கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 12,468 
 

ஒன்று…

மரணத்தின் இருப்பு தென்றலாய் முகிழ்ந்து தவழ்ந்து கொண்டிருக்க இவனோ சுகமாய் அதில் லயித்து தன்னிலை மறந்தவனாய் தரை மீது விரித்திருந்த கோரைப்பாயின் மீது தலையணை ஏதுமின்றி படுத்திருந்தான். கைகளை மடக்கி உள்ளங்கையை கோர்த்து இவனாகவே உருவாக்கிக் கொண்ட மெல்லிய தலைப்படுகையில் பின்னந்தலை பதிய படுத்துக் கிடந்தவனுக்கு மனதுள் நாளைய தினத்தைப் பற்றின எண்ணமெழுச்சி ஏற்பட்டது. இன்றைய பொழுதில் இருபத்தியிரண்டு மணிநேரத்தை கடத்தியாகிவிட்டது. எஞ்சியிருக்கும் இரண்டு மணி நேரம் கடந்தால்…

நாளைக்குள் பிரவேசிக்கலாம். புதியதாய் எதாவது பிரச்சனைகளுடன் பொழுது புலரலாமென்று எண்ணிக்கொண்டான். தேவையில்லாதவற்றுள் ஏன் தலையை நுழைத்து மனதை சங்கடப்படுத்திக் கொள்ள வேண்டும். பிரச்சினைகளே வாழ்வாகிப் போனவனுக்கு, அதை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு,அவற்றை களையும் முறைமை தெரியாமற்போனது ஆச்சரியம் தான். ஆச்சரியப்பட்டான்.

சூழல் மரணத்துக்கானது. மனதுள் மரணம் அடித்தளமிட்டு வெகுநாட்களாகிறது. சிறது சிறிதாய் அது மேலெழுந்து பூரணமடைவதற்கு விழைவதாய் தனது செயல்பாடுகளை காண்பித்த வண்ணமிருந்தாலும், தேர்ந்த ஒரு கட்டிடக்கலை நிபுணனாய் இவன் அவ்வப்பொழுது அதன் எழுச்சியை மட்டுப்படுத்தி சீர்ப்படுத்திக் கொண்டிருந்தான். அடித்தளம் மிகவும் பலமாய் இடப்பட்டுவிட்டிருந்தது. இயற்கையாய் அமைந்து பொருந்தியதைப் போன்று ஆழமாய் பதியப்பட்டிருந்தது அது. நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறான் இவன். மனிதத்துளிகளுள் இவனும் ஒரு துளியாய் எல்லோரையும் போல சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். கூடுதலாய் இவன் மட்டுமே பிரச்சனைகளால் சூழப்பட்டிருப்பதாய் எண்ணிக் கொள்கிறான். விளைவு, மரணத்தின் வீச்சமும் தென்றலாகி மணம் வீசுவதாய் படுகிறது.

மனைவி கட்டிலின் மீது படுத்து கிடக்கிறாள். அவளது ஒரு சிறு அசைவால் ஏற்பட்ட கிரீச், கிரீச், சத்தம் கட்டிலை ஒட்டியே தரையில் படுத்துக்கிடந்த இவனது செவிகளில் வீழ்ந்து, நினைவுகளை கலைக்கிறது. மெதுவாக எம்பி கட்டிலின் மீது பார்வையைச் செலுத்தினான். நன்றாக உறங்கிக் கொண்டிருந்த மனைவியை ஒட்டியே பிள்ளைகள் இருவரும் படுத்திருக்கின்றனர். சின்னவனின் ஒருக்களித்த உடலில், அவனது முதுகை வலது கையால் அணைத்தபடி மனைவி. பெரியவன் சிறிய இடைவெளி விட்டு முதுகை தனது தாய்க்கு காண்பித்தவாறு கிடக்கிறான். நீண்ட பெருமூச்சு இவனுள் எழுந்து அடங்குகிறது. மனைவியின் தலையை லேசாக வருடிக் கொடுக்கிறான். அவள் அயர்ந்து தூங்குவதாய் படுகிறது. எந்த சலனமும் இல்லை. வயிற்றுப்பகுதி மட்டும் வெளிக்கும் உள்ளுக்குமாய் இயங்கிக் கொண்டிருக்கிறது சீராக. இவன் மனதுள் காமத்துக்கான சலனம் சிறிதும் இல்லை. இப்போது முழுவதுமாய் எழுந்து முதுகை சுவற்றின் மீது சாய்த்தபடிக்கு அமர்ந்து கொண்டான். கால்கள் இரண்டையும் மடக்கி பாதங்கள் தரையில் படர்ந்தபடி விட்டிருக்க முட்டிகள் இடித்துக் கொள்ளும்படிக்கு கால்களை ஆட்டியபடி அமர்ந்திருந்தான். தீவிர சிந்தனைக்கு வயப்பட்டவன் போன்ற நிலை அப்போது நிலவியது. சூன்யமாய் அடுத்த நாளுக்குள் நுழைய முடியுமா என்ற சிந்தனை மேலோங்கி அது குறித்து அவன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.

இரண்டு…

ஒளி நிறைந்த அறை. இவன் மட்டும் தனியனாய் கிடக்கிறான். நிகழ்வுகளின் துவக்கம் இப்படித்தான் அரங்கேறுமோ என்றபடிக்கு அந்த நிகழ்வு அங்கு அரங்கேற துவங்கிறது. இப்போது இவனைச் சுற்றி எதோ பறப்பதாய் உணர்கிறான். அது ஒரு காகிதத்துண்டு போலிருக்கிறது. கண் திறந்து பார்க்கிற பொழுது அது மேலெழும்பி மின் விசிறியின் சூழற்சியில் சிக்கி சுழன்றபடி சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது. திடீரென அதிலிருந்து புதியதாய் ஒன்று உதிக்க, அதிலிருந்து மற்றொன்று, ஒன்றாய் இரண்டாய் பலதாய் அந்த அறையே நிறையும் வண்ணமாய் சூழ்ந்து கொள்ள அவன் தீர்க்கமாய் தனது பார்வையால் அந்த துண்டங்களை கவனிக்கிறான். அதிர்ச்சியும் ஆச்சரியமும் இவனுள் பரவுகிறது. எல்லாம் ரூபாய் தாள்கள். ஐந்து, பத்து, ஐம்பது, நூறு, ஐநூறு…

இவனால் அடையாளப்படுத்த முடியாதபடிக்கு நாணயங்களும் பறக்க ஆரம்பிக்கின்றன. செய்வதறியாது அமர்ந்திருக்கிறான். அப்போது தான் அவனது மூளைக்குள் தனது தேவைகளின் எண்ணமெழுச்சி ஏற்படுகிறது. தாள்களால் நிர்மாணிக்கப்படும், வாழ்க்கையை பூரணமாக்க தனக்கு இவைகளின். தேவையிருப்பதை உணர்கிறான். இவனுக்கு அண்மையில் கண்களுக்கெதிராக புற்றீசல்கள் போல் எழும்பிப் பறக்கும் பணத்தாள்களின் மீது இவனுக்கு காதல் பிறக்கிறது.வலது கையை நீட்டி இவனுக்கு அருகிலேயே பறந்த பணத்தாளை பிடிக்க முயல்கிறான். அது விலகி தூரச் சென்று காற்றில் சூழன்றபடி மேலெழும்பி பறக்கிறது. அடுத்த முயற்சியும் இப்படியே விரயமாக இவன் காதுகளில் மட்டும் நாணயங்களின் மோதல் சத்தம் கலிங்கலிங்கென்று வீழ்ந்தபடியிருக்கிறது.

மின்விசிறி முன்பை விட வேகமாக சுழல்வதாய் படுகிறது. ஆச்சரியமாய் பணத்தாள்களும் நாணயங்களும் அதன் சுழற்சியில் சிக்காது பறந்தபடியே இருக்க தீர்க்கமான ஒரு முடிவோடு மின் விசிறியை நிறுத்துகிறான். அது தனக்கே உரித்தான “கொடக் கொடக்” சத்தத்தோடு தன் சுழற்சியை சிறது சிறிதாக மட்டுப்படுத்தி கொண்டே உறைகிறது. மின் விசிறி தனது சுழற்சியை நிறுத்தியபொழுது பணத்தாள்கள் மெதுவாய் ஆடி அசைந்தபடி தரை நோக்கி கீழிறங்குவதை அவன் கண்ணுறுகிறான். சுழற்சியை நிறுத்தினால் எல்லாம் சாத்தியமாகும?

ஊஹீம்.

அவன் தன்னை அடுத்த கட்டத்துக்கு தயார்படுத்திக் கொண்டான். எழுந்து நின்றவன் எம்பி எம்பி, பறந்து கொண்டிருந்தவைகளை பிடிக்க முயன்று தோற்றான். உயரே மலர்ந்து குலுங்கும் பூக்களை பறிக்க எம்பி எம்பி குதிப்பது போலும் குதித்தான். முடியவில்லை. இங்கு புதியதாய் ஒன்றை அவன் உணர ஆரம்பித்தான். எவ்வளவு காதலாய் அவன் பணத்தாள்களை நோக்கி கைகளை நீட்டுகிறானோ அதனினும் வேகமாக மூர்க்கத்தனமாக அவனது கைகள் புறந்தள்ளப்படுகின்றது என்பதை. செய்வதறியாது திகைத்தான். உடல் சோர்வுக்கு முன்பேயே மனச்சோர்வு உண்டாக பாயின் மீது அமர்ந்து கொண்டான். உடல் ஆசுவாசப்பட்டாலும் மனம் தன்னிலையில் சோர்வுற்றிருந்தது. முயற்சி மறுபடியும் தோல்வியுறுமோ என்ற ஐயம் மேலெழ அண்ணாந்து பார்க்கிறான். மேற்கூரையினை அண்மி தொப்பலாய் அப்பிக் கொண்டது போல் பணத்தாள்களும் நாணயங்களும் அடர்ந்திருக்க மறுபடியும் முயற்சிப்போமா என்ற எண்ணம் எழ எழுந்து நிற்கிறான். ஊன்றி நிலைத்து நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தவனுக்கு கால்களில் வலி பொறுக்க முடியாததாய் உருவெடுக்கிறது. பாதங்களை தரையில் பதிந்து நேராக நிற்பதே சிரமமாகிப்போக கையை ஊன்றியபடி தரையில் அமர்ந்து அப்படியே சரிந்து பாயின் மீது படுத்துக் கொண்டான். எட்டாக் கனியாகிப் போன புளித்த பணத்தாள்கள் இவனைப் பார்த்து பழிப்பதாய் தோன்றவே பார்வையை அவற்றின் மீதிருந்து விடுத்து திரும்பிப் படுத்தான்.

கதவில் அடித்திருந்த ஆணியில் மாட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்த மேல்சட்டையின் பையில் துருத்திக்கொண்டு பிதுங்கியிருந்த காகிதக்கற்றைகளிலிருந்து தனித்து காற்றில் அசைந்தபடி ஒரு லாட்டரிச்சீட்டு தெரிந்தது. பரிசுக்கான சாத்தியமுண்டாவென்று மனது அசை போட்டது.நப்பாசை துளிர்விட்டது. ஒரு லட்சம் முதற்பரிசு. காலையில் முடிவு தெரிந்து விடும். டீக்கடையில் நிச்சயிக்கப்படப்போகும் தீர்வுக்காய் மனம் கிடந்து தவித்தது.

தீடீரென்று ஏனோ தெரியவில்லை. அன்று மாலை நண்பனொருவன் தன்னை குரூரவாதி என்று கூறியது நிழலாடியது. துயரவாதியாயோ சோகவாதியாயோ மட்டுமே தன்னைத்தானே நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு இன்று குரூரப்பட்டமும் கிடைத்தது எதை நியாயப்படுத்தவென்று அறிய முயற்சித்தான். முடியவில்லை.

அகல் விளக்கில் அணையும் திரியை தூண்டி பிரபஞ்சத்திற்கு ஒளி கூட்ட விழைகிற விழைவில், விரல் சுடுபடுவது போல் தானா இந்த பட்டம். இருக்கலாம். சிந்தனையோட்டம் மேலும் முன்னேறும் முன்னரே அதால பாதாளத்திலிருந்து கேட்கும் குரலாய் மனைவியின் குரல் ” என்னங்க ஃபேன ஏன் நிறுத்தினீங்க ” என்றது. விழித்துக் கொண்டான். பிள்ளைகள் இருவரும் புரண்டுப்படுத்தனர். புழுக்கம் அறைக்குள் பரவ ஆரம்பிக்கும் முன்பேயே தடைப்பட்டிருந்த மின்சாரம் மீண்டு வர, காற்று அறை முழுவதும் பரவி நிறைகிறது.

மூன்று…

பொழுது புலர்ந்து விட்டிருந்தது. இவன் வேகமாக டீக்கடையை நோக்கி முன்னேறி கொண்டிருந்தபோது தான் லாட்டரி சீட்டு விற்பவன் எதிர்பட்டான். தளர்ந்து இருந்தான். அவனிடத்தில் வழக்கமான உற்சாகம் அறுகிப் போயிருந்தது.

“அண்ணே அடுத்த வாரத்திலேர்ந்து லாட்டரிக்கு தடை போடப்போறாங்கலாம். அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு தான் தெரியல” – கூறினான்.

வாட்டத்துக்கான காரணம் புரிந்தது. “இவனே… பூடான் ரிஸல்ட் வந்திடுச்சா”

அவனது பெயர் தெரியாததால் ஏகத்தில் கேட்டான். “வந்திடுச்சிண்ணா… 316 க்கு ஐம்பது”

இவன் மெதுவாக சட்டைப்பையில் கையை விட்டு பார்த்தான்.சில்லறை இல்லாததால் நேற்று வலுக்கட்டாயமாக இவனது கையில் திணிக்கப்பட்ட லாட்டரி சீட்டு இருந்தது.

“சரி…டீக்கடையில் போய் பார்த்துகிறேன்”

கை அனிச்சையாய் சட்டைப் பையிலிருந்த லாட்டரி சீட்டை எடுத்தது. எண்களை பார்த்தான்.

316 என்ற கடைசி எண் பொருந்தவில்லை. சப்பென்றானது மனது. டீக்கடையில் முழு முடிவையும் பார்த்துக் கொள்வோம் என்று ஆசுவாசப்பட்டு முன்னேறினான். பெஞ்சில் செய்திதாள் தன் மீது சுமத்தப்பட்டிருந்த கல்லுக்கு பணிந்து அடங்கியிருந்தது. அதனருகில் அமர்ந்தான்.

எதிர்பார்ப்பு எதைச்சார்ந்து சுழல்கிறது. குழப்பினான்.

“தம்பி டீ போடு”

டீக்கடைக்காரன் ஏறிட்டு பார்த்தான். “சார் பதினெட்டு ரூபா பாக்கி” என்றான்.

முள்ளாய் குத்தியது வார்த்தை. அவனை இவன் பார்த்தான். அவன் தலைகுனிந்தவாறு கண்ணாடி தம்ளரில் சுடுநீரை கொட்டி ஒரு அலசு அலசி கீழே கொட்டினான். தம்ளரின் வெளிப்புறம் ஆவி பறந்தது. செய்தித்தாளை பிரித்தான். மூன்றாம் பக்கத்திலிருந்த முடிவுகளை பரபரப்பாக ஆய்ந்தான். பூடான் முதல் பரிசு AZ 682282. இவன் கையிலிருந்தது AX வரிசை. எதையோ இழந்தது போன்றானது மனசு. 2-ல் முடிகிற ஏதோ ஒரு எண்ணுக்கு 100 ரூபாய் பரிசு வீழ்ந்திருந்தது. குழம்பிப்போனான். பெஞ்சின் மீதிருந்த டீயை எடுத்து குடித்தான். கசப்பாய் தெரிந்தது.

“தம்பி காசு நாளக்கி தரேன்” ஆமோதித்தலுக்கு காத்திராமல் நடக்கத் துவங்கியிருந்தான். டீக்கடையை அடுத்து முன்றாவது இடத்திலிருந்த லாட்டரிச்சீட்டு கடை இன்னும் மூடியே கிடந்தது. வெளியேயிருந்த குப்பை கூடையில் வீணான லாட்டரிச் சீட்டுகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த லாட்டரிச்சீட்டை கூடையில் வீசினான். இரண்டு அடிகள் எடுத்து வைக்கும் முன்னரே பின்னாலிருந்து வேகமாக காற்று சுழன்று சுழன்று இவனைக் கடந்து சென்றது. நிலை தடுமாறினான். கீழே விழுந்தான். சுதாரித்து எழுந்தான். தலைக்கேசத்தை சரி செய்து கொண்டான். மேலிருந்து எதோ ஒன்று இவனை நோக்கி இறங்குவதாய் உணர்ந்தான். அண்ணாந்து பார்த்தான்.

உணர்வுகளின் தூண்டல். முன்பே இவன் உணர்ந்திருந்த படிக்காய், மீண்டும் காற்றில் அலைபாய்ந்தபடி கீழிறங்கிக் கொண்டிருந்தன தாள்கள். வித்தயாசமாய் தாள்கள் இப்போது பூமியில் பரவி சிதறி காற்றில் அடித்துச் செல்வதாய் இருக்க நிலைமையின் தீவிரம் மற்றும் உண்மையை இவன் உணர்ந்து கொண்டவனாய் பரவிக் கிடந்தவைகளை ஒவ்வொன்றாய் எடுத்து உள்ளங்கையில் அடுக்கிக் கொண்டிருந்தான். இடது உள்ளங்கை நிறைந்ததும் மனதும் போதுமென்றது. எதிர்பட்ட வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டான். கையில் எவ்வளவு உள்ளதென அறிந்து கொள்ள மனம் துடியாய் துடித்தது. வலது கை கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் நாக்கில் தொட்டு ஈரப்படுத்திக் கொண்டு எண்ண ஆரம்பித்தான்.

“ஒரு லட்சம்… ரெண்டு லட்சம்… மூணு லட்சம்…. ”

டியூசனுக்கு சென்று கொண்டிருந்த விவரமான குழந்தைகள், விவகாரமான ஆளாய் இவன் திண்ணையில் அமர்ந்தபடி கைகளிலிருந்த பழைய லாட்டரிச் சீட்டுகளை எண்ணிக்கொண்டிருந்தது, வேடிக்கையாயும் விபரீதமுமாய் பட “பைத்தியம் பைத்தியம் ” என்று கத்தியபடி எதிர்திசையில் ஓட, இவனும் என்னமோ ஏதோவென்று பைத்தியத்தின் பயத்தை தன் மீதும் பூசிக் கொண்டு அவர்கள் ஒடின திசையை நோக்கி கைகளில் சீட்டுக்களை அள்ளியவாறு, அவற்றை மார்போடு அணைத்துக்கொண்டே ஓட ஆரம்பித்தான்.

லாட்டரிச் சீட்டுக்கடையில் குப்பைக் கூடை காலியாய் கவிழ்ந்து கிடக்கிறது. ஓடும் இவனை, எட்டிப்பார்த்த டீக்கடைக்காரன் விநோதனாய் மாறிக் கொண்டிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *