Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வெளிச்சம்

 

”ஆயிரந்தான் இருந்தாலும் பொம்பள அட்ஜஸ் பண்ணித்தான் போவணும்மா…”

எரிச்சலாக இருந்தது அவளுக்கு… ‘இந்த வார்த்தைகளையே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கேட்டுக் கொண்டிருக்கப் போகிறோம்’ என்று. ‘கிராமத்துக் கூட்டம் இப்படி வரப்போவது முன்னமே தெரிந்திருந்தால்… எங்கேயாவது தொலைந்திருக்கலாம்’ என்றும் தோன்றியது. நல்லவேளை பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள்.

”நீ போய் கொஞ்ச நாளைக்கு அவனோட இரும்மா. பழையபடி இருந்தா பார்த்துக்கலாம்…”

- பெருசு தொடர்ந்தது.

எதைப் பார்த்துக் கொள்வார்கள்? ஆம்பளை என்ற ஒரே காரணத் துக்காக அனுசரிக்க வேண்டும் என்பவர்கள், என்ன பார்த்துக் கொள்ளப் போகிறார்கள்?

”இல்ல மாமா… நீங்க சொல்ற மாதிரி அட்ஜஸ் பண்ணியெல்லாம் பாத்தாச்சு. அவருக்கு தாஞ்செய்றது தப்புனே தெரியல. இனிமேயும் புள்ளைங்கள வெச்சுட்டு செரமப்பட முடியாது. அதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.”

”அது சரிம்மா… நாளைக்கு தனியா நீ சிரமப்படக் கூடாதுல்ல..? அதையும் யோசிக்கணும்ல..?”

- தனது நரைத்த தலையை தடவிக்கொண்டே கூறினார் கூட்டத்தில் இருந்த மற்றொரு பெரியவர்.

”இப்பவே நான் தனியாத்தான சிரமப்பட்டுட்டிருக்கேன்..?”

அவளது பதிலை கூட்டம் ரசிக்கவில்லை.

”பதிலுக்கு பதில் பேசிக்கிட்டே இருந்தா என்னம்மா அர்த்தம்..? சேர்ந்து வாழணும்னு நெனக்க மாட்டியா..?”

கணவன் ராஜேந்திரன் மீது எரிச்சலாக வந்தது. தேசப் பாதுகாப்புப் பணியில் உள்ள அவன், விடுமுறையில் வரும் மாதங்களில் எல்லாம் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டும், எத்தனை எளிதாக ஏமாற்றிவிட்டான்?! அப்படியும் கூட இத்தனை நாள் சேர்ந்துதானே வாழ்ந்தோம்?

”சேர்ந்து வாழணும்னுதான் தாத்தா இத்தனி நாளா சகிச்சுகிட்டு இருந்தேன். ஆனா, அவரு திருந்தற மாதிரியில்ல.”

”சரி விடு. இன்னிக்கு மாறாத வன் நாளைக்கு மாற மாட்டானா? ஆம்பளைங்க அப்படி இப்படித் தான் இருப்பாங்க. சும்மா அதையே பேசிட்டு இருக்காத கழுத…”

சுர்ரென்றது அவளுக்கு. மறுபடியும் மறுபடியும்… ஆம்பளை ஆம்பளை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே… கட்டிய மனைவியை விட்டுவிட்டு, மாற்றான் மனைவியுடன் கும்மா ளம் அடித்ததைப் பார்த்துக் கொண் டிருந்த கூட்டம்தானே இது..?

சாகும்வரை குடும்பம் பற்றி துளிகூட கவலைப்படாமல் வாழ்வை முடித்துக்கொண்ட அப்பாவுக்கு பிறகு, அம்மாவும் போய் சேர்ந்துவிட்டாள். யாருமற்ற தனிமரமாக இருப்பவளுக்கு துணையாக இருக்க வேண்டிய வனும் துயரமாக போய்விட் டதை இவர்களால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை…?

”அப்படி இப்படி இருக்கிற ஆம்பளையோட எல்லாம் வாழ முடியாது.”

- அவளது குரலில் உறுதி இருந்தது.

”சரி… அப்பன்னா என்னதான் சொல்ல வர்றம்மா?”

”நான் சட்டப்படி பிரியறதுனு முடிவு பண்ணியிருக்கேன் தாத்தா.”

”என்னம்மா புரியாமப் பேசற? அப்படிப் பிரிஞ்சா அவன் பாட் டுக்கு இன்னொரு கல்யாணத்தப் பண்ணிட்டுப் போயிருவாம்மா. நீதான் தனியா கெடந்து செரமப் படணும்”

- ஒட்டுமொத்தமாக நாலைந்து பேரின் குரல்கள் உயர்ந்தன.

”நான் ஏன் செரமப்படப் போறேன்? என்னையக் கல்யாணஞ் செஞ்சு புள்ளயளக் கொடுத்தவர் வாழவும் பணம் கொடுக்கத்தான செய்யணும்..?”

- அவள் கேள்வியால் கூட்டம் எரிச்சல் அடைந்தது

”உனக்கெதுக்கு பணம் கொடுக் கணும்? சேர்ந்து வாழவும் மாட்டேங் கற. சரி அவம்பாட்டுக்கு அவன் வாழ்க்கைய பாத்துக்கிட்டு போக விடவும் மாட்டேன்னா என்ன அர்த்தம்?”

- ஆளாளுக்கு கேள்வி எழுப்பி னார்கள்.

என்ன புத்தி இது..? நம்பி மோசம் போனவர்களுக்கு இழப்பீடு கிடையாது என்பது என்ன நியாயம்..? அவளுக்கும் எரிச்சல் வந்தது.

”யார் மாமா தப்பு பண்ணது? இஷ்டத்துக்கு நடந்துகிட்டு, இப்ப உங்கள அனுப்பி அதெல்லாம் சரி தான்னு சொல்லச் சொல்றாரா?”

அவளது நேரடியான தாக்குதல் அவர்களைக் கோபப்படுத்தியது.

”இந்த பாரும்மா… நாங்க ஒண் ணும் அந்தப் பய சொல்லி வரல. அந்தா வெளில காருல உக்காந் திருக்காரே உன் மாமனார்… அவர்தான் பேசச் சொன்னார்.”

”ஊருல நல்லது கெட்டதுன்னா பேசித்தானமா சரி பண்ணணும்?”

”எடுத்தோம் கவுத்தோம்னு பேசாதம்மா…”

ஆளாளுக்கு குரலை உயர்த்தி னார்கள். அவளும் கோபமானாள்.

”உங்களுக்கு கோவம் வருதுல்ல? அத மாதிரித்தான் என் வீட்டுக் காரரு தப்பான வழில போனப்ப எனக்கும் வந்துச்சு. நீங்க சொல்ற மாதிரி அவரை திருத்திடலாம்னு பொறுமையா இருந்தேன். ஆனா, அந்தப் பழக்கம் மட்டுமில்லாம தெனமும் குடிச்சுட்டு வந்து அடிக்கிறது, கொடுமைப்படுத்தறதுனு இருந்தா எந்தப் பொம்பள சேர்ந்து வாழணும்னு நெனப்பா..? இவ்வளவும் நடந்தப்ப… வேடிக்கை மட்டுந்தானே பாத்தீங்க?”

- அவளிடம் இருந்து வெளிப்பட்ட சத்திய ஆவேசம் அவர்களை திகைக்க வைத்தது.

”என்னம்மா… குடும்பம் சேர்ந்து வாழணும்னு நினைச்சு நாங்க பேசுனா, நீ பழசப் பத்தியே பேசிட்டு இருக்க. புள்ளைங்களுக்கு அப்பா வேணாமா?”

”அப்பாவா என்னிக்கு நடந்துருக்காரு தாத்தா? ஒரு நா புள்ளைங்கள கண்ணே மணியேனு கொஞ்சிருக்காரா, கடை கண்ணிக்கு கூட் டிட்டுப் போய் ஏதாவது வாங்கித் தந்திருக்காரா? ஏதோ கடமைக்கு அப்பாவா இருந்தவருக்கு புள்ளைங்களப் பத்தி என்ன தெரியும்?”

கூட்டத்தில் இருந்த சிலர் சோம்பல் முறித்துக் கொண்டனர். பேச்சைத் தொடர அவளும் விரும்பவில்லை. ஆனால், அடுத்த அஸ்திரம் தயாராக இருந்தது.

”இந்த பாரும்மா… இதெல்லாம் பேசிச் சரி செய்யற விசயம் கெடையாது. அவங்கவங்களா புரிஞ்சு நடந்துக்கணும். இப்ப உங்க ரெண்டு பேரோட கெரகமும் சரியில்ல. கோவில் பூசாரி கிட்ட பூவெடுத்துப் பாத்துட்டுத்தான் வர்றோம். கட்டஞ்சரியில்லைனா இப்படித்தான் போட்டுப் படுத்தும். பொறுமையா இரு. அவசரப்படாத.”

அவள் பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் அடுத்தடுத்து அறிவுரைகள் வந்து விழுந்தன.

”சின்ன வயசும்மா உனக்கு… பிரச்னைகள் எல்லாம் வரத்தான் செய்யும், சமாளிக்கத்தான் செய்யணும். வாழ்க்கைய விட்டுப்புட்டு தவிக்காத ஆமா!”

”இல்ல மாமா… நான் என்ன சொல்ல வர்றேன்னா…”

”நீ ஒண்ணும் சொல்ல வேணாம். உன் பேரே… ஆத்தாவோட பேருதான். மகமாயி நிச்சயம் யாரையும் கைவிட மாட்டா. உனக்கு எந்தக் கெடுதலும் வராது. ஒரு மூணு மாசம் பொறுத்துக்க. அந்தப் பய சரியா போயிருவான். அப்புறமா வெச்சுக்க உன் கச்சேரிய!”

- ஏதோ நகைச்சுவை போல அந்தக் கிழம் பேச, மற்ற வெள்ளை வேட்டிகளும் சிரித்தன.

”நான் ஒண்ணே ஒண்ணு கேட்கலாமா தாத்தா?”

”நீதான் இதுவரை எல்லாத்தையும் கேட்டுட்டியே… மிச்சம் என்ன இருக்கு?”

- மற்றொரு நகைச்சுவையாக அது கருதப்பட்டது. மீண்டும் சிரித்தார்கள்.

”இல்ல மாமா… இதக் கேட்கக்கூடாதுனுதான் நெனச்சேன். வேற வழியில்ல. கேட்டுத்தான் ஆகணும். என் வீட்டுக்காரர் வேற ஒருத்திகிட்ட போனது மாதிரி… நான் நடந்திருந்தா இப்படி பஞ்சாயத்து பண்ணி சேர்த்து வெச்சிருப்பீங்களா? என்னைய எப்போவோ தீர்த்துவிட்டிருக்க மாட்டீங்க..?”

முகத்தில் தீயால் சுட்டதுபோல், திடுக்கிட்டுப் போனார்கள். ஒருவரையருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்குள்ளே புரையோடிப் போயிருந்த ஆண் திமிர் கொந்தளித்தது. ‘ஒரு பொட்டச்சிக்கு இத்தனை திமிரா?’ என்பதை மௌனத்தில் பகிர்ந்து கொண்டார்கள்.

அவள் விடவில்லை.

”வந்ததுல இருந்து ஆம்பள ஆம்பளனுகிட்டே இருக்கீங்க. ஆம்பளனா ஒழுக்கமெல்லாம் கெடையாதா? குடும்பத்த பத்தின கவலை கெடையாதா? சும்மா குடிச்சுட்டு சுத்திக்கிட்டே திரியறதும், கூத்தியாகிட்ட போயி படுத்துட்டு வர்றதும்தான் வாழ்க்கையா? பொறுத்துக்க பொறுத்துக்கனே சொல்லிட்டு இருக்கீங்களே… உங்க மக, பேத்தி யாருக்காவது இந்த மாதிரி மாப்ள பாத்து கட்டி வெப்பீங்களா? சொல்லுங்க தாத்தா… உங்க வயசுக்கு இப்படி நடந்துக்கறது நியாயமா தெரியுதானு கேக்கறேன்”

- எரிமலையாக குமுறினாள். கண்கள் கலங்கி னாலும் குரல் உடையவில்லை.

”என் வாழ்க்கை தொலைஞ்சு போயிரும்னு சொல்றீங்களே… புள்ளைங்க வாழ்க்கை கெட்டுப் போயிரும்னு சொல்றீங்களே… இந்தப் பச்ச மண்ணுங்க முன்னாடியே அந்த மனுசனால எத்தனை கொடுமைகள அனுபவிச்சுருக்கேன் தெரியுமா? நடக்கக்கூடாத எத்தனை விசயங்க நடந்துருக்குனு உங்க யாருக்காவது தெரியுமா?”

”அப்பன் ஆத்தா போட்ட நகை, பணத்தை வாங்கி வித்தாச்சு. மாசா மாசம் ஏதோ கடமைக்கு பத்தும் பத்தாமயும் பணம் கொடுக்கறது. என்ன பண்றா, குடும்பத்த எப்படிச் சமாளிக்கிறானும் கவலைப் படுறதுல்ல. விருந்தாளி வர்றவங்ககூட அக்கறையா விசாரிப்பாங்க. அதக்கூட புருசன்காரன் செய்ய லனா… அப்புறம் என்னத்த வாழ்க்கைய வாழ்றது?”

”பத்தும் பத்தாததுக்கு அக்கம்பக்கத்துல உள்ளவங்களோட பேசாத, இவன்கூட ஏன் பேசுன, அவன்கூட ஏன் சிரிச்சன்னு தொட்டதுக் கெல்லாம் சந்தேகப்பட்டு தெனமும் கொடுமைப்படுத்துனா எப்படித்தான் வாழ முடியும்? இந்த லட்சணத்துல சேந்து வாழ மட்டும் பொண்டாட்டி வேணுமாக்கும்..? எதுக்கு? குடிச்சுட்டு வந்து அடிக்கறதுக்கும் கூப்புடற நேரத்துக்கெல்லாம் படுக்கறதுக்குமா?”

விக்கித்து நின்றது கூட்டம்.

”நீங்க எல்லாம் சொந்தக்காரங்கனுட்டுதான் இவ்வளவு நேரம் உக்கார வெச்சுப் பேசுனேன். இல்லையினா வரும்போதே திருப்பி அனுப்பிருப்பேன்”.

- அவளது நியாயமான அத்தனை கேள்வி களுக்கும் பதில் சொல்ல முடியாத ஊர்ப் பெரியவர்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்திக் கொண்டார்கள். விருட்டென்று எழுந்தார்கள்.

”நல்ல மரியாத கொடுத்துட்டம்மா…”

”சேர்ந்து இருக்கறதும் தனியா கெடக்கறதும் உங்க விதி…”

”அதுக்கு மேல உன் இஷ்டம்…”

”ஊர் ஒலகம் ரொம்ப கெட்டுப் போச்சுப்பா…”

”போய் வேலையப் பாருங்கப்பா. அவனாச்சு… அவன் பொண்டாட்டியாச்சு.”

- ஆளாளுக்கு ஒன்றைப் பேசிக்கொண்டே கலைந்தனர்.

கார் கதவு அறைந்து சாத்தப்பட்டு புறப்பட்டுச் செல்வது வீட்டுக்குள் இருந்த அவளுக்குக் கேட்டது. பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்துவரப் புறப்பட்டாள்.

காலையில் இருந்து மேகமூட்டமாக இருந்த வானம் தெளிவாகி, பளிச்சென வெயில் அடித்தது. வாசலில் இருந்த வேப்பமர அக்கா குருவி ‘க்கோவ்!’ என்று கூவியது!

- நவம்பர் 2012 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)