மைசூர் பாகு!

 

பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன் ராமு, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவசர அவசரமாகப் புறப்பட்டான்.

தன்னுடைய பம்பரத்தை எடுத்துக் கொண்டு புறப்படும் பொழுது, சமையலறையிலிருந்து வந்த நெய்யின் மணம் அவனை திகைக்க வைத்தது! உடனே பம்பரத்தை சட்டை பையில் போட்டுக் கொண்டு சமையலறைப் பக்கம் போனான்.

அடுத்த இரண்டாம் நாள் நடக்கவிருக்கும் திருவிழாவை முன்னிட்டு, அம்மா மைசூர் பாகு தயாரித்துக் கொண்டிருந்தாள்.

ராமு அங்கு சென்ற பொழுது, அவனுடைய அம்மா பெரிய தட்டில் நீண்ட சதுரங்களாக மைசூர் பாகுகளை அறுத்துக் கொண்டிருந்தாள். அதன் பின் அவைகளை ஒரு தூக்குப்பாத்திரத்தில் அடுக்கி திருவிழாவிற்காகப் பத்திரப் படுத்தி விடுவாள்! மைசூர் பாகுகளை அறுக்கும் காட்சியைப் பார்க்கும் பொழுதே ராமுவின் நாக்கில் நீர் ஊறியது!

பண்டிகைக்காக அம்மா எந்த திண்பண்டங்கள் செய்தாலும், எல்லா வேலைகளையும் முடித்த பிறகு, அவைகளைப் பத்திரப் படுத்தி வைத்து விட்டு, பண்டிகை அன்று எல்லோரும் குளித்து புது டிரஸ் போட்டுக் கொண்ட பிறகு தான் அம்மாவே எல்லோரையும் கூப்பிட்டு திண்பண்டங்களை, தருவாள்.

அதற்கு முன்பே சமையலறைக்குப் போய் கேட்டால், திட்டுத்தான் கிடைக்குமே தவிர திண்பண்டம் கிடைக்காது! இந்த விபரம் ராமுவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவனுடைய நாக்குக்குத் தெரியாது!

எப்படியாவது ஒன்று இரண்டு மைசூர் பாகுகளை அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் விடவேண்டும் என்ற எண்ணத்தில் மெதுவாக சமையலறைக்குள் நுழைந்தான் ராமு.

அவனுக்கு முன்பே அவனுடைய தங்கை அமுதாவும், தம்பி மணியும், சமையலறை வாசலில் முற்றுகையிட்டிருந்தார்கள்! அம்மா சமையலறையிலிருந்து ஏதாவது வேலையாக அம்மா வெளிப் பக்கம் சென்றால், அவர்கள் வெற்றி முரசு கொட்டி விடுவார்கள்! சூழ் நிலையை அறிந்து சந்தர்ப்பத்தை ராமுவும் எதிர் பார்த்து அங்கு போய் காத்திருந்தான்.

அவனுடைய நல்ல காலமோ என்னவோ அடுத்த வீட்டு மாமி, அந்த நேரம் பார்த்து, அங்கு வந்தாள்..

” ஏண்டி காமு…எனக்கு லட்டுப் பிடிக்க பதமே வர மாட்டேன்குறது…..நீ ஒரு நிமிஷம் வந்து பார்த்துச் சொல்லி விட்டுப் போயேன்!” என்று அழைத்தாள்!

அடுத்த வீட்டு மாமியுடன் போனால், கிட்டத் தட்ட எல்லா வேலைகளையும் அவள் வாங்கிக் கொண்டுதான் விடுவாள் என்பது காமாட்சி அம்மாளுக்கு நன்றாகத் தெரியும்!

அறுத்த மைசூர் பாகுகளை சிறிது நேரம் ஆறிய பிறகு தட்டிலிருந்து எடுத்தால், தான் உடையாமல் எடுக்க முடியும்!

அதற்குள் பக்கத்து வீட்டு மாமி வேறு அவசரப் படுத்தினாள்! காமாட்சி அம்மாள் சிறிது நேரம் யோசனை செய்தாள்! பிறகு ஒரு முடிவுக்கு வந்தாள்!

“ டேய்!…ராமு கொஞ்சம் இங்கு வாயேன்!…” என்று ராமுவை பக்கத்தில் அழைத்தாள்.

“ இந்த மைசூர் பாகு கொஞ்ச நேரம் ஆறட்டும்!…..நான் பக்கத்து வீட்டு வரை போய் விட்டு வருகிறேன்!..உன் தம்பி, தங்கை எல்லாம் எடுக்காம நீ பார்த்துக் கொள்! நீ தான் நம்ம வீட்டில் பெரிய பையன்!…உனக்குத்தான் பொறுப்பு அதிகம்! .ஜாக்கிரதையையாப் பார்த்துக்கோ!….நான் வந்து உங்களுக்கு சாப்பிட மைசூர் பாகை வெட்டி எடுத்து தருகிறேன்…” என்று மைசூர் பாகு தட்டிற்குப் பக்கத்தில் ராமுவை காவல் வைத்து விட்டு பக்கத்து வீட்டிற்குப் போனாள் காமாட்சியம்மாள்.

‘ பாலுக்குப் பூனையைக் காவல் வைத்தது போல்’ ஏதாவது நடந்து விடுமோ என்ற அச்சம் காமாட்சியம்மாளுக்கு இருந்தது!

அந்த சந்தேகத்தோடு வீடு திரும்பும் பொழுது உள்ளே பேச்சுக் குரல் கேட்டது! வெளியே நின்று காமாட்சியம்மாள் கவனித்தாள்.

“ வேண்டாம் மணி!…..அம்மா இல்லாத பொழுது ஒருவருக்கும் தெரியாம எடுத்து தின்பது ரொம்பத் தப்பு!…..அம்மா வந்தவுடன் நானே சொல்லி உங்களுக்கு ஆளுக்கு இரண்டு மைசூர் பாகு வாங்கித் தருகிறேன்!….” என்று பெரிய மனுஷத் தோரணையில் ராமு தம்பி, தங்கைக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான்.

அம்மா தன்னை நம்பி அந்தப் பொறுப்பைக் கொடுத்து விட்டுப் போனதில், ராமு தன் தலையில் யாரோ கிரீடம் சூட்டியதைப் போல் நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான்!

குழந்தைகளை வெறும் கட்டுப்பாடோடு மட்டும் வளர்க்காமல், அவர்களின் வளர்ச்சிக்குத் தக்கவாறு சிறிது சிறிதாக அவர்களிடமே பொறுப்புகளைக் கொடுத்து வளர்ப்பது தான், சிறந்த குழந்தை வளர்ப்பு முறை என்பதைப் புரிந்து கொண்ட காமாட்சியம்மாள், சந்தோஷத்தோடு ஆளுக்கு இரண்டு மைசூர் பாகுகளை எடுத்து குழந்தைகளிடம் கொடுத்தாள்!

நீதி: வளரும் குழந்தைகளுக்கு சின்ன வயசிலேயே பொறுப்புகளைக் கொடுத்து வளர்த்த வேண்டும்.! 

தொடர்புடைய சிறுகதைகள்
ரமேஷூவுக்கு பேஸ் புக், என்றால் உயிர். பேஸ் புக்கில் அவனுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட நண்பர்கள்! பேஸ் புக்கை ஓபன் செய்து விட்டால், பக்கத்தில் இடி விழுந்தால் கூட அவனுக்குத் தெரியாது! ‘பிளஸ் டூ’ பரிட்சையை போன மாதம் தான் ரமேஷ் எழுதி முடித்தான். ...
மேலும் கதையை படிக்க...
“ஏண்டி!....இன்னைக்கு எத்தனை பேர் இன் பாக்ஸில் வந்தாங்க!...” “அதை ஏண்டி கேட்கிறே?....இன்னைக்கு மட்டும் இருபத்தி ஐந்து பேர்!......அடேயப்பா அவர்கள் விடற ஜொள்ளு மட்டும் செல் போனிலிருந்து கீழே கொட்டறதா இருந்தா… சென்னை மழை வெள்ளத்தை விட அதிகமாப் போய் விடும்!....” என்று சொல்லி ...
மேலும் கதையை படிக்க...
“மாமன்னர் அசோக சக்ரவர்த்தி அவர்களே! ….வருக! வருக!...என் கோரிக்கையை ஏற்று பூலோகத்திற்கு, அதுவும் எங்கள் கோவை மாநகருக்கு வருகை தந்தற்கு மிக்க நன்றி மாமன்னா!..” “தம்பி இளவலே சரவணா! நீயோ ஒரு பள்ளிச் சிறுவன்!......எதற்கு நான் சொர்க்கத்திலிருந்து உங்க கோவை மாநகருக்கு வருகை ...
மேலும் கதையை படிக்க...
அது குறைந்த வருவாய் உள்ள ஒண்டுக்குடித்தனங்கள் நிறைந்த தெரு. அங்கிருக்கும் நிறைய பெண்கள் அருகில் உள்ள பங்களாக்கள், அபார்மெண்ட்களில் வீட்டு வேலைகளுக்கு போய் வருபவர்கள். அங்கு தான் ஆறுமுகமும் குடியிருக்கிறான். பக்கத்தில் உள்ள ஒரு பவுண்டரியில் அவனுக்கு வேலை. வேலை நேரம் போக மீதி நேரம் ...
மேலும் கதையை படிக்க...
கோவை திருச்சி ரோட்டில் வேகமாக வந்த ரமேஷ் கூட்டத்தைப் பார்த்து பிரேக் போட்டு, காரை நிறுத்தினான். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூடவா சாலை மறியல்? காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். ரமேஷுக்கு மேற்கொண்டு அந்த சாலை வழியாகப் போவது ...
மேலும் கதையை படிக்க...
பேஸ் புக்! – ஒரு பக்க கதை
இன் பாக்ஸ்!
மாமன்னர் அசோக சக்ரவர்த்தி!..பராக்!….பராக்!…
பெருமை!
தடை செய்யும் நேரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)