உயிர் வியூகம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 54,633 
 

கேப்டன் ராம்குமாரின் கால்கள் இரண்டும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. கைகளை விலங்குகள் கோத்திருந்தன. அவன் மீது செம்மண் தூசு அடர்ந்து இருந்தது. திறந்த ஜீப்பின் வெளியே வானில் பறவைகள் சுதந்திரமாகப் பறந்தன.

யுக காலத்துக்குக் குலுங்கி, பயணம் செய்து முடிவாக ஜீப், ஒரு நிறுத்தத்துக்கு வந்தது. அது ஒரு மாபெரும் இரும்புக் கூடாரம்போல் தெரிந்தது. வாசலில் சொற்பமான காவலர்கள் எதையோ தின்றுகொண்டு அசுவாரஸ்யமாக, இரும்பு கேட்களைத் திறந்துவிட்டார்கள்.

எல்லாவற்றையும் ராம்குமார் சிதையாத ஒற்றைக் கண்ணால்தான் பார்க்க முடிந்தது. தொய்ந்திருந்த அவனுடைய உடலை, இருபுறமும் எதிரி வீரர்கள் பிடித்து தரதரவென்று தரைக்கு இழுத்தார்கள். அவர்களுடைய உடைகளை முழுமையாக நனைத்திருந்த வியர்வையின் வாசம் குப்பென்று வீசியது.

உயிர் வியூகம்!

சில அடிகள் கடந்ததும், குறுகலான படிகளில் ராம்குமார் இழுக்கப்பட்டான். நிர்வாணமான இரண்டு குதிகால்களும் ஒவ்வொரு படியிலும் வேகத்தோடு மோதி, வழண்டு சதையும் ரத்தமுமாக தரையில் கோலமிட்டுக்கொண்டே வந்து, மூளைக்கு உச்ச வலியை அனுப்பின.

படிகள் முடிந்து, கரடுமுரடான தரையில் சற்று தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, அவன் மூச்சு விடத் தவித்தபோது, கனமான இரும்பாலான ஒரு கதவு திறக்கப்பட்டது.

இழுத்து வந்தவர்கள் ராம்குமாரை அறையின் நடுவில் வீசி எறிந்தார்கள். காலியான பெரும் கூடத்தில் ஒவ்வோர் அசைவுக்கும் கூடவே ஓர் எதிரொலி. ராம்குமார் மூச்சை ஆழமாக இழுத்து, சக்தியைக் கூடியவரை சேகரித்துக்கொண்டான். தான் கிடந்த அறையைக் கவனித்தான்.

அந்த அறையின் ஒரு மூலையில், குண்டு பல்ப் ஒன்று பலவீனமாக மஞ்சளாக வெளிச்சத்தைக் கசிந்தது. மற்றபடி, அங்கே பொதுவாக இருளும் இருந்தது. கூரை, மிக உயரத்தில் இருந்தது. ஜன்னல்கள் தென்படவில்லை. ராம்குமார் கண்களை மீண்டும் மூடிக்கொண்டான். சில நொடிகளே என்றாலும், அந்த ஓய்வு அவனுக்குத் தேவையாக இருந்தது.

அவன் அணிந்திருந்த இந்திய ராணுவ உடை, பல இடங்களில் கிழிந்திருந்தது; காயங்களிலிருந்து கசிந்த ரத்தத்தால் நனைந்திருந்தது. எதிரிகளின் மடக்கப்பட்ட முஷ்டிகளும், நீண்ட ரைஃபிள்களின் மரப்பகுதிகளும் ஆவேசமாக வீசப்பட்டதால் கன்னங் களில் கன்றிப்போன திட்டுகள். வாய்க்குள் ரத்தத்தின் கசப்பு. வலது கண் இமை, ஆரஞ்சு சுளை போல் தடித்து விழியை மூடியிருந்தது. ராணுவப் பயிற்சியில் எவ்வளவோ மும்முரமான, கடினமான, கரடுமுரடான பயிற்சிகளுக்கு உடல் பழக்கப்படுத்தப்பட்டி ருந்தாலும், எதிரிகளின் கைகளில் சிக்கும்போது, எந்த உத்தரவாதமும் இல்லை.

பூட்ஸ்களின் ஒலி. ராம்குமார், விலாவில் உதைக்கப்பட்டான். விலா எலும்புகள், ஏற்கெனவே வாங்கியிருந்த அடிகளின் காரணமாக உள்ளே அழுதுகொண்டிருந்தன. பூட்ஸ் காலில் உதைபட்டதும், தன்னிச்சையாக ராம்குமாரின் முகம் சுளித்தது. கண்களைத் திறந்தான். அவனுடைய இருபுறமும் கால்களை ஊன்றி நின்றிருந்தவன் உயரமாக இருந்தான். குனிந்து ராம்குமாரின் சட்டையை மார்பில் கொத்தாகப் பற்றி அப்படியே நிமிர்த்தி இழுத்தான்.

நிமிர்த்தி எழுப்பப்பட்ட ராம்குமார், அப்படியே இழுக்கப்பட்டு ஒரு நாற்காலியில் எறியப்பட்டான். நாற்காலியில் உடல் மோதி அமிழ்ந்த வேகத்தில், அவனுடைய எலும்புகள் உள்ளே நொறுங்கி சேகரமாகிவிடுமோ என்று அச்சமாயிருந்தது. எதிரில் நீளமான ஒரு மர மேஜை.

எங்கோ ஒரு ஸ்விட்ச் தட்டப்பட, கூரையில் ஒரு விளக்கு விழித்தது. அந்தக் கூடுதல் வெளிச்சத்தில் அறை இன்னும் கிலியூட்டுவதாகத் தெரிந்தது. சிமென்ட் பெயர்ந்த தரையிலும், அவன் முன் நீண்டிருந்த மேஜையின் பரப்பிலும் உலர்ந்த ரத்தக் கறைகள். சில கறைகள் மெல்லிய கோடுகள். சில கறைகள் ரத்தம் அங்கே தேங்கி உறைந்ததால் ஏற்பட்டவை.

உயிர் வியூகம்!2

ராம்குமாரை இழுத்து நாற்காலியில் எறிந்தவன், அவனுக்கு எதிரில் மேஜையின் முனையில் அமர்ந்தான். வலுவான உடல். கண்களில் வெறி.

”கேப்டன் ராம்குமார்… இந்தியர்கள் மிகவும் வலுவானவர்கள்; ராணுவத்தில் சிறப்பான பயிற்சிகள் மேற்கொண்டவர்கள்; எதிரிகளிடம் சீக்கிரம் சிக்கிக்கொள்ளாதவர்கள் என்றெல்லாம் உங்கள் நாட்டில் பெருமையடித்துக் கொள்வீர்களாமே? புலிகள் சூழ்ந்து கொள்ளும்வரைதான் ஆட்டுக்குட்டிகள் பீற்றிக்கொள்ள முடியும் அல்லவா?” என்று எகத்தாளமாகச் சிரித்தான்.

ராம்குமார் உடலளவிலும் மனதளவிலும் மிகவும் களைத்து, தளர்ந்திருந்தான். இருந்தபோதிலும் திறக்கமுடிந்த ஒற்றைக் கண்ணைத் திறந்து, வளைக்கமுடிந்த அளவு உதட்டை வளைத்துக் கோணலாகப் புன்னகைத்தான்.

”நண்பா, இப்போதுகூட உங்களுடைய புத்திசாலித்தனத்தால் என்னைக் கைப்பற்றிவிடவில்லை. இந்தியன் ஒருவனுடைய உதவியில்லாமல் உங்களுக்கு அது சாத்தியமே ஆகியிருக்காது!” – சொல்லி முடித்ததும், எதிரில் இருந்தவன் ஆவேசமானான். புறங்கையை ராம்குமாரின் கன்னத்தில் வேகமாக வீசினான். ராம்குமார், நாற்காலியோடு சேர்ந்து பக்கவாட்டில் விழுந்தான்.

உள்ளே அவனை இழுத்து வந்த வீரர்கள், அவனை அப்படியே நாற்காலியோடு எழுப்பி நிமிர்த்தினார்கள்.

”நான் யார் என்று உனக்குத் தெரியுமா?”

ராம்குமார், எதிரில் இருந்தவனை ஆழமாகப் பார்த்தான்.

”தெரியும்… பாகிஸ்தான் கமாண்டர் மீர் அலி! எங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, எங்கள் ராணுவ வீரர்களைக் காயப்படுத்தி, எங்கள் மண்ணில் சாகவிடாமல் உங்கள் பகுதிக்கு இழுத்து வருபவன் நீ!”

”உன்னை எதற்காக இந்த விசாரணைக் கூடத்துக்குக் கூட்டி வந்திருக்கிறோம் என்று தெரியுமா?”

”இது விசாரணைக் கூடமல்ல; சித்ரவதைக் கூடம். வெறிபிடித்த ஓநாய்கள், சிக்கிய இந்தியர்களை வைத்து விளையாடும் அநாகரிகமான மைதானம்.”

”இந்திய எல்லையில், கண்ணிவெடிகள் உயிரோடு இருக்கும் பகுதிகளை இந்த வரைபடத்தில் குறித்துக் கொடு, போதும்.”

”என் உடலில் உயிர் இருக்கும்வரை அந்த விவரங்கள் என் மூலம் உனக்குக் கிடைக்காது!”

மீர் அலி சலிப்புடன் கைகளைத் தேய்த்துக்கொண்டான்.

இந்தப் படத்தை 3Dயில் பார்க்க, இங்கே க்ளிக் செய்யவும்

”உறுதியானவர்கள்கூட இங்கு உடைந்துபோய் உண்மைகளை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் கடுமையான முயற்சிகளை உன் மீதும் செய்துபார்க்க வேண்டுமா? நேரத்தை வீணடிக்காதே. நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொன்னால் போதும்!”

”என்னிடம் கேள்விகள் கேட்பது உன் கடமை. யாரிடம் என்ன பதில் சொல்வது என்பது என் உரிமை!”

”என்ன உளறுகிறாய்?”

”இன்னோர் இந்தியனிடம் மட்டும்தான் ரகசியங்களைப் பகிர்வேன். அவன் துரோகியாக இருந்தாலும்!”

மீர் அலியின் கண்கள் சுருங்கின. ராம்குமார், அவனை ஒற்றைக்கண்ணால் வெறித்தான்.

”கண்ணிவெடியில் வெடித்துச் சிதறிவிட்டதாக இந்திய ராணுவத்தை நம்பவைத்துவிட்டு, உங்கள் பக்கம் சேர்ந்துவிட்ட அந்த இந்திய துரோகியால்தான் காட்டிக்கொடுக்கப்பட்டேன். அவனை ஒரு கேள்வி கேட்க வேண்டும். பின், அவனிடம் சொல்கிறேன், உன் கேள்விக்கான பதிலை…”

”இப்படியொரு தேச பக்தி!” என்று மீர் அலி சிரித்தான். பின், தனது கைப்பேசியை எடுத்து, யாரிடமோ பேசினான்.

”இந்த நாய், இன்னோர் இந்திய நாயிடம்தான் குரைக்குமாம்! சரி, என் பொறுப்பிலேயே அவனை அழைத்து வருகிறேன்.”

மீர் அலி, அந்த அறையைவிட்டு வெளியேறினான்.

ராம்குமார் தரையில் ஓரமாக இழுக்கப்பட்டான். சுவரில் பதிந்த ஒரு சங்கிலியுடன் அவன் கைவிலங்கு பூட்டப்பட்டது. வெளியேறுவதற்கு முன், ஒருவன் ராம்குமாரை மீண்டும் விலாவில் எட்டி உதைக்க, மற்றவன் முகத்தில் உமிழ்ந்துவிட்டுப் போனான்.

மீண்டும் இரும்புக் கதவு ஒலியுடன் திறக்கப்பட்டபோது, ராம்குமார் கண்களைத் திறந்தான். இப்போது அவனுக்கு வெகு பரிச்சயமான இந்திய முகம், மீர் அலியுடன் சேர்ந்து தென்பட்டது.

”ராம்… எப்படியிருக்கிறாய், சகோதரா?”

”த்தூ..! துரோகி..! பால் கொடுத்த தாயின் மார்பைச் சிதைத்துவிட்டு, வேசியின் மடியில் படுப்பவன் எல்லாம் என் சகோதரன் அல்ல!’

‘கோபத்தில்கூட உனக்குக் கவிதை வருகிறது!’ என்று அஜய் வர்மா வாய்விட்டுச் சிரித்தான்.

‘என்ன கிடைத்தது என்று எதிரிகளிடம் சரணடைந்தாய்?’

அஜய் வர்மா, ராம்குமாரின் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு வந்தான். ‘இங்கே, ஒவ்வொரு விவரத்துக்கும் டாலர்களாக என் கணக்கில் சேர்கிறது. இரவு பகலாக எல்லையில் பனியில் விழித்துக்கிடந்தேனே, உன் நாட்டில் எனக்கு என்ன கிடைத்தது? என் மனைவியையும், புதிதாகப் பிறந்த குழந்தையையும் போய்ப் பார்ப்பதற்கு விடுப்புகூடக் கொடுக்க மறுத்துவிட்டது இந்திய ராணுவம். நம்மைச் சாகடித்துவிட்டு, அமைச்சர்களும் அதிகாரி களும், ஆயுதம் வாங்குவதிலும் சவப்பெட்டி வாங்குவதிலும் காசு அடித்துக்கொண்டு போகிறார்கள்! கண்ணிவெடிகள் பற்றிய குறிப்பு எனக்கே தெரிந்திருந்தால், உன்னை வலை வைத்துப் பிடித்திருக்கவேண்டிய அவசியமே வந்திருக்காது.’

மீர் அலி குறுக்கில் உறுமினான்.

‘வீண் பேச்சுகளை நிறுத்து. எல்லையில் முகாம் இட்டிருக்கும் இந்தியர்களில் நூறு பேரையாவது கொன்று புதைப்பேன் என்று என் உயர் அதிகாரியிடம் வாக்குக் கொடுத்திருக்கிறேன். இவன் கொடுக்கும் தகவல்கள் முக்கியமானவை. விரைந்து வாங்கு.’

அஜய் வர்மா, வெகுவேகமாக ராம்குமாரை நெருங்கி, அவன் தலைமுடியைப் பற்றி அப்படியே இரும்புச் சுவரில் மோதினான். ‘தொம்’ என்ற ஒலி, அறை முழுவதும் அதிர்ந்தது. ராம்குமாரின் காதுக்குள் ரீங்காரம் அடங்க வெகுநேரம் பிடித்தது.

இந்தப் படத்தை 3Dயில் பார்க்க, இங்கே க்ளிக் செய்யவும்

அஜய் வர்மா, சுவரில் இருந்த மூன்றடி நீள இரும்புக் கம்பி ஒன்றை எடுத்தான். அதன் கூர்முனையில் ஏற்கெனவே பல உடல்களில் நுழைந்து, மீண்ட ரத்தக்கறை இருந்தது. ராம்குமாரின் நெஞ்சில் அந்தக் கம்பியின் முனையைப் பொருத்தினான்.

”பதில் சொல்லிவிட்டால், நீ என் நண்பன் என்று உயர் அதிகாரிகளிடம் சொல்லி, சிறையில் உனக்குக் காற்றோட்டமான அறையை வாங்கித் தருகிறேன். பதில் சொல்லாவிட்டால், இதை இப்படி நுழைத்து, முதுகு வழியே வெளியே எடுத்துவிடுவேன்!’

ராம்குமார் சற்றும் அயரவில்லை. அஜய் வர்மாவின் முகத்தில் ரத்தமாகத் துப்பினான்.

திடீரென்று அஜய் வர்மாவின் கண்களில் ஒளி.

‘கமாண்டர்… இப்போது எனக்கு நினைவு வருகிறது. நமக்குத் தேவையான விவரம் இவன் உடலிலேயே இருக்கிறது.’

‘என்ன சொல்கிறாய்?’

‘நினைவில் வைத்துக்கொள்ள சிக்கலான விவரம் என்பதால், சங்கேத முறையில் இவனுடைய உள்தொடையில் 16 இலக்க எண்ணாக அந்த ரகசியம் எழுதப்பட்டிருக்கிறது. நான்கு, நான்கு இலக்கங்களாகப் பிரித்து, அவற்றைக் கலைத்து மாற்றி அமைத்து. எனக்கு அந்த சங்கேத மொழி தெரியும். பார்த்தால், நானே சொல்லிவிடுவேன்.’

ராம்குமாரின் இடுப்பில் ஏற்கெனவே கிழிந்து தொங்கிக்கொண்டிருந்த ராணுவ பேன்ட்டை அஜய் வர்மா சரக்கென்று உருவினான்.

‘துரோகி… இதற்கு நரகத்தில்…’ என்று ராம்குமார் ஏதோ சொல்லத் தொடங்க, அஜய் அவனை அலட்சியம் செய்தான். கல்லிலும் கரடுமுரடான நிலத்திலும் இழுத்து வரப்பட்ட அந்த உடலின் சிராய்ப்புகளில் இரும்புக் கம்பியை ஒட்டியபடி ராம்குமாரின் கால்களைப் புரட்டிப் பார்த்தான்.

‘இரண்டு கால்களும் சேர்த்துக் கட்டப்பட்டிருப்பதால், உள்தொடையைப் பார்க்க முடியவில்லை. இந்தக் கட்டைக் கழற்றிவிடு!’

பாகிஸ்தான் வீரன், ராம்குமாரின் கால்களில் கட்டியிருந்த கட்டைக் கழற்றினான். ராம்குமாரின் இரண்டு கால்களையும் அஜய் வர்மா தன் கால்களால் விரித்தான். உள்தொடையில் ஏதோ எண் தென்பட்டது.

‘கமாண்டர், டார்ச் இருக்கிறதா?’

மீர் அலி, கைப்பேசியில் இருந்த சிறு டார்ச்சை உயிர்ப்பித்து, அங்கே காட்ட…

‘இன்னும் கீழே..’

மீர் அலி மேலும் குனிந்தான்.

சரக்கென்று அஜய் வர்மாவின் கையிலிருந்த கூரான இரும்புக் கம்பி மீர் அலியின் கழுத்தில் இறங்கியது. அதே வேகத்தில் வெளிப்பட்டு, அவன் நெஞ்சைத் துளைத்து மீண்டது.

‘ஹக்…’ என்ற ஒலியுடன் மீர் அலி கண்கள் விரிய புரண்டு விழுந்தான். நடந்ததைப் புரிந்து முதல் பாக். வீரன் சுதாரிக்கும் முன், அஜய் வர்மா கம்பியை உருவி அவனைத் தாக்க, அவன் மல்லாந்து விழுந்தான். அவன் கையிலிருந்து எகிறிய துப்பாக்கியை கண நேரத்தில் விலங்கிட்ட கைகளால் கைப்பற்றி ராம்குமார் விசை இழுக்க, இரண்டு வீரர்களும் அடுத்தடுத்து சரிந்தனர்.

சித்ரவதை அலறல்கள் வெளியே கேட்கக் கூடாது என்று அமைக்கப்பட்ட சுவர்களைத் தாண்டி ஒலி வெளியே கசிய வாய்ப்பு இல்லை. இந்தியர்களின் குருதியை மட்டுமே ருசித்திருந்த அந்தத் தரை பாக். வீரர்களின் ரத்தத்தில் நனைய ஆரம்பித்தது.

அஜய் வர்மா குனிந்து ராம்குமாரின் விலங்குகளை அவிழ்த்தான்.

‘ஸாரி, சற்று நேரம் கூடுதலாகவே நான் அவர்கள் பக்கம் இருப்பதாக நாடகம் ஆட வேண்டியிருந்தது. உனக்கு நேர்ந்த அட்டூழியங்களுக்கு மன்னித்துவிடு!’

‘இல்லை சகோதரா…’ என்று அவன் கையைப் பற்றிக்கொண்டு எழுந்தான் ராம்குமார்.

‘பாகிஸ்தான் ராணுவ உடைகளை எடுத்து அணி.’

‘மனதால்கூட ஏற்க முடியவில்லையே!’ என்றான் ராம்குமார்.

‘போர் முறைகளில் தந்திரமும் ஒன்று! இந்திய அதிகாரிகளைப் பிடித்து வந்து, சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக சித்ரவதை செய்பவனைப் பிடிக்க நாம் வகுத்த வியூகம் இது! உயிர் போனாலும், அது பற்றிக் கவலை இல்லை என்றுதான் வந்தோம். ஆனால், எதிரியின் மண்ணில் உயிர்விட எனக்கு விருப்பம் இல்லை. இந்திய மண்ணுக்குத் திரும்புவோம்.’

கீழே உயிரற்றுக்கிடந்த மீர் அலியின் உடைகளைக் கழற்ற ஆரம்பித்தான் அஜய் வர்மா.

உடலில் வலு இல்லாதபோதும், இப்போது ராம்குமார் நிமிர்ந்து எழுந்து நின்றபோது, அவனிடம் ஒரு கம்பீரம் சேர்ந்திருந்தது!

– நவம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *