கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 48,144 
 

பெருந்துறவியான கோபோ ஓரிடத்தில் தங்க மாட்டார். ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருப்பார். ஒருமுறை அவர் கடுமையான வெயிலில் நடந்து வந்தார். தாகம் அவரை வாட்டியது. அருகில் இருந்த ஊர் ஒன்று அவருக்குத் தெரிந்தது. அங்கே சென்ற அவர் ஒரு வீட்டின் முன் நின்றார்.

“”அம்மா தாயே! தாகமாக இருக்கிறது. தண்ணீர் கொடுத்தால் குடித்துவிட்டுச் செல்வேன்,” என்று குரல் கொடுத்தார்.

Thanneer2பெண்மணி ஒருத்தி வெளியே வந்தாள். “”ஐயா! சிறிது நேரம் பொறுமையாக இருங்கள். குளத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன்,” என்று இனிமையாகச் சொன்னாள் அவள். ஒரு குடத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

நேரம் சென்று கொண்டே இருந்தது. அவள் வரும் அறிகுறியே தெரியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பொறுமை இழந்தார் கோபோ. “நான் யார் என்பதை அறியாமல் என்னிடமே விளையாடுகிறாளா? அவள் வரட்டும் நான் யார் என்பதை அவளுக்குக் காட்டுகிறேன்,” என்று உள்ளுக்குள் பொறுமினார்.

இடுப்பில் தண்ணீர்க் குடத்துடன் மெல்ல நடந்து வந்தாள் அவள். வீட்டிற்குள் சென்ற அவள், ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் வந்தாள். அதை அவரிடம் நீட்டினாள்.

“”தண்ணீர் கொண்டு வருவதற்கா இவ்வளவு நேரம்?” என்று கோபத்துடன் கேட்டார் கோபோ.

“”ஐயா! இங்கே அருகில் எங்கும் தண்ணீர் இல்லை. ஐந்து கல் தொலைவில் உள்ள குளத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன்!”

அப்போதுதான் கோபோ அவளைக் கவனித்தார். வெயிலில் நடந்ததால் அவள் உடல் எங்கும் வியர்வை வழிந்தது. அவருடைய கோபம் போன இடம் தெரியவில்லை. “இந்த வெயிலில் ஐந்து கல் நடக்க வைத்து விட்டோமே’ என்று வருந்தினார்.

“”இதை ஏன் என்னிடம் முன்னரே சொல்லவில்லை?” என்று கேட்டார்.

“”ஐயா! மழை பெய்யாததால் இங்கே உள்ள கிணறுகளும், குளங்களும் வற்றிவிட்டன. ஐந்து கல் தொலைவில் உள்ள குளத்தில்தான் தண்ணீர் உள்ளது. நாங்கள் எல்லாரும் நாள்தோறும் அவ்வளவு தொலைவு சென்றுதான் தண்ணீர் எடுத்து வருகிறோம். நீங்கள் கேட்டபோது வீட்டில் தண்ணீர் இல்லை. அதனால்தான் அங்கே சென்று தண்ணீர் கொண்டு வந்தேன்!” என்று பணிவுடன் சொன்னாள் அவள்.

அவள் தந்த தண்ணீரைக் குடித்தார். அவர் உள்ளம் குளிர்ந்தது.

“”அம்மா! உங்கள் அன்பிற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உங்களால் இந்த ஊர் மக்கள் தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமல் வாழப்போகின்றனர்!” என்றார் கோபோ.

அங்கேயே தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் அவர் உதடுகள் மந்திரங்களைச் சொல்லியபடி இருந்தன. தியானம் கலைந்து எழுந்தார். தன் கையில் இருந்த தடியால் தரையில் தட்டினார். என்ன வியப்பு! அங்கே தரை பிளவுபட்டு நீரூற்று ஒன்று வேகமாக வெளியே வந்தது.

“”அம்மா! இந்த இனிமையான நீரூற்று என்றும் வற்றாது. நீங்களும் இந்த ஊர் மக்களும் வளமாக வாழ்வீர்கள்!” என்று வாழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

குட்டீஸ்… ஒரே ஒரு பெண்ணின் உபசரிப்பு குணத்தால் அந்த கிராமமே ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதைப் பார்த்தீர்களா?

நீங்க எப்படி!

– டிசம்பர் 10,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *