்திக் கொண்டு அவர்களைத் தொடர்பு கொண்டு பத்தே நாட்களில் புதுக் குழுவை உருவாக்கினான்.

இதற்கிடையில் அவன் படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் அறிவித்தனர் – சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த வசனம். இறந்த இருவருக்கு விருது.

மனதை திடமாக்கிக் கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கினான். தன்னால் படப்பிடிப்பு தொடங்கவே சில மாதங்கள் தாமதமானதை எண்ணி வருந்தி சீக்கிரம் முடிக்க விரும்பி இன்னும் கடுமையாக உழைத்தான். ஒவ்வொரு காட்சி படமெடுத்ததுமே வெள்ளோட்டம் பார்க்கையில் ஒளிப்பதிவின் சில கோணங்கள், ஒளியமைப்பு போன்றவை அவனுக்குத் திருப்தியாக இல்லை. பழைய குழுவில் இருந்த ஒளிப்பதிவாளன் காங்கேயன், அருணின் எண்ணத்தை நூறு சதவிகிதத்திற்கும் மேலாக காட்சிப்படுத்துவதில் சூரன். புது ஆள் மதனும் தன்னால் இயன்றவரை அருணின் எண்ணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்தான், இருப்பினும் அருணுக்கு முழுத் திருப்தி இல்லை. அதேபோல் வசனங்கள், கலையமைப்பு என பிற துறையினர் வேலைகளிலும் முன்போன்ற திருப்தி அவனுக்கு வரவேயில்லை.

எப்படியோ சமாளித்து இரண்டே மாதங்களில் படப்பிடிப்பை முடித்தான். படத்தொகுப்பு மற்றும் கணிணி வரைகலை போன்ற மீதி வேலைகளை தான் மட்டுமே செய்வது என முடிவெடுத்து தனியாகவே உட்கார்ந்தான். படமெடுத்த காட்சிகளை ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்க்க ஆரம்பிக்கும்போது சந்தோஷப்படுவதா, ஆச்சர்யப்படுவதா இல்லை பயப்படுவதா எனப் புரியவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் வெள்ளோட்டம் பார்த்தபோது திருப்தி இல்லாதிருந்த ஒளிப்பதிவு கோணங்கள், ஒளியமைப்பு என அனைத்தும் இப்போது மிகக் கச்சிதமாக அவன் எண்ணப்படியே அருமையாக அமைந்திருந்தன. வசனங்களும் உதட்டசைவுகளும் புதுக் குழு எழுதியதற்கு மாறாக முரளியே எழுதியது போல் அசத்தலாக வந்திருந்தது. மற்ற விஷயங்களும் அப்படியே. அவனுக்கு நன்றாக நினைவிருந்தது, முன்பு எதுவுமே முழுத் திருப்தியுடன் இருந்ததே இல்லை.

‘எப்படி இந்த மாற்றங்கள் சாத்தியம்?’ என்று குழம்பிக் கொண்டே தலை உயர்த்தினால், பழைய குழுவின் முரளி மற்றும் பிற ஆட்களை எல்லாம் வைத்து (முதல் படத்தின் படப்பிடிப்பில் ஒரு சமயம்) அவன் எடுத்திருந்த புகைப்படம் கண்ணில் பட்டது. அதில் அனைவரும் அவனை நோக்கி கட்டை விரலை உயர்த்தி காட்டிக் கொண்டிருந்தனர். 

தொடர்புடைய சிறுகதைகள்
"மாதேஷ் ஸார்! இப்படி அநியாயமா பொய் சொல்லி, என் சொத்தை அபகரிச்சவனை விடுதலை பண்ண விட்டுட்டீங்களே" "நீ மொதல்ல என்கிட்ட இந்த வழக்கைக் கொண்டு வந்திருந்தா நிலைமையே தலைகீழ் ஆயிருக்கும். உன்னை யாருய்யா என் தொழில் எதிரி ஈஸ்வரன் கிட்ட போகச் சொன்னா?" "உன் ...
மேலும் கதையை படிக்க...
"டேய் பாரதி! நேத்து உனக்கு எவ்வளவு தடவை ஃபோன் பண்ணேன், நீ எடுக்கவே இல்லை. திரும்பவும் நீ எனக்கு கால் பண்ணவும் இல்லை. அடிக்கடி நம்பரை மாத்தினா எப்படிடா உன்னைக் கூப்புடுறது?" புலம்பினான் ஜெகன். இதுதான் பாரதியோட பிரச்சனை. தன்னிடம் ஏற்கனவே மொபைல் ...
மேலும் கதையை படிக்க...
காட்சி 1: "என்னடி கலா! நீயும் ரகுவும் இப்பல்லாம் பேசிக்கறதே இல்லையா? கொஞ்ச நாளா உங்களை ஒண்ணா பார்க்கவே முடியலையே!" "இல்லைடி. ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம்" "என்னடி ஆச்சு? என்கிட்ட சொல்லவேயில்ல. என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?" "சின்னதா ஆரம்பிச்சி, பூதாகரமா ஆயிடுச்சி" "யார் மேல தப்பு?" "ரகுதான் எல்லாத்துக்கும் காரணம். ...
மேலும் கதையை படிக்க...
"ஹாய்டா! உன்னைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு. நல்லா இருக்கியா?" "ஹாய்டி! உன்னைப் பார்க்காமல் சூப்பரா இருக்கேன், நீ எப்படி இருக்கே?" ஏதோ பலநாள் கழித்து சந்திக்கும் நண்பன்/நண்பியின் ஜாலியான உரையாடல் இது என்று நினைத்தீர்களா? அதுதான் இல்லை. ஒரே வீட்டில் இருக்கும் கணவன், ...
மேலும் கதையை படிக்க...
1 <<காதல் என்பது தன்னுயிரை வாடகைக்கு அமர்த்துவது, இன்னோர் உடலில்>> "ப்ப்ப்ப்பா. என்னமா எழுதறாரு!! அவரோட கவிதைகள் படிக்கும்போது எனக்கு ஒரு காதலி இல்லையேன்னு ஏக்கமா இருக்குடி" "நீ வேற, அவரு கவிதைகள விட கதைகள் இன்னும் சூப்பர் தெரியுமா? நீ கவிதய விட்டு வெளிய ...
மேலும் கதையை படிக்க...
பொய்மையும் வெல்லும்
மறந்து போச்சு
யார் மேல தப்பு?
சேர்ந்தும் சேராமலும்
நிஜமான கற்பனைக் காதல்

எண்ணம்போல் படம் மீது 7 கருத்துக்கள்

 1. vennkateshwaran.c says:

  நல்ல படைப்பு, நம்ம படுற கஷ்ட்டம் எல்லாம் மரம் நடுற மாதிரி, இந்த கதையும் அது போல தான்.

 2. Kavya says:

  அட்டகாசம்… மிகவும் அற்புதமான படைப்பு பாத்திரங்கள்கச்சிதமாகபொருந்தி உள்ளது… வாழ்த்துக்கள்… மேலும் படைப்புகாக காத்திருக்கிறேன்…

  • சத்யஸ்ரீ says:

   பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. என் போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு இவை மிகவும் ஊக்கமாக இருக்கும்.

 3. ஆரோஜோ says:

  மனதில் சில அசைவுகள்…… அருமை

  • சத்யஸ்ரீ says:

   பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

 4. Soundar says:

  அருமை. விறு விறு வெனப்போய் வெகு நன்றாக முடிந்தது.

  • சத்யஸ்ரீ says:

   பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)