Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மேம்பாலம்

 

துரை மாமா வேலை முடிந்து வீடுவரை வந்திருந்தார். கதவைத் திறந்ததும் எல்லோரும் திக் பிரமை பிடித்ததைப் போல அமர்ந்திருந்ததைப் பார்த்தார். தோளில் மாட்டியிருந்த பையை மேசையின் மீது வைத்துவிட்டு குவளையைக் கையில் எடுத்த கனம், தடார் தடார் என அதிர்வு.

“கேக்குதா? லோரி…”

மயக்கமே வருவது போல ஆகிவிட்டது. மாமா குவளையில் நீரை நிரப்பி ஒரு மிடறில் தொண்டையை நனைத்தார். அடுத்ததாக இன்னொரு லோரி எப்பொழுது வேண்டுமென்றாலும் கடந்து போகலாம். வீடு ஓர் அதிர்வுக்காகத் தவம் கிடந்தது. அது மிகக் கொடூரமான அதிர்வு. கூரையும் சுவரும் இடிந்து சரிந்துவிடுவது போன்ற ஒரு கனநேர பயம். நெடுஞ்சாலை சிறுக சிறுக விரிந்து பாதி நிலத்தை விழுங்கிவிட்டாயிற்று. மூசாங் கம்பம் தொடங்கும் இடத்தில் உடும்புக்கார தாத்தா வீடு கட்டும்போது இதைப் பற்றியெல்லாம் யோசித்திருக்க மாட்டார். காடு பிளக்கப்பட்டு இங்கொரு நெடுஞ்சாலை வந்து வீடுகளுக்கு மேல்வரை நீளும் என முந்தைய சந்ததிகளுக்குத் தெரிந்திருக்காது.

“மாமா.. .என்னா பண்றது?”

“பெரிய ஆபிஸ்லே முனுசாமி ரிட்டாயர் வாத்தியாரு இருக்காருலே.. அவருகிட்டெ சொல்லி லெட்டர் போட சொல்லுவோம்”

துரை மாமாவிற்கு அலட்சியம். எப்பொழுதும் நாக்கிலேயே சொற்களைத் தேக்கி வைத்திருப்பார். கக்குவதற்கு வசதியாக இருக்கும். சட்டென வாய்க்கு வந்ததைச் சர்வசாதரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார். அவர் ஆற்றுப்பக்க சாலையில் நுழைந்து 12கிலோ மீட்டர் சென்றால் அடுத்த கம்பமான நாகா லீலிட்டுக்குள் போய்விடுவார். அங்குத்தான் மாமாவின் வீடு. அம்மாவின் ஒரே தம்பி. எப்பொழும் வேலை முடிந்து இப்படி வந்துவிட்டுத்தான் போவார். அப்பாவின் மரணத்திற்குப் பிறகு மாமா வீட்டின் மீது அக்கறையாகவே இருந்தார்.

“நம்பளே காலி பண்ணி போவச் சொல்லிருவான் சீனன். அவன் நிலம் மாமா!”

மாமா தோள் பையை எடுத்து மீண்டும் கையில் வைத்துக்கொண்டு என்னைப் பார்த்தார். வீடு முழுக்க மேய்ந்துவிட்டு மீண்டும் என் கண்களை வந்து அடைந்த மாமாவின் பார்வை கொஞ்சம் அச்சுறுத்தலாக இருந்தது.

“வீடு சொந்த வீடுதானே? நிலந்தான் சீனனோடு…பாத்துக்கலாம்”

துரை மாமாவின் ஆர்.சி மோட்டார் படபடவென வெடித்துப் புகையைக் கிளப்பிவிட்டு நகர்ந்தது. நெடுஞ்சாலை கார்கள் சர் சர் என ஓசையை எழுப்பி கடந்து சென்றுக்கொண்டிருக்கும் சத்தம். வெளியே வந்து நின்றேன். மாலை காற்று சுகந்தமாக வீசிக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு சோகத்தை அல்லது சோர்வை எங்கிருந்தோ கடத்திக்கொண்டு செல்வது போல அனைத்தும் கொஞ்சமாய் மங்கியிருந்தன. சட்டென ஒரு கார், தலைக்கு மேல் வேகமாய் கடக்கிறது. அடுத்த கனம் மற்றொரு கார். வேலிகளை உரசி உடைந்து சத்தமாய் மாறி கொட்டுகின்றன. காதுக்குப் பழக்கமான சப்தம்.

அம்மா சமைத்து முடித்த ரசம், அதையும் தாண்டி இலேசான மழை வாசம். குளிர்ச்சியாகப் பரவியது. அநேகமாக மழை வரக்கூடும். “தடார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” லோரி மேம்பாலத்தை அமுக்கிவிட்டு நகர்ந்தது. அப்பா இருந்திருந்தால் தளர்ந்த தேகத்தைச் சமாதானப்படுத்த முடியாமல் தலைக்கு மேலே போய்வரும் லோரியின் ஓசைகளுக்குப் பழிக்கொடுத்திருப்பார்.

“டேய் சாப்டு வா”

அம்மாவின் குரலுக்கு இருக்கும் ஒரு பயங்கரமான பழக்கம் அது. என்னுடைய தனிமையை உடைக்கும் வல்லமையுடையது. கதவை அடைத்துவிடலாம் என வீட்டுக்குள் ஒரு அடி எடுத்து வைத்தேன். தலைக்கு மேலிருந்த மேம்பாலத்தின் வலப்பக்க வேலியைப் பயங்கரமான பேரோசையுடன் உடைத்துக்கொண்டு ஒரு கனவுந்து கீழே விழுகிறது. வேலிக்கம்பிகள் சிதறி கம்பத்திற்குள் நுழைகின்றன. சத்தம் ஆள்கிறது.

“ஐயோ…என்னடா ஆச்சி” இரைச்சலில் எதையும் சரியாகக் கவனிக்க முடியவில்லை.

2

மேற்கு சுங்கைப்பட்டாணியைக் கடக்கும்போது தெரியும் மேம்பாலம் குட்டையானது. அதற்குக் கீழே அடைத்துக்கொண்டிருக்கும் ஆறேழு வீடுகளை மின்னல் பார்வையில் கவனிக்க முடிகிறது. 10 அடி தூரத்தில் கருமையான ஆறு கடந்து போகும் மேம்பாலம் அது. சில நேரங்களில் கார்களை நிறுத்திவிட்டு ஆற்றையும் அந்தப் பக்கமாக இருக்கும் குடியிருப்பையும் வெறுமனே கவனித்துவிட்டுப் போவதில் ஆர்வமாய் இருப்பார்கள்.

“நிப்பாட்டு.. சும்மா பாத்துட்டுப் போலாம்”

கணேசன் கார் கதவைத் திறந்து வெளியேறினான். அவன் பின்பக்க முதுகு வியர்வையில் நனைந்திருந்தது. எவ்வளவுத்தான் குளிராக இருந்தாலும் கணேசனுக்கு ஏதாவது ஒரு பகுதியில் வியர்த்துக்கொட்டிவிடும். மேம்பாலத்துக்கு ஓரமாகக் காரை நிறுத்தியிருந்தது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இரவுவேளை. கார்கள் வேகமாய் கடப்பதில் மட்டுமே கவனமாய் இருக்கும். பழுப்பு நிறக் காரைத் தூரத்திலேயே கவனித்துவிடுவது ஒரு சாதூர்யம் எனச் சொல்லிவிட முடியாது. கவனமின்மை என்பது இன்னொரு மூளை மாதிரி. எப்படியாவது செயல்படத் துவங்கிவிடும். அந்தக் கனத்தை யூகிக்க முடியாது. நெடுஞ்சாலை உருவாக்கி வைத்திருக்கும் மிகப்பெரிய மாயை அதுவே.

“காடியெ இங்க நிப்பாடலாமா?”

“அப்பறம்? மேம்பாலத்துக்குக் கீழே கவுத்து வச்சிரு..” சொல்லிவிட்டு அவன் சிரிப்பது இருளில் துண்டு வெளிச்சமாகத் தெரிகிறது. கணேசனின் மூக்குக் கூர்மையானது. அது மட்டுமே அவன் அழகைக் கூட்டிக் காட்டும் சக்தி. எங்காவது கூர்மையான மூக்கை எதிர்க்கொள்ளும்போதெல்லாம் கணேசனின் ஞாபகம் அழுத்தமாக ஒட்டிக்கொள்ளும். அவனுடைய மூக்கையும் மூக்கைப் பற்றிய ஞாபகத்தையும் எப்பொழுதும் உதறவே முடியாது. மூக்கை நிமிர்த்திக்காட்டி பேசுவான். அது முகத்தைவிட்டு வெகுத்தொலைவு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்.

“மூக்கன்..அடங்கு!” கார் கதவை அடைக்கும்போது மைவி ரக கார் 140-இல் கடந்திருக்கக்கூடும். மேம்பாலமே ஆட்டம் கண்டு அடங்கியது மாதிரி இருந்தது. ஒவ்வொரு மேம்பாலமும் ஏதோ ஒரு நகரை அல்லது மக்கள் வசிப்பிடத்தை இரண்டாகப் பிளந்து வைத்திருக்கிறது. கணேசனை நெருங்கி நின்று கொண்டேன். அவன் என்னைவிட உயரம். அவனுடன் நிற்கையில் பாதுகாப்பு உணர்வு அதிகமாகின்றது. கட்டியணைத்துக்கொண்டாலும் பரவாயில்லை எனத் தோன்றுகிறது. ஆனால் அதை இப்படிப் பொதுவில் செய்வது கணேசனுக்குப் பிடிக்காது.
“செல்வா.. அங்க பாத்தியா….”

கணேசனின் விரல் தூரத்தைக் காட்டியது. ஒன்றுமே தெரியவில்லை. அவனுக்கு மட்டும் தெரியும் ஏதோ ஒன்றை நோக்கி அவன் கவனம் குவிந்திருந்தது. தெரியாத ஒன்றிற்காக எத்தனை பாவனைகளைச் சேமித்துக் காட்ட வேண்டியிருக்கிறது. மீண்டும் விரலை நீட்டி எதையோ காட்டினான். அவனுக்கு மட்டும் உலகம் எதை விரித்துக் காட்டிவிடுகிறது? நெற்றியைச் சுழித்து உற்றுப் பார்த்தேன். இருளும் தூரத்தில் ஆறு நெளிவதும் மட்டும் இலேசாகத் தெரிகிறது.

“செல்வா…. எவ்ள அழகா இருக்கு?”

“சரி வா… போலாம்”

“இரசிக்கத் தெரியாதவனே… நில்லுடா”

காருக்குள் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து வரலாம் எனத் தோன்றியது. கணேசனின் முதுகை ஒரு தட்டு வைத்துவிட்டு இடதுப்பக்க கார் கதவைத் திறந்தேன். சட்டென கணேசன் சாய்ந்து நின்றிருந்த வேலிச்சுவரை 50 மீட்டர் தொலைவிலிருந்து உரசிக்கொண்டு ஒரு கனவுந்து வந்துகொண்டிருந்தது. காட்டு யானைகள் கூட்டமாக வருவது போன்ற அந்தக் காட்சியை 5 வினாடிவரைக்கும் மட்டும் பார்க்க முடிந்தது. சுதாரிப்பதற்கு நேரம் போதவில்லை. கணேசனை மோதி தள்ளிய கனவுந்தின் மற்றொரு பகுதி காரையும் என்னையும் எங்கோ தூக்கி வீசிக்கொண்டிருக்கிறது. வேலிக்கம்பிகள் உடைப்படுகின்றன.

3

இன்றைய இரவே பட்டாசுகளை பட்டவெர்த்துக்குக் கொண்டு போயாக வேண்டும். தாய்லாந்து எல்லையிலிருந்து கொண்டு வரப்படும் பட்டாசுகளை இரகசியமாக எடுத்துச் செல்ல சுங்கைப்பட்டாணிக்குள் குறுக்கு வழி இருக்கிறது. எப்பொழுதும் பட்டாசுகளைக் கடத்திச் செல்லும் கனவுந்துகள் அந்த வழியைத்தான் பயன்படுத்தும். மலாய்க்காரர்கள் அதிகம் வசிக்கும் கம்பத்து பாதை அது. ரோட் புளோக் இல்லாமல் தப்பிப்பதற்கு அதுவே சரியான பாதை.

“சுங்கப்பட்டாணியில இறங்கி வெளியாயி பட்டவர்த்துக்குப் பழைய பாதையிலே போவ வழி இருக்கு” கட்டை மணியம் தைரியமாக இருந்தார். ஒரு கனவுந்து நிறைய பட்டாசுகள். பாதி தூரம்வரை நெடுஞ்சாலையில் வந்துவிட்டால் மேற்கு சுங்கைப்பட்டாணியில் இறங்குவதுதான் போலிசின் கவனத்திலிருந்து தப்பிக்க ஒரே வாய்ப்பு. கட்டை மணியத்திற்கு இந்த நடையைக் கொண்டு போய் சேர்த்தால் இந்த மாதம் மட்டுமில்லை இன்னும் மூன்று மாதத்திற்கான வருவாயை வீட்டிற்குக் கொண்டு போய்விடலாம்.

“அண்ணே… கவனமாவே போங்க… சீன ராயா… பட்டாசு திருடுவாங்கன்னு தெரியும்… ஜாக்கிரதையா இருக்கனும்”

கட்டை மணியம் என்னைக் கோபமாகப் பார்த்தார். இலேசான சிரிப்பு வேறு.

“சும்மா வாடா….பாத்துக்கலாம்”

கட்டை மணியன் அண்ணனுடன் 4 வருடமாகப் பழக்கம். பினாங்கில் வேலை இல்லாமல் சுற்றியலைந்துகொண்டிருந்த போது வேலை போட்டுக் கொடுத்தார். ஏதோ கொஞ்சமாக அவருடன் ஒட்டிக்கொண்டு வாழ்க்கை நகர்கிறது. அதிக வருமானம் அவரைப் பலமுறை இம்சித்துள்ளது. சொந்த லோரி இருக்கிறது. இதை வைத்து இப்பொழுதுதான் சில மாதங்களாக இப்படிப் பட்டாசுகளைக் கடத்துவதை மட்டும் செய்து வருகிறார்.

“குமாரு… பயமா இருக்கா? எவன் எவனோ என்னாவோலாம் செய்றானுங்க.. இந்தச் சீனப் பையனுங்களுக்குப் பட்டாசு வெடிக்கலைன்னா ராயாவே இல்லெடா… அது நமக்கு வருமானம். சந்தோசமான விசயம்தானே” வயிற்றைத் தடவிவிட்டுக்கொண்டே லோரியின் பிடியை இலாவகமாகச் சுழற்றினார்.

“இன்னும் கொஞ்ச தூரம்டா… பழைய ரோட்டுலே போய்ட்டமா… ஒன்னும் இல்லெ”

தூரத்தில் அந்த மேம்பாலம் தெரிந்தது. இன்னும் 3 நிமிடத்தில் அந்த மேம்பாலத்தைத் தாண்டிவிட்டால் சுங்கைப்பட்டாணி நகரத்திற்குள் நுழைவதற்கான பாதை வந்துவிடும். நெடுஞ்சாலை ஒரு கனவு மாதிரி. மயக்கத்தைக் கொடுக்கும். கட்டை மணியம் அண்ணனுக்குத் தூரத்தைச் சட்டென கணிக்க முடியாது. நான் இரவில் அவருடன் பயணிப்பதே அதற்காகத்தான். அவர் எத்தனை சோர்வாக இருந்தாலும் தூங்கிவிட மாட்டார். ஆனால் கவனத்தைத் தவறவிடுவார்.

“அண்ணே மேம்பாலம் வருது, ஓரமா போங்க”

பின்னாடி நீல விளக்குச் சுழல்வது மாதிரி தென்பட்டது. பின்பக்கத்தைக் காட்டும் கண்ணாடியின் வழி தூரத்தில் போலிஸ் வண்டி துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்தோம்.

“அண்ணே போலிஸ் காடி… நம்பளைத்தான் தொரத்துறானுங்களா?”

“வாயெ மூடுடா… இருக்காது…”

அதற்கு மேல் இருவரின் பதற்றமும் கூடியது. அண்ணன் வண்டியின் வேகத்தை ஒரே கனத்தில் கூட்டினார். நெடுஞ்சாலை வெறும் கனவாக மாறியது. இருளை வேகத்தால் மட்டுமே உடைக்க முடியும். மேம்பாலத்தை அடையும் முன் கனவுந்து பயங்கரமாக அலசியது. அண்ணனால் பிடியை முறையாகச் சுழற்ற இயலவில்லை. மேம்பாலம் மேலும் இருளில் கிடந்தது.

“டேய் குமாரு ஏதோ வண்டி நிக்கற மாதிரி இருக்குடா”

அண்ணனின் முகத்தை நான் கவனிக்கவில்லை. எதிரிலிருந்த காரையும் வேறு எதையோவையும் மோதித் தள்ளி வேலிக்கம்பிகளைப் பிளந்து கொண்டு கட்டை மணியம் என்ற பட்டர்வெர்த் சிறுநகரத்துவாசியின் கனவுந்து கீழே விழத் துவங்கியது. முன் கண்ணாடியில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்ததை மட்டும் பார்க்க முடிந்தது. மேம்பாலத்தின் பிடியிலிருந்து கனவுந்து விலகும் கனம், தலை சுற்றி எல்லாமும் மங்கின.

4

ஆழ்ந்த இருள். இந்த மேம்பாலத்தின் பெயர் தெரியவில்லை. மூசாங் கம்பத்துக்கு மேலே நீண்டு இலேசாக வளைந்து ஓடுகிறது.

- மார்ச் 2012 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)