மறந்து போன கடிதம்!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 14,884 
 

தபால் பெட்டி மேல் எனக்கு எப்பவுமே ஒரு தனி பிரியம் உண்டு…

நாங்கள் இருந்த ஊரில் அப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு குறைந்தது நாலைந்து தபால் பெட்டிகளாவது இருக்கும்…

எங்கள் தெருவில் மட்டுமே நாலு தபால் பெட்டிகள் இருந்தது.

அநேகமாக ஒன்றிரண்டு பெட்டிகள் தவிர மற்ற எல்லா பெட்டிகளும் நிறம் மங்கிப் போய் துருப்பிடித்து பரிதாபமாய் இருக்கும்..

அதில் கடிதம் போட்டால் போய்ச்சேருமோ என்று ஒரு பயம் எப்பவுமே எனக்கு இருக்கும்.

என்னுடைய நண்பன் சொல்லுவான்…

“டேய்..மோகன்…. எந்த மூலையிலிருந்தாலும் தாபால் பெட்டியிலிருந்து தபால் எடுக்காம போகமாட்டாங்க….

உன்னோட கடிதம் ஏதாச்சும் இதுவரைக்கும் போகாம இருந்திருக்கா…???

தப்பா விலாசம் எழுதினாக்கூட எப்பிடியும் கண்டு பிடிச்சி குடுத்திடுவாங்க….”

பாலு சொல்றதும் சரிதான்….

நான் பள்ளிக்குப் போகும் வழியில் சில சமயம் தபால் பெட்டியருகே நின்று பார்ப்பதுண்டு.

எனக்கு எப்பவுமே புதிதாய் பெயிண்ட் அடித்து பளபளவென்று தக்காளிப் பழ நிறத்தில் இருக்கும் தபால் பெட்டி தான் பிடிக்கும்.

‘LETTERS ‘என்று கருப்பு எழுத்தில் எழுதி கீழே கை நுழையும் அளவுக்கு நீள துவாரம்….

சிறுவர்களுக்குக் கூட எட்டும் அளவுக்கு … கடிதம் போட வசதியாக…

கீழே ‘Next clearance’ என்று நேரம் எழுதி இருக்கும்….3.30 P.M….. 5.30 P.M. …என்று…

சில சமயம் தபால்காரர் தபால்கள் எடுக்க வந்தால் அங்கேயே நின்று விடுவேன்…

கீழே இருக்கும் பூட்டைத் திறந்து , பெட்டியிலுள்ள தபால்களை கையோடு கொண்டு வந்திருக்கும் காக்கிப் பையின் உள்ளே அள்ளி அள்ளி போடுவார்.எப்போதாவது ஒன்றிரண்டு கடிதங்கள் கீழே விழும்.

எனக்கு பயமாக இருக்கும். ஒருவேளை கவனிக்காமல் விட்டுவிட்டால்…??

ஆனால் ஒரு தடவை கூட அப்படி நடந்ததில்லை.அழகாக பூட்டி விட்டு நேரத்தையும் மாற்றி வைத்து விட்டு போவார்……

ஒருவேளைக்கு இத்தனை பேரா கடிதம் எழுதுகிறார்கள்….???

என்னதான் எழுதுவார்கள்….???

என்னுடைய அப்பா பெயர் தர்மராஜன். பள்ளிக்கூட வாத்தியாராக இருந்து தன் சுய விருப்பத்தின்படி ஓய்வு பெற்றவர்….அது ஒரு தனிக் கதை…

அப்பா நிறைய எழுதுவார்.

அநேகமாய்வாரம் ஒரு கடிதமாவது போஸ்ட் பண்ண கொடுப்பார்.என்னைத்தவிர வேறு யாரிடமும் கொடுக்க மாட்டார்..

இந்து நாளிதழில் ‘Letters to the editor ‘…. கட்டுரைகள்….. அரசியல் கருத்துகள்… இப்படி எதாவது ஒன்று… ஆங்கிலத்தில் அழகாகவே எழுதுவார்….

நான் நல்ல புது தபால் பெட்டியாகத் தேடிப் பிடித்து , எப்போது அடுத்த க்ளியரன்ஸ் என்று செக் பண்ணிக் கொண்டுதான் வருவேன்..

“பச்ச பெட்டில போட்டுடாதய்யா….

..அது உள்ளூர் தபாலுக்கு…. அப்புறம் லேட்டாய் போய்ச் சேரும்..”

சில நாள் அவர் எழுதிக் குடுக்கும் போதே லேட்டாகி விடும்.

“நாளக்கி போட்டுக்கலாம் ….”என்று சொல்லிக் குடுப்பார் .

ஆனால் நான் தபாலாபீசுக்குப் போய் விடுவேன்.

பக்கத்தில்தான் போஸ்ட் ஆஃபீஸ்….!!!!

பின்வழியாகப்போனால் ஆபீஸர் , எல்லா கடிதங்களுக்கும் சீல் குத்திக் கொண்டு இருப்பார்.

சாதாரணமாய் யாரும் அங்கே போகக் கூடாது.ஆனால் எனக்கு அவர் ரொம்ப சினேகிதம்..

“என்ன தம்பி…..குடுத்துட்டு போ…”

அவர் முத்திரை குத்தும் வரை இடத்தைவிட்டு நகர மாட்டேன்..

“என்ன தம்பி…..சந்தேகமா..?? என்று சிரிப்பார்…..இதோ… கேன்சல் பண்ணிட்டேன்…

போதுமா…..”

எனக்கு எட்டு வயசு இருக்கும் போது அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது..

என்னுடைய அக்கா ரம்யாவுக்கு பதினாலு வயசிருக்கும்….

அம்மாவுக்கு வயிற்றில் T.B. என்றார்கள்… ஏற்கனவே முற்றி விட்டதாம்… ஒரு வருஷத்தில் அம்மா காரியம் முடிந்து விட்டது….

அப்பா லட்சத்தில் ஒருத்தர்.. அம்மா போனபின் வீட்டு வேலைக்குக் கூட ஆள் வைத்துக் கொள்ளவில்லை… அம்மாவுக்கு மேலே எங்களைப் பார்த்துக் கொண்டார்.

வீட்டுவேலையையும் பார்த்துக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கும் போவது கஷ்ட்டமாய் இருந்ததால் தானே ஓய்வு வாங்கிக் கொண்டு விட்டார்.

வீட்டைப் பெருக்கித் துடைக்கும் ஆண்களை நான் பார்த்ததில்லை….

எங்களையும் அப்படியே வளர்த்து விட்டார்…

ரம்யா பள்ளி முடித்த போது கல்லூரிக்கு அனுப்பவில்லை.. வீட்டிலிருந்து correspondence course ல் படித்தால் போதும் என்று சொல்லி விட்டார்…

கொஞ்சம் கொஞ்சமாய் அக்கா சமைக்க கற்றுக் கொண்டு விட்டாள்…

ஆனால் அக்கா அப்பா மாதிரி…… ஆங்கிலத்தில் ரொம்ப கெட்டிக்காரி…

நூலகத்தில் நிறைய புத்தகங்கள் எடுத்து படிப்பாள்…..’ மில்ஸ் அண்ட் பூன் ‘மாதிரி காதல் கதைகள் இல்லை….

சோமர்செட் மாம்…. ஜேன் ஆஸ்டின்….ஓ. ஹென்றி… எலியட் ..வோட்ஹவுஸ் …இந்த மாதிரி… ஆங்கில இலக்கியங்கள்…!!!!

சில சமயம் என்னை லைப்ரரிக்கு அனுப்புவாள்…

ரம்யாவுக்கு பதினெட்டு வயதானதும் அப்பா அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார்…..

அப்பா எது செய்தாலும் அக்கா வாயே திறக்கமாட்டாள்….

அப்பா சாதாரண குடும்பத்தில் தான் மாப்பிள்ளை பார்த்தார்…..

விரலுக்குத்தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்.

அவருடைய சிநேகிதர் பையன் எலக்ட்ரிகல் இஞ்சினியரிங் டிப்ளமோ..முடித்துவிட்டு மின்சார இலாகாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அரசாங்க உத்தியோகம்…ஆனால் பயிற்சிக்காக ஒரு மாதத்துக்கு ஜெர்மனி போயிருந்தான்.

ரம்யாவின் போட்டோவைப் பார்த்து சரியென்று சொல்லி விட்டான்…..

ரம்யா எப்போதுமே போட்டோவில் அழகாகவே விழுவாள். அவள் ஒரு அபிப்ராயமுமே சொல்லவில்லை…

அவளுக்கென்று ஆசையே கிடையாதோ….????

அநேகமாய் திருமணம் நிச்சயமான மாதிரிதான்….

பையனின் அக்கா பம்பாயில் இருந்ததால் இன்னொரு போட்டோ வேண்டும் என்றார் அப்பாவின் நண்பர். உடனே அனுப்ப வேண்டும் என்றும் சொன்னார்..

அவள் சரியென்றால் கல்யாண தேதியை நிச்சியம் செய்து விடலாம் என்று தீர்மானம் செய்து விட்டார்கள்.இதெல்லாம் அப்பா சொல்லித்தான் எனக்குத் தெரியும்….

அப்பா என்னை கூப்பிட்டார்…

“மோகன்….இது முக்கியமான கடிதம்…. உடனே போஸ்ட் பண்ணணும்… ஜாக்கிரதை…”

கிளம்பும் போது ரம்யா கூப்பிட்டாள்…

“மோகன்…. இந்த லைப்ரரி புத்தகத்தை அப்படியே ரிட்டர்ன் பண்ணிடு…. இன்னிக்கு கடைசி நாள்….”

புத்தகத்தை அவசரமாய் வாங்கிக் கொண்டு அதில் கடிதத்தை சொருகி , சைக்கிளை ஒரு மிதி மிதித்தேன்…

முதலில் கடிதத்தைப் போஸ்ட் பண்ணி விட்டுத்தான் நூலகம்….

நினைத்துக் கொண்டே வேகமாக மிதித்தேன். …

வழியில் பாலு வந்தான்.

“டேய்.. மோகன்…நம்ப சீனுவுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடிச்சாம் .ஆஸ்பத்திரில சேத்திருக்காங்களாம் …..நாம உடனே போகணும்…””

“இருடா…ஒரே நிமிஷம்… இந்த புத்தகத்தை லைப்ரரில குடுத்துட்டு போயிடலாம்… கடைசி நாள்…..”

அவசரத்தில் உள்ளே இருக்கும் கடிதம் மறந்தே போனது…

சீனு மயக்கத்தில் இருந்தான்.நல்லவேளை காலில் முறிவு மட்டும்தான்.!!!!

அரைமணி நேரம் அவனுடைய அம்மாவிடம் பேசி விட்டு வரும்போதுதான் அப்பா கொடுத்த கடிதம் ஞாபகத்துக்கு வந்தது…

“ஐயய்யோ …..முக்கியமான வேலையை மறந்துட்டேன்டா.. ஒரு நிமிஷம் லைப்ரரி வழியாப் போலாம்…”

லைப்ரரி மூடியிருந்தது…

சரி… எப்படியும் அங்கேதானே இருக்கப் போகிறது…

நாளைக்கு எடுத்து போஸ்ட் பண்ணி விட்டு அப்புறம் அப்பாவிடம் சொல்லலாம்…

இல்லாவிட்டால் பொறுப்பில்லை என்று திட்டுவார்…

காலையிலேயே லைப்ரரிக்கு கிளம்பி விட்டடேன்.ஆனால் இன்னும் திறந்தபாடில்லலை… அடுத்த நாளும் பூட்டியிருந்தது…

எனக்கு பயம் பிடித்துக் கொண்டது… அப்பாவிடம் சொல்ல தைரியம் இல்லை. ஆனது ஆகட்டும் என்று பேசாமல் இருந்து விட்டேன்….

நல்ல வேளை….. அடுத்த நாள் திறந்து இருந்தது….லைப்ரேரியன் வீட்டில் வர முடியாத சூழல்…

“வணக்கம் சார்…. நான் இரண்டு நாளாக வந்து பார்த்தேன்… பூட்டியிருந்தது…”

“ஆமாம்பா…. சாரி …வீட்ல ஒரு தடங்கல்…. இரண்டு நாளா அஸிஸ்டன்ட் இரண்டு பேரும் வேற லீவுல போய்ட்டாங்க……. !!!

ஏன் …. புது புத்தகம் ஏதாச்சும் எடுக்கணுமா…”

“இல்ல ஸார்…….அக்கா ஒரு புத்தகத்தை பண்ணினாங்களே…. Somerset Maugham….The Letter.. …..”

“ஆமா…..நல்லா ஞாபகம் இருக்கே…..”

“அதுல போஸ்ட் பண்ண ஒரு கடிதம் வச்சிருந்தேன்…. அந்த புத்தகத்தை ஒரு நிமிஷம் தரீங்களா …?”

“இருப்பா…… பாக்கறேன்….!!
ஸாரி… மோகன் !!!…

அன்னிக்கே யாரோ எடுத்துட்டு போயிருக்காங்க….”

“யாரு ஸார்….???”

“சின்மயான்னு ஒருத்தர்….. அவரும் உங்க அக்கா மாதிரியே…அதே டேஸ்ட்…..

கொஞ்ச நாளாய் அந்த புத்தகத்தை தேடிட்டிருந்தார்…. ஏம்பா…. ஏதாச்சும் சிக்கலா ….????”

எனக்கு அவரிடம் சொல்லலாமா … வேண்டாமா….என்று குழப்பமாயிருந்து…

பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டு விட்டோமோ ….???

ஒரு நிமிஷம் என்ன பண்ணுவது என்றே புரியவில்லை….

“ஸாரி…. மோகன்….என்ன யோசிக்கிற….”

“அப்பா லெட்டர் போஸ்ட் பண்ண குடுத்தாரு..மறந்து போய் அதில வச்சுட்டேன்….”

“அவ்வளவு தானே…சின்மயா விலாசம் இருக்கு…. போய்ப் பார்த்து கேளு….. எங்கேயும் போகாது…..கவலப் படாத…..”

கொஞ்சம் ஆறுதலாயிருந்தது……

ஆனால் முன்னப்பின்ன தெரியாதவர்கள் வீட்டிற்கெல்லாம் போய் பழக்கமில்லை…. வேறு வழியில்லை…. போய்த்தான் ஆகணும்…

வீடு ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாய் புதிதாய் முளைத்த வசதி படைத்தோர் குடியிருப்பு…

வரிசை வரிசையாய் தனித்தனி வீடுகள்…. சின்ன தோட்டத்துடன்..

முதலில் பாலுவைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு போகலாமென்று நினைத்தேன்…

அப்புறம் அப்பாவிடம் இன்னும் சொல்லாதது ஞாபகம் வரவே தனியாகப் போவதே நல்லது என்று முடிவு பண்ணி விட்டேன்…..

இந்த மாதிரி வீடுகளில் சாதாரணமாய் நாய்கள் இருக்கும்… ஒரு தடவை கடி வாங்கியுமிருக்கிறேன்….

ஆனால் ‘நாய்கள் ஜாக்கிரதை ‘என்று ஒரு போர்டையும் காணம்…

தைரியமாய் கதவைத் திறந்து அழைப்பு மணியை அழுத்தினேன்…

ஒரு வயதான அம்மா வந்து கதவைத் திறந்தார்… கண்ணாடி போட்டுக் கொண்டு ஒரு கல்லூரி லெக்சரர் மாதிரி…..

“யாரு தம்பி…. யார் வேணும்…???”

“இங்க…..சின்மயான்னு ஒருத்தர்….”

“ஆமாம்….சின்மயா என் பையன்தான்……உள்ள வாப்பா…..”

வெளியில் கண்டிப்பாய் தெரிந்த உருவம் உள்ளே தேனாய் இனித்தது..

வீடு ரொம்ப விசாலமாய் இருந்தது… ஆனால் பணக்கார படாடோபம் எதிலுமே தெரியவில்லை….

சுவரில் பெரிய விவேகானந்தர் படம்…. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் படம்….

அப்பா…அம்மா… பையன் … அணைத்துக் கொண்டிருக்கும் படம்…..

யாரோ ஊர் பேர் தெரியாத சின்னப் பையன் என்று கொஞ்சமும் நினைக்காமல் ..

“வாப்பா…. உன் பேரேன்ன…???”

“மோகன் ஆன்ட்டி…..”

“மோகன்….உக்காரு…. சின்மயா மாடில இருக்கான்னு நினைக்கிறேன்….கூப்பிடறேன்…”

“சின்மயா….”என்று மாடியை நோக்கிக் குரல் குடுத்தார். மேலேயிருந்து மாண்டலின் சீனிவாசன் இசை மெலிதாக..

“அம்மா….. என்ன வேணும்…???”

“உன்னைப் பார்க்க ஒரு பையன் வந்திருக்கான்…..”

“அஞ்சு நிமிஷத்தில வரேன்….”

சரியாக ஐந்து நிமிஷத்தில் சின்மயா இறங்கி வந்தான்….

வெள்ளை குர்த்தா….சிரித்த முகம்…. அம்மாவின் சாயல்…..

“அம்மா… யாரிந்த பையன்….?? பார்த்த ஞாபகம் இல்லையே…..”

“குட்மார்னிங் அங்கிள்…… எம்பேரு மோகன்…. சாரி உங்கள தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கணும்…….”

“அதெல்லாம் ஒண்ணும் பரவாயில்லை….நீ முதல்ல உக்காரு….”

“அங்கிள்… நீங்க சுடர் லைப்ரரி மெம்பர்தானே…”

“ஆமாம்.. மோகன்…சொல்லு…..”

“எங்க அக்கா ரம்யாவும் அதில உறுப்பினர்… போனவாரம் ஒரு புத்தகம் ரிட்டர்ன் பண்ணும்போது அதில் அப்பா போஸ்ட் பண்ணக் குடுத்த ஒரு கடிதத்தை மறந்து வச்சிட்டேன்….அதை வாங்கிட்டு போலாம்னு…..”

“ஆமா…. போனவாரம் இரண்டு மூணு புத்தகம் எடுத்தேன்…. பேரு ஞாபகம் இருக்கா….?”

“நல்லா நினைவிருக்கு..’ Somerset Maugham ‘…The Letter….

.”நல்ல வேடிக்கை…. !!!!

கடிதத்துக்குள் கடிதம்…’ A Letter in The Letter…..”

ஆமா… ரொம்ப நாளா அந்த புத்தகத்தை தேடிட்டிருந்தேன்..

மூணு நாளா கொஞ்சம் வேலை நிறைய…. அப்படியே வச்சிட்டேன்…ஒரே நிமிஷம்… எடுத்திட்டு வரேன்….”

மூன்று புத்தகங்களைக் கீழே கொண்டு வந்தான்…

“இந்தா…நீயே பாரு…..”

அப்பாடா… எனக்கு போன உயிர் வந்தது… கடிதம் அப்படியே இருந்தது…”

“அங்கிள்.. ரொம்ப நன்றி…..நா ரொம்ப பயந்துட்டேன்…”

“ஏன் மோகன்… என்ன பயம்???…”

இத்தனை நாள் அடக்கி வைத்திருந்ததையெல்லாம் மளமளவென்று கொட்டி விட்டேன்….

“எனக்கு கேட்கவே கஷ்ட்டமாயிருக்கு……

நான் உடனே பாத்திருந்தா வீட்டிலேயே கொண்டு வந்து குடுத்திருப்பேன்..

உனக்கு அப்பாவ ஃபேஸ் பண்ண பயம்மா இருந்தா நானும் கூட வரேன்….”

“நானும் வரேன் சின்மயா….

எல்லோருமே போலாம்….”

சின்மயாவின் காரில் எல்லோரும் என் வீட்டுக்கு கிளம்பினார்கள்…
வாசலில் நுழையும்போதே பேச்சுக் குரல் ….

“போகட்டும் அப்பா…. எனக்கு ஒண்ணும் பெரிய வருத்தமெல்லாம் இல்லை….

சொல்லப்போனா ஏதோ பாரம் இறங்கின மாதிரி……இப்போ ரொம்பவே ஃப்ரீயா இருக்கு…..”

“அதுக்கில்லம்மா…… எப்படி என் கடிதம் போய்ச்சேரல.. எனக்கு அதுதான் புரியல….

இது வரைக்கும் இந்த மாதிரி ஒரு தடவை கூட நடந்ததில்லையே.. மோகன் வரட்டும்….”

அப்பா சின்மயாவையும் அவரது அம்மாவையும் பார்த்ததும் பேச்சை உடனே நிறுத்தி விட்டு ,

“மோகன் ….இவங்க…. ????”

“அப்பா… இவர் பேரு சின்மயா…அவரோட அம்மா நிர்மலா ஆன்ட்டி…

யூனிவர்சிட்டியில கணிதத்துறை …H.O.D.”

“வணக்கம் அங்கிள் …. என் பேரு சின்மயா… நான் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பேராசிரியர்

. இதுதான் என்னோட சொந்த ஊர்.அம்மாவ பாக்க வருஷத்துக்கு இரண்டு தடவ வருவேன்.”

‘இதெல்லாம் எதுக்கு ‘என்பது போல் பார்த்தார்.

“ப்ளீஸ்…..உள்ள வந்து உட்காருங்க….. நான் தர்மராஜன்….மோகனோட அப்பா…. இது ரம்யா…. என் மூத்த பெண்…”

“மோகன் எல்லாமே சொல்லிட்டான்….”அப்பாவுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது…..

சின்மயா சொல்லச் சொல்ல அவருக்கு எல்லாமே புரிந்தது…

“இந்த கடிதம் போய்ச்சேராததால் உங்களுக்கு ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருப்பது போல தோணுதே அங்கிள்..

வரும்போது அரைகுறையா காதில் விழுந்தது…. உங்கள் குடும்ப விஷயத்தில் தலையிடுவதற்கு மன்னிக்கணும்…

யாருமே கொஞ்ச நேரம் பேசவில்லை…

“ரம்யா…. இங்க வாம்மா….பக்கத்தில உக்காரு…”

நிர்மலா பக்கத்தில் உட்கார்ந்தாள்….

“மோகன் ரொம்ப பொறுப்பான பையன்… அவன் இப்படி செய்வானென்று நான் நினச்சு கூடப் பாக்கல… அவனால ரம்யாவின் கல்யாணமே நின்னு போச்சு….”

அப்பா நிறையவே வருத்தப்பட்டார்..

“அட்லீஸ்ட் போஸ்ட் பண்ண மறந்து போச்சுன்னாவது உடனே சொல்லியிருக்கலாம்…

கடிதம் போய்ச் சேராததால் அவுங்க வேற இடத்தில நிச்சியம் பண்ணிட்டாங்க….”

“அப்பா… விடுங்க ப்ளீஸ்… நானும் அவரும் பாத்துக்க கூட இல்ல..இது என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை….”

ரம்யா தெளிவாக இருந்தாள்..

ஒரு அசௌகரியமான மௌனம் அங்கே நிலவியது…”

“ரம்யா…. நீங்க நிறைய படிப்பீங்கன்னு மோகன் சொன்னான்..

நானும் Somerset Maugham ன் The Letter படிக்கணும்னு வெயிட் பண்ணிட்டிருந்தேன் …. சின்ன வயசில படிச்சது…..”

“எனக்கும் பிடித்த புத்தகம்.. மலேசியா, சிங்கப்பூர் …கதைக் களம் எனக்கு பரிச்சியமானதால் கூடுதல் இன்ட்ரஸ்ட்..

சாரி. … இரண்டு முறை, extend பண்ணிட்டேன்….

சின்மயாவும் ரம்யாவும் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார்கள்…

எனக்கு அப்பாவிடம் மன்னிப்பு கேட்க சரியான சந்தர்ப்பம் வரவில்லை….

ஆன்ட்டியும் அப்பாவும் நிறையவே பேசினார்கள் .

தேனீர் ..பலகாரம் …..சாப்பிட்டதும் மறுபடியும் சாரி சொல்லி விட்டு கிளம்பினார்கள்….

அப்பா என்னைத் திரும்பி கூட பார்க்கவில்லை… என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை….

விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டேன்…

“டோன்ட் பீ ஸில்லி மோகன்…. இது ஒரு விஷயமேயில்லை..”

ரம்யா எனக்கு ஆறுதல் கூறினாள்….

அப்பா சொன்னார்…

“ரம்யா…அப்படியில்லை… எனக்கு ரொம்ப அவமானமா போச்சு..”

மோகன் பண்ணினது தப்புதான்…”

“அப்பா… என்ன மன்னிச்சிடுங்க….

இப்படியெல்லாம்நடக்கும்னு நான் எதிர் பார்க்கவே இல்லை …”

அப்பா என் பேச்சை காதில் போட்டுக் கொள்ளவேயில்லை……..

ரம்யா இப்போதெல்லாம் ரொம்ப சந்தோஷமாயிருப்பதாய் தோன்றியது..

அவளே புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்க லைப்ரரிக்கு போகிறாள்..

நீங்கள் யூகித்தது சரிதான்…

*****************************************

ரம்யா இப்போது ரம்யா சின்மயா..!

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் உள்ளே உள் வளாகத்திலேயே தனிக்குடித்தனம்….

வழியனுப்பும் போதே அப்பா கண்டிப்பாக சொல்லிவிட்டார்.

“ரம்யா….. எனக்கு ஃபோன் பண்றது அவ்வளவா திருப்தியாய் இருக்காது.கடிதம்தான் போடுவேன் .

உங்கிட்டேயிருந்தும் அதைத்தான் எதிர் பாக்கிறேன்….

ப்ளீஸ்.கீப் இன் டச்…..”

பத்து நாளைக்கு ஒரு முறையாவது ரம்யா கடிதம் எழுதி விடுவாள்….சின்மயாவும் இரண்டு வரியாவது எழுதிவிடுவான்…..

‘அன்புள்ள அப்பா, மோகன்.,

எனக்கு இந்த இடம் பிரமிப்பை ஊட்டுகிறது…. யூனிவர்சிட்டி பக்கத்திலேயே Fitzwilliam museum, Anthropology , Archaeology museum என்று பார்க்க வேண்டிய நிறைய இடங்கள்…..

உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்…. நீங்கள் எல்லோரும் கட்டாயம் அடுத்த தடவை எங்களுடன் வரணும்…..’

பார்த்த இடம் ஒன்று விடாமல் ஏர் மெயிலில் நுணுக்கி நுணுக்கி அக்கா எழுதியதை குறைந்தது நாலைந்து தடவை படித்து விடுவார்.எனக்கும் காட்டிவிட்டு உடனே பதில் எழுதி விடுவார்….

ஆனால் ஒரு தடவை கூட எங்கிட்ட குடுத்து போஸ்ட் பண்ணச் சொல்லவேயில்லை…

“அப்பா….. குடுங்க … நான் போஸ்ட். பண்றேன்… நீங்க எதுக்கு கஷ்ட்டப்பட்டு…”

“இருக்கட்டும் ….அவங்கவுங்க காரியத்தை அவங்களே செய்யறது தான் நல்லது……”

எனக்கு இது தான் தண்டனையா….??? எத்தனை நாளைக்கு…..???

இரண்டு அடி அடித்தாலோ ….திட்டினாலோ கூட தேவலை போலிருந்தது…

ரொம்ப பொறுக்க முடியாமல் போகவே நிர்மலா ஆன்ட்டியிடம் சொன்னேன்..

“அக்காகிட்ட ஃபோன் பண்ணி பேசணுமா ….??”

“ஆமா ஆன்ட்டி..பேசினா பாரம் குறையும்னு தோணுது.!!!!

கால் போட்டுக் குடுத்தார்…

அக்காவிடம் பேசவே முடியவில்லை… தொண்டை அடைத்தது…. ஒரு வழியாக சொல்லி முடித்தேன்…

“எங்கிட்ட சொல்லிட்டயில்ல….. நான் பாத்துக்கிறேன்…கவலய விடு….”

‘”அன்புள்ள அப்பா,

இங்கே குளிர் ஆரம்பித்து விட்டதால் வெளியில் அதிகம் போகமுடிவதில்லை…..

எப்போது மழைவரும் என்று சொல்லமுடியாது…..!!!!

நிர்மலா அம்மா இந்த வருஷத்துடன் ஓய்வு பெறுவதால் அடுத்த தடவை எங்களுடன் வந்து ஒரு வருஷம் தங்கப் போகிறார்….

நீங்களும் மோகனும் அவசியம் வரவேண்டும்… மோகனுக்கு இங்கு Ph.D. க்கு சுலபமாக உதவித்தொகை கிடைக்கும்…

அப்பா…. நீங்கள் இன்னும் மோகன் மேல் கோபமாய் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்…

மோகன் உங்களிடம் சொல்லாமல் விட்டது தப்புதான்.. ஆனால் உங்களிடம் நானும் சொல்லாமல் விட்டது ஒன்று இருக்கிறது….

நீங்கள் எனக்கு முதலில் திருமணம் நிச்சயம் பண்ணின நாள் முதல் நான் ஒரு நாள் கூட நிம்மதியாக தூங்கவில்லை….

நான் அப்போது திருமணத்திற்கு தயாராகவே இல்லை… ஆனாலும் உங்கள் மனதை நோகடிக்க விரும்பவில்லை..

உங்களிடம் சொல்லாமல் மறைத்தது தெரிந்தே செய்த தவறு….

ஆனால் மோகனோ வேண்டுமென்றே தவறு செய்யவில்லை… அன்றைக்கு அவன் அந்த கடிதத்ததைப் போஸ்ட் பண்ணியிருந்தால்……

என்னால் மேற்கொண்டு நினைத்துக் கூடப் பார்க்க விருப்பமில்லை….

இந்த வாழ்க்கை எனக்கு கிடைத்தது மோகனால்தான்..

அதற்காகவாவது அவன் செய்த தவறை மன்னித்து விடுங்கள் ப்ளீஸ்….”

கடிதத்தைப் படித்த அப்பாவின் கண்களை கண்ணீர் நனைத்ததை நான் கவனித்து விட்டேன்…

அப்பா கடிதத்தை படித்து விட்டு என் மேசை மீது வைத்து விட்டு போய்விட்டார்..

காலை பத்து மணி இருக்கும்…….

“மோகன்… இங்க வாப்பா…. இந்த கடிதத்தைப் போஸ்ட் பண்ணிடு…”

என் தோளில் கையைப் போட்டு அணைத்துக் கொண்டு கையில் ஒரு கடிதத்தைத் திணித்தார்….

ராத்திரி தூங்காமல் பதில் எழுதினதாலா அல்லது அழுததாலா தெரியவில்லை… அவர் கண்கள் சிவந்திருந்தது…..

சிவப்பு நிற தபால் பெட்டி என் கண் முன்னால் வந்து போனது…..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *