வராத பதில்!

 

வாக்கியத்தை முடிப்பதற்கு முன் அப்பாவின் உயிர் போய்விட்டது. ‘ஓ’ என்கிற அட்சரத்துக்குக் குவிந்தாற் போல் உதடுகள் வட்டமாக நிற்க, கண்கள் அவரது சுபாவமான உத்வேகத்துடன் விரிந்திருக்க, நாடக ஒத்திகையில் இயக்குநர் ‘யீக்ஷீமீமீக்ஷ்மீ!’ என்ற அதட்டலுக்குப் பணிந்து உறைந்தது போல முகம் உறைந்தது.

முதலில், அது ஏதோ வேடிக்கை போல் இருந்தது அவளுக்கு. அது ஒரு அசம்பாவிதம் என்று நினைக்கக்கூடத் தோன்றவில்லை. அப்பா என்பவர் ஸ்திரமானவர்… அந்த ஊஞ்சலைப் போல! அவளது வாழ்வின் நிரந்தர அங்கம். அவளது கணக்கு வழக்குகள், எங்கேஜ்மென்ட்கள், புரொகிராம்கள், கால்ஷீட்டுகள் எல்லாவற்றுக்கும் பொறுப்பு. ஓய்வு என்ற பேச்சே இல்லை. டான்ஸ் க்ளாஸ் மாணவிகள் யார் யார் இன்னும் சம்பளம் கொடுக்க வில்லை, சமையல் ஸ்டோருக்கு வாங்கிய லிஸ்ட்டில் சமையல்காரி சரோஜா செய்யும் தில்லுமுல்லுகள் உள்பட எல்லாம் அவருக்குத்தான் தெரியும். அப்பா அவளுடைய அந்தரங்கச் செயலர்… ‘கேர் ஃப்ரீ ஸ்டாக் தீர்ந்து போச்சுப்பா’ என்று கூச்சமில்லாமல் சொல்லுமளவுக்கு.

விசித்திரமாக, அதைப் பற்றினஒரு பேச்சின்போதுதான் அவருடைய வாழ்வு முடிந்தது.

“இன்னும் கொஞ்ச வருஷம் போனா, அதுக்கெல்லாம் தேவையே இல்லாம போயிடும். அதுவரைக்கும் என்கூடவே இருக்கப்போறியா?”

அவளுக்குச் சுருக்கென்று வலித்தது. அதை மறைத்துக்கொண்டு அவள் சிரித்தாள்.

‘‘ஏன்… தப்பா?’’

அதற்குத்தான் அப்பா பதில் சொல்ல ஆரம்பித்தார். வார்த்தைகள் வெளியில் விழ அவள் காத்திருந்தாள், எதிர்பார்ப்புடன்! ஆனால், பதில் வரவில்லை.

‘‘என்னப்பா?’’ என்ற அவளது கேள்விக்கு அப்பாவின் முகபாவம் மாறுதல் காண்பிக்காமல், வாய் ‘ஓ’ வில் குவிந்து, கண்கள் உத்வேகத்துடன் விரிந்து நின்றன. கிட்டே நெருங்கித் தோள் தொட்டதும், சினிமாவில் வருவது போல் தலை சாய்ந்தது.

அப்பா என்ன சொல்ல நினைத் தார்? ‘நா எத்தனை நாள் உசிரோடு இருப்பேனோ தெரியாது’ என்றா? நிச்சயம் இருக்காது. அப்பாவுக்கே கடைசி விநாடியில் சொல்லாமல் கொள்ளாமல் மரணம் வந்து நின்றது வியப்பை அளித்திருக்கும். அல்லது, தான் சாகிறோம் என்று உணர்வு வருவதற்குமுன் உயிர் பிரிந்திருக்கும். உணர்வு வந்திருக்கும் பட்சத்தில் அவர் மனசு என்ன நினைத்திருக்கும்? பரிதவித்திருக்கும்-. ‘ஐயோ… இந்தப் பெண் இனிமே என்ன செய்யும்?’

அவளுக்குக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வந்தது. அப்பா மறைந்ததாலா அல்லது சுயபச்சா தாபத்தாலா என்று புரியவில்லை. இரண்டுக்குமாக இருந்தாலும் அது இயல்பானது என்று தோன்றிற்று. அவளது ஐந்து வயதில் அம்மா இறந்து போனதிலிருந்து அப்பா அவளுக்காகவே வாழ்ந்தது அவரது குற்றம். நாட்டியத் தாரகை, சினிமா ஸ்டார் என்று ஆளாக்கி, கனவுலகில் சஞ்சரிக்க வைத்து யதார்த்த உலகில் உதவாக்கரையாய், இப்போது நிர்க் கதியாய் ஆக்கியது அவரது குற்றம். நடுநடுவில் தூக்கத்தைக் கலைத்து, ‘என்ன செய்யப் போற நா இல்லாம?’ என்று கேட்க முனைந்தால், அது எமனுக்குக்கூடப் பொறுக்கவில்லை.

தொலைபேசி விடாமல் ஒலித்தது. விட்டத்தைப் பார்த்து சோபாவில் மல்லாந்து படுத்திருந்தவள், அடிக்கட் டும் கழுதை என்று பேசாமல் இருந்தாள். விடாமல் மூன்று முறை விட்டுவிட்டு அடித்து ஓய்ந்தது. அவள் வீட்டில் இருப்பது எந்த மடையனுக்கோ தெரிந்திருக்க வேண்டும். எதிர்த்தாற் போல் இருந்த எஸ்.டீ.டி பூத்திலிருந்து அவன் போன் செய்தால் ஆச்சர்யப் படுவதற்கில்லை. பழமோ, பூவோ, நாய்க்கு பிஸ்கட்டோ வாங்க வெளியில் செல்லும் சரோஜாவிடம் கேட்டு அறிபவர்கள் நிறைய. ‘‘மேடம் இருக் காங்களா?’’

கடந்த சில வருஷங்களில் கேள்வி உருமாறி வருகிறது. ‘‘பாப்பா இருக்குதா?’’ ‘‘அக்கா இருக்கா?’’ எல்லாம் போய், திடுதிப்பென இப்போது தான் மேடம் ஆகிவிட்டது போல் தோன்றுகிறது.

‘‘மேடம்னு கூப்பிடறதுதானே கௌரவம்? வயசுக்குத் தகுந்த மதிப்பு வேணாமா?’’ என்கிறாள் அசட்டு சரோஜா.

டெலிபோன் மீண்டும் ஒலித்தது. அலுப்புடன் எழுந்தாள்.

‘‘ஹலோ!’’

‘‘மேடம் நளினாவா?’’

‘‘ஆமாம். சொல்லுங்க!’’

‘‘வணக்கம் மேடம்! நாங்க சோப் விளம்பர ஏஜென்ட். உங்களை வெச்சு விளம்பரப் படம் பண்ணணும்னு ஆசைப்படறோம்!’’

‘அப்பாவைக் கேளுங்க’ என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது.

‘‘என்ன சோப்பு?’’

லோரியேல் அழகு சாதனங்களும் ஐஸ்வர்யா ராயின் முகமும் மனதில் நிழலாடின.

‘‘பாத்திரம் கழுவற சோப்பு!’’

அவளுக்குச் சப்பென்று போயிற்று. லேசாக அவமானம் ஏற்பட்டது.

‘‘நல்ல பேமென்ட் கிடைக்கும் மேடம்!’’

‘‘சரி, நேர்ல வந்து பாருங்க!’’

ஒரு நாள் வேலை. எதிர்பார்த்ததைவிட அதிகக் காசு. சோப் நன்றாக விற்பதாகச் சொன்னார்கள்.

‘‘என்ன நளினா, பாத்திரம் தேய்க்கிற விளம்பரத்துக்கு இறங்கிட்டியா?’’ என்று பொறாமை பிடித்த ஒருத்தி கேட்டபோது உறுத்திற்று.

‘‘இதிலென்ன இருக்கு… பணம் கொடுக்கறாங்க, செய்யறேன்! மைசூர் சாண்டலுக்குதான் செய்யணுமா என்ன?’’ என்று சமாளிக்க நேர்ந்தபோது மெல்லிய அவமானம் ஏற்பட்டது.

ஒரு நகைக் கடைக்கு விளம்பரம் வேண்டும் என்று விளம்பர ஏஜென்ட் கள் வந்து நின்றபோது, சற்று சமாதானம் ஏற்பட்டது. கூடைகூடையாக நகைகள் அணிவித்துப் பதினாயிரம் போஸில் படம் எடுத்தார்கள்.இரவெல்லாம் நகை சுமந்த பாரத்தின் நினைவில் கழுத்து வலித்தது. புன்ன கைத்த வாய் வலித்தது.

நகரமெங்கும் ராணி போன்ற அவளது உருவம் வானை நோக்கி எழும்பி நின்ற கிறக்கத்தில், அவள் குளிர்ந்திருந்த வேளையில், நகைக் கடைக்காரர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.

‘‘நளினா பொருத்தமான மாடல்னு எப்படி முடிவுக்கு வந்தீங்க?’’

‘‘நடுத்தர வயசு மாடல் போட்டோம்னா, 40 வயசுக்கு மேல உள்ள பெண்களுக்கும் தாங்களும் இந்த மாதிரி நகை போடலாம்னு ஆசை வரும்.’’

அதைப் படித்துவிட்டு, அன்று முழுக்க அவள் அழுது தீர்த்தாள்.

கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது இன்னும் அழகாக, இளமை யாக இருப்பதுபோல்தான் இருந்தது. ஆனால், இப்போது நேற்றுப் பிறந்த தெல்லாம் நடிக்க வந்துவிட்டன. 18 வயசுக் கதாநாயகிகளுக்கு 18 வயசுப் பெண்கள்தான் தேவையாம். 35 வயசு உதைக்குதாம்! ஆனால், 50 வயது அம்மா வேஷத்துக்கு 35 பரவாயில் லையாம். இது என்ன நியாயம் என்று புரியவில்லை. சாகும் வரை அம்மா வேஷம் போடுவதில்லை என்று அவள் சங்கல்பம் எடுத்தாள். ‘என்னடி தப்பு?’ என்றாள் தோழி குமுதினி. ‘ஷபானா ஆஸ்மி செய்யலியா? ஹேமமாலினி செய்யலியா? ஷர்மிளா டாகூர் செய்யலியா?’ என்றாள். அவளைவிட வயதான வர்கள் அவர்கள் என்று குமுதினிக்குத் தெரியும். அதன்பிறகு குமுதினியுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டாள்.

நட்ட நடு ஹாலின் சுவரில் தங்க முலாம் போட்ட சட்டத்துக்குள்ளி ருந்து அப்பா அவளையே பார்த்துக் கொண்டு இருந்தார். அவளுக்கு அவருடைய கடைசி பார்வைதான் கண்ணுக்குள் நின்றது. ஆச்சர்யமும் விசனமும் நிறைந்த பார்வை அது. வாக்கியம் முடிவதற்குள் குரலை நெரிப்பது யார் என்ற ஆச்சர்யம். ‘ஐயோ! இனி இந்தப் பெண் என்ன செய்யும்’ என்ற விசனம்.

பணத்தட்டுப்பாட்டால் அவள் சாக மாட்டாள், நிச்சயம்! கல்லு போல நாலு வீடுகள் நகரத்தின் பிரதான சாலைகளில் இருந்தன. நாட்டியப் பள்ளியில் 50 மாணவிகள் இருந்தார்கள். பல் போகும்வரை கட்டையைத் தட்டிப் பதம் பாடி ஜதி சொல்ல அவளால் முடியும்.

பின் அப்பாவுக்கு என்ன கவலை? உண்மையில் அப்பா அந்த வாக்கியத்தை முடிக்க அத்தனைச் சிரமப் பட்டுப் பிராணனை விட்டிருக்க வேண்டியதில்லை. அவளுக்குள் ளேயே அந்தக் கவலை அடிக்கடி எட்டிப் பார்த்தது. திரைக் காதலனுடன் டூயட் பாடி, மரம் சுற்றி, மடியில் படுத்து, புதர்களின் பின்னால் முத்தம் கொடுத்த பாவனையில் கேமராவுக்கு முகம் காட்டி , நாணி முகம் புதைத்த தெல்லாம் நிஜத்தில் அனுபவிக்க வேண்டும் போல் சில இரவுப் போதில் நாடி நரம்பெல்லாம் ஏக்கம் கொள்கின்றன. காது மடல் சூடேறி மேனி சிலிர்க்கிறது.

பத்து வருஷம் முன்பு வரை, கண்டவன் கேட்டவன் எல்லாம் அவளைக் காதலிப்பதாகச் சொல்வான். அநேகமாக அவளுடன் நடித்த எல்லா கதாநாயகர்களுமே சொன்னார்கள். பெரும்பாலும் அவர்கள் எல்லோருமே, கிட்டே நெருங்கினதும் அசாத்திய சுயநலவாதி களாக இருந்தார்கள். அல்லது, ஏற்கெனவே திருமணமானவர்களாக இருந்தார்கள். சரி, தான் மட்டும் ஆயுசு முழுக்க இப்படித் தனிக்கட்டையாக நிற்கப் போறோமா? இந்த வாழ்க்கை எப்போ ‘அர்த்தம்’ பெறும்?

அவளுக்கு வயது இப்போது 38. இன்னும் சில வருஷங்களில் கேர் ஃப்ரீ தேவை இருக்காது. அது தெரிந் தால் ஒரு கழுதைகூட வந்து எட்டிப் பார்க்காது.

‘சரி, கல்யாணம் ஒரு பிரச்னையா’ என்று அவள் யோசித்தாள். ஆனால், யாருக்காவது கழுத்தை நீட்ட வேண்டி யது அவசியம் போல உலக அழகிகளும் பிரபஞ்ச அழகிகளும் திருமணம் செய்துகொள்ளும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதற்காக சிலர் மரத்தை வலம் வந்தார்கள். சாதுக் களைத் தரிசித்தார்கள். ஜோதிடர்களை ஆலோசனை கேட்டார்கள். யாகம் வளர்த்தார்கள்…

வாசல் மணி விடாமல் ஒலித்தது. எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். கதவுக்கப்பால் அவளது மாணவி 10 வயது ரூபா. அவளுடைய கையைப் பிடித்தபடி அவளின் அப்பா கிருஷ்ணன். 45 வயதிருக்கும். காதோரம் லேசான நரை. கம்பீர உருவம். ‘ஏன் இந்த மாதிரி ஆட்கள் எனக்குக் கிடைப்பதில்லை?’ என்று ஒரு கேள்வி அவள் உள்ளே ஓடியது. ரூபாவுக்கு அம்மா இல்லை என்பது நினைவுக்கு வந்தது.

“எனக்குக் கொஞ்சம் வெளியிலே போகணும். வீட்டிலே யாருமில்லே. நாலு மணிக்குதான் க்ளாஸ். இருந்தாலும் இவ தனியா இருக்க வேண்டாம்னு அழைச்சிட்டு வந்தேன். தொந்திரவில்லையே?” என்றார் கிருஷ்ணன்.

‘‘நோ… நோ! உள்ளே வாங்க!’’

‘‘இல்லே, நா கிளம்பறேன்’’என்றார். மீண்டும் அவள் அழைக்க, மறுக்க முடியாதவர் போல, சங்கோஜத்துடன் வந்தார். ஏ.ஸி. அறையிலும் வியர்த்தது அவருக்கு.

‘‘ரூபா பெரிய டான்ஸரா வரணும்னு ஆசை, உங்களை மாதிரி!’’ என்றார். அவள் சிரித்தாள். ‘‘என்னை விடப் பெரிய ஆளா வருவா!’’ என்றாள் ரூபாவை அணைத்து.

‘‘தனியாவா இருக்கீங்க?’’ என்றார் கிருஷ்ணன் சற்றுப் பொறுத்து. அவள் புன்னகைத்தாள்.

‘‘சிரமமா இல்லே?’’

‘‘சிரமம்னா?’’

கிருஷ்ணன் தயக்கத்துடன் ஏதோ சொல்ல வாய்திறந்தார். அவள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்.

அவருடைய உதடுகள் ‘ஓ’ என்பது போல் குவிந்தன. கண்கள் ஆச்சர்யத்துடன் விரிந்து நிற்க, யாரோ யீக்ஷீமீமீக்ஷ்மீ என்றது போல முகம் உறைந்தது.

அவளது நரம்புகள் லேசாக அதிர்ந்தன. இது ஏற்கெனவே கண்ட காட்சி என்ற பதைப்புடன், ‘‘என்ன?’’ என்றாள்.

தன் அப்பா ஏதோ வேடிக்கை செய்கிறார் என்று ரூபா சிரித்தது.

நளினாவின் கை இன்னும் ரூபாவை அணைத்தபடி இருந்தது.

- 07th மார்ச் 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
கதை ஆசிரியர்: வாஸந்தி. அந்தக்கரிய உருவங்கள் அங்குதான் நிழலாடிக்கொண்டிருந்தன. அது அவனுக்கு தெரிந்த விஷயந்தான். அவற்றை அவனால் துரத்த முடியாது. அவை அவனது வாழ்வின் அங்கமாகிப்போனதிலிருந்து அவற்றைத் துரத்துவது என்பது ஒரு அசாத்தியமான விஷயம் என்று அவன் புரிந்துக்கொண்டிருந்தான்.அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்கிற ...
மேலும் கதையை படிக்க...
லேசாகக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது சோமையா தாத்தாவுக்கு வயிறு மட்டும் உறுமிய வண்ணம் இருந்திராவிட்டால், சுகமாகத் தூக்கம் வந்திருக்கும். உச்சிவெயிலானாலும் உக்கிரம் இல்லை. முன்யோசனையாக என்றோ வீட்டின் நடு முற்றத்தில் நட்டிருந்த வேப்பம் செடி இன்று நெகுநெகுவென்று கிளை பரப்பி ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பாதை, வண்டிக்குப் பழகிப்போன ஒன்று. அவள் ஸ்டீயரிங் வீலில் கையை வைத்திருக்கக்கூடத் தேவை இல்லை என்று தோன்றும். தினமும் காலை 7 மணிக்கு அவள் அமர்ந்து, காரேஜ் பொத்தானை அமுக்கி அது திறந்துகொண்டதும், வண்டி சிலிர்த்துக்கொண்டு தன்னிச்சையாகக் கிளம்புவதுபோல இருக்கும். ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: வாஸந்தி. பூஜாரி விட்டல் ராவின் வீடு தெருக்கோடியில் இருந்தது. ஐந்து மணிக்கு அவரைப் பிடிக்கணும் என்று கனகம்மா தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.இப்பொழுது மணி நான்கு தான். விட்டல்ராவ் சரியாக நாலரை மணிக்குக் கோவிலுக்குக் கிளம்பிவிடுவார். கிளம்பும் சமயத்தில் போய் நின்றால் ஏகமாய் ...
மேலும் கதையை படிக்க...
சுபத்ராவுக்கு எதை நினைத்தாலும் அலுப்பாக இருந்தது. இந்த வீட்டில் இருந்த எல்லா ஜீவராசிகள் மீதும் கொல்லையிலிருந்த பசு மாட்டிலிருந்து வாசலில் வெயிலில் காய்ந்தபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் மாமனார் சங்கர்தாஸ்வரை - ஆத்திரம் வந்தது. அது சாதாரண ஆத்திரம் இல்லை - ...
மேலும் கதையை படிக்க...
விடுதலை
கொலை
ஸ்டீயரிங் வீல்
சேதி வந்தது
மண்ணின் மைந்தர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)