வைராக்கியம்

 

ன்று சியாமாவுக்கு இறைச்சி வாங்கிவரும் ஆள் வரவில்லை. வயலில் கரும்பு வெட்டுகிறார்களாம், போய் விட்டான்.

தேசிய நெடுஞ்சாலையில் அந்த டவுனுக்கு தெற்கே ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி அமைந்திருந்த தொழில்சாலையில் எங்கள் இல்லமும் இருந்ததால் ஏதொரு விஷயத்திற்கும் எந்த ஒரு சாமான் வாங்கவும் நான் டவுனுக்குத்தான் போக வேண்டிருந்தது.

சியாமாவை நாயாக வளர்க்கவில்லை, பெற்ற பெண்ணுக்கு மேலாக வளர்க்கிறேன் என்பது என்னை அறிந்த எல்லோருக்குமே தெரிந்த விஷயம்.

சியாமா சின்னக் குட்டியாய் இருந்த காலத்தில் கால்நடை வைத்தியர் ‘அல்சேஷன் நாய்களுக்கு பின்னக்கால்கள் சற்று பலவீனமானவை; அதனால் மாட்டிறைச்சி போட்டு வாருங்கள்’ என்று சொல்லி இருந்தபடி நான் இதுநாள்வரை சியாமாவுக்கு மாட்டிறைச்சி போட்டே வளர்த்திருந்தேன்.

அதை டவுனுக்குச் சென்று வாங்க ஒரு தனி ஆள்.

அதை சமைக்க தனிபாத்திரங்கள், அடுப்பு, எட்ஸட்ரா.

“உங்க சியாமா திகுதிகுனு ஜோராய் வளர்ந்திருக்காளே!” என்று அவளைப் பார்ப்பவர் அதிசியப்பட்டால் நான் உடனே தற்பெருமை பல்லவியை ஆரம்பித்து விடுவேன். ‘என்ன சும்மாவா? ஒரு கிலோ பீப் போடறேயனாக்கும், அரிசி கிடையாது, தனியாய் வேகவைத்துப் போட்டுடுவேன். அவளுக்கும் அதுதான் பிடிக்கும்.’-இப்படி.

யார் வீட்டுக்காவது நான் போக நேர்ந்து அவர்கள் வீட்டு நாய் சோனியை இருப்பதைக் கண்டால் போதும், அவர்கள் கேட்காமலே நான் என் பல்லவியை ஆரம்பிப்பதும் உண்டு. “என்னது, இப்படி ‘ஞே’னு இருக்கு உங்க நாய்! பீப் போடுங்கோ. சும்மா தளதளனு இருக்கும். என் சியாமக்குக்கூட.”-இப்படி.

அன்று மாட்டிறைச்சி வாங்கும் பையன் வரவில்லை. என்ன செய்வது?

டிரைவரைக் கூப்பிட்டேன்.

“ஏம்பா, உனக்கு பீப் விக்கிற இடம் தெரியுமா?”

தெரியும் என்று தலையாட்டினான் அவன்.

“சரி, வண்டி எடு. எனக்கு டவுன்லே கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிண்டு சியாமவிக்குக் கரி வாங்கிண்டு வந்திடலாம்.”

“ஐயையோ, அங்கெல்லாம் நீங்க வர வேண்டாங்க.”

“ஏம்பா?”

“அங்கெல்லாம் வந்தா உங்களுக்குப் பிடிக்காதுங்க.”-இழுத்தான் அவன்.

நான் சிரித்தேன். “நான் காலேஜில் ஜுவாலஜி படிச்சவப்பா..தவளை, முயல், புறா ஏன் சுறாமீன் வரைக்கும் வெட்டியிருக்கேன். எனக்கொண்ணும் இதெல்லாம் அசிங்கம் கிடையாது. நீ வண்டி எடு.”

என் உத்தரவுக்கு அவன் கீழ்ப்படிந்தான்.

***

நெடுஞ்சாலையில் சென்று அந்த டவுனை முக்கால்வாசி கடந்ததும், வளம் பக்கம் தெரிந்த கப்பி சாலையில் வண்டியைத் திருப்பி ஓட்டினான் டிரைவர். சுமார் நூறு அடிகள் சென்றதும், இடப்புறத்தில் ஒரு பெரிய குட்டை. பச்சைப்பசேலென்ருந்தது. அந்த நிறம் பாசியாலோ, இல்லை வேறு எதாலா என்று எனக்குக் தெரியவில்லை. குட்டையைக் கடந்ததும் மேட்டில் சின்னதாய் ஒரு ஒட்டுக் கட்டிடம். அதன் கதவுகள், ஜன்னல் வழியாக மாலை மாலையை தொங்கும் மாமிசத் துண்டங்கள் என் கண்களில் தெரிந்தன.

அந்த கட்டிடத்திற்கு முன்பாக இருபது அடிகள் தள்ளி வண்டியை நிறுத்தினான் டிரைவர்.

‘குப்’பென்ற வாடை, கவிச்ச நாற்றம்.

பணத்தை டிரைவரிடம் கொடுத்து ‘சுருக்க வா’ என்றேன்.

சாலைக்கு வலது பக்கத்தில் ஒரு பெரிய சேரி. காரை கண்டதும் எழு எட்டு குழந்தைகள் ஓடி வந்து வண்டியைச் சுற்றிக் கொண்டன.

எல்லாம் கோவணாண்டிகள். சிக்குப்பிடித்த தலை

சில சின்னப் பையன்கள் மூக்கிலிருந்து சொல்லி வைத்தாற் போல் சளி ஒழுகிக்கொண்டிருந்தது. ஒரிருவனுக்கு சதா சளி வழிந்து வழிந்து மூக்கிற்கும், வாய்க்கும் இடையே உள்ள இடைவெளி புண்ணாகி செக்கச் செவேலென்று இருந்தது.

திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்த ஒரு பையன் ‘டேய் ரேடியோ பெட்டி இருக்குதுடா’ என்றான்.

மற்றவர்கள் முண்டிக்கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தார்கள்.

பிறகு என்னை ஒரு விநோதப் பிராணியைப் பார்ப்பது போலப் பார்த்தார்கள்.

ஒரு பையன் கையிலிருந்த குச்சியால் ‘ங்ரீங்’ என்று வண்டியில் கொடு இழுத்தான்.

“டேய் அந்தாண்ட போங்க.” கரி வாங்கச் சென்ற டிரைவர் வெறும் பாத்திரத்துடன் வந்தான்.

“இப்பத்தான் வெட்டியிருக்காங்கம்மா. உள்ளே கூட்டம் அதிகமாயிருக்கு. துண்டம் போடா பத்து நிமிஷம் ஆகுமாம்.”

டிரைவரைக் கண்டதும் ஓடுப்போன பையன்களில் சிலர் மேட்டில் இறங்கி அதே பச்சைத் தண்ணீரில் ஒவ்வொருவராக தொப், தொப் என்று விழுந்தார்கள்.

“ஜில்லுங்குதுடா”

“ஐஸாலகடி”

“நீயும் வாடா”

அந்த அழுக்குத் தண்ணீரை வாயால் கொப்பளித்து வெளியில் துப்பியவாறே அவர்கள் ஆனந்தமாய் குளித்தார்கள். சிறுவர்களுக்கு அருகில் ‘புஸ்’சென்று உப்பிக்கொண்டு பலூன் மாதிரி எதுவோ கிடந்தது.

“என்னப்பா அது?” டிரைவரைக் கேட்டேன்.

“காலையில் வெட்டின மாட்டுத் தோலுங்க”

எனக்கு ஏனோ பாவமாய் இருந்தது, அதைப் பார்க்க. பார்த்துக் கொண்டிருக்கையிலேயே உள்ளே கட்டிடத்திலிருந்து சிகப்புத் துண்டு கட்டின ஒரு ஆள் வந்தான். அவன் கையில் கத்தி மாதிரி ஒன்று. மேட்டில் இறங்கி, தண்ணீரில் கிடந்த அந்த மாட்டுத் தோலை அருகில் கிடந்த கல்மேல் போட்டு பரபரவென்று தேய்த்தான். வெள்ளையும், சிகப்புமாய் திரவம் வழிந்தோடியது.

குப்பென்று அதே கவிச்ச வாடை.

எனக்குச் சங்கடமாயிருந்தது.

“ஹய்,ஹய்”

சப்தம் கேட்டு திரும்பினேன்.

எழும்பும் தோலுமாய் இருந்த மாட்டை இழுத்துக் கொண்டு முண்டாசு கட்டின ஆள் ஒருவன் வந்தான்.

கட்டிடத்துக்கெதிரில் அதை நிறுத்திவிட்டு உள்ளே போனான்.

“இன்னிக்குக் கூட்டம் அதிகம்னு இன்னொரு மாட்டையும் வெட்டறாங்க போலிருக்கு.” நான் கேட்காமலேயே டிரைவர் சொன்னான்.

நான் திடுக்கிட்டேன்.

“இங்கயேவா வெட்டுவா? அதுக்குன்னு தனி இடம் இருக்கு இல்லே?”

“அங்கேயும் வெட்டுவாங்க. இங்கேயும் வெட்டுவாங்க. அதுதான் நான் உங்களை வரவாணாம்னு சொன்னேங்க”

அவன் சொன்னதை ஊர்கிதப்படித்துவது போல உள்ளே போனவன் திரும்பி வந்தான். அவன் கையில் ஒரு இரும்பு உலக்கை, ஒரு பட்டாக் கத்தி.

நான் வெலவெலத்துப் போனேன்.

தடக்கென்று காரிலிருந்து இறங்கி “இந்தாப்பா, இந்தாப்பா…இப்போ வெட்டாதே, ஒரு அஞ்சு நிமிஷம் பொறுத்துக்கோ…நான் போயிடறேன்.” என்று பதறியவண்ணம் குரல் கொடுத்தேன். பிறகு டிரைவர் பக்கம் திரும்பி “ஓடு, சீக்கிரம் வாங்கிண்டு வா..பெரிய துண்டாயிருந்தாலும் பரவாயில்லை…” என்று பரபரத்தேன்.

டிரைவர் என் நிலை புரிந்தவனாய் உள்ளே ஓடினான்.

என் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து நின்ற அந்த மனிதனையும், அவன் அருகே நின்ற அடிமாட்டையும் நான் பார்த்தேன்.

இளஞ்சிவப்பு நிறப் பசு.

உடம்பு சதைப்பற்றே இல்லாமல் குச்சியாய் நின்றது.

அதன் மூக்கில் மூக்கணாங்கயிறு.

இரண்டு கொம்புகளிலும் பூசபட்டிருந்த பச்சை, சிகப்பு வர்ணங்கள் நான்கு நாட்களுக்கு முன் கழிந்த மாட்டுப் பொங்கலை நினைவூட்டியது.

அடிமாடா விற்கப் போகும் மாட்டுக்கு பூஜை செய்து மாட்டுப் பொங்கல் கொண்டாடியிருக்கிறான், அதன் சொந்தக் காரன்!

அருகில் நின்ற மனிதனின் கைகளில் இருந்த உலக்கையையும், பட்டாக் கத்தியையும் பார்த்த பசு என்ன நினைத்துக் கொண்டிருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

இன்னும் சில நிமிஷங்களில் சாவதற்காக இங்கே நிற்கிறோம் என்பது அதற்குப் புரிந்திருக்குமோ?

அந்த கரிய கண்களில் ஏக்கமா பரவிக் கிடக்கிறது?

அதன் முகத்தில் ஏனிந்த பரிதாபம்?

அதைப் பார்க்கப்பார்க்க என்னும் வேதனை பொங்கியது.

‘பொறுமையில் பசு போல’ என்கிறார்களே, அது இதனால் தானா?.

பொறுமை என்றால் இதுதானா?

இவை எதையும் உணராமல் ஜடமாய் நிறுக்கும் மனிதன்.

ஐயோ!

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.

ஹரனை அடித்து டிரைவரைத் துரிதப்படுத்தினேன்.

அவனும் வந்துவிட்டான்.

அந்தப் பச்சைக் குட்டை.

அதில் மிதக்கும் ஆயிரமாயிரம் அசுத்தங்கள்.

அவர்கள் சுகாதார நிலை.

அந்த மாட்டின் அவல நிலை. எல்லாமாகச் சேர்ந்து என்னை வாட்ட, காரில் ஏறி அமர்ந்தேன். ஓ காட்!வென் வில் அவர் கண்ட்ரி இம்ப்ருவ்? டிரைவரால் வண்டியை அந்த சின்ன சாலையில் திருப்ப முடியாததால், நூறு அடிகளையும் ரிவர்ஸிலேயே போக முயன்றான்.

நன்கு அடிகள்கூடப் போயிருக்க மாட்டோம்! திரும்பினவள்,

அந்த சம்பவத்தைப் பார்த்தேன்.

அந்த அமானுஷ்ய கதறலைக் கேட்டேன்.

“அ..ம்..மா…”

நான் கேட்டுக் கொண்டபடி ஐந்தே நிமிஷங்களில் பொறுத்து விட்டு தன் வேலையைக் கவனித்துவிட்டான் அவன்.

மாட்டின் தலையை வேறொரு ஆள் பிடித்துக்கொள்ள, முண்டாசு கட்டினவன் இரும்பு உலக்கையால் மாட்டின் கொம்புகளுக்கிடையில், அதன் நேன்றிப் பொட்டில் ஓங்கி ஒரு அடி வைக்கவும்…

“அ..ம்..மா…” பரிதாபமாய் அலறிய அந்தப் பசு கண்கள் பிதுங்க, வில் நுரை தள்ள, கைகால்கள் கோணலாய் இழுக்க, பின்பக்கம் சாணம் தள்ள, பொத்தென்று கேலி விழுந்தது.

இரண்டாவது, மூன்றாவது அடி.

பரத்திக்கொண்டு கேலி விழுந்த மாட்டின் கைகால்கள் துடித்துக் கொண்டிருக்கையிலேயே மற்றவன் பட்டாக் கத்தியை அதன் கழுத்தில் வைத்து அறுக்க ஆரம்பித்தான்.

கார் கிளம்பி, ரிவர்ஸில் சென்று, நெடுஞ்சாலையை அடைய எடுத்துக் கொண்ட 3 அல்லது 4 நிமிடங்களில் இத்தனையும் நடந்துவிட்டன.

ஷாக் அடித்தவளைப் போல, பிரமை பிடித்துப் போனேன் நான்.

பார்த்த காட்சியின் அதிர்ச்சி தாளாமல், வேதனையைத் தாங்க முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் பிரவாக மெடுத்தது.

“இதுக்குத்தாமா உங்களை வரவேணாம்னு நான் சொன்னேன்.” தேற்றும் குரலில் டிரைவர் பேசினபோது நான் ஒன்றும் கூறவில்லை. வீட்டிக்குப் போனேன். இவரிடம் நான் கண்டதை சொல்லி குமறி அழுதேன்.

“என்ன அநியாயமாய் கொல்லுகிறார்கள்! இப்படி சித்தரவதை செய்த கொள்ள வேண்டும்? மயக்கமடையச் செய்து கொல்லக் கூடாதா?” என்றெல்லாம் அரற்றினேன்.

முடிவாக “இனிமேல் சியாமாவுக்கு மாட்டு மாமிசம் வேண்டாம். இந்த மாதிரி சித்தரவதைப்பட்டு சாகும் மாட்டின் கறி வேண்டாம்…” என்று சொன்னபோது இவர் “நீ சியாமாவுக்கு கறியை நிறுத்தியதால் இந்த மாதிரி கொல்லுவது நிற்கப் போகிறது என்று நினைகிறாயா? சியாமாவின் சாப்பாட்டைப் கெடுக்கப் போகிறாய்…அவ்வளவுதான்…” என்று பதில் கூறினபோதும் நான் என் முடிவை மாற்றவில்லை.

***

றுநாள் மாட்டிறைச்சி வாங்க வந்த பையனிடம் ‘உனக்கு இனி வேலை இல்லை’ என்று அனுப்பிவிட்டேன்.

காலையில் முட்டையும் பாலும் சாப்பிட்ட சியாமா மதியம் இரண்டு மணிக்குக் கொல்லைப்பக்கம் போய் உட்கார்ந்ததும் ‘உனக்கு இங்கு சோறு இல்லை’ என்று வேலைகாரி சொல்வது காதில் விழ உள்ளே எழுந்து போனேன். ஒரு ஆழாக்கு சாதம், கரண்டி பருப்பு, நல்ல நெய் இவைகளை விட்டுப் பிசைந்து சியாமா கிண்ணத்தில் போட்டேன்.

ஆவலுடன், பசியுடன், ஓடிவந்த சியாமா முகர்ந்து பார்த்து விட்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டு கொல்லைப் பக்கத்துக்கு, வழக்கமாய் கறி சமைக்கும் இடத்துக்கே போய்விட்டாள்.

எனக்கு கோபம் வந்தது.

‘இருக்கட்டும், பசி அதிகமானால் தானே வந்து சாப்பிடுகிறாள்’ என்று முணுமுணுத்தேன்.

அன்று முழுதும் சியாமா கொலைபட்டினிதான்.

மறுநாள் மாலை பாலைக்கூடத் தொட மறுத்ததும் என் ஆத்திரம் அதிகமாயிற்று. ‘என்ன பிடிவாதம் இவளுக்கு’ என்ற எண்ணம் எழுந்த அதே சமயத்தில் அருமையாய் வளர்த்த பெண் பட்டினி கிடக்கிறாளே என்ற துக்கமும் எழுந்தது.

மதியம் ஆவதற்குள் சியமாவின் தவிப்பு அதிகமாயிற்று.

கொல்லைப் பக்கத்திலேயே பழி கிடந்தாள்.

காரணமில்லாமல் குலைத்தாள்.

என் காலையே சுற்றிச்சுற்றி வந்தாள்.

கண்களில் ‘அம்மா பசிக்கிறது’ என்ற ஏக்கம்.

பால் சாதம், வெறும் பால், ரொட்டி, முட்டை, மீன் எண்ணெய் ஒன்றையும் முகர்ந்துகூடப் பார்க்க மறுத்தாள் சியாமா.

அன்று மாலை அவளைப் பட்டினி போட்டுவிட்டு என்னால் சாப்பிட முடியவில்லை, நானும் பட்டினி கிடந்தேன்.

இரண்டாம் நாள். உடல் சோர்ந்து போனாலும் சியாமாவின் பிடிவாதம் மட்டும் தளரவில்லை.

என் பிடிவாதம்தான் சற்று இளகியது.

டிரைவரை அழைத்தேன்.

“ஏம்பா, ஆட்டை எப்படி வெட்டுவாங்க…? மாடு மாதிரியா?”

“இல்லையங்க, அது ஒரே வெட்டுதான்.”

எனக்குள் சின்ன திருப்தி.

“சரி! அப்படினா ஓடிப்போய் ஒரு ரூபாய்க்கு ஆட்டுக்கறி வாங்கிண்டு வா..”

“ஒரு ரூபாய்க்கு பத்தாதுங்க…கம்மியா இருக்கும்…”

அவன் இரண்டு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு வந்ததில் எண்ணி எட்டு துண்டங்கள் இருந்தன.

“என்ன டிரைவர், இத்தனை கம்மியாய் இருக்கு?”

“ஆமாங்க ஆட்டுக்கறி கிலோ பத்து ரூபாங்க…மாட்டுக்கறி கிலோ ஒரு ரூபாய்தானே…”

அம்மாடி அத்தனை வித்தியாசமா?

ஒரு கிண்ணம் நிறைய சாப்பிட்டுப் பழகியிருந்த சியமாவுக்கு அந்த எட்டுத் துண்டங்கள் எப்படி போதும்?

மறுநாள் மூன்று ரூபாய்க்கு வங்கி வரச் செய்தேன். அதுவும் போதவில்லை.

நான்கு நாளில் பாதியை இளைத்துவிட்டாள் சியாமா. நான் என்ன பண்ணுவேன்? னென்று இரவு என்னால் தூங்கவே முடியவில்லை.

அரை வயிறுடன் சதா சியாமா ‘ம்..ம்..’ என்று முனகிக் கொண்டே கொஞ்சுவது என்னால் தாள முடியாததாக இருந்தது.

“உன் பாடு; உன் பெண் பாடு” என்று ஐவரும் என்னிடம் ஒன்றும் பேசவில்லை. வீட்டு ஆட்களுக்கெல்லாம் என் மேல் கோபம், அசட்டுப் பிடிவாதத்தால் சியாமாவைப் பட்டினி போடுகிறேன் என்று.

***

யோசித்தேன். திரும்பத்திரும்ப யோசித்தேன்.

மாலையில் கொசு உபத்திரவத்திற்காகவும் எறும்பு தொல்லைக்காகவும் ப்ளிட் அடித்தது நினைவுக்கு வந்தது. துடித்து, துடித்து கொசுக்கள் கீழே விழுந்தபோது ‘தொலைந்தாயா?’ என்று நான் சந்தொசப்பட்டேனே! ப்ளிட் நொடி தாங்காமல் எறும்புக் கூட்டமும் ‘கன்னா பின்னா’வென்று ஓடியபோது சிரித்தேனே! நான் மட்டும் என் சௌகரியத்திற்காக உயிர்களைக் கொல்லவில்லையா? அந்த மாட்டுக்காரன் அவன் வயிற்றை வளர்ப்பதற்காகத்தானே மாடுகளை தனக்குத் தெரிந்த விதத்தில் கொல்லுகிறான்.

யோசிக்கயோசிக்க என் வைராக்கியம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைவது எனக்கே புரிந்தது.

சியமாவைப் பார்த்தேன். ‘அம்மா! உன் வைராக்கியத் திற்காக என்னை ஏன் பட்டினி போடுகிறாய். எனக்கு அப்படிப் பழக்கம் பண்ணிவிட்டு இப்போது இல்லையென்றால்…?’ என்று நினைக்கிறாளோ?

ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். இன்று காலை “அந்தப் பையனை அழைத்து வா…மாட்டிறைச்சி வாங்கி வரணும்” என்று வேலைகாரனிடம் சொன்னபோது என் வைராக்கியம் முழுமையாகவே கரைந்துவிட்டது.

ஸ்மசான வைராக்கியம் என்பார்கள். வேண்டியவரை சுடுகாட்டில் வைக்கும்போது ‘சீ என்ன வாழ்கை, இனி தாமரை இலைத் தண்ணீராக வாழ்வேன்’ என்று வைராக்கியம் எடுப்பார்களாம். உப்பும் தண்ணீரும் ஊற ஊற, நாட்கள் செல்லச் செல்ல, வாழ்வின் ஆசாபாசங்களில் மனம் ஈடுபட வைராக்கியத்தையும் கோட்டை விடுவார்களாம்.

ப்ரசவ வைராக்கியம் என்பார்கள். ப்ரசவ வலி படும் நேரத்தில் ‘சே! இனி ஆயிசுக்கும் வேறு பிள்ளை வேண்டாம்’ என்று வைராக்கியம் கொள்ளுவார்களாம். பிள்ளை பிறந்த வலி மறந்த உடனேயே அடுத்தது ‘பெண் வேண்டும்’ என்று கணவனிடம் கேட்டு வைராக்கியத்தையும் கோட்டை விடுவார்களாம்.

என்னுடைய வைராக்கியம் இதில் எதைச் சேர்ந்தது?.

- வெளிவந்த ஆண்டு: 1974 

தொடர்புடைய சிறுகதைகள்
ராட்சஸர்கள்
அத்தை ஊஞ்சலில் ஒரு காலை மடித்து, இன்னொன்றைத் தொங்கவிட்டபடி அமர்ந்து இருந்தார்.கைத்தறிப் புடைவை, வெள்ளை ரவிக்கை, கழுத்தில் ருத்திராட்ச மாலை, நெற்றியில் விபூதிக் கீற்று, அழுந்த வாரி கோடாலி முடிச்சாக முடியப்பட்ட வெள்ளைத் தலைமுடி.பார்வை மட்டும் வழக்கம்போலவே, பால்கனி வழியாகத் தெரிந்த ...
மேலும் கதையை படிக்க...
நான் ஒரு மெடிக்கல் ரெப்ரெஸன்டேடிவ். வெள்ளை உடை உடுத்தி, டை அணிந்து, மருந்து சாம்பிள்கள் அடங்கின கருப்பு கைப்பையை சுமந்து கொண்டு, ஊர் ஊராய்ச் சுற்றுவது என் வேலை. என் அலங்காரத்தையும், கைப்பையையும் பார்த்தாலே, நான் என்ன வேலை செய்பவன் என்று முகத்தில் எழுதி ...
மேலும் கதையை படிக்க...
அவள் விடிகாலையில் கண்விழித்தபோது ஆரஞ்சு நிற சூரியன் ஜன்னல் பக்கத்தில் நின்று உள்ளே வரலாமா என்று கேட்டுக்கொண்டிருந்தான். காலைக் காற்று இதமாக இருந்தது. எழுந்திருக்க மனமில்லாததுபோல அவள் திரும்ப கண்களை மூடிக்கொண்டாள். ட்ருவ்வி..ட்ருவ்வி...ட்ருவ்வி......... நிசப்தமான அந்த நிமிஷத்தில் திடும்மென ஒரு பறவையின் குரல் பெரிசாய் கேட்க அவள் ...
மேலும் கதையை படிக்க...
நடராஜன் தன் போட்டோ ஸ்டுடியோவின் மாடி வராந்தா குட்டை கைப்பிடிச் சுவரில் சாய்ந்து வண்ணம் தெருவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். அன்று காலையிலிருந்தே அவனுக்கு வேலை எதிர் பார்க்காத விதமாய் ஒன்று மாற்றி ஒன்று சரியாய் இருந்தது. முதல் நாள் கல்யாண முகூர்த்த நாள் ...
மேலும் கதையை படிக்க...
எப்படி? எப்படி இது சாத்தியம்? யாராலும் நம்பவே முடியவில்லை. வியப்பும் தவிப்புமாகத் திணறினார்கள். அக்ரஹாரத்துக் காற்றில் சற்று முன் பலாமரத்து வீட்டம்மா சொன்ன சேதி கும்மியடித்துக் கொண்டிருந்தது. அய்யன் குளக்கரை அரச மரம் கூட இலைகளை சலசலத்துப் பேசிக்கொண்டது. பலாமரத்து வீடு, அந்த ...
மேலும் கதையை படிக்க...
ராட்சஸர்கள்
தாய்மை..ஒரு கோணம்
அணில்கள்
சோறு ஆறுதுங்க
பலாமரத்து வீடு கதை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)