Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மனைவியைத் தழுவும்போது…

 

எப்படியோ லாரிக்காரரைக் கெஞ்சி சாக்கு மூட்டையின் மீது இடம் பிடித்து உட்கார்ந்தான். அவனைப் போல இன்னும் இரண்டு பேர் அந்த லாரியில் ஏறியிருந்தார்கள்.

“பொளுது விளறதுக் குள்ளாற காங்கயம் போயிறலாமா, ஏனுங்க?” பக்கத்திலிருந்த வரைக் கேட்டான்.

“ஆருது, அம்புட்டு நாளி எதுக்கு? உச்சிக்கே சேந்துடலாங்க!”

இவன் தலையைச் சொறிந்து கொண்டான். வழியில் கொங்கு ஆண்டவர் மலைக்கோயில் மணியோசை காற்றில் மிதந்து வந்தது. “இன்னிக்கு வெள்ளி. அதான் பூசை நடக்கு. நமக்குக் கூட ஒரு நேர்த்திக் கடன் இருக்கு. ஆடு வெட்டிப் பலி தரோணும். குண்டடம் சந்தையில ஆனை விலை சொல்றாங்க. பத்து கிலோ மெதப்பு கடா ஒண்ணு பாத்தேன். வர்ற வாரத்துல வாங்கிடலாமுன்னு திரும்பிட்டேனுங்க..”

பக்கத்தில் இருந்தவர் ஒரு பீடியை எடுத்து லாவகமாகப் பற்றவைத்து ஊதினார். இவனைப் பார்த்து நீங்க? என்று கேட்டு ஒரு பீடியை நீட்டினார்.

“பீடிப் பளக்கம் இல்லீங்க.”

இவன் சிரித்துக் கொண்டான். அவள் இந்த மூன்று நாளில் என்னமாய் கவலையும் ஆத்திரமும் கொண்டிருப்பாள் என்று எண்ணியவனே போன்று லாரியைப் பின் தொடர்ந்து வரும் வாகனங்களைப் பார்த்தான். லாரி சீராக உறுமியபடி சாலையில் விரைந்தது.

நான்கு தினங்களுக்கு முன் அவளுக்கும் இவனுக்கும் சண்டை வந்தது. “காட்டுல போயலை போட்டால், கொடுவாய் மொதலாளி அதிகமாப் பணம் தர்றாங்களாம்” என்றாள் அவள்.

“போயலையா? என் பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே போயலை நடற பளக்கம் இல்லியே பாப்பாத்தி!”

“பின்னே?”

“பருத்தி போடலாம், சோளம், ராகி… இல்லாட்டி கம்பு, நெலக்கடலை எதுனா போடலாம்..”

பாப்பாத்திக்கு வாய் நிறைய வெற்றிலை போட்டு, கன்ன உள்ளோட்டில் புகையிலையைப் பதமாய் எந்நேரமும் அடக்கிக் கொண்டிருக்க வேண்டும்… “ஏன், போயலை போட்டா என்னா வந்துச்சு? எலை வளர்ந்தப்புறம் கொடுவாய் பாக்டரியிலேர்ந்து லாரியைக் கொணாந்து அவங்களே அரத்துகிட்டுப் போயிடறாங்க. கைமேல காசு. அதை விட்டுப் போட்டு…”

இவன் அவளை முறைத்துப் பார்த்தான். “நீ என்னாடி எதுத்துப் பேச ஆரம்பிச்சுட்டே? ஒண்ணு வயித்துக்கு ஆவணும். இல்ல, மேலே போட்டுக்க துணி மணியாகணும். போயலை எதுக்குடி ஆகும்? சுருட்டுக்கும் பீடிக்கும்தானே? எம்மட காட்டுல போயலை போட நாந் தயாரில்ல சாமி.. ஆளை வுடு!”

இவன் பருத்தியும் ராகியும், தென்புறம் கொஞ்ச நிலத்தில் நிலக்கடலையும் பயிரிட ஏற்பாடுகளைச் செய்து விட்டான்.

விஷயம் சிறிதானாலும் பாப்பாத்திக்குக் கணவன் மேல் கோபம் தணியாமலே இருந்தது. ராகிக் களியும் கத்தரிக்காய் பொரியலும் செய்து வைத்துவிட்டு மூலையில் சுருண்டு கொண்டாள்.

பெரிய மகள் மீராவும் அடுத்தவள் சுந்தரியும் தகப்பனுக்கு மதியம் சாப்பாடு எடுத்து வந்தபோது அவனிடம் விஷயத்தைச் சொன்னார்கள். கபிலையிலிருந்து மாடுகளை அவிழ்த்து வேகமாய் அடித்து விரட்டினான் இவன்.

“வர வர ஒங்க அம்மா அடம் பிடிக்கிறா. நா நேத்து வந்த பழனி கெவுர்மெண்டு ஆஸ்பத்திரி ஜீப் காரங்களோட போயிடுவேன்னு சொல்லிடுங்க ஆத்தா… சொல்றீங்களா?”

பத்து வயது மீராவும், எட்டு வயது சுந்தரியும் தலையை ஆட்டிவிட்டு வீட்டுக்குப் போனார்கள்.

மனைவியுடன் சண்டை வந்து விட்டாலே இவனுக்கு நடுக்கம்தான். சண்டை குறித்த அச்சம் அல்ல, அப்புறம் சமாதானம் செய்கிறபோது… இவனுக்கு நன்றாகத் தெரியும் அவளுக்கு என்ன தேவை என்று.

பெற்றது ஐந்தும் பெண் குழந்தைகள். ஆறாவது ஒன்று உருவானால் அதுவாவது ஆணாக அமையாதா என்பது அவள் கனவு. அதுவும் பெண்ணாகப் பிறந்து விட்டால்..? – இவன் பயம், சந்தேகம். இவனுடைய விரதத்தை உடைப்பதற்காக சிறு சிறு சச்சரவுகளையும் பெரிதாக்கி, தன்னைச் சமாதானப் படுத்த அவன் கீழிறங்கி வர வேண்டும் என்பது அவள் நினைப்பு. அப்படிச் சமாதானங்களின் முடிவு, இவனுடைய வீழ்ச்சியாக.. விடுபட முடியாத தழுவலாக…

பண்ணைக்கார மூப்பனிடம் சில நாட்களுக்கு காட்டைப் பார்த்துக்கொள் என்று ரகசியமாகக் கூறிவிட்டுப் பயணப்பட்டு விட்டான்.

நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் பழனி அரசாங்க ஆஸ்பத்திரியிலிருந்து ஜீப்பில் மைக், விளம்பர அட்டை கட்டி ஊர் ஊராக, வீதி வீதியாகத் தேடிவந்து கூப்பிட்டார்கள். முன்பெல்லாம் அடிக்கடி இப்படி முகாம்கள் நடக்கும். இப்போது அதிசயமாய் எப்போதாவது முகாம் நடத்துகிறார்கள். ஜீப் தேடி வந்து அழைத்தபோது மறுத்தவன், தானாகவே சென்று தன் சம்மதத்தைச் சொன்னான்.

இவனுக்கு அங்கே ராஜ மரியாதை. கையில் ஊசி போட்டார்கள்.

ஒரு அறைக்குள் அழைத்துப் போனார்கள். படுக்கச் சொன்னார்கள். மேலே பல்ப் வெளிச்சம் கண்ணைக் கூசியது. “வலிக்குமுங்களா?” என்று கேட்டான்.

“எறுப்பு கடிக்கிற வலியை உன்னால் பொறுத்துக்க முடியாதா? சின்ன ஆப்பரேஷன் தாம்ப்பா!”

கொங்கு ஆண்டவர் சாமியையும் பழனி ஆண்டியையும் துணைக்குக் கூப்பிட்டான்… “வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள், அல்லற்படுத்தும் அடங்கா முனிகள், பிள்ளைகள் தின்னும் புறக்கடை முனியும்..” என்று எப்போதோ பாட்டன் சொல்லிக் கொடுத்த கந்த சஷ்டிக் கவசத்தை முணுமுணுத்தான்.

“அவ்வளவுதான், எழுந்திரு. ஒரு சின்ன ஆப்பரேஷனுக்கு ஒலகத்து சாமியயெல்லாம் கூப்பிடறியே..?” டாக்டரின் பக்கத்தில் நின்ற வெள்ளையுடுப்பு நர்ஸ் சிரித்தாள்.

“அவ்ளோதானுங்களா? ரொம்ப வலிக்கும்னு சொன்னாங்களே?” இவனுக்கு ஆச்சரியம்.

“இந்தா ரூபாய்… நல்லா எண்ணிப் பார்த்துக்கோ… இதோ இங்கே ஸ்டாம்பு மேலே கையெழுத்து போடத் தெரியுமா, இல்லே..?”

“தற்குறிதானுங்க” இவன் சிரித்தான். இடது கை பெருவிரல் ரேகை பதித்து விட்டு ரூபாயை வாங்கி வேட்டி மடிப்பில் பத்திரமாக வைத்துக் கொண்டான்.

“இங்கியே முகாம்ல ரெண்டு நாள் இருக்கலாம். சாப்பாடு, முட்டை எல்லாம் இலவசமாத் தருவோம். ஒருவாரத்துக்குக் காயத்துல தண்ணி படாம கவனமா இருந்துக்கோ. இப்பல்லாம் தையல் பிரிக்கற வேலை கிடையாது. அப்சார்பிங் கேட்கட்தான்..”

“ஆவட்டுமுங்கோ”

“இரண்டு தினங்கள் கழித்து நீ வீட்டுக்குப் போகலாம்ப்பா. இன்னும் ஒரு மாசத்துக்குக் கனமா எதையும் தூக்கக் கூடாது. சைக்கிள் விடக்கூடாது… அப்புறம்… பொண்டாட்டி படுத்திருக் கிற பாயில நீயும் படுக்கப்படாது…என்ன?” என்றார் டாக்டர், கண்சிமிட்டி.

“அர்த்தம் ஆச்சுங்க. இனிமே உடம்புக்குத் தண்ணி வாக்கலாமுங்களா? மூணு நாளாக் குளியலே போடலீங்களே?”

“வீட்டுக்குப் போய் அண்டா நெறயத் தண்ணி கொதிக்க வெச்சு, உடம்பை அதில் நல்லா ஊறப்போடு. போ!” நர்° கேலி செய்து சிரித்தாள். எல்லோருக்கும் கும்பிடு போட்டுவிட்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தான்.

மெல்ல நடந்தான். சற்றுத் தொலைவில் ஒரு டாஸ்மாக் கடை வாசலில் அவனோடு ஆஸ்பத்திரியிலிருந்து ஆப்பரேஷன் முடிந்து அனுப்பப்பட்ட சிலர் நின்றிருந்தார்கள். ஆஸ்பத்திரி பழக்கத்தில், சிநேகத்தில் ஒருவன் கையை ஆட்டி இவனைக் கூப்பிட்டான். “வாங்க கட்டிங் போட்டுட்டுப் போலாம்!”

“வேண்டாமுங்க. நமக்குப் பளக்கம் கெடையாது!” இவன் உறுதியாக மறுத்து, மேலே போனான். வெய்யில் ஏறி வந்தது.

ஏதோ மூட்டைகள் ஏற்றி நின்ற ஒரு லாரி டிரைவரிடம் கேட்டு லாரி ஈரோடு போவதைத் தெரிந்து கொண்டான். “காங்கயம் வரைக்கும் வரலாமுங்களா?” என்று கேட்க, “பஸ் சார்ஜைக் கொடுத்தால் போதும்… ஏறிக்கோ” என்றார் டிரைவர்.

பிற்பகலில் காங்கயம் கரூர் கூட்டு ரோட்டில் லாரியிலிருந்து இறங்கி டிரைவரிடம் பணம் கொடுத்துவிட்டு குறுக்குச் சாலையில் வீட்டை நோக்கி நடந்தான்.

தயக்கமும் பயமும் இவனை அலைக்கழித்தன. அவளுடைய ஆங்காரத்துக்கு என்ன பதில் சொல்வது என்று குழம்பினான். ஆங்காரத்துக்குப் பதில், ஓவென்று கதறி அவன் காலடியில் விழுந்தாள் அவள்.

“நா எதுனா தப்புப் பண்ணியிருந்தா என்னை சீவக் கட்டையால போடறதை விட்டுட்டு இப்பிடி சொல்லிக்காம நீங்க போகலாமா?”

அவள் இவனைத் தழுவிக் கொண்டு அழுதாள். இவன் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தான். திடீரென்று ஞாபகம் வந்தவளாய் “எங்கே போயிருந்தீங்க?” எனக் கேட்டாள்.

“பல்லடத்துக்கு… என்ற சின்னாயி வீட்டுக்கு. ”

“அப்பாடா!… இப்பத்தான் எனக்கு நல்ல மூச்சு வந்துச்சு. அந்த ஆஸ்பத்திரி ஜீப்புல வந்தவங்களோட போய் குடும்பக் கட்டுப்பாடு ஆப்பிரேசன் செஞ்சுகிட்டீங்களோன்னு துடிச்சுப் போயிட்டேன். லச்ச ரூவா கொடுத்தாலும் நமக்கு அந்தக் கருமம் வேணாம் சாமி. இன்னும் பத்துப் பிள்ளைங்க பெத்தாலும் நானே காட்டு வேலை செஞ்சு கஞ்சி ஊத்த உடம்புல தெம்பு இருக்கிறப்போ கட்டுப்பாடும் கண்றாவியும் என்னத்துக்கு…? சே!”

இவன் சிரித்தபடியே அவள் தழுவலில் இருந்து மெல்ல விலகிக் கொண்டான். “இன்னும் ஒரு மாசம் இவகிட்டேருந்து தப்பியாகணும்டா சாமி..!” எனறு முனகியபடியே வாசலுக்கு வந்தான்.

எங்கோ விளையாடித் தெருப்புழுதியை மேலெல்லாம் அப்பிக் கொண்டு வந்த இவனுடைய ஐந்து செல்வங்களும், “அப்பா! அப்பா!” என்று சுற்றிக் கொண்டன.

(தேன்மழை மாத இதழ்) 

தொடர்புடைய சிறுகதைகள்
வெயிலில் சுற்றி அலுத்து வீடு திரும்பினான் விசுவம். அம்மாவை அடுப்படியில் பார்த்ததில் சந்தோஷம் கொண்டான். அடுப்பில், பாத்திரத்தில் அரிசி கொதித்துத் துளும்பிக் கொண்டி ருக்கும் காட்சியை நின்று பார்த்தபடி மெல்லக் கேட்டான்: ``அப்பா வந்துட்டாராம்மா?'' ``இல்லைடா விசு, பத்தர் வீட்டுப் பொம்பிளைகிட்ட ஒரு படி ...
மேலும் கதையை படிக்க...
ஏங்க, ஆசாரி வந்திருக்கார்.. ``இவன் வாசலுக்குப் போனான். என்னங்க கண்ணாயிரம், என்ன விஷயம்?'' ``பெரிய ஐயா ஒங்ககிட்டே ஒண்ணும் சொல்லலீங்களா தம்பி? நம்ப புஸ்தகக் கடை மாடியில் புதுசாக் கட்டப்போற ரூமுக்குக் கதவு செய்யணும். மரவாடிக்குப் போய் பலகை வாங்கியாரணும், புதன்கெழமை வந்துடு கண்ணாயிரம்னு ...
மேலும் கதையை படிக்க...
கூதல் காற்று சிலீரென்று முகத்தில் அறைந்தது. இருள் விலக இன்னும் வெகு நேரம் பிடிக்கும். மேல் துண்டால் காதுகளை மூடி முண்டாசு கட்டிக்கொண்டு பீடியைப் பற்ற வைத்தான் அம்மாசி. தம் உள்ளே போனதும் அலாதி சுறுசுறுப்புப் பெற்றவனாய் குடிசையின் படல் கதவைத் ...
மேலும் கதையை படிக்க...
அந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்கு வந்த ஏழெட்டுப் பெண்களும் அவர்களோடு என் மகள் லதாவும் வரிசையாக நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். நான் கண்ணாடித் தடுப்புக்கு வெளியில் ரிசப்ஷனில் காத்திருந்தேன். இது லதாவுக்கு ஏழாவது முயற்சி. இந்த வேலையாவது கிடைக்க வேண்டுமே என்று சிதம்பரம் நடராஜப் ...
மேலும் கதையை படிக்க...
வடபழனி முருகன் கோயிலுக்குப் போகிற வழியில் இடதுபுறம் திரும்புகிற குறுக்குத்தெரு திருப்பத்தில் விவேகானந்தர் பழைய புத்தகக் கடை, புத்தக விரும்பிகளுக்குப் பிடித்தமான ஒரு சரணாலயம். எழுத்தாளர் மாடலனை அக்கடையில் அடிக்கடி காண முடியும். அங்குதான் புதையல் எனத்தக்க பல அரிய புத்தகங்களை ...
மேலும் கதையை படிக்க...
வயிறு
படிச்சவன் பார்த்த பார்வை
அம்மாசியின் மனக் கணக்கு
ஒரு இண்டர்வியூவில்
பழைய புத்தகக் கடையும் ஓர் எழுத்தாளரும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)