விலங்கு மனத்தால்

 

தொலைபேசி இடைவிடாமல் அடித்தபடி இருந்தது. நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்கலாம் என்ற நினைப்புடன் விழித்து எழுந்து கொண்டான் ராகவன். பகல் எல்லாம் பட்ட அலைச்சல் உடம்பை முறித்துப் போட்டு விட்டிருந்தது. தூக்கக் கலக்கத்தில் மணி இரண்டு இருபது.

“கனநேரமா ரெலிபோன் அடிக்குது. ஒருக்கா ‘போனை’ எடுங்களேன்” போர்வை க்குள்ளிருந்து மனைவி தேவகி முனகினாள். ராகவனின் கைகள் சுயமாகத் தொலை பேசியின் ரிசிவரைத் தேடியது.

“ஹலோ! யார் கதைக்கிறது?”

“அது நான். நான், பரணி!”

“பரணியா? அது யார் பரணி? எனக்கு ஞாபகம் இல்லை.”

“உன்னுடைய நண்பன் பரணி.”

கொஞ்ச நேரமாக இருபுறமிருந்தும் பேச்சுக்குரல் வெளிவரவில்லை. பின்னர் பரணிதான் பேச்சைத் தொடர்ந்தான்.

“நீ ஏன் தான் இன்னமும் கோபமாக இருக்கிறாயோ எனக்குத் தெரியேல்ல.”

தொலைபேசியை ஆவேசத்துடன் அடித்து மூடினான் ராகவன். மூச்சு புஸ்சென்று இரைந்தது அவனுக்கு. உறக்கம் தேன்கூடு கலைவது போலக் கலைந்தது. இந்த உரையாடலினால் சங்கடப்பட்டு, எழுந்து கட்டிலில் அமர்ந்தாள் தேவகி.

தொலைபேசி தொடர்ந்தும் அடித்தது. அமைதியாக இருந்த இரவுப் பொழுதை அந்தச் சத்தம் உலுப்பி எடுத்தது.

“இஞ்சை பாருங்கோ, ஏன் இன்னமும் பிடிவாதமாக இருக்கிறியள்? பழசை மறவுங்கோ. ஒருக்கா மனம் விட்டு ஆறுதலா கதையுங்கோ. எல்லாம் சரிவரும்.”

“பதினைஞ்சு வருஷமா ஒரு கதை பேச்சில்ல. இப்ப ஏன் திடீரெண்டு எடுக்கிறான். ஏதோ புயலைக் கொண்டு வரப்போறான்!”

“அப்பிடியெண்டில்ல. நேற்றுக் கலியாண வீட்டிலை நடந்ததை யோசிச்சுப் பாருங்கோ. கனகாலத்துக்குப் பிறகு சந்திச்சனியள். இரண்டு பேரும் மனம் விட்டுக் கதைச்சிருக்கலாம். பரணி கனதரம் உங்களோடை கதைக்கவெண்டு முயற்சி செய்த தையும், நீங்கள் விலகி விலகிப் போனதையும் நான் கண்டனான்.”

“என்னால முடியேல்லத் தேவகி!”

“அது, அந்த நாளிலை முரண்டு பிடிக்கிற வயசிலை நடந்தது. இப்ப ஆடி ஓய்ஞ்ச பம்பரம். இனியும் உதுகளை தூக்கிப் பிடியாதையுங்கோ.”

அதற்கப்புறம் ராகவனுக்கு நித்திரை வரவில்லை. எழுந்து சென்று ஒரு கிளாஸ் தண்ணிணி­ரை மடக்கு மடக்கென்று குடித்தான். இருளிற்குள் ஒரு கதிரையில் அமர்ந்தான். பரணி மீது கொண்ட காழ்ப்புணர்வு இன்னமும் பாறை போல அவன் மனதினுள் இறுகிக் கிடந்தது.

தேவகி மெதுவாகப் பூனைப்பாதங்கள் எடுத்து ராகவனுக்குச் சமீபமாக வந்து நின்று கொண்டாள். இரவின் குளிரிலும் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. இப்படியான வேளைகளில் ராகவனின் உரப்பு எதற்குமே அடங்க மாட்டாது.

“தேவகி, ரிசிவரை வெளியாலை எடுத்து வைச்சிட்டு நீ போய்ப் படு.
நான் இதிலை கொஞ்சம் இருந்திட்டு வாறன்.”

சிறிது நேரம் ராகவனுக்குப் பக்கத்தில் நின்றுவிட்டு, திரும்ப வந்து கட்டிலில் சரிந்து கொண்டாள் தேவகி. எத்தனை மணிக்கு வந்து ராகவன் படுத்தானோ தெரிய வில்லை. தேவகி திரும்பக் கண் விழித்த போது, ராகவன் அவள் அருகினில் படுத்திரு ந்தான். அவன் உறங்கவில்லை என்பதை மட்டும் அவள் அறிந்து கொண்டாள். தேவகி பெரு மூச்சுடன் திரும்பிப் படுத்தாள்.

கார் தன்பாட்டில் ஓடிக் கொண்டிருந்தது. தினமும் போய் வரும் பாதை. இரவுநேரம் இரண்டு மணி. வாகனப் போக்குவரத்து ஏறக்குறைய இல்லை. இதுவரையும் பின்னாலே வந்து கொண்டிருந்த அந்தக் கார், திடீரென வேகம் பிடித்து ராகவனின் காரை ‘ஓவர்டேக்’ செய்து ஓடத் தொடங்கியது. யாராக இருக்கலாம்?

மனம் கங்காருப்பாய்ச்சல் போல தாவத் தொடங்கியது. கலைத்துக் கொண்டு போனதில் அழகிய பெண்ணொருத்தி பிடிபட்டாள். அவள் அனித்தா!

வேலைக்கு வந்து மூன்று வாரங்களாகின்றன. சற்றே குள்ளமான இத்தாலி நாட்டுப் பெண். இங்குள்ள பெரும்பாலான பெண்களைப் போல அவள் சிகரெட் புகைப்பதில்லை. இனிமையான குரல்.

அனித்தாவுடன் இன்னமும் ராகவன் பழகத் தொடங்கவில்லை.

இந்த வெட்டுக் காட்டுதலின் பின்னால் ஏதாவது வில்லங்கம் தொடரலாம்!

அடுத்தநாள் வேலைக்கு வந்ததும் முதல்நாள் ஒன்றுமே நடவாதது போல் காரிய ங்களைப் பார்க்கின்றாள். குறும்புகளைச் செய்துவிட்டு சாது போலப் போகின்றாள். வேலை முடிந்ததும் திரும்பவும் அதே வெட்டுக் காட்டு. இது மீசை வைத்த பூனைதான். பார்த்து விடலாம் ஒரு கை எனத் தீர்மானித்தான் ராகவன்..

ஆனால் இன்று ராகவனுக்கு நடந்ததோ முற்றிலும் எதிர்பாராத அதிர்ச்சி. வழமையாக நடக்கும் விளையாட்டுடன், கார் கண் அடித்தது. இடமும் வலமும் ‘சிக்னல் லைற்’ போடப்பட்டது. பின் ‘ஃபுல் பீம்’. இப்படியே மூன்று தடவைகள்.

அடுத்து வந்த ‘றவுண்ட் எபற்றில்’ கார் ராகவனிற்கு கண்ணாமூச்சி காட்டி விட்டு வேறு திசை நோக்கி ஓடித் தப்பியது. ‘துரத்திப் பிடி’ என்றது குரங்கு மனம். நிலை தடுமாறிய ராகவன் இரண்டு தடவைகள் ‘றவுண்ட் எபற்றைச்’ சுற்றி விட்டு அவள் போன திசையிலேயே காரை வேகமாக ஓட்டினான்.

கார் ‘பொனற்றுக்குள்ளிருந்து’ கரும்புகை வளையங்கள் žறிக் கொண்டு எழுந்தன. ஓரமாகக் காரை நிற்பாட்டினான். இருக்கவே இருக்கின்றான் நண்பன் பரணி. கிருஷ்ணபரமாத்மா போல் எந்த நேரமெண்டாலும் காட்சி கொடுத்து விடுவான்.

பரணிக்கும் ராகவனுக்குமான நட்பு இன்று நேற்றுத் துவங்கியதல்ல. பதினைந்து வருடங்கள் பரீட்சயம்.

“ஹலோ பரணி! நான் ‘பவுண்றி’ றோட்டிலை நிக்கிறன். கார் பிரேக் டவுணாப் போச்சு. ஒரே பனியும் குளிருமா இருக்கு. உடனை வா!”

அடுத்த வாரம் அனித்தா காட்டிய அத்தனை விளையாட்டுக்களையும், அவள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ராகவன் காட்டத் தொடங்கினான். விளையாட்டு வினை யில் ஆரம்பிக்கத் தொடங்கியது. பாதை சறுக்கியது. மூன்றே மூன்று வாரங்களில் அவள் அவனது வசப்பட்டாள். அவன் அவளது!

இராகவன் பாட்டொன்றை முணுமுணுத்துக் கொண்டே வீட்டிற்குள் புகுந்தான்.

“இதென்ன அர்த்தசாமத்திலை பாட்டு. பேசாமல் படுங்கோ”

“எல்லாரும் போகேக்கைதான் ‘சென்ற்’ அடிப்பினம். இதென்ன இந்த மனிசன் எண்டைக்குமில்லாமல் வரேக்கையும் உந்த நாத்தத்தை அடிச்சுக் கொண்டு வருகுது.”

“இல்லைத் தேவகி, வியர்வை நாத்தம். அதுதான் பர்ஃப்யூம் அடிச்சனான்.”

“அப்ப இவ்வளவு நாளும் வேலைக்குப் போகேல்லையோ?”

தேவகிக்கு அவனது இந்த வழமைக்கு மாறான செயல்கள் விசித்திரமாக இருந்தன. ஒருநாளைக்கு இரண்டு மூன்று தடவைகள் குளிப்பதும், அர்த்தசாமத்தில் ஒரு சில சினிமாப்பாடல்களின் ஆரம்ப வரிகளை சுருதி கூட்டிப் பாடுவதும் வியப்பைத் தந்தது. ஒவ்வொரு நாளும் அரைமயக்கத்தில் விழித்துக் கொண்டு ராகவனை நோட்டம் விடத்தொடங்கினாள் தேவகி.

நாற்பது தாண்டினால் நரிக்குணம். நோய் நொடிகள் விருந்தாளியாக வந்து உடம்பில் ஒட்டிக் கொண்டுவிடும். இந்த நரிக்குணத்துக்குள்ளே பெண் வேட்டையும் அடங்கும் என்பதை தேவகி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஊரிலே பின்னும் முன்னுமாகக் கலைத்து, பெரிய சண்டை சச்சரவுகளுக்கிடையில் நடந்தது அவர்கள் திருமணம்.

இங்குள்ள வீடுகளில், அறைகளின் கதவுகளுக்கு பூட்டும் இல்லை, திறப்பும் இல்லை. எல்லாமே திறந்த மயம்தான். இதில் பிள்ளைகள் பெற்றோருக்கு முன்னால் காதலர்களுக்கு முத்தம் கொடுப்பார்கள், தந்தை உடனிருக்க வளர்ப்புத்தந்தையுடன் தாய் குதூகலம் கொள்வாள், தாய் அறிந்திராத காதலியுடன் தந்தை சல்லாபிப்பார். இது இங்குள்ளவர்களின் கலாச்சாரம். நாதியற்ற உலகில் நடிப்புச் சுதேசிகளுக்கா பஞ்சமில்லை.

தேவகி விட்டுப் பிடிக்க நினைத்தாள். வீறாப்புடன் நடந்து கொண்டால் வீரியம் கொண்டு விடலாம். எதிர்வாதம் என்பது சொந்த நாட்டிலேயே எடுபடாத போது, இந்த நாட்டில்? ஏன்தான் இப்படிக் கண் காணாத இடத்திலை கூட்டி வந்து நாலு சுவருக்குள்ளை வைச்சு என்னை இப்பிடிச் சித்திரவதை செய்கிறாரோ? தேவகி ராகவனுக்கு எந்தக் குறையுமே வைக்கவில்லை. அப்படியிருக்கும்போது ஏன் இந்தச் சறுக்குதல் ஏற்பட்டது. இப்பொழுது தான் விடும் பிழைகளை மறைக்க திட்டுகள் அவள் மேல் திரும்புகின்றன. வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வருவான் என்ற நிலை போய்விட்டது.

யார் அந்தப் பெண்? என அறிவதில் தேவகி நாட்டம் கொண்டாள். ராகவன் ஒவ்வொருநாளும் வேலை முடிந்து தாமதமாகவே வந்தான்.

அப்பொழுதுதான் தந்தைக்கு ‘žரியஸ்’ என்று ராகவன் இலங்கை போக வேண்டி வந்தது. இது ஒரு நல்ல திருப்பம் என தேவகி நினைத்துக் கொண்டாள்.

அந்த நேரத்தில் ராகவன் வீட்டிற்குப் ‘பெயின்ற்’ அடித்துக் கொண்டிருந்தான். அரையும் குறையுமாக இருந்த ‘பெயின்ற்’ வேலையை பரணிதான் செய்து முடித்தான். பரணியின் குழந்தை இறந்து அப்போது நான்கு மாதம்கூட முடிந்திருக்கவில்லை. அந்தக் கவலைக்குள்கூட நண்பனுக்கு உதவி செய்தான்.

ராகவன் போய் ஒரு கிழமைக்குள் அது நடந்தது. ஒரு மாலை நேரம். குழந்தையின் தேகம் அனலாய்க் கொதித்தது. பொறுத்திருந்து பார்த்தாள். குறையவில்லை. செய்வதறியாது திகைத்த போது, ‘என்னவெண்டாலும் பரணியைக் கூப்பிடு’ என்று ராகவன் சொல்லிவிட்டுப் போனது ஞாபகத்திற்கு வந்தது. பரணிக்கு போன் செய்தாள். அவன் வரும் வரைக்கும் ‘ஐஸ்வாட்டரை’ ஒத்தியபடியே இருந்தாள். ‘தேமோ மீட்டர்’ 104 காட்டியது.

“தங்கைச்சி ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோ. நான் ஹொஸ்பிட்டலுக்குக் கூட்டிக் கொண்டு போய்க் கூட்டி வாறன்” என்று பரணி சொன்னான்.

வைத்தியசாலையிலிருந்து திரும்பி வரும்போது இரவு பதினொன்று ஆகிவிட்டது. குழந்தயை கட்டிலில் படுக்க வைத்து விட்டு, பரணிக்குத் தேநீர் தயாரித்தாள் தேவகி. தேநீரைக் எடுத்துக் கொண்டுபோய் கையில் குடுக்கும் போதுதான் அது நடந்தது.

“எப்பிடித்தான் எனக்குப் பலம் வந்ததோ தெரியேல்லை. ஒரு யானையின் பலம். ஒரே தள்ளு. பரணி சுவரிலை மோதிக் கீழே விழுந்தான். அந்த நேரமாப் பாத்து நான் போய் அறைக்குள்ளை ஒளிஞ்சு கொண்டன்” தேவகி சொல்லச் சொல்ல ராகவனின் தேகம் சூடேறியது. நெஞ்சிற்குள் நெருப்பு கனல் விட்டு எரிந்தது.
இத்தனை வருடமாக பரணி மீது கொண்டிருந்த நட்பு, ஒரு நொடியில் விழுந்துடையும் கண்ணாடித் துண்டு போலாகியது. பரணி அவ்வளவிற்குக் கெட்டவனா? ராகவனால் நம்ப முடியவில்லை.

அன்று அவர்களிக்கிடையில் விழுந்த விரிசல், அதன் பிறகு ஒட்டவேயில்லை.

அந்தச் சம்பவம் ராகவன் மனதில் ஏதோ ஒரு சிந்தனையை விதைத்திருக்க வேண்டும். அது ராகவன் அனித்தா மீது கொண்ட வேட்கைக்கு வேட்டு வைத்தது. தேவகி மீது கொண்ட மதிப்பை பன்மடங்காகியது.

வெளியே காற்று கடும் குளிருடன் பலமாக வீசியது. மணிக்கூட்டைத் திரும்பிப் பார்த்தான் ராகவன். நாலு மணி.

“தேவகி! ரிசிவரை எடுத்து வைச்சிட்டுப் படு”

ராகவனின் மனம் அமைதியடைந்து விட்டது என்பதை புரிந்து கொண்டாள் தேவகி. மூப்பு வந்தவுடன் எல்லாருடைய மனம் ஒரு பக்குவ நிலைக்கு வந்துவிடுகின்றது என்பதை உணர்ந்தாள். தொலைபேசியை சரி செய்துவிட்டு நிம்மதியாக உறக்கத் திற்குப் போனாள். கணப்பொழுதுதான். தொலைபேசி மீண்டும் அடித்தது.

“நான் எடுக்கிறன். நீ இரு தேவகி” என்றபடியே எழுந்து கொண்டான் ராகவன்.

“ஹலோ யார் கதைக்கிறது?”

“நான் பரமசிவம் கதைக்கிறன். உங்களுக்கு பரணி எண்பவரைத் தெரியுமா?”

“ஓம். ஓம். பரணி என்னுடைய பெஸ்ற் பிறண்ட். ஏன் ஏன் இப்ப கேக்கிறியள்?”

“பரணி எனக்கு ஒரு வகையிலை உறவு எண்டுகூடச் சொல்லலாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாலை அவர் காட் அற்றாக்கிலை இறந்து போனார். அவருடைய மேசையிலை உங்கடை ரெலிபோன் நம்பர் இருந்தது. மேசையிலை இருந்தபடியே அவர் உயிர் பிரிந்து போயுள்ளது. அதுதான் உங்களுக்கு சொல்லுவோமெண்டு எடுத்தனான்.”

“ஓ மை கோட். இதோ இப்பவே நான் வெளிக்கிட்டு வாறன். ”

“ஓம் அதுதான் நல்லது. அவைக்கும் அதிகமாக சொந்தக்காரரோ நண்பர்களோ கிடையாது. நீங்களும் வந்தா மெத்தப் பெரிய உதவியா இருக்கும்.”

பரணியின் வீட்டு விலாசத்தைப் பெற்றுக் கொண்டான் ராகவன். தேவகிக்கு பரணியின் இறப்பு அதிர்ச்சியைக் கொடுத்தது. இருவரும் புறப்படத் தயாரானார்கள். தேவகி சுவாமிப் படத்துக்கு முன்னால் நின்று கும்பிட்டுக் கொண்டாள். குளிருக்குள் நடுங்கிக் கொண்டே வீட்டைப் பூட்டிவிட்டு இருவரும் காரினுள் ஏறிக் கொண்டார்கள்.

கார் மெதுவாக வீட்டை விட்டுப் புறப்பட்டது. ராகவன் திரும்பி, பக்கத்து சிற்றிலிருந்த தேவகியைப் பார்த்தான். அவள் கண்களில் நீர் திரண்டு இருந்தது. அவனின் பார்வையைச் சந்திக்க விரும்பாமல் கீழே குனிந்து கொண்டாள் தேவகி. பதினைந்து வருடத்து ரகசியம் அவள் மனதினுள் பதுங்கிக் கிடந்தது. பரணி பற்றி பதினைந்து வருடங்களுக்கு முன்னர் தேவகி ராகவனுக்குச் சொன்ன புகார் முற்றிலும் கற்பனை வாய்ந்தது. அதில் பரணி அவர்களை ஹொஸ்பிட்டல் வரை கூட்டிச் சென்றது மாத்திரமே உண்மை.

அப்படியொரு கற்பனையை அன்று அவள் சொல்லியிராவிடில், இப்பொழுது அனித்தா ராகவனின் மனைவியாக இருந்திருக்கக்கூடும் என தேவகி நம்புகின்றாள். தேவகி ராகவனை பரிபூரணமாக நம்பியிருந்தாள். அவன் அந்தரங்கங்களை ஒருபோதும் கிளறிப்பார்த்தது கிடையாது. புராதன காலத்துப் புழுதியில் இருக்க விரும்பாமல் தனக்குரிய பாதுகாப்பைத்தான் தேடிக் கொண்டாள். ஆனால் பழி ஓரிடம் பாவம் ஓரிடமாகிப் போய்விட்டது. பாவம் பரணி.

கார் ஜோராக ஓடிக் கொண்டிருந்தது. பதினைந்து வருடத்து ரகசியம் தேவகியின் மனதில் இப்பொழுதும் பதுங்கித்தான் இருக்கின்றது. 

தொடர்புடைய சிறுகதைகள்
மூன்றுவார விடுமுறை கிடைத்தது. வியட்நாம் போவதற்கு விரும்பினேன். அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த பின்பு புறப்படும் முதல் பயணம். வியட்நாம் - வல்லரசான அமெரிக்காவை நடுங்க வைத்து நிமிர்ந்த தேசம். ஆனால் நண்பன் 'வான் மான் நூஜ்ஜின்' அப்படியல்ல; எப்போதுமே எங்களைச் சிரிக்க வைப்பான். ஒவ்வொரு ஈஸ்டர் ...
மேலும் கதையை படிக்க...
எங்குமே திருவின் படைப்புகளைப் பற்றிய பேச்சுத்தான். இலக்கியத்தில் திரு புகழ்பூத்த எழுத்தாளராகிவிட்டார். அவரது 'நியூ வேவ்' பாணியிலான நடை இளைஞர் கூட்டத்தைக் கவர்ந்து கொண்டது. பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயிலும் மாணவியர் கூட்டமொன்று அவரைச் சந்திப்பதற்காக புறப்பட்டிருந்தது. சாந்தி அவர்களிற்கு தலைமை வகித்தாள். ...
மேலும் கதையை படிக்க...
துரை இன்று வியாழக்கிழமை. 'ரீம் லீடர்' வந்து ஆளியை அழுத்தி வேலையத் தொடக்கி வைத்தான். 'ஃப்றீ வே'யிலை வாகனங்கள் வாற மாதிரி 'சுக்கா சுக்கா' எண்டு புத்தகக் கட்டுகள் பெல்றில் வந்து கொண்டிருந்தன. புழுத்த மணமொன்று மந்தமாருதமாகிறது. மனித இயந்திரங்களாக நாங்கள் இருவரும்! ...
மேலும் கதையை படிக்க...
இது எமது தபால்பெட்டிக்கு வந்திருந்த நாலாவது அநாமதேயக் கடிதம். கடந்த இரண்டு வாரங்களில் இதேமாதிரியான மூன்று கடிதங்கள் வந்திருந்தன. "I buy houses, gas or no gas, call Tim." - கடிதத்தில் இருந்தது இவ்வளவுந்தான். இதுபோன்ற கடிதங்கள் இனிமேலும் வரலாம். ...
மேலும் கதையை படிக்க...
நண்பன் சந்திரனும் அவரது குடும்பத்தினரும் கார் 'அக்ஷிடென்ற்' ஒன்றில் மாட்டிக் கொண்டு விட்டார்கள். இப்போதுதான் சந்திரன் ரெலிபோன் எடுத்துச் சொல்லியிருந்தான். விபத்து நடந்தது மாலை நான்கு மணிக்கு. இப்போது நேரம் இரவு 10 மணி. அவரின் மகன் கார் ஓடிக்கொண்டு போகும்போது ...
மேலும் கதையை படிக்க...
சற்குணம் கோயிலுக்கு முன்பாக நின்று தேங்காய் ஒன்றை வீசி எறின்றார். உடைந்த தேங்காயின் பாகங்கள் மூலைக்கொன்றாக சிதறி தமிழரின் வாழ்வு போலப் பறக்கின்றன. சற்குணம் கனடா போகவென்று கொழும்பு வந்து ஒரு வருஷமும் ஆறு மாதங்களும் உருண்டோடிவிட்டன. ஆனாலும் சற்குனம் கொழும்பைவிட ...
மேலும் கதையை படிக்க...
புரட்டாதி மாதம். சிட்னியில் குளிர் குறையத் தொடங்கிவிட்டது. மாலை நேரம். துவாரகன் தனது நண்பி லோறாவுடன் நியூமன் என்ற நோயாளியை சந்திக்கப் போயிருந்தான். துவாரகனும் லோறாவும் மருத்துவபீட இறுதிவருட மாணவர்கள். பேராசிரியர் நெயில் றொபின்ஷன் பாடமொன்றின்---long integrated population medicine (IPM)--- ...
மேலும் கதையை படிக்க...
இன்று காலை 11 மணிக்கு எனக்கொரு ஹொஸ்பிட்டல் அப்பொயின்மன்ற் இருந்தது. தேநீர் குடித்துவிட்டு அவசர அவசரமாகப் புறப்படுகின்றேன். இந்தத்தடவை இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்காமல் ஹொஸ்பிட்டலைவிட்டு நான் திரும்பப் போவதில்லை. மூன்றாவது தடவை ஒப்பரேஷன். முதன்முதலில் இந்த வைத்தியசாலைக்கு வந்தபோது, 'Fistula' என்று அந்த இளம் ...
மேலும் கதையை படிக்க...
அலாரம் அடிக்கிறது. விடியற்புறம் நான்கு பதினைந்து. காலைக் கடன்களை அவசரமாக முடித்துக் கொண்டு, உடுப்புகளை அணிந்து கொள்கின்றேன். மனைவி தேநீரை நீட்டுகின்றாள். தேநீரை நின்றபடியே ஒரே இழுவையாக இழுத்துக் கொள்கின்றேன். "என்ன எழும்பியாச்சுப் போல!" "இரவு முழுக்கப் பிள்ளை நித்திரை கொள்ள விடேல்லை!" "சரி போட்டு ...
மேலும் கதையை படிக்க...
சிட்னியின் புறநகர்ப் பகுதியில்தான் அந்த முதியோர் பராமரிப்பு இல்லம். அதன் பின்புறமிருந்த கார்த் தரிப்பிடத்தில் காரை நிற்பாட்டினேன். நண்பன் சிவத்தின் அம்மா நேசம் அங்குதான் இருக்கின்றார். அவரை அங்கு கொண்டுவந்து விட்டுப் போனதில் எனக்குப் பெருத்த சந்தேகம். தன்னைத்தானே கவனித்துக் கொண்டு, ...
மேலும் கதையை படிக்க...
கற்றுக் கொள்வதற்கு!
நடை
ஒரு வகை உறவு
விளக்கின் இருள்
மதங்களின் பெயரால்
கனவு மெய்ப்பட வேண்டும்!
அனுபவம் புதுமை
இருவேறு பார்வைகள்
பறக்காத பறவைகள்
கேள்விகளால் ஆனது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)