சத்தியமே வெல்லும்!

 

அக்பருடைய சபையில் இருந்தவர்கள் அனைவரிலும், பீர்பால் மட்டுமே அக்பரின் பிரியத்திற்குப் பாத்திரமானவராக இருந்தார். இதனால் பீர்பால் மீது சபையில் பலர் பொறாமை கொண்டிருந்தனர்.

ஒருநாள், பீர்பால் மீது பொறாமை கொண்டவர்கள் ஒன்று கூடி அவருக்கு எதிராக சதி ஆலோசனை செய்தனர். அவருக்கு எப்படியாவது கெட்ட பெயரை உண்டாக்கிவிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஒவ்வொருவரும் ஒரு யோசனை கூற, தாவூத் என்பவர் பீர்பாலை அவமானப்படுத்த தன்னிடம் ஓர் அருமையான திட்டம் இருப்பதாகக் கூறினார்.

“பீர்பாலைப்பற்றி தவறாக எது சொன்னாலும் சக்கரவர்த்தி நம்பமாட்டாரே!” என்று மற்றவர்கள் சந்தேகம் எழுப்ப, “சொல்கிற விதத்தில் சொன்னால், சக்கரவர்த்தி கட்டாயம் நம்புவார்” என்று தாவூத் அடித்துக் கூறினார். உடனே மற்றவர்கள் தாவூதை உற்சாகப்படுத்தினர்.

“என் திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், நீங்கள் எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டும்!” என்று தாவூத் கூற, “அது என்ன?” என்று மற்றவர்கள் கேட்டனர்.

“நாளைக்கு நீங்கள் அனைவரும் வழக்கப்படி குறித்த நேரத்தில் தர்பார் வந்து சேருங்கள்.

நான் மட்டும் தாமதமாக வருவேன். நான் ஏன் வரவில்லை என்று சக்கரவர்த்தி உங்களைக் கேட்பார். உடனே நீங்கள், “தாவூத் ஒரு பயங்கரமான குற்றத்தைத் தன் கண்களால் பார்த்து விட்டார். அது அவருடைய மனத்தை மிகவும் பாதித்து விட்டது. அதனால் அவர் தாமதமாக வருவார்” என்று சொல்லிவிடுங்கள். பிறகு நான் வந்து அது என்ன என்று அவரிடம் விளக்கிக் கூறுவேன்” என்று கூறினார் தாவூத்.

அனைவரும் அதற்கு சம்மதித்தப்பின் வீடு திரும்பினர். மறுநாள், தர்பார் கூடியது. பீர்பல் உட்பட அனைவரும் குறித்த நேரத்தில் தர்பாருக்கு வந்து விட்டனர். தாவூத் மட்டும் வரவில்லை. அக்பர் தர்பாரில் நுழைந்ததும் அனைவரும் எழுந்து சலாம் செய்தனர். அக்பரும் புன்னகைத்தபடி தன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அனைவர் மீதும், தன் பார்வையை செலுத்தினர்.
அதற்குள் ஒருவன் எழுந்து, “பிரபு! தாவூத் இன்று தாமதமாக வருவதற்குத் தங்களிடம் அனுமதி கோரியுள்ளார்!” என்றார்.

“தாமதமாக வர என்ன காரணம்?” என்று அக்பர் கேட்டார். “ஒரு பயங்கரமான குற்றத்தை தன் கண் முன்னே நடக்கக் கண்டார். இதனால் அவருடைய உடல் சோர்ந்து விட்டது. ஆகையால் சிறிது தாமதமாக வருவதாகக் கூறியுள்ளார்!” என்றார் அவர்.

சற்றுநேரத்தில் தாவூதே வந்து சேர்ந்து விட்டார். உடனே அக்பர் அவரைப் பார்த்து, “ஒரு பயங்கரமான குற்றம் நிகழ்வதை நீ பார்த்தாயாமே!” என்று கேட்டார்.

“ஆம் பிரபு!” என்றார் தாவூத். “அது என்ன குற்றம்? உடனே சொல்! யார் அந்தக் குற்றவாளி?” என்று அக்பர் சீறினார்.

“அதை எப்படி என் வாயால் சொல்வேன் பிரபு? உங்களுடைய மிகுந்த நம்பிக்கைக்கும், அபிமானத்திற்கும் பாத்திரமான அவரைப் பற்றி என் வாயினால் எப்படிச் சொல்வேன் பிரபு? அதைக் கேட்டால், உங்கள் மனம் மிகவும் புண்படுமே!” என்று தாவூத் நாடகமாடினார்.

“சட்டத்தின் முன் அனைவரும் சமம்! அவன் யாராயிருந்தாலும் சரிதான்! அவன் யாரென்று உடனே சொல்!” என்று அக்பர் உறுமினார்.

“வேறு யாருமில்லை பிரபு! உங்களுடைய பீர்பல்தான் அது!” என்றதும் அக்பர் அதிர்ச்சியுற்றார். பீர்பலும் அதிர்ச்சியுற்றார். ஆனால் பீர்பல் உடனே விஷயத்தைப் புரிந்து கொண்டார். தன் மீது வீண் பழி சுமத்த தாவூத் திட்டமிட்டுள்ளார் என்று தெரிந்து விட்டது.

“என்ன பீர்பலா?” என்று மிகுந்த வியப்புடன் அக்பர் கேட்டார்.

“ஆம், பிரபு! நான் என் கண்களினால் கண்டதைச் சொல்கிறேன்! நேற்று மாலை நான் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், எனக்கு சற்றுத் தொலைவில் பீர்பல் வந்து கொண்டு இருந்தார். திடீரென அவர் குனிந்து தரையில் கிடந்த ஒரு தங்க மாலையைப் எடுத்தார். பிறகு தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தபின், மாலையைத் தன் பையில் போட்டுக் கொண்டு சென்று விட்டார். சிறிது நேரங்கழித்து அங்கு மிகுந்த பதற்றத்துடன் வந்த ஓர் இளைஞன் “என் தங்க மாலை வழியில் இங்கே எங்கோ விழுந்து விட்டது. அதைப் பார்த்தீர்களா?” என்று எல்லாரையும் கேட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் உண்மையைச் சொல்ல நினைத்தேன். அதற்குள் அவன் அங்கிருந்து சென்று விட்டான்” என்று தாவூத் அழகாகத் தான் கற்பனை செய்து வந்த கதையைக் கூறினார்.

அக்பர் கோபமாக, “பீர்பல், இவர் உன்னைப் பற்றிக் கூறுவது உண்மையா?” என்று கத்தினார். “இல்லை பிரபு! நான் மாலை நேரத்தில் அங்கு வந்தது உண்மை! ஆனால் இவர் குறிப்பிட்டது போன்ற சம்பவம் எதுவும் அப்போது நிகழவில்லை” என்றார் பீர்பல்.

“பிரபு! பின் நான் என்ன பொய்யா சொல்கிறேன்? பீர்பல் மறைக்கிறார். நான் சொல்வது சத்தியம்!” என்றார் தாவூத்.

“பீர்பல் எடுத்ததை நிரூபிக்க வேறு சாட்சிகள் இல்லாதபோது, நீ கூறுவதை நான் எப்படி நம்ப முடியும்?” என்று அக்பர் தாவூதை கேட்டான்.

“அதற்கு ஒரு சோதனை செய்து பார்க்கலாம். பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை நான் எடுத்து வருகிறேன்.

அதை தன் கையில் பீர்பல் பிடித்துக் கொள்ளட்டும். அவர் சத்தியவான் என்பது உண்மையானால், அந்தக் கம்பி அவரைச் சுடாது!” என்றார் தாவூத்.

அதைக் கேட்ட பிறகு பீர்பலின் பக்கம் திரும்பிய அக்பர், “பீர்பல், நீ இந்த சத்திய சோதனைக்கு உட்பட்டேயாக வேண்டும்! நீ ஒரு நிரபராதி என்பதை நிரூபித்துக் காட்டு! நீ சொல்வது சத்தியம் என்பதை அப்போதுதான் எல்லாரும் நம்புவார்கள்” என்றார்.

பீர்பலின் மூளை வெகு விரைவாக வேலை செய்தது. உடனே அவர், “பிரபு! அந்த சத்திய சோதனைக்கு நான் தயார்! ஆனால் என் மீது குற்றம் சாட்டும் தாவூத் அவர்களும் தான் சொல்வது சத்தியம் என்பதை நிரூபிக்க வேண்டும்” என்றார்.

“அது எப்படி? அவர் என்ன செய்ய வேண்டும்?” என்று அக்பர் கேட்டார். “பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை தாவூத் முதலில் தன் கைகளில் பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு என்னிடம் தர வேண்டும்!” என்றார் பீர்பல்.

அதுகேட்டு, அடிபட்ட நாயைப் போல் தாவூத் வீல் என்று கத்தினார்.

“ஐயோ! அது என்னால் முடியாது!” என்று அலறினார்.

“ஏன் முடியாது? நீ சொல்வதை நிரூபிக்க நீயும் அந்த சோதனைக்கு ஆளாக வேண்டும்” என்றார் பீர்பல்.

உடனே தாவூத் அக்பரை நோக்கி, “பிரபு! என்னை மன்னித்து விடுங்கள்! சங்கிலியை எடுத்தது பீர்பல் இல்லை. நான் தவறாகச் சொல்லிவிட்டேன்” என்று கூறி அவர் கால்களில் விழுந்து புலம்பினார்.

“பீர்பல் மீது பொய்க்குற்றம் சாட்டிய இந்த அயோக்கியன் தாவூதை சிறையில் அடையுங்கள்” என்று காவலர்களுக்கு உத்தரவிட்ட அக்பர், பிறகு பீர்பல் பக்கம் திரும்பி, “என்னை மன்னித்து விடு பீர்பல்! நான் கூட உன்னை ஒருக்கணம் சந்தேகப்பட்டுவிட்டேன்” என்றார். 

தொடர்புடைய சிறுகதைகள்
சக்கரவர்த்தி அக்பர் பொது மக்களைத் தன் சபையில் நேரடியாக சந்தித்துக் குறைகளை விசாரிப்பார் என்ற செய்தி கேட்டு அந்தக் கிழவி பரபரப்படைந்தாள். சமூகத்தில் மிக செல்வாக்குடைய குல்ஷா என்ற பணக்கார பிரபுவின் முகத்திரையைக் கிழிக்க அவள் துடித்தாள். ஆனால், தான் அந்தப் ...
மேலும் கதையை படிக்க...
உடனே கிழவியை நோக்கி, “அம்மா! உன் பை என் இடமே இருக்கட்டும். நீ சொல்வது உண்மையானால் உன் பொற்காசுகள் உனக்குத் திரும்பக் கிடைக்கும்” என்றார். “அந்தக் கடவுள் சத்தியமாக நான் சொன்னது உண்மை!” என்று ஆணித்தரமாகக் கிழவி கூற, “அம்மா! நாளை ...
மேலும் கதையை படிக்க...
அன்றும் வழக்கம் போல் தர்பார் கூடியிருக்க, அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கையில் அவருடைய பணியாள் ஒருவன் ஒரு கூண்டுக் கிளியை அங்கு கொண்டுவந்து வைத்தான். கூண்டினுள்ளிருந்த பச்சைக்கிளி சிறகுகளை அடித்துக் கொண்டு ‘கீ’ ‘கீ’ என்று கத்தியது. அந்தக் கிளியை அன்புடன் பார்த்துக் ...
மேலும் கதையை படிக்க...
அந்த ஆண்டுக் கோடைக்காலம் மிகக் கடுமையாக இருந்தது. ஆறு, குளங்கள், கிணறுகள் வற்றிப் போயின. செடி, கொடிகள் வாடி வதங்கின. நண்பகலில் தெருக்கள் வெறிச்சோடிப் போயின. வெயிலுக்கு பயந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ஒரு நாள் அதிகாலையில், சக்ரவர்த்தி அக்பர், ...
மேலும் கதையை படிக்க...
ஒருநாள் காலையில் அக்பர் தன் அரண்மனை உப்பரிகையில் உலவிக் கொண்டிருக்கையில், அவர் பார்வை நந்தவனத்தின் மீது சென்றது. அது வசந்த காலம் என்பதால் மரங்களும், செடிகளும் வண்ண மலர்களுடன் பூத்துக் குலுங்க, அவற்றிலிருந்து வீசிய நிறுமணம் மனத்தைக் கிறங்கச் செய்தது. இளங்காலையில் ...
மேலும் கதையை படிக்க...
செப்புக் காசாக மாறிய தங்கக் காசுகள்
பொற்காசுகளை திருடிய செல்வந்தர்
யாருக்கு மரண தண்டனை?
கிணற்றுக்குள் வைர மோதிரம்
தண்டனைக்குத் தகுந்த குற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)