தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 10,335 
 

“”ஒரு முடிவு தெரிஞ்சாகணும். இன்னிக்கே ஒரு முடிவு தெரிஞ்சாகணுங்க. வெளில தலகாட்ட முடியல. மானம் போகுது. அந்தக் கெழவன வந்ததும் என்ன ஏதுன்னுக் கேட்டு இப்பவே ஃபைனல் பண்ணிருங்க”

பெரியவர் முத்துச்சாமி கேட்டைத் திறந்து கொண்டு, சுண்டல் வண்டியை உள்ளே தள்ளிக் கொண்டே வீட்டின் சுவர் கடிகாரத்தைப் பார்க்கிறார். மணி இரவு எட்டு மணியாகியிருந்தது. பெரிய மருமகளின் அர்ச்சனையும். காதில் துல்லியமாக விழுந்தது. வழக்கமான அர்ச்சனைதான், எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் உச்சத்தை எட்டியிருந்தது. பெரிய மகனும் முறுக்கேறிய வில்லில் தொடுக்கப்பட்ட அம்பைப் போல கோபம் கொப்பளிக்க, கண்கள் சிவப்பேறி, குறி தவறாமல் தாக்கத் தயாராக இருந்தான்.

முன்னினிதுபெரியவர் மனதுக்குள் கலக்கம் ஏற்படாமல் இல்லை. ஆனால் தான் எந்தத் தவறும் செய்வதாக அவர் உணர்வும் இல்லை. சுண்டல் வண்டியை வீட்டின் இடதுபுறச் சந்தில் நிறுத்தி விட்டு, சுண்டல் அண்டாவை மெதுவாக நகர்த்தி நகர்த்தி கால்களில் அணைத்து கீழே இறக்கி வைத்துக் கழுவிக் கவிழ்த்து காய வைத்தார். சின்னது, பெரிசு அதவிடப் பெருசுன்னு மூணு அகப்பையையும் (கொட்டாங்கச்சியில் செய்யப்பட்ட கரண்டி) சுத்தமாகக் கழுவினார். சின்ன மருமகள் தொடர்ந்து பேசியது காதில் கேட்டது.

“”ஆமாக்கா வீதியில கால் வைக்க முடியல. நீங்களாவது வண்டியெடுத்தா நேரா ஸ்கூலுக்குப் போயிடுறீங்க. நான் நடந்து பஸ் ஸ்டாப்புக்குப் போக முடியலயே. வீதி ஜனமெல்லாம் கேக்குற கேள்வி, ஏம்மா ஏன் ஒங்க மாமனார இன்னும் இப்புடி வண்டி தள்ள உட்டுட்டிங்க, பாவம் அவரு. ஒழச்சு, ஒழச்சு ஓடாத்தேஞ்ச கட்ட. அவரப்பாருங்க முன்ன ஒடம்புல காவாசி ஒடம்புதான் இருக்கு. இப்ப என்ன கொறச்சல் ஒங்களுக்கு. நம்ம வீதியிலயே நீங்கதான் இன்னிக்கி வசதி வாய்ப்பா இருக்கறீங்க. எல்லாரும் அரசாங்க உத்யோகம். ம்….அவரு ஒழப்புக்கு ஓய்வு குடுத்துக் கவனிச்சுக்கக் கூடாதாங்கிறாங்க. எனக்குத் தூக்குப் போட்டுக்கிட்டுத் தொங்கலாம் போல இருக்கும். பதில் பேச முடியாம தலையக் கீழப் போட்டுக்கிட்டு வந்துருவேன்”.

“”இந்தா இவருக்கிட்ட எவ்வளவு தாக்கா சொல்றது. இந்நிக்கி ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணுமிக்கா”

சின்ன மருமகள் வார்த்தையை முடிப்பதற்கும் சுண்டல் தாத்தா ஹாலுக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது. இந்த மே மாத வெயிலின் உக்கிரத்தில் வழக்கத்தை விட இன்னும் வாடிப் போயிருந்தார். கூனல் கூடியிருந்தது. எப்போதும் வெள்ளை மாறாத வேட்டி பழுப்பேறிப்போய் இருந்தது. வெள்ளைச்சட்டை வேர்வை படிந்து மொட மொடன்னு ஒடம்புல ஒட்டாம வெரைச்சு நிற்கிறது. வழுக்கையேறி வெளுத்த தலை மயிரும், பஞ்சை ஒட்டினாற்போல அடர்ந்த தாடி மீசையும் எழுபத்தஞ்சு வயசுக்கும் மேலான முதுமையைக் காட்டுது. கண்கள் மட்டும் பிரகாசமாக மனதைப் பிரதிபலித்தன. காக்கித் துணியில் தைக்கப்பட்ட காசுப் பையுடன் ஷோபாவில் வந்து அமர்ந்தார். காதில் எதையும் கேட்காதவரைப் போல பெரிய மருமகளைப் பார்த்து,

“”யம்மா கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டாம்மா” என்றார்.

பெரிய மருமகள், அக்னி நட்சத்திரத்தைவிடவும் அனல்பறக்க பாதாதி கேசம் வரை பார்வையை வீசி..

“”இதுக்கு ஒண்ணும் கொறச்சலில்ல. வெளியில ஊரே எங்களப் பாத்து சிரிக்கும்படி பண்ண வேண்டியது. உள்ள வந்து அம்மா போட வேண்டியது அம்மா. இரு ஒனக்கு இந்தா இப்ப முடிவு கட்றோம்” என்றவாறே தண்ணீரைக் கொண்டு வந்து வீசாத குறையாக மேசையில் வைத்தாள். சுண்டல் தாத்தா உயிரையே தண்ணி வடிவத்துல பார்க்குற மாதிரி ஆவலாக எடுத்துக் குடித்து முடிப்பதற்குள், பெரிய மகன் பாயத் தொடங்கினான்.

“”நாங்க மான மரியாதயோட வாழக்கூடாதுன்னே முடிவு பண்ணிட்டியா?”

“”ஏம்பா ஏன்.. மருமக தண்ணி கேட்டதுக்கு அப்புடி பேசுது? நீ தண்ணிய குடிக்கிறதுக்குள்ளே இப்புடி பேசுற. என்னப்பா என்ன?”

“”என்ன என்னப்பா நொன்னப்பான்னு. ஒனக்கு ஒண்ணுமே தெரியாதா? எத்தன வருசமா சொல்றோம். இந்த சுண்டல் வண்டியை தள்ளாத. பரதேசி மாரி தெருத் தெருவா சுத்தாதன்னு. ஏன் காதுல ஏறவே இல்லையா?”

“”இத்தன வருசத்துல எந்த புள்ளக்கிட்டயும் நான் அதட்டிக்கூட பேசுனதில்லயேப்பா. ஏன் அடிக்க வர்றமாதிரி இப்புடி பேசுறியே?”

பெரிய மருமகள், “”ஆமா பேசாம என்ன பண்ணுவாங்க. இன்னிக்கி என்ன பண்ணாருன்னு தெரியுமாங்க. டென்த் ரிசல்ட் வந்துருச்சே லெவன்த் அட்மிஷன் வருமேன்னு ஸ்கூலுக்குப் போனா அட்மிஷன் ஹால விட சுண்டல் வண்டியிலதாங் கூட்டம் அதிகமா இருக்கு. நானூறு மார்க்கு மேல எடுத்தவுங்களுக்கெல்லாம் சுண்டல் இலவசமாம். டென்த் பாஸ் பண்ண எல்லாருக்கும் ஹாஃப் ரேட்டாம். இதுல ஸ்டூடன்ஸ்ல இருந்து பெற்றோர் வரைக்கும் வந்து வந்து மேடம் ஒங்க மாமனாரு விளையாட்டுத் திடலையே களேபர படுத்திக்கிட்டிருக்காரு. டென்த் ரிசல்ட கொண்டாடிக்கிட்ருக்காரு ன்னு பிரசங்கம் வேற”

பெரிய மருமகள் சொல்லி முடிப்பதற்குள் சுண்டல் தாத்தா கலகலவென சத்தமிட்டு ஒரு யோகியைப் போல வாய்பிளந்து சிரித்தவர்,

“”ஆமம்மா ஆமா. இன்னிக்கி கொண்டாடிட்டுதான் வந்தேன். எம்புள்ளய பத்தாப்பு, பன்னண்டாப்பு பாஸ் பண்ணுனப்போ என்ன சந்தோசப் பட்டேனோ, அதே சந்தோஷம் இன்னிக்கி”

“”ஆமா ஆமா நீங்க சந்தோஷப்படாம என்ன பண்ணுவீங்க? தினமும் மானம் போறது, ஹெட் மாஸ்ட்ரா இருக்கிற எனக்குத்தானே?”

“”இதுல என்னம்மா இருக்கு நீ ஒம்வேலக்குப் போற. நா(ன்) எ(ம்) வேலக்கி வர்றேன். இதுல என்னம்மா மானம் போகுது? நீ இப்பதாம்மா அங்க ஹெட்மாஸ்டரு. எனக்கும் அந்தப் பள்ளிக்கூடத்துக்கும் முப்பத்தஞ்சு வருச ஒறவு இருக்கும்மா”

இளையமகன், “”பாத்தியாண்ணே இப்புடித்தான் இந்தாளு எதுக்கெடுத்தாலும் வெளக்கமும், வெதண்டா வாதமும் பேசுறதே பொழப்பாப் போச்சு”

“”இங்க பாருய்யா நீ இனிமே ஒ(ம்) வேலைக்கிப் போக வேணாம்ன்னுதான் சொல்றோம். அது எங்க கெüரவத்த, மான மரியாதையக் குழி தோண்டிப் பொதைக்கிற மாதிரி இருக்கு”

“”நான் ஒழக்கிறது எப்புடி ஒங்களோட…எனக்கு புரியல”

“”ஒனக்குப் புரியாதுய்யா புரியாது. நா(ன்) யாருய்யா ம்.. இந்த மாவட்டத் திட்ட அலுவலர். அவரு ஆர்.ஐ., அவுங்க ஹெட்மாஸ்டரு, எம்பொண்டாட்டி வி.ஏ.ஓ. இதெல்லாம் விடுய்யா. இந்தப் புதுக்கோட்டையிலேயே பெரிய ஏரியா காமராஜபுரம்தான். முப்பத்தாறு வீதி. தெனமும் பரதேசிமாதிரி சுண்டல் வண்டியத் தள்ளிக்கிட்டு சுத்துறியல்ல. எந்த வீதியிலயாவது இவ்வளவு பெரிய வீடு எவனாவது கட்டிருக்கானாய்யா…சொல்லு”

“”இல்லயேப்பா. எம்புள்ளங்க நீங்க இவ்வளவு ஒசரத்துக்கு வந்தது நெனச்சு, நெனச்சு அனுதெனமும் மனசு பூரிச்சுப் போயிருக்கேப்பா. ஆனா நீங்க இந்த ஒசரத்துக்கு வந்ததுக்கு இந்தப் பரதேசியும், அந்த வண்டியும் தானப்பா அடிப்பட”

“”ய்யோவ்…அப்ப வீட்டுல அடங்கி இருக்கமாட்ட?”

“”நானென்ன சம்பாரிக்கவா போறேன்? முப்பத்தெஞ்சு முப்பத்தாறு வருசமா இந்த புதுக்கோட்டையில முக்காவாசி சனங்களோட ஒட்டி ஒறவா வாழ்ந்துட்டேன். தெனமும் இருவது இருவத்தஞ்சு மயிலு நடந்து பழகிட்டேன். எப்புடி என்னய வீட்டுல அடஞ்சு கெடக்கச் சொல்றீங்க. இந்த மே மாசத்துல பேரப் புள்ளகயெல்லாம் அம்மாச்சி ஊடுகளுக்கு அனுப்பீட்டீங்க. அந்தப் புண்ணியவதியும் என்ன விட்டுட்டுப் போய் சேந்துட்டா”

“”அப்ப நீ சொல்றத கேக்க மாட்ட. அந்த வண்டி இருந்தாதானே போவ?” என கோபத்துடன் எழுந்தவன் வெளியில் சென்றான். சுண்டல் தாத்தா உட்பட எல்லோரும் பின் தொடர்ந்தனர். பூச்செடிக்கு அருகில் இருந்த கடப்பாரையை எடுத்து சுண்டல் வண்டியின் இரு சக்கரங்களிலும் மாறி மாறி அடித்தான். பெரியவர் தனது கால்களை அடித்து நொறுக்குவது போலவே உணர்ந்தார். வண்டி நிலை குலைந்து சரிந்தது. இதுதானே கைப்புடி என்றவாறே அதில் அடித்தான். அது ஒரு பக்கப் பிடிமானம் இழந்து தொங்கியது. தன் கை வெட்டப்பட்டுத் தொங்குவது போலவே துடித்தார். சலனமற்ற ஊமையானார் சுண்டல் தாத்தா.

அதே வேகத்தில் கடப்பாரையை எறிந்து உள்ளே வந்தவன், தன் மனைவியிடம்,

“”ஏய் அந்தக் கெழவனுக்குச் சோத்தப்போடு. ய்யோவ் தின்னுட்டுப் பேசாம போய் படு” என தனதறைக்குள் நுழைந்தான்.

பெரியவருக்குத் தலை சுற்றியது. தன்னுயிர் தன்னை விட்டுப் பிரிவது போலவே உணர்ந்தார். தடுமாறி மெதுவாக தனதறைக்கு வந்தவர் கட்டிலில் சுருண்டு விழுந்தார்.

சிலமணி நேரத்திற்குப்பின் சுயநினைவு வந்து எழுந்தவருக்கு தனது நாற்பது வருசத்திற்கு முந்தைய நினைவுகள் மனதில் அலையடித்தது.

“அப்போது நா(ன்) இலுப்பூர்ல கல்லுப்பட்டற முதலாளி. இருவது பேருக்கும் மேல நம்மக்கிட்ட வேல செஞ்சாங்க. தும்பப்பூவா மடிப்புக் களையாத வெள்ள வேட்டி, கஞ்சி போட்ட சட்ட, தேங்காப்பூத்துண்டு, அடர்ந்து கறுத்து ஒழுங்கு செய்த மீசை, சுருண்டு அடர்ந்த கலையாத முடி. கையில் அழகான தோல்பை. தோல் செருப்பு. முத்துச்சாமி கல்லுன்னா எண்ணிக்கையக் கேட்டுட்டு. கல்லப்பாக்காம எண்ணிக்கொடுப்பாக காச திருச்சியில.

தொழில் நலிஞ்சு பிழைப்புக் கேள்விக்குறியானப்பதான் மூத்த ரெண்டு பொம்புளப் புள்ளகளோட மூணு வயசுல பெரிய பயலாயும், கைப்புள்ளயா சின்னப்பயலயும் கூட்டிக்கிட்டு இந்த காமராசபுரத்துக்கு வந்தோம்.

கட்டட வேலை, இரும்பு வேலன்னு என்னென்னமோ செஞ்சுபாத்து எவங்கிட்டயும் அடிமையா கைகட்டி சம்பளம் வாங்கக்கூடாது. மானத்தோட சுயமா வாழணுமின்னுதான் இந்த சுண்டல் தொழில் ஆரம்பிச்சேன். பத்து காசு, இருவது காசு, நாலணான்னு ஆரம்பிச்சது. இந்நிக்கி அதே கரண்டி, அதே சுண்டல் ரெண்டு ரூவா, நாலு ரூவா, அஞ்சு ரூவான்னு விக்குறேன். ரெண்டு மகள்கள டீச்சருக்குப் படிக்க வச்சு, இவனுக உதவியில்லாமலே கட்டிக் குடுத்தேன். இத்தன வருசமா மானத்தோடதா(ம்) வாழ்ந்தேன். இவங்களுக்கு எப்படி இது மானத்த வாங்குற தொழிலா மாறுச்சு?’ நெஞ்சு படபடத்தது, வேர்வை சலசலன்னு கொட்டுது, மயக்கமா பசியா, தாகமா இனம்புரியல. மீண்டும் புழுவாய்ச் சுருண்டு விழுந்தார்.

தனதறையிலிருந்து வெளியில் வந்த சின்ன மருமகள், ஹாலில் காய்ந்து கிடந்த சோற்றை எடுத்து அடுப்படியில் வைத்தாள். பெரியவரின் அறைக்குள் நுழைந்தவள், “”திமிரப் பாரு கெழத்துக்கு” என்றவாறே விளக்கை அணைத்து கதவை சாத்திவிட்டுத் தனதறைக்குச் சென்றாள்.

வழக்கமாக காலை நாலு மணிக்கே வீட்டில் தொடங்கும் பெரியவரின் நடமாட்டம். மணி ஆறாகியும் வெளியில் கூட வரவில்லை. இரண்டு மகன்களும் ஒரு சேர, எவ்வளவு ரோசம் எழுவத்தஞ்சு வயசுக்கப்புறமும் எனக் கதவைத் திறந்தனர்.

இதுவரை பெரியவர் இப்படிப் படுத்துக் கிடந்து பார்த்ததில்லை. கோணிப்பையில் உருட்டிக் கட்டியது போல் கிடந்தார். மகன்கள் மனதுக்குள் ஏதோ திடுக்கிட்டது. இருவரும் காலைத் தட்டித் தட்டி “”அப்பா அப்பா” என்றனர். எந்த அசைவும் அரவமும் இல்லை. இருவரின் மனதுக்குள்ளும் அப்பாவைக் கொன்று விட்டோமோ எனும் கேள்வி எழுந்தது. உறுதியானது.

ஆறு மணிக்குப் பரவிய சுண்டல் தாத்தாவின் மரணச்செய்தி பத்து மணிக்கெல்லாம் வீதி நிறைந்த கூட்டமாக மாறியது.

காமராஜபுரத்திலேயே பெரிய வீதி முப்பத்தி நான்காம் வீதிதான். ஏறத்தாழ ரெண்டு கிலோமீட்டர் நீளமிருக்கும். அந்த வீதி முழுவதுமே பன்னிரண்டு மணிக்கெல்லாம் நிரம்பி வழிந்தது கூட்டம். ரொம்ப ஆச்சரியம் இந்த மே மாத விடுமுறையிலயும் எப்புடி இம்புட்டு மாணவர்கள் ஒண்ணு சேர்ந்தாங்கங்கிறதுதான்.

ஒன்றிரண்டு உறவினர்களுக்குத் தொலைபேசியில் தகவல் சொன்னதைத் தவிர ஒரு மரண அறிவிப்புக் கூட சொல்லவில்லை. எப்படி இவ்வளவு கூட்டமென விக்கித்துப் போயினர். இப்போது தான் கெளரவம், மானம், மரியாதையெல்லாம் காற்றில் பறப்பது போல கூனிக்குறுகினர் மருமகள்களும், மகன்களும்.

ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஓர் இளைஞர் சத்தமாகப் பேசினார்.

“”எல்லாருங் கவனிங்க. எம்பேரு சிரில் ஆண்டனி. நான் ஆலங்கு ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டரா இருக்கேன். இந்த உடம்பு நம்ம சுண்டல் தாத்தா எனக்குத் தந்தது. இவரோட உண்மையான பேரே எனக்குத் தெரியாது. ஆனா தெனமும் எனக்கு இலவசமா சுண்டல் தந்து க்ரெüண்டுக்கு போகச் சொல்லுவாரு. நான் இன்ஸ்பெக்ட்ரா செலக்ட்டான ஒடனே முதல்ல இவரதான் வந்து பாத்து கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். என்ன மாதிரி எத்தனையோ பேரு… ஏன் நாம எல்லோருமே ஏதோ ஒரு வகையிலே இவருக்கிட்டப் பயனடைஞ்சுருப்போம். அதுனால சுண்டல் தாத்தாவோட இறுதிச் சடங்க நாமலே செய்றோம். உங்களால முடிஞ்சத எங்கிட்டக் குடுங்க” என்றார்.

ஒரு மணிநேர இடைவெளியில் சிரில் கையில் ஐம்பதாயிரத்துக்கும் மேலாக பணம் சேர்ந்து விட்டது.

பெரியவரின் வாரிசுகள் அவமானத்தில் புழுங்கினர். செய்வதறியாது திகைத்தனர்.

சிரில் சில இளைஞர்களிடம் வேலைகளையெல்லாம் பகிர்ந்து ஒப்படைத்தார். மூன்று மணிக்கெல்லாம் தேரலங்காரத்தோடு இறுதி ஊர்வல வண்டி வந்து நின்றது. சுண்டல் தாத்தாவிற்கு முகம் மழித்து சந்தன சோப்பில் குளிக்க வைத்தனர். பட்டு வேட்டி, பட்டுத் துண்டால் அலங்கரித்தனர். இரண்டு மகள்களின் கோடி மட்டும் பெரியவர் மீது போட்டனர். நாலு மணிக்கெல்லாம் இறுதி ஊர்வலம் போஸ் நகர் சுடுகாட்டை நோக்கிப் புறப்பட்டது.

பெருஞ்ஜனத் திரளோடு மாணவர்கள் பெரும் படையும் ஊர்வலமாக பெரியவரின் பூத உடலைப் பின் தொடர்ந்தன.

கூட்டத்தில் ஒருவர்,

“”எங்க அத்தா காய்கறிக்கட வெச்சுருந்தாரு. சின்ன வயசுலயே மெüத்தாயிட்டாரு. எங்கம்மாவுக்கு வெளிப்பழக்கமெதுவுமில்ல. ஏதோ நாளு வீட்டுல வேலசெஞ்சுதான் எங்கள காப்பாத்துனாக. அப்பவெல்லாம் இந்த சுண்டல்தாத்தா என்ன கூப்புட்டு ஒரு இய்யக் கிண்ணத்த எடுத்து வரச் சொல்லி அது நெறைய சுண்டல் போட்டுத் தந்து எங்க பசியாத்துனாரு. காசு ஏதும் பெருசா கேட்க மாட்டாரு. இந்நிக்கி எங்கத்தா காய்கறிக்கட வச்சுருந்த அதே எடத்துல பெரிய மளியக்கட வெச்சுருக்கேன். இவரு பசியாத்தி உசுர காப்பாத்தி வச்சுரந்ததாலதான் சாத்தியமாச்சு. காலையில கட தெறக்கப் போனேன். இவரு மெüத்தாயிட்டாருன்னாக. கடைய சாத்திட்டு வந்துட்டேன்” என்றார்.

வேறொருவர், “”எனக்கு அப்பா,அம்மா ரெண்டு பேருமே கெடையாது. எங்கம்மா வெஷந் தீண்டிச் செத்துப் போச்சாம். எங்கப்பா குடிச்சே செத்துப் போனான். எங்க பாட்டிதான் என்ன வளத்தாக. பெரிசா ஒண்ணும் வருமானமில்ல. நெறைய நாளு சுண்டல்தான் எங்க ரெண்டு பேருக்குமே மூணுவேள சாப்பாடு. ஒரு தடவ எய்த்துல ஸ்பெஷல் ஃபீஸ் அஞ்சு ரூபா கூட இவருதாங் கட்டுனாரு” என்றார்.

இப்புடி ஒவ்வொருத்தரும் பலவிதமா அவகவுங்க அனுபவத்த சொல்லிக்கிட்டே போறாங்க. அதுக்குள்ளே ஒருத்தரு,

“”சுண்டல் தாத்தா இந்துவா, முஸ்லீமா, கிறிஸ்டினா ன்னு தெரியாது. ஆனா எல்லாரோட மனசுலயும் எடம்புடுச்சுட்டாரு பாருங்க”

அதற்குள் இடைமறித்த ஒருவர்,””அட என்னங்க நீங்க எவ்வளவு வறுமையிலயும், செம்மையா, மேன்மையா, மனுசனா வாழ்ந்தாருங்கறதுக்கு சாட்சியம்தான் இந்தக் கூட்டம்”

பக்கத்தில் வந்தவர், “”எல்லாம் அவரோட ஒழைப்புங்க. நேத்துக்கூட யாவாரத்துக்கு வந்தாருங்க. இந்நிக்கி செத்துப் போயிட்டாருங்கிறாங்க…என்னால நம்பவே முடியல”

என்றதும் மகன்கள் இருவருக்கும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகளை இதயத்தில் செறுகினாற்போல் இருந்தது. வலியைப் மறைத்துக் கொள்ளவும் முடியவில்லை. வெளியே சொல்லிவிடவும் முடியவில்லை. இருவர் மனதுக்குள்ளும் நாம் உயிரோடு பிணங்களாக நடந்து போறோம், அப்பா உயிரின்றி மேன்மைமிக்க மனிதனாக வாழ்ந்து போகிறார் என எண்ணினர்.

– செம்பை முருகானந்தம் (ஆகஸ்ட் 2013)

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *