முன்னாடி பின்னாடி பார்த்து பேசுங்க எஜமான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 16,349 
 

ஒருநாள் மழை பெய்யும் போது ஒரு குரங்கு மரத்தில் நனைந்தபடி குளிரில் நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தது.

அதே மரத்தில் கூடுகட்டி வாழும் ஒரு சிட்டுக்குருவி அந்த குரங்கைப் பார்த்து, இவ்வளவு சிறிய பறவைகள் நாங்களே கூடுகட்டி மழையிலிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்கிறோம்.
.இவ்வளவு பெருத்த உடம்பை வைத்துக் கொண்டு நனைந்துக் கொண்டிருக்கிறாய், சோம்பேறியே, இந்த மரத்தை விட்டுப்போ என துரத்தியது.

குளிரில் நடுங்கியபடி அமர்ந்திருந்த குரங்கு, மழை விட்டதும் சென்று விடுகிறேன் என்றது. அந்த குருவி மீண்டும் அந்த குரங்கை வசைபாட துவங்கியது, தின்று தின்று உடம்பை மட்டும் வளர்த்துள்ளாய் ,ஒரு பாதுகாப்பான வீடு கட்ட தெரியவில்லை என்றது.

பொறுமை இழந்த குரங்கு அந்த பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது . அதிர்ச்சி அடைந்த பறவை அடப்பாவி இப்படி பன்னீட்டியே என அழுதது.

நியாயம் கேட்பதற்காக கரடியை அணுகியது. குருவியும் குரங்கும் கரடிமுன் அமர்ந்தது.

நடந்ததைக் கேட்ட கரடி, நீ மழைக்கு ஒதுங்கியவனை விரட்டியது தவறு என்றது.

குருவி சிறு சிறு பழங்களை கரடி முன் வைத்து ,முன்னாடி பின்னாடி பார்த்து பேசுங்க எஜமான் என்றது. பழங்களைப் பார்த்தக் கரடி ,நீ குருவியின் கூட்டை பிய்த்தது தவறு என்றது.
குரங்கு வாழைப்பழ தாரை கரடியின் பின் வைத்து விட்டு , முன்னாடி, பின்னாடி பார்த்து பேசுங்க எஜமான் என்றது.

இப்போது கரடி குருவி பக்கம் திரும்ப இது தேன் அடையை காட்டியது, குரங்குப் பக்கம் திரும்ப அது இளநீரைக் காட்டியது.

இருவரும் மாற்றி மாற்றி முன்னாடி, பின்னாடி பார்த்து பேசுங்க எஜமான் என்றது. கரடி வந்தவரை லாபம் என அனைத்தையும் வாங்கிக் கொண்டு, குருவியிடம் உனக்கு எந்த நேரத்தில் யாரிடம் எப்படி பேச வேண்டும் என தெரியவில்லை, அதனால் உன் கூட்டை இழந்து நிற்கிறாய்.

குரங்கிடம் ஒரு சிறு குருவியின் பேச்சை பெரியதாக எடுத்துக் கொண்டு கோவப்பட்டு அதன் கூட்டை சிதைத்தது உன் தவறு. இருவர் மேலும் தவறு இருக்கிறது, எனவே இருவரும் மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்த வேலையை பாருங்கள் என்றது.

தேவையற்ற பேச்சு, தேவையற்ற கோபத்தால் இழப்பு நமக்கே , நம் உழைப்பையும் கரடியிடம் இழந்து விட்டோம், இனியாவது ஒருவருக்கு ஒருவர் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, ஒருவருக்கு ஒருவர் உதவியாக வாழ்வோம் என குருவியும், குரங்கும் முடிவெடுத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *