சிறந்த ஆயுதம்

 

சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், “ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!” என்றார்.

“ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரி!” என்று அனைவரும் ஆமோதிக்க, பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், “பீர்பல்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு உடன்பாடு இல்லையா?” என்று கேட்டார்.

“பிரபு! இந்த நந்தவனத்திற்கு அழகைத் தருவது இந்த ரோஜா மலர்கள் தான். ஆனால் அழகு எங்கே உள்ளதோ, அங்கே அபாயமும் உண்டு!” என்றார் பீர்பல். “ஓகோ! ரோஜாப்பூக்களில் உள்ள முட்களைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார்.

“இல்லை, பிரபு! நான் அவற்றைச் சொல்லவில்லை!” என்று பீர்பல் சொல்ல, “அப்படியானால், ரோஜாச் செடிகளின் உள்ளே மறைந்திருக்கும் பாம்புகளைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார்.

“மனிதனால்தான் பாம்புகளுக்கு அபாயம்! நம் காலடியோசையைக் கேட்டவுடனேயே அவை பயந்து ஓடி விடுகின்றன!” என்றார் பீர்பல்.

“பின் நீ எதைத்தான் அபாயம் என்று குறிப்பிடுகிறாய்?” என்று சலிப்புடன் அக்பர் கேட்க, “பிரபு! அபாயம் என்பது அழகை மட்டுமல்ல; வலிமை, செல்வம், புகழ் ஆகிய அனைத்தையும் அபாயம் சூழ்ந்து உள்ளது.

தாங்கள் பாரதத்தின் மிக வலிமை பொருந்திய, மிகப் புகழ்பெற்ற, சகல செல்வங்களையும் ஒருங்கே பெற்ற சக்கரவர்த்தி! ஆனால், மேற்கூறிய விஷயங்களினால், அண்டை ராஜ்யத்து மன்னர்கள் தங்கள் மீது பொறாமை கொண்டுள்ளனர். தங்களை வீழ்த்தி வெற்றிவாகை சூட சதித்திட்டம் இட்டவாறு உள்ளனர்.

அதனால்தான், பூலோக சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை” என்றார். பீர்பலின் சொற்கள் அக்பரை சிந்திக்கத் தூண்டின. மறுநாள் சபையில் அக்பர், “திடீரென்று ஒருவனை அபாயம் சூழ்ந்தால், அவனுடைய தற்காப்புக்காகப் பயன்படும் சிறந்த ஆயுதம் எது?” என்று சபையோர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார்.

“வாள்!” என்றார் ஒருவர். “இல்லை!” என்று மறுத்த பீர்பல், சில சமயங்களில் வாள் பிடித்த கரம் செயலற்றுப் போவதுண்டு!” என்றார். “எதிரி மீது தொலைவிலிருந்தே குறிபார்த்து ஈட்டியை வீசுவதன் மூலம் அபாயத்திலிருந்து தப்பலாம்!” என்றார் மற்றொருவர்.

“பதற்றத்தில் ஈட்டியின் குறி தவறினால், அது பயன்படாது!” என்றார் பீர்பல். “சரிதான்! வாள், ஈட்டி, என்று எந்த ஆயுதமுமே சரியில்லை என்றால், எதுதான் ஆபத்தில் பயன்படும்?” என்று அக்பர் கேட்க, “சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயற்படும் நமது அறிவே சிறந்த ஆயுதம் ஆகும்!” என்றார் பீர்பல்.

“வெறும் பிதற்றல்! நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது உன் மூளை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கிறேன்!” என்று அக்பர் கிண்டல் செய்ய, சபையோர் அவருடன் சேர்ந்து பீர்பலை எள்ளி நகையாடினர். “சமயம் வரும்போது நான் கூறியது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!” என்றார் பீர்பல்.

மறுநாள், அக்பர் சில பிரமுகர்களுடன் நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது, பீர்பலும் உடனிருந்தார். அப்போது, ஒரே கூச்சலும், கூக்குரலும் கேட்க, மக்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர். சக்கரவர்த்தியைக் கண்ட அவர்கள் ஓடோடி வந்து, “பிரபு! ஆபத்து! அபாயம்! பட்டத்து யானைக்கு திடீரென மதம் பிடித்து விட்டது.

அது இந்தப் பக்கம்தான் ஓடி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உடனே ஓடி விடுங்கள்!” என்று கூச்சலிட்டனர். அவர்கள் கூறி முடிப்பதற்குள் தொலைவில் மதயானை ஓடி வருவது தெரிந்தது.

உடனே, அக்பர் தன் இடையிலிருந்து வாளை உருவ, கூடியிருந்த அனைவரும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டனர். ஆனால், மதம் பிடித்த யானையை வாள் கொண்டு சமாளிக்க முடியாது என்று உணர்ந்ததும், அவர்கள் திக்பிரமை பிடித்து சிலைகளாக நின்றனர். தன்னைப் பெரிய ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதை அக்பரும் உணர்ந்தார்.

வாளினாலோ, ஈட்டியினாலோ யானையை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ஆனால் கோழையைப் போல் பயந்து ஓடவும் அவருடைய தன்மானம் இடம் தரவில்லை. எல்லாரும் செய்வதறியாது செயலற்று நிற்க, பீர்பல் சட்டென்று அங்கிருந்த ஒரு பூனையைப் பிடித்து யானையின் முதுகில் வீசியெறிந்தார். யானையின் முதுகில் விழுந்ததால் மிரண்ட பூனை, தன் நகங்களினால் யானையைப் பிறாண்டியது.

வலி பொறுக்க முடியாத யானை, தன் தும்பிக்கையினால் பூனையைப் பிடிக்க முயல, அது தப்பித்துக் கீழேயிறங்கி ஓடியது. யானையின் கோபம் முழுவதும் பூனையின்பால் திரும்ப, அது பூனையைத் துரத்திக் கொண்டே எதிர் திசையில் ஓடியது.

தனது பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு யானையினால் விரைவாக ஓட முடியவில்லை. போக்குக் காட்டிக் கொண்டே ஓடிய பூனை, சாலையோரப் புதர்களின் உள்ளே மறைய, யானை புதர்களுக்குள் புகுந்து அதைத் தேடியது. இவ்வாறு, யானையின் கவனம் திசை திரும்ப, அக்பரும் மற்றவர்களும் யானையிடம் சிக்காமல் தப்பித்தனர்.

சற்றுநேரம் சிலையாய் நின்ற அக்பர் தெளிவடைந்தவுடன் பீர்பலைக் கட்டித் தழுவிக் கொண்டார். “பீர்பல்! சபாஷ்! அறிவுதான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டாய்! சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்தது என்ற உண்மையை எங்களுக்குப் புரிய வைத்து விட்டாய்! நீ சொன்னதே சரி! உன்னைப் போன்ற அறிவாளி அருகிலிருந்தால் எந்த அபாயத்தையும் எதிர் கொள்ளலாம்!” என்று மனதாரப் பாராட்டினார். 

தொடர்புடைய சிறுகதைகள்
அக்பர் அரசியாருடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அக்பருக்கு மிகவும் பிடித்தமான வாழைப்பழங்கள் அக்பரின் இலையில் கூடுதலாக வைக்கப்பட்டிருந்தது. உணவை சாப்பிட்டபின் இலையில் இருந்த அனைத்து வாழைப் பழங்களையும் சாப்பிட்டு முடித்தார். பழங்களை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை அரசியாரின் இலையில் ஒரு ஓரத்தில் வைத்து ...
மேலும் கதையை படிக்க...
நண்பர் ஒருவருடைய வீட்டுக்குப் பீர்பால் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒருவர் அவரைப்பார்த்து, 'அமைச்சர் பீர்பால் வீடு எது?'' என்று கேட்டார். அந்த மனிதர் பீர்பாலை பார்த்ததே இல்லை. ஆனால், அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். ஏதோ அவசர காரியமாக அவரிடம் ஆலோசிப்பதற்கு விரும்பினார். பீர்பால் அவரைப் ...
மேலும் கதையை படிக்க...
அக்பர் அரண்மனையில் தனது பேரனோடு கொஞ்சிக் கொண்டிருக்கிறார். பீர்பாலிடம் என் பேரன் தான் உலகிலேயே அழகானவன் என்றார் பீர்பால் மறுத்து அரசே இல்லை உங்கள் பேரனை விட அழகானவன் இருக்கிறான் என்கிறார். அரசே என்னோடு வாருங்கள் நான் காட்டுகிறேன் என்றார். – மாறு ...
மேலும் கதையை படிக்க...
“கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?” இது பேரரசர் அக்பர் பீர்பாலை பார்த்து கேட்ட சந்தேகம் பீர்பால் கூறினார் “இதற்கு உடனே விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும்” சில நாட்கள் கழித்து அக்பர் ...
மேலும் கதையை படிக்க...
அக்பருடைய சபையில் இருந்தவர்கள் அனைவரிலும், பீர்பால் மட்டுமே அக்பரின் பிரியத்திற்குப் பாத்திரமானவராக இருந்தார். இதனால் பீர்பால் மீது சபையில் பலர் பொறாமை கொண்டிருந்தனர். ஒருநாள், பீர்பால் மீது பொறாமை கொண்டவர்கள் ஒன்று கூடி அவருக்கு எதிராக சதி ஆலோசனை செய்தனர். அவருக்கு ...
மேலும் கதையை படிக்க...
பழமும் இல்லை! தோலும் இல்லை!
பீர்பால் வீடு எது
அழகான குழந்தை
கடவுளும் தூதுவர்களும்
சத்தியமே வெல்லும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)