Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தீதும் நன்றும்

 

கோவை ரயில் நிலையம். ரயில் புறப்பட இன்னும் அரைமணி நேரம் இருந்ததால் சிவராமன் தண்ணீர் பிடிப்பதற்காக ரயிலை விட்டு இறங்கினார். எதிரே குடும்பத்தோடு வந்துகொண்டிருந்த ராஜா, “”சார் நல்லாயிருக்கீங்களா? உங்க உதவியை எங்களால மறக்கவே முடியாது சார்” என்று காலில் விழாத குறையாகக் குனிந்தான்.

தீதும் நன்றும்

உடனே அவன் தோள்களைத் தொட்டுத் தூக்கி நிறுத்திய சிவராமன், ராஜா அவனது குடும்பத்தோடு நிற்பதைப் பார்த்து மகிழ்ந்தார். ராஜாவின் முகத்தில் புதுப்பொலிவு தென்பட்டது. அவன் தாய்-தந்தை முகத்திலும்தான்! அவன் தாயார் கையெடுத்துக் கும்பிட்டு, வார்த்தைகள் ஏதுமின்றிக் கண்ணீரால் நன்றியைத் தெரிவித்தார். ராஜாவை இப்படிக் குடும்பத்தோடு, அதுவும் மகிழ்ச்சியோடு பார்க்க எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று சிவராமன் மனதில் நினைத்துக்கொண்டார்.

கடந்த மாதம் நிகழ்ந்தது அவரது மனத்திரையில் காட்சியாக விரிந்தது. எட்டாவது படிக்கும் ராஜா அவரது வகுப்பு மாணவன்; அதுவும் நன்றாகப் படிக்கக்கூடியவன். அவன்தான் வகுப்பு லீடர். முத்து முத்தாக, அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவான். எதை எழுதுவதாக இருந்தாலும் அவனைத்தான் எழுதச் சொல்வார். அவனிடம் இருந்த கடின உழைப்பும், முயற்சியும், படிப்பார்வமும் அவனது குடும்பச் சூழலால் அடிக்கடி பொலிவிழந்தன. காரணம் அவனுடைய தந்தை பாவாடை!

“”ராஜா, இந்தச் செய்யுளை போர்டில் வந்து எழுது” என்றார் சிவராமன்.
மெதுவாக எழுந்த ராஜா, தன் அருகில் அமர்ந்திருந்த சிவாவைப் பார்த்தபடி,

“”சார்… இன்னிக்கு சிவா எழுதறேன்னு சொல்றான் சார். அவனையே எழுதச்சொல்லுங்க சார்” என்றான். அவன் முகம் களையிழந்திருந்தது.

“”நான் உன்னைத்தானே எழுதச்சொன்னேன். எனக்கே நீ கட்டளை போடுறியா? வாத்தியார்கிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாதா?”

“”இல்ல சார், அவன் கையில….” என்று ஆரம்பித்தான் சிவா.

“”என்ன அவன் கைக்கு? எழுதி, எழுதிக் களைச்சிட்டானா? அவன் பேசமாட்டானா? நீ என்ன அவனுக்கு வக்காலத்தா?” கடுகடுத்தார்.

“”இல்ல சார்…. வந்து…” என்ற ராஜா, கண்ணீர் மல்க, தன் கையை நீட்டிக் காட்டினான். அவனது வலது கை விரல்கள் முழுவதும் கொப்பளித்திருந்தன. அதில் நீல இங்க்கைத் தடவியிருந்தான்.

“”என்னாச்சு…? நெருப்புல சுட்டுக்கிட்டியா?” பதறினார் சிவராமன்.

“”ஆமா சார்”

“”நெருப்புல கைய வைக்கிற வரைக்கும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தியா? நெருப்பு சுடும்னுகூடவாத் தெரியாது? வரவர உனக்கு கவனக்குறைவு அதிகமாயிடுச்சு, சரி உட்கார்” என்றார்.

வகுப்பு முடிந்து சிவராமன் வெளியே சென்றார். ராஜா, அவர் பின்னாலேயே சென்றான். சட்டெனத் திரும்பிய அவர், “”என்ன வேணும் உனக்கு?” என்றார்.

“”சார் உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன் சார், இந்தக் காயம் நானா செய்துகிட்டதில்லை. எங்க அப்பாதான் செஞ்சாரு” என்று அழுதான்.

“”அப்பாவா! அவர் ஏன் இப்படிச் செய்யணும்? எந்த அப்பாவாவது பெத்த பிள்ளையோட கையை நெருப்புல கொண்டுபோய் வைப்பாரா?” என்றார்.

“”எங்க அப்பா வைப்பாரு சார், போதையில இருந்தா…” என்றவன், தினமும் அவர் குடித்துவிட்டு வந்து தன்னையும், தன் அம்மாவையும் அடித்து உதைப்பதையும், வீட்டில் உள்ள பொருளையெல்லாம் விற்றுக் குடிப்பதையும், வேலைக்குச் செல்லாமல், தன் அம்மா சம்பாதித்துக் கொண்டுவரும் பணத்தைப் பிடுங்கி, வீட்டுச் செலவுக்குக்கூடத் தராமல் ராத்திரி பகலாகக் குடிப்பதையும், தன்னை மதுக்கடைக்குச் சென்று மது வாங்கிவரச் சொல்லி அடிப்பதையும், போகமுடியாது என்று மறுத்ததால், எரிந்துகொண்டிருந்த அடுப்பில் தன் கையை வைத்ததையும் ஒருவாறு சொல்லி முடித்தான்.

சிவராமன் அதிர்ச்சிக்குள்ளானார். “”இப்படியா ஓர் அப்பன் செய்வான்? அவரை நாளைக்குப் பள்ளிக்கு வந்து என்னைப் பார்க்கச் சொல்லு?” என்றார்.

“”வரமாட்டார் சார், ஏன்டா வாத்தியார்கிட்ட போய் சொன்னேன்னு என்னையத்தான் போட்டு அடிப்பாரு. நானும் எங்கம்மாவும் தினம் தினம் செத்துப் பிழைக்கிறோம். பாவம் சார் எங்கம்மா? அவங்கதான் தினமும் அடிவாங்கறாங்க…” அழுதான்.

“”சரி அழாதே, நானே வந்து உங்கப்பாகிட்ட பேசறேன். ஆசிரியர் அறைக்கு வந்து, கைக்கு மருந்து போட்டுக்கிட்டுப் போ” என்றார். அப்படியே செய்தான் ராஜா.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சிவராமனுக்கு ராஜாவின் அப்பாவைப் பார்த்துப் பேசலாம் என்று தோன்றியது. உடனே கிளம்பினார்.
ராஜா வீட்டு வாசலில் நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை விலக்கிக்கொண்டு எட்டிப் பார்த்தார். ராஜாவின் அம்மா அழுதுகொண்டிருப்பதையும் ராஜா அருகில் உட்கார்ந்து அம்மாவுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருப்பதையும் பார்த்தார். குடிசை ஓரமாக, வேட்டி தாறுமாறாகக் கலைந்துகிடக்க அவன் அப்பா படுத்திருந்தார். பகலிலேயே குடித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார் சிவராமன்.

ஆசிரியரைப் பார்த்ததும், “”பார்த்தீங்களா சார் இவர் செய்யறத? இன்னிக்கு ரேஷன் கார்டை யார்கிட்டயோ அடமானம் வச்சு, பகலிலேயே குடிச்சிருக்காரு. அந்தக் கார்டை வச்சுதான் நாங்க ஏதோ அரிசி பருப்பு வாங்கி, சாப்பிட்டுகிட்டு இருக்கோம். யாரிடம் கொடுத்தாருன்னு சொல்லவும் மாட்டேங்கிறாரு. கேட்டா மறந்து போயிடுச்சுன்னு சொல்லி, அம்மாவ அடிச்சி உதைக்கிறாரு” அழுதபடியே கூறினான் ராஜா.

சிவராமன் யோசித்தார். சமயம் சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டார். ராஜாவைத் தனியாக அழைத்துச் சென்று, “”போதையில இருக்கிறவங்ககிட்ட பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. வள்ளுவரே சொல்லியிருக்காரு, “குடித்திருப்பவனைப் பார்த்து, நீ செய்வது தகாத செயல் என்று கூறுவது, நீரில் மூழ்கிய ஒருவனை விளக்கை ஏற்றிக்கொண்டு தேடுவதற்கு ஒப்பாகும்’ என்று! அதனால் இதைப் பற்றி நாளைக்குப் பேசலாம். உங்கம்மாவை நாளைக்குப் பள்ளிக்கு வந்து, என்னைப் பார்க்கச் சொல்லு” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

இரவு முழுவதும் யோசித்தவர் ஒரு முடிவுக்கு வந்தார். மறுநாள் பள்ளிக்கு வந்த ராஜாவின் அம்மாவிடம் பேசினார்.

மறுநாள் ராஜா பள்ளிக்கு வரவில்லை. அடுத்த நாளும் வரவில்லை. மூன்றாவது நாள் ராஜாவின் தந்தை வகுப்பறை வாசலில் வந்து நின்றார்.

“”யார் நீங்க? என்ன வேணும் உங்களுக்கு?”

“”ராஜாவோட அப்பா பாவாடை சார். என்னோட மவனையும், பொஞ்சாதியையும் காணேம் சார்”

“”அதுக்கு போலீஸ் ஸ்டேஷனுக்குத்தானே போகணும், இங்க எதுக்கு வந்தீங்க? அதென்ன பாவாடை ஜாக்கெட்டுன்னு பேர்?”

“”எங்க குலதெய்வத்தோட பேரு சார்”

“”குலதெய்வத்தோட பேரை வச்சிக்கிட்டு குடியைக் கெடுக்கிற வேலையைச் செய்றீங்களே? உங்களுக்கு வெட்கமாயில்லை?”

தலைகுனிந்தார் பாவாடை. சிலநொடி மெüனத்திற்குப் பிறகு சிவராமன் “”ரெண்டு நாளா அவன் பள்ளிக்கூடத்துக்கே வரலையே!” என்றார்.

“”அதுதான் சார் உங்ககிட்ட கேட்டுட்டுப் போகலான்னு… ரெண்டு நாளைக்கு முந்தி நீங்க எங்க வீட்டுப்பக்கம் வந்ததாப் பேசிக்கிட்டாங்க… அதுதான், உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமான்னு…”

“”வெளியே போய் அந்த ரூம்ல உட்காருங்க. பாடம் நடத்துற நேரத்துல வந்து இப்படித் தொந்தரவு செய்யக்கூடாது. வகுப்பு முடிஞ்சதும் ஆசிரியர் அறைக்கு வந்து பாருங்க” என்றதும், பாவாடை வெளியே போய்விட்டார்.

ஆசிரியர் அறை வாசலில் நின்றிருந்த பாவாடையைப் பார்த்து, “”சொல்லுங்க என்ன பிரச்னை? இப்பவும் குடிச்சிருக்கீங்களா?” என்றார்.

“”இல்லை சார், புள்ளையையும் பொஞ்சாதியையும் வூட்டுல ரெண்டு நாளாக் காணாம துடிச்சுப் போயிட்டேன் சார். கையும் ஓடல… காலும் ஓடல… அவங்க இல்லாத வூடு வெறிச்சோன்னு கிடக்குது சார், இனிமே இப்படிச் செய்யமாட்டேன் சார். எனக்கு அவங்கன்னா உசுரு சார் …” என்றார்.

“”ஓ… உயிரா இருக்கிறவங்களத்தான் தினமும் போட்டு அடிச்சு, சித்திரவதை செய்யறீங்களா? நாம என்ன அடிச்சாலும் நம்மள விட்டுப் போகமாட்டாங்கங்கிற நினைப்பு உங்களுக்கு.. இல்லே?”

“”அப்படி இல்ல சார்” ஓ..வென அழுதார் பாவாடை.

“”இப்ப வருத்தப்பட்டு என்ன ஆகப்போவுது? நீங்க குடிச்சிட்டு வந்து அவங்கள எந்த அளவுக்கு அடிச்சுக் கொடுமைப்படுத்தியிருந்தா, அவங்க வீட்டைவிட்டுப் போயிருப்பாங்க? எந்த அப்பனாவது எரியிற அடுப்புல பெத்த புள்ளையோட கையக் கொண்டுபோய் வைப்பானா? அருமையான ஒரு புள்ளையப் பெத்திருக்கீங்க. நல்லாப் படிக்கிற அவனுக்கு நீங்கதான் இடையூறா இருக்கீங்க. அரசுப் பள்ளியில எல்லாத்தையும் இலவசமாகத் தந்தாலும் அவனுக்கு வீட்டுல அமைதியும் நிம்மதியும் கிடைக்கல. இப்படி இருந்தால் அவனால எப்படிப் படிக்க முடியும்? நல்லாப் படிக்கிற பையனை படிக்கவிடாமல் உங்க கெட்ட பழக்கத்துக்கு அவனையும் துணைபோக வச்சிருக்கீங்க.

மதுவுனால நீங்களும் சீரழிஞ்சு, உங்க குடும்பத்தையும் ஏன் சீரழிக்கிறீங்க? இப்படி இருந்தா, அந்தப் பிள்ளை எப்படி நிம்மதியாப் படிச்சு வாழ்க்கையில முன்னேற முடியும்?

“அப்பா’ங்கறதுக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? கல்வி அறிவு தந்து மகனை நல்வழிப்படுத்தி, ஒழுக்கமான பாதைக்கு அழைத்துச் செல்வதுதான் அப்பாவோட கடமை. புகழோ பெருமையோ, அது உங்க மகனாலதான் உங்களுக்கு வந்து சேரணும். அதுதான் பெருமை! அந்தப் பெருமை மதுவால கிடைக்காது. இந்தக் கெட்ட பழக்கத்துனால பேர் கெட்டு, மரியாதை கெட்டு, எல்லாத்தையும் இழந்துட்டு நடுத்தெருவுக்குத்தான் வரணும். நல்லதும் கெட்டதும் நமக்கு நாமே தேடிக்கிறதுதான்! எல்லாப் பிரச்னையும் உங்களாலதான்னு இப்பவாவது உணர்றீங்களா? போங்க, போய் போலீஸ்ல சொல்லுங்க….” என்று சொல்லிவிட்டு, அவருடைய பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே வந்தார்.

ராஜா இருந்த அந்த ஏரியா காவல் அதிகாரி, சிவராமனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், அவருடைய சகோதரி வீட்டில் ராஜாவையும் அவன் அம்மாவையும் இரண்டு நாள்கள் தங்க அனுமதிக்கும்படி சிவராமன் கேட்டுக்கொண்டதன்படி அவர்கள் அங்கு பத்திரமாக இருந்தார்கள். அன்று இரவு, அவர்கள் இருவரையும் வீட்டில் கொண்டுபோய் விட்டார் சிவராமன்.
மகனையும், மனைவியையும் கண்ட பாவாடை, ஓடிவந்து சிவராமனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். மதுப் பழக்கத்தை நிறுத்துவதற்கான மருத்துவச் சிகிச்சைக்கு அவரை கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு, தன் சொந்த செலவில் அனுப்பப்போவதாகக் கூறினார் சிவராமன். அதற்குப் பாவாடையும் சம்மதித்தார்.

“”சார், டிரைன் கிளம்பப்போகுது சார், விசில் ஊதியாச்சு” ராஜா கூறியதும்தான் சுயநினைவுக்கு வந்தார் சிவராமன். எல்லாம் கனவு போல் இருந்தது.

மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு, பாவாடை புதுப்பிறவி எடுத்திருப்பதாகவே தெரிந்தது சிவராமனுக்கு. இனி ராஜா படிப்பில் கவனம் செலுத்தி, முதல் மாணவனாக வருவான் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

- கி.மஞ்சுளா (டிசம்பர் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
உணர்வுகள்!
""பூங்கோதை! வகுப்பை கவனிக்காமல் அங்கே என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?'' கணக்கு ஆசிரியர் தேவராஜன் சற்று உரத்த குரலில் கேட்டதும், வகுப்பில் இருந்த அனைவரின் பார்வையும் பூங்கோதை பக்கம் திரும்பியது. திடுக்கிட்டு ஆசிரியரைப் பார்த்த பூங்கோதை, ""ஒன்னுமில்ல சார்'' என்று மெதுவாக எழுந்து ...
மேலும் கதையை படிக்க...
தங்க எலி
ஒரு நகரத்தில் வியாபாரி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சூதாடும் பழக்கம் இருந்தது. ஒருமுறை சூதாட்டத்தில் தன் சொத்துக்கள் அனைத்தையும் அவன் இழந்துவிட்டான். அனைத்தையும் இழந்ததால், தன் மனைவியைக் காப்பாற்ற முடியாத நிலையை எண்ணி மனம் நொந்து, நோய்வாய்ப்பட்டு ...
மேலும் கதையை படிக்க...
அச்சாணி
மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளிக்கூட மரத்தடியில் சிவா, தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கோபு, ""டேய் சிவா, உங்கப்பாவை இன்னிக்கு எங்க தெருவுல பார்த்தேண்டா'' என்றான்.இதைக் கேட்ட சிவாவின் முகம் மாறியது. கண்களில் நீர் கோர்க்கத் தொடங்கியது. ...
மேலும் கதையை படிக்க...
சுழற்சி
பாண்டிபஜார் அருகில் இருக்கும் அந்தப் பூங்காவைக் கடந்து செல்லும் போதெல்லாம் சுமதியின் மனதுக்குள் ஓர் இனம் புரியாத கலக்கம் வந்து குடிகொண்டுவிடும். எங்கு பார்த்தாலும் பட்டாம்பூச்சிகளாய் சிறுவர் சிறுமியர்கள் சுற்றி சுற்றி மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். சிலர் ஏணியில் ஏறி சர்ர்ர் ...
மேலும் கதையை படிக்க...
நண்பனின் குரல்!
கார்த்திக் என்னைப் பார்'' குரல் வந்த திசையை நோக்கினான் கார்த்திக். அவனைத் தவிர அந்த அறையில் யாரும் கிடையாது. உடனே அவனை பயம் தொற்றிக் கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தான். பயம் ஏற்படும் போதெல்லாம் அம்மா சொல்லித்தந்த ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டே இருப்பான். ...
மேலும் கதையை படிக்க...
உணர்வுகள்!
தங்க எலி
அச்சாணி
சுழற்சி
நண்பனின் குரல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)