Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மனிதம்

 

இரவு மணி பதினொன்றரை.

குர்லா-கொச்சின் எக்ஸ்பிரஸ் ரயில் சின்ன சின்ன ரயில் நிலையங்களைக் கடந்து அதி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. ரயிலில் இருந்த பயணிகள் நல்ல தூக்கத்தில் இருந்தார்கள்.

திருப்பத்தூருக்கும் சேலத்துக்கும் நடுவே சாமல்பட்டி ரயில் நிலையம் அருகில் ஏற்கனவே தடம் புரண்டிருந்த கூட்ஸ் வேகன்களின் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோத, இஞ்சினைத் தொடர்ந்து பின்னால் வந்த பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக பெரிய சத்தத்துடன் மோதி தடம் புரண்டு உருண்டு விழுந்தன.

எங்கும் பயணிகளின் மரண ஓலங்கள்.

சன்னமான நிலா வெளிச்சத்தைத் தவிர எங்கும் ஒரே இருட்டு மயம்.

முதல் வகுப்பில் பயணித்த அந்த இளைஞன் காயம் ஏதுமின்றி தப்பித்து அடிபட்டவர்களுக்கு உதவ எண்ணி, ரயிலிலிருந்து இறங்கி ஓட, அப்போது அவனருகில் வலியினால் எவரோ அலறும் சத்தம் கேட்டது.

அலறல் வந்த திசையில் சென்று குனிந்து பார்த்தான். வயதான பெரியவர் ஒருவர் ரத்தத்தில் தோய்ந்திருந்தார். அவன் சற்றும் யோசிக்காமல் அவரது தோள்களில் கை கொடுத்து தூக்கி நிறுத்தி தன மீது சாய்த்துக் கொண்டான்.

பெரியவரின் மேல் உதட்டிலிருந்தும், வயிற்றுப் பகுதியிலிருந்தும் ரத்தம் ஏராளமாக வெளியேறிக் கொண்டிருந்தது.

அவரது கழுத்தில் இருந்த உத்திராட்ச மாலையும், சட்டையில்லாத மேனியும், உடுத்தியிருந்த காவி வேட்டியும் அவர் ஒரு இந்துமதச் சாமியார் என்பதை தெளிவாக உணர்த்தின.

அவன் பதற்றத்துடன், “சாமி ரத்தம் ரொம்பக் கொட்டுது. அர்த்த ராத்திரியில் இந்த இடத்துக்கு உதவி கிடைக்க ரொம்ப நேரமாகும்.. வாங்க உடனே பக்கத்துக் கிராமத்துலே ஏதாவது டாக்டரிடம் காண்பிக்கலாம்..”

பதிலுக்கு காத்திராது அவரைத் தன மீது சாய்த்தபடி தொலைவில் தெரிந்த வெளிச்சத்தை நோக்கி உத்தேசமாகச் சென்றான்.

அவன் உடையெல்லாம் ரத்தக் கறை பரவியது.

அடிபட்ட வலியில் சாமியார், “பகவானே, பகவானே” என்று அரற்றிக் கொண்டே வந்தார். இரண்டு கிலோ மீட்டர் கடந்து சோமனாயக்கன்பட்டி என்கிற கிராமத்தை அடைந்தனர். தூக்கத்தில் இருந்த டாக்டரை எழுப்பிவிட, சாமியாரைப் பார்த்த டாக்டர் பதறினார்.

“தம்பி ரொம்ப சீரியஸா இருக்கு. மேல் உதடு ஆழமா வெட்டுப் பட்டிருக்கு, வயிற்றின் வலது பக்கம் கிழிபட்டிருக்கு… ரத்தம் ரொம்ப வெளியேறியிருக்கு, உடனே சேலத்துக்குப் போய் அட்மிட் பண்ணுங்க.”

முதல் உதவி அளித்த கையோடு அடுத்த தெருவில் இருந்த டீசல் அம்பாசடர் டாக்சியை வாடகைக்கு அமர்த்திக் கொடுத்தார்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் சாமியார், சேலம் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். தன் பெங்களூர் முகவரியைக் கொடுத்து அட்மிட் செய்தான் இளைஞன். டாக்டர் இவனிடம், “சார், உடனே பி பாசிடிவ் ரத்தம் வேணும். ரத்தம் செலுத்தலைனா சாமியார் பொழைக்கிறது ரொம்பக் கஷ்டம்” என்றார்.

இளைஞன் மிக்க மகிழ்ச்சியுடன், “டாக்டர் நானும் பி பாசிடிவ்தான்” என்றவன், ரத்தம் எடுப்பதற்கு தோதாக சட்டையை மடக்கி கட்டிலில் படுத்துக் கொண்டான்.

சாமியாருக்கு உடனடியாக ரத்தம் செலுத்தி உதட்டிலும், வயிற்றிலும் தையல்கள் போடப்பட்டன.

மறுநாள்…

இளைஞன், டாக்டர் சொன்னபடி சலைன் பாட்டில்களும், தேவையான மருத்துகளும் வாங்கி வந்தான். பெங்களூரில் இருக்கும் தன் வீட்டினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி சேலத்துக்கு உடனே கார் அனுப்பச்சொல்லி டிரைவரிடம் கணிசமான பணமும், தனக்கான மாற்றுடையும் கொடுத்துவிடச் சொன்னான்.

அடுத்த நான்குமணி நேரத்தில் பெங்களூரில் இருந்து காரும், பணமும், உடைகளும் வந்தன. மருத்துவ மனையை ஒட்டியிருந்த தங்கும் விடுதியில் அறை எடுத்துக் கொண்டான்.

அன்று இரவு சாமியாருக்கு நினைவு வந்ததும், அவரைப் பார்த்து புன்னகைத்தான் இளைஞன்.

சாமியார் கண்களை மெல்லத் திறந்தார்.

முந்தைய இரவு நடந்த விபத்தும், அவன் செய்த உதவிகளும் ஞாபகத்துக்கு வர, கண்களில் நன்றி பொங்க இளைஞனை ஏறிட்டார்.

தன் உதட்டில் போடப்பட்ட தையலினால் அவனுக்கு நன்றிகூட சொல்ல முடியாத நிலையில் தான் இருப்பதை எண்ணி நொந்து கொண்டார்.

மறுநாள், சாமியாரை பரிசோதித்த டாக்டர், “எல்லாம் நன்றாக இருக்கிறது. பெங்களூர் சென்று தையலைப் பிரித்துக் கொள்ளுங்கள், கவலைப்பட ஒன்றுமில்லை” என்றார்.

சாமியார் ஒன்றும் புரியாது இளைஞனைப் பார்க்க, அவன் புன்னகையுடன், “ஆமாம் சாமி, தையல் பிரித்து உடம்பு தேறும் வரை தாங்கள் என்னுடன்தான் பெங்களூர்ல இருக்கணும்” என்றான்.

ஏதோ பேச முயன்ற சாமியாரை உதடு வலிக்கும் என்று சொல்லி, பேசவிடாது அன்புடன் தடுத்தான். சாமியார் ஆஸ்பத்திரி உடையில் இருப்பது உறைக்க, டிரைவரிடம் நான்கு காவி வேட்டிகளும், அங்க வஸ்திரங்களும் உடனே வாங்கி வரச்சொல்லி பணம் கொடுத்து அனுப்பினான்.

புதிய காவி உடைகளைப் பார்த்த சாமியாருக்கு நன்றிப் பெருக்கால் கண்களில் நீர் முட்டியது. கஷ்டப்பட்டு மெதுவாக, “உன்னைப் பகவான் அமோகமாக வைத்திருப்பார்” என்றார்.

வெளியே காத்திருந்த காரில், டிரைவர் உதவியுடன் சாமியாரை பின் இருக்கையில் சாய்ந்தபடி வசதியாக அமர வைத்து, தான் முன்னால் அமர்ந்து கொண்டான்.

பெங்களூர்…

இந்திரா நகரில் உள்ள அந்தப் பெரிய பங்களாவின் முன்பு கார் நின்றது.

சாமியாரை மெல்ல கைத்தாங்கலாக தன் வீட்டினுள் அழைத்துச் செல்கையில் அவன் தந்தையும், குல்லாயுடன் வெண் தாடியில் அவன் தாத்தாவும் சாமியாரை அன்புடன் எதிர்கொண்டு முகமன் கூறி வரவேற்றபோது, தான் வந்திருப்பது ஒரு முஸ்லிம் அன்பரின் இல்லம் என்பது புரிய, சாமியார் சற்றே அதிரிச்சியடைந்தார். அடுத்த கணம், ‘எல்லாம் கடவுளின் சித்தம்’ என்று எண்ணி அமைதியடைந்தார்.

சாமியாரை வீட்டினுள் பெரிய காற்றோட்டமான தனியறைக்கு அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தார்கள்.

தாடிப் பெரியவர், சாமியாருக்கு அருகில் சென்று பவ்யமாக தரையில் அமர்ந்து, “என் பேரன் சலீம் அனைத்தையும் என்னிடம் போனில் சொன்னான்… தாங்கள் இந்த வீட்டிற்கு வந்திருப்பது எங்கள் பாக்கியம், எல்லாம் அல்லாவின் செயல்.” இரண்டு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தினார்.

அவரிடமிருந்து மெல்லிய அத்தர் வாசனை அடித்தது. அவருடைய கனிவான பேச்சும், மரியாதையும் சாமியாரை நிலை குலையச் செய்தன.

நடுத்தர வயதிலிருந்த பெரியவரின் மகன் – சலீமின் தந்தை – ஒரு பெரிய கண்ணாடி தம்ளரில் பழரசம் எடுத்துவந்து பணிவுடன் சாமியாரிடம் நீட்டினார்.

அப்போது அங்கு வந்த சலீமிடம், கடையில் வாங்கிய சந்தனம், குங்குமத்துடன், வீபூதிப் பாக்கெட்டும் இருந்தன. அதிர்ந்து போனார் சாமியார்.

பெரியவர், “சாமி, இது உங்க வீடு மாதிரி. நீங்க எப்பவும் இருக்கிற மாதிரி உங்க மதச் சம்பிரதாயப்படி வீபூதி, குங்குமத்தோட இருக்கணும். வேளா வேளைக்கு டாக்டர் சொன்னபடி சலீம் மருந்து தருவான். நல்லபடியா தையல் பிரிச்சு உங்களுக்கு பூரண குணமாகனும்” என்றார்.

சாமியாருக்கு கண்களில் நீர் முட்டியது.

மாலை சலீமிடம், கொச்சியில் உள்ள ராம் மண்டலி முகவரியைச் சொல்லி, தான் ரயில் விபத்திலிருந்து தப்பியதையும், தற்போது தேறி வருவதாகவும், கூடிய சீக்கிரமே மண்டலிக்கு வந்து விடுவதாகவும் நிர்வாகத்தினருக்கு எழுதிப்போடச் சொன்னார்.

சலீம் அவ்வாறே தன் வீட்டின் முகவரியுடன் கடிதத்தை எழுதி தபாலில் அனுப்பினான்.

அடுத்த இரண்டு தினங்களில் சாமியாருக்கு தையல் பிரிக்கப்பட்டது.

அன்றைய தினம் தான் சீக்கிரமாக கொச்சி புறப்பட வேண்டும் என்பதை சலீமிடம் சொல்ல நினைத்தார். ஆனால் அதற்குள் சாமியாரிடம் வந்த பெரியவர், “சாமி இன்று இரவு நான் ஹஜ் யாத்திரைக்கு கிளம்புகிறேன். சென்னையில் ஏற்கனவே காத்திருக்கும் யாத்திரை குழுவினருடன் நாளைக் காலையில் நான் சேர்ந்து கொள்ள வேண்டும். என்னை வழியனுப்ப எங்க குடும்பமே சென்னைக்கு என்னுடன் வருகிறார்கள். நாளை திரும்பி விடுவார்கள்.”

“நம்ம வீட்டு வேலைக்காரப் பையன் ஜலால் இங்கு உங்களுக்கு உதவியாக இருப்பான்… நம்பிக்கையான நல்ல பையன்.” கைகளைக் கூப்பி, “என்னோட ஹஜ் யாத்திரை நல்ல படியாக முடிய தங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும்” என்றார்.

சாமியார் கட்டிலிலிருந்து எழுந்து பெரியவரின் கைகளைப் பற்றிக்கொண்டு குரல் உடைய, “எல்லாம் நல்ல படியாக நடக்கும். தங்களது பயணம் வெற்றியடைய பகவான் ராமர் துணையிருப்பார்” என்றார்.

இரண்டு கார்களில் அனைவரும் சென்னைக்குச் சென்றபோது வழியனுப்பி வைத்தார்.

வீட்டில் தனித்து விடப்பட்ட சாமியாருக்கு உடம்பு புல்லரித்தது. இது காறும் அவருக்கு முஸ்லீம்களுடன் பேசவோ, பழகவோ வாய்ப்பு கிடைத்ததில்லை. தன் வாழ்நாளில் இவ்வளவு வயதுக்குப் பிறகு முதன் முறையாக தற்போது அவர்களின் நெருக்கமும் அன்பும் கிடைத்திருப்பதை எண்ணி வியந்தார். சலீம் தன்னை காப்பாற்றியது மட்டுமின்றி ரத்தம் கொடுத்ததையும் நினைத்துச் சிலிர்த்தார்.

மறுநாள் காலை ஒன்பது மணியிருக்கும். ஜலால், “சாமி, உங்களைப் பார்ப்பதற்கு மூணு பேர் வந்திருக்காங்க” என்றான்.

யாராக இருக்கும் என்று எண்ணியபடி வரவேற்பறைக்குச் சென்ற சாமியார் அங்கு அமர்ந்திருந்த கொச்சி ராம் மண்டலியின் நிர்வாகிகளைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

மூவரும் அங்கு சுவற்றில் மாட்டப் பட்டிருந்த புனித ஸ்தலமான மெக்காவின் புகைப் படத்தை உற்று நோக்கியபடி இருந்தார்கள்.

சாமியார் புன்னகையுடன் சென்று அவர்களிடையே அமர்ந்தார்.

மூத்த நிர்வாகி, “சாமி நீங்க பெரிய விபத்திலிருந்து தெய்வாதீனமாகத் தப்பிச்சீங்க. ரொம்ப சந்தோஷம்… யாரோ சலீம் போட்ட கடிதம் கிடைத்தது” என்றார்.

“யாரோ சலீம் அல்ல. இன்னிக்கு நான் உயிரோட இருப்பதற்கே அந்தப் பையன் சலீம்தான் காரணம். இப்ப எல்லோரும் சென்னை போயிருக்காங்க. சலீமோட தாத்தா ஹஜ் யாத்திரை போகிறார். அவரை வழியனுப்பியதும், நாளைக்கு திரும்பிடுவாங்க.”

“சரி, சரி இப்ப நீங்க எங்களோட கொச்சிக்கு கிளம்புங்க. உங்களை கையோட அழைத்துப் போவதற்காக காரில் வந்திருக்கோம்.”

“……….”

“ஆமாம் மண்டலி வேலைகள் போட்டது போட்டபடி கிடக்கு. உடனே கிளம்புங்க சாமி.”

சாமியார் அமைதியாக, “இப்பவே கிளம்பி என்னால எப்படி வர முடியும்? அவங்கல்லாம் சென்னையிலிருந்து திரும்பியதும், முறையாகச் சொல்லிக்கொண்டு விடை பெறுவதுதான் பண்பு… இன்றைக்கு நீங்களும் என்னுடன் இங்கு தங்கலாம். உங்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளும் இந்த வீட்டில் இருக்கிறது” என்றார்.

வெகுண்டார் மூத்த நிர்வாகி, “எங்களால இங்கு தங்க முடியாது, எங்களுக்கென்று சில உயர்ந்த கொள்கைகள், மதக் கோட்பாடுகள் இருக்கு”

சாமியாருக்கு அவர் என்ன சொல்கிறார் என்பது புரிய, குரலில் கனிவுடன், “அப்படியெல்லாம் பேசாதப்பா, நாம் அனைவரும் பகவான் ராமனின் குழந்தைகள், பேதம் பாராட்டக் கூடாது. சரி உங்களுக்கு இங்க தங்க விருப்பமில்லைன்னா பக்கத்துல எங்காவது ஒரு நல்ல ஹோட்டல்ல அறை எடுத்துக்குங்க. அவர்களிடம் சொல்லிக்காம என்னால இங்கிருந்து வர முடியாத நிலைமையை தயவு செய்து புரிஞ்சுக்குங்க” என்றார்.

“என்ன சாமி ரொம்ப பேசறீங்க… ஒரு லெட்டர எழுதிவச்சிட்டு வர வேண்டியதுதான. நமக்கு என்ன அவங்க சொந்தமா, பந்தமா?”

“………”

சோறு கண்ட இடம் சொர்க்கம்னு நெனச்சுட்டீங்க போல !”

“………”

ஒரு முஸ்லீம் வீட்ல எப்படி உங்களால சாவகாசமா உட்கார்ந்த்திருக்க முடியுது? மண்டலியிலிருந்து மெனக்கிட்டு வந்த எங்களைவிட இந்த முஸ்லீம் வீடு உங்களுக்கு பெரிசா போச்சு, அப்படித்தானே? நல்ல ரத்தம்தானே நமக்கெல்லாம் ஓடுது?”

சாமியார் சினம் கொள்ளாது அமைதியாகச் சொன்னார்: “நல்ல ரத்தம்தாம்பா நம்ம எல்லாருக்கும் ஓடுது… அதிலும் என் ரத்தம் ரொம்பச் சுத்தம். ஏன்னா சலீமின் ரத்தமும் என்னுள் இருக்கு. அவன் கொடுத்த நாலு பாட்டில் ரத்தம் என் நரம்பெல்லாம் வியாபிச்சிருக்கு.”

“என்ன சாமி, இந்து மதத்தையே சுவாசித்து அதன் புகழ் பரப்பும் நீங்களா இப்படிப் பேசுவது?”

“நாம் நம் மதத்தை நல்ல வழியில் உயர்த்தப் பாடுபட வேண்டுமே தவிர, பிற மதத் துவேஷம் என்கிற விதைகளை மக்கள் மத்தியில் தூவக்கூடாது.”

“போதும் சாமி உங்க வியாக்கியானங்களைக் கேட்பதற்கு நாங்க இப்ப வரல. எங்களோடு இப்பவே வர முடியுமா? முடியாதா?

“என்னை மன்னிச்சிடுப்பா !”

வந்தவர்கள் கோபத்துடன் எழுந்து கொண்டனர். மேற்கொண்டு எதுவும் பேசாமல் வெளியேறினர்.

அன்று இரவு சாமியார் தூக்கம் வராது படுக்கையில் புரண்டார். பரஸ்பர அன்பும், புரிந்து கொள்ளுதலும், நேயமும், மரியாதையும்தான் மனிதர்களுக்கு முக்கியமே தவிர, மதம் இரண்டாம் பட்சமே என்று நினைத்தார்.

ஒரு முடிவுக்கு வந்தவராகத் தூங்கிப்போனார்.

அடுத்த நாள் சலீமும் அவனது தந்தையும் சென்னையிலிருந்து திரும்பியதும், “சாமி, பெரியவர் ஹஜ் யாத்திரை முடிந்து திரும்பி வரும் வரை இங்குதான் தாங்கள் எங்களுடன் தங்க வேண்டும்.. இது பெரியவரின் மரியாதை, தங்களுக்கு அவர் இடும் அன்புக் கட்டளை” என்றனர்.

அடுத்த வாரம், கொச்சி ராம் மண்டலி நிர்வாகத்திற்கு சாமியாரிடமிருந்து ஒரு நீண்ட கடிதம் சென்றது, அதில்…

“மரியாதைக்குரிய மண்டலி நிர்வாகிகளுக்கு,

எல்லாம் பகவான் ராமரின் சித்தம். என்னுடைய இந்த மறு பிறவிக்கு அச்சாரமே சலீம் எனக்குச் செய்த பெரிய உதவிதான். இந்த வீட்டில் இருப்பவர்களின் பண்பும், அன்பும், உதவியும் எனக்கு யானை பலம். என் இந்து மதக் கோட்பாடுகளுக்கு இங்கு எந்தக் குந்தகமும் ஏற்படாது என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இப்போதைக்கு என் வாசம் இந்த வீடுதான். இங்கிருந்தபடியே என்னால் நம் மதத்திற்கு தேவையானவற்றைச் செய்ய முடியும்.

என்னுடைய தங்கும் தளம்தான் வேறே தவிர, செய்யப்போகும் பணியில் அல்ல.

எல்லா மதத்தின் சிந்தனையும் கோட்பாடுகளும் மனித உயர்வுக்கும் மேம்பாட்டிற்கும்தான் பாடுபடுகின்றன. பகவான் ராமரின் உயரிய எண்ணங்களையும், பண்புகளையும் உங்களுக்கு எடுத்துச் சொன்ன நான், பிற மதத்தினரையும் நாம் மதித்து நேசிக்க வேண்டும் என்பதைச் சொல்ல மறந்தது என் தவறுதான்.

என்றைக்கு நீங்கள் பிற மதத்தினரிடம் மரியாதையும், அன்பும் காட்டத் தொடங்குகிறீர்களோ அன்றைக்கு எனக்குச் சொல்லி அனுப்புங்கள்.

மதத்தைவிட மனிதம்தான் பெரியது என்பதை நீங்கள் உணரத் தலைப்படும் பட்சத்தில் நான் அங்கு வருகிறேன். எல்லாம் பகவத் சங்கல்பம்…”

அன்புடன்,
சுப்ரமணிய சுவாமிகள்

- அமுதசுரபி – நவம்பர் 2003 

தொடர்புடைய சிறுகதைகள்
(இதற்கு முந்தைய ‘மூன்று வாரிசுகள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) இசக்கி அண்ணாச்சி வேறு எந்த நினைப்பும் இல்லாமல் மூன்று வாரிசுகளை கண்ணும் கருத்துமாய் வளர்ப்பதிலேயே கவனத்துடன் இருந்தார். அந்தக் கவனத்தில் வருசங்கள் அது பாட்டுக்கு ஓடியது கூடத் தெரியவில்லை. பெரியவன் ...
மேலும் கதையை படிக்க...
பகல் இரண்டுமணி. திருநெல்வேலி ஜங்க்ஷன் பஸ் நிலையம். வெய்யில் உக்கிரமாகத் தகித்தது. அந்த வெய்யிலிலும், சிவந்த நிறத்தில் முப்பத்திஎட்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பரட்டைத் தலையுடன், அழுக்கான உடைகளில் கைநீட்டி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். கிறுக்கச்சி மாதிரி ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘பயம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதன் பயத்தில் உழன்று கொண்டிருந்தார். ஆனால் சுப்பையாவோ பக்கத்து வீட்டில் ராஜலக்ஷ்மி பற்றிய சில யோசனைகளோடு உலவிக் கொண்டிருந்தான். போனில் பேசியபோது, இண்டர்வியூ வந்தபோது அவன் உணர்ந்த ராஜலக்ஷ்மிக்கும் இன்று அவன் ...
மேலும் கதையை படிக்க...
கர்நாடகம் ஒரு மிகச் சிறந்த மாநிலம். தண்ணீர் பஞ்சமோ வறட்சியோ இல்லாத அமைதியான மாநிலம். கன்னட மக்கள் தெய்வ பக்தியும் நேர்மையுமானவர்கள். அடாவடித்தனம் அறியாதவர்கள். தமிழர்களும் கன்னடத்து மக்களும் குடும்பம் குடும்பமாக மிகவும் பாசத்துடன் பின்னிப்பிணைந்து உறவாடுவார்கள். இவர்களிடையே காதல் கல்யாணங்களும், வர்த்தக ...
மேலும் கதையை படிக்க...
சரண்யா அடுத்த சனிக்கிழமை தன் கணவர், இரண்டு குழந்தைகளுடன் பெங்களூர் வருகிறாளாம். அவள் கணவரின் தம்பிக்கு மல்லேஸ்வரத்தில் ஞாயிறு அன்று கல்யாணமாம். இரண்டு நாட்கள் இருப்பாளாம். போன் பண்ணிச் சொன்னாள். அதை என் மனைவி ரோஹினியிடம் சொன்னபோது உற்சாகமில்லாமல் “அப்படியா” என்றாள். சரண்யா என் ...
மேலும் கதையை படிக்க...
இசக்கி ஒரு சகாப்தம்
பிச்சைக்காரியின் சாபம்
ஜன்னல்கள்
பய முகங்கள்
சஞ்சலம்

மனிதம் மீது ஒரு கருத்து

  1. safraz.mohamed says:

    விறு விறுப்பு. வேகம். மத நல்லிணக்கம். மிகச் சிறந்த கதை. திரு எஸ்.கண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
    ஸப்ரழ் மொதமேது, ஆம்புர் (தன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)