தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்  
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 13,436 
 

ஒரு ஊரில் மருதலிங்கம் என்ற வியாபாரி ஒருவர் இருந்தார். மாதம் ஒருமுறை அயல்நாட்டிற்குச் சென்று பொருள்களை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்.

வியாபாரம் நன்றாக நடந்தாலும் அவருக்கு ஒரு பிரச்னை இருந்து வந்தது.

பல மாதங்களுக்கு முன்பு அயல்நாட்டுக்குச் சென்ற போது நிறைய பொருள்கள் வாங்கினார். கடைசியில் முக்கியமான ஒரு பொருளை வாங்குவதற்கு அவரிடம் போதுமான பணம் இல்லாமல் போய்விட்டது. அடுத்த மாதமும் அப்படியே நடந்தது. இதைச் சமாளிப்பதற்காக ஒவ்வொரு முறை பயணம் செல்லும்போதும் முன்பு கொண்டு சென்றதைவிட அதிகப் பணம் கொண்டு செல்வார். ஆனாலும் கடைசியில் பணம் போதாத நிலை ஏற்பட்டுவிடும்.

பலரிடமும் தனது பிரச்னையைக் கூறி விளக்கம் கேட்டுப் பார்த்தார். எதுவும் சரிப்படவில்லை. அந்தப் பிரச்னையும் தீரவில்லை, சரியான விளக்கமும் கிடைக்கவில்லை!

இந்நிலையில் அந்த ஊருக்கு ஒரு ஞானி வந்தார். ஊர் மக்கள் அனைவரும் அவரிடம் தங்கள் குறைகளைச் சொல்லி ஆசிபெற்று வந்தனர். இந்த விஷயம் மருதலிங்கத்தின் காதுகளை எட்டியது. அவரும் ஞானியைச் சந்தித்தார். தனது பிரச்னையைக் கூறினார்.

அவரை, ஞானி மறுநாள் வரும்படியும், அப்படி வரும்போது இரண்டு வளைந்த ஓடுகளைக் கொண்டு வரும்படிக் கூறினார்.

மருதலிங்கத்துக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் ஞானி கூறியபடி இரண்டு ஓடுகளுடன் மறுநாள் ஞானியைச் சந்தித்தார்.

இரண்டு ஓடுகளையும் சுவரில் சாய்வாக நிறுத்திய ஞானி, ஒரு பெரிய வாளியில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார். பிறகு அந்த வாளியில் இருக்கும் தண்ணீரால் ஒரு ஓடு மேல் ஊற்றி அதை முழுவதுமாக நனைக்கச் சொன்னார்.

மருதலிங்கம், வாளித்தண்ணீர் முழுவதையும் அந்த ஓட்டின் மீது ஊற்றினார். தண்ணீர் ஓட்டின் மீது ஓடி தான் சென்ற பகுதிகளை மட்டுமே நனைத்தது. இதனால் ஓடு முழுவதுமாக நனையவில்லை.

மருதலிங்கத்துக்கு இந்தச் சின்ன விஷயத்தைக் கூடத் தன்னால் வெற்றிகரமாகச் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்பட்டது.

ஞானி மீண்டும் தண்ணீர் கொண்டு வரச் செய்தார். ஆனால் இப்போது வாளியில் இல்லாமல் ஒரு கோப்பையில் தண்ணீர் கொடுத்தார்.

மீதமிருந்து ஓட்டைக் காண்பித்து, ‘இக் கோôப்பை நீரால் இந்த ஓட்டை முழுமையாக நனையுங்கள் பார்ப்போம்’ என்றார்.

கோப்பையில் நீர் கொஞ்சமாக இருப்பதைக் கவனித்த மருதலிங்கம், முன்புபோல முழுவதுமாக ஊற்றாமல், கைகளால் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து ஓடு முழுவதும் நனையும்படி செய்தார். இதனால் ஓடும் முழுமையாக நனைந்தது; கோப்பையில் நீரும் மிச்சமிருந்தது!

ஞானியின் முகத்தில் புன்னகை படர்ந்தது. அவர், ‘இப்போது ஏன் தண்ணீரைக் கைகளால் தெளித்தீர்கள்?’ என்று கேட்டார்.

‘ஓடு முழுமையாக நனையத்தான்’ என்றார் மருதலிங்கம்.

ஞானி, ‘இப்போது தெளித்தது போலவே முன்பும் தெளித்திருக்கலாமே? ஏன் அப்போது ஊற்றினீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு மருதலிங்கம், ‘அப்போது வாளியில் நிறைய நீர் இருந்தது. ஒரு ஓட்டை நனைக்க அந்த நீர் போதுமானது என்றெண்ணி ஊற்றினேன். ஆனால், இப்போதோ கோப்பையில் கொஞ்சம் நீர்தான் இருந்தது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்தால்தானே ஓடு முழுவதுமாக நனையும்? வேறு வழியில்லையே!’ என்று பதிலளிளித்தார்.

மீண்டும் ஞானியின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது…

‘உங்கள் பதிலிலேயே உங்களுடைய பிரச்னைக்கான விடையும் அடங்கியிருக்கிறது. நீங்கள் வாளி நீரைப் போல பணத்தைக் கொண்டு சென்றீர்கள். நிறையப் பணம் கைவசம் இருக்கிறது என்ற நினைப்பில் கூடுதலான பொருள்களை வாங்கினீர்கள். அதனால் முக்கியமான பொருளை வாங்குவதற்குள் பணம் தீர்ந்து போனது. அதையே நீங்கள், கோப்பையில் இருந்த நீரைப் போல தேவைக்கு அளவான பணத்தை மட்டும் கொண்டு சென்று, ஒவ்வொரு பொருள் வாங்கிய பிறகும், வைத்திருக்கும் பணம் எவ்வளவு, இன்னும் என்ன பொருள் வாங்கவேண்டும், அதற்கு மீதமிருக்கும் பணம் போதுமா? என்றெல்லாம் கணக்கிட்டுப் பொருள்களை வாங்கினால் உங்களால் முக்கியமான பொருள்களையும் வாங்கி வரமுடிந்திருக்கும்!’ என்றார்.

மருதலிங்கத்தின் மனதில் தெளிவு ஏற்பட்டது. மகிழ்ச்சியுடன் ஞானிக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

-எஸ்.தீபிகா (அக்டோபர் 2011),
9-ம் வகுப்பு,
இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளி, திருவையாறு, தஞ்சாவூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *