உண்மை நண்பன்

 

ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.இருவரும் எப்போதும் இணைபிரியாமல் இருந்தனர்.ஒருவன் பாலு. மற்றொருவன் சோமு.இருவரில் சோமு பாலுமீது உண்மையான அன்பு கொண்டிருந்தான்.எப்போதும் பொறுமையாகவும், பணிவுடனும் இருப்பான்.ஆனால் பாலு தன நட்புதான் உயர்ந்தது. தனக்குதான் நட்பைப் பற்றி அதிகமாகத் தெரியும் என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பான்.

ஒரு முறை இருவரும் பக்கத்து ஊருக்கு ஒரு விழாவுக்குப் போகவேண்டி இருந்தது.அதிகாலையிலேயே இருவரும் புறப்பட்டனர்.ஊருக்கு வெளியே ஒரு அடர்ந்த காடு இருந்தது இருவரும் அந்தக் காட்டின் நடுவே இருந்த ஒத்தையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினர்.
திடீரென்று ஊஊ என்று சோமு குரல் எழுப்பினான்.

அந்தக் குரலைக் கேட்டு திடுக்கிட்ட பாலு பட்டென்று சோமுவின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தான்.திடுக்கிட்ட சோமு சற்றும் கோபப்படாமல் “பாலு, என்னை ஏன் அடித்தாய் என்று தெரிந்து கொள்ளலாமா?”

“இப்படித் திடீரென்று கத்தினால் நான் பயந்து விட மாட்டேனா?இப்போது சொல் ஏன் அப்படிக் கத்தினாய்?”

இந்த பகுதியில் விலங்குகள் ஏதேனும் இருந்தால் விலகி ஓடட்டும் என்றுதான் குரல் எழுப்பினேன் என்று சொன்னவுடன் சோமு மெளனமாக நடந்தான்.அப்போது வழியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதில் இறங்கிய சோமு ஓடும் நீரில்.’தன்னைத் தன நண்பன் அடித்து விட்டான்’ என்று எழுதினான்.அதைப் பார்த்த பாலு ஒன்றும் புரியாமல் திகைத்தான்.

அவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு தொடர்ந்து நடந்தான் சோமு.

நடுக்காட்டில் நடந்து கொண்டிருந்தனர் இருவரும்.வழியில் ஒரு சேறு நிறைந்த குட்டை இருந்தது. அதன் கரை ஓரமாக நடந்து கொண்டிருந்த சோமு கால்வழுக்கிக் குட்டையில் விழுந்தான்.அதைப் பார்த்த பாலு அவனைக் காப்பாற்ற தவித்தான். சோமு கொஞ்சம் கொஞ்சமாக சேற்றுள் அமிழ்ந்து கொண்டிருந்தான். வேகமாகத் தன தலையில் கட்டியிருந்த தலைப் பாகையை அவிழ்த்து சோமுவிடம் வீசி அவனைப் பற்றிக் கொள்ளச் சொல்லி சேற்றிலிருந்து மீட்டான். அதற்காக சோமு ஆயிரம் முறை நன்றி சொன்னான்.உடையைச் சுத்தம் செய்துகொண்டு தொடர்ந்து நடந்தனர்.

சற்று த் தொலைவு சென்றவுடன் சோமு வழியில் தெரிந்த ஒரு பாறையில் சிறு கல்லால் தன நண்பன் காப்பாற்றியதை எழுதினான் புன்னகையுடன் அதைப் பார்த்தான் பாலு..

நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் பேசிச் சிரித்தவாறே காட்டுக்குள் நடந்தனர். பாலு கேட்டான்.”சோமு இப்போது பழைய கதையில் வருவது போல் கரடி வந்தால் என்ன செய்வாய்?”

“எனக்குத்தான் மரமேறத் தெரியுமே. மரத்தின்மேல் ஏறித் தப்பிவிடுவேன்.”

மரம் ஏறத் தெரியாத பாலு உடனே சிந்தனை வயப்பட்டான்.வாய் பேசாமல் நடந்தவனுக்கு அச்சம் ஏற்பட்டது.சோமு சொன்னது போல ஏதேனும் வன விலங்குகள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று நடுங்கினான்.

அவன் அஞ்சியது போலவே ஒரு சல சலப்பும் உறுமலும் கேட்டது.

சோமுவும் சட்டென நின்றான்.பாலுவின் கரத்தைப் பற்றிக் கொண்டான்.தரதரவென்று அவனை இழுத்துச் சென்று ஒரு பெரிய மரத்தை நோக்கி ஓடினான்.இப்போது ஒலி எதுவும் கேட்கவில்லை பாலுவுக்குப் பயம் நீங்கியதுபோல் இருக்கவே குரலை எழுப்பி சோமு என்று ஆரம்பித்தான்.சட்டென அவன் வாயைப் பொத்திய சோமு அந்தப் பெரிய மரத்தின் அருகே குனிந்து நின்றான்.மரமேறத் தெரியாத பாலுவைத் தன முதுகின்மேல் ஏறி மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு மரத்தின் உச்சிக்குப் போக உதவினான்.பின் தானும் ஏறி உச்சியில் அமர்ந்து கொண்டான்.காடு முழுவதும் நன்கு தெரிந்தது.பாலு எவ்வளவு பெரிய காடு என்று ஆச்சரியப்பட்டான்.

சோமு”பாலு, மெதுவாகப் பேசு.அருகே ஏதோ விலங்கு இருக்கு”என்றவுடன் பாலு வாயை இருக்க மூடிக் கொண்டான்.சற்று நேரத்தில் ஒரு புலி இரைக்காக அங்குமிங்கும் அலைந்தபடி செல்வதைக் கண்டனர்.பாலு அச்சத்தில் சோமுவைக் கட்டிக் கொண்டான்.
அந்தப் புலி வெகு தூரம் சென்று விட்டதை மரத்தின் மேல் இருந்து பார்த்தபின் இருவரும் கீழே இறங்கினர்.அச்சத்துடன் இருவரும் மிக வேகமாக ஊரைச் சென்றடைந்தனர்.

“சோமு, நான் புலிக்கு இரையாகாமல் என்னைக் காத்தாய்.நீயே உண்மையான நண்பன்.”

“நான் சேற்றில் அமிழ்ந்து போகாமல் என்னைக் காத்தாய் நீயே என் உண்மையான நண்பன்.”

“அதுசரி. முதல்முறை உன்னை அடித்தேன் அதை நீரில் எழுதினாய். மறுமுறை சேற்றிலிருந்து காப்பாற்றியதைக் கல்மேல் எழுதினாயே. அதுதான் ஏனென்று விளங்கவில்லை.”

“நண்பன்தவறாகத் தீங்கு செய்யும் பொழுது அதை நீர்மேல் எழுத்துப் போல மறந்துவிட வேண்டும். ஆனால் அவன் செய்யும் நன்மையைக் கல்மேல் எழுத்துப் போல ஒருகாலும் மறக்காமல் இருக்கவேண்டும்.அதற்காகத் தான் நீர்மேலும் கல்மேலும் அந்த செய்கைகளை எழுதினேன். ஒரு உண்மையான நண்பனை பொறுத்துப் போவதுதான் உண்மையான நட்பு.ஒருவர் பொறை இருவர் நட்பு என்பதுதான் நட்பின் இலக்கணம்.அத்துடன் அவன் செய்த நன்மைகளை எப்போதும் மறவாமல் நன்றியறிதலோடு நடந்து கொள்ள வேண்டும்.”என்று சோமு சொன்னவுடன் பாலு வேகமாக ஓடினான்.அவன் பின்னாலேயே குரல் கொடுத்தவாறு ஓடினான் சோமு.

சற்றுத் தொலைவில் இருந்த ஒரு பாறைமீது மற்றொரு கல்கொண்டு சோமு தன்னை புலியிடமிருந்து காப்பாற்றியதை எழுதத் தொடங்கினான் பாலு.அதைப் பார்த்த சோமு பாலுவை அன்புடன் கட்டிக் கொண்டான். இரண்டு நண்பர்களும் உண்மை அன்போடு சிரித்து மகிழ்ந்தனர்.

- நன்றி (http://chuttikadhai.blogspot.com/) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)