இயலாமை முயலாமை இல்லாத ஆமை!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 22,454 
 

அது அண்டார்டிகா பிரதேசம். அங்கு பென்குவின், பனிக்கரடி, ஆமை, ஸீல் ஆகியவை இருந்தன. அங்குள்ள பள்ளியில் அவை எல்லாமே படித்தன. டிசம்பர் மாதம் நெருங்கிக் கொண்டிருந்தது. அரை ஆண்டு முடிந்தபின்னர் அப்பள்ளியில் வருடாவருடம் ஓட்டப்பந்தயமும், மாறுவேடப் போட்டியும் வேறு சில விளையாட்டுகளும் வைத்து, அதில் வெற்றி பெறுவோர்க்கு பரிசுகள் வழங்கப்படும். முக்கியமாக ஓட்டப்பந்தயத்தில் எல்லா விலங்குகளுமே கலந்துகொள்ளும். ஒவ்வொரு வருடமும் பனிக்கரடியோ, பென்குவின்னோ, ஸீல்லோ முதலில் வந்து பரிசை தட்டிச்செல்லும். அதனால் ஆமைகளைப் பார்த்து அவை கேலி செய்ய ஆரம்பித்தன.

இயலாமை முயலாமை இல்லாத ஆமைஆமைகளும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளும். ஆனால் ஒருவருடம் கூட பரிசு பெற்றதில்லை. அங்கு படித்துக் கொண்டிருந்த டல்சி ஆமைக்கு இது வருத்தமாக இருந்தது. டல்சி ஆமைக்கு பிறவியிலேயே ஒரு கால் சிறிது ஊனமாக இருந்தது. டல்சி அதை எல்லாம் பொருட்படுத்தாமல் வகுப்பில் நன்றாக படித்து எப்பொழுதும் முதல் மாணவனாக வரும். மற்ற ஆமைகளும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளும். ஆனால் ஒருமுறை கூட பரிசை பெற்றதில்லை. இது டல்சி ஆமைக்கு வருத்தமாக இருந்தது. அதனால் இம்முறை தானே ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளலாம் என்று தீர்மானித்தது.

அன்று வகுப்பில் உடற்பயிற்சி ஆசிரியர் பென்குவின் மோனிகா, ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயரை குறித்துக் கொள்ள வந்திருந்தது.

பனிக்கரடிகளும் பென்குவின்களும் ஸீல்களும் பெயர் கொடுத்தன. டல்சி ஆமையும் பெயர் கொடுத்தது. வகுப்பில் எல்லாம் சிரித்தன. பென்குவின் மோனிகா, அவைகளை சத்தம் போட்டு அமைதிப்படுத்தி, “”டல்சி, நீ இதில் பங்கு பெறலாம். முயன்றால் வெற்றி உனக்குதான்..” என்று கூறிவிட்டுச் சென்றது.

“”டல்சி, நீ படிப்பிலே கெட்டிக்காரனாக இருக்கலாம். ஆனால் விளையாட்டிலே எங்களை மிஞ்சமுடியாது…”

“”உனக்கு ஏற்கெனவே ஒரு கால் ஊனம். அதிலே நீ ஓட்டப்பந்தயத்தில் கலந்துகிறது வேடிக்கையாக இருக்கு…” என்றது பனிக்கரடி.

“”நீ நடக்கும்போதே டான்ஸ் ஆடுவதுமாதிரி இருக்கும். இன்னும் நீ ஓடினா…

ஓரம்போ.. ஓரம்போ.. ஓரம்போ…

மூணுகால் ஆமை வருது ஓரம்போ…. ஓரம்போ…

மூணுகால் ஆமைவருது ஓரம்போ…. ஓரம்போன்னு பாடவேண்டிவரும்”

– இது பென்குவின்.

அப்படிப் பாடக்கூடாதுடா… ஓரம்போ ஓரம்போ “ஃ’ ஆமை வருதுன்னு பாடனுன்டா… என்று ஸீல் கூறியதும், எல்லாம் சேர்ந்து சிரித்தன. எல்லோரும் கேலிபேச, டல்சி ஆமைக்கு அழுகையே வந்துவிட்டது.

அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிய டல்சி ஆமை, தன் அம்மாவிடம் நடந்தவைகளைச் சொல்லி அழுதது. அம்மா ஆமை, டல்சியை சமாதானப்படுத்தி, “”சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். உனக்கு ஒரு கால்தானே ஊனம். லேசாக சாய்த்து நடக்கிறாய். எத்தனையோ பேர் உன்னைவிட மோசமாக நடக்கமுடியாமல் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நீ சந்தோஷப்படு. ஆனால் படிப்பில் நீதானே முதலில் நிற்கிறாய். நீ போட்டியில் கலந்துகொள். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. அதோடு நமக்கு முயலாமை; இயலாமைன்னு பேர் இல்லையே, ஆமைன்னுதானே பெயரு. நீ நன்கு பயிற்சி செய். கடவுள் உனக்கு துணையாக இருப்பார்…” என்று கூறியது.

டல்சிக்கு சிறிதுசிறிதாக அம்மா கூறியதில் நம்பிக்கை வந்தது. கட்டாயமாக ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வமும் வந்தது.

மறுநாள் டிசம்பர் மாத பனியையும் பார்க்காமல் காலையில் எழுந்து தன் வீட்டுத் தோட்டத்தில் ஓடி பயிற்சி செய்ய ஆரம்பித்தது.

அரையாண்டு முடிந்து ஓட்டப்பந்தயத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. ஓட்டப்பந்தயத்தன்று எல்லோரும் வந்திருந்தனர். உடற்பயிற்சி ஆசிரியர் மோனிகா ஆமை, மைக்கில் பேச ஆரம்பித்தது.

“”குழந்தைகளே.. இன்று பனி அதிகமாக உறைந்துள்ளதால் போட்டியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பனி நன்கு படர்ந்துள்ளதால், ஓடிக்கொண்டும் குதித்துக் கொண்டும் சறுக்கிக் கொண்டும் போகலாம். கீழே ஓட்ஸ் மரக்கட்டைகளை வரிசையாக நட்டு வைத்துள்ளோம். ஓடிச்சென்று அம்மரக்கட்டைகளில் ஒன்றை முதலில் தொடுபவர்களுக்கு பரிசு!” என்றது மோனிகா பென்குவின்.

பனிக்கரடிகளும் பென்குவின்களும் ஸீல்களும் டல்சி ஆமையும் வரிசையாக ஓட்டப்பந்தயத்திற்கு தயாராக நின்றன. உடற்பயிற்சி ஆசிரியர் “ஒன்…டூ… த்ரி…’ என்று சொன்னவுடன் எல்லாம் ஓடஆரம்பித்தன. பனிக்கரடி, பென்குவின்கள், ஸீல்கள் எல்லாம் முன்னால் சென்றுவிட்டன. எவ்வளவு விரைவாக ஓடியும் டல்சி ஆமையால் முன்னால் செல்ல முடியவில்லை. பாதி தூரத்திலேயே டல்சி ஆமைக்கு மூச்சிறைக்க ஆரம்பித்தது. முயன்றால் வெற்றி நிச்சயம். கடவுள் உனக்கு துணை நிற்பார்… என்று அம்மா கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. உடற்பயிற்சி ஆசிரியர் கூட இன்று நன்கு பனி உறைந்திருக்கிறது… என்று கூறியதுகூட நினைவுக்கு வந்தது. ஓடுவதைவிட சறுக்கிக் கொண்டே போய்விடலாம் என்று கடவுளை நினைத்து திடீரென்று குப்புற விழுந்தது. அவ்வளவுதான். ஆமையின் முதுகு, ஓடு ஆதலால், சரசரவென்று வழுக்கிக் கொண்டே கீழே இறங்க ஆரம்பித்தது.

இருபக்கமும் வேடிக்கை பார்க்கிறவர்கள் “கமான்… டல்சி, கமான் டல்சி….’ என்று கூறுவது காதில் கேட்டது. தான் முன்னால் போகிறோம் என்ற உணர்வோடு நம்பிக்கை எழுந்தது. பனிக்கரடிகளும் பென்குவின்களும் ஸீல்களும் பின்னால் வந்து கொண்டிருந்தன. அவ்வளவு வேகத்தில் ஆமை முன்னேறிக் கொண்டிருந்தது. சறுக்கிவந்த வேகத்தில் பாதையின் இறுதியில் வரிசையாக நட்டு வைத்திருந்த ஒரு ஓட்ஸ் மரக்கட்டையின் மீது மோதி நேராக விழுந்தது.

எல்லாம் கைதட்டி ஆர்ப்பரித்தன. முதல் பரிசு டல்சி ஆமைக்கு வழங்கப்பட்டது. கேலி பேசி, போட்டியில் கலந்து கொண்ட விலங்குகள் தலைகுனிந்தன. கேலி பேசிய பனிக்கரடி, பென்குவின், ஸீல் எல்லாம் டல்சி ஆமையிடம் மன்னிப்பு கேட்டன. டல்சி ஆமையும் அவைகளை மன்னித்தது.

பரிசுபெற்ற டல்சி ஆமைக்கு அம்மா ஆமை முத்தமழை பொழிந்தது.

– எம்.ஜி.விஜயலெஷ்மி கங்காதரன் (பெப்ரவரி 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *