ஏன் சிரித்தது மீன்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 9,474 
 

மீன் விற்கும் பெண் அரண்மனைப் பக்கமாகப் போனாள். ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்த ராணி அவளை அழைத்தாள். அப்போது கூடையில் இருந்து ஒரு பெரிய மீன் வெளியே விழுந்து துள்ளியது. ‘‘இது ஆண் மீனா, பெண் மீனா? எனக்கு பெண் மீன்தான் பிடிக்கும் என்றாள் ராணி. உடனே மீன் ‘ஹாஹாஹா’ என்று சிரித்தது. ‘‘இது ஆண் மீன்’’ என்றாள் மீன்காரி.

ராஜா அந்தப்புரத்துக்கு வந்தபோது ராணி மிகவும் கோபமாக இருந்தாள். ‘‘மீன் சிரித்த கதையைச் சொன்னாள். ‘‘எவ்வளவு கிண்டலாகச் சிரித்தது தெரியுமா?’’ என்றாள்.

உடனே மந்திரியிடம் விஷயத்தைச் சொன்ன ராஜா ‘‘மீன் சிரித்த காரணத்தை ஆறு மாதத்துக்குள் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு மரண தண்டனை’’ என்றார்.

அமைச்சர் அறிஞர்களையும் கல்விமான்களையும் மந்திரவாதிகளையும் சந்தித்தார். யாராலும் மீன் சிரித்ததன் காரணத்தைச் சொல்ல முடியவில்லை. ஐந்து மாதங்கள் ஓடிவிட்டன.

அமைச்சரின் மகன் ‘‘நானும் இதுக்கு விடை கண்டுபிடிக்கப் பார்க்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு கால் போன போக்கில் அலைந்தான். வெகுதூரம் போய்விட்டான். வயதான விவசாயி ஒருவர் போய்க்கொண்டிருந்தார். ‘‘நான் உங்களோடு சேர்ந்து வரலாமா?’’ என்றான். அவரும் சம்மதித்தார்.

‘‘நாம் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தூக்கிக்கொண்டு போகலாமா?’’ என்று கேட்டான். பையன் முட்டாள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டார் விவசாயி.

சற்று நேரம் கழித்து ஒரு அறுவடைக்குத் தயாராக இருந்த கோதுமை வயல் ஒன்று வந்தது. தங்கக் கடல் போல் கதிர்கள் அசைந்தன. ‘‘இது தின்ற கோதுமையா, தின்னாத கோதுமையா?’’ என்று கேட்டான். பையன் படு முட்டாள் என்று நினைத்துக்கொண்டார் விவசாயி.

ஒரு காட்டுப் பகுதியில் நடந்துகொண்டி ருந்தார்கள் இப்போது. இளைஞன் ஒரு கத்தியை எடுத்து விவசாயி கையில் கொடுத்து ‘‘நமக்கு ஆளுக்கொரு குதிரை ஏற்பாடு பண்ணுங்க. கத்தி பத்திரம்’’ என்றான்.

இவன் சுத்த பைத்தியக்காரன்தான் போலிருக்கிறது. ஆனாலும் இவனைத் துரத்திவிட வேண்டாம் என்று நினைத்தார் விவசாயி. தொடர்ந்து நடந்தார்கள். ஒரு நகரம் வந்தது. அதைக் கடந்ததும் ‘‘ரொம்பப் பெரிய சுடுகாடு, இல்லையா?’’ என்றான். இவன் பேசுவது ஓரளவு பழகிவிட்ட விவசாயி ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்ச தூரம் போனதும் ஒரு சுடுகாட்டில் ஒரு பிணத்தைப் புதைத்த உறவினர்கள் இவர்களை அழைத்து சப்பாத்திகளும் காபியும் கொடுத்தார்கள். ‘‘ரொம்ப அழகான ஊர்..’’ என்று சுடுகாட்டைப் பார்த்துச் சொன்னான் இளைஞன். விவசாயி மறுபடி கடுப்பானார். ஆனாலும் ஆள் பார்க்க உயர்ந்த குடும்பத்தை சேர்ந்தவன் போல் இருப்பதால் அவனை தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். ‘‘பதிலுக்கு உங்கள் வீட்டு உத்தரம் உறுதியாக இருக்கிறதா?’’ என்று கேட்டான் இளைஞன்.

அவனை ஓர் அறையில் உட்காரவைத்துவிட்டு நடந்ததை எல்லாம் மகளிடம் சொன்னார் விவசாயி. ‘‘அட, அவர் பெரிய புத்திசாலியாக இருக்கிறாரே’’ என்று வியந்த மகள், எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லத் தொடங்கினாள்.

ஒருவரை ஒருவர் தூக்கிக்கொண்டு நடப்பது என்றால் மாறி மாறிக் கதை சொல்வது என்று அர்த்தம்.

கடன் வாங்கி விவசாயம் செய்திருந்தால் கடன் கொடுத்தவர் கோதுமையைக் கொண்டு போய் விடுவார். வேளாண்மை செய்தவருக்குப் பயன்படாது. அது ‘தின்ற கோதுமை’.

கத்தியைக் கொடுத்து குதிரை வாங்கச் சொன்னது, ஊன்றிக்கொண்டு நடக்க கம்பு வெட்டுவதைக் குறிக்கும்.

நகரத்தில் யாரும் இவர்களிடம் இன்முகம் காட்டாததால் அது இறந்த மனிதர்களின் கல்லறை. சுடுகாட்டில் இறந்தவர்களின் உறவினர்கள் இவர்களை உபசரித்ததால் அது அழகான ஊர்.

உத்தரம் உறுதியா? என்றால் அவனை வீட்டுக்கு அழைக்கும் அளவு வசதி இருக்கிறதா என்று பொருள். விளக்கங்களைக் கேட்டதும் விவசாயி ஆச்சர்யப்பட்டார். இளைஞனை அழைத்து வந்தார். எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டார்கள். ‘‘நான் பேசியதற்கெல்லாம் விளக்கம் கொடுத்த உங்கள் மகள் பெரிய புத்திசாலிதான்’’ என்று சொன்ன இளைஞன் அவளைப் பார்த்து மீன் சிரித்த பிரச்னையைச் சொன்னான்.

அதற்கு அவள் ‘‘ராணியின் அந்தப்புரத்துக்குள் யாரோ ஆண் இருக்க வேண்டும். அதனால்தான் அந்த மீன் கிண்டலாக சிரித்திருக்கிறது. இதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது’’ என்று சொன்னாள்.

இளைஞனும் ஒப்புக்கொண்டான்.

வேகமாக தன் ஊருக்குத் திரும்பி அப்பாவிடம் மீன் சிரித்த காரணத்தைச் சொன்னான்.

அவரும் அரண்மனைக்குச் சென்று ராஜாவிடம் சொன்னார்.

‘‘கிடையவே கிடையாது. அந்தப்புரத்தில் ஆண்கள் இருக்க மாட்டார்கள்’’ என்று மறுத்தார் ராஜா.

‘‘அதோ அந்தப் பள்ளத்தில் அந்தப்புரத்தில் இருக்கும் பெண்கள் எல்லாரையும் குதிக்கச் சொல்லுங்கள், உண்மை விளங்கிவிடும்’’ என்றார் மந்திரி

பல பெண்களும் பள்ளத்தைப் பார்த்ததும் ‘‘இதில் குதிக்க என்னால் முடியாது’’ என்றார்கள். ஒரு பெண் மட்டும் பள்ளத்தில் குதித்து மீண்டும் வெளியே வந்தாள். ‘‘அந்தப் பெண்ணைப் பிடித்து விசாரியுங்கள்’’ என்றார் மந்திரி. விசாரணையில் அவன் வேற்றுநாட்டு ஒற்றன். பெண் வேடம் போட்டுக்கொண்டு வந்திருக்கிறான் என்பது தெரியவந்தது. அந்தப்புரத்திலேயே ஓர் ஆணை வைத்துக்கொண்டு மீனில் பெண்தான் வேண்டும் என்று கேட்ட ராணியின் முட்டாள்தனத்தை நினைத்துத்தான் மீன் சிரித்தது!

வெளியான தேதி: 16 அக்டோபர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *