குரங்குகளின் உண்ணாவிரதம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 6,967 
 

குரங்குக் கூட்டம் ஒன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தன.

‘‘உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்னால், ஒரு காரியம் செய்யவேண்டும். விரதத்தை முடிக்கும்போது சாப்பிடுவதற்கான உணவை முதலிலேயே தயாராக வைத்துக் கொள்வோம்’’ என்றது கிழட்டு தலைமைக் குரங்கு.

மற்ற குரங்குகளும் தலையசைத்து அதை ஆமோதித்தன. உணவு தேட இளம் குரங்குகள் புறப்பட்டன. பெரிய பெரிய ருசியான வாழைப்பழங்களோடு அவை திரும்பி வந்தன.

‘‘உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கும் முன்பாகவே அவரவருக்கான பழங்களைப் பங்கு போட்டுக் கொண்டுவிடலாம். ஏனெனில் ஒருநாள் முழுக்கப் பட்டினி கிடந்தால் எவ்வளவு களைப்பாக இருப்போம் என்று நினைத்துப் பாருங்கள், அப்போது பங்கு போட்டுக்கொண்டு இருக்கவேண்டாமே…’’ என்றது தலைமைக் குரங்கின் மனைவி.

எல்லாக் குரங்குகளுக்கும் இந்த யோசனை பிடித்துப்போயிற்று. அனைத்தும் பழங்களைப் பங்குபோட்டுக்கொண்டன.

ஓர் இளம் குரங்கு எழுந்து நின்றது. ‘‘நாம் ஏன் ஒரு வாழைப்பழத்தின் தோலை, தின்பதற்கு வசதியாக இப்போதே உரித்துவைத்துக் கொள்ளக் கூடாது?’’ என்று கேட்டது.

‘‘ஆமாம், ஆமாம்… அப்படியே செய்யலாம்’’ என்று உரத்த குரலில் சொன்னது ஒரு குண்டுக் குரங்கு. வாழைப்பழங்களைப் பார்த்த உடனேயே அதற்குப் பசிக்க ஆரம்பித்துவிட்டது.

‘‘சரி’’ என்று தலையை அசைத்தது தலைமைக் குரங்கு. ‘‘பழத்தின் தோலை உரித்துக்கொள்ளலாம், ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை சாப்பிடக் கூடாது’’ என்றும் சேர்த்துக் கொண்டது.

எல்லாக் குரங்குகளும் பழத்தை உரித்து, மாலையில் உண்பதற்குத் தயாராக வைத்துக்கொண்டன.

ஒரு குட்டிக் குரங்கு தன் அப்பாவிடம், ‘‘அப்பா, நான் இந்தப் பழத்தை என் வாயில் வைத்துக் கொள்ளவா? ஆனால், அதை சாயந்திரம்வரை சாப்பிட மாட்டேன்’’ என்று அனுமதி கேட்டது.

‘‘ஏன் நாம் அனைவரும் ஒரு வாழைப்பழத்தை வாயில் வைத்துக்கொள்ளக்கூடாது? உண்ணாவிரதம் முடிந்த விநாடியே மென்று தின்ன வசதியாக இருக்குமே’’ என்றது அப்பாக் குரங்கு. ‘‘அதைச் சாப்பிடாமல் இருந்தால் சரி’’ என்றும் சேர்த்துக் கொண்டது.

எல்லாக் குரங்குகளும் உரித்த வாழைப்பழத்தை வாயில் வைத்துக்கொண்டன. அடுத்த குரங்கு, பழத்தைத் தின்கிறதா என்று ஒவ்வொரு குரங்கும் கண்காணித்தன. ஐந்தாவது விநாடி சொல்லிவைத் தாற்போல எல்லா வாழைப்பழங்களும் குரங்குகளின் தொண்டைக்குள் வழுக்கிக்கொண்டு போயின.

இப்படியாக முடிந்தது குரங்குகளின் உண்ணாவிரதம்!

வெளியான தேதி: 01 செப்டம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *