பால்காரரிடம் படிப்பினை பெற்ற இராசா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 1, 2019
பார்வையிட்டோர்: 27,335 
 

ஒரே ஒரு ஊருல ஒரு ராசா இருந்தாராம். அவருக்கு வயசு முப்பது பக்கம் ஆச்சு, ஆனா. அவருக்கு இன்னும் கல்யாணமெ ஆகலை. காரணம் அவர் ரொம்ப சுகவாசியாகவே இருந்த்து தான். எந்த வேலையும் செய்ய மாட்டார்.பொண்ணு பாக்கற வேலை கூட பெரிய வேலை அப்படீன்னு நினைச்சுட்டார்.இருந்தாலும் ஒரு ராணி வந்தா நல்லா இருக்குமுன்னு மனசுக்குள்ள நினைச்சுக்குவார்..

மத்த ராசாக்க மாதிரி அவருக்கு ஊருக்கு ஒரு ராணி வச்சுக்கணும்னு எண்ணமெல்லாம் இல்லை. அவருக்கு தேவை ஒரே ஒரு ராணி.அவ்வளவுதான். அதுவும் நாட்டுக்கு அடுத்த வாரிசு வேணுமே அதுக்காகவாவது கல்யாணம் பண்ணனுமே.எப்பவுமே இந்த மாதிரி ஆளுகளுக்கு பொண்ணு கிடைக்கறது சிரமந்தானே.அவரோட மந்திரிக்கு இவர் வருத்தம் புரியுது.

ராசான்னா குதிரை ஏறணும், வாள் சண்டை போடணும், நல்லா குஸ்தி எல்லாம் போடணும். நம்ம ராசாவோ அப்பிராணி. மிஞ்சிப்போனா அவருக்கு பதினைஞ்சு ஜமீன், இருபத்தி அஞ்சு கிராமம், பத்தாயிரத்துல இருந்து இருபத்தி அஞ்சாயிரம் மக்கள் இருப்பாங்க. அவ்வளவுதான். இவங்க எல்லாத்துக்கும் அதிபர் யாருண்ணா நம்ம ராசாதான்.

அதனால பெரிசா அவருக்கு ஒண்ணும் வேலையிருக்காது. காலையில அரண்மனை மாதிரி இருக்கற ஒரு சபை கூடும்.,பத்து பதினஞ்சு பேரு அவரை மாதிரி வேலை வெட்டி இல்லாம அவர் கூட உட்கார்ந்து நாட்டு நடப்பு எல்லாம் பேசி கலைஞ்சு போவாங்க. அவங்களுக்கு சம்பளம் மட்டும் சரியாக கொடுத்துடுவாரு.மந்திரிக்கு மட்டும் கொஞ்சம் கவலையும் இருந்தது. இப்படி வேலை செய்யாம சம்பளம் வாங்கறமே, அப்படீன்னு. அதுக்காகவாவது ராசாவை கூட்டிட்டு நடை பயிற்சி அப்படீன்னு சொல்லிட்டு நகரை சுத்தி காண்பிச்சிடுவாரு. அதனால அவருக்கு மனசுக்குள்ள ஒரு திருப்தி. அப்பாடி நாமளும் வேலை செஞ்சுட்டோம் அப்படீன்னு.இப்ப அவருக்கு ஒரு வருத்தம் வந்து உட்காந்திடுச்சு. நம்ம ராசாவுக்கு ஒரு பொண்ணை பாத்து கட்டி வைக்க முடியலயேன்னு.

ஒரு நாள் ராசா சாயங்கால நேரமா அவர் அரண்மனை பக்கமா இருக்கற பூங்காவுக்குள்ள உட்கார்ந்து யோசனை பண்ணிகிட்டு இருக்காரு.”வாழ்க்கை அப்படீன்னா என்ன? இதுவரை நாம சுகமா வாழற வாழ்க்கையினால யாருக்கு என்ன பயன்? எல்லாரும் ஏதோ ஒரு வேலை செஞ்சுகிட்டு இருக்காங்களே, நாம் எதோ ஒரு வேலை செஞ்சு பாத்தா என்ன? இப்படி யோசனை பண்ணிகிட்டு இருக்கும்போது அந்த வீதி வழியா ஒரு இரண்டு மாட்டை கூட்டிகிட்டு ஒரு ஆள் போறதை பாக்கறாரு. அவனை கூப்பிட்டு எங்க போற? அவன் நான் வீடு வீடா பால் கறந்து ஊத்தறதுக்கு போறேன்னான். இவன் வேலை கூட பரவாயில்லை போலிருக்கே அப்படீன்னு சொல்ல, அவன் எங்க ராசா என்னோட வந்து வேலை செஞ்சு பாருங்க அப்ப தெரியும் அந்த கஷ்டம் அப்படீண்ணான். சரி நாளைக்கு மாறு வேசத்துல உங்கூட வேலைக்கு வாறேன் வேலை எப்படி இருக்குன்னு பாக்கலாம் என்று சொல்லவும், அவன் ராசா அப்படி வந்தா நீங்க என் கிட்ட வேலை செய்யற ஆளுன்னு சொல்லுவேன், சில நேரங்கள்ள உங்களை திட்டுவேன் சரின்னா எங்கூட வாங்க. இவன் சொல்லவும் ராசாவுக்கு கருக்கென்றது. இருந்தாலும் பரவாயில்லை போய் பாப்போம் என்று முடிவு செய்தவர், சரி என்று சொல்லி விட்டார்.

காலையில மாறு வேசத்துல அவன் வீட்டுக்கு போன உடனே அவன் இந்தாய்யா இந்த பருத்தி,புண்ணாக்கை எல்லாம் போட்டு ஆட்டுரல்ல அரைச்சு கொடு அப்படீன்னு, ஒரு மூட்டை புண்ணாக்கையும்,பருத்தியையும் கொடுத்தான். ராசா திகைத்தார்.என்னயா பாக்கறே? போய் அரைச்சு கொடு, என்று விரட்டவும் எல்லாவற்றையும் அரைக்க சென்றார்.

ஐயோ..அப்பா..அந்த வேலை முடிவதற்குள் அவருக்கு கை எல்லாம் எரிந்து,புண்ணாகி விட்டது. அந்த வேலை முடிந்தவுடன், அடுத்த வேலை கொடுத்தான். இப்படி அடுக்கடுக்கா வேலைகளை கொடுத்துட்டே இருந்தான். இந்த வேலைகளெல்லாம் முடிந்தவுடன், போய் மாட்டை புடிச்சுட்டு எங்க்கூட வா என்று விரட்டினான். ராசா மாட்டை அவிழ்த்து கூட்டி செல்ல முயற்சிக்க மாடு புதிய ஆளை கண்டவுடன் மிரண்டு அவரை முட்டி காயப்படுத்தி விட்டது.அவன் வந்து மாட்டை மிரட்டியதும் அது சமாதானமாகி கூட இருவரும் கிளம்பினார்கள்.

வீடு வீடாய் போய் பால் கறந்து கொடுத்தவுடன் அந்த வீட்டுக்கார்ர்கள் யாரப்பா புதிய ஆள் என்று கேட்க என்னோட வேலையாள் என்று சொன்னான். ஆளை பாத்தா ராசாவாட்ட இருக்கான், இவன் வேலை எல்லாம் செய்வானா? எங்கிட்ட வந்தா அடி பின்னிட மாட்டேன் என்று அவன் அவர்களிடம் பதில் சொன்னான். ராசாவுக்கு கோபம் வந்தாலும் பதில் சொல்ல முடியாது. வாக்கு கொடுத்து விட்டதால் வாய் பேச முடியாமல் அவன் சொன்ன வேலைகளை எல்லாம் செய்தார்.

அன்று இரவு எல்லா வேலைகளும் முடிந்த பின் ஒரு தட்டில் களியும், அதன் மேல் சுவையான குழம்பும் ஊத்தி கொண்டு வந்து கொடுத்து ராசாவை சாப்பிட சொன்னான். ராசாவுக்கு ஒவ்வாத சாப்பாடாக தெரிந்த போதிலும் பசிக்கு அது சுவையாக இருந்தது.

அதன் பின் ராசாவுக்கு ஒரு வட்ட காசை கொடுத்து இது இன்னைக்கு செஞ்ச வேலைக்கு கூலி என்று கொடுத்தான்.இராசா அதை வாங்கி பார்த்தார்.இதுவரை இந்த காசை கையால் கூட தொட்டு பார்த்ததில்லை.

இனிமேல் நீங்க பழையபடி ராசா, என்னைய மன்னிச்சுடுங்க.நான் என் வேலையாளைத்தான் கண்டிச்சு வேலை வாங்கினேனே தவிர ராசாவை இல்லை.கை கட்டி சொன்னவனிடம் இராசா எதுவும் பேசவில்லை.கிளம்பி விட்டார்.

என்ன ஆச்சர்யம் அன்று இராசா மெத்தையில படுக்கறதை கூட விட்டுட்டு கீழே ஒரு ஜமுக்காளத்தை விரிச்சு படுத்தவர்தான். தூக்கம்னா தூக்கம் அப்படி ஒரு தூக்கம், அடிச்சு போட்டது மாதிரி தூங்கினாரு.

மறு நாள் இராசா வீட்டு வேலைக்காரர்களுக்கு ஒரே ஆச்சர்யம், காலை நேரத்தில் எழுந்து ஒவ்வொரு வேலைக்கார்ர்களை கூப்பிட்டு உனக்கு என்ன வேலை இங்கே? என்று ஒவ்வொருவராக கேட்டு அவர்களை இனிமேல் ஒழுங்காக வேலை செய்கிறீர்களா என்று அடிக்கடி நானே பார்ப்பேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

அவரது சபைக்கு கலந்தாலோசனைக்கு (அரட்டை) வந்தவர்களை அனைவரையும் கூட்டி சென்று ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பை கொடுத்து, வாரம் ஒரு நாள் என்னை பார்க்கவந்தால் போதும், அப்படி வந்தாலும் நான் உங்களுக்கு கொடுத்த பொறுப்பை எப்படி செய்துள்ளீர்கள் என்று சொன்னால் போதும்.

ஆறு மாசம் ஓடியிருக்கும், பக்கத்து இராசாவோட சம்சாரத்தோட ஒண்ணு விட்ட சொந்தத்துல இருந்து ஒரு பொண்ணை இந்த இராசாவுக்கு கட்டிக்கொடுக்கணும்னு ஒத்தைக்கால்ல நின்னாராம் அந்தபக்கத்து நாட்டு இராசா. அப்ப்டியின்னா இந்த ஆறு மாசத்துல நம்ம ராசா எந்தளவுக்கு உழைச்சு சுத்தி இருக்கற நாடுகள்ள பேர் வாங்கியிருப்பாருன்னு பார்த்துக்குங்க.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *