கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 10,819 
 

” அலோ…..யாருய்யா….” என்று தடித்த குரலில் மளிகைக்கடையில் நின்ற அனைவரும் தன்னை திருப்பிப்பார்க்கும் விதமாய் சத்தமாய் கேட்டார் லிங்க நாடார்.

மறுமுனையில் தன் சொந்த ஊரு திசையன்விளையிலிருந்து என்று அறிந்தவுடன் முகம் மலர்ந்து ஆவலாகவும், மகிழ்ச்சியுடனும் தொடர்ந்தார்.சத்தம் மட்டும் அப்படியே….” என்ன மாப்பிள…சொல்லுங்க…விசேசமால்லா இருக்கு…திடுதிப்புன்னு போன போட்றுக்கீறு ” என்று மகிழ்ச்சி பொங்க ஆரம்பித்தார், லிங்க நாடார்.

மறுமுனை பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் லிங்க நாடார் தன் வலது பக்க நெற்றியின் மேல் முடியின் அடிபாகத்தை சொரிந்தவாறே…” அப்படியா,…ஏல…அவன இங்கிட்டு அனுப்பு..நான் பாத்துகிடுகேம்லா…நம்ம கடையில சோலி பாக்கட்டும்.படிச்சிகிட்டான்னா நாமலே ஒரு சாப்புகீப்பு வச்சி கொடுத்துடாம்லா…இன்னிக்கி ராத்ரி பஸ்ல ஏத்திவிடும்…பயப்படாதீறும் நான் பாத்திகிடுகேன்னு சொன்னேம்லா…செரி வைக்கட்டுமா கடையில ஆளுக நிக்கிறாங்க..”என்று மறுமுனையில் பதிலின் எதிர்ப்பார்ப்பு இல்லாமலே தன் நடுங்கின பெருவிரல் கொண்டு பொத்தானை அனைத்தார் லிங்க நாடார்.

” இதா புள்ள…பாத்தேல்லா அண்ணாச்சிட்ட பேசியாச்சி…அவரு நல்லா பாத்துகிடுகேனு சொல்லிருக்காருல்லா…பாத்துகிடுவாரு போயீ அவர ராத்ரி வண்டிக்கு அனுப்பதுக்கு எல்லாத்தையும் எடுத்து வைய்யி…வென்னால காலையில வண்டி போயிடும்…அண்ணாச்சி ஆளுக வச்சி கூட்டிப்போயிடுவாக.போ…போயீ…சோலியப்பாரு..இப்பவாட்டும் உனக்கு நல்லக்காலம் பொறந்தாச்சேரி.” என்று தன் மகள் பேச்சியாத்தாவிடம் விவரம் சொல்லிக்கொண்டார் சாகய நாடார்.

தன் மாமனார் பேசியதை அனைத்தையும் தடுப்பு தட்டியின் பின்னால் சாய்வு நாற்காலியிலிருந்து அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் சுடலை நாடார்.

சுடலைக்கும் பேச்சிக்கும் திருமணம் நடந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது.இரண்டு குழந்தைகள்.மூத்தவள் இரண்டிலும், இரண்டாமவள் இப்போது தான் பால்வாடிக்கு போய்க்கொண்டு இருக்கிறாள்.சுடலைக்கு வாழைக்காய் வியாபரம்.ஏரல் பக்கங்களில் உள்ள வாழைத்தோட்டங்களை குத்தகை எடுத்து அங்கிருந்து வாழைக்காயினை திருநெல்வேலி, நாகர்கோயில், திருவனந்தபுரம் போன்ற ஊர்களில் உள்ள சந்தைகளில் மொத்த வியாபாரிகளுக்கு விற்பது தான் தொழில்.பேச்சியினை திருமணம் செய்த பின் வியாபரம் மிக நன்றாக நடந்து கொண்டிருந்தது.தான் படிக்கவில்லை என்ற காரணத்தினாலோ என்னவோ தன் மகள்களை நன்றாக படிக்க வைக்க வேண்டுமென தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டான் சுடலை.வருடத்தின் மிகுதி நாள்களும் அவளின் பள்ளி கட்டணத்திற்காகவே உழைக்க வேண்டிய நிலை.அந்த அளவில் பள்ளியின் கட்டணம் இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு மழைப்பொய்த்த காரணத்தினால் வாழை சாகுபடி குறைந்து விட்டது.வாழைக்காயின் தேவை அதிகரித்தாலும் லோடு அனுப்பிவைப்பது சிரமமாக இருந்தது சுடலைக்கு.ஆனாலும் வியாபாரிகளிடம் சுடலையின் லாபப்பணம் நின்றுக்கொண்டிருந்தது.ஒவ்வொருமுறையும் அந்த பணத்தை கேட்கும் போதெல்லாம் அவர்கள் அடுத்த லோடுக்கு மொத்தமாக போட்டுவிடாலாம் இந்தமுறை காய் அனுப்பு என்ற பதில் மட்டும் வரும், ஆனால் பணம் வந்தபாடில்லை.வருகின்ற லோடு பணம் வண்டிசெலவுக்கும் இதர செலவுகளுக்குமே சரியாய் போனது.வீட்டிற்கு அற்பமே வந்தது.வாழைக்காய் ஏரலிலும் தட்டுப்பாடானது. வியாபாரத்தேவைக்கு இவனால் வாழைத்தார் வெட்டி அனுப்ப முடியவில்லை.இங்கு குத்தகை எடுத்ததால் விற்ற உடன் பணம் கொடுக்க வேண்டும்.மேலும் வாழைக்காய் எடுக்க திருச்சிக்கு சென்று அங்கிருந்து ஏற்றிவிட ஆரம்பித்தான்.ஆனால் அங்கோ எடுக்கும் முன்பே பணம் கொடுத்தாக வேண்டும்.மொத்த வியாபாரிகளிடம் கேட்டால் ஒருசமயம் சிறியத்தோகை அனுப்பிவிட்டு ஆர்டரை வேறு நபருக்கு மாற்றிவிடுகின்றனர்.இவன் எடுக்கும் வாழைத்தார்கள் விலைப்போகாமல் இருந்து வெம்பி பழுத்து உபயோகப்படுத்த முடியாமல் நட்டப்படுகிறது.வேறுவழியின்றி பேச்சிக்காக இவன் போட்டு அழகு பார்த்தது, அவள் அப்பா சீதனமாய் கொடுத்தது என்று அனைத்து நகைகளையும் அடமானம் வைத்து வியாபாரத்தில் போட்டு ஆயிற்று.ஆனாலும் அந்த வியாபரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.சில நேரங்களில் மொத்தமாய் வரும் சிறுதொகையும் மூத்தவளின் பள்ளி கட்டணமே விழுங்கிக்கொண்டது.வேறுவழியின்றி தெரிந்த வாழைக்காய் மண்டி வியாபரிகளிடம் கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டது.அதுவும் இறுதியில் நட்டம் ஏற்படவே என்ன செய்வதென்று அறியாமல் தவித்தான் சுடலை.அப்போது தான் சகாய நாடர் தன் நிலங்களில் ஒன்றை விற்று கடனில் சொச்சம் அளவில் அடைத்து இந்த வியாபாரமே வேண்டாம், தன்னோட ஒன்னுவிட்ட மாமன் மகன் சென்னையில் மளிகைக்கடை நடத்துவதாகவும் அங்கு வேலைக்கு கொஞ்ச நாள்கள் போய்வரட்டும் என்று சாகாய நாடார் சொல்ல பேச்சியும் சுடலையை சமாதானம் செய்து அங்கே எல்லாம் சரியாகிவிட்டால் குடும்பத்துடன் சென்றுவிடலாம்.தற்காலம் நீங்கள் மட்டும் செல்லுங்கள் காலம் சரியானதும் நாங்களும் அங்கு வந்துவிடுகிறோம் என்று கெஞ்சி சுடலையை சம்மதிக்க வைத்தாள்.வேறுவழியின்றி அவனும் சம்மதித்தான்.

” அம்மாடி பேச்சி…அவுகளுக்கு ராத்ரி பத்து மணிக்கு வண்டி…நம்ம மணி அண்ணாச்சி இருக்காவுல்லா அவுக கட கிட்டத்தான் வண்டி வந்து நிக்கும்னு சொன்னா…மருமவன பாத்து போய்ட்டு வர சொல்லு…இந்தா டிக்கெட்டு..” என்று தன் இடுப்பில் சுருட்டி வச்சிருந்த வெற்றிலை பொதியிலிருந்து எடுத்துக்கொடுத்தார் சகாயம் நாடார்.

” எம்புட்டுப்பா…டிக்கெட்டு ” என்றாள் பேச்சி.

” உனக்கென்னத்துக்கு ஆத்தா…நான் கொடுத்துட்டேன்லா…மருமகன் கையில ரூவாகிவா இருக்கா…ம்ம்…இதையும் கொடுலா..நாங்கொடுத்தேண்டு அவுகளுக்கு தெரியாண்டாம்ல…செரியா..” என்று மீண்டும் வெற்றிலை பொதியில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் ஒற்றை நோட்டை கையில் திணித்தார் சகாயம் நாடார்.

பேச்சி கண்கள் கலங்கி அந்த ரூபாயினை வாங்கிக்கொண்டு ” நா… உம்ம ரொம்ப கஸ்டப்படுத்துறேனா…அவுகளுக்கு நேரந்தேன் செரியா இல்ல…இல்லாட்டி இம்புட்டு கஸ்டம் இல்…..” என்று முடிப்பதற்குள்.

” ஏத்தா..எனக்கு தெரியாதாம்ல எம்மருமவன… சொக்க தங்கமெல்லா…உன்ன ராசாத்தி மாதிரில்லா பாத்துகிடுகாரு…நேரங்காலம் செரியில்ல, இங்கிட்டே சுத்திகிடந்தா மனசு வெப்புறாலப்படும்லா..அதுக்குத்தான் போவச்சொன்னேத்தா…நீ ஒன்னும் நினச்சிக்கிடாதலா…” என்று ஆறுதல் சொல்லி வடிந்த கண்ணீரை தோள்லில் கிடந்த குற்றாலத்துண்டால் துடைத்து அவளுடைய கண்களில் வழிந்த கண்ணீரையும் துடைத்தார் சகாயம் நாடார்.

இரவு மணி பத்து.

மணி அண்ணாச்சி கடை.பஸ் ஸ்டாண்டு என்றாலும் அந்த நேரத்தில் ஆள் நடமாட்டம் குறைவாகத்தான் இருந்தது.இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை கடை சட்டர் சாத்தும் சத்தம் காதுகளை எரிச்சல் மூட்டியது.சாலையில் ஓரத்தில் நிற்கும் இவர்களை காணும் எல்லாருக்கும் தெரியும்.

” என்ன அண்ணாச்சி இந்த பக்கமா நிக்கிய….தூரமா போறியலா…” என்று வினவும் ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லி மாளவில்லை.

“ஒன்னுமில்ல அண்ணாச்சி… மருமவன் மெட்ராஸு போறாம்ல…அதுக்கு வண்டியேத்தி விட நிக்குதேன்…” என்று சொல்லி கடப்பார்.

சுடலையும் பேச்சியும் ஒன்னும் பேசாமல் நின்று கொண்டிருந்தனர்.பேச்சியின் இடுப்பில் இருந்த மகளுக்கு அங்கு என்ன நடப்பதென்பது தெரியாமல் பேச்சியை வீட்டுபோகலாம் என்று சொல்லி அடம்பிடித்துக்கொண்டு அழுதது.

“ஏம்ல…நான் போய்தா ஆவனுமா? ” என்று பேச்சியை பார்த்து கேட்டான் சுடலை.

” என்ன பன்றதுத்தான்…கொஞ்ச நாளுத்தான நம்ம நேரம் நல்லாச்சா எல்லாம் நல்லாகும்…உன்ன பிரியதுக்கு எனக்கு மட்டுமென்ன ஆசை வானத்துக்கா அலையுது.எங்கிட்டுபோனாலும் எத்ரமணியானலும் வீட்டு வந்துடுவீக…உம்மொகத்த பாத்தா தான் கஞ்சியும் இறங்கும்…இனிமேட்டு அது நடக்காது…நாங்கூட பாத்துப்பேன் இந்த ரெண்டுகளும் உன்ன பாக்காம என்ன துடிக்கப்போறதுகளோ தெரியலத்தான்”….என்று தென்றல் மட்டும் நிரப்பிய அந்த இடைவெளியில் தன் மனஓலத்தின் வார்த்தைகள் கொண்டு நிரப்பி தன் இதழ்களில் அழுகையினை கொண்டு துடித்தாள் பேச்சி.அவள் இடுப்பில் இருந்த குழந்தையை தூக்கி தன் தோள்களில் சாய்த்து கண்ணத்தில் முத்தமிட்டு திருப்பி பேச்சியிடமே கொடுத்தான் சுடலை.

அந்நேரம் அவன் முகத்தில் வெட்டி மறைந்தது ஒரு மஞ்சள் ஒளி.தூரத்தில் நின்ற சகாய நாடார் பேச்சிப்பக்கமாக வேகமாக வந்தார்.

” இந்தா புள்ள…வண்டி வந்துடுச்சில்லா…” என்றுக்கூற பிரிய முடியா மனவேதனையுடன் பேச்சியின் முகத்தை பார்த்தவாறு குனிந்து துணிப்பையினை எடுத்தான் சுடலை.

திசையன்விளை – சென்னை என்ற கொட்டை எழுத்தில் எழுதி வெள்ளை நிற சொகுசு பேருந்து வந்து நின்றது.அதுவரை ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த இடம் இப்போது சலசலப்பாய் இருந்தது.பேருந்தின் உள்ளே ஏறுபவர்கள் ஒருபுறம், கையில் கொண்டுவந்த கனத்தப்பைகளை பேருந்தின் பின்னால் ஏற்றுபவர்கள் ஒருபுறம், “ஏல.. எல்லாத்தையும் எடுத்தாச்சா…ஒன்னும் மறக்கலியே”…”தண்ணீ பாட்டில் எடுத்துக்கிட்டியால”…”போனதும் போன் போடு”…”ண்ணே..சில்லரை பக்கி தரணும்”…”ஏல..எனக்குத்தா ஜன்னல் சீட்டு….”என்று ஒரே கூச்சலாய் இருந்தது அந்த இடம்.ஆனால் இவை எல்லாம் தூரத்தில் எங்கோ கேட்பதைப்போன்று ஒன்றும் பேசாமல் தன் கண்களால் விடையறிவிப்பை சொல்லிக்கொண்டிருந்தான் சுடலை.பேச்சியின் கண்கள் கண்ணீரில் குளமாய் மாறிக்கொண்டிருந்தது.அவன் மனதில் இரத்தமே கசிந்து கொண்டிருந்தது.மெல்ல பேருந்து நகர்ந்து இருட்டு வளைவில் மறைந்தது.

விடியற்காலை மணி நான்கு.பேருந்தில் ஒரு கனத்த சத்தம்.” தாம்பரம் இறங்குறவங்க, இறங்கலாம்….வண்டி தாம்பரம் வந்துடுச்சி…” என்று முதல் இருக்கையிலிருந்து கடைசி இருக்கை வரை கூவிக்கொண்டே இருந்தான். தான் இறங்க வேண்டிய இடம் இதுவல்ல என தெரிந்தும் விழித்துத் தயாராய் இருந்தான் சுடலை.நல்ல பனிக்காலம்.சாரளத்தின் கண்ணாடி திறந்தவுடன் ஜிலுஜிலுவென குளிர்ந்த காற்று.மஞ்சள் மின்விளக்குகளில் சென்னை தன்னில் பிரகாச அழகினை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.தன் கண்களை கசக்கி, கைகள் கொண்டு சோம்பலை விரட்டி எட்டிப்பார்த்தான் சுடலை.மேம்பாலத்தில் பேருந்து பனிக்காற்றை கிழித்துக்கொண்டு வேகமாய் போய்க்கொண்டிருந்தது.எங்கும் மின்னொளியாய், கருப்பு வெள்ளை கார்கள் எறும்புகள் ஊர்ந்து செல்வதைப்போல, மின்மினிப்பூச்சிகளின் பின்னால் மின்னுக்குகின்ற ஒளியினை தன் பின்னாலும் சிகப்பு வர்ணத்தில் ஒளிரவிட்டு இயங்கி கொண்டிருந்தன.இந்த காட்சி அவன் வாழ்வில் புதிதாய் இருந்தது.ஆகாயத்தில் பறக்கும் கழுகினைப்போல விமானங்கள் தனக்கான இடம் கிடைக்காமல் சமிக்ஞை இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தன.மிக அருகில்.கண்கள் விரிய அவன் அதை கண்டுகொண்டிருந்தான்.இவன் பார்ப்பதற்கு பேருந்து நின்றுகொடுக்குமா என்ன?..அது தன் வேகத்தை இன்னும் கூட்டி ஆகயத்தில் விமானம் பறப்பதைப் போன்று சாலையில் பறந்தது.ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் அந்த கனத்த குரல் அறிவிப்பை கொடுத்தவாறு இருந்தது.

“கிண்டி…அசோக்பில்லர்…வடபழனி…எம்.எம்.டி.ஏ…என்று இறுதியில்….கோயம்பேடு….எல்லாரும் இங்க இறங்கிக்கலாம்…இதான் கடசி ஸ்டாப்பு…கோயம்பேடு…கோயம்பேடு…” என்று மனசாட்சியே இல்லாமல் தூங்கி வழிந்த அனைவரையும் எழுப்பி கத்திக்கொண்டே கடைசி வரை நடந்து சென்றான்.சுடலையும் தன் துணிப்பையினை எடுத்து கீழிறங்கினான்.அந்த பேருந்தை ஈ அப்பினாற்போல் ஆட்டோ ஓட்டுனர்கள் சூழ்ந்து நின்றுக்கொண்டிருந்தார்கள்.

” சார்…எங்க போவனும் சார்..” என்று கையில் இருந்த கைப்பையினை தன் கைகளுக்கு மாற்ற முயற்சித்தார்கள்.சுடலை வேண்டாம் என்ற வார்த்தையினை கூறாமல் இருபக்கமும் தலையாட்டி பதில் சொன்னான்.அவன் அங்கு நிற்கும் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ” சார்…ஆட்டோவா…” என்ற சத்தம் அவனை அந்த இடத்தில் நிற்க வைக்காமல் இடம் நகர்த்தியது.

“மாமா சொன்னத பாத்த கூட்டிப்போக ஆளுவரும்லா நினச்சேன்..யாரையும்லா காணும்”…என்ற மனவோட்டத்தில் சரி எதுக்கும் லிங்க நாடார் அவருக்கே போன் போட்டு கேட்டுகிடலாம்னு சுடலை தன்னோட போன்ல அவர் எண்ணை கண்டுபிடித்து அழைத்தான்.வெகுநேரமாக மணி ஒலித்ததே தவிர எடுக்கவில்லை. மீண்டும் முயற்சி செய்துகொண்டே இருந்தான்.சிறிது நேரம் கழித்து மிகவும் தடித்த குரலில் ஒரு சத்தம்.அதை கேட்கும் போதே இன்னும் ஆள் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கவே இல்லை என்பதை சுடலை புரிந்து கொண்டான்.

” அ..ல்..லோ…யாரு…?” என்று கனைத்துக்கொண்டு கேட்டார் லிங்க நாடார்

” லிங்க அண்ணாச்சியா” என்றான் சுடலை.

” ஆமா..நீங்க யாரு…” என்றார் மறுபடியும்.

” அண்ணாச்சி நா…தான்ம்யா…சுடல…”என்றான் சுடலை.

“சு….ட…ல….ய்யா…” என்று தன் நினைவில் கொண்டு வர முயற்சித்த லிங்க நாடார்.நினைவில் வரவில்லை என்றதும்..”யாருன்னு தெரில…ஒரு ஒம்போது மணிக்கு போன் போடுங்க…” என்று தன் எப்போதும் உள்ள குணத்தில் மறுமுனை பதிலை எதிர்பார்க்காமல் போனை துண்டித்தார் லிங்க நாடார்.

“திக்” என்றிருந்தது சுடலைக்கு.அவர் வரசொல்லித்தான் வந்திருக்கோம்.அப்போ மாமா நம்ம பேர சொல்லலியோ…இல்ல பேருக்கு வரசொல்லி தெரியாத்துப்போல இருக்கிறாரா?…ஒருவேள காத்தால நேரம்ன்னால இப்படி சொன்னாரான்னு” குழப்பத்தில் சுடலை எதற்கும் மறுபடியும் போன்போட்டுப் பார்ப்போம் என்று மீண்டும் முயற்சித்தான். இம்முறை இரண்டு மணிகள் ஒலித்ததும் மறுமுனையில் சத்தம் கேட்டது. ஆனால் அது ஆண்குரல் அல்ல…பெண்குரல் லிங்க நாடார் மனைவி.

” யாரு….அவங்க தூங்கிட்டுல்லா இருங்காங்க…அப்பறமா போன் போடுங்க…” என்று கூறியதும், இம்முறை சுடலை சுத்தாரித்துக்கொண்டு உடனே

” நான் தெசெயன்விளைல சகாய நாடார் மருமவன் பேசுறேன்….அண்ணாச்சிய கொஞ்சம் எழுப்புதியலா…” என்றான் அவரமாக…

அவளுக்கு எது விழுந்துதோ…இல்லையோ…திசையன்விளை தன் ஊரின் பெயர் கேட்டதும்…மனம் அல்லாடியது.ஏதும் துட்டிகிட்டி ஆகிவிட்டதா? என்று மனம் அடித்துக் கொண்டது.நேத்துதான அம்மாட்ட பேசினேன்.எல்லாரும் நல்லா இருக்காங்க்கன்னு சொன்னாளே…என்று மனம் ஏதேதோ நினைக்க….

“ஏங்க….ஏங்க…இதப்பாருங்க…ஏங்க….” என்று அவசர அவசரமா எழுப்பினாள்.

” என்னடி…இப்ப.,கொஞ்சம், தூங்க விடுதியலா…மனுசனுக்கு நிம்மதியா தூங்கமுடியலைலா….” என்று அலுத்துக்கொண்டு கேட்டார்.

படப்படப்புடன் ” தெசயன்விளைலேந்து போனு அதான் எழுப்பினேங்க…” என்றாள் மனைவி.

கொடு என்று அதிகாரத்துடன் அவள் கையிலிருந்த போனை புடுங்கி இழுத்தார் லிங்க நாடார்..

“அலோ..யாருங்க…காலயில…போனபோட்டு…” என்று கடுத்த குரலில் கேட்டார்.

” அண்ணாச்சி…தெசெயன்விள சகாய நாடார் மருமவன்..சுடல..நீங்க வர சொன்னதா மாமா சொன்னாப்புள…இங்கிட்டு இறங்கினதும் அண்ணாச்சி ஆளு அனுப்பி கூட்டிப்போவதா சொன்னாங்க…அதான் ஆளு அனுப்பியிட்டியலானு கேக்கத்தான் போன்போட்டேம் அண்ணாச்சி…” என்று சொன்னதும், அப்பதான் லிங்க நாடருக்கு நேற்றுக்காலை சகாய நாடாருடன் பேசினது நினைவில் வந்தது.உடனே.,

” மன்னிச்சிக்கிடுங்க தம்பி…நேத்துக் கடயில சோலி ஜாஸ்தியா போச்சில்லா…அதான் நீ வரத மறந்துட்டேன்…நீ அங்கனக்குள்ள நில்லுய்யா…நம்ம பயளுவ இன்னும் கொஞ்ச நேரத்தில மார்கெட்டுக்கு வந்திடுவானுவ…வரும்போது உன்னிய ஏத்திட்டுவந்துடுவானுவ…செரியா…நீ எங்கனுக்குள்ள நிக்குத..சொல்லு அவனுவட்ட சொல்லிடுறேன்…” என்று கேட்டார் லிங்க நாடார்.

” செரி அண்ணாச்சி…நம்ம கோயம்பேடு இருக்குல்லா…அதுக்க வலப்பக்கம் பெட்ரோல் பேங்க் இருக்குல்லா…அங்கிட்டு நிக்குதேன் வரசொல்லுங்க அண்ணாச்சி…” என்று சுடலை நிற்கும் இடத்தை சொன்னதும்..

” செரி…நா…சொல்லிடுறேன் “…என்று வழக்கம் போல் போன் பொத்தானை அழுத்தினார் லிங்க நாடார்.

“யாரு…போனுல…அங்க துட்டிகிட்டி விழுந்துட்டா…காலம்பறயே போன போட்டுருக்காவ” என்று அறியும் ஆவலாய் கேட்டாள் லிங்க நாடார் மனைவி.

” காலேல நல்ல வார்த்த வராத நாக்குல…நம்ம செல்ல நாடார் மாமா பேத்திய கட்டிருக்காம்லா…..அதாம்லா…சகாய மச்சன் பொண்ண கட்டிருக்காம்லா…அவனுக்கு அங்கன சோலி இல்லன்னு நேத்து போன போட்டு சொன்னா…சே…ரி நமக்கும் இப்போ ஆளு தேவன்னு நான் இங்க வரச்சொன்னம்லா…அவன் வந்துட்டானாம்..அதுக்கு போனப்போட்டுருக்கான்..” என்று விவரத்தை மனைவியிடம் ஒப்பித்தார் லிங்க நாடார்.

” ஆந்…..அது சேரி….அதுக்கா வென்னால போனப்போட்டு மனுசன தூங்க விடாம கொல்லுவாக…” என்று இழுத்து தன் கழுத்தை ஒரு வெட்டுவெட்டி சலித்துக்கொண்டு சென்றாள் லிங்க நாடார் மனைவி.

” ஏல…கிளம்பிட்டியா…மார்க்கெட்டுக்கு போய்ட்டு திரும்பி வாராக்கல கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு எதுக்கமாறி பெட்ரோல் பேங்கு இருக்குல்லா…அங்கனைக்குள்ள நம்ம சகாய நாடாரு மருமவன் நிக்காம்ல…வர நேரத்தில கூட்டிவந்துரு…” என்று லிங்க நாடார், பாண்டியிடம் சொல்லி போனைவைத்தார்.

பாண்டி லிங்க நாடார் கடையில் தன் பதிமூன்று வயதில் வேலைக்கு வந்தவன். இன்று இருபத்தியேழு வயதை தொடப்போகிறது.லிங்க நாடார் கடையில் மட்டும் அல்ல வீட்டிலும் இவன் இல்லாமல் ஒன்று நடக்காது.லிங்க நாடாரின் நிழல் என்றே சொல்லிவிடலாம்.திசையன்விளை செல்லும் போது எல்லாம் அண்ணாச்சி பொறுப்பில் கடையினை நடத்துவதும் பாண்டிதான்.சுடலையும் பாண்டியும் ஒருமுறையோ இருமுறையோ சந்தித்துக்கொண்ட நியாபகம்.சுற்றி வளைச்சி பார்க்கும் போது ஏதோ ஒரு உறவில் இருவரும் பங்காளி முறை.ஆனால் சுடலையின் முகம் பாண்டி நினைவில் இல்லை. அண்ணாச்சி போனை வைத்ததும் பாண்டியின் மனதில் யாராய் இருக்கும், சகாய நாடார் மருமகனை எனக்கு எப்படி அடையாளம் தெரியும்.சொல்லவாவது செய்யலாம் அல்லவா…சரி போய் தேடிப்பார்க்கலாம்.அடையாளம் தெரியவில்லை என்றால் கேட்டுக்கொள்ளலாம் என்று மார்க்கெட் கிளம்பினான் பாண்டி.

யாரேனும் தன்னைக்கூட்டி செல்லுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் காத்துக் கொண்டிருந்தான் சுடலை.இவனின் பக்கம் திரும்பும் எல்லா வாகனங்களையும் வச்ச கண்ணு வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். இந்த காரா?…இந்த பைக்கா?….இந்த குட்டியானை வண்டியா?…என்று தனக்குத்தானே கேட்டு இல்லை என்றதும் சலிப்பில் தன் உதடுகளை வலப்புறமாய் வளித்து “ச்ச்ச்சூ” என்று ஒரு சத்தமிட்டுக்கொள்வான்.ஊர் தெரியாத ஊரில் யாரையோ எதிர்பார்த்து காத்திருக்கும் பொழுதுகள் பொறுமையின் உச்சக்கட்டம்.தன் வெறுப்பினை வெளிக்காட்டாமல், கோவத்தை அடக்கி, தன்னை கூட்டிச்செல்ல ஆள் வருமா? வரதா? என்ற அங்கலாய்ப்பை எல்லாம் தன்னுள் அடக்கி ஆளவேண்டிய பொறுமை நிச்சயம் தேவைப்படும்.அப்படித்தான் நின்றிருந்தான் சுடலை.மனதில் ஆயிரம் எரிச்சல் மிகுந்த வார்த்தைகள் கொண்டு தன் மானாரை திட்டி

புலம்பி நின்றிருந்தான்.

நேரமோ கடந்து கொண்டிருந்தது.மணி ஐந்து முப்பது. நேரம் கடப்பது என்பது அனுமன் கடலை கடப்பது போல அல்ல.அருகில் மிதிவண்டியில் தேனீர் விற்பவன் நின்றுகொண்டிருந்தான்.அவரிடம் போய் தேனீர் அருந்தி சற்று மனசமாதானமாய் நின்றான்.ஆனால் அவ்வப்போது போனில் மணிப்பார்ப்பதையும் நிறுத்தவில்லை.

ஒருபக்க ஆகாயம் மஞ்சள் நிறத்தை பூசிக்கொண்டது.மறுப்பக்க கருமை பூசிய ஆகாயம் வெளிர் நீலத்தினை துயிலுரித்தது. பஞ்சு மேகங்கள்திரிந்த மோரின் நுரைப்போல வரிவரியாய் படர்ந்திருந்தது.பேருந்துகளில் மின்விளக்கு அணைக்கப்பட்டு காலை வெளிச்சம் நிரம்பிவிட்டது.ஆனால் இன்னமும் சுடலையைக் கூட்டிப்போக ஆள்வரவில்லை.இப்போது சற்று கோவம் தலைக்கேறியது சுடலைக்கு.போனை எடுத்தான்.பேச்சி என்று தமிழில் பதியப்பட்ட பெயர் வந்ததும் அழுத்தினான்.மறுமுனையில் மணி ஒலித்தது.ஆனால் யாரும் எடுக்கவில்லை.அது இன்னமும் சுடலையின் கோவத்தை தூண்டியது.

” எளவெடுத்தவ…எங்க போயீ தொலைஞ்சாளோ….” என்று மனதில் பொருமினான் சுடலை.தலைக்கேறும் கோவத்தை இறக்கி வைக்கும் பாவத்தின் உருவம் அவள்.அதனால் தான் விருட்டென பேச்சிக்கு போன் அடித்தான்.காலை நேரமானதால் அவள் இன்னமும் எழுந்திருக்கவில்லை.இரண்டாம் முறை அடிக்க எத்தணிக்கும் நேரம் ஒரு குட்டியானை வண்டி இவனை கடந்து சென்று நின்றது. வண்டி முழுவதும் பாதி கோயம்பேடு சந்தையினை சுமந்து வந்தது போல இருந்தது.மூட்டைகள் சகிதமாக.நேர்த்தியான அடுக்காக.விதவிதமான காய்கறிகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன.முன்பக்க கதவினை திறந்து பாண்டி சாடிவந்தான் சுடலையின் அருகில்.அவன் நினைத்தாற்போல் சுடலையை கண்டுபிடிப்பது கஸ்டமாக இல்லை.அப்படியே ஊரின் சாயல் அவன் முகத்தில்.கட்டை உறுவம்.பாதிவெட்டிய ஆப்பிளை போன்ற முகம்.தலையில் வாரிய முடி காற்றில் கூட பறக்கமுடியாமல் தடை விதித்தது தேய்த்த எண்ணெய்.பற்கள் பாறைகள் நிறத்தில்.மடித்து கட்டின வேஸ்டியா இருந்தாலும் கால்முட்டின் கீழ் வரை மடிந்து நின்றது.காலில் செம்மண் அப்பிய நிறத்தில் லூனார்ஸ் செருப்பு.சட்டையின் மேல் பட்டன் இரண்டும் மாட்டாமல் மார்புக்கு காற்று செல்லும் வசதியாய் திறந்து கிடந்தது.இவன் நம் ஊர்க்காரன் என்ற இந்த சகல தோற்றத்தையும் அனுமானித்துக் கொண்டான் பாண்டி.

” அண்ணாச்சி…நீங்க தான திசெயென்விளயிலேர்ந்து வாறீங்க…” என்றான் பாண்டி.

சுடலை முகத்தில் ஒரு மலர்ந்த சிரிப்புடன் ” ஆமா…” என்றான்.

” செரி…வாங்க….காயெடுக்க கொஞ்சம் நேரமாகிடுச்சி…இல்லாட்டி அப்பவே வந்துருபோம்லா…எளவு…இந்த ட்ராபிக் வேற….வர்ர எல்லா பஸ்ஸும் இங்கிட்டே நிறுத்திடுவான்லா…அதான் இங்கிட்டு ட்ராபிக்…ரொம்ப நேரமா நிக்கிதியலோ…மன்னிச்சிகிடுங்க…” என்று தன் காரணத்தை சொல்லி மன்னிப்பும் கேட்டான் பாண்டி.

” ச்சே…என்னது பெரிய வார்த்தைல்ல பேசுதிய..ஒன்னுமில்ல..நான் பாட்டுக்கு அங்கிட்டும் இங்கிட்டும் போறவர எல்லாத்தையும் பாத்துக்கிட்டுல்லா நின்னேன்…எனக்கொன்னும் இல்லைலா….இன்னும் நேரமானாக்கூட என்ன கிடக்கு?…அதுக்கு போயீ பெருசா வார்த்தையெல்லாம் சொல்லி போடுவியலா….” என்றான் சுடலை. அத்தனை நேர கோவம் எரிச்சல் எல்லாம் அந்த ஒரு வார்த்தை தவிடுபொடியாக்கி அவனை சாதாரண நிலையில் இறக்கிவிட்டது.இருவரும் முன்னில் ஏற வண்டி அண்ணாச்சிக்கடை நோக்கி புறப்பட்டது.

” ஆமா…உங்க பேரென்ன? ” என்றான் பாண்டி.

” சுடல……உம்ம பேரென்ன? ” திருப்பிக் கேட்டான் சுடலை.

” பாண்டி…”

” நமக்கு அங்கிட்டு தானா? இல்ல வேற ஊருங்கலா…” என்றான் சுடலை.

” அங்கிட்டுத்தான்….அண்ணாச்சிய பெத்தவ வழி சொந்தம்….வந்து பதினாலு வருசமாச்சி…அவரு வீட்டுல ஒரு ஆளா பாத்துகிடுகாரு….நாம எப்படி?….” என்றான் சிரித்துக்கொண்டே பாண்டி.ஆனாலும் இன்றுவரை தனியாக சென்று வியாபரம் செய்ய முடியவில்லை என்ற மன அங்கலாய்ப்பை தன்னுள் புதைத்துக்கொண்டே சிரித்தான் பாண்டி.

” என்னோட வீட்டுக்காரி அப்பாவோட மச்சான் லிங்க அண்ணாச்சி…..” என்றதும், பாண்டி உடனே

” யாரு நம்ம சகாயண்ணாச்சி மவள கெட்டுனது நீங்க தானா….அப்போ நாம பங்காளி மொறல்லா….” என்றான், உறவினையும் எளிதில் கண்டுபிடித்து.

” அப்படிய்யா….என்ன தெரியும்மா….பாத்துருக்கீயலா…” என்று ஆச்சரியம் மிக கேட்டான் சுடலை.

” அப்பறம் தெரியாம…உம்ம வீட்டுக்காரி சீமந்ததுக்கு வந்துருக்கேம்லா…அப்ப பாத்தது.அதான் செரியா பிடிகிடைக்கல பாத்துகிடுங்க…” என்று சத்தமா சிரித்துக்கொண்டே சொன்னான் பாண்டி.

சுடலையின் மனது லேசாகியது.வந்த இடத்தில் யாரையும் அறியாமல் ஒற்றைப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் அவனில் வந்தவுடன் எழும்பியிருந்தது, இப்போது கரைந்து காணாமல் போய்விட்டது.அது சுடலையின் முகத்திலும் பிரகாசித்தது.

இருவரும் பேசிக்கொண்டே சென்றதில், வண்டியும் தி.நகரில் உள்ள லிங்க அண்ணாச்சி கடை வாசலில் போய் நின்றது.

” லிங்கம் புரொவிசன் ஸ்டோர் ” என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் நீலவர்ண போர்டில் வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது.மிக பழைய போர்ட் அது.தியாகராயர் நகர்,மெட்றாஸ் – 17. என்று எழுதப்பட்டு புதிய சென்னைக்கு மாறாத போர்ட்.கடை மளிகைக்கடை என்றாலும் அனைத்து சாமானங்களும் அங்கு கிடைக்கும். வெளியிலிருந்து பார்க்க சின்னக்கடையாய் இருந்தாலும் ஒருநாள் அங்கு நடக்கும் வியாபாரம் பெரிய டிபார்ட்மண்டல் கடைகளில் கூட நடக்காது.அன்று நடந்த வியாபாரத்தின் கணக்கை சரிபார்த்து பணம் எண்ணவே இரவு சரியாக பன்னிரெண்டாகிவிடும்.விலைகளில் ஐந்துபைசாக் கூட குறைக்க மாட்டார்.சிக்கனம் என்றால் அவர் தான்.எந்த ஒரு சின்னத்தேவை என்றாலும் அவசியமானதாக இருந்தால் மட்டுமே செய்வார்.இல்லையென்றால் துளியளிவிலும் செய்யமாட்டார்.

காலையில் பாண்டி சந்தைக்கு கிளம்பியதும், சரியாக ஆறு மணிக்கெல்லாம் வந்து கடையினை திறந்து வியாபாரம் ஆரம்பித்துவிடுவார்.பாண்டி வந்து காய்கறிகளை சரியான முறையில் வைத்து, அதிலிருக்கும் சிலேட்டில் அன்றைய விலைப்பட்டியலை எழுதும் வரை இருப்பார்.பின்பு அவனை கடையில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்று குளித்து,டிபன் முடித்து,சரியாக பத்து மணிக்கெல்லாம் கடைக்கு வந்துவிடுவார்.அதன் பிறகே பாண்டிக்கு குளியும், உணவும்.

வண்டியிலிருந்து எல்லாவற்றையும் சுடலையும் கூடமாட இறக்க பாண்டிக்கு உதவி செய்தான்.பிறகு ஒன்று அறியாததால் அவன் செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் சுடலை.லிங்க நாடாரும் பார்த்து ஒரு மெல்லிய சிரிப்பினை உதிர்த்து வியாபரம் பார்த்து கொண்டிருந்தார்.பாண்டியும் தன் வழக்க வேலைகளை முடித்துக்கொண்டு விலைப்பட்டியலில் விலையும் எழுதிமுடித்தான்.

” சித்தப்பு….இன்னிக்கு முறுங்கக்கா மட்டும் வில அதிகம்.அதால வாங்கல பாத்துக்கிடும்….மத்ததெல்லாம் வாங்கிருக்கேன்…கருவேப்பல கெட்ட கேட்டுக்கு கிலோ இன்னிக்கு அம்பரூவா பாத்துக்கிடும்….சும்மா இனிங்கி கொடுத்திடாதீரும்….” என்று அன்றைய விலை விவரத்தை லிங்க நாடாரிடம் சொல்லிக்கடந்தான் பாண்டி.அத்தனையும் அசையாமல் நின்று பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தான் சுடலை.

அண்ணாச்சி வீட்டிற்கு கிளம்பும் நேரமானது.” ஏலே…பாண்டி. நானு வீட்டுக்கு கிளம்பதைம்லா….பிரிட்ஜ்க்கு கீழ பொணம் நாறுறாப்புல நாத்தமெடுக்கு….எலிக்கிலி செத்துகிடக்காம்ன்னு தெரியல…கொஞ்சம் பாத்துவைக்கியாலா..” என்று பாண்டியிடம் சொல்லி வீட்டிற்கு கிளம்பினார் லிங்க நாடார்.

தன்னிடம் ஏதும் கேட்காமல், சொல்லாமல் செல்லும் லிங்க நாடார் அண்ணாச்சி போவதை பார்த்துக்கொண்டு என்ன செய்வதென்று அறியாமல் உள்ளங்கையில் துணிப்பையினை தூக்கியதில் சிவந்து தடம் பதிந்த நிலையில் நின்றுகொண்டிருந்தான் சுடலை. கோவம் தலைக்கேற தன் சட்டைப்பையில் கைவிட்டு கைப்பேசியினை எடுத்து பேச்சிக்கு அழைத்தான். ரிங்க் போய்க்கொண்டிருந்தது. இப்பொழுதும் யாரும் எடுக்கவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *