கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 21, 2021
பார்வையிட்டோர்: 17,183 
 

மருத்துவமனை போய்விட்டு மகேஷ் அலுவலகம் வந்து சேரும்போது அலுவலகம் துவங்கி, அன்றைய பிரச்சனைகள் சேர்ந்து போய் மூன்று மணி நேரம் ஆகியிருந்தது. அவன் மேஜை முழுக்க நிறைந்திருந்த காகிதங்கள், தொலைபேசிப் பேச்சுகளும் கம்ப்யூட்டர் பிரிண்டர்களும் பரபரக்கும் பின்னணியில் ‘ஏம்ப்பா லேட்டு’ என்று விசாரித்தன. அதுவரை மனதில் படர்ந்திருந்த அப்பாவின் உடல்நலக் கவலை விலகி சட்டென்று அலுவலகச் சுமை ஏறிக்கொண்டது.

நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்த மசாலா கம்பெனிக்குக் குறுக்குவாட்டில் சதா கரம் மசாலா வாசனை முகர்ந்துகொண்டு இயங்கிய சின்னத் தொழிற்சாலை அது. கறுப்பு கிரானைட் பளபளப்பில் பி.வி எக்ஸ்போர்ட்ஸ் என்று தங்க எழுத்துக்களில் நிறுவனப்பெயர் அறிவிக்கும் காம்பௌண்ட் உள்ளே நுழைந்தவுடன் வெளிநாட்டு வாடிக்கையாளர்களைக் கவர சிக்கனத் தோட்டம். அதை ஒட்டி குளிர்சாதனித்த சின்ன அலுவலகம். பின்பக்கம் இரண்டு மாடி அழுக்குக் கட்டடத்தில் இயந்திரங்கள். அதனிடையே ஏராளப் பெண்கள். காலை எட்டரைக்கு அலுவலகப் பேருந்து வரும்போதும் மாலை ஐந்தரைக்கு அந்தப் பெண்கள் இயந்திரங்களிலிருந்து விடுபட்டுப் பேச்சும் சிரிப்புமாய்ப் போகும் போதும் வண்ணத்துப்பூச்சிகள் கூட்டமாய்ப் பறப்பதுபோல சலசலக்கும் நேரம் தவிர பி.வி எக்ஸ்போர்ட்ஸ் அதிகம் கவனம் ஈர்க்காமல் இயங்கும் ஆடை ஏற்றுமதி நிறுவனம்.

மகேஷ், கணக்கு வழக்கு, ஏற்றுமதிக்கு ஆவணங்கள் தயாரிப்பது, உற்பத்தி, சரக்குப் போக்குவரத்து என்று அலுவலகக் காரியங்களில் பாதியைச் சுமந்துகொண்டு திரியும் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாளன். அந்தப் பெண்கள் போலல்லாமல், சோறு போடும் உத்தியோகத்தை தெய்வகாரியமாக நினைத்து நடந்துகொள்ளவேண்டும் என்ற மத்திய வர்க்க குணத்தில் ஊறிய மனப்பான்மையில், அலுவலகக் கவலை என்னும் இயந்திரத்தைச் சதா சுமந்து கொண்டிருப்பவன்.

இருக்கையில் அமர்ந்து காகிதங்களை மேயத் துவங்கியதுமே சொல்லிவைத்தாற்போல பழனியப்பன் இன்டர்காமில் ஒலித்தார்.

‘மகேஷ், இருபதாயிரம் கேஷ் செக் போட்டு குடு. ஆபீஸ் அக்கௌண்ட் இல்லை. என் பர்சனல் கணக்கு. ஜெர்மையாகிட்ட பேசி அதுக்கு பில் வாங்கிகிட்டு கணக்கு எழுதி அப்புறமா திருப்பித் தா. நடராஜன் இன்ஸ்பெக்க்ஷன் செலவு. அவருக்கு ராஜு மூலமா கேஷ் குடுத்து அனுப்பிடு.’

நாலுநாள் காரியத்தை நாலு வரியில் சொல்லி முடித்துவிட்டு அடுத்த நிமிஷம் ‘என்ன முடிஞ்சுதா’ என்று அவசரமாக வினவும் முதலாளி. கணக்குகளைக் கடைசிப் பைசா வரை சரிபார்க்க வேண்டிய கட்டாயம், வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்க மன்றாடுவது, சப்ளையர்களிடம் சகஜமாகச் சொல்லவேண்டிய பொய்கள், தங்கை காலேஜ் ஃபீஸ், கல்யாணக் கவலை, அப்பாவின் மார்வலி என்று எந்த விசாரமும் இல்லாத முதலாளி.

அவர் பிரத்யேகக் கணக்கிலிருந்து பணம் எடுப்பது கையூட்டு மற்றும் கணக்கில் காட்ட முடியாத விவகாரங்களுக்கு மட்டும். அவர் குறிப்பிட்ட நடராஜன் வாடிக்கையாளர் ஒருவரின் பிரதிநிதி நிறுவனத்தில் முக்கிய அதிகாரி. சரக்கு ஏற்றுமதியாவதற்கு முன் உற்பத்தித் தரம் சரிபார்த்துச் சான்றிதழ் வழங்கும் நிறுவனம். அதற்கு என்ன கையூட்டு என்று அவன் நினைப்பதைக் கூட கணித்துவிடும் முதலாளி.

‘அடுத்த வாரம் சரக்கு போகணும். ஒரு சின்னத் தப்பு நடந்திருச்சு . ஷர்ட் ஆர்டர் ஒரு ஸ்டைல்ல மட்டும் பாக்கெட் டிசைன் மாறிப்போச்சு. அஞ்சி பர்சென்ட்தான் தப்பாயிருக்கும். அதை காரணம் காட்டி அவங்க ஷிப்மெண்ட்டை நிறுத்தினாங்கன்னா எல் சி காலாவதி ஆயிடும். சரக்கு தங்கிடும். முதல்ல சரக்கை அனுப்பி காசை வாங்குவோம். அப்புறம் மத்ததைப் பாக்கலாம்… அதுக்கு நடராஜனை கொஞ்சம் கவனிக்கணும். இப்ப அவரை குஷிப்படுத்தி வச்சிருந்தா நாளைக்கு அவ்வளவு கறாரா இருக்கமாட்டாரு.’

போன வாரம் கேஷியர் ரமேசன் கேட்ட சின்ன சம்பள உயர்வை நிராகரித்தவர் இன்றைக்குப் பணத்தை விட்டெறிகிறார். தேவைப்படும் ஒருவருக்கு ஐநூறு ரூபாய் நிராகரிக்கப்பட , கேட்காமலேயே இன்னொருவருக்கு இருபதாயிரம் போய்ச் சேரும் விநோதமான வியாபார நியதிகள் அவனுக்குப் பழக்கப்பட்டதுதான்.

அவனுக்குக்கூட அதுபோல ஒரு தொகை அவசரமாய்த் தேவைப்பட்டது. அப்பாவுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மருத்துவர் இனிமேல் காலம் கடத்துவது நல்லதல்ல என்று சொல்லிவிட்டார். பணம் ஏற்பாடு செய்யமுடியாமல் நாலு வாரமாய்த் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. போன வாரம் அப்பா படபடப்புடன் வியர்த்துக்கொட்டி அவஸ்தைப்பட்டதும், அம்மா மௌனமாக அழும் அழுகையும் அலுவலகக் காகிதங்களை ஆராயும்போதுகூட கண்முன்னால் வந்து பயமுறுத்தின. நண்பர்களைக் கேட்டாயிற்று. அவனைப்போலவே பற்றாக்குறையில் புரளும் அவர்களுக்கும் காடராக்ட் ஆப்பரேஷன், யுடரஸ் அகற்றல், பிள்ளைகளின் இஞ்சினியரிங் சீட், வீட்டுக்கடன் என்று வந்த, வரப்போகிற காரணங்கள் இருந்தன.

நழுவிய நாட்கள்…. தினமும் சொன்னால் கோபிக்கிறான் என்று அவ்வப்போது அம்மா அவன் பின்னாலேயே வந்து ஸ்கூட்டரை உதைக்கும் முன் ‘நியாபகம் வச்சிக்கோ ‘ ஃபோன் பண்ணிப்பாரு’ என்று பட்டும் படாமலும் சொல்லிக்கொண்டிருந்த நாட்கள். பணம் திரட்டும் யோசனையில் பயணித்து சிக்னல் சிவப்புப் பார்க்காமல் தாமதமாய் நிறுத்தி, பாதிசாலையிலிருந்து பின்னால் நகர்ந்து வந்த நாட்கள்… பழனியப்பன் கேட்ட பணத்தையும், பொய் ரசீதுகளையும் ஏற்பாடு செய்துவிட்டு அன்றைய அலுவலக வேலையில் மூழ்கி வீட்டுக் கவலைகளைத் தற்காலிகமாய் மறந்து போனதுபோல நகர்ந்த நாட்கள்.

அலுப்பான சுழற்சியில் நீள்கிற வாழ்க்கையில் சில கணங்கள் சட்டென்று வித்தியாசமாய் மாறிவிடுகின்றன.

பழனியப்பன் அலுவல் நிமித்தம் துபாய் செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருந்ததால், கணக்கு விவரம் பார்த்து வாடிக்கையாளர் தகவல்கள் சேர்த்து வேலை கழுத்தை நெறித்த அன்றுதான் அவன் பிரச்சனைக்கு இயல்பாய் தீர்வு வந்தது.

பழனியப்பன் ‘உங்கப்பாவுக்கு பை பாஸ் பண்ணணுமாமே…. தள்ளிப் போட்டுகிட்டே இருக்கியாம்…’ என்றார்.

‘பணம் பிரட்டணும் சார்… ஒரு லட்சத்துக்குக் கிட்ட வேண்டியிருக்கு . ராவ் உதவி பண்றன்னு சொல்லியிருக்கார்.’

‘அதுவரைக்கும் அப்பாவை நெஞ்சு வலியோட வச்சிருக்கப் போறியா? லோன் போட்டு வாங்கிக்க… எதைத் தள்ளிப்போடறதுன்னு இல்ல?’

‘ஸ்டாஃப் லோன்ல ரூல்ஸ்படி அவ்ளோ பணம் போட முடியாது சார்….’

‘என் பர்சனல் அக்கௌண்ட்லர்ந்து செக்கு போடு. மாசா மாசம் திருப்பித் தா…. ஆபீஸ்ல பாதி வேலை செய்யற. உனக்கு அவசரம்னா உதவி பண்ண மாட்டனா? என்ன ஆளுப்பா நீ? எங்கிட்ட முதல்லயே ஏன் சொல்லலை? இப்பவே செக் போட்டு எடுத்தா… நாளைக்கே ஆக வேண்டியதைப் பாரு.’

மனசு பாரம் விலகி பளிச்சென்று ஆன நாள். ‘என்ன சுலபமாய் முடிந்துவிட்டது. பணம் கொடுத்துதவத் தயாராய் இருக்கும் ஒருத்தரை விட்டுவிட்டு யார் யார் பின்னாலோ அலைந்திருக்கிறேன். என்ன முட்டாள் நான்? என் மேல் அபிமானம் வைத்திருக்கிறார். அவர் சொன்னதுபோல அலுவலகத்தில் பாதி வேலை செய்கிறேன். இதைக்கூட செய்யாமல் இருப்பாரா? முன்னமே கேட்டிருக்க வேண்டும்.’

அதற்குப் பின் உற்சாகமாய், துரிதமாய் நகர்ந்த நாட்கள். பணம்தான் எல்லாப் பிரச்சனைகளையும் எவ்வளவு எளிதாய்த் தீர்த்துவிடுகிறது. சலிப்புடன் எதிர்கொண்ட மருத்துவரை கொஞ்சம் உற்சாகமாகக் கவனிக்க வைத்த பணம். வசதியான மருத்துவமனையில் சௌகர்யமாய் அறுவை சிகிச்சை செய்ய உதவிய பழனியப்பனின் பணம்.

துபாய் பயணிக்கும் முன் மருத்துவமனை வந்து விசாரித்த பழனியப்பன் குடும்பத்துடன் கொஞ்சம் போல நெருங்கிப்போனார். ‘உங்க மாதிரி முதலாளி கிடைக்க மகேஷ் குடுத்துவைச்சிருக்கணும்.’ ‘உங்க குழந்தைகள் எல்லாம் நல்லாயிருப்பா….’ நெகிழ்ந்து போன பெற்றோர்களின் வாழ்த்துகளைப் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு, மகேஷைத் தன் குடும்பத்தில் ஒருத்தனாய் நினைப்பதாய் தன் பங்குக்குச் சொல்லிவிட்டுப் போன , முதலாளி என்று மட்டும் அறியப்பட்ட பழனியப்பன் பெயர், கதாநாயகன் ஸ்தானத்துக்கு உயர்ந்தது.

அப்பா அபாய கட்டத்தைத் தாண்டி வீட்டுக்கு வந்து சேர்ந்து வீட்டில் கவிந்திருந்த இறுக்கமான அவலம் நீங்கி, ஸ்ரீரங்கம் போய்விட்டு வந்து, ரொம்பநாளாய்ப் பார்க்காத தமிழ் சினிமாவுக்குப் போய், மகாராஜபுரத்தின் தோடி ஆலாபனையை மறுபடி நிறைவாக ரசிக்கிற நிம்மதி வந்து, அவன் உற்சாகத்துடன் இயங்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் தான் அலுவலகத்தில் அந்த அசம்பாவிதம் நடந்தது. திங்கட்கிழமை காலை – ஞாயிறு ஓய்வுக்குப் பிறகு துவங்கும் அலுப்பூட்டும் அலுவலகத்துக்கு வந்ததும் வாசலில் சிதறியிருந்த நிறுவனத்தின் கவலை முக வேலையாட்களைப் பார்த்தபடி சந்தேகத்தோடு நுழைந்தான் மகேஷ். அவனுக்காகவே காத்திருந்த கோடவுன் கீப்பர் வேலு அவனை அணுகி அந்த அதிர்ச்சியான செய்தியைச் சொன்னான்.

‘கோடவுன் தீப்புடிச்சி எரிஞ்சி போச்சு சார்… விடிகாத்தால நடந்திருக்கு . கரண்ட் சார்ட் ஆயிடுச்சுன்னு நெனைக்கறேன். ஒதுக்குப்புறமா இருக்குதா… சட்டுன்னு யாருக்கும் தீப்பிடிச்சது தெரியலை. பக்கத்துல யாரோ பாத்து ஃபோன் பண்ணி கீல்பாக்குலந்து ஃபையர் லாரி வர்றதுக்குள்ள எல்லாம் எரிஞ்சி போச்சு. காலைல போய்ப் பாத்தா துணியெல்லாம் எரிஞ்சி சாம்பல் குப்பையா இருக்குது. பழைய கட்டடம், அங்கங்க வயரு தொங்கிகிட்டுக் கிடந்தது. ரிப்பேரு பண்ணுங்கன்னு நிறைய தடவை சொல்லியிருக்கேன் சார். யாருமே கேக்கறதில்லை .’

அந்தச் செய்தியின் கத்திக்குத்து வயிற்றில் கவலையைக் கெல்லியது. மேஜையைத் திறந்து காப்பீடுக் கோப்பைத் தேடி அவசரமாய் மேய்ந்து இன்சூரன்ஸ் தொகையையும் தேதியையும் பார்த்து ஆசுவாச மூச்சு விட்டான். மூன்று மாதங்களுக்கு முன்பு காலாவதியான காப்பீட்டை நீட்டித்திருந்தார்கள்.

ஸ்கூட்டரில் வேலுவை உட்கார வைத்துக்கொண்டு கிடங்கு நோக்கிச் செல்லும்போது எதிர்கொள்ளப்போகும் தொல்லைகள் மனதை அலைக்கழித்தன. அந்த வருடம் எல்லாமே சிக்கல். சுமாராய் நடந்து கொண்டிருந்த ஏற்றுமதியில் விற்பனை அதிகரிப்பு என்று எல்லோரையும் விரட்டி விரட்டிச் சராசரிக்கு அதிகமாகவே விற்று, தேவைக்கதிகமாய் கிரெடிட் கொடுத்து, அகலக்கால் வைத்தாயிற்று. சில துபாய் வாடிக்கையாளர்கள் சரக்கு விற்கவில்லை என்று சொல்லிக்கொண்டு எப்போது கேட்டாலும் ‘இன்ஷா அல்லா’ என்று பணம் தராமல் மூன்று மாதங்களாய்த் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள். வரம்பில் நிற்கும் வங்கி இருப்பைச் சமாளித்தே பாதி வேலை நேரம் கழிந்தது. சரக்கு சப்ளை செய்தவர்களுக்குத் தாமதமாய்ப் பணம் கொடுப்பதால் அவர்களின் கடுமையான பேச்சைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதெல்லாம் போறாதென்று முதுகை முறிக்கும் மயிலிறகாய் உற்பத்திக்கு இருந்த கையிருப்பும் இப்போது எரிந்துபோய்விட்டது.

கிடங்கு இருந்த வெள்ளைக் கட்டடம் லேசாகப் புகைந்து கொண்டிருக்க ஜன்னல்கள், கதவு என்று கட்டடத்தின் துவாரம் இருந்த இடத்திலெல்லாம் தீயின் புகை நாக்கு நீட்டி கறுப்பாய் அப்பிக்கிடந்தது. நிறையப் பேர் இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சுற்றிலும் தண்ணீர் தேங்கி சகதியாயிருந்தது.

‘இன்னும் லேசா அனல் அடிக்குது சார். எல்லாம் எரிஞ்சிடுச்சு. முதல் மாடில டெனிம் கொஞ்சம் மிச்சமிருக்கு. அதுவும் தண்ணில் ஊறி சொத சொதன்னு ஆயிடுச்சு. சுத்தமா ஒண்ணும் தேறாது. நான் பாத்துட்டேன்.”

மகேஷ் கைபேசியை எடுத்து அதன் நியாபகங்களில் வருடி முதலாளி பழனியப்பனைக் கண்டுபிடித்து அழுத்தினான்.

‘மகேஷ் என்ன காலங்காத்தால்…’ என்றது பழனியப்பனின் துபாய் தூக்கக் குரல்.

‘ஒரு கெட்ட செய்தி சார்’ என்று கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொன்னதும் பழனியப்பன் தூக்கம் சுத்தமாய் விலகி அதிர்ந்துபோய் சகஜ நிலைக்கு வர கொஞ்ச நேரம் ஆனது.

‘ஜே சி பென்னி ஆர்டர், ஜான் வின்னர் கன்சைன்மெண்ட் எல்லாத்துக்கும் ஸ்டாக் இருந்ததே…. கொஞ்சம் கூடவா தேறாது…. என்னப்பா பண்றது இப்ப? இன்சூரன்ஸ் கவர் இருக்குதா?

‘ஃபையர் பாலிசி இருக்கு சார். இன்னிக்கே தகவல் சொல்லிடறேன்.’

‘மகேஷ், எல்லா வேலையையும் நிறுத்திட்டு முதல்ல இத கவனி. இன்சூரன்ஸ் க்ளெயிம் பண்ண என்ன செய்யணுமோ அதை உடனே செய். ஆபீஸ்ல வேலை முழுக்கத் தெரிஞ்சவன் நீ ஒர்த்தன்தான். கொஞ்சம் பாத்துக்க. நான் பணம் வசூலிக்கதான் இங்க பழியாக் கிடக்கேன். நாலு நாள்ல வந்துடறேன்.’

கொஞ்சம் போல் ஓய்ந்திருந்த வாழ்க்கைச் சுழல் மறுபடி இயந்திரத்தனமானது. காவல் துறை – காப்பீடு அலுவலகம் என்று துணிக்கிடங்கு எரிந்து சாம்பலான செய்திக்கு எந்தவிதத் தாக்கமும் இல்லாத அதிகாரிகளுடன் மன்றாடும் சூழல். செய்தி கேள்விப்பட்டு நிறுவனத்தின் சப்ளையர்களின் சரமாரியான தொலைபேசித் தொல்லைகளைச் சமாளித்த சூழல்.

காப்பீடு விண்ணப்பம் தயார் செய்தான். இன்சூரன்ஸ் அதிகாரிகள் வந்து இடத்தைப் பார்த்துப் புகைப்படம் எடுத்து அவனிடம் விவரங்கள் சேகரித்துச் சென்றார்கள். அவர்களுடன் சென்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி, கணிப்பொறியில் சரக்கு இருப்பு கணித்து, அதன் மதிப்பைக் கணித்து, அத்தனைக்கும் இன்வாய்ஸ் தேடி, சரக்கு அனுப்பியவர்களுடன் கொஞ்சம் அவகாசம் கேட்டு, வங்கி அதிகாரிகளுடன் பேசி கொஞ்சம் தற்காலிகக் கடனுதவி கேட்டு, வாடிக்கையாளர்களிடம் பேசி… மூன்றாவது நாள் முடிவில் களைத்துப்போனான். பழனியப்பன் அவ்வப்போது கவலையோடு தொலை பேசினார்.

‘இன்சூரன்ஸ் வேலை எல்லாம் முடிச்சிட்டியா மகேஷ்? உன் கைலதான் இருக்கு எல்லாம்.’

‘நடந்துகிட்டு இருக்கு சார். லாஸ் ஆஃப் ப்ராஃபிட் க்ளெயிம் ஒண்ணு போடணும்’ முதலாளி அனுசரணையாய் விசாரித்த தெம்பில்.

வீட்டுக்குப் போகத் தயாராகிக்கொண்டிருந்த ராவ் வந்து ‘இந்த மாசம் சம்பளம் குடுப்பியா?’ என்றார்.

‘டெம்பரரி ஓ.டி கேட்டிருக்கேன். பணம் வசூலிக்கதானே பாஸ் துபாய் போயிருக்காரு.. ஏதாவது கலெக்ஷன் ஆனா தேத்திடலாம்.’

‘கிழிச்சாரு…. துபாய் கன்சைன்மெண்ட் காலி. அப்துல் மாலிக் நாமம் போட்டுட்டான். ஒரு மாசமா ஆளு துபாய்லயே இல்லையாம். நைசா பேசி கன்டெயினர் கன்டெயினரா கிரெடிட் வாங்கி வித்துட்டு ஆளு வேற எங்கியோ போயிட்டான். பணமெல்லாம் புஸ்வாணம் ஆயிடுச்சு. நான் அப்பவே பழனியப்பன் கிட்ட சொன்னேன். அவனுக்கெல்லாம் கிரெடிட் குடுக்காதீங்கன்னு… கேட்டாரா? அதான் துபாய்ல டேரா போட்டு லாயர் பின்னாடி அலைஞ்சிகிட்டு இருக்காரு. அவன் மாட்டமாட்டான்ப்பா…. இதுமாதிரி போனா கம்பெனி உருப்பட்டாப்பலதான்’ நொந்துகொண்டே போன அவரின் கவலை மகேஷையும் தொற்றிக்கொண்டது.

ஏழு மணி , அலுவலகம் மௌனமாய் இருந்தது. இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட விவரம் கணிக்கக் கணிப்பொறியில் கணக்கிட்டுக்கொண்டே வரும்போது தேவைப்பட்ட கோப்பு ஒன்று பழனியப்பன் அறையில் இருந்த நியாபகம் வந்தது. அவர் அறைக்குள் நுழைந்து மேஜை மேல் தேடத் துவங்கினவன் கண்ணில் அந்தக் காகிதம் தென்பட்டது. சரக்கு இருப்பு விவரம் குறிக்கப்பட்ட காகிதம். சரக்குகளைக் கிடங்கிலிருந்து வெளியேற்றி வேறு இடத்துக்குக் கொண்டு சென்றதைத் தெரிவிக்கும் சங்கேதக் குறிப்புகள். தேதி பார்த்ததில் தீ விபத்துக்குச் சன்று முன்பு இடம் பெயர்ந்தது தெரிந்தது. அலுவலகக் குறிப்புகளை இன்னொருமுறை சரிபார்த்தான். அக்கௌண்டண்டின் மேஜையில் துழாவி சரக்குப் போக்குவரத்து சம்பந்தமான கோப்புகளை ஆராய்ந்தான். அதற்கான விவரங்கள் எதுவும் கணிப்பொறியிலோ கணக்கிலோ இருக்கவில்லை. அவனுள் அதிர்ச்சி அலைகள் எழுந்து அடங்க நிரம்ப நேரம் ஆனது.

ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிடங்குக்கு விரைந்து , வேலுவைத் தனியே அழைத்து நைச்சியமாய்ப் பேசி அவன் கண்டுபிடித்ததைச் சொல்லி மிரட்டியதில் அவன் மிரண்டுபோய் ஒப்புக்கொண்டான்.

மூன்று நாட்களுக்கு முன்னரே துணிகளை எல்லாம் ரகசியமாய் அப்புறப்படுத்தி பழனியப்பன் நண்பர் ஒருவரின் நிறுவனக் கிடங்கில் வைத்ததையும் அது சம்பந்தமான ஆவணங்கள் எதுவும் கணக்கில் எழுத வேண்டாம் என்று

பழனியப்பன் ரகசியமாய்ச் சொன்னதையும், உபயோகமில்லாத பழைய சரக்குகள் கொணர்ந்து அடுக்கி வைத்ததையும்…

‘அதுக்கு மேல் எனக்கு ஒண்ணும் தெரியாது சார். இந்த விஷயத்தை நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க. என்னைக் கொன்னு போட்டுடுவார் சார்….’

வியாபார நஷ்டம், சரக்குகள் இடம் மாறியது, தீ விபத்து, பழனியப்பன் ஊரில் இல்லாதது என்று சம்பவங்களின் சேர்க்கையில் விபரீதம் மெல்ல அவனுள் இறங்கியது. ‘அக்கிரமம். கிரிமினல் குற்றம்…. வியாபாரத்தில் நஷ்டம் என்றால் வேறு யாரையாவது ஏமாற்றுவது என்ன நியாயம்? தீ விபத்தைத் திட்டமிட்டு செய்துவிட்டு சந்தேகம் வராமல் இருக்க வெளியூர் போய் ஒளிந்துகொண்டு…. என்ன கீழ்மை… இதை என்னைச் செய்ய வைத்து என்னையும் உடந்தையாக்கிவிட்ட அநியாயம்… இந்தக் கிராதகன் முகத்தில் விழித்தாலும் பாவம்.’

முதலாளி என்கிற மரியாதை எல்லாம் தொலைந்து போய் அவரை நினைத்தாலே ஆத்திரம் மேலோங்கியது. தூங்கும்போதும் கூட ஆற்றாமை அடங்காமல் மனது ஓலமிட்டது. திரும்பத் திரும்ப யோசித்து ஒரு முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு அவன் தன்னைத் தயார் செய்துகொண்டான். சில நாட்கள் கழித்து வந்த பழனியப்பன் இயங்கிய விதத்தில் அவரிடம் வேலு விஷயத்தைச் சொல்லியிருப்பான் என்று தோன்றியது. எதற்கெடுத்தாலும் மகேஷைக் கூப்பிடுபவர் அன்று அவனை முற்றிலுமாய்ப் புறக்கணித்ததில் இருவருக்குமிடையே நெருடலான மௌனம் தொடர்ந்தது. நாள் முழுவதும் மனசு லயிக்காமல் வேலை செய்து கொண்டிருந்தவனை, அவன் எதிர்பார்த்தபடியே அலுவலகம் காலியானதும் பழனியப்பன் அழைத்தார். மகேஷ் மிக நீண்டதொரு வாக்குவாதத்துக்கு மனத்தளவில் தயாராகி, பலவிதமாய் எழுதி எழுதி கிழித்துப்போட்டு இறுதியில் சுருக்கமாய் எழுதின ராஜினாமா கடிதத்தையும் கையில் எடுத்துக்கொண்டு அவர் அறைக்குள் நுழைந்தான். அவர் அதை எதிர்பார்த்தவர் போல அவனுக்கு இருக்கையைக் காட்டிவிட்டு அவர் கையெழுத்திட வேண்டிய காகிதங்களில் இயந்திரத்தனமாய்க் கிறுக்கியபடி இருந்தார். மகேஷ் மௌனமாகக் காத்திருந்தான். அவருடன் பேசவேண்டியதை மனதுக்குள் கோர்த்துக்கொண்டான்.

பழனியப்பன் காகிதங்களில் கையெழுத்து இட்டு முடித்து, பேனாவை மூடி வைத்துவிட்டு அவனைத் தலை நிமிர்ந்து பார்த்துப் பரிவுடன் வினவினார்.

‘அப்பா உடம்பு சௌக்கியமா இருக்காரா மகேஷ?’

– அமுத சுரபி, ஜனவரி 2003 சிறுகதைப் போட்டி இரண்டாம் பரிசுக் கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *