கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 12,056 
 

“நீ அங்கெல்லாம் போகக்கூடாது’’

“அம்மா, ரெண்டு நாள் லீவுதானே, நான் போயிட்டு வந்துர்றேன்’’

“அதெல்லாம் முடியாது நீ போகக்கூடாதுன்னா கூடாதுதான்’’என்று அதட்டினாள் ரவியின் அம்மா.

“என்னடா கொழுப்பு ஏறிப்போச்சு, எதிர்த்து பேசற’’ என்று தன் கண்ணாடி வளையல் உடையாமல் இருக்க, அதை முழுங்கை வரை மேலேற்றிக்கொண்டு ஓங்கி ரவியின் கன்னத்தில் அறைந்தாள்.

உடனே அவன் பீறிட்டு அழ ஆரம்பித்தான்.

கீழே விழுந்து புரண்டு அழுதுக்கொண்டிருந்தான். அவன் அழுதுக்கொண்டிருந்ததைக் கண்டு அவளும் அழாதே என்ற அடித்தாள். சிறிது நேரம் அழுதுக்கொண்டிருந்தான் ரவி. பின்பு “நா அங்கேதான் போவேன்’’ என்று கூறிவிட்டு தன் அப்பாவிடம் ஓடி ஒளிந்துக்கொண்டான். இவளும் அவனை துரத்திக்கொண்டு பின்னே சென்றாள். ரவியின் அப்பாவிடம் எங்கே அவன்…… எங்கே அவன்…….என்று கேட்டாள்.

ஏம்மா….. அவனை அடிக்கறே……..

சும்மா இருங்க, நா போவக்கூடாதுன்றேன் அவன் போயேத்தான் தீருவேன் என்று அடம்பிடிக்கிறான். அவன் எங்கே போறான். என் அப்பா வீட்டுக்குத்தானே போறான். விடு போகட்டும்.

“ ம்ம்ம்….அதெப்படி, போன வாரம் எங்க அப்பா அம்மா கூப்பிட்டுத்துக்கு போக மாட்டேன்னா, இங்க மட்டும் போறன்னே அடம்பிடிக்கறான்” என்று சொல்லியபடியே அவள் முகத்தை ஒரு ஓரமாக திருப்பிக்கொண்டாள். ரவியின் அப்பாவுக்கோ ஒரே குழப்பம். ரவியின் முகத்தைப்பார்த்தார். அவன் தேம்பி தேம்பி அழுதுக்கொண்டே இருந்தான்.

பின்பு சற்றுநேரத்திற்குப்பின் அவர் யோசித்தபடியே

“சரி விடுடா ரவி உங்கம்மா கொடுத்து வச்சது அவ்வளவுதான்” என்று சொன்னார். உடனே திருப்பிக்கொண்ட முகத்தை அவள் சற்று திரும்பி ரவியின் அப்பாவிடம், “என்ன கொடுத்து வச்சது அவ்வளவுதான் அப்படீங்கிறீங்க”

“இல்ல எங்க அம்மா அவங்களோட பழைய ரெண்டு பவுன் செயினை உனக்கு தரன்னு சொன்னாங்க. அதுக்காகத்தான் உன்னையும்,ரவியையும் போகச்சொன்னேன” அவள் முகத்தில் ஏதோ புரியாததது போல் ஒரு மலர்ச்சி. அவள் சற்று சிரித்துக்கொண்டு

“ சரி விடுங்க,பையன் அழுதிக்கிட்டே இருக்கான் அவனுக்காக போறேன்” என்றாள். உடனே ரவியும் சந்தோஷத்தில் ஒரே ஆட்டம் போட்டான். அவன் அம்மா அங்கிருந்து சென்றவுடன், அவன் அப்பாவிடம் சென்று “தேங்ஸ்ப்பா’’ என்று அவர் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு ஓடிச்சென்றான். பின்பு ரவியும் அவன் அம்மாவும் ஊருக்கு கிளம்பினர் .

சேலத்திலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த கிராமத்திற்கு செல்ல சுமார் 1 மணி நேரம் ஆகும். அக்கிராமத்திற்கு செல்லு வழியில் அழகான வயல்வெளியிலும், தென்னந்தோப்புகளும் அத்தென்னை மரம் கிளைகளுக்கிடையே கூடு கட்டி வாழும் தூக்கணங்குருவி கூட்டின் அழகே ஒரு ஓவியம் என அசந்து பார்த்து செல்கின்றான் ரவி. அங்கே தன் பார்வைக்கு பச்சைப்பசேல் என போர்வை விரிப்பு போல் விரிந்து கிடக்கும் வயல்வெளிகளும், குருவிகளின் இனிமையான ஒலிகளும் கேட்டு பயணித்துக்கொண்டிருக்கின்றான். அவன் பஸ்ஸின் இருக்கைக்கு முன் ஒரு பெரியவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் சற்று திரும்பி யாரோ பின்னோ சத்தமிட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்தார். சற்று திரும்பி பின்னே பார்த்தார். ரவி அப்போது சன்னலின் வழியே கிராமத்தின் அழகை கண்டுகொண்டிருப்பதை பார்த்து வியந்தார். சட்டென்று அவரைப்பார்த்து சிரித்தான் ரவி. பதிலுக்கு அவரும் சிரித்தார். ரவி அந்தப்பொ¤யவா¤டம் “நா எங்க தாத்தாவ பார்க்கப்போறேனே’’ என்று சந்தோஷத்துடன் கூறினான். அவரும் சரி என்றார் போல் தலையாட்டினார்.

ரவி தன்னுடைய ஒரு மணி நேர தவத்திற்கு பிறகு அவ்வூர் வந்து சோ¢கிறான். பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன் தன் அம்மா இருப்பதையும் மறந்து, தன் தவத்தின் பயனை அடைய ஓடுகிறான். பஸ்ஸில் இறங்கி
ஓடியவுடன் ஊரினுள் சென்று அங்குள்ள ஒவ்வொரு தெருவிதியையும் தாண்டி, தன் தாத்தா வீட்டுக்கு போகின்றான். வீட்டின் வெளியே அவன் ஓடிவருவதை பார்த்த அவன் பாட்டி,

“வாடா! பேரண்டி” என அழைத்தார். அவனோ தன் பாட்டியின் கையை தட்டி விட்டு ஒரு சிறிய குருவிக்கூடு போல் உள்ள அவ்வீட்டின் உள்ளே ஓடுகிறான். தன் தாத்தாவை பார்க்க, அங்கும் இங்கும் ஓடி அலைகிறான். எங்கேயும் தன் தாத்தா காணவில்லை என்றவுடன் தன் பாட்டியிடம்,

“எங்கே பாட்டி! தாத்தா” என்று கேட்டான் ரவி.

“ஏண்டா! நான் நீ வருவன்னு கோழி கருவாடுனு உனக்காக சமைச்சி வச்சா, நீ அந்தாள தேடிட்டு ஓடுறா!

“என்ன விஷயம்”

“என்ன விஷயம் தேடுற” என்றாள் பாட்டி.

சட்டென்று உடனே ஒண்ணுமில்லை பாட்டி, சும்மாத்தான் கேக்குறேன்” என்றான் தன் மூச்சை உள்ளே இழுத்த படிகூறினான் ரவி.

“எனக்கு தெரியாது” என்றாள் பாட்டி.

“சொல்லு பாட்டி…….

“சொல்லு பாட்டி……..சொல்லு”

என கெஞ்சல் கொஞ்சலாக தன் பாட்டியிடம் கேட்டான்.

“அப்பனா ஒண்ணு செய்” என்றாள் பாட்டி.

என்ன பாட்டி………..?

“அப்பனா எனக்கொரு முத்தம் கொடு” என்று சொல்லி முடிக்கும் முன்னே, சட்டென்று தன் பாட்டிக்கு ரவி முத்தம் கொடுத்தான்.

“இப்ப சொல்லு பாட்டி”? என்றான் ரவி.

ரவியை கட்டியணைத்தபடி, புறத்தால(பின்புறத்தில்) புதுசா மோளம் கட்டுறாரு பாரு சாமி.

சட்டென்று பின்புறத்திற்கு ஓடினான். அங்கே புதுசா ஒரு மோளத்தை கட்டிக்கொண்டு இருந்தார் ரவியின் தாத்தா.

அவரைக்கண்டவுடன் அவ்வூரே அதிரும்படி தாத்த்தா…………………..என்று கத்தினான். அவரும் அவனைக்கண்ட சந்தோஷத்தில் அவரும் அவனை பாசத்தோடு கட்டிக் கொண்டார்.

உடனே ரவியின் தாத்தா” எப்ப! சாமி வந்த” என்று கேட்டார்.

நான்……..நான்……..என்று தத்தை மொழியில்

“இப்பத்தான் வந்தேன்”

என கூறிக்கொண்டு, தன் தாத்தாவின் அழகான வீர மீசையை முறுக்கி விளையாடினான். உடனே மீசையை இழுத்து விட்டு ஓடினான். உடனே அவரும் பள்ளிக்கூட குழந்தையை போல அவனை துரத்தி விளையாடினார்.

இவர்கள் இப்படி விளையாடுவதை பார்த்து பக்கத்துவீட்டு மாணிக்கம்

“என்ன ஐயா பேரன் வந்து இருக்கான் போல . . .

” ஆமாம் மாணிக்கம் . .. . .. .

அவருக்கு யாரும் இல்லா தேசத்தில் இருந்த அவருக்கு கிடைத்த பொக்கிஸம் போல இருந்தார்.

இருவரும் விளையாடி முடித்தபின், வீட்டிற்கு வந்து, உணவு உண்டபின், மீண்டும் புறத்தாலே உள்ளே இடத்திற்கு சென்றனர். ரவியின் தாத்தா தமிழ் இனத்தின் முன்னோடி இசையான அம்மோளத்தை கற்றுக்கொடுக்கலாமா!? என்ற ஏக்கத்துடனும் அவனை பார்த்தாற்போல் அப்புது மோளத்தை கட்டிக் கொண்டிருந்தார். ரவியோ பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

பின்பு ஏதோ தெரியவில்லை. ரவி, தன் தாத்தாவிடம் தாத்தா! எனக்கு இதை அடிக்க கற்றுத்தறிங்களா?” என்றான்.

அவரும் தன் மனதில் இனம் புரியாத சந்தோஷத்தில் சரி என்றார். முதல் வகுப்பான அம்மோளமடிக்க எப்படி குச்சிகளை வைக்கவும் என்றும், மேல் குச்சியை எப்படி வைக்கμம் என்றும், கற்றுக் கொடுத்தார். அவனும், ஆர்வத்துடன் கற்றுக்கொண்டான். அவன் சொல்லிக்கொடுத்த, கொஞ்ச நேரத்திலேயே, மேல் குச்சியை பிடித்து “டண்” என அடிக்கும் போது தாத்தாவிடம் இருந்து, சந்தோஷம் பீறீட்டது. அந்நாள் மாலைவரை இருவரும் இதையே செய்துக்கொண்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் உண்டபின் இரவு வந்ததும், தன் பாட்டி சொன்ன “நல்லதங்கா” கதையைக் கேட்டபின், தன் தாத்தாவின் மார்பு மேல் படுத்து அவரின் மீசையை தடவிக்கொண்டே அவனும் உறங்கினான்.

இரவும் விடியலைதேடிச்சென்றது.

(அவனுக்கு ஏதோ தெரியவில்லை. அந்த மீசையின் மீது தனி பிரியம் இருந்து வந்தது. ஏனெனில் தான் இருந்த நகரத்தில் தற்காலிக அழகு என நினைத்து நம் தமிழ் இன மரபு வீரத்தின் அடையாளமான மீசையை எடுத்தவர்களை இவன் பார்த்து வளர்ந்தவன். ஆனால், இன்றும் நம் தமிழ் இனம் முழுவதும் அழியாமல் இருப்பதற்கு காரணம் கிராமங்கள் தான் அங்குதான் உண்மையான வீரத்தின் அடையாளமான மீசையை வகைப்படுத்தி வளர்கின்றனர் . நம் மரபு முன்னோடிகளில் வீரம், மீசை என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது வீரபாண்டிய கட்டபொம்மன் அவரின் வீரம் உலகமே அறியும்)

தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழும் பழக்கம் உடையவர் ரவியின் தாத்தா. ஆனால் தன் பேரன் தன் மார்பின் மீது மீசையை பிடித்தவாறு உறங்குவதைக்கண்டு, அன்று ஐந்து மணிக்கு விழித்தாலும் அவனுக்காகவே படுத்திருந்தார். இவர்கள் படுத்திருப்பதைக் கண்டு ரவியின் பாட்டியோ இவர்களை பார்த்து சிரித்தவாறே வீட்டின் வேலைகளைச் செய்துக்கொண்டிருந்தார். ஆனால் ரவியின் அம்மாவோ அவர்களிடம், சரியாக பேசக்கூடாது என்று சொல்லியிருந்தும் கூட அவர்மீது படுத்திருப்பதை பார்த்து மிகுந்த கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ரவியின் அம்மா. அதன்பிறகு ரவி எட்டுமணிக்குதான் படுக்கையை விட்டு எழுந்தான். அவன் எழுந்தபின்பே இவரும் எழுந்து வந்தார்.

அதன்பிறகு, தாத்தா, வா! சாமி பல்லு வெளக்கலாம்”

“தாத்தா நான் பேஸ்ட்டும், பிரஸ்ஸ§ம் எடுத்துட்டு வரலையே” தாத்தா என்றான். அதனால் என்ன இந்த வேப்பங்குச்சியை வெளக்கலாமே, இல்ல தாத்தா! வேப்பங்குச்சி கசக்குமே, சரி, இது வேண்டா, “வைணாரங்குச்சியில் பல்லு வெளக்கு” என்று சொன்னது மட்டுமில்லாமல் அவன் கையை பிடித்து அவரே, விளக்கியும் காண்பித்தார். அதன்பின் தினமும் எழுந்தவுடன் இஞ்சி, சுக்கு, ஏலக்காய் போட்டு கருப்பட்டி டீ குடிப்பதை வழக்கமாக கொண்டவர் ரவியின் தாத்தா. ரவியோ தன் வீட்டில் விதவிதமான சத்து பவுடர்களை (Boost, Horlicks) கலந்து குடித்து பழகியவன். அவனுக்கோ, இதைக்கண்டவுடன் மனதில் ஏதோ ஒரு நெருடல்
ஏற்பட்டது. (ரவியின் அம்மாவோ அவர்கள் சொல்வதை கேட்க கூடாது என ரவிக்கு கண்டிப்பாக கூறி விட்டார்)

அதைப் புரிந்துக்கொண்ட அவனின் தாத்தாவோ அவனுக்காக நேற்றே அப்பவுடரை வாங்கி வைத்தார். அவனும் அதை கலக்கி குடித்தான். இதற்கிடையில் அவன் பாட்டியோ காலை உணவாக களியும், கருவாட்டுக்குழம்பும் சமைத்தார். அதை உண்டபின், ரவியும் அவனின் தாத்தாவும் ஊரை சுற்றி பார்க்க சென்றனர். இருவருமே முதலில் தென்னந்தோப்புகளுக்கு சென்றனர்.

தாத்தா! என்ன சாமி!

ஏதோ சத்தம் கேட்கிறது தாத்தா!

அது தென்னங்கீத்தோடு சத்தம்ப்பா!

அது ஏன் அப்படி சத்தம் கேட்கிறது?

இல்ல சாமி! அந்த கீத்து காயப்போகுது. அதற்கு முன்னாடி கொஞ்சம் லேசான காத்துக்கும் பயங்கரமாக சத்தம் கேட்கும் என்றார். அப்படியா! என்றான் ரவி.

(கொஞ்சநேரம் இருவரும் நடந்து சென்று, அடுத்த தோப்புக்கு சென்றனர் ) அங்கே,

தாத்தா! ஏதோ கீ…..கீ……. ன்னு சத்தம் வருது தாத்தா! என்றான் ரவி.

அது இப்ப சித்திரை இல்ல, அதான் மாம்பழத்தை சண்டையிட்டு கிளி கொத்தி சாப்பிடும் சத்தம் அது.

அதோ அங்கே பாரு என்ற

ஐ!! தாத்தா, தாத்தா அதை புடுச்சி தர்றீங்களா,

இல்லப்பா அப்படியெல்லாம் செய்யக்கூடாது. நம்பளால யாருக்கும் செய்யக்கூடாது” என்றார் தாத்தா.

அதைக்கேட்டுக்கொண்டு, ரவியும் சரி தாத்தா என்றான்.

பின்பு இருவரும் தென்னந்தோப்புகளுக்கு சென்று, தென்னை மரத்திலிருந்து இளஞியை வெட்ட ரவியின் தாத்தா, தன் சட்டையை கழற்றி அதைச்சுழற்றி தன் இருகாலிலும் கட்டிக்கொண்டு, அம்மரத்தின் மேலே ஏறி இளஞியை பறித்துக்கொண்டு, கீழே வந்து ரவிக்கு வெட்டிக்கொடுத்தார். பின்பு இருவரும் மாலை ஆனபின் வீட்டிற்கு சென்றனர். அன்று முழுவதும் மிகவும் சந்தோஷமாக இருந்தான் ரவி. தன் தாத்தாவின் மீசையை பிடித்து விளையாடும் விளையாட்டும் மாலையும் வீட்டில் அரங்கேறியது. அவரும் சிறுபிள்ளைபோல் விளையாடினார். பின்பு இருவரும் கலியும் முருங்கைக்கீரையும் சாப்பிட்டபின் வழக்கம்போல் தன் பாட்டி ஒரு முன்னோர்கள் கதையை சொல்வதை கேட்டபடியே, தாத்தாவின் மார்பின் மீது படுத்துக்கொண்டு தாத்தாவின் மீசையை பிடித்தவாறும் தூங்கினான் ரவி.

மறுநாள், விழிக்கின்றான். தன் கையை தடவுகின்றான். அது தன் தாத்தாவின் மீசையைல்ல ஏதோ பஞ்சு போல் உள்ளது என உணர்கிறான். பின்பு எழுந்து பார்த்தால் ரவியால் அதிர்ச்சி தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவன் முழித்தது. அவன் தாத்தா முகத்தில் அல்ல. தன் வீட்டில் படுக்கை அறையில் தன் தாத்தா மீசை இருந்த இடத்தில் தலையணை இருந்தது. அதை பார்த்து அதிர்ந்து போனான். ஏனெனில், அன்று திங்கட்கிழமை விடுமுறை முடித்து பள்ளி செல்லும் நாள். அவன் மறுநாள் பள்ளிக்கு போகலாம் என்றால் ரவியோ அடம்பிடிப்பான் என தெரிந்த அவன் அம்மா அவனுக்கு தெரியாமலேயே அதிகாலை ஐந்து மணிக்கு ஊருக்கு கூட்டிச்சென்று விட்டார்.

ரவியின் தாத்தா கேட்டபோது, “நீங்களா ஸ்கூலுக்கு பணம் கட்டீறீங்க, நாங்கதானே கட்றோம்”

அவரோ வாய்பேசாமல் இருந்தார். அவரும் ரவியை பிரிய மனம் இல்லாமல் அவரும் தூக்கத்திலேயே அவனை தூக்கிக்கொடுத்தார். அவருக்கும் இவனை பிரிய மனமில்லை. இது ஏதும் தெரியாமல் ரவி ஏன் என்னை அங்கிருந்து கூட்டிட்டு வந்தீர்கள் என்று தன் அம்மாவிடம் அழுது புரண்டான்.

மறுபடியும் ஊருக்கு போகவேண்டும் என அடம்பிடிக்கின்றான். அவன் அம்மாவோ அவனை அடித்து அவனை பள்ளிக்கு போக சொல்கிறார்கள். ஆனால் அவனோ போக மறுக்கிறான். அவன் தன் தாத்தா வீட்டிற்கு செல்ல வேண்டும் என அடம்பிடிக்கின்றான். அவன் அழுது புரண்டு கொண்டு இருக்கும்போது அவன் அப்பா வந்தார்.

அவனிடம் விஷயம் கேட்டதும், “சரி விடுடா” அடுத்த சனி, ஞாயிறுகளுக்கு அங்கு செல்லலாம் என கூறினார். அதன்பின்பும் அவன் அழுதவாறே நின்று கொண்டிருந்தான். பிறகுதான் அவன் தேம்பியபடியே பள்ளிக்கு சென்றான். அடுத்த விடுமுறை எப்போது வரும் என தவமாய் தவமிருக்கின்றான். ரவியின் தாத்தாவும் ரவியும் வருகையை எதிர்நோக்கியவாறே தன் புது மோளத்தை தயார் செய்தார். அவனுக்காகவே ஒரு பிரத்யேக மோளத்தையும் தயார் செய்கிறார். அவன் நினைவுகளோடு.

Print Friendly, PDF & Email

2 thoughts on “மேளம்

  1. அருமை…! விவேகானந்தன் எனது சிறுவயது நினைவுகளை மேளமடித்து மீட்டி விட்டீர்….நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *