கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 10,987 
 

அப்போதுதான் விசா வந்திருந்தது.

அமெரிக்காவில் படிக்கப்போகிறோம்! கண்ணனுக்குப் பூரிப்பு தாங்கவில்லை.

கூடவே ஓர் உறுத்தல்.

மேற்படிப்புக்காகப் பல வருடங்கள் பிரிந்து போகும் மகனுக்காக, தமிழ், இந்திப் படங்களில் வருவதுபோல, அவனுடைய பெற்றோர் விமான நிலையத்துக்கு வந்து மாலை அணிவித்து வழி அனுப்பாவிட்டால் போகிறது, இப்படி முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளாமலாவது இருக்கலாமே என்ற அலுப்பும் கோபமும் அவனை அலைக்கழைத்தன.

அவனுடைய அதிர்ஷ்டத்தை புகழ்ந்து பேசுவதைப்போல நடித்தாலும், தெரிந்தவர்களெல்லாம் உள்ளூரப் பொறாமைப்படுவது அவனுக்குப் புரிந்துதான் இருந்தது. அப்பாவுக்கு மட்டும் ஏன் இந்தப் பெருமை புரிய மாட்டேன் என்கிறது?

இன்றா, நேற்றா? அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கண்டுவந்த கனவு அது.

ஐந்து வயதாக இருந்தபோது, அவர் உறையாற்றவிருந்த விழா ஒன்றுக்குக் கண்ணனையும் அழைத்துப் போயிருந்தார் அப்பா.

`நீ பெரியவன் ஆனதும், அப்பாமாதிரி தமிழ் பேசுவியா?’ என்று யாரோ விளையாட்டாய் கேட்டபோது, `நான் அமெரிக்கனாப் போகப்போறேன்!’ என்றான் திட்டவட்டமாக.

கேட்டவர் அதிர்ந்து, சுப்பையாவிடம் அதைத் தெரிவித்தபோது, `அவனுக்கு என்ன தெரியும்! சின்னப்பிள்ளை! மேக் டோனால்ட்ஸில ஐஸ்க்ரீம், டி.வியில மிக்கி மௌஸ்னு வளர்ற பையன் இல்லியா?’ என்று மகனுக்கு வக்காலத்து வாங்கினார்.

அடுத்த ஆண்டே கண்ணனை தனியார் பள்ளியில் சேர்த்தார்.

“எதுக்குடா? அங்க தமிழ்கூட இல்ல!” என்று ஆட்சேபித்த அவரது தந்தையிடம், “தமிழ்தானே!” என்றார் அலட்சியமாக. “நான் சொல்லிக் குடுத்துட்டுப்போறேன்!”

“நம்ப வசதிக்கு..,” என்று மனைவியும் இழுத்தாள். “அரசாங்கப் பள்ளியிலே இலவசமா படிக்கிறதை விட்டுட்டு!”

“இருக்கிறது ஒரு மகன்! இவனுக்கு இல்லாம, வேற யாருக்கு செலவழிக்கப்போறோம்! என்னைச் சாயந்திரம் ஒரு இடத்திலே வேலை செய்ய கூப்பிட்டிருக்காங்க. எல்லாம் முடியும். சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்காதே!” என்று அவள் வாயை அடைத்தார்.

பதினேழு வயதானபோது, “அப்பா! நான் அமெரிக்கா போய் படிக்கலாம்னு இருக்கேன். எங்க டீச்சருங்க அழுத்திச் சொல்றாங்க, எனக்கு அங்க நல்ல எதிர்காலம் இருக்குன்னு!” என்று, அதை நினைத்துப் பார்க்கும்போதே ஏற்பட்ட பெருமையை மறைத்துக்கொண்டு, ஏதோ பேச்சுவாக்கில் சொல்வதுபோல் தெரிவித்தான். தந்தை அடைந்த அதிர்ச்சியைக் கவனிக்கும் மனநிலையில் அவன் இருக்கவில்லை.

“ஒங்களுக்கு என்னை அங்கே அனுப்பற செலவு மட்டும்தான்!”

“சம்பளம்?”

“படிச்சு முடிச்சு, வேலை கிடைச்சதும், நானே மெதுவா அடைச்சுடுவேன், சம்பளத்துக்காக பட்ட கடனை!”

சுப்பையா குமைந்தார். பல்கலைக்கழகமே இல்லாத நாடா இது? அது என்ன, அப்படி ஒரு அயல்நாட்டு மோகம்?

பணம்தானே இந்தக் காலத்து இளைஞர்களுக்குப் பெரிதாகப் போய்விட்டது! உறவு, பாசம், நன்றிக்கடன் எல்லாம் வெறும் வாய்வார்த்தைகள்தாம்.

வயதான காலத்தில் தான் தந்தையைப் பராமரிக்கிறோமே! ஆனால், தன் மகன் திரும்பியாவது வருவானா?

அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்திருந்தான் மாதவன். “ஹை அங்கிள்!” என்று அட்டகாசமாக அழைத்தபடி வந்தவனை இன்னார் என்று புரிந்துகொள்ளவே அவருக்குச் சில நிமிடங்கள் பிடித்தன. அண்ணன் மகன்!

தலைமுடியை ஓரடி நீளத்திற்கு வளர்த்து, ரப்பர் பாண்ட் போட்டுக் கட்டி, குதிரை வாலாகத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தான். அது பரங்கி நிறத்திலிருந்தது. ஒரு காதில் வளையம். சட்டைப் பாக்கெட்டிலிருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது சிகரெட் பாக்கெட்.

இங்கு, மலாயா பல்கலைக்கழகத்தில் படிக்கும்வரை, சாதாரணமாக, எல்லாப் பையன்களையும் போலத்தானே இருந்தான்! சில வருடங்கள் அயல்நாட்டுக்குப் போய்வந்ததும், என்ன கேடு வந்துவிட்டது!

இதை வெளிப்படையாகக் கேட்கலாமோ? நாக்கைப் பிடுங்கிக்கொள்கிறாப்போல் அவன் பதிலடி கொடுத்தால்? ஏற்கெனவே, சிறுவயதிலிருந்து `சித்தப்பா,’ என்று அழைத்தவன் `அங்கிள்!’ என்கிறான், ஸ்டைலாக!

`எதற்கு வம்பு!’ என்று சுப்பையா மௌனம் சாதிக்க, “படிப்பெல்லாம் முடிஞ்சுடுச்சா, மாதவா?” என்று கேட்டான், புதிய குரல் கேட்டு உள்ளேயிருந்து வந்த கண்ணன்.

“எனக்குப் படிப்பிலே இண்டரெஸ்ட் போயிடுச்சுடா,” என்று சாவதானமாகச் சொன்னவனை அதிர்ச்சியுடன் பார்த்தார் சுப்பையா.

“மாஸ்டர்ஸ் பண்ணினேனா! கதறிக்கிட்டு, `டாக்டரேட் பண்ணுடா’ன்னாங்க அங்க. அதுக்குள்ள எனக்குப் பாட்டில ஆர்வம் அதிகமாயிடுச்சு. ஒரு குரூப்பில சேர்ந்து பாடிக்கிட்டிருந்தேன். அப்புறம், ஆராய்ச்சியாவது, மண்ணாவது! அங்கே நிரந்தரமா தங்க முடியாதுங்கிற நிலை. நல்லதாப்போச்சு. திரும்பி வந்துட்டேன்!” என்று ஒரே மூச்சில் கூறி முடித்தவனிடம், “என்னடா இது!” என்று மட்டும்தான் கேட்க முடிந்தது சுப்பையாவால்.

“போங்க அங்கிள்! ஊரா அது! `சாப்பிட வெளியே கூட்டிட்டுப் போனேன் என் மகளை. இன்னும் தன் பங்குக் காசை அவ குடுக்கலே’ன்னு எங்கிட்ட அலுத்துக்கறாரு எங்க பக்கத்து வீட்டுக்கார வெள்ளைக்காரரு. பொண்ணு பேரம் பேசுதாம், `அதுக்குப் பதிலா, ஒங்க தோட்டத்தில புல் வெட்டறேன்’னு! சீ!” என்று பழித்தான்.

“ஒங்களுக்குத்தான் தெரியுமே! எனக்குப் பாட்டுதான் உயிர், ஒலகம் எல்லாம். இது அப்பாவுக்குப் புரியுதா! `இவ்வளவு செலவழிச்சு ஒன்னைப் படிக்க வெச்சேனேடா’ன்னு கண்டபடி கத்தறாரு. அதான் அவர் முகத்திலேகூட முழிக்கப் பிடிக்காம, இங்க வந்துட்டேன்!” தோள்களைக் குலுக்கினான்.

பிறருக்குத் தன்னால் விளையும் பாதிப்பைச் சற்றும் பொருட்படுத்தாது, இப்படி — தான், தன் சுகம் என்று — வாழ எங்கு கற்றுக்கொண்டான் இவன்?

`இவனுக்கென்ன, இருபத்தியாறு வயது இருக்குமா?’ என்று சுப்பையாவின் யோசனை போயிற்று. இன்னமும் கையில் வேலை என்று எதுவும் கிடையாது. அப்பாவின் பணத்தில் `துன்பம்’ என்றால் என்னவென்றே அறியாமல் வளர்ந்தவன். இப்போது யாரை மொட்டை அடிக்கலாம் என்று இங்கு வந்திருக்கிறான்!

`விடுங்க!’ என்பதுபோல் கையை வீசீய மாதவன், “கண்ணன்! தலையை மொட்டையா வெட்டிக்கலாம்னு இருக்கேன்! இந்த ஹேர் ஸ்டைல் அலுத்திடுச்சு. ஒனக்குத் தெரிஞ்ச நல்ல சலூன் இருந்தா, கூட்டிட்டுப் போடா,” என்றபடி எழுந்தான்.

அப்படித்தான் பழனிச்சாமியைச் சந்தித்தார்கள் இருவரும்.

சிறியதாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது அந்த முடிவெட்டும் கடை. கடையில் வேறு யாரும் இருக்கவில்லை.

நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பழனிச்சாமி, `தமிழாளுங்க!’ என்று பரவசமானார். “நான் திருச்சியிலேருந்து வந்தேங்க,” என்று வலியத் தெரிவித்தார்.

“எப்போ?” மரியாதைக்காகக் கேட்டுவைத்தான் கண்ணன்.

“அது ஆச்சு, ஒண்ணரை வருஷம்! மூணு வருஷ காண்ட்ராக்ட். எப்போ திரும்பிப் போவோம்னு இருக்கு,” என்று தாபத்துடன் சொன்னவரை சற்றே ஆச்சரியத்துடன் பார்த்தான் கண்ணன்.

“இங்கே நல்லா பணம் பண்ணலாமே?”

“அதெல்லாம் சும்மா, தம்பி. இங்க காலையில ஒன்பதுக்குக் கடை திறந்தா, ராத்திரி பதினோரு மணிவரைக்கும் ஆளுங்க வந்துக்கிட்டே இருப்பாங்க. ஒரு ரிங்கிட்டுக்குப் பன்னிரண்டு ரூபாய்னு சொன்னா, கேக்க பிரமிப்பா இருக்குதான். எனக்குக் கிடைக்கிற சம்பளம் எட்டு நூறு ரிங்கிட்!”.

அவசரமாக மனக்கணக்குப் போட்டுப்பார்த்தான் கண்ணன்.

“கடையைக் கண்ட நேரத்தில மூடாம, ஒழுங்கா வேலை செஞ்சா, இந்த பணத்தை `ஊரிலேயே’ பாக்கலாம்!” என்றவர், சிறிது நேரம் மௌனமாக வேலையில் ஈடுபட்டார். “இங்க இவ்வளவு வேலையோட நானே சமைச்சுச் சாப்பிட வேண்டியிருக்கு. அனாதைமாதிரி இருக்கேன். அங்க வேளாவேளைக்கு எனக்குப் பிடிச்சதா ஆக்கிப்போட மனைவி. அதோட.., பிள்ளைங்களுக்கு ஒரு தலைவலி, காய்ச்சல்னா அவ தனியா கெடந்து திண்டாடணும்!”

மாதவனுக்கும் சுவாரசியம் பிறந்தது. “அக்கம்பக்கத்தில உதவ மாட்டாங்களா?”

“நீங்க ஒண்ணு! நான் என்னமோ கடல் தாண்டிவந்து, இங்க இருக்கிற பணத்தையெல்லாம் மூட்டை கட்டிட்டு வரப்போறேன்னு அவங்கவங்க வயத்தெரிச்சல் பட்டுக்கிட்டு இருக்காங்க. இங்க படற பாட்டை யார்கிட்ட சொல்றது!” கசந்து பேசினார். “அட, சொன்னாத்தான் நம்பப்போறாங்களா!”

இளைஞர்கள் இருவரும் பேசாதிருந்தார்கள்.

“மலேயாவைச் சுத்திப் பாக்கணும்னு ஆசை. அதான் வந்தேன். ஆனா, ஊர் சுத்திப் பாக்க எங்க நேரம்? காசு செலவழிஞ்சுடுமேன்னு பயம். கைநிறைய சம்பாரிச்சு, சொந்தத்தில பெரிய கடை வைக்கலாம்னு கனவு கண்டேன். எல்லாம் வெறும் பிரமை!” ஏக்கப் பெருமூச்சு விட்டார்.

“சினிமாவிலதான் அதெல்லாம் நடக்கும்!” என்றான் மாதவன், அலட்சியமாக.

“நான் வந்தப்போ, என் கடைசி மகனுக்கு ஒரு வயசு. திரும்பிப் போறப்போ, அவனுக்கு என்னை அடையாளம் தெரியுமோ, என்னமோ!”

அவர் சொல்லச் சொல்ல, கண்ணனுக்கு அவனுடைய எதிர்காலம் பிரம்மாண்டமாக எதிரில் வந்து பயமுறுத்தியது.

ஏற்கெனவே தன் படிப்புச் செலவை ஈடுக்கட்டுவதற்காக உடலை வருத்திக்கொண்டு நேரம், காலம் பார்க்காது வேலைபார்த்ததில் அப்பாவுக்கு நெஞ்சுவலி. அருமை மகனுடைய பிரிவை அவரால் தாங்க முடியுமா?

ஒரு வேளை, அப்பாவின் உயிர் போய்விட்டால், தான் வரமுடியுமா, கொள்ளி போட?

அமெரிக்கா பணக்கார நாடாக இருக்கலாம். அதனால் இவனுக்கு என்ன வந்தது? மாணவன் என்ற முறையில், இவனை வசதி குறைந்த ஹாஸ்டலில்தான் தங்க வைப்பார்கள். கைக்காசுக்கு பிறரது எச்சில் தட்டுகளைக் கழுவ வேண்டி வரலாம்.

`படிக்கிற பையன்! ஒனக்கு எதுக்கு வீட்டு வேலையெல்லாம். நீ நல்லாப் படிச்சு முன்னுக்கு வா!’ என்று, அம்மா போர்த்திப் போர்த்தி வளர்த்தார்களே!

பிழைப்பு தேடி, சிறுவயதிலேயே அயல்நாட்டிலிருந்து தனியாகக் கப்பலேறி மலாயா வந்த தாத்தா அடிக்கடி சொல்வது காதில் கேட்டது. `முதலைக்குத் தண்ணீரிலேதான் பலம். நாம்ப பிறந்த மண்ணைவிட்டு இன்னொரு நாட்டுக்குப் போனா, அந்த கலாசார அதிர்ச்சியே நம்பளை பலகீனமாக்கிடும். நடை, உடை, பாவனை எல்லாத்தையும் புதிய மண்ணுக்கு ஏத்தாப்போல மாத்தி அமைச்சுக்கிட்டா பொழைச்சோம்!’

பல ஆண்டுகள் கழிந்ததும், மீண்டும் தன் உடன்பிறப்புகளைப் பார்க்கப் போனபோது, சொந்த நாட்டிலேயே அந்நியனாகப்போன அவலத்தையும் தாத்தா குரலுடையச் சொல்லியிருக்கிறாரே!

பழனிச்சாமி என்னவோ கேட்டார்.

“என்னங்க?”

“நீங்ககூட பெரிய படிப்பு படிக்க அமெரிக்கா போகப்போறதா அப்பா சொல்லிக்கிட்டிருந்தாங்களே!”

“யோசிக்கணும்!” என்றான் கண்ணன். சில கனவுகள் கனவாகவே இருக்கும்வரைதான் சுவை.

(மலேசியாவில், தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கம் நடத்திய போட்டியில் பரிசு பெற்றது, 2005)

Print Friendly, PDF & Email

2 thoughts on “மோகம்

    1. மிக்க நன்றி.
      பிழைப்புக்காக மலேசியா வரும் பல தொழிலாளர்கள் தாமே என்னிடம் வந்து தங்கள் மனக்குறையை, அவல வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டதன்பின் எழுந்த கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *