நீயே உன்னை எண்ணிப்பார்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 2, 2021
பார்வையிட்டோர்: 7,992 
 

மணிமங்கலம் என்னும் சிற்றூரில் மணி வண்ணன் எனும் பெயருடைய குடியானவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் உழைப்பைப் பெரிதென மதிப்பவன்; வீணிற் பொழுது போக்கு வதை விரும்பாதவன். அவனுக்கு மூன்று புதல்வர் இருந்தனர். மூத்த புதல்வனுக்கு மணமாகியிருந்தது. இரண்டாம் மகன் மணப்பருவத்தை அடைந்திருந் தான். மூன்றாம் மகன் படித்துக் கொண்டிருந்தான்.

மணிவண்ணன் வீட்டில், உழைக்காமல் உண் பவர் அவன் தந்தை ஒருவரே. அவருக்கு வயது எழுபதுக்கு மேலாகிவிட்டது. காசநோய் அவரைப் பீடித்திருந்தது. வேளாவேளைக்கு உண்பதும் உறங்குவதுமாக அவர் காலங் கழித்தார்.

மணிவண்ண னும் அவன் புதல்வர் இருவரும் வயலில் நன்றாக உழைத்தனர். மூன்ரும் புதல்வன் படிக்கும் நேரம் தவிர, மற்ற வேளைகளில் தந்தைக்கு உதவியாய் இருப்பான். வீட்டுப் பெண்களுக்கும் வேலை சரியாய் இருந்தது. மணிவண்ணன் வீட்டில் கோழிப்பண்ணை இருந்தது. பசுக்கள் மூன்று இருந்தன. எருமைகள் சில இருந்தன. ஓர் ஆட்டு மந்தை இருந்தது. அந்தச் சிற்றூரில் மணிவண்ணன் நிலபுலங்களும் ஆடு மாடுகளும் உடையவனாய் வாழ்ந்து வந்தான்.

மணிவண்ணனின் குடும்ப வாழ்வில் கவலை அற்றவனாக இருந்தும், ஒரே ஒரு குறை அவனைப் பெருங்கவலைக் குள்ளாக்கிக் கொண்டிருந்தது. அவ னுடைய அண்டை வீட்டில் வாழ்ந்தவன் முத்து என்பவன். அவனும் குடியானவனே. உழுதொழில் புரிந்து உண்பவனே.

மணிவண்ணனும் முத்தும் அண்டை வீட்டின ராயிருந்தும், பகைவர்களாகவே வாழ்ந்தனர். சின்னஞ்சிறு செயல்களுக்கெல்லாம் இவ்விரு குடும் பத்தினரும் சண்டையிட்டுக் கொள்வார்கள்.

Kathai Solai-picமணிவண்ணனின் தந்தை காலத்திலும் இவ் விரு குடும்பத்தினரும் அண்டை வீட்டவர்களாகவே வாழ்ந்து வந்தனர். ஆனால், அக்காலத்தில் இவ்விரு வீட்டாரும் ஒரே குடும்பத்தினரைப் போன்ற ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஒருவர் வீட்டில் ஏதேனும் குறைந்தால், மற்றவர் கொடுத்துதவுவார். ஒரு வீட்டாருக்குப் பிணியோ, வேறு வகைத் துன்பமோ ஏற்பட்டால், மற்ற வீட்டார் உடனிருந்து உதவி செய்வர். இவ்வாறு எல்லாத் துறையிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்பவர்களாக, இரு வீட்டாரும் மிக்க ஒற்றுமை உடையவர்களாய் அன்புடன் வாழ்ந்து வந்தார்கள். தந்தையர் காலத் தில் இவ்வளவு ஒற்றுமையாக, அன்பாக வாழ்ந்த குடும்பங்கள், மக்கள் காலத்தில் பாம்பும் கீரியுமெனப் பகைகொண்டு வாழக் காரணமென்ன?

கோழிகளைக் கவனித்துக் கொள்வதும், அவை இடுகின்ற முட்டைகளைச் சேர்த்து வைப்பதும் மணிவண்ணனின் மருமகள் பொன்னி செய்ய வேண்டிய வேலை. தன் வேலையைப் பொன்னி ஒழுங்காகச் செய்துவந்தாள்.

ஒரு நாள் கோழிகளுள் ஒன்று இட்ட ஒரு முட்டை காணப்படவில்லை; பொன்னி தன் மாமி யையும், மைத்துனர்களையும், கணவனையும் அது பற்றிக் கேட்டபோது, அதனைப் பார்க்க வில்லை >யென்று அவர்கள் கூறிவிட்டார்கள்.

அக்கோழி வேலியைத் தாண்டிப் பறந்துபோய் அண்டை வீட்டில் முட்டையிட்டு விட்டிருக்கலாம் என்று பொன்னி கருதினாள்; உடனே அண்டை வீட்டிற்குச் சென்றாள். முத்தின் மனைவி வள்ளி பொன்னியைப் பார்த்து, என்ன அம்மா வேண் டும்?” என்று கேட்டாள்.

பொன்னி: ஒன்றுமில்லை அம்மா! எங்கள் கோழி ஒன்று இங்கு வந்து முட்டையிட்டு விட்டது.. அதனை வாங்கிப் போகவே வந்தேன்.

வள்ளி: ஐயோ! உங்கள் வீட்டுக் கோழி இங்கு முட்டையிட்டதை நான் பார்க்க வில்லையே! எங்கள் வீட்டுக் கோழி இடும் முட்டைகளையே ஒழுங்காக எங்களால் சேர்த்து வைக்க முடிய வில்லையே! பிறர் வீட்டு முட்டை எங்களுக்கேன்? எங்கள் முட்டைகளைப் பிறர் எடுத்துச் செல்லாம லிருந்தால் போதாதா! நாங்கள் ஏன் பிறர் முட்டை களுக்கு ஆசை வைக்கப் போகிறோம்?

இவ்வாறு வள்ளி கூறியது பொன்னிக்கு. ஆத்திரம் உண்டாக்கி விட்டது. “அப்படியானால், நாங்கள் மட்டும் பிறர் வீட்டு முட்டைகளுக்கு ஆசைப்படுகிறோமா?” என்று போருக்குக் கொடி ஏற்றினாள். வள்ளியும் அதற்குத்தக்க மறுமொழி கூறினாள்.

இவ்வாறு அவ்விருவரும் சொற்களை அள வில்லாமல் கொட்டி, பண்பிழந்து, கீழ் மக்களைப் போல இழிசொற்கள் பேசி ஏசிப் பெருங்கூச்சலுடன் சண்டையிட்டுக் கொண்டனர்.

அவ்வமயம், குடத்தில் தண்ணீ ர் எடுத்துக் கொண்டு அவ்வழியே வந்த மணிவண்ணனின் மனைவி, சண்டையைப் பார்த்துக் குடத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டுப் பொன்னிக்கு உதவியாக வந்து வள்ளியை வாய்க்கு வந்தபடி ஏசத் தொடங் கினாள். இதற்குள் முத்தின் மகளும் வந்து சண்டை யில் கலந்து கொண்டாள். எனவே, இருதரப் பினரும் மனம்போன போக்கில் பல பழிகளை ஒருவர் மேல் ஒருவர் கூறிப் பெருஞ் சொற்போர் நடத்தினர்.

“சல்லடை கூட வாங்க வழியற்ற கழுதை! எங்களிடம் இரவலாக வாங்கிச் சென்ற சல்லடையையும் ஒழுங்காகத் திருப்பித் தரத் தெரியாமல் சில்லியாக்கிக் கொடுத்த பீடை!”

“தண்ணீர் சுமந்து வரும் குடம் நாங்கள் இரவலாகக் கொடுத்ததுதானே! அதை வாங்க உனக்குக் கதியிருக்கிறதா?”

இப்படிப் பேசியவள் குடத்திலிருந்த தண்ணீரைக் கவிழ்த்துக் குடத்தைப் பிடுங்கிக் கொண்டாள். குடத்தைப் பிடுங்கியவளின் கூந்தலைப் பிடித்து இழுத்துத் தள்ளினாள் ஒருத்தி. இவ்வாறு வாய்ச்சண்டை கைச்சண்டையாக மாறியது.

அவ்வமயம் வயலில் வேலை செய்துவிட்டு முத்து வீட்டுக்கு வந்தான். வீட்டில் தன் மனைவியும் மகளும் அண்டை வீட்டுப் பெண்களுடன் சண்டை யிடுவதைக் கண்டு, தன் மனைவி சார்பில் சேர்ந்து ஏசத் தொடங்கினான். முத்தைப் போலவே, வயலில் ‘வேலை செய்து விட்டுத் தன் இல்லம் வந்து சேர்ந்த மணிவண்ண ன் முத்தை ஏசினான். பின் இருவரும் அடித்துக் கொள்ளத் தொடங்கினர். மணிவண்ணன் வலியவனாகையால் முத்தை நன்கு உதைத்துக் கீழே தள்ளிப் புரட்டினான். இதற்குள் இப்பெருங் கூச்சலைக் கேட்ட ஊரார் சிலர் அங்கே வந்து, பெருமுயற்சியின் மீது அவ்விருவரையும் பிரித்துச் சண்டையிடாதபடி தடுத்தனர்.

அது முதல் இவ்விரு குடும்பத்தினரும் கொடும் பகைவராயினர். முத்து காவல் நிலையம் சென்று மணிவண்ணன் தன்னைக் கடுமையாக அடித்து விட்டதாக முறையிட்டான். முத்தின் மனைவியாகிய வள்ளி வீடு, வீடாகச் சென்று, தன்னையும் தன் கணவரையும் மணிவண்ணனும் அவன் வீட்டுப் பெண்களும் அடித்து விட்டதாகவும், காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், விரைவில் மணிவண்ணன் சிறைக்குச் செல்வானென்றும் புறங்கூறித் திரிந்தாள். இதனால் இவ்விரு குடும்பத்தினருக்கு மிடையே மேலும் பகைமை வளரலாயிற்று.

இவ்விரு குடும்பத்தினரும் இவ்வாறு வாழ்வது மணிவண்ணனின் தந்தையாருக்குப் பிடிக்க வில்லை. அவர் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் வீட்டுப் பெண்களோ, மகனோ அவர் சொற்களைக் கேட்கவில்லை.

ஒரு நாள் அவர் மணிவண்ணனை அழைத்து, “மகனே, நீங்கள் இவ்வாறு அண்டை அயலாருடன் சண்டையிட்டுக் கொண்டு வாழ்வது: எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை. உங்கள் சண்டைக்கு அடிப்படைக் காரணம் என்ன? ஒரே ஒரு கோழிமுட்டை. அந்த முட்டையைக் குழந்தைகள் எடுத்து உடைத்து விட்டிருக்கலாம். அக்கோழி வேறெங்காவது அம் முட்டையை இட்டிருக்கலாம். வேறு எவராவது எடுத்துச் சென்றிருக்கலாம். அதன் விலை என்னவாகிவிடப் போகிறது! அண்டை வீட்டுக்காரர் ஒரு முட்டை வேண்டு மென்று நம்மிடம் கேட்டிருந்தால் நாம் கொடுத்து விட்டிருக்க மாட்டோமா? நமக்கு இறைவன் போதுமானவற்றை அளித்திருக்கின்றார். அண்டை வீட்டுக்காரர் தவறாகப் பேசி விட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் பொறுமையாக இருக்க முடியாதா? அப்படிப் பேசியிருக்கக்கூடாது என்பதைக் கோபம் தணிந்தபின், அவர்களிடம் எடுத்துக்கூறி அவர்களைத் திருத்தி விடலாமல்லவா?

“கேவலம் ஓர் அற்ப முட்டைக்காகவா இவ்வளவு பெரிய சண்டை! அதன் பின்னரும் தொடர்ந்து தொல்லை! குறையில்லாதவர்களோ, குற்றம் செய்யாதவர்களோ எவர்? ஒருவர் கோபமாயிருக்கும் போது மற்றவர் தணிந்து போனால் சண்டை வர இடமே யில்லையே! அதை விட்டுக் கோபத்தீயை வளர்த்தீர்களானால் அஃது உங்கள் அனைவரையும் தீய்த்து விடுமே! எனவே, நடந்தவற்றை மறந்து மீண்டும் நீங்கள் இரு வீட்டாரும், ஒற்றுமையுடன் வாழ்வீர்களாக” என்று கூறினார். ஆனால், அவர் அறிவுரைகளை எவரும் கேட்கவில்லை.

மணிவண்ணனும் காவல் நிலையம் சென்று தன் சட்டையைக் கிழித்துத் தன்னை முத்து அடித்து விட்டதாக முறையிட்டுக் கொண்டான்.

ஒரு நாளாவது இந்த இரண்டு வீட்டுக்காரரும் சண்டையில்லாமல் இருந்ததில்லை. இவ்விரு வீட்டுச் சிறுவர்களும் தங்கள் பெரியவர்களைப் பார்த்து ஏசவும் பேசவும் பழித்துக் கூறவும் கற்றுக் கொண்டார்கள்; ‘முன்னேர் போகும் வழிதானே பின்னேரும் செல்லும்!’

இவ்விரு குடும்பத்தினரும் தொடுத்த வழக்குகள் அளவு கடந்து விடவே, நீதிபதிகளும் மாறி மாறி முத்தையும் மணிவண்ணனையும் தண்டித்தனர். எனினும் ஓயாமல் வந்து கொண்டேயிருந்த இவர்களுடைய வழக்குகளைக் கண்டு அவர்களும் அலுத்து விட்டார்கள்.

தண்டனை பெறப்பெற இவ்விரு தரப்பாரும் வெறி நாய்களைப் போலக் கடும் பகையே கொண்டனர். ஆறு ஆண்டுகள் இவ்வாறு இரு குடும்பத் தினரும் கடும்பகை கொண்டு நீதி மன்றமும், காவற் கூடமும், சிறையும், வீடுமாக அலைந்து கொண்டிருந்தனர். ஏழாவது ஆண்டில், அவ்வூரில் நடந்த திருமணமொன்றில் அனைவரும் கூடியிருந்தனர். மணிவண்ணனின் மனைவி அத்திருமண வீட்டில் முத்தைப் பார்த்ததும், அவன் ஒரு பசுவைத் திருடி, அதற்காகச் சிறைத் தண்டனையனுபவித்து விட்டு வந்திருப்பதாக அனைவரிடமும் கூறத் தொடங்கினாள். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த முத்து அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். ஏழுமாதச் சூல் கொண்டிருந்த அவள் மயங்கி விழுந்து ஒருவாரம் படுக்கையில் கிடந்தாள். மணிவண்ணன் இது கேட்டு மகிழ்ந்தான்; முத்தைப் பல நாட்கள் வரை சிறையில் தள்ள இது நல்ல வாய்ப்பு என்று எண்ணிக் காவல் நிலையத்திற்கு ஓடி உடனே வழக்குப் பதிவு செய்தான். வழக்கு நடந்தது. முத்து குற்றவாளி என்று நீதி மன்றம் தீர்ப்பு அளித்தது.

முத்துவுக்கு இருபது கசையடிகள் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதைக் கேட்ட மணிவண்ணன் மனம் குளிர்ந்தான். நீதி மன்றத்தை விட்டு முத்து வெளிவரும்போது, “கசையடிகளால் என் முதுகைப் புண்ணாக்கும் இதைவிடக் கடுமையாக அவன் துன்புறுமாறு ஒரு நெருப்பு விழா நடத்துகிறேன்” என்று கூறிக்கொண்டே சென்றான்.

மணிவண்ணன், அவன் கூறியதைச் சட்டை செய்யாமல் தன் வீடு வந்து சேர்ந்தான். மணிவண்ணனின் தந்தை தம் மகனை அருகிலழைத்து நீதி மன்றத்தில் நடந்தவற்றைப்பற்றிக் கேட்டார். “முத்து இருபது கசையடி பெறுவான்” என மகிழ்ச்சியோடு மணிவண்ணன் கூறினான்.

“ஐயோ! மணிவண்ணா அவன் கசையடி படுவதால் நீ அடையும் ஆதாயம் என்ன அப்பா? இது மிகவும் கொடுமை யப்பா!” என்றார் அவன் தந்தை.

“அப்பா அவன் மீண்டும் என் வம்புக்கு வரமாட்டான். அதுதான் எனக்கு ஆதாயம்” என்றான் மணிவண்ணன்.

“தம்பி நான் சொல்வதைக் கவனி. பகைமை உணர்ச்சி உன் கண்களைக் குருடாக்கிவிட்டன. நீ பிறருடைய குற்றங்களை மட்டுமே காண்கிறாயே ஒழிய உன் குற்றங்கள் உனக்குத் தெரியவில்லை. “ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற்பின் தீதும் உண்டோ மன்னும் உயிர்க்கு?” என்னும் வள்ளுவர் மொழி உனக்கு தெரியாதா?

“அவன் தவறாக நடந்தான் என்கிறாய். அப்படியே இருக்கட்டும். அவன் மட்டும் தவறாக நடந்திருந்தால் சண்டை எப்படி வரும்? ஒரே ஒருவனால் சண்டை உண்டாகி விடுமா! இரண்டு பேர் சேர்ந்தால் தானே சண்டை வரும்? அவன் கெட்டவனாகவே இருக்கட்டும். நீ நல்லவனாய் நடந்தால் சண்டை வருமா? சிந்தித்துப் பார். பெண்கள் எதிரில் அவனை மண்ணில் தள்ளிப் புரட்டிப் புரட்டி உதைத்தது யார்? அவன் வைக்கோல் போர்களை எரித்து நாசமாக்கியது யார்? அவன்மீது வழக்குப் போட்டு அவனை நீதிமன்றம் வரை இழுத்துச் சென்று தண்டனை பெறும்படி செய்தது யார்?”

“தம்பி நானும் முத்தின் தந்தையும் அண்டை வீட்டுக்காரர்களாகத்தான் வாழ்ந்தோம். நாங்கள் ஒரு நாள்கூடச் சண்டையிட்டதில்லை. நாங்கள் ஒரே குடும்பத்தினர் போல் வாழ்ந்தோம். அவர் வீடு என் வீடு போலவும், என் வீடு அவர் வீடு போலவும் இருந்தன. நீ குழந்தையாக இருந்தபோது உன்னை அழவிடாமல் பல நாட்கள் தூக்கிச் சுமந்து வளர்த் தவர்கள் முத்துவின் தந்தையும் தாயுமாவர். அதே போல் அவனை நான் அன்போடு தூக்கி வளர்த்திருக் கிறேன். நாங்கள் உறவு முறையினர் என்றே வெளியில் இருப்பவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.”

“எங்கள் வயிற்றில் பிறந்த நீங்கள் குழந்தை களாக வளரும்போது அண்ணன் தம்பிகளைப்போல அன்புடன் வளர்ந்து, இப்போது பெரியவர்களாகி விட்டபின் பூனையும் நாயும் போல வாழ்கின்றீர்கள். இதுவா வாழ்க்கை? நீயோ குடும்பத்திற்குத் தலை வன். நீதான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு ஏற்க வேண்டியவன். வீட்டுப் பெண்களையும் பிள்ளை களையும் அடக்கி வைத்து ஒழுங்கு படுத்த வேண்டியது உன் பொறுப்பு. அதை விட்டுச் சாக்கிட்டுப் பேசவும், சண்டைக் கிழுக்கவும், பழி கூறித் திரியவும், வலுச்சண்டை பிடிக் கவும், அடித்துக் கொள்ளவும் இடங்கொடுக்க லாமா ? அப்படி அவர்கள் செய்யும் போதெல் லாம் நீ கண்டிக்க வேண்டும் அல்லவா? அவர்கள் ஒன்று சொன்னால் இரண்டாகத் திருப்பிச் சொல்வது, ஓர் அடி கொடுத்தால் இரண்டு அடியாகத்திருப்பிக் கொடுப்பது, இப்படியா செய்வது? “இன்னா செய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்”, என்றும் “இன்னா செய்தார்க்கும் இனி யவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு!என்றும் திருவள்ளுவர் பெருமான் கூறி உள்ள மறை மொழிகளைச் சிந்தித்துப் பார். வள்ளுவர் பெருமான் காட்டும் அறவழியில் நட” என்று கூறினார்.

மணிவண்ணனுக்குத் தந்தையார் கூறியது சரியெனப்பட்டது. இரவு அனைவரும் உண்டு உறங்கிவிட்டனர். அவனுக்குத் தூக்கம் வரவில்லை. தோட்டத்தில் ஒரு மரத்தடியில் இருட்டில் உட்கார்ந்து கொண்டு தன் தந்தை கூறிய அறிவுரைகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அவ்வமயம் எவரோ, தன் வைக்கோல் போரில் தீயிடுவதை மணிவண்ணன் பார்த்து விட்டான். பாய்ந்தோடித் தீயிட்டவனைப் பிடித்துக் கொண்டான்.

யார் தீயிட்டது ? முத்தேதான். முத்தைப் பார்த்தவுடன் தன் தந்தை கூறிய நல்லுரைகளை எல்லாம் மணிவண்ணன் மறந்து விட்டான். சினம் அவனிடம் தலை தூக்கி நின்றது. முத்து இனித் தப்பிவிட முடியாது என்று எண்ணிய மணிவண்ணன் அவனைப் பிடித்திழுத்தான். முத்து அவன் பிடியிலிருந்து நழுவி ஓடி விட்டான். மணிவண்ணன் அவனைத் துரத்திக் கொண்டு ஓடினான். இதற்குள் வைக்கோல் போர் அணைக்க முடியாதபடி தீப்பிடித்துக்கொண்டது. அதனால் மணிவண்ணன் வீடு, முத்து வீடு, அந்தச் சிற்றூரில் இருந்த இன்னும் இருபது வீடுகள் எரிந்து சாம்பலாயின. மணிவண்ணன் வீட்டில் இருந்தவர்கள் கையிற் கிடைத்தவற்றை யெல்லாம் சுருட்டிக் கொண்டு உயிர் தப்பினால் போதுமென்று வெளியே ஓடி வந்தனர். தீ வைத்த முத்து வீட்டாருக்கும் இதே கதி ஏற்பட்டது.

மணிவண்ணனின் தந்தையார் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து மரண நிலையடைந்தார்; உயிர் பிரியும் அத் தறுவாயில் தம் மகனை அழைத்தார்.

“மகனே, யார் வைக்கோற் போரில் தீயிட்டது?” என்று கேட்டார். “தந்தையே அடுத்த வீட்டு முத்து தான் தீவைத்தான். தீவைத்த போது அதை நான் நேரில் கண்டேன். உடனே ஓடி அவனைப் பிடித்துக் கொண்டேன். ஆனால் அவன் தப்பி ஓடி விட்டான். நான் அவனைத் துரத்திக் கொண்டு ஓடினேன்” என்றான் மணிவண்ணன்.

“நீ அவனைத் துரத்திக் கொண்டு அவன் பின்னால் ஓடாமல் விட்டு விட்டு உடனே தீயை அணைத்திருந்தால், ஒரு சிறு சேதமும் உண்டாகியிராதோ இப்பொழுது நம் ஊரில் பாதி சாம்பலாகி விட்டதே! இது யார் குற்றம்? மகனே யார் குற்றம்? நான் சாகப் போகிறேன். நீ சிந்தித்துப் பார்” என்றார் தந்தை .

தந்தையின் உருக்கமான அறிவுரைகளைக் கேட்ட மணிவண்ணன் அழுதுவிட்டான். அவன் மனம் மாறி விட்டது. “தந்தையே குற்றம் என்னுடையதுதான். உடனே அணைத்திருந்தால் கைப்பிடி வைக்கோல் கூட எரிந்திராது. உமக்கு முன்னும் இறைவனுக்கு முன்னும் நான் குற்றவாளியே..தந்தையே என்னை மன்னித்து விடுங்கள்!” என்று கூறி மணிவண்ணன் அழுதான்.

“மணிவண்ணா அறநெறிப்படி நட, வள்ளுவர் வகுத்த சட்டத்தை மீறாதே; இறைவனுக்கு அஞ்சு; இப்போது நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார் அத்தந்தை.

மணிவண்ணன் (அழுது கொண்டு) “எப்படி வாழப் போகிறோமென்பது விளங்கவில்லை அப்பா!” என்றான்.

“மணிவண்ணா! அழாதே! இனிமேல் இறைவனுக்கு அடிபணிந்து நட. முன்னை விடச் சிறப்பாக வாழ்வாய். யார் தீ வைத்தது என்பதை எவரிடமும் சொல்லாதே. பிறர் குற்றம் ஒன்றினை நீ மறைத்து வைத்தால் இறைவன் உன் குற்றங்கள் இரண்டினை மன்னிப்பார் என்பதை மறந்து விடாதே!” என்று சொல்லிக் கொண்டே பெரியவர் உயிர் துறந்தார்.

மணிவண்ண ன் தீயிட்டவர் எவரென எவரிடமும் கூற வில்லை. ஏன் தீப்பற்றியது என்பது எவருக்கும் தெரியாமற் போயிற்று. தன் தீச்செயலைப் பற்றி எவரிடமும் மணிவண்ணன் கூறாதது பற்றி முத்து பெரிதும் வியப்படைந்தான். முதலில் அவன் பெரிதும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தான். ஆனால், மணிவண்ணன் எவரிடமும் இது பற்றி ஏதும் சொல்லாமலிருந்து விடவே, அவன் மனம் மாறி விட்டது. ஒரு வாரம் ஆகியும் மணிவண்ணன் தீயைப்பற்றித்தான் அறிந்த உண்மையை எவரிடமும் கூறாமற் போகவே முத்து ஒரு நாள் மணிவண்ணனைத்தனியே சந்தித்து மன்னிப்பு வேண்டினான்.

இருவர் கண்ணிலும் நீர் புரள, இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர். அன்று முதல் பகைமையை மறந்தனர். பின் இருவர் குடும்பமும் ஒரே குடிசையில் ஒன்றாகச் சில நாட்கள் வாழ்ந்தனர். பிறகு முன் போலவே அருகருகாக இருவரும் புதிய வீடுகள் கட்டிக் கொண்டனர். அவர்களுடைய தந்தைமார் வாழ்ந்தது போலவே அவர்களும் ஒற்றுமையாகவும் அன்பாகவும் வாழ்ந்தார்கள்.

பயிற்சி:

1. குற்றம் வளரும் வகை.

2. மணிவண்ணனின் தந்தையார் கூறிய அறிவுரை.

3. அன்பின் சிறப்பு,

4. இக்கதையைச் சுருக்கி எழுதுக.

5. இக்கதையை முத்து சொல்வது போல் எழுதுக.

(மேலே உள்ளவை ஒவ்வொன்று பற்றியும் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் ஒவ்வொரு கட்டுரை எழுதுக)

– சிறுவர் கதைச் சோலை (சிறுகதைத் தொகுப்பு), ஆறாம் வகுப்புத் துணைப்பாட நூல், முதற் பதிப்பு: அக்டோபர் 1965, திருமுருகன் பதிப்பகம், வேலூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *