விறைத்த சோறும் பக்கோடாத் தூளும்!

 

ஆட்டோவில் இருந்து முத்துலட்சுமி இறங்குவதைப் பார்த்துவிட்டு, வீட்டு வாசலில் மற்ற சிறுசுகளுடன் கதை பேசிக்கொண்டு இருந்த பாவாடை தாவணி உள்நோக்கி ஓடியது. உள்ளே போனவள், தன்னைப் பெற்றவளிடம் என்ன சொல்லிஇருப்பாள் என்று முத்துலட்சுமிக்குத் தெரியும்.

“அம்மா… ஓடிப் போன அத்தை வந்திருக்கா!”

பட்டு, சங்கரிக்குப் பிறகு பிறந்தவள் முத்துலட்சுமி. அவள் தன் பதினேழு வயசில் காதலினாலோ அல்லது காதல் போன்றதொரு பிரமையினாலோ, தலித் இளைஞன் ஒருவனுடன் ஓடிப் போக, அந்தக் குடும்பத்து அங்கத்தினர் பெயர் அட்டவணையிலிருந்து அவள் பெயர் நீக்கப்பட்டு, ‘ஓடிப் போனவள்’ என்று எழுதப்பட்டுவிட்டது.

சாதி விட்டுச் சாதி மணந்தாள் என்பதைத் தவிர, அவள் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருக்கிறாள். பட்டுவைவிட, சங்கரியைவிட!

அவள் பிறந்த வீட்டில் குளிர்ந்த தண்ணீர் வேண்டுமென்றால், இன்றும் மண்பானைதான். ஆனால் மாரிமுத்து, மனைவிக்காக வீட்டில் ஃப்ரிஜ் வாங்கி வைத்திருக்கிறான். இன்னும் கேஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் எல்லா வசதிகளும் உண்டு.

ஆனாலும், சில விஷயங்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

முத்துலட்சுமியின் பிறந்த வீடு, கோயில் பார்த்த வீடு. வாசல் நிறைந்த கோலம். வெள்ளிக் கிழமை, விசேஷ தினங்களில் கோலத்தைச் சுற்றிச் செம்மண். காலையும் மாலையும் பாசுரம், சகஸ்ரநாமம். அகலத் திண்ணையில் அவள் அப்பாவைச் சுற்றி ஏழெட்டுக் குழந்தைகள்…

‘ஸஸ ரிரி கக மம… ரிரி கக மம பப…’

வண்டுகளின் ரீங்காரம் போல ஒரே சுருதியில் சங்கீதம். அதைத் தாண்டி உள்ளே போனால், ஆளோடி. முற்றம், நாலு பக்கமும் தாழ்வாரம், காமிரா அறையில் முத்துலட்சுமியின் சகோதரிகளோ மன்னியோ பிரசவித்து, குழந்தை அழுகுரலுடன் உரமருந்து வாசனை… இவை அத்தனை யையும் மீறி, அம்மா செய்யும் பாகற்காய் பிட்ளையின் மணம்.

மாரியின் அன்புக்கு உறை போடக் காணாது இதெல்லாம்! என்றாலும், இந்தக் குடும்பத்து வாசனைகளிலேயே ஊறிப் போனவளாதலால், ஓடிப் போன கன்று திரும்ப வந்து நின்று குரல் கொடுப்பது போல, எப்போதாவது முத்துலட்சுமி இங்கே வருவாள்.

”அம்மா, ஓடிப் போனவ வந்திருக்கா!” அண்ணன்காரன் ராமநாதன் உள்ளே பார்த்துக் குரல் கொடுப்பான். அப்பா, அப்போதுதான் சுருதி கலைந்ததை உணர்ந்தாற் போல சுருதிப் பெட்டியில் தலையை நட்டுக்கொள்வார்.

முதன்முதலில் இந்த வார்த்தையைக் கேட்டுவிட்டு விசும்பி அழுதிருக்கிறாள் முத்துலட்சுமி. ”ஆமா, ஓடிப் போனவதான்! ஆனா, உங்ககிட்ட வயித்துக்கு வேணும், கட்டிக்கத் துணி வேணும்னு கேட்டு வரலையே! என்னவோ உங்களையெல்லாம் பார்க்கணும் போலத் தோணிச்சு…”

அவள் வாசலில் நின்று புலம்புவதைக் காட்டிலும் உள்ளே உட்கார்ந்து அழுவதே மேல் என நினைத்தோ என்னவோ… அந்தக் குடும்பம் அவளை வீட்டினுள் அனுமதித்தது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு குத்து, முகத்தின் மீது ‘நச்’சென்று விழும். அதுவும், ராமநாதனின் வாய் தேள் கொடுக்குதான்.

”என்ன முத்து… உன் புருஷனுக்குக் கோழி, மீன் எல்லாம் சமைச்சுப் போடக் கத்துக்கலையா நீ! ஆமா, மீன் குழம்புன்னா, பெருங்காயம் கரைச்சுவிடணுமா, வேணாமா?”

”…….”

”அம்மா, உன் அருமைப் பொண்ணுக்கு இன்னும் கொஞ்சம் ரசம் ஊத்து. பாவம், அங்கேஎல்லாம் வெறும் காரக்குழம்பாயில்லே இருக்கும்!”

ஆரம்பத்தில் எல்லாம் முத்துலட்சுமி அந்த வீட்டுக்கு வந்தால் ஒன்றும் சாப்பிட மாட்டாள். தண்ணீர்கூடக் குடிக்க மாட்டாள். கொண்டு வந்த ஒரு சீப்பு ரஸ்தாளியையும் முற்றத்துத் தூண் ஓரமாகப் பதித்திருக்கும் சந்தனக் கல்லின் மீது வைத்துவிட்டு, காலைத் தொங்கப் போட்டபடி சிறிது நேரம் உட்கார்ந்திருப்பாள்.

வாசல் திண்ணையின் ‘ஸஸ ரிரி’ வண்டுகள் அவளது இதயத்துள்ளும் துளைப்பது போல்…

சற்றைக்கெல்லாம் கிளம்பிவிடுவாள். அப்புறம் அப்புறம்தான்… அவள் வயிற்றைச் சாய்த்துக்கொண்டுவந்து நின்றபோது, பெற்றவளால் விட்டேற்றியாக சமையலறைக்குள் போய்ப் புகுந்துகொள்ள முடியவில்லை.

”அடி ரஞ்சீ, அத்தைகிட்டப் போய்க் காபி குடிக்கிறாளான்னு கேளு, போ!”

”எந்த அத்தை… ஓடிப் போன…”

”உஷ்…”

முத்துலட்சுமியின் கண்களில் நீர் முள்ளாகக் குத்தும். காலையில் கணவனிடம் சண்டை போட்டது நினைவில் வந்து நிற்கும்.

”என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? உங்களுக்கென்ன, என்னைக் கல்யாணம் செஞ்சிட்டதுக்காக நீங்க ஒரு தியாகமும் செய்யலே…”

”ஏன் செய்யலே? உனக்குக் கருவாடு நாத்தம் பிடிக்காது, மீன் பிடிக்காது, கறி பிடிக்காது. நானும் சரின்னு நீ சமைச்சுப் போடற வாழக்காப் பொரியலையும் வெண்டக்கா சாம்பாரையும் சாப்பிட்டுக் காலத்தை ஓட்டலையா?”

”அதுக்காக எல்லாத்தையும் ஒரேயடியா விட்டுட்டீங்களா என்ன? உங்க அக்கா, தங்கை, அண்ணி இப்படி எங்கே போனாலும், ‘ஐயோ பாவம்! நாக்கு செத்துக்கிடக்குது நம்ம புள்ள!’னு விதவிதமா சமைச்சுப் போடறாங்களா இல்லியா? நீங்களும் ஒரு வெட்டு வெட்டிட்டு வரீங்கதானே! நான்தான் இங்கே கிடந்து…”

”ஏன், உனக்கும் வேணும்னா சொல்லு! கேட்டு வாங்கிட்டு வரேன். ஹையோ..! எங்க சின்ன அக்கா சுறாப்புட்டு செஞ்சான்னு வையி, ஊரே மணக்கும் தெரியுமா?”

பேசும்போதே மாரிக்குக் கண்கள் சிரிக்கும். மீசைக்குள் உதடுகளில் குறும்பு வழியும். இந்தச் சிரிப்பிலும் குறும்பிலும்தானே மெய் மறந்தாள்?

இதோ, இன்று காலையில் புறப்படும்போதுகூட மாரி கொஞ் சம் வருத்தத்துடனேயே சொன் னான்… ”முத்து, நீ போ! வேணாங்கலே. ரெண்டு குழந்தை பொறந்தாச்சு. மூத்தவ பொறக்குறதுக்கு முந்தியே வளைகாப்பு செய்யணும்னு அழுதே. எங்க வீட்டுல பழக்கமில்லே. உங்க வீட்டுல பாசமில்லே. நான்தான் தேரடிக்கு உன்னைக் கூட்டிட்டுப் போய் கை நிறைய வளையல் அடுக்கி, தலை நிறையப் பூச்சூட்டி, ராயர் கிளப்புல மசால் தோசை வாங்கித் தின்னவெச்சேன். குழந்தை பிரசவத்துக்குக்கூட உன் வீட்டு ஆளுங்க யாரும் வரலே. நீதான் குழந்தையின் முதல் பிறந்த நாளைக்கு மிட்டாய் வாங்கிக் கொண்டுபோய் கொடுத்துட்டு வந்தே. ரெண்டாவதும் அந்த லட்சணம்தான். அப்படியும் ரோஷமில்லாமத் திரும்பத் திரும்ப அங்கே போய் நின்னுட்டு வரியே… அப்படி உனக்கு நான் என்ன குறைவெச்சேன்? நான் கறுப்பன். நீ தக்காளிச் சிவப்பு. ஒப்புக்கறேன். என்னையப் பிடிச்சுத்தானே என்னோட வந்தே?”

”ஆமா, வந்தேன்! எங்க வீட்டுல யாரும் என் குழந்தைங்களை வந்து பார்க்கலேதான். ஆனா, உங்க வீட்டுல மட்டும் என்ன வாழுது? எப்பப் பாரு, அந்தக் குழந்தைங்ககிட்ட சாதியக் குத்திக் காட்டிப் பேசறாங்க. பெரியவ மீனைப் பார்த்து முகம் சுளிச்சாளாம். அதுக்கு ஒரு கொட்டு! மேல் சாதி வீட்டுப் பேரக் குழந்தைங்க… அப்படித்தான் இருக் கும்னு நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே! ஏங்க, நான் என்னிக்காவது என்னை மேல் சாதின்னு சொல்லிட்டிருக்கேனா? நான் என் பொறப்பை மறக்க நினைச்சாலும், இவங்க ஏங்க நோண்டிக்கிட்டே இருக்காங்க? என் குழந்தைங்க, என்னை மாதிரி! அவங்களுக்கு மீன், கறி என்ன… முட்டைகூடக் கொடுத்துப் பழக்கலே நான்…”

”சரி, விடு முத்து! அவங்கதானே சொன்னாங்க. நான் உன்னை ஏதாவது சொன்னேனா?”

”ஏன் சொல்லாம? அன்னிக்கு உங்க சித்தப்பா வீட்டுக் கல்யாணத்துல, நான் வயித்து வலின்னு சாப்பிடாம இருந்தப்போ, அத் தனை பேர் முன்னாடியும் என்னை எப்படிக் கிண்டலடிச்சீங்க?”

”சீ… அது சும்மா தமாசு!”

”நீங்க என்ன, தமாசுன்னு லேசா சொல்லிட்டுப் போயிடுவீங்க. உங்க வீட்டுல ஒரு மாதிரின்னா, என் வீட்டுல ஒரு மாதிரி. நடுவுல கிடந்து அவதிப்படறது நான்தான்! எல்லாம் என் தலையெழுத்து! என் பொறந்த வீட்டுப் பேச்சு, எனக்கொண்ணும் வலிக்கலே. நான் தப்பு செஞ்சிருக்கேன். அவங்க கோபம் நியாயமானது…”

அவள் பேசப் பேச, அவன் பிரமித்து நின்றான். கடைசியில் மெதுவாகக் கேட்டான்… ”அப்ப, என்னைக் கட்டிக்கிட்டதுக்காக இப்ப வருத்தப்படறியா முத்து?”

”பெரியவளுக்குப் பத்து வயசு, சின்னவனுக்கு எட்டு வயசு. இனிமே இதைப் பத்திப் பேசி என்ன ஆகப் போகுது! வெயிலுக்கு முன்னாடி போயிட்டு வந்துடறேன்!”

சைதாப்பேட்டையிலிருந்து கிளம்பி, திருவல்லிக்கேணிக்கு ஆட்டோவில் வந்து இறங்கியபோது, பகல் மணி 12. வாசலில் செம்மண் இட்ட படிக் கோலமும், கோலத்தின் நடுவே சிதறிய ஆரத்தியும், அண்ணா பெண்ணின் பட்டுப் பாவாடை விசிறலும்…

‘இன்னிக்கு என்ன விசேஷம்?’

மனம் பரபரக்க, ஆளோடி தாண்டி இவள் உள்ளே நுழையவும், அப்பா தன் கழுத்திலிருந்த பூமாலையைக் கழற்றி ஆணியில் மாட்டவும் சரியாக இருந்தது. அந்த இருட்டுக் கூடம் நிறைய இலைகள் போடப்பட்டுச் சிலர் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, ராமநாதன் அம்மாவைப் பார்த்து இரைகிறான்…

”அம்மா, அதான் இத்தனைப் பேர் இருக்காங்களே! அவங்க பரிமாறட்டும். அறுபதாம் கல்யாணத்தும் போதும் நீ கரண்டியத் தூக்க வேண்டாம்!”

‘அப்பாவுக்கு அறுபதா..!’ தொண்டைக் குழிக்குள், அது என்ன துக்கமா, சந்தோஷமா… பந்தாக அடைத்தது முத்துலட்சுமிக்கு.

கண்ணீர் மல்க, கையில்இருந்த ரஸ்தாளியை அவரிடம் நீட்டினாள்.

”அப்படி வெச்சுடு!” ரத்தினச் சுருக்கமான வார்த்தைகள்.

அவள் அப்படியே விழுந்து வணங்கினாள்.

”உம்… உம்…”

எழுந்தவளின் கண்களில் கூடத்து இருள் விலகி, சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களின் முகங்கள் கண்களுக்குத் தெரிந்தன. பட்டு, பட்டுவின் கணவர், அவர்களின் குழந்தைகள், சங்கரி, அவள் கணவர், மைத்துனர், இன்னும் பெரியப்பா, சித்தப்பா, அத்தை…

அம்மாதான் அவள் காதோடு சொன்னாள்… ”சித்த உட்காரு. அடுத்த பந்தி முடியட்டும். நீயும் சாப்பிட்டுப் போகலாம்!”

கூசிக் குறுகி, வாசல் திண்ணைக்கு வந்தவளுக்கு என்னவோ தெரியவில்லை… அழுகை பொங்கிப் பொங்கி வந்தது. ‘சாப்பாடா முக்கியம்? எங்க ரெண்டு பேரும்தான் வேண்டாம்… குழந்தைங்க என்ன பாவம் செஞ்சுது! கூப்பிட்டு சாப்பாடு போடக்கூடவா மனசு இடம் தரலே?’

சட்டென எழுந்தாள். மளமளவென ஒரு ஆட்டோ பிடித்து, வீடு வந்து சேர்ந்தாள்.

காலையில் அவள் கிளம்பிய அவசரத்தில், வெறும் சோறுதான் வைத்திருந்தாள். குழந்தைகளுக்கு எதையோ கொடுத்து அனுப்பிவிட்டிருந்தாள். கணவன் சுற்று வட்டாரத்தில் அக்கா, தங்கை என்று எங்கேயாவது போய் சாப்பிட்டுக்கொள்

வான் என்கிற நினைப்பில்…

வீடு திறந்திருந்தது. தரையில் சோற்றுப் பானையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் மாரி. தட்டும் தண்ணீரும் அருகே. ஒரு பொட்டலத்தில் லாலா கடை வெங்காய பக்கோடா பிரிக்கப்பட்டு வைத்திருந்தது.

இவளைப் பார்த்ததும், அவன் முகத்தில் பளீர் வெளிச்சம். ”என்ன, போன சுருக்குல வந்துட்டே?”

”அதிருக்கட்டும், உங்க மனுஷங்க வீட்டுக்கெல்லாம் போகலையா? வெறும் சோத்தையும்பக்கோடா வையும் வெச்சிட்டு உட்கார்ந் துட்டீங்க..?”

அவன் வரிசைப் பற்கள் தெரியச் சிரித்தான். ”அதுவா கண்ணு, ஒவ்வொரு தடவையும் கறி, மீன் திங்கிறதுக்காக இங்கே வரான்னு பேசப்போறாங்களோனு ஒரு சங்க டம். உனக்கு ஒருவிதமான அவதின்னா, எனக்கும் ஒருவிதமான எடக்குமடக்கை எல்லாம் சமாளிச்சாக வேண்டிய கட்டாயம் இருக்குடா! நீ வாய்விட்டுப் புலம்பிடறே. நான் முழுங்கிடறேன், பகோடாவை வெச்சுக்கிட்டு இந்த வெறும் சோத்தை முழுங்கறாப்பல! சாப்பிட்டியா? சாப்பிடுறியா? வேணாம், உனக்கு வெஞ்சனம் இல்லாம இறங்காது!”

”இல்லே, எனக்கும் கொடுங்க. பசிக்குது!”

”அட, என் கண்ணுக்குப் பசிக்குதாமில்லே! ஏன்டா, புறப்படறப்பவே ஒரு வாய் துன்னுட்டுப் போயிருக்கலாமில்லே?”

மாரி, முத்துவின் வாயில் சோற்றுக் கவளத்தை ஊட்டி விட… விறைத்த சோறும் பக்கோடாத் தூளும்… அது என்ன பொருத்தமோ, முத்துலட்சுமியையும் மாரிமுத்துவையும் போல அதுவும் ஒரு சுவையாகத்தான் இருந்தது!

- 09th ஏப்ரல் 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
அறிந்தும் அறியாமலும்…
‘‘ஏண்டா... ஏண்டா இப்படி, இங்கே வந்தும் அடிச்சுக்கறேள்... காசிக்கு வந்தும் கர்மம் தொலையலேடா! அஞ்சு வருஷம் முன்னாலே போனவர், என்னையும் அழைச்சிண்டு போயிருக்கப் படாதா..?” மாடி வெராந்தாவில் நின்றுகொண்டு அந்த அம்மாள் அழுதாள். அடுத்தாற்போல கரகரப்பான, ஆளுமை நிறைந்த ஆண் குரல் இரைந்தது... “இந்தா, ...
மேலும் கதையை படிக்க...
அன்று - கௌதம முனிவனின் குடிலில் பொழுது புலர்வதற்கு முன், ஏற்பட்ட விபத்து - இன்று பாகீரதிக்கு ஏற்பட்டுவிட்டது. நேரமும் காலமும் மனிதர்களும் தான் வேறு... வேறு... சம்பவம் ஒன்றுதான். அகலிகையைப் போல, தன் கணவனுக்கும் அந்நிய புருஷனுக்கும் வித்தியாசம் தெரியாத மனுஷி ...
மேலும் கதையை படிக்க...
இரவல் தொட்டில்
இன்னும் அன்னம் வரவில்லை. வாசல் இரும்புக் கிராதியின் சத்தம் கேட்கும்போது எல்லாம் விசுவம் எட்டிப் பார்த்து ஏமாந்தான். அப்பா இடை ரேழியில் இருந்து செருமினார்... ''இன்னும் அவ வரல்லே போல இருக்கே?'' ''வந்துடுவா.'' அதற்கு மேலும் அங்கே நிற்கச் சக்தி அற்றவனாகக் கூடத்துக்கு வந்தான். ஊஞ்சல் ...
மேலும் கதையை படிக்க...
முதலில் வாசற்கதவைச் சாத்தி விட்டு வருகிறீர்களா... ஏனென்றால், இது நமக்குள் பேச வேண்டிய விஷயம்... நண்டு, சிண்டுகள் கேட்டால் போச்சு... தெரு முழுக்க ஒலிபரப்பி, நம்மை பீஸ் பீஸாக்கி விடும். புருஷர்களுக்கா... ஊம்ஹ§ம்... மூச்சு விடக் கூடாது. ஏற்கனவே வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
வயிற்றில் நெருப்பை வைத்துக் கட்டினாற்போல இருக்கிறது ராமநாதனுக்கு. பசியில், வயிறு போடும் இரைச்சல்தான் காதில் கேட்கிறதே தவிர, கூடத்தில் ஒலிக்கும் மந்திர சத்தங்களல்ல… காலையில் ஒரு விழுங்கு காபி குடித்தது… மணி இரண்டாகப் போகிறது. இன்னமும் அவருக்குச் சாப்பாடு வரவில்லை. பெற்ற பிள்ளைகள் ...
மேலும் கதையை படிக்க...
அறிந்தும் அறியாமலும்…
சிறை
இரவல் தொட்டில்
கதவைச் சாத்து…காதோடு பேசணும்
அக்னி

விறைத்த சோறும் பக்கோடாத் தூளும்! மீது ஒரு கருத்து

  1. manjula says:

    வெரி குட் story

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)