கலைஞரும் சிறுகதைகளும்! – யுவகிருஷ்ணா

 

அரசியல்தான் தான் விரும்பித் தேர்ந்தெடுத்து பணிபுரியும் துறை என்று கலைஞர் அடிக்கடி சொன்னாலும், “அரசியல்/ஆட்சி அழுத்தங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களிலும் அவருடைய ஆர்வமான செயல்பாடு இருந்திருக்கிறது. தன்னை முதன்மையாக பத்திரிகையாளர் என்று அவர் பெருமையாக அடையாளப் படுத்திக் கொண்டாலும், இதழியல் மட்டுமின்றி சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், திரைப்படம், தன்வரலாறு, பேச்சு என்று கிளைவிரித்து தமிழ் பரப்பியிருக்கிறார். கலைஞரின் தமிழ்ப் பணிகளில் அதிகம் பேசப்படாதவையாக அவரது சிறுகதைகள் அமைந்திருக்கின்றன.

மிகச்சரியாக கலைஞர் பிறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் தமிழில் ‘சிறுகதை’ என்கிற வடிவமே உருவாகிறது. பாரதியாரின் ‘ஆறிலொரு பங்கு’ என்கிற சிறுகதையையே, தமிழ் சிறுகதை உலகின் முதல் கதையாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கலைஞர், தன்னுடைய 14வது வயதிலிருந்து வாசிப்பு, எழுத்து என்று தீவிரமாக செயல்படுகிறார். அப்படியிருக்க தமிழில் அவரால் முதல் 25ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளைத்தான் தொடக்கத்தில் வாசித்திருக்க முடியும். ஒட்டுமொத்தமாக அப்போது இருநூறு, முன்னூறு சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தாலே கூட அது அபூர்வம்தான்.

தமிழ் சிறுகதைகள், நவீன வடிவத்தை எட்டாத சோதனைக்குழாயில் இருந்த காலக்கட்டத்தில் இயங்கியவர்களில் கலைஞரும் ஒருவர். எனவே, இன்றைய காலக்கட்டத்தில் சிறுகதைகளில் இலக்கிய வாசகர்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய அழகியல், கச்சிதமான வடிவம் மற்றும் சிறுகதைகளுக்கான கறாரான இலக்கணம் போன்றவற்றை கலைஞரின் அந்தக் காலக்கட்டத்துப் படைப்புகளில் தேட முற்படுவது அபத்தம்.

மேலும், ‘திராவிட இலக்கியம் என்றாலே தீட்டு’ என்கிற தமிழ் நவீன இலக்கியப் பண்பும் கலைஞரின் சிறுகதைகள் அதிகம் பேசப்படாததற்கு கூடுதல் காரணம். திராவிட இயக்கச் சிந்தனைகளின் பரப்பியல் உத்திகள் குறித்த போதுமான ஆய்வுகள், தமிழ் இலக்கியத்தில் மிகவும் அரிது என்பதில் இருந்து இதில் புரிந்துக் கொள்ளலாம். திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களை எழுத்தாளர்களாக ஏற்றுக் கொள்பவர்களையே ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் நாட்டாமைத்தனமான பாசிஸம் இன்றும் தொடர்கிறது. இத்தகைய சூழலில் கலைஞரின் சிறுகதைகள் குறித்த துல்லியமான விமர்சனங்களை நாம் எதிர்ப்பார்ப்பதே வீண்தான்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர், இரா.அரங்கண்ணல், ஏவிபி ஆசைத்தம்பி, இளமைப்பித்தன், இரா.இளஞ்சேரன், கே.ஜி.இராதாமணாளன், தில்லை மறைமுதல்வன், எஸ்.எஸ்.தென்னரசு, டி.கே.சீனிவாசன், முரசொலி மாறன், ப.புகழேந்தி, திருச்சி செல்வேந்திரன் ஆகியோரின் நூற்றுக்கும் மேலான தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, ‘திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ என்று சீதை பதிப்பகம் கடந்த 2012ல் திராவிட இயக்க நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் வெளியிட்டிருக்கிறது.

இன்றைய நவீன தமிழ் எழுத்தாளர்களோ / விமர்சகர்களோ இப்படியொரு பெருந்தொகுப்பு வந்திருப்பதையாவது அறிந்திருப்பார்களேயானால் அது அதிசயமே. ‘திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு இலக்கியம் வராது’ என்று மட்டையடி அடிக்கும் பார்ப்பன எழுத்தாளர்களோ அல்லது அவர்களை அடிவருடும் சூத்திர எழுத்தாளர்களோ இவற்றில் சில கதைகளையேனும் வாசித்திருந்தால் குறைந்தபட்சம் தங்கள் அறியாமையாவது உணர்ந்திருப்பார்கள்.

இன்றைய நவீன இலக்கியவாதிகளில் கலைஞரை அதிகம் வாசித்த மிக சிலரில் பிரபஞ்சனும் ஒருவர். வாசித்திருப்பதால் மட்டுமே அவரால் கலைஞரின் சிறுகதைகளுக்கு அடிநாதமாக இருக்கக்கூடிய சமுதாய உணர்வை கண்டுகொண்டு பாராட்ட முடிகிறது.

“ஒரு கருத்து, சிந்தனை அல்லது அனுபவத்தை சமூகம் சார்ந்து வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பாகவே கலைஞர் தன்னுடைய சிறுகதைகளை பயன்படுத்தி இருக்கிறார். கருத்து இல்லாத, சமூக உணர்வு சற்றுமில்லாத ஒரே ஒரு கலைஞரின் சிறுகதையை கூட நான் வாசித்ததில்லை” என்று சொல்லியிருக்கிறார் பிரபஞ்சன்.

எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடா தமிழ்ப்பணி புரிந்த கலைஞர் தற்போது இல்லாத இச்சூழலிலாவது அவரது எழுத்துகள் மீள்வாசிப்பு செய்யப்படுவதும், அவை குறித்த துல்லியமான ஆய்வுகள் நடத்தப்படுவதுமே நேர்மையான செயல்பாடாக இருக்க முடியும். காலம் கடந்தாவது இந்தச் செயலை நவீன இலக்கியவாதிகள் செய்வார்கள் என்று நம்புவோம்.

கலைஞரின் சிறுகதைகளுக்கு வருவோம்.

கலைஞரின் 21வது வயதில் ‘கிழவன் கனவு’ என்கிற சிறுகதைத் தொகுப்பை 1945ல் வெளியிட்டிருக்கிறார். இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள், எந்தெந்த இதழ்களில் வெளிவந்தன என்பது குறித்த தகவல்கள் சரியாக தெரியவில்லை. அடுத்து எட்டு ஆண்டுகள் கழித்து 1953ல் ‘நாடும் நாகமும்’, 1956ல் ‘தாய்மை’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். பின்னர் ‘கண்ணடக்கம்’, ‘அரும்பு’, ‘வாழமுடியாதவர்கள்’, ‘சங்கிலிச்சாமி’, ‘தப்பிவிட்டார்கள்’ உள்ளிட்டத் தலைப்புகளில் பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.

1971ல் பெரும் தொகுப்பாக முக்கியமான கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்’ என்று வெளியிடப்பட்டது.

1940ல் தொடங்கி 1970களின் இறுதி வரையில் கலைஞர் ஆர்வத்தோடு கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் சிறுகதைகள் எழுதுவதில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். அதன் பிறகு நாவல், ஆய்வுநூல்கள் என்று அவரது ஆர்வம் திசைமாறிய நிலையில் மிகவும் அரிதாகவே சிறுகதை எழுதியிருக்கிறார். இயக்கம் சார்ந்த இதழ்களிலேயே கலைஞரின் சிறுகதைகள் பெரும்பான்மையாக இடம்பெற்றிருக்கின்றன. அவை தவிர்த்து கொஞ்சம் அரிதாகவே வெகுஜன இதழ்களில் எழுதியிருக்கிறார்.

அவர் எத்தனை சிறுகதைகள் எழுதியிருக்கிறார் என்பதற்கு துல்லியமான கணக்கு வழக்கு இல்லை. தோராயமாக இருநூறு கதைகள் எழுதியிருக்கலாம் என்று தெரிகிறது.

சினிமா, நாடகம், பேச்சு என்று தன்னுடைய மற்ற ஆற்றல்களை எல்லாம் எப்படி தான் ஏற்றுக் கொண்ட கொள்கை அரசியலுக்கு பயன்படத்தக்க வகையில் மாற்றிக் கொண்டாரோ, சிறுகதைகளையும் அப்படியேதான் உபயோகித்திருக்கிறார். திராவிட இயக்கத்தின் கருத்துக் கூறுகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பாகதான் அவர் சிறுகதைகளையும் பார்த்திருக்கிறார்.

இராமர் என்ன என்ஜினியரா?” என்று ராமர் பாலம் விவகாரத்தில் கலைஞர் செய்த கேலி, நாடு முழுக்கவே கடுமையான அதிர்வலைகளை எழுப்பியது. இந்துத்துவ ஆதரவாளர்கள் கலைஞரின் மறைவுக்குப் பிறகும் இதற்காக அவரை மன்னிக்கத் தயாராக இல்லை. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய ‘விஷம் இனிது’ கதையிலேயேகூட இராமர் எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்தி இருக்கிறார். “இராம பிரானை விட இந்த விஷம் இனிது” என்கிற கூரிய விமர்சனத்தோடு கூடிய வசனம் அந்த சிறுகதையில் வெளிப்படுகிறது. கடவுள் மறுப்பு என்கிற கலைஞரின் பண்பு, அவரது சிறுகதைகள் பலவற்றிலும் சம்பவங்களின் ஊடாகவும், வசனங்களின் வெளிப்பாடாகவும் பளிச்சென்றே அமைந்திருக்கிறது.

‘கண்ணடக்கம்’ என்கிற கதையில் பிளேக் நோய் பரவி, ஊரெல்லாம் பிணம். காளிபக்தன் மனசுடைந்துப் போய் காளிதேவியிடம் நியாயம் கேட்பான். “கருணைக்கடலா நீ? பேய்க்கும் உனக்கும் என்ன வேறுபாடு?” இதை வாசிக்கும்போதே உணர்ந்திருப்பீர்கள். கலைஞரின் பெரும்பாலான கதைகளின் நாயகர்கள் ‘பராசக்தி’ குணசேகரன்களேதான். ‘நடுத்தெரு நாராயணி’ என்கிற சிறுகதையில் ‘பராசக்தி’ கல்யாணியைகூட நீங்கள் கண்டுக்கொள்ளலாம்.

கலைஞரின் சிறுகதைகளில் தனித்துவமானதாக அவரது வாசகர்களால் என்றும் நினைவுகூறப்படுவது ‘குப்பைத்தொட்டி’ என்கிற அவரது சிறுகதை. சர்ரியலிஸம், இருத்தலியல்வாதம், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம், மாந்திரீக யதார்த்தவாதம் போன்ற மேற்கத்திய கோட்பாட்டு முறைகள் தமிழ் நிலத்தில் பேசப்படுவதற்கு வெகுகாலம் முன்பே, ஒரு குப்பைத்தொட்டி மூலமாக சமகால சமூகத்தை பிரதிபலிக்கும் சிறப்பான வடிவ உத்தியை அச்சிறுகதையில் கலைஞர் பயன்படுத்தி இருக்கிறார்.

இடதுசாரி இலக்கிய இதழான ‘செம்மலர்’, இச்சிறுகதையை ‘சிகரம் தொட்ட சிறுகதை’ என்கிற வரிசையில் மறுபிரசுரம் செய்து கொண்டாடியது. கலைஞரின் இலக்கியத்தரம் குறித்து நவீன இலக்கியவாதி ஒருவர் கேள்வி எழுப்பியபோது, கலைஞர் இந்தக் கதையைதான் தன்னுடைய இலக்கியத் திறனுக்கு சான்றாக முன்வைத்தார்.

இச்சிறுகதையைப் பற்றி கேள்விப்பட்டு குஷ்வந்த்சிங், ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ இதழில் வெளியிட்டார். அக்கதையில் வெளிப்பட்டிருந்த புராண எதிர்ப்புக் கருத்துகளுக்காக ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ அலுவலகத்தை முற்றுகையிட்டு பிரச்சினை செய்தார்கள்.

அப்போது, அக்கதையை பாராட்டி மூட்டை மூட்டையாக வந்திருந்த கடிதங்களை அவர்களுக்கு முன்பாகக் கொட்டி, “இக்கதையை ஏற்றுக் கொண்டவர்களும் இந்துக்கள்தான்” என்று மூக்குடைத்தார் குஷ்வந்த்சிங். பின்னர் ‘குப்பைத்தொட்டி’, ஐரோப்பிய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டது. “குப்பைத்தொட்டி இங்கே குப்பையாக ஒதுக்கப்பட்டாலும் பிற மொழிகளில் கொண்டாடப்படுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர். சிறுகதையின் வடிவங்களில் பரிசோதனை செய்துப் பார்ப்பது கலைஞருக்கு மிகவும் பிடித்தமானது. ‘நரியூர் நந்தியப்பன்’ என்கிற சிறுகதையை கடிதவடிவில் எழுதியிருப்பார். அவருடைய சிறுகதைகளில் சாமியார்களை தோலுரிக்கும் சம்பவங்கள் ஏகத்துக்கும் அமைந்திருக்கும். ‘நளாயினி’, புராண எதிர்ப்புப் பேசும். ‘சந்தனக் கிண்ணம்’, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரின் நியாயத்தை எடுத்துச் சொல்லும்.

‘எழுத்தாளர் ஏகலைவன்’ என்கிற சிறுகதையில், “சிறுகதை என்றால் வெறும் பொழுது போக்குக்காகப் படிப்பதற்காகவா எழுதப்படுவது? அதில் ஏதாவது ஒரு கருத்து, சமுதாயத்துக்குத் தேவையானதாக அமைக்கப்பட வேண்டாமா?” என்று தான் ஏன் சிறுகதை எழுதுகிறார் என்பதற்கான நியாயத்தை கதையின் போக்கிலேயே சொல்லியிருப்பார்.

சிறுகதை என்றால் என்னவென்று இந்த பின்நவீனத்துவத்துவக் காலக்கட்டத்திலும் ஏதோ ஒரு வாசகனால் கேட்கப்படுகிறது. ஏதோ ஓர் எழுத்தாளர், தான் அறிந்ததை விளக்கிக் கொண்டிருக்கிறார்.

சிறுகதைக்கான கலைஞரின் இலக்கணம் மிகவும் எளிமையானது.

”ஒரு காட்சி அல்லது நிகழ்வைப் பற்றி, மற்றவர்களுக்கு எடுத்து விளக்கிச் சொல்லும்போது, அவரவர் நிலைக்கேற்பவும், அறிவு வளர்ச்சிக்கேற்பவும், விளக்குபவருக்கும், விளக்கத்தைக் கேட்பவருக்குமிடையே ஒரு பாலமாகப் பாவிக்கப்படுவதுதான் சிறுகதை”

– யுவகிருஷ்ணா – நன்றி (https://www.luckylookonline.com/2019/09/blog-post.html)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *