அம்மா

 

அந்தப் பேருந்து நிறுத்தத்தை விட்டுப் புறப்படுவதற்கு மனமில்லாமல் அங்கிருக்கும் நிழற்குடை இருக்கையிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான் சண்முகசுந்தரம். எத்தனையோ பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் அவனைக் கடந்து போய்க்கொண்டிருந்தன. அவற்றையெல்லாம் கவனிக்காத சண்முகசுந்தரத்தின் விழிகள் வானத்தையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தன.

விண்மீன்களுக்கு நடுவே மேகங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தது முழு நிலவு. அதிலிருக்கும் மரத்துக்கடியில் உட்கார்ந்திருக்கும் பாட்டி வடை சுட்டு விற்றுக்கொண்டிருந்தாள்.

அவன் சிறுவனாக இருக்கும்போது அவன் அம்மா அவனுக்கு நிலவைக் காட்டிச் சொன்ன கதை இது. இன்றைக்கும் கூட அந்த பாட்டி இரவானால் நிலவில் வடை சுட்டு விற்றுக்கொண்டிருக்கிறாள்.

என்ன ஒரு அதிசயம், பாட்டி இன்னும் பாட்டியாகவே இருக்கின்றாளே!. அவளுக்கு மூப்பு என்பதே கிடையாதா? உட்கார்ந்த இடத்தைவிட்டு நகரவே மாட்டேன் என்கிறாளே? என்றெல்லாம் சண்முகசுந்தரம் தன் அம்மாவிடம் கேட்பான்.

‘அவுங்க வானத்துல இருக்குறவங்க. அதனால அவுங்களுக்கு வயசே ஆகாதுப்பா….’ என்று அவனுக்கு விடையளிப்பாள் அவன் அம்மா. அவள் இவ்வாறு சண்முகசுந்தரத்துக்கு விளக்கம் சொல்லி சரியாக நாற்பது ஆண்டுகள் கடந்துபோயிருந்தன. அதற்குள் என்னென்னமோ மாற்றங்கள். ஏற்ற இறக்கங்கள், இழப்புகளை அவன் குடும்பம் சந்தித்துவிட்டது.

ஆனாலும் நிலவுப் பாட்டி மட்டும் வடை சுட்டு விற்றுக்கொண்டிருந்தாள். அவளிடமிருந்து எந்த மாற்றத்தையும் சண்முகசுந்தரத்தால் காணமுடியவில்லை.

பரவாயில்லை, அவளுக்கு பிள்ளைகள், பேரன் பேத்திகள் இல்லை போலும். அதனால்தான் இத்தனைக் காலம் அவளால் இவ்வளவு சுதந்திரமாக நிம்மதியாக இருக்க முடிகிறது என்று தோன்றியது அவனுக்கு.

இப்படி எந்த இடர்ப்பாடுகளும் இல்லாத ஒரு தனிமையான அழகான வாழ்க்கை அம்மாவுக்குக் கிடைத்திருந்தால் இந்நேரம் எவ்வளவு சந்தோசமாக இருந்திருப்பாள். கல்யாணம், கணவன், பிள்ளை, பேரன், பேத்திகள்…. பாவம் அவள்.

இத்தனை பேருக்கும் தோன்றாத் துணையாய் இருந்த அம்மா…அவனுக்கு உதடுகள் நடுங்கின. கண்கள் சிவந்து நீர் தாரைத் தாரையாக வழிந்தோடியது.

அவன் உட்கார்ந்திருந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து சரியாக இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது அவன் அம்மாவை சேர்த்துவிட்டு வந்த முதியோர் பாதுகாப்பு இல்லம்.

தற்போது அவன் இருக்கும் சூழலில் அவன் செய்தது சரியான செயல்தான். என்றாலும் அவன் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எழுபதைத் தாண்டிய அவன் அம்மாவை…இன்றைக்கோ நாளைக்கோ என்று மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ஒருத்தியை… இயற்கை உபாதைகளைக் கூட உணரமுடியாத நிலையில் உள்ள தன் அம்மாவை விட்டுவிட்டு போவதற்கு மனமில்லாமல் தான் அந்த பஸ்டாண்டில் அமர்ந்துகொண்டிருக்கிறான் சண்முகசுந்தரம்.

அவளுக்கு பார்த்த மருத்துவமும் பலனளிக்கவில்லை. வயதாகிவிட்டாலே அப்படித்தான் என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள் மருத்துவர்கள். அவர்கள் பார்வையில் அவள் ஒரு கிழம். வயதானவள். அவ்வளவுதான். ஆனால் சண்முகசுந்தரத்திற்கு அவள் அப்படியில்லை. போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

பறவைகள் தம் அலகுகளில் இரைகளைக் கவ்வி வந்து கூட்டிலிருக்கும் தம் குஞ்சுகளுக்கு ஊட்டுவதுபோல அவனுக்கு ஊட்டி வளர்த்தவள் அவள். அவன் வாழ்ந்துகொண்டிருப்பது அவள் காட்டிய உலகத்தில். அவள் கண்ட கனவில். அவள் ஆசையோடு விதைத்து நீரூற்றி, பராமரித்து, பாதுகாத்து, பார்த்துப் பார்த்து வளர்த்த விருட்சம் அவன். அந்த விருட்சத்தின் கீழ் அவள் கொஞ்சநாள் இளைப்பாற நினைப்பதில் என்ன தவறிருக்கிறது. அவள் விரும்பவில்லை என்றாலும் ஒருவரின் துணையின்றி நாட்களைக் கழிக்க முடியாது என்பதுதான் அவள் நிலை.

எத்தனை எத்தனை நாட்கள் அவள் மட்டும் வெயிலில் நனைந்துகொண்டு சண்முகசுந்தரத்திற்கு மட்டும் குடையாக இருந்திருக்கிறாள் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். அவள் கைப்பிடித்துக் காட்டிய வழிகள் தான் அவன் வாழ்க்கைப் பயணத்திற்கு அடித்தளமாகின என்பதை சண்முகசுந்தரத்தால் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியவில்லை.

அவனுக்குச் சளி பிடித்தால் கூட சஞ்சளப் படுபவள். சிறு காய்ச்சல் வந்தாலும் மருத்துவமனைக்குப் போய், வரும் வழியில் காளிக் கோயில் சாமியாரிடம் மந்திரம் போட்டுவிட்டு, அதுவும் போதாதென்று அதிகாலை ஐந்து மணிக்கு தர்க்காவிற்குத் தூக்கிக்கொண்டு ஓடுபவள். ஞாயிற்றுக் கிழமைப் பிரசங்கத்திற்கு ஊருக்குள் வரும் பாதிரியாரை வீட்டிற்குக் கூப்பிட்டு வந்து சண்முகசுந்தரத்தின் தலையில் கைவைத்து ஜெபிக்கச் சொல்லி கண்கலங்கி நிற்பவள்.

இப்படியெல்லாம் ஆளாக்கிய ஒருத்தியை அரவணைத்துப் பார்க்க முடியாமல் முதியோரில்லத்தில் விட்டுவிட்டு வருவதற்கு யாருக்குத்தான் மனம் வரும். சண்முகசுந்தரத்திற்கு வந்துவிட்டதே!

தந்தையைப் பறிகொடுத்து இரண்டாண்டு கூட முடியாத நிலையில் பக்கவாதம் வந்து படுக்கையாகிவிட்ட அம்மாவையும் பறிகொடுத்துவிடுவோமோ என்ற பயம் சண்முகசுந்தரத்திற்கு. கண்ணுங் கருத்துமாய் வைத்துக் காப்பாற்றப்பட வேண்டியவள் என்று தன் அம்மாவைத் தன் அரவணைப்பிலேயே வைத்துக்கொண்டான் சண்முகசுந்தரம்.

அவளைப் பராமரிப்பதற்கு அவன் மட்டும் போதாது. அவன் மனைவியின் பங்களிப்பும் வேண்டுமல்லவா? சண்முகசுந்தரத்துக்குத் தான் அவள் தாய். அவன் மனைவிக்கு கூடவா அவள் தாய். சண்முகசுந்தரத்தின் அம்மா அப்படித்தான் நினைத்தாள். ஆனால் சண்முகசுந்தரத்தின் மனைவி அப்படி ஏதும் நினைத்ததாகத் தெரியவில்லை. சனியன் எப்போது ஒழிந்து தொலையுமோ என்றுதான் நாள்தோறும் முனகுவாள்.

காலையில் கண்விழிக்கும் சண்முகசுந்தரம், தன் இரண்டு பிள்ளைகளைக் கூட பொருட்படுத்தாமல் தன் அம்மாவை எழுப்பி அவளுக்குப் பல் தேய்த்துவிட்டு, கழிவறைக்குத் தூக்கிப் போய் உட்கார வைத்து, குளிப்பாட்டி, உடை மாற்றிவிட்டு அவள் போதுமென்று சொல்லுமளவிற்கு உணவு ஊட்டிவிட்டு அரக்கப் பரக்க கிளம்பிப் போவான் அலுவலகத்திற்கு.

போனவன் திரும்பிவரும் வரை அவளைக் கவனிப்பாரின்றி வாடி வதங்கிப்போய் கிடப்பாள் சண்முகசுந்தரத்தின் அம்மா. அவளை முன்வைத்துப் பல நேரங்களில் தன் மனைவியிடம் சண்டைபோட்டிருக்கிறான் சண்முகசுந்தரம்.

அவளிடமிருந்து “என்னால முடியாது….எங்கனா காப்பகத்துல சேத்து உட்ருங்க” என்ற பதில்தான் பலமுறை வந்திருக்கிறது.

காலம் போகப் போக அவளிடம் அவன் அம்மா குறித்து விவாதம் செய்வதையே நிறுத்திவிட்ட சண்முகசுந்தரம், அவளுக்குத் தேவையான பணிவிடைகள் அனைத்தையும் தான் ஒருவனே செய்யத் தொடங்கிவிட்டான். இருந்தாலும் அவளை நாள்முழுவதும் அருகில் இருந்து பார்த்துக்கொள்வது அவனுக்கு இயலாத காரியமாக இருந்தது. அவன் செய்யும் வேலை அப்படி.

அலுவலகத்தில் இருக்கும் சண்முகசுந்தரத்திற்கு பணிச்சுமை ஒருபக்கமும் தன் அம்மாவைப் பற்றிய நினைவுகள் ஒருபக்கமும் அழுத்திக்கொண்டே இருக்கும். சிலநேரம் மனம் பொறுக்காமல் தன் மனைவிக்குப் போன் போட்டு அம்மாவின் நிலையை அறிந்துகொள்ள நினைக்கும் சண்முகசுந்தரத்திற்கு ஏன் அவளுக்கு போன் செய்தோம் என்று ஆகிவிடும். அந்தளவிற்கு அவள் பேச்சுக்கள் இருக்கும். அவன் வீட்டிற்குப் போகும்வரை தனக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட தனியறையில் இயற்கை உபாதைகளுக்கிடையே நனைந்து கிடப்பாள் சண்முகசுந்தரத்தின் அம்மா.

ஒருநாள் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த சண்முகசுந்தரம் நேராக அவள் அறைக்குப் போனான். அவள் இருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்துபோய் அப்படியே அலேக்காக அவளைத் தூக்கி வந்து பாத்ரூமில் வைத்து வெந்நீரால் குளிப்பாட்டினான். அந்த வெந்நீரோடு சண்முகசுந்தரத்தின் கண்ணீரும் சேர்ந்து கொட்டியது. அதில் அவள் உடல் முழுவதும் நனைந்துகொண்டிருந்தது.

அவளது அனுமதி இல்லாமலேயே அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை அப்புறப்படுத்த முடிவுசெய்துவிட்டான் சண்முகசுந்தரம். அவளும் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் நிலையில் இல்லை. இருந்தாலும் தன் மகன் எடுக்கும் முடிவை எந்த அம்மாதான் வேண்டாமென்று தடுத்து நிறுத்திவிடுவாள்.

அவளுக்குப் புது உடை மாற்றிவிட்ட சண்முகசுந்தரம் வாடகைக்கு ஒரு காரைப் பிடித்து நேராக அந்த முதியோர் காப்பகத்திற்குப் போய் அவளை ஒப்படைத்துவிட்டு, அவளுக்கு உரிய தொகையினைக் கட்டிவிட்டு வந்தவன் பேருந்து பிடித்து தன் வீட்டிற்குச் செல்வதற்கு மனமில்லாமல் அந்த பேருந்து நிறுத்தத்திலேயே உட்கார்ந்துகொண்டான்.

உட்கார்ந்திருந்தால் பிரச்சினை முடிந்துவிடப்போவதில்லை என்று சொன்னது சண்முகசுந்தரத்தின் மனம். நேரம் ஆக ஆக தன் பிள்ளைகளின் நினைப்பு வேறு அவன் மனதை வந்து உறுத்தியது. மனதை ஒருவழியாகத் தேற்றிக்கொண்ட சண்முகசுந்தரம் அடுத்துவரும் பேருந்தைப் பிடிப்பதற்குத் தயாரானான்.

அப்போது அந்த வழியாக ஒரு சிறுவன் அவன் தாயின் கையைப் பிடித்துக்கொண்டு வானத்தில் இருக்கும் நிலவைப் பார்த்தவாறு தன் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே சண்முகசுந்தரத்தைக் கடந்து போனான்.

அவர்களையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் சண்முகசுந்தரம்.

அப்போது தூரத்தில் ஏதோவொரு பேருந்தின் ஹாரன் சத்தம் சண்முகசுந்தரத்தின் காதில் வந்து விழுந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
எனக்கு வயது தற்பொழுது சுமார் ஐம்பத்தாறு இருக்கும். அதற்கு மேலாகவும் இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம். தோராயமாகத்தான் சொல்கிறேன் ஐம்பத்தாறு என்று. வாழ்க்கையில் பசியையும் பட்டினையையும் மட்டுமே தெரிந்து வைத்திருந்த என் அம்மாவிற்கு நாள் நட்சத்திரம் தெரிந்திருக்கவில்லை. அதனால்தான் என் பிறந்த ...
மேலும் கதையை படிக்க...
அவனுக்கு அந்தப் பேருந்து நிலையம் புதிதல்ல. ஆனால், அவளுக்கு அந்தப்பேருந்து நிலையம் புதிது. அவள் அப்பேருந்து நிலைய நிழற்குடை ஒன்றில் உட்கார்ந்துகொண்டிருந்தாள். அவனும் அவளுக்கு எதிர்த்தார்போல் இருந்த நிழற்குடையில் அமர்ந்துகொண்டிருந்தான். அவன் பேருந்தின் வருகைக்காக காத்திருந்தான். அவள் அதற்காக காத்திருக்கவில்லை என்று ...
மேலும் கதையை படிக்க...
எப்போது விடியும் விடியுமென்று காத்துக்கிடந்த நதினிக்கு இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. தூங்குவதற்கும் அவள் மனம் சம்மதிக்கவில்லை. சற்று கண்ணசரலாம் என்று இமையை எப்படியாவது கஸ்டப்பட்டு மூடினாலும் அவைகள் சிறகை விரித்துப் பறக்கும் பறவைபோல் திறந்துகொள்கின்றன. அந்த சிறிய அறைக்குள் நடந்து பார்த்தாள். ...
மேலும் கதையை படிக்க...
தன் பேரப்பிள்ளையைப் பார்த்த மகிழ்ச்சியில் ரத்தினத்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இந்தக் காலைப்பொழுதில் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை அவள் எதிர்ப்பார்க்கவில்லை. வீடு தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தவனைத் தன் வீடுவரை அழைத்துவந்து விட்டுவிட்டுச் சென்ற கலாவை ...
மேலும் கதையை படிக்க...
திரும்பத் திரும்ப அதையேதான் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள். அந்தக் காவல் துறை அதிகாரியும் மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வியையேதான் கேட்டுக்கொண்டிருந்தார். விசாரணைக்கு இடையில் அவளுக்கு ஒரு தேநீர் கிடைத்தது. அதை வாங்கிக் குடித்துவிட்டு தனது முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு தலைமுடியை அவிழ்த்து உதறி ...
மேலும் கதையை படிக்க...
முருகானந்தத்தால் ராஜசேகரன் சொன்னதை நம்பவே முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் வரிந்துகட்டிக்கொண்டு நேராக ஊருக்கு வெளியே இருக்கும் அந்தக் கடையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். அவர்களோடு ராமலிங்கம், குப்புசாமி, மகாதேவன், மனோகரன் என்று பலபேர் வந்து கலந்துகொண்டார்கள். முருகானந்தமும் ...
மேலும் கதையை படிக்க...
கவின், அவன் தாத்தா வீட்டிற்கு வந்து இன்றோடு ஒரு மாதம் முடிவடைகிறது. இன்னும் இரண்டு தினங்களில் அவன் பள்ளிக்குப் போக வேண்டும். அதனால் சென்னையிலிருந்து வந்த அவன் அப்பா அவனை அழைத்துக்கொண்டு போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அந்தக் கிராமத்தில் ஒரு மாதம் எப்படி ...
மேலும் கதையை படிக்க...
பாடம்
ஓர் இரவுப்பொழுதில்
விவாகரத்து
ஓடிப்போனவள்
திருடன்
மதுக்கடை
மனசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)