பாட்டும் பதவியும்!

 

காட்டு அரசனாக வாழ்ந்து வந்த சிங்கம் ஒன்று, வயதாகி, இறந்துவிட்டது. அந்தக் காட்டில் வேறு சிங்கமே இல்லை.

காட்டிலிருந்த விலங்குகள் எல்லாம் ஒன்று கூடிப் புதிய அரசனைத் தேர்ந்தெடுக்கக் கூட்டம் போட்டன.

“”ஆந்தையாருக்குதான் கண்ணு ரெண்டும் பெரிசா இருக்கு! ஆந்தையாரையே நம் அரசனாக நியமித்து விடலாம்!” என்று கூட்டத்திலிருந்து ஒரு விலங்கு கூறியது.

பாட்டும் பதவியும்“”ஆந்தையாருக்குக் கண்கள் பெரிசா இருந்து என்ன பிரயோசனம்? அவருக்குப் பகலில் கண் தெரியாதே!” என்று அந்த யோசனையை, கூட்டம் நிராகரித்துவிட்டது.

“”விலங்குகளிலேயே சுறுசுறுப்பானது முயல்தான்! பேசாமல் முயலை நமது அரசனாக்கி விடலாம்!” என்றது குரங்கு.

“”முயலா? அவன் சரியான கோழை ஆச்சே! ஆபத்து வந்தால் ஏதாவது புதரில் போய் ஒளிந்து கொள்வான்! அவன் வேண்டாம்!” என்றது நரி.

“”நம் எல்லோரையும்விட உயரமானது ஒட்டகச் சிவிங்கி! அதையே மன்னராக்கி விடலாம்!” என்றது தேவாங்கு.

“”ஒட்டகச் சிவிங்கி ரொம்ப ஒல்லி! அதுவேண்டாம்! ராஜான்னா குண்டா இருக்கணும்!” என்றது காண்டாமிருகம்.

“”நீயும்தான் குண்டா இருக்கே! உன்னால் ஓடவே முடியாது” என்றது சிறுத்தை.

அப்போது கூட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தது கரடி.

“”ஆஹா! கரடியை நம் மன்னராக்கி விடுவதே பொருத்தம்! எவ்வளவு அழகாக கறுப்பாக இருக்கிறார்!” என்றது காகம்.

“”கரடியார் குளிர்காலம் பூராவும் தூங்கி விடுவார்! இப்பவே தூங்கி எழுந்துதான் வருகிறார். இவர் வேண்டாம்!” என்றது யானை.

இந்தச் சமயத்தில் விலங்குகள் கூட்டம் நடத்திய மரத்தின் உச்சியில் ஒரு குயில் பாடிக் கொண்டு இருந்தது. குயிலின் பாடல் இனிமையாக இருந்தது. எல்லா விலங்குகளும் பறவைகளும் அந்தக் குயிலின் பாட்டைக் கேட்டு மயங்கிவிட்டன.

“”ஆகா! குயில்தான் நமக்கு ஏற்ற அரசன்!” என்று ஒருமித்த குரலில் எல்லா விலங்குகளும் தெரிவித்தன.

விலங்குகள் எல்லாம் குரங்கைக் கூப்பிட்டு “”நமது தீர்மானத்தை குயிலிடம் சொல்லிவிட்டுவா! இந்தக் காட்டுக்கு இன்று முதல் குயிலை மன்னராக நியமித்து இருக்கிறோம்! குயிலை அழைத்து வா! அதற்கு காட்டு அரசனாக மகுடம் சூட்டுவோம்!” என்றன.

குரங்கு அந்த மரத்தின் கிளைகளில் தாவி மர உச்சியில் பாடிக் கொண்டிருந்த குயிலிடம் சென்றது.

“”குயில் அண்ணா! உன்னை இந்தக் கானகத்தின் அரசனாக இந்தக் காட்டில் உள்ள விலங்குகள் நியமித்து இருக்கின்றன! நீ கீழே இறங்கி வந்து அரசனாக மகுடம் சூட்டிக் கொள்ள வேண்டும்!”

குயில், குரங்கு சொன்னது எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதுபாட்டுக்குப் பாடிக் கொண்டிருந்தது. குரங்குக்குக் கோபம் கோபமாக வந்தது.

குயிலின் காதருகே போய்,”"இன்றுமுதல் நீ காட்டு அரசன்… காதில் விழுகிறதா?” என்று கத்தியது.

குயில் விடாமல் பாடிக் கொண்டிருந்தது.

குரங்கு கீழே இறங்கி வந்து, விலங்குகளிடம் நடந்ததைச் சொன்னது.
விலங்குகளுக்கு வந்ததே கோபம்!

“”என்ன திமிர்… அந்த முட்டாள் குயிலுக்கு! நம்மை மதிக்கவே இல்லையே! அந்தக் குயிலை அரசனாக நியமித்ததை ரத்து செய்து விடுவோம்!”

“”ஆமாம்! பதவியை ரத்து செய்வோம்! ரத்து செய்வோம்!” – விலங்குகள் கூச்சலிட்டன.

“”குயிலிடம் போய் இதைச் சொல்லி விட்டுவா!” என்று குரங்கை மறுபடியும் விரட்டின.

குரங்கு மர உச்சிக்குப் போய் “”குயிலே, பாவம்… உன்னை அரசனாக நியமித்ததை ரத்து செய்து விட்டார்கள்!” என்றது.

குரங்கு சொன்னது எதுவும் இப்போதும் குயிலின் காதில் விழவில்லை.

அதற்குத் தான் காட்டின் அரசன் ஆனதும் தெரியாது! அந்தப் பதவி பறிக்கப்பட்டதும் தெரியாது!

அதுபாட்டுக்கு ஆனந்தமாக மரக்கிளையில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தது!

- தஞ்சாவூர்க் கவிராயர் (அக்டோபர் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
ரயில் பெஞ்சு
கோபால்ராவ் ரயில் பெஞ்சில் வந்து உட்காரும்போது நீங்கள் உங்கள் கடிகார முள்ளை மாலை 5 மணிக்கு திருப்பிவைத்துக் கொள்ளலாம். ரயில் பெஞ்சுக்கு சரியாக 5 மணிக்கு வந்துவிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். அவர் ஒரு ரிட்டயர்டு முனிசிபல் கமிஷனர். அவருடைய ரயில்பெஞ்சு ...
மேலும் கதையை படிக்க...
ரயில் பெஞ்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)