நூடுல்ஸ் கேட்ட அணில்!

 

அம்மா கொண்டுவந்த பழங்களைப் பார்த்ததும், குட்டி அணிலின் முகம் சுருங்கியது. “எப்பப் பார்த்தாலும் இதே பழங்களும் பருப்புகளும்தானா? வேற எதுவும் சாப்பிடக் கொடுக்க மாட்டீங்களா?” என்று கோபமாகக் கேட்டது.

“பழங்களும் பருப்புகளும்தானே நம் உணவுகள். இவற்றைச் சாப்பிடாமல் வேறு என்ன வேணும் உனக்கு?” என்று புன்னகையோடு கேட்டது அம்மா அணில்.

“அம்மா, இந்தக் காட்டுக்குச் சுற்றுலா வரும் மனிதக் குழந்தைகள் சாப்பிடுவதுபோல இட்லி, தோசை, நூடுல்ஸ் என்று எனக்கும் செய்து கொடுக்கக் கூடாதா?

“என்னது? இட்லி, தோசை, நூடுல்ஸா? அவர்கள் எல்லாம் மனிதர்கள். இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். நாம் இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடக்கூடியவர்கள். அவரவர் உணவுப் பழக்கப்படிதான் அவரவர் சாப்பிடணும். இயற்கையில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிடுவது நம் கடமை” என்றது அம்மா அணில்.

“என்னது! இயற்கை உணவு சாப்பிடுவது நம் கடமையா?” என்று பதில் கேள்வி கேட்டது குட்டி அணில்.

“ஆமாம். நீ இப்பவே பழங்கள் வேண்டாம் என்று மனிதர்கள் சாப்பிடுகிற உணவு வகையைக் கேட்கறே! இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு, எனக்கு இந்த மரப் பொந்து வேணாம். மாடி வீடு வேணும்னு கூடக் கேட்பே” என்று சிரித்தது அம்மா அணில்.

“ஆமாம் கேட்பேன். அதுல என்ன தப்பு?”

“என்னது மாடி வீடா? உலகம் புரியாதவனா இருக்கே! மனிதர்கள் உணவுப் பழக்கத்தை விட நம் உணவுப் பழக்கம் ஒரு படி உயர்ந்தது தெரியுமா?”

“உயர்ந்ததா? எப்படி அம்மா?”

“நாம சாப்பிடற ஒவ்வொரு பழத்துக்குள்ளும் ஒரு மரம் இருக்கு!”

“என்னது, பழத்துக்குள்ள மரமா?” என்று அதிர்ச்சி அடைந்தது குட்டி அணில்.

“ஆமாம். நாம சாப்பிடுற பழங்களில் விதை இருக்கும். அந்த விதையை பூமிக்குள்ளே புதைத்தால் மீண்டும் முளைத்து, செடியாகி, மரமாகிவிடும்” என்றது அணில் அம்மா.

“ஓ! இப்படிதான் மரங்கள் உருவாகுதா?” என்று ஆச்சரியப்பட்டது குட்டி அணில்.

“ஆமாம். இதுபோல மரங்கள் உருவாக, பறவைகளும் நம்மைப் போன்ற விலங்குகளும் பேருதவி புரிகிறோம்.”

“நான் இதுவரை பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, விதைகளைப் போட்டு மரமாக்கினது இல்லையே?” என்று கேட்டது குட்டி அணில்.

மீண்டும் சிரித்தது அம்மா அணில்.

“என்னம்மா இதுக்கும் சிரிக்கிறீங்க?”

“உன்னோட கேள்வி எனக்குச் சிரிப்பை வரவழைக்குது. நீ சாப்பிடும் பழங்களின் விதைகளைப் பிறகு சாப்பிடலாம் என்று நிலத்தில் புதைத்து வைக்கிறே இல்லையா?”

“ஆமாம்மா! நிறைய இடத்தில் புதைச்சிருக்கேன். ஆனால் எங்கே புதைச்சேன்னு தெரியாமல் தேடிட்டு விட்டுடுவேன்” என்றது குட்டி அணில்.

“நீ புதைத்து வைக்கிற விதைகள் மண்ணுக்குள்ளதான் இருக்கும். கொஞ்சம் மழை வந்த பின்னாடி முளைக்கும். செடியாகத் துளிர்க்கும். அந்தச் செடிகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, இதோ நாம வசிக்கிறோமே இதுபோல மரமாகிடும்“ என்றது அணில் அம்மா.

“அட! அப்படியா? அப்ப நானும் மரம் வளர உதவியா இருந்திருக்கேனா!” என்று ஆச்சரியத்தில் வாலை வேகமாக அசைத்தது குட்டி அணில்.

“ஆமாம். நமக்கு உதவி செய்யற இந்த இயற்கைக்கு நாம தெரிந்தோ தெரியாமலோ நம்மால் ஆன சிறு உதவியைச் செய்கிறோம். இது மனிதர்களால் கூட முடியுமான்னு தெரியலை. இதை நாம பல நூற்றாண்டுகளாகச் செய்கிறோம். அப்படிப் பார்த்தால் இங்கே இருக்கிற பல மரங்கள் நம்ம தாத்தா பாட்டி போட்ட விதையாகக்கூட இருக்கலாம். அதை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கு” என்றது அம்மா அணில்.

“ஓஹோ… நான் இதுவரை என்ன செஞ்சேன்னு எனக்குத் தெரியாது. ஆனால் இனிமேல் இந்தப் பூமிக்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்வேன். எனக்குக் கிடைக்கும் விதைகளைப் பூமியில் புதைப்பதே என்னுடைய பெரிய வேலையா செய்யப் போறேன்” என்று பெருமிதத்துடன் சொன்னது குட்டி அணில்.

“நீ இதை முழுநேரமா செய்யணும்னு அவசியம் இல்லை. உன்னோட கடமையைச் செய்தாலே போதுமானது. அதாவது நாம் என்ன உணவைச் சாப்பிட முடியுமோ அதைச் சாப்பிட்டாலே போதுமானது. நம்மைப் போலவே பறவைகளும் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, எச்சத்தின் மூலம் விதைகளை வெளியேற்றுகின்றன. அதிலிருந்து புதிய மரங்கள் உருவாகின்றன“ என்றது அம்மா அணில்.

“அம்மா, நம்ம உணவையும் உணவின் மூலம் கிடைக்கும் பலனையும் அழகாக எடுத்துச் சொல்லிட்டீங்க!“ என்ற குட்டி அணில், அடுத்த மரத்துக்குத் தாவியது.

சிறிது நேரத்தில ஒரு பெரிய மாம்பழத்தைக் கொண்டுவந்தது. மெதுவாகச் சாப்பிட்டு முடித்து, மாங்கொட்டையைக் குழி தோண்டிப் புதைத்து வைத்தது.

எங்காவது புதிய மாஞ்செடி தென்பட்டால் அது குட்டி அணில் புதைத்த விதையாகக்கூட இருக்கலாம்!

- நன்றி: தி இந்து 

தொடர்புடைய சிறுகதைகள்
கடகடவென்று உருண்டு ஓடிக்கொண்டிருந்தது ஒரு முட்டை. “ஐயோ... என் முட்டை உருண்டு ஓடுதே... யாராவது பிடிங்களேன்” என்று கத்திக்கொண்டே முட்டையின் பின்னால் ஓடியது மயில். “ஓ... இது உன்னோட முட்டையா? இதோ தடுத்து நிறுத்தறேன்” என்று சொல்லிக்கொண்டே குறுக்கே நின்றது நத்தை. நத்தையை உருட்டிவிட்டுவிட்டு வேகமாக ...
மேலும் கதையை படிக்க...
ஆற்றங்கரை அருகே ஒரு பெரிய மரத்துக்குக் கீழே சேவலும் கோழியும் வசித்து வந்தன. இரண்டும் அதிகாலை உணவு தேடிப் புறப்படும். மாலையில்தான் வீடு திரும்பும். அந்த மரக் கிளையில் ஒரு குருவியும் கூடி கட்டி இருந்தது. ஒருமுறை குருவி கூட்டில் சேர்த்து வைத்த ...
மேலும் கதையை படிக்க...
“அம்மா! அம்மா! என்னம்மா நீ, பல்லு தேய்க்காம சாப்பிடச் சொல்ற, பல்லு தேய்க்காம சாப்பிட்டா கிருமி உருவாகாதா?’’ எனக் கேட்டது குட்டியானை கூகு. என்னடா இது! என்னைக்கும் இல்லாத திருநாளா, இன்னைக்கு நம்ம குழந்தை இப்படி கேட்குதேன்னு ஆச்சரியப்பட்ட அம்மா யானை, “கூகு! ...
மேலும் கதையை படிக்க...
அரச மரத்தடியில் எறும்புக் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. தங்களுக்குத் தேவையான உணவை மழைக்காலத்துக்கு முன்பாகவே சேர்த்து விடுவதற்காக சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருந்தன எறும்புகள். அந்தப் பக்கம் வந்த வண்ணத்துப்பூச்சிக்கு எறும்புகளைக் கண்டதும் ஏனோ வம்பு இழுக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய ...
மேலும் கதையை படிக்க...
சிங்கக்குட்டியின் புது தீபாவளி!
ஒரு நாள் சிங்க ராஜா குடும்பத்துடன் காட்டைச் சுற்றி வலம் வந்தது. அப்போது இளவரசர் சிங்கக்குட்டி காணாமல் போய்விட்டது. இளவரசர் சிங்கக்குட்டி வழிதவறி நாட்டுக்குள் நுழைந்தது. இது தெரியாமல் காட்டில் விலங்குகள் இளவரசரைத் தேடிக் கொண்டிருந்தன. அன்றைக்குத் தீபாவளி. எங்கு பார்த்தாலும் மனிதர்கள் ...
மேலும் கதையை படிக்க...
பூனையிடம் கதை கேட்ட எலிகள்!
அழுதபடியே வந்தது மியா பூனைக்குட்டி. மிக அழகாக இருக்கும். அது அழுவதைப் பார்த்தால் உங்களுக்கும் அழுகை வந்துவிடும். பாட்டி பூனை, “ஏன் அழறே? கீழ விழுந்துட்டியா?” என்று கேட்டது. “இல்லை” என்று அழுதபடியே தலை ஆட்டியது மியா. “யாராவது அடிச்சாங்களா?” “இல்லை” என்று தலை ஆட்டியது. “அப்புறம் என்ன ...
மேலும் கதையை படிக்க...
மலை முழுங்கி சின்னக் குருவி!
சிட்டுக்குருவி, தவிட்டுக் குருவி, ரெட்டைவால் குருவி, உழாவராக் குருவி, தூக்கணாங்குருவி, ஊர்க்குருவி என இப்படிப் பல குருவிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். மலை முழுங்கி சின்னக் குருவியைப் பற்றித் தெரியுமா? அதோ... ஒரு பெரிய மலை தெரியுது இல்லையா? அதற்குக் கீழ மலையடிவாரத்துல ...
மேலும் கதையை படிக்க...
நத்தை ஊர்ந்து கொண்டிருந்தது. “நத்தையே, என்ன இவ்வளவு மெதுவா போறே? கொஞ்சம் வேகமாகப் போ” என்றது வரிசையில் வந்துகொண்டிருந்த எறும்புகளில் ஒன்று. “கிண்டலா? என்னால் எப்படி வேகமாகப் போகமுடியும்?” என்றது நத்தை. “நத்தையே, உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன். இன்னும் கொஞ்ச நேரத்துல மழை அதிகமா பெய்யப் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கிராமத்துல செடியன்னு ஒரு பையன் இருந்தான். அவன் செடி உயரம்தான் வளர்ந்திருந்தான். அதனால் அவனுக்கு அந்தப் பெயர். செடியனுக்கு பறவைகள் போல பறக்க ஆசை. ‘ஆனா நாம மற்றவர்கள் மாதிரி சராசரி உயரம் இல்லையே. நம்மால பறக்க முடியுமான்னு’ ஒரு சந்தேகம். சிட்டுக் ...
மேலும் கதையை படிக்க...
மதியூரில் ஒரு பெரிய குட்டை இருந்தது. அந்தக் குட்டையின் ஒரு புறத்தில் மீன்கள் வசித்துவந்தன. மற்றொரு புறத்தில் வயதான தவளை ஒன்று வசித்தது. அந்த மீன்களுக்குத் தவளையைக் கண்டாலே ஆகாது. அதுவும் இரவில் தவளை கத்தும் சத்தம் கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை. அதனால் அந்தத் ...
மேலும் கதையை படிக்க...
ஓடும் முட்டை… துரத்தும் மயில்…
மூக்கு உடைந்த குருவி!
குட்டி யானையின் கேள்விகள்!
வண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை
சிங்கக்குட்டியின் புது தீபாவளி!
பூனையிடம் கதை கேட்ட எலிகள்!
மலை முழுங்கி சின்னக் குருவி!
உதவி… உதவி…
பறக்க ஆசைப்பட்ட செடியன்!
குட்டையைப் பிரித்த மீன்கள்

நூடுல்ஸ் கேட்ட அணில்! மீது 0 கருத்துக்கள்

  1. sangee says:

    வெரி நைஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)