மோகத்தீ

 

பேரழகி இந்த வார்த்தைக்கு ஏற்ற வனப்புடையவள் உலகில் ஒரே ஒருவள் தான், அவள் தான் அகலிகை. அழகு என்பது பெண்களுக்கே உரித்தான ஒன்று. பெண்ணின் ஒளிவீசும் கண்களை எந்த ஆடவனாலும் எதிர்நோக்க முடியாது. பெண் அதீத கனவுகளுடன் தான் வளர்த்தெடுக்கப்படுகிறாள். தான் ஒரு தேவதை என்ற எண்ணம் இறக்கும் வரை அவள் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. வெளி விஷயங்களால் உள்சமநிலைகுலைவு எளிதாக ஏற்படுவதில்லை அவளுக்கு.

அவளுடைய கடைக்கண் பார்வைக்காக எத்தனையோ சாம்ராஜ்யங்கள் இவ்வுலகில் வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்த உலகம் ஒரு சுயம்வர மண்டபம், அவளுக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ அவனுக்கு மாலையிடுவாள். எந்தத் தகுதியை வைத்து அவனுக்கு மாலையிட்டாய் என நம்மால் கேட்க முடியாது. கொலுசு சத்தம் கேட்கும்போதெல்லாம் ஆண்களின் மனது தூரிகையால் தேவதையைத் தானே வரைகிறது.

இந்த பூமியை இரட்சிக்க கடவுளால் அனுப்பப்பட்டவளே பெண். அன்பின் வெளிப்பாடு பெண்களிடம் தான் அதிகாமாகக் காணப்படுகிறது. அவமானப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் கதை தானே மகாபாரதம். இயேசு கன்னிமேரியை தனது தாயாகத் தேர்ந்தெடுக்க அவளின் களங்கமற்றத் தன்மையே காரணம்.

கடவுள் ஆணாக இருந்தாலும் பெண் தன்மை கொண்டவராகவே இருப்பார். இல்லையென்றால் அவரால் படைப்புத் தொழில் ஈடுபட முடியாது. ஆண்களால் ஒருக்காலும் தாயுமானவன் ஆகமுடியாது. குடும்பம் என்ற கட்டமைப்பு உருவாக மூலக்காரணமே பெண் தான். வாழ்க்கைக் கப்பலில் கப்பித்தானாக இருக்கும் அவள் தன்னைப் பலி கொடுத்தாவது மற்றவர்களைக் கரை சேர்த்து விடுகிறாள்.

அவதாரங்கள் பரமாத்மாவாக இருந்தாலும் தாய்க்குப் பிள்ளைகள் தானே. பெண்களின் வழியாகத்தான் இவ்வுலகிற்கு எல்லோரும் நுழைய வேண்டியிருக்கிறது. ஒரு புனிதமான பெண் எத்தகைய கயவனையும் திசைதிருப்பி நல்வழிப்படுத்த முடியும். உன் பார்வையில் தவறில்லையென்றால் எல்லாப் பெண்களிடமும் உன் தாயைப் பார்க்கலாம். வரமாகப் பெற்ற அழகு சிலசமயம் ஆபத்தைத் தான் கொண்டு வருகிறது. சீதையின் பொன் எழிலே அவள் சிறைப்படுவதற்கு காரணம்.

அவதாரங்கள் கடவுளாகவே இருக்கட்டும், சில அவதாரங்களைத் தவிர மற்ற அனைவரும் பெண்களைத் தங்கள் துணைவியராக்கிக் கொள்கிறார்கள். ஏனெனில் அவர்கள் இந்த உலகிற்குள் நுழைய வழிசெய்து கொடுத்தவள் பெண்தான். வாள் முனையில் வென்றெடுக்கப்பட்ட அம்பா பீஷ்மர் தன்னை நிராகரித்ததால் தக்க சமயத்திற்காக காத்திருந்து சிகண்டி வடிவெடுத்து போரில் பீஷமரை பழிதீர்த்துக் கொண்டாள்.

ஜீவனத்துக்குப் பயன்படும் நதிகளுக்கெல்லாம் பாரத மண்ணில் பெண் பெயரை வைத்து அழைப்பது தானே வழக்கம். பெண் எனும் மகாசமுத்திரத்தில் சிறு அலைகள் தான் ஆண்கள். பெண் எனும் சிறு வட்டத்திற்குள்ளாகவே அவர்கள் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. வானமகளின் கருணையால் தானே பூமி பச்சை வண்ண ஆடை உடுத்தியிருக்கிறது.

மொழியையும், நாட்டையும் தாயாக கருதுபவர்கள் தானே நாம். சிவனுக்கு அன்னமிடும் அன்னபூரணி அவனுக்கே அன்னையாகிறாள். உலக வாழக்கையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் ஆண்களின் பின்புலத்தில் ஒரு பெண்ணே இருக்கிறாள். பார்வதியிடம் தன் உடலின் பாதியைத் தந்தவன் தானே சிவன். ஆண், பெண் சேர்க்கையால் பிறந்தவர்கள் ஆதலால் நம்முள்ளும் ஆண், பெண் தன்மை சரிபாதியாக இருக்கிறது.

ஆண்கள் தேடுவதனைத்தையும் பெண்களால் கொடுத்துவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. தன் தாயிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டுத்தான் ஆதிசங்கரர் ஊரின் எல்லையைக் கடந்தார். பேரழகி யசோதரையை தவிக்க விட்டுவிட்டு எதைத் தேடி புத்தர் வீட்டை விட்டு இரவோடு இரவாக வெளியேறினார். இயேசுவின் வாழ்க்கையில் மேரி ஒருவளுக்கு மட்டும்தான் இடமிருந்தது.

சாதாரண மனிதர்களால் பெண்களைக் கடக்க முடியவில்லை. பெண்களுக்கு அம்மனிதர்கள் ஒரு பொருட்டே இல்லை. அசாதாரண மனிதர்கள் பெண்கள் மூலமாக தங்களிடம் பேசிக் கொண்டிருப்பது கடவுள் தான் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். ஆனாலும் அசாதாரண மனிதர்களை கடவுளைக் கண்டுகொள்ள பெண்கள் விடுவதில்லை. தாயின் புத்திர பாசமும், காதலியின் மோகவலையும் சிலந்தி வலையில் ஆண்களைச் சிக்க வைத்து விடுகிறது.

ஆண்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்று பெண்கள் அறிந்திருக்கக்கூடும். அதனை கடைசி வரை ஆண்களிடம் பகிர்ந்துகொள்ள விருப்பப்படமாட்டாள். பெண்கள் உள்ளுணர்வின் மூலம் செயல்படுகிறார்கள். ஆண்கள் அதை அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். ஆண்கள் தன்னுணர்வை இழக்கச் செய்யும் விஷயத்திலேயே அதிகம் ஈடுபடுகிறார்கள். அவனுக்கு ஏதேனும் போதை எந்நாளும் தேவைப்படுகிறது. ஆண்கள் மேலாதிக்கம் செய்வது போல் தோன்றினாலும் பெண்களே இவ்வுலகை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

பெண்களின் பேரழகு ஆண்களைச் சஞ்சலமடையச் செய்கிறது. பெண்கள் சுவர்க்கத்திலிருந்து இந்த உலகில் நுழைந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆண்களின் பாவத்தை மன்னித்து சுவர்க்கத்தில் அவர்களுக்கு இடமளிக்க விரும்பவில்லை. பிரபஞ்ச அதிபதி இவ்வுலகை ஆள பெண்களுக்கு மட்டும் ஏன் அதிகாரம் தந்தான் எனப் புரியவில்லை.

உறக்கத்தின்போது பெண்தேவதைகளின் ஆன்மா தினமும் கடவுளைச் சந்திக்கிறது. ஆண்கள் இதை அறியாமல் அவளை அணைத்துக்கொண்டு உறங்குகிறார்கள். கடவுள் பத்ம வியூகத்தை எவ்வாறு உடைத்து வெளியேற வேண்டுமென்ற யுக்தியை பெண்களிடம் மட்டுமே சொல்லியிருக்கிறான்.

ஒரு பெண்ணுடன் வாழ்வது கடவுளுடன் வாழ்வது போல. அவள் நம் தவறுகளை எளிதாக கண்பிடித்துவிடுகிறாள். மனிதனுக்கு நல்ல தாதியாக இருந்து கொண்டே அவன் மரணத்திற்கு வழிவகுக்கிறாள். சக்தி தன் ஆத்ம ஜோடியைத் தேடிக் கண்டுபிடிக்கவே இத்தனை உடல் தரித்திருக்கிறாள். அவளின் தேடல் முடியும் வரை சிவனை தன் காலால் மிதிக்கும் உக்கிரமான காளியாகத்தான் இவ்வுலகில் நடமாடுவாள்.

அகலிகை பிரம்மதேவனின் அற்புத படைப்பு. அகலிகையின் மீது தேவர்கள் தீராக் காதல் கொண்டனர். இந்திரன் அவளை அடைந்துவிட வேண்டுமென்ற வெறியோடு அலைந்து வந்தான். சுயம்வர மண்டபத்தில் எல்லோரும் கூடியிருக்க, பிரம்மதேவர் யார் முதலில் உலகை மும்முறை வலம் வருகிறார்களோ அவரையே அகலிகை மணமுடிப்பாள் என்றார். தேவர்கள் தத்தமது வாகனத்தில் உலகைச் சுற்றி வர புறப்பட்டனர். இந்திரனும் புறப்பட்டுச் சென்றான்.

நாரதர் கெளதம முனிவரை கன்றை ஈனும் பசுவை மும்முறை வலம் வரச் செய்து, கெளதமன் உலகை மும்முறை சுற்றி வந்ததற்கு நானே சாட்சி என்று பிரம்மதேவரிடம் சொல்லி அகலிகையை கெளதமனுக்கு மணமுடிக்கிறார். தாமதமாக வந்த இந்திரன் அகலிகையை கெளதமன் மணமுடித்ததைக் கேள்விப்பட்டு கடும் சினம் கொண்டான். விஷம் தோய்த்த அம்பினை தன் மீது ஏவியிருந்தால் கூட இவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டான்.

ஏமாற்றப்பட்டவர்கள் எப்போதும் பழிதீர்க்கக் காத்துக் கொண்டிருப்பார்கள். எந்த ஆடவனும் தான் ஏமாற்றப்பட்டதை சகித்துக் கொண்டிருக்க மாட்டான். ஒரு பெண்ணின் மீது கொண்ட ஆசை அவனை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும். தந்திரமாக குறுக்கு வழியில் அவளை எவ்வாறு அடையலாம் என அவன் மனம் திட்டமிடும். அந்தச் செயலால் விளையப்போகும் விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்காது. நியாயம் தன் பக்கம் இருப்பதாகவே நினைத்துக் கொள்ளும். கற்றுக் கொடுக்கப்பட்ட அத்தனை நியதிகளும் காற்றில் பறக்கவிடப்படும்.

உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அகலிகையின் நினைவுகளால் அலைகழிக்கப்பட்டான் இந்திரன். அவன் மனது சூழ்ச்சி வலை பின்னியது. அகல்யாவின் மனதைப் புணர்ந்து அவளை தன்வசப்படுத்த நினைக்கிறான். பெண்ணாசையால் ஆட்கொள்ளப்பட்டவனின் சிந்தனைகள் மனிதத்தன்னையை மீறியதாகவே இருக்கும். அவளைக் கறைப்படுத்துவதன் மூலம் தன்னை ஏமாற்றிய கெளதமனைப் பழிதீர்த்துக் கொள்ளலாம் என இந்திரன் நினைக்கிறான். அவள் மீது கொண்ட மோகம் விருட்சமாக அவன் மனதில் வளர்ந்துவிட்டது அதை வேரோடு சாய்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அகலிகையை அடையும் வரை உறங்குவதில்லை என முடிவு செய்கிறான். மஞ்சத்தில் அகலிகையுடன் வீழ்ந்து கிடப்பதைப் போல கனவு காண்கிறான். எதிர்ப்படும் பெண்களெல்லாம் அவள் சாயலைக் கொண்டவளாகவே அவனுக்குத் தெரிகிறார்கள். அவனுடைய ஆண்மைக்கு உகந்தவள் அகலிகை மட்டுமே என இந்திரன் நினைக்கிறான்.

அடர்ந்த வனத்தில் சிறு குடிலில் வசிக்கும் கெளதமனும், அகலிகையும் தெய்வ நெறியோடு வாழ்ந்து வருகிறார்கள். கெளதமன் சேவல் விடிகாலைக் கூவும் போது நதியில் நீராடக் கிளம்புவான். அன்று சேவலைப் போன்று இந்திரன் விடிவதற்கு ஒரு சாமம் முன்பே கூவி விடிந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறான். படுக்கையிலிருந்து எழுந்த கெளதமன் தான் கண்ட கனவுகள் நல்ல அறிகுறியாகத் தெரியவில்லையே என சஞ்சல மனதோடு எழுந்தான். எழுந்த பிறகு இன்னும் தூங்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு எழுந்ததே இல்லை. ஆனால் இன்று எழுந்தது. ஏதோ ஒரு சக்தி அவனை படுக்கையில் தள்ளுவதுபோல் இருந்ததை அவன் உணர்ந்தான்.தன்னுள்ளே யாரோ கேவி அழுவது போல் இருந்ததுஅவனுக்கு. இன்று எனக்கு என்ன நேர்ந்தது என தன்னையே அவன் கேட்டுக் கொண்டான். சூரியஉதயத்துக்கு முன் நீராட வேண்டுமே, விடிந்துவிட்டால் மந்திர ஜபம் செய்ய முடியாமல் போகுமே. இன்று ஒரு நாள் தடைப்பட்டால் இது நாள் வரை செய்துவந்த தபஸுக்கு பலன் இல்லாமல் போய்விடுமே. இவ்வாறு கெளதமன் தன் தபஸைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான். இது நாள் வரை அகலிகை அவனுக்கு ஒரு தாதியைப் போலத்தான் உதவிக் கொண்டிருந்தாள். கெளதன் சகுனத் தடையை மீறி வெளியே வந்தான். இது விதி வலியது என்பதையே காட்டுகிறது. சிறிது தூரம் சென்றவன் வானில் ஒளிரும் ஒரு நட்சத்திரத்தைக் கண்டான். இந்த நட்சத்திரம் வானில் தென்படுகிறதே அப்படியென்றால் விடிவதற்கு இன்னும் நேரமிருக்கிறது என்றல்லவா அர்த்தம், அப்படியென்றால் சேவல் கூவியது ஏமாற்று வேலையா என எண்ணிக் கொண்டே குடிலை நோக்கி விரைந்தான். அதற்குள் கெளதமனின் ஆத்மா அதலபாதாளத்துக்குள் வீழ்ந்துபடும் சம்பவம் குடிலுக்குள் நடந்தேறிவிட்டது. கெளதமனாக உருமாறி வந்தால் தான் அகலிகையின் மனதைப் புணர்வது சாத்தியமாகும் என இந்திரனுக்குத் தெரியும்.

அகலிகையோடு கூடியிருந்து விட்டு இந்திரன் வெளியே வந்தான். எதிரே கெளதம முனிவர் நின்று கொண்டிருந்தார். என்ன நிகழ்ந்தது என்பதை தனது ஞான திருஷ்டியால் அறிந்து கொள்கிறார். இந்திரன் ஒரு மானிட மகளின் மீது இந்த சக்தியை உபயோகிப்பான் என கெளதமன் நினைத்துப் பார்க்கக்கூட இல்லை. மோகத்தினால் ஆட்கொள்ளப்பட்டு எந்தவிதமான சிந்தனையோடு இவ்வுளவு காலம் வாழ்ந்து வந்தாயோ அது உன் உடல் முழுவதும் வரட்டும் என கெளதமன் இந்திரனை சபிக்கிறான். அகலிகை சமநிலை குலைந்தவளாய் குடிலுக்குள் அழுது கொண்டிருக்கிறாள். உருமாறி வந்தவனின் உள்ளத்தை நீ கண்டிருந்தாயானால் நானல்ல அவன் என தெரிந்திருக்குமல்லவா என்கிறார் கெளதமர்.

தாயானாலும், தாரமானாலும் சிவகாமியின் சிந்தை சிவனைப் பற்றியதே என்கிற மாதிரி இனி அகலிகை இந்திரனின் நினைவாகவே இருப்பாள். இந்திரன் தான் வசப்படுத்திய அகலிகையின் மனதை தனது கைப்பாவையாகப் பயன்படுத்தி அவளை எளிதில் தன் இச்சைக்கு உடன்படவைப்பான் என்பதால் கெளதமன் அகலிகையை கல்லாகிப்போவாய் எனச் சபித்தான்.

உருமாறி வந்தாலும் அவனுடைய உடல் அசைவுகள், மிருகபலம், உடல்வேட்கை மூலம் அவன் வேறொரு ஆடவன் என அகலிகையால் கண்டறிய முடியாமலா போயிருக்கும். ஒருவேளை அகலிகையின் ஆத்மஜோடி இந்திரனாயிருக்கலாம்! 

தொடர்புடைய சிறுகதைகள்
சில வருடங்களாகவே பைத்தியம் பிடித்து அலைந்தான் கதிரவன்.மதுசூதனன் எழுத்து மீது அவ்வளவு ஆர்வம் அவனுக்கு.பழைய புத்தகக் கடைகளில் தேடி எடுத்துப் படித்தான்.அவர் தொடர் வெளிவரும் வார, மாத இதழ்களை வாங்கிக் குவித்தான். இத்தனைக்கும் அவன் மென்பொருள் வல்லுநராக வேலை பார்ப்பவனில்லை.ஒரு போட்டோ ஸ்டியோவில் ...
மேலும் கதையை படிக்க...
ஆசை, வெறி இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறதா என்ன. மனதை அடக்கத் தெரிந்திருந்தால் மனிதன் அத்துமீறி குற்றம் இழைப்பானா? ஆதாம் அறிவுக் கனியை உண்ட போது உணர்ச்சி வெள்ளம் கரையை உடைத்து பாய்ந்தது. எண்ண அலைகள் மனதில் எழுவதும் அடங்குவதுமாகத் தான் இருக்கும். ...
மேலும் கதையை படிக்க...
பாலா தான் முதலில் அவளை நேசித்தான். அவளின் சம்மதம் அறிய ஆவலாய் இருந்தான். அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய முரளிக்கு அவளைப் பிடித்துப் போய்விட்டது. தனது கறுப்பு நிறத்தை எண்ணி கழிவிரக்கம் கொண்டான் பாலா. தோற்றமே பெண்களை முதலில் கவர்ந்திழுக்க உதவுகிறது என பத்திரிகைகளில் ...
மேலும் கதையை படிக்க...
பிணத்தின் மீது காசை விட்டெறிந்து போவதைப் போலத்தான் எங்களுக்கு பிச்சையிடுகிறார்கள். வானக் கூரையின் கீழே தான் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறோம். விசேஷ நாட்களில் கோயில் வாசலே எங்களுக்கு கதி. கையேந்துபவன் மரக்கட்டைதான். சுயக்கொலை செய்து கொள்ளாமல் யாராலேயும் கையேந்த முடியாது. என்னோட ...
மேலும் கதையை படிக்க...
வெயில் சற்றே தணியத் தொடங்கியிருந்தது. வானம் மேகக் கூட்டங்கள் இல்லாமல் நீலவண்ணமாக இருந்தது. பள்ளிக் குழந்தைகள் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். தேநீர் கடையில் கூட்டம் மொய்க்கத் தொடங்கியிருந்தது.கலையரசன் பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். திருவாரூர் செல்லும் பேருந்து வந்தது.அவ்வளவு கூட்டம் ...
மேலும் கதையை படிக்க...
ஆடி மாசம் பொறந்திடிச்சி பூசாரிக்கு அம்மன் கோயில் திருவிழாவை முடிக்கிற வரைக்கும் பிரசவவலிதான். தனிக்கட்டைதான் கோயில் காரியமே கதின்னு கிடக்கிறவரு. ஆடித் திருவிழாவுல இந்த வருஷம் எப்பவும் போல ராமு பிரஸ் தான் நோட்டீஸ் உபயம். அத வாங்கத்தான் இந்த உச்சிவெயில்ல ...
மேலும் கதையை படிக்க...
இரத்த மாதிரியை பரிசோதித்து ராமச்சந்திரனுக்கு blood cancer என்று உறுதிப்படுத்திவிட்டார்கள். அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தான் என்று அவனுக்கு நாள் குறித்து discharge செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ராமச்சந்திரனுக்கு கல்யாணமாகி ஒரு மகளுண்டு ராமச்சந்திரனுக்கு அப்பா தவறிவிட்டாலும் அம்மா ...
மேலும் கதையை படிக்க...
மவளே,மவளே என்று அந்த வார்டிலிருந்து முனகிக் கொண்டிருந்தார் பஞ்சு. உண்மையில் பஞ்சு பிரம்மச்சாரி.வயது அறுபதுக்கும் மேல்.அப்புறம் எப்படி மவளே என்று பாதி பிரக்கனையில் அழைக்கிறார் என்று கேட்கிறீர்களா. அவர் கணவன் ஆகின்ற யோக்கிதை இல்லை என்று மறுத்த சமூகம் தான் அவர் தனிமரமாய் ...
மேலும் கதையை படிக்க...
ஐந்து அவதாரங்கள் வந்து சென்றுவிட்ட நிலையில் பூமிக்கு பரிபூரணம் தேவைப்பட்டது. பிரம்ம ஞானத்தைக் காப்பாற்ற சத்ரிய தைரியம் தேவையாய் இருந்தது. ஜமத்க்னிக்கும் ரேணுகாதேவிக்கும் ஐந்தாவதாக பிறந்த குழந்தை சத்ரிய வம்சத்தையே வேரறுக்கும் என யாரும் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. பிராமணவம்ச பரசுராமருக்கு ...
மேலும் கதையை படிக்க...
கபிலவஸ்து நாட்டின் அருகாமையில் காட்டிலுள்ள ஒரு குடில் தன் மகன் ராஜ்யத்தின் மீது பற்று இல்லாமல் இருப்பதைக் கண்ட மன்னர் சுத்தோதனர் காட்டிலுள்ள துறவியிடம் சித்தார்த்தனை அனுப்பிவைத்தார். குருவின் முன்பு பத்மாசனத்தில் நன்றாக நிமிர்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தான் சித்தார்த்தன்.எதிரில் தியானத்தில் ஆழ்ந்திருந்த ...
மேலும் கதையை படிக்க...
பித்தன்
போதி
வலி
தெய்வம் தந்த வீடு
கூடு
பிழைப்பு
விடுகதை
பலிபீடம்
பரசு
மாயை

மோகத்தீ மீது ஒரு கருத்து

  1. A.SUMATHI says:

    மனிதனுக்கு நல்ல தாதியாக இருந்து கொண்டே அவன் மரணத்திற்கு வழிவகுக்கிறாள்.
    இந்த வரிகைகளை தவிர இந்த சிறுகதை ஒரு வேதத்திற்கு சமம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)