பெரிய சந்தோஷம்

 

அந்த ஆங்கிலோ இந்தியப் பள்ளியே அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று மாலை நடைபெற இருக்கும் விழாவில் விளையாட்டு, ஓவியம், இசை ஆகிய போட்டிகளில் வென்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்குவதோடு மட்டுமல்லாமல் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு உபகாரச் சம்பளமும் வழங்கப்பட இருந்தது.

பெரிய சந்தோஷம்

விளையாட்டு, ஓவியம் மற்றும் பிற போட்டிகள் பள்ளிகளுக்கிடையே ஒரு வாரம் முன்னதாகவே நடத்தப்பட்டு அதில் வென்றவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டு விட்டன. ஆனால் இசைப்போட்டி மட்டும் கால் இறுதி, அரை இறுதி என நடத்தப்பட்டு அதிலிருந்து இரண்டே இரண்டு பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்விருவரும் அன்று மாலை நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரது முன்னிலையிலும் பாட வேண்டும். அதுவே அவர்களுக்கு இறுதிப் போட்டியாகும்.

இருவரில் ஒருவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டுக்கான உபகாரச் சம்பளத்துடன் பரிசும் சான்றிதழும் பெறுவர். இரண்டாம் இடம் பெறுபவருக்கு வெறும் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.

தனியார் நிறுவனம் ஒன்று, மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்கவும் ஆர்வத்தைத் தூண்டவும் இத்தகைய போட்டிகளைப் பள்ளிகளுக்கிடையே ஆண்டுதோறும் நடத்தி வந்தது. இசைப் போட்டியில் மட்டும் ஒரே பள்ளியைச் சேர்ந்த இருவர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானார்கள்.

அப்படித் தேர்வு பெற்றது இதுவே முதல் முறை என்பதால் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பு கூடி இருந்தது. அந்த இருவர் – எட்டாம் வகுப்பில் பயிலும் பி.சின்மயாவும் ஆர்.செல்வியும்தான். ஒரே வகுப்பாக இருந்தாலும் இருவரும் வெவ்வேறு பிரிவில் படித்து வந்தனர்.

சின்மயாவின் தந்தை வங்கியிலும் தாய் அரசு இசைக் கல்லூரயில் ஆசிரியையாகவும் பணி புரிகின்றனர். இயற்கையாகவே நல்ல குரல் வளமும் தாயிடமே இசை பயிலும் பாக்கியமும் பெற்ற சின்மயாதான் முதல் பரிசு பெறுவாள் எனப் பள்ளியில் அனைவரும் முடிவு செய்திருந்தனர்.

செல்வியின் நிலையோ வேறு… அவளுக்குத் தந்தை இல்லை. தாய் மட்டுமே இருந்தார். அவர் வீட்டிலேயே தையல் மிஷின் வைத்துத் துணிகளைத் தைத்து சொற்ப வருமானம் சம்பாதித்து வந்தார். அதனால் இசை ஆர்வம் இருந்தபோதும் செல்விக்கு முறையாக இசையைக் கற்றுக்கொள்ள வசதி இல்லை.

ஆனால் செல்வியிடம் என்ன சிறப்பு என்றால், எந்தப் பாடலையும் ஒருமுறை கேட்டாலும் அதை அப்படியே திரும்பிப் பாடிக் காட்டும் அபாரமான கேள்விஞானம் இருந்தது. முறையாகக் கர்நாடக சங்கீதம் பயிலவில்லையே தவிர, மற்றெல்லா விதத்திலும் சின்மயாவுக்குச் சரியான போட்டியாக இருந்தாள்.

தலைமை ஆசிரியரும் பிற ஆசிரியைகளும் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தனர். காரணம், யார் வென்றாலும் பெருமை அவர்கள் பள்ளிக்குத்தானே!

செல்வியின் தாய், “”இதோ பார் செல்வி. உன்னால் பயம் இல்லாமல் அவ்வளவு பேர் முன்னாடியும் பாட முடியும்னா பாடு! இல்லாட்டி போட்டியில பங்கெடுக்கவே வேணாம்! எல்லோரும் அந்தப் பொண்ணுதான் ஜெயிக்கப் போவுதுனு உறுதியாகச் சொல்றாங்க” என்றாள்.

“”அம்மா, எனக்குப் பரிசு கெடைச்சாலும் கெடைக்காட்டியும் பரவாயில்லே. என் தெறமையைக் காட்ட, இத ஒரு நல்ல வாய்ப்பா நெனச்சுக்கறேன்!” என்றாள் செல்வி உறுதியாக.

சின்மயாவின் வீட்டில் அவள் பெற்றோர் தங்கள் மகள் நிச்சயம் போட்டியில் ஜெயிப்பாள் என உறுதியோடு இருந்தனர். அவள் தந்தை விழாவை வீடியோ எடுக்க வீடியோ காமிராவும் பள்ளிக்கு வந்திருக்கும் அத்தனை பேருக்கும் வழங்க இரண்டு பெரிய அட்டைப் பெட்டி நிறைய சாக்லேட்டுகளும் ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு எனத் தனியாக மிக உயர்ந்த கடையிலிருந்து இனிப்புகளும் சிறப்பு விருந்தினருக்கு பெருமை செய்யப் பொன்னாடை என சகல பொருட்களையும் எடுத்துக் கொண்டு அமர்க்களமாகக் காரில் வந்து இறங்கினார்.

சின்மயாவின் தாய் இசை ஆசிரியை என்பதால் தன் மகளைப் பாடச் சொல்லிக் கேட்டுத் திருத்தங்கள் செய்தார். போட்டி நடப்பதற்கு ஒருவாரம் முன்னதாகவே அவளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளும் வென்னீரும் வழங்கிக் குரல்வளம் கெடாமல் பார்த்துக் கொண்டார்.

‘சின்மயாவுக்கு முதல் பரிசு’ என்ற அறிவிப்பைக் கேட்டவுடன் வானில் பறக்க விடுவதற்காக கேஸ் நிரம்பிய வண்ண பலூன்களைக் கையில் வைத்துக் கொண்டு தயாராக இருந்தனர், அவளது தோழிகள். போட்டி நடைபெறும் நேரம் வந்ததும், மைதானம் முழுவதும் நிரம்பியிருந்த மக்கள் வெள்ளம் சட்டென்று அமைதியானது.

“முதலில் பாட வருபவர் ஆர் செல்வி, எட்டாம் வகுப்பு’ என்று ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

செல்வியின் தாய் மிரட்சியுடன் தன் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டார். “கடவுளே, என் மகளுக்குப் பரிசு கெடைக்காட்டியும் கூடப் பரவாயில்லை. ஆனா, இத்தனை பெரிய கூட்டத்தைக் கண்டு, அவ பயந்துடக்கூடாது… நீதான் அவளுக்குத் தெம்பு தரணும்.’

செல்வி பதட்டப்படாமல் மேடையின் மையத்தில் இருந்த மைக் முன் வந்து நின்று சிறப்பு விருந்தினரை நோக்கிக் கரம் குவித்து, வணக்கம் செய்தாள்.
“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!’ என்ற பாரதியின் பாடலைப் பாடினாள். குரலில் நடுக்கம் இல்லை. தெளிவாகவும் சரியான உச்சரிப்புடனும் பாடினாள். அவளுடைய தன்னம்பிக்கை குரலில் தெரிந்தது. பாடி முடித்ததும் அனைவரும் கைதட்டினர்.

“அடுத்தபடியாக சின்மயாவைப் பாட அழைக்கிறோம்’ என்று அறிவிப்பு வந்ததுதான் தாமதம், மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

“சின்மயா…. பெஸ்ட் ஆஃப் லக்!’

“சின்மயா…. பெஸ்ட் ஆஃப் லக்!’

“ஹிப்… ஹிப்… ஹூர்ரே…ஹிப்….ஹிப்….ஹூரே!!’ என்று மாணவிகள் கோஷம் எழுப்பினர்.

“அனைவரும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று அடுத்த அறிவிப்பு வந்தபிறகே அனைவரும் அமைதி ஆயினர்.
குரலைச் செருமிக் கொண்டே “தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும்’ என்ற பாரதியாரின் பாடலைப் பாடத் தொடங்கினாள்.

ஆனால் குரலில் இனிமை இல்லாமல் பிசிறு தட்டியது. பல இடங்களில் அபஸ்வரமாக இருந்தது.

“என்னாச்சு.. இவளுக்கு?’ என்று அவளுடைய தாயார் கவலை கொண்டார்.
அதுவரை ஆர்ப்பரித்தக் கொண்டிருந்த அவளது தோழியரின் உற்சாகம் வடிந்து போயிற்று. ஏமாற்றத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கைக்கேமிரா மூலம் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அவளது தந்தை அதிர்ச்சியடைந்து நேரே தலைமையாசிரியையிடம் சென்று, “மேடம், ப்ளீஸ்… அவளுக்கு ஏதோ ப்ராப்ளம்னு நெனக்கிறேன். இஃப் யூ டோன்ட் மைண்ட்… இன்னொரு சான்ஸ் தர முடியுமா?’ என்று கேட்டார்.
அதற்குள் சின்மயா பாடி முடித்துவிட்டாள்.

உடனே அங்கிருந்த சிறப்பு விருந்தினர், “முதல் பரிசு பெறுபவர் ஆர்.செல்வி!’ என்று அறிவித்தார்.

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாயாக செல்வியின் அம்மா, கண்ணிலிருந்து வழியும் நீரைக் கூடத் துடைக்கத் தோன்றாமல், கூப்பிய கரங்களுடன் தன் இஷ்ட தெய்வங்களுக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தார்.

ஏமாற்றம் தாங்காமல் சின்மயாவின் தாய் கண்ணீர் வடித்தார். சின்மயாவின் தோழிகள் அவளைச் சூழ்ந்து கொண்டு, “”ஏண்டி… என்னாச்சு உனக்கு?” என்று கேட்டனர்.

அவளுடைய பெற்றோர் அவளருகில் வந்து, “”இப்படி, எங்க மானத்தை வாங்கிட்டியே, ஒன்னால நல்லாப் பாட முடியும். வேணும்னுதான நீ இப்படிப் பாடினே? ஏன் இப்படி செஞ்சே?” என்று கோபத்துடன் கேட்டனர்.

“”அம்மா, அப்பா… என்னை மன்னிச்சுடுங்க. ஒங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும்னு எனக்குத் தெரியும். ஆமா… நான் வேணுமின்னேதான் அப்படிப் பாடினேன். ஏன் தெரியுமா? அதோ… அங்கே பாருங்க… செல்வி முகத்துல தெரியுற சந்தோஷத்தைப் பாருங்க… அவ அம்மா முகத்துல தெரியுற பெருமிதத்தை! இந்த ஸ்காலர்ஷிப் கிடைக்காததுனால நம்ம குடும்பத்துக்கு ஒரு குறையும் ஏற்படப் போறதில்லை. செல்வியோட குடும்ப நெலமைக்கு இந்த ஸ்காலர்ஷிப் கிடைச்சா எவ்வளவு உதவியா இருக்கும் தெரியுமா? எவ்வளவோ கஷ்டங்கள் குறையும். தான் விரும்பிய பொருளை அவளால வாங்கிக்க முடியும். சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம் அடுத்தவுங்களை சந்தோஷப்படுத்திப் பார்க்கறதுதான். பரிசு கிடைக்கிறதைவிட அவங்க சந்தோஷத்தப் பார்க்கிறதுதான் என் மனசுக்கு நெறைவா இருக்கு!

உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இன்னிக்குத்தான் செல்வியோட பர்த்-டே! அவுங்க கிளாஸ் மிஸ்தான் இந்த விஷயத்தைச் சொன்னாங்க. குடும்ப வறுமையால செல்வி இதுவரைக்கும் ஒரு பர்த்-டே கூடக் கொண்டாடினது இல்லை! இப்ப நான் விட்டுக் கொடுக்கிற இந்தப் பரிசு, மறைமுகமா அவளுக்கு நான் கொடுக்கிற பர்த்-டே கிஃப்ட்!” என்றாள் சின்மயா.
சின்மயாவின் பெற்றோர், அவளை அணைத்துக் கொண்டனர்.

அவள் தாய், செல்வியின் தாயிடம் சென்று கை குலுக்கி, “ஒங்க மக ரொம்ப நல்லாப் பாடினா… அவளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு! ஓய்வா இருக்குற நேரத்துல எங்க வீட்டுக்கு அனுப்புங்க. சின்மயாவோட அவளுக்கும் சேர்த்து நான் பாட்டுக் கத்துக் கொடுக்கிறேன்’ என்றார்.

ஆனந்தத்தில் செல்வியின் தாய்க்குக் கண்ணீர் வெள்ளம் போல் பெருகியது. எதுவும் பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது. சின்மயாவின் தோழிகள் அனைவரும் ‘ஹேப்பி பர்த்-டே டூ செல்வி’ என்று பாடினர். மைதானத்தில் இருந்த அனைவரும் அவர்களுடன் சேர்ந்து பாடத் தொடங்கினர்.

சின்மயாவின் தந்தை தான் கொண்டு வந்த இனிப்புகளை அனைவருக்கும் வழங்கத் தொடங்கினார்…

அங்கு பறந்த வண்ண வண்ணப் பலூன்கள் போட்டி, பொறாமை ஏதுமற்ற அந்தக் குழந்தைகளின் வண்ண மயமான எதிர்காலத்தைப் பறைசாற்றுவது போல இருந்தது.

அந்நாள் செல்வியின் ஆயுசுக்கும் மறக்க முடியாத பிறந்த நாளாக அமைந்தது!

- ந.லெட்சுமி (செப்டம்பர் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
வதந் “தீ”
அரண்மனையில் வேலை செய்த பணிப்பெண் ஒருத்தி இரவுப் பணி முடிந்ததும் மறுநாள் காலை தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். அரண்மனை வாயிலை ஒட்டிய சுவரில் மறுபக்கம் ஒரு படைவீரன் மற்றொரு படை வீரனுடன் பேசுவது அவள் காதில் கேட்டது. ""நான் இன்று இரவு ...
மேலும் கதையை படிக்க...
கதை பிறந்த கதை!
முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் மிகுந்த பராக்கிரமசாலியாக விளங்கினார். அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தனர். மூவரும் கல்வியை மிகவும் வெறுத்தனர். இளவரசர்களுக்குரிய எந்தத் தகுதியையும் வளர்த்துக் கொள்ளாமல் சதாசர்வ காலமும் விருந்து, கேளிக்கை, வேடிக்கை, விளையாட்டு எனக் காலம் கழித்தனர். பாடம் கற்றுத் ...
மேலும் கதையை படிக்க...
பலவீனமே பலம்
முன்னொரு காலத்தில் சீன தேசத்தில் புத்த மதத் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் பல தற்காப்புக் கலைகளில் சிறந்து விளங்கினார். அந்நாட்களில் மனதை ஒருமுகப்படுத்த புத்த மதத் துறவிகள் தற்காப்புக் கலைகளைப் பயன்படுத்தி வந்தனர். மன்னரின் படையில் சேர்வதற்குத் தற்காப்புக் கலைகளை ...
மேலும் கதையை படிக்க...
சந்தான லெட்சுமியும் சைக்கிளும்
சந்தான லெட்சுமிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்துக்குப் பின் இன்றுதான் தனியாகச் சைக்கிளை ஓட்டினாள். நாற்பத்து இரண்டு வயதாகும் சந்தான லெட்சுமி அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு வருவதை ஆசையோடு பார்ப்பாள். ...
மேலும் கதையை படிக்க...
உலூபி
முன்னொரு காலத்தில் உலூபி என்றொரு வித்தை காட்டுபவன் வாழ்ந்து வந்தான். அவன் ஊரா ஊராகச் சென்று வித்தை காட்டி பிழைப்பு நடத்தி வந்தான். பல்வேறு வித்தைகளைச் செய்து காட்டி மக்களை மகிழ்விப்பதில் அவன் கெட்டிக்காரனாக இருந்தான்.கயிற்றின் மீது நடப்பான்! தன் தோள் ...
மேலும் கதையை படிக்க...
வதந் “தீ”
கதை பிறந்த கதை!
பலவீனமே பலம்
சந்தான லெட்சுமியும் சைக்கிளும்
உலூபி

பெரிய சந்தோஷம் மீது 2 கருத்துக்கள்

  1. sundar says:

    it’ s very nice

  2. Annapoorani says:

    இந்தக் கதை மிகவும் மன நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
    இதை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக இக்கதையை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என தோன்றும்.
    பள்ளிப் பருவத்தில் ஏற்படும் ஏற்ற தாழ்வு பிரச்சனைகளை எளிமையாக தீர்பதற்கு இக்கதை ஓர் எளிய வழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)