Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

விழியில் வடியும் உதிரம்!

 

கொழும்பிலிருந்து எனக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்குக் கடிதம் வந்திருந்தது. தலைநகரிலே அமைந்துள்ள இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு தினசரிப்பத்திரிகையின் உதவியாசிரியர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தேன். எனது கல்வித்தகைமைக்கு எத்தனையோ பல வேலைவாய்ப்புகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் எழுத்துத்துறையிலே எனக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக இந்த வேலையைப் பெரிதும் விரும்பியிருந்தேன்.

‘தம்பி, இப்பவே வெளிக்கிடுறியாப்பா’ என்று வினவிய எனது தாயின் குரலுக்கு ஒற்றை வார்த்தையில் பதில்கூறிவிட்டு அவசர அவசரமாகப் பயணப்பொதியைத் தயார் செய்தேன். நண்பனொருவனோடு அவனது மோட்டார் சைக்கிளில் திருகோணமலை புகையிரத நிலையத்துக்கு நான் வந்து இறங்கவும் கொழும்பு செல்லும் ரயில்வண்டி புறப்பட ஆரம்பிப்பதற்கும் சரியாகவிருந்தது. துரிதகதியில் பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு ஒருகையிலே நேர்முகப்பரீட்சைக்குரிய எனது பைலையும் பயணப்பொதியையும் சுமந்துகொண்டு நகரத்தொடங்கியிருந்த ரயிலுடன் ஓடிச்சென்று அதன் நடுப்பகுதியிலுள்ள ஒரு பெட்டியில் தொற்றிக்கொண்டேன்.

கதவோரத்தில் நின்று என்னைச் சமநிலைப்படுத்தியபடி உள்ளே நுழையப்போகும் தறுவாயில் நான் கண்ட காட்சி என்னை மயிர்கூச்செறியச் செய்தது. ஓடும் ரயிலில் எனக்குப் பின்னாலிருந்த பயணிகள் பெட்டியிலிருந்து பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் சட்டெனப் புகையிரத மேடைக்குப் பாய்ந்தான். பாய்ந்த வேகத்தில் உருண்டு சட்டெனக் கீழே குனிந்து எதையோ பொறுக்கியெடுத்து தடுமாறி விழுந்தான். பின்பு அதே மூச்சில் எழுந்து ரயிலைத் துரத்தி ஓடிவந்து மீண்டும் ஏறிக்கொண்டான். கணப்பொழுதிலே நடந்து முடிந்துவிட்ட அந்த எதிர்பாராத செயலைக் கண்ணுற்ற பயணிகள் அனைவரும் திகைப்பில் உறைந்துவிட புகையிரத மேடையில் நின்றிருந்த ஊழியர்கள் அந்தச் சிறுவனை நோக்கி கோபத்தில், ‘டேய்…!’ என்று கூச்சலிட்டுக் கத்தினார்கள்.

‘சே! தறுதலை!’ என்று நானும் கோபத்தில் வாய்க்குள் முணுமுணுத்தவாறு யன்னலோரமாக இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

‘பாருங்களேன் தம்பி, இந்தக்காலத்துப் பிள்ளைகள்ற வேலைகளை. கொஞ்சம்கூட யோசிக்கிறான்களில்லையே..’ என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினார் எனக்கு எதிர் இருக்கையிலே இருந்த சகபயணி. அவரை ஆமோதித்தபடி பார்வையை வெளியே சுழலவிட்டேன்.

ரயில் நீ…ளமாய்க் கூவியபடி சீனக்குடா சீமெந்து ஆலையைக் கடந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் புகையிரத மேடையிலே சாகசம் புரிந்த அந்தச் சிறுவன் ஒரு வயதான பெண்மணியைக் கையிலே பிடித்தபடி ஒவ்வொரு இருக்கையாகத் தாண்டி வந்து கொண்டிருந்ததைக் கண்டேன். அவனது பழுப்பேறிய வெள்ளை நிறச் சட்டையின் முழங்கைப்பகுதியிலே இரத்தம் தோய்ந்திருந்தது. வெளியே பாய்ந்து விழுந்தபோது ஏற்பட்ட காயத்தினால் இருக்க வேண்டும். அதைப் பார்த்ததும் அவன்மீது மேலும் கோபம் உண்டானது. ஆனால் அருகே வரவர அவனது தோற்றத்திலிருந்த ஏழ்மையும் முகத்தில் தெரிந்த அப்பாவித்தனமும் ஏனோ என்னைச் சிறிது குழப்பமடையச் செய்தது. அவனது மெலிந்த உடலும் உடைகளும் அவன்மீது ஒருவித இரக்கவுணர்வைத் தரலாயிற்று. ஆயினும் அருகிலே வந்ததும் அவனுக்கு ஒரு திட்டுத்திட்டியே ஆகவேண்டும் என்று காத்திருந்தேன்.

அவன் ஒவ்வொரு முகமாய்ப் பார்த்தபடி வயதான தாய்போலிருந்த பெண்ணை அழைத்து வந்து கொண்டிருந்தான். என்னருகிலே வந்ததும் சட்டென அவன் முகம் மலர்ந்தது. நான் உடனே நிலைமையை யூகித்தவனாக எழுந்து காற்சட்டையின் பின்புறப் பையினுள் கையைவிட்டு பேர்ஸை எடுக்க முனைந்தேன்.

ஆ! என்னை முப்பதாயிரம் மெகாவாட் மின்சாரம் தாக்கியது போலிருந்தது. எனது பேர்ஸ் எங்கே..?

‘அண்ணா இது உங்கடதுதானே..?’ என்றபடி சில காகிதங்களை என்னிடம் நீட்டியபடி நின்றிருந்தான் அந்தச் சிறுவன். என் கண்களையே நம்பமுடியவில்லை. அவை.. அவை எனது நேர்முகப் பரீட்சைக்குரிய ஆவணங்கள். ‘இது எப்படி இவனிடம்..’ என்று வியந்தபடி எனது சிவப்புநிற பைலை எடுத்துச் சட்டெனப்பிரித்துப் பார்க்க அது வெறுமையாக இருந்தது.

‘இந்தாங்கண்ணே இதுவும் உங்கடதுதான்’ என்று இந்தத்தடவை அவன் நீட்டியது என்னுடைய கறுப்புநிற பேர்ஸை.

அதை வாங்கிப் பார்த்தபோது எனது பணம் அடையாள அட்டைகள் எல்லாம் சரியாக இருந்தது. எனக்குத் தலை விறைத்துப்போனது. எதுவும் புரியாமல் அவனையே பார்த்திருக்க, ‘நீங்க அவசரமா ட்றெயின்ல ஓடி வந்து ஏறுறதப் பாத்திட்டிருந்தேன். ஏறுற அவசரத்தில உங்கட பேப்பரும் பேர்சும் பளட்போமுல விழுந்ததைக் கவனிக்காம உள்ள வந்திட்டீங்கண்ணே. அதுதான் நான் டக்கென்டு பாஞ்சு..’ அவன் சொல்லி முடிக்கவில்லை.

இரத்தம் தோய்ந்த அவனது விரல்களைப் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டேன். எனது கண்ணீரிலே அவன் குருதி கரைந்தது. ‘இவனையா போய் தறுதலை என்று திட்டினேன்’ என்று மனம் உள்ளுர அழுதது. ‘சரி தம்பி, இப்படி வா. இதிலே இரு’ என்று இருக்கையிலே அமர்த்தினேன். அவனுடன் கூட வந்த வயதான பெண்மணியும் தட்டுத்தடுமாறி அமர்ந்துகொள்ள ஆரம்பித்தது எங்கள் அறிமுகம்.

‘உன்ட பேர் என்ன தம்பி’

‘பார்த்திபன்.. பார்த்தி என்று கூப்பிர்றவங்க அண்ண.. ‘

‘இவங்க யாரு அம்மாவா?’

‘ஓமண்ணே. அவவுக்கு கண்பார்வை தெரியாது’ சொல்லும்போதே கண்கலங்குவது தெரிந்தது.

‘ஓ! அப்பிடியா? அப்ப அவங்க இங்கேயே என் சீட்ல இருக்கட்டும். வா நாங்க கெண்டீன் பெட்டிக்குப் போய் ஏதாவது சாப்பிட்டுட்டு அம்மாவுக்கும் எடுத்து வருவோம்.. அம்மா இங்கேயே இருங்கம்மா என்ன?’ என்று அவனைக் கூட்டிக்கொண்டு நடந்தேன்.

000

‘சரி, அப்பா செத்த பிறகு என்ன நடந்தது..?’

தேநீரைப் பருகியபடி என் எதிரே அமர்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பார்த்திபனைக் கேட்டேன்.

‘அதுக்குப் பிறகு என்னால ஸ்கூலுக்கு போக ஏலாமப் போயிட்டுது. தம்பி தங்கச்சிகளை படிக்க வைக்கிறதுக்கு ஏதாவது தொழில் செய்தாத்தானே ஏலும். அப்பாட தச்சுத் தொழிலைப்பழகி அவர்ர பழைய கூட்டாளி ஒராளோட சேர்ந்து தச்சுப்பட்டறை போட்டு கொஞ்ச நாள் வேலை செய்ததுதான். அதுக்குப் பிறகுதான் சமாதானம் குழம்பிச் சண்டை வந்திட்டுதே. அதனால தொழிலும் முடங்கிட்டுது. அதோட சண்டைக்கும் ஆள்பிடிச்சுப்போகத் தொடங்கினாங்க. என்னையும் என்னைப்போல ஆட்களையும் ஸ்கூல் பிள்ளைகளையும் பலவந்தமாய் கூட்டிப்போய் மூணு நாலுகிழமை காட்டுக்குள்ள கம்புதடியை வச்சு பிஸிகல் ட்ரெயினிங் தந்திட்டு விட்டாங்கள். அதுக்குப் பிறகு வீட்டுலயே இருக்க ஏலாதளவுக்கு இரண்டு பக்கத்தாராலயும் நெருக்கடி. அதாலதான் ஊரைவிட்டு வெளியேறி காட்டுக்குள்ளால நாள்கணக்கா நடந்து அகதி முகாமுக்கு போனோம்..’ அவன் பார்வை யன்னலினூடகத் தெரிந்த மாலைநேரத் தொடுவானத்தை வெறித்தது.

‘அம்மாவுக்கு கண்பார்வை எப்படி இல்லாமல் போனது?’

‘அப்பிடி நடந்து போகக்குள்ளதான் நடுவழியில் குடிக்க ஒரு சொட்டுத் தண்ணியில்லாமப் போச்சுண்ணே. தண்ணித்தாகம் தாங்காம ஒரு சேத்துக்குட்டையில கிடந்த வயலுக்கு அடிக்கிற மருந்து கலந்த நஞ்சுத் தண்ணியைக் குடிச்சிட்டா. சத்தி மயக்கமெல்லாம் வந்து கிடந்தா.. அகதி முகாமுல வச்சு எப்பிடியோ அவட உசிரைக் காப்பாத்தியாச்சு. ஆனா பார்வை போயிட்டுதுண்ணே!’ அவன் கண்கள் கலங்கி அழுதுவிடுவான் போலிருந்தது.

‘சரி கண்ணுக்கு வைத்தியம் ஏதும் செய்யல்லையா?’ என்று கேட்டேன்.

‘அகதி முகாம்ல இருந்த வெள்ளைக்கார டொக்டர் கண்ணுக்குள்ள டோச்செல்லாம் அடிச்சுப் பாத்தாரு. பிறகு கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு கடிதம் ஒன்டு இங்கிலீஷில எழுதித் தந்து காட்டச் சொன்னாருண்ணே. அதுக்குத்தான் இப்ப போயிட்டிருக்கோம். உங்களுக்கு அந்த இடம் தெரியுமாண்ணே..?’

எனக்கு அவனைப் பார்க்க போன வருடம் ஐந்தாம் ஆண்டு ஸ்கொலஷிப் பரீட்சை எழுதி முடிவு வருவதற்கிடையிலே டெங்குக் காய்ச்சலில் இறந்துபோன எனது இளைய தம்பி பைஸலின் நினைவு வந்தது. ஒரு நிமிடம் மனதுக்குள் அழுதுதீர்த்தேன்.

‘கவலைப்படாதே பார்த்திபன், கொழும்புலதான் எனக்கும் இண்டர்வியூ. உன்னையும் அம்மாவையும் உரிய இடத்தில சேர்த்துவிடுறது என்ட பொறுப்பு. சரி வா அம்மாவுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு அங்க போகலாம்’ என்று எழுந்தேன்.

ரயில் தலைதெறிக்கும் வேகத்தில் வயல்வெளிகளுக்கூடாக விரைந்து கொண்டிருக்க இருவரும் தட்டுத்தடுமாறி எங்கள் இருக்கைக்குப் போய்ச் சேர்ந்தோம்.

‘அண்ணே எனக்கிட்ட தேர்ட் க்ளாஸ் டிக்கட்தான் இருக்கு. இது செகண்ட் க்ளாஸ் பெட்டிதானே.. நாங்க அங்கேயே போய் இருக்கிறம். காட்மார் வந்தா பிடிச்சிடுவாங்களாமே’

‘சரி நீங்க அங்கேயே போய் இருந்திட்டு கொழும்பு வந்ததும் இறங்காம ஸீட்லயே இருங்க. நான் அங்க வந்து சந்திக்கிறேன்’ என்று அவர்கள் இருவரையும் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெட்டியிலுள்ள ஒரு வசதியான இருக்கையில் அமர்த்தி விட்டு மீண்டும் எனது இடத்திற்கு வந்து அமர்ந்தேன்.

மனம் கனத்திருக்க இருக்கையிலே சாய்ந்து கண்ணை மூடினேன்.

எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேனோ தெரியவில்லை. திடீரென ஒரு குலுக்கலுடன் ரயில் நின்ற அதிர்ச்சியில் சட்டென விழித்துக் கொண்டேன். அது ஒரு காட்டுப்பகுதி. மின்மினிப்பூச்சிகள் இருளிலே மினுக்கிக் கொண்டிருந்தன. பயணிகள் எல்லோரும் ‘என்ன நடந்தது என்ன விசயம்’ என்று பேசியபடி எழுந்து கொண்டார்கள். ஏதாவது விபத்தா அல்லது இயந்திரக் கோளாறா எதுவும் புரியவில்லை. வெகுதூரத்தில் ரயில் எஞ்சின் வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி இரைச்சலுடன் நின்றிருக்க பயணிகள் பெட்டிகளின் யன்னல்கள் அனைத்திலும் மனிதத் தலைகள் முளைத்திருந்தன.

சட்டென ரயில் பெட்டிகளின் மின்னிணைப்புத் துண்டிக்கப்பட அனைவரும் இருளில் மூழ்கினோம். மெல்லிய பிறை நிலவொளியிலே ஒரு பிரமாண்டமான கரும்பாம்பாய் படுத்திருந்தது ரயில். அப்போது திடீரென ‘ஐயோ ஆ!’ என்ற அவலக்குரல் அனைவரையும் உலுக்கியெடுத்தது. உடனடியாக அனைவரும் ஏதோ ஓர் ஆபத்தை எதிர்நோக்கியவர்களாக தத்தமது இருக்கைகளின் அடியில் புகுந்து கொண்டார்கள். சிறிது நேரம் பயங்கர அமைதி நிலவியது. தூரத்தில் யாரோ சில இருண்ட உருவங்கள் டோர்ச் வெளிச்சத்துடன் தங்களுக்குள் கதைத்தபடி பெட்டிபெட்டியாய் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். பின்னாலிருந்த மூன்றாம் வகுப்பு பயணிகள் பெட்டியியினுள் கசமுசவென்ற குழப்பமான சப்தங்கள் கேட்டன.

அதன் பின்பு சில நிமிடங்கள் பயங்கர அமைதி நிலவியது. எல்லோரும் பீதியில் உறைந்திருந்தோம்.

அப்பொழுது அமைதியைக் கிழித்துக்கொண்டு ‘ஐயோ! பாவிகளா என்ர புள்ளயை விடுங்கடா!’ என்று ஒரு பெண்ணின் தீனக்குரல் கேட்டது. எல்லோரும் கிலிபிடித்து அசையாது படுத்திருக்க அந்த அழுகுரலைத் தொடர்ந்து யாரோ சிலர் ஒருவனை டோர்ச் வெளிச்சத்துடன் நெம்பித் தள்ளிக்கொண்டு எங்கள் பக்கம் வருவது தெரிந்தது. அவர்கள் தங்களுக்கிடையிலே கொச்சைத்தமிழிலும் சிங்களத்திலும் பேசிக்கொண்டு வருவது கேட்டது.

‘ஐயோ.. என்ர பிள்ளையை விடுங்கடா…!’

நான் படுத்திருந்த இருக்கையைத் தாண்டி அந்த உருவங்கள் செல்லும்போது லேசாகத் தலையை உயர்த்தி நன்றாக உற்றுப் பார்த்தேன். மெல்லிய டோர்ச் வெளிச்சத்தில்அந்தக் கரிய உருவங்கள் நெம்பித் தள்ளிக் கொண்டு செல்லும் ஆள் வேறு யாருமல்ல.

பார்த்திபன்!

எனக்கு காதுகள் சுட்டன. எதையும் யோசிக்காமல் விருட்டென எழுந்தேன். என்னைத் தாண்டிச் செல்லும் உருவங்களை நோக்கி ஓடிச்சென்றேன். அவர்களை விலக்கிக்கொண்டு எனது பார்த்திபனை அவர்களிடமிருந்து விடுவிப்பதற்காக நான் அவனை நெருங்கித் தொட்டபோது..

‘ஆ…..!’

எனது பின்மண்டையில் மத்தாப்புச் சிதறல்கள் வெடித்தது.

000

மீண்டும் கண்விழித்தபோது ரயில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. நான் ஒரு முழு இருக்கையின் மீது மல்லாக்கக் கிடத்தப்பட்டிருப்பது தெரிந்தது. தலைவலி உயிரைத்தின்றது. சிரமத்துடன் எழுந்திருக்க முயன்று தோற்றுப்போனேன்.

‘ஆங் கண் முழிச்சிட்டீங்களா தம்பீ..? அல்ஹம்துலில்லாஹ்’ என்றபடி எனது பார்வைப் புலத்துக்குள் தலைகீழாக வந்தார் ஒரு வயதான மனிதர். அவரது முகத்தை இதற்குமுன்பு எங்கோ பார்த்தது போலிருந்தது எனக்கு.

‘ஏன் தம்பி ஒங்களுக்கு இந்த வேண்டாத வேலை..? அவனுகள் சண்டை புடிப்பானொள். பொறவு சமாதானமென்டு சொல்லுவானொள் மறுவா திருப்பியும் சண்டையத் தொடங்குவானொள்.. நாம இதுக்குள்ளயெல்லாம் போகப்படாது வாப்பா.. நல்ல காலம் நாந்தான் ஒங்கள என்ட புள்ள… ஒங்களுக்குக் கொஞ்சம் புத்தி சுவாதீனமில்லயென்டெல்லாஞ் சொல்லிக்கில்லி மண்டாடித்தான் அந்த நாசமத்தவனுளக்கிட்ட இருந்து கூட்டிட்டு வந்தன். இல்லையெண்டா ஒங்களையும் சேர்த்து அடிச்சே மவுத்தாக்கிருப்பானொள்.. அல்லாஹ்தான் காப்பாத்தினான்’ என்றபடி சிறிது கோப்பியைப் பருகத்தந்தார.;

‘ஓ! பார்த்திபன்.. நீ எங்கே…?’

இப்போது எனக்கு எல்லாவற்றையுமே யூகிக்க முடிந்தது. மனம் வெறுப்பில் கசந்து போனது.

‘தம்பீ என்ட இன்டர்வியூ பேப்பர் விழுந்ததுக்காக யோசிக்காமப் பாய்ந்தியே உனக்கு ஏதாவது ஆகியிருந்தா..?’

‘ஏன் அண்ண உங்கட என்ட என்டு பிரிச்சுப் பாக்கிறீங்க.. நல்லது செய்யிறதுக்கு யாரெண்டெல்லாம் பார்க்கணுமா சொல்லுங்கண்ணே..?’ என்று கேட்ட அந்த ஏழைச்சிறுவனின் குரல் இன்னும் என் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

பைலைத் திறந்து நேர்முகத் தேர்வுக்குரிய அழைப்புக் கடிதத்தை எடுத்துப் பிரித்தேன். ‘நமது நாட்டின் இனங்களுக்கிடையே நிலவும் வேற்றுமைகளை ஒழித்துக் கட்டி ஒற்றுமையையும் இன சௌஜன்யத்தையும் கட்டியெழுப்புவதற்கு எமது அமைச்சு உறுதி பூண்டிருப்பதால்…’ என்று தொடர்ந்து சென்ற கடிதத்தின் வலது மூலையில் ஒரு இரத்தத்துளி இருந்தது.

எனது விழிகளிலிருந்து வழிந்த சூடான கண்ணீர்த் துளியில் காய்ந்து போயிருந்த கடிதத்தின் குருதிக்கறை மெல்லக் கரைந்தது.

சிறிது நேரத்திலே ரயில் கோட்டைப் புகையிரத நிலையத்தை அடைந்து ஆசுவாசப் பொருமூச்சொன்றை விட்டபடி நின்றதும் பயணிகள் அனைவரும் புற்றிலிருந்து கலையும் எறும்புகள்போல துரித கதியில் இறங்கிச் செல்ல ஆரம்பித்தனர்.

அனைவரும் இறங்கியபின்பு எனது பயணப்பொதியை எடுத்துக்கொண்டு புகையிரத மேடையிலிருந்த கழிப்பறையில் முகத்தை கழுவினேன். வெளியே வந்ததும் எனது நேர்முகத் தேர்வுக் கடித்ததைச் சுக்குநூறாகக் கிழித்தெறிந்துவிட்டு முன்கூட்டியே பயணச்சீட்டு பதிவுசெய்யும் கருமபீடத்திற்கு வந்து, ‘திருகோணமலைக்கு ஒரு செகண்ட் க்ளாஸ் டிக்கட்!’ என்றேன்.

(குறிப்பு: திருகோணமலை வலய ஆசிரியர் தினம் 2011 சிறுகதைப் போட்டியில் மாறிய பாதையின் வழிகாட்டி எனும் தலைப்புக்கு எழுதப்பட்டு முதலாம் பரிசுபெற்று 2011 நித்திலம் சஞ்சிகையில் பிரசுரமானது.) 

தொடர்புடைய சிறுகதைகள்
'டீச்சர் உங்களை அதிபர் உடனே வரட்டாம்' 'சரி! இந்தா வாறேண்டு சொல்லு' ஆய்வுகூடத்தில் பரிசோதனை ஒன்றைச் செய்து காட்டிக் கொண்டிருந்த ஸரீனா டீச்சர் வாஷ்பேசினில் கழுவிய கைகளை அவசரத்தில் சேலைத் தலைப்பிலே துடைத்துக்கொண்டு காரியாலயத்தை நோக்கி நடந்தாள். அது ஒரு சிறிய கலவன் பாடசாலை. முதலாம் ...
மேலும் கதையை படிக்க...
இலண்டன் ஹீத்ரூ விமான நிலையம். கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் யூஎல்-564 விமானத்தின் பயணிகள் நுழைவாயில் அடைக்கப்படுவதற்கு சரியாக பத்தொன்பது விநாடிகள் மட்டுமே இருந்தபோது அதன் கடைசிப்பயணியாக உள்நுழைந்தேன். 'இனிமேல் யாரும் வரப்போவதில்லை' எனும் தைரியத்தில் கைகூப்பாமல் நின்றிருந்த ஏர்ஹோஸ்டஸ் அழகி என்னைப் ...
மேலும் கதையை படிக்க...
'ராத்தோவ்' பாடசாலையிலிருந்து உற்சாகமாய் கூவிக்கொண்டே ஓடிவருகிறாள் ப்ராவ்தா. அவள் வந்த வேகத்தில் பாடசாலைப் புத்தகப்பை குசினிக்குள் கிடந்த பழைய மேசையிலும் காலில் அணிந்திருந்த வெள்ளைச் சப்பாத்துக்கள் கதவு மூலையிலும் வீசியெறியப்பட்டன. 'டே! என்ன பொட்ட இப்பிடி ஓடி வாறா? இன்னும் ஒனக்குச் சின்னப் பொட்டையண்ட ...
மேலும் கதையை படிக்க...
இதுவரையில் ஒருபோதும் பார்த்திராத ஓர் அழகான இளம்பெண் தனது இனிய குரலில், 'எக்ஸ்க்யூஸ்மீ ஸேர்.. யூ ஹேவ் டூ அட்டெண்ட் திஸ் கோல் ரைட் நவ்! எக்ஸ்க்யூஸ்மீ ஸேர்.. யூ ஹேவ் டூ அட்டெண்ட் திஸ் கோல் ரைட் நவ்!.... எக்ஸ்க்யுஸ்மீ...' ...
மேலும் கதையை படிக்க...
வீட்டிலிருந்து அவசரமாய் வெளியேறி, வீதியில் வந்த முச்சக்கரவண்டியை நிறுத்தி, திருகோணமலை பஸ் நிலையத்திற்கு பதறியடித்து ஓடிவந்த இம்தியாஸ் இறங்கி நின்று பார்த்தபோது கண்டிக்குச் செல்லும் முதலாவது பஸ்வண்டி புறப்படுவதற்குரிய எந்தவொரு அறிகுறியுமின்றி அமைதியாக நின்றிருந்தது. முச்சக்கரிக்கு காசைத்தந்துவிட்டு பஸ்ஸை நோக்கியபடி யோசனையுடன் நின்றிருந்தான். ...
மேலும் கதையை படிக்க...
ஓர் உளவியலும் இரு செல்போன்களும்!
புத்தியுள்ள மனிதரெல்லாம்…
சுற்றுலா….!
திலீப் முஸம்மில் மற்றும் தீசன் குரூஸ்
வேடிக்கை மனிதர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)