மனம் விட்டு அழட்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 8,203 
 

“கரியால எழுதி என்னை கையால மறைச்சி வெச்சி —–ஜட்ஜட்..ஜுடு…ஜும்
மண்டையில தானெழுதி மயிரால மறைச்சி வெச்சி———–ஜட்ஜட்.ஜுடு..ஜும்
எழுதினவன் சாகானோ, எழுத்தாணி கூர் உடைய,—————ஜட்..ஜட்..ஜடு..ஜும்
எழுதினவன் பெஞ்சாதி என்னைப் போல் நில்லாளோ”.——– டட்டட்டரடட் ஜினுக்கு ஜிக்கா ஜினுக்கு ஜிக்கா

ஒப்பாரிப் பாடல் உருக்கமாய் வர, சாவு வீட்டில் பறை பிளந்து கட்டிக் கொண்டிருக்கிறது. நான் அங்கே போகும்போது அழுகையின் விளிம்பில் இருந்தேன். யாராவது தெரிந்த முகத்தைப் பார்த்துவிட்டால் கொட்டிவிடும் விளிம்பு அது. குணசேகரன் போய்விட்டான். என் சிநேகிதன். ஒரே தெருவில் பிறந்து, ஒன்றாய் ஓடியாடி விளையாடி, ஒன்றாய் படித்து வளர்ந்து…., அப்புறம் பிளஸ் டூ முடித்தப்புறம்தான் அவர்கள் கடைவீதி பக்கம் குடியிருப்பை மாற்றிக் கொண்டார்கள். கடைவீதியின் மையத்திலிருந்த விநாயகர் கோவிலுக்கு எதிர்வாடை குறுக்குத்தெருவில் அவர்களுக்கு ஒரு நவீன மோஸ்தரில் ஒரு வீடு இருக்கிறது.. அதற்கு பின்புறம் நகரத்தையொட்டிய பகுதியில் எட்டு ஏக்கர் விஸ்தீரணத்தில் அவர்களுக்கு ஒரு நவீன அரிசி ஆலை ஒன்று இருக்கிறது. தினசரி லாரிகளில் லோடுலோடாய் நெல் மூட்டைகள் வந்து இறங்குவதும், அறைத்து சலித்து சுத்தம் பண்ணிய அரிசி மூட்டைகள் ஏற்றிய லாரிகள் போவதும் என்று பரபரப்பாய் இருக்கும். அதில்லாமல் இங்கிருந்து மூணாவது கிலோ மீட்டரில் பகவந்தபுரம். அதுதான் அவர்களின் பூர்வீகம். ஆடி மாசம் அம்மனுக்கு கூழு வார்த்து ராத்திரி தெருக்கூத்து வைப்பார்கள்.. பலதடவை நான்கூத்து பார்க்க அவங்க வீட்டில் போய் தங்கியிருக்கிறேன். அங்கே அவங்களுக்கு பெருசாய் நாலுகட்டு ஓட்டுவீடு ஒன்றும், நிறைய நிலபுலன்களும் இருக்கின்றன. அங்கே வைத்துதான் குணசேகரன் எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தான்.

அவ்வளவு சொத்துக்களுக்கும் இவன் ஒருத்தன் தான் வாரிசு. என்ன புண்ணியம்?.அத்தனையையும் அனுபவிக்க ப்ராப்தமில்லாமல் இதோ இன்றைக்குப் போய்விட்டானே பாவி. மூணு வருஷங்களுக்கு முந்தி மிதமிஞ்சிய குடியில் வயிறு உப்பிப்போய் படுத்த படுக்கையாய் கிடந்தான். அப்புறம் சென்னையில் வைத்து நவீன மருத்துவத்திற்கு பணமாய் கொட்டிக் கொடுத்து,போராடி,அதிலிருந்து மீட்டெடுத்து காப்பாற்றினார்கள், உடம்பு தேறி பழைய மனுஷனாக நடமாட, ஹும்! அத்தனையும் விழலாய் போக, இதோ சடக்கென்று முழக் கயிற்றில் தொங்கி விட்டானே. பிணத்தருகில் வியாபாரிகள் கும்பல் மொய்த்துக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் அவன் அப்பா இறுகிய முகத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தார். எனக்குத்தான் அழுகை வந்துவிட்டது. ஹும்! இவர் ஓடி ஓடி சேர்த்த, சேர்த்துக் கொண்டிருக்கிற சொத்துகளுக்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது. ஒரு வருஷமாக அவர் என்னுடன். பேசுவதில்லை. பார்த்தால் அசூசையைப் பார்த்தது போல முகத்தை திருப்பிக் கொண்டு போவார். என் மேலே அவ்வளவு ஆத்திரம்.ஏன்?.அவருடைய தவறை சுட்டிக் காட்டியதில் என்மேல் கோவம். மாலையுடன் உள்ளே போனேன். குணசேகரன் தூங்குகிற மாதிரியே கிடந்தான்.. சிறுவயது முதல் அவனுடன் எனக்கிருந்த ஒவ்வொரு சம்பவங்களும் வரிசை கட்டிக் கொண்டு ஒவ்வொன்றாய் மனசில் வர, மாலையைப் போடும்போது முடியவில்லை. வீறிட்டு கேவினேன்.

சமூகத்தில் அந்த குடும்பத்திற்கு இருக்கும் மரியாதை, அங்கே குவிந்து கிடந்த ரோஜா மாலைகளில் தெரிகிறது. தெரு திண்ணையில் ஊர் முக்கியஸ்தர்கள் வந்து உட்கார்ந்திருந்தனர். வீட்டிற்கு வடவாண்டை பக்கத்தில் புங்கமர நிழலில் பாடை தயாராகிறது, பூ ஜோடிப்பு நடந்துக் கொண்டிருக்கிறது. வெளியே பறைகள் பொரியும் சத்தம்,. கூடவே ஒப்பாரிப் பாடல் கணீரென்ற கேட்கிறது. குணசேகரனின் அப்பா மடியிலிருந்து பணம் எடுத்து யாருக்கோ எண்ணி கொடுத்துக் கொண்டிருந்தார். குணசேகரனின் ஒரே மகள் விசாலி பத்து வயதாகிறது. அவன் மனைவி கோதை தலைமாட்டில் உட்கார்ந்து தலை கவிழ்ந்து கிடக்கிறாள்.ஹும்! இருக்கும் காலத்தில் விலகிப் போனவள், இன்றைக்கு அறுக்க வந்திருக்கிறாள். ரெண்டு மாசங்களுக்கு முன்னால பிருந்தாவனம் நகரில் நான்புதிதாய் கட்டியுள்ள என்வீட்டின் கிரகப் பிரவேசத்துக்கு குணசேகரனையும் , கோதையையும் அழைக்க பத்திரிகையுடன் போனபோதே எனக்கு உள்ளே சிவப்பு விளக்கு எரிந்தது. அன்றிலிருந்தே அவன் சாவு செய்தியை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். மனசாட்சியின் உறுத்தல்கள் காரணமாகத்தான் பெரும்பாலான மனிதர்கள் மனநோயாளியாகிறார்கள். அதுபோல சுற்றங்களாலும், மற்றவர்களாலும், ஒதுக்கப்பட்டு விடும் எந்த ஒரு மனிதனும் அடுத்து நாடுவது தற்கொலையாகத்தான் இருக்கும். சண்டை போடவாவது நமக்கு வீட்டில் ஒரு உறவு வேண்டும்தானே?. எல்லாவற்றுக்கும் காரணம் பாழாய் போன இந்த குடிதான். அன்றைக்கு போனபோது. ஆளு நார்மல்ல இருக்கானோ இல்லையோ? என்ற சந்தேகத்துடந்தான் காலிங்பெல்லை அழுத்தினேன். அட குணசேகரனா இது?.காலை ஏழு மணிக்கெல்லாம் குளிச்சிட்டு பளிச்னு இருக்கானே. பார்த்ததும் எட்டி கையைப் பிடித்துக் கொண்டான். “என்னடா! வீட்டில யாரையும் காணோம். கோதையும், உம் பொண்ணும் எங்க?”—ஒண்ணும் சொல்லாமல் அமைதியாக தலை கவிழ்ந்து நின்றான். “எங்கடா?.” “விட்றா! இப்ப யாரும் இங்க இல்லை. விசாலி சென்னை அண்ணாநகர்ல இருக்கிற எங்க வீட்ல தங்கி படிக்கிறா. கோதையும் எம்பொண்ணோட அங்கதான் இருக்கிறா. அப்பா ஊர்ல இருந்தே மில்லுக்கு வந்து போறார்.”—கொஞ்ச நேரம் உதட்டை கடித்துக் கொண்டு மவுனமாக நின்றான். அவனைத் தொட்டேன். “த்சு…அவளுக்கு என் கூட இருக்கப் பிடிக்கல.”—அப்பத்தான் அவனைப் பார்க்க எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா.’. பள்ளி நாட்களிலே எவ்வளவு ஒழுக்கத்தோட இருப்பான்? “என்னடா சொல்ற?. ஏன்? னு தெரியுது. அதுக்காக இவ்வளவு பெரிய வீட்டில் காவல் நாயாட்டம் உன்னை தனியா விட்டுட்டு…. நாட்டிலே எவ்வளவோ குடிகாரங்க இருக்காங்க. அவங்க குடும்பமெல்லாம் இப்படியா ஒதுக்கி விட்டுட்டு போயிடுது?.சரி..சாப்பாட்டுக்கு என்ன பண்ற?.”—குணசேகரன் வாயை திறக்கவில்லை. “டேய்! ஒரு மனுஷன் எப்படி வாழக்கூடாதுன்றதுக்கு நீதாண்டா சரியான உதாரணம்.”—– அவ்வளவுதான். மேல்துண்டால் முகத்தை பொத்திக் கொண்டு கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டான். எதைச் சொல்லியும் அவனை தேற்ற முடியவில்லை. அப்போதுதான் அவன் எவ்வளவு மன உளைச்சலில் தவிக்கிறான் என்று தெரிந்தது. படிக்கும் போது ஆளு வாட்டசாட்டமாய் இருப்பான்..நிறைய எக்ஸர்ஸைஸ் பண்ணுவான்..

அப்போதெல்லாம் கோ-எஜுகேஷன்தான். அவன் நெடுநெடுவென்று நல்ல உயரம், ஈர்க்கும் சிகப்பு,. படிக்கும் போது பொண்ணுங்களெல்லாம் இவன்கிட்ட அப்படி வழிவாளுங்க. அவனுடைய சிவந்த தோற்றத்தில், பளிச்சென்ற சிரிப்பின் கவர்ச்சியில் பெண்கள் வலிந்து வந்து அவனிடம் பேசிச் சிரிப்பார்கள்.. ஹாஸ்யமாக பேசுவான். வாயைத் திறந்தால் பத்து ஜோக்ஸ் சொல்லுவான். எங்களுக்கெல்லாம் ஆத்திரமாய் இருக்கும்.. ஆனால் அவன் யாரிடமும் மயங்கியதில்லை. அத்தனை ஒழுக்கம். அதற்கான காலம் இது இல்லடா என்று எங்களுக்கெல்லாம் அட்வைஸ் பண்ணுவான். இளகிய மனசு. யார்கிட்டேயும் வம்புக்கு போறதில்லை. வம்புகள் தேடி வந்தாலும் ஒதுங்கிப் போய்விடுவான். எப்பவும் தன்னுடைய அப்பாவுக்கு ரொம்பவும் அடங்கின பிள்ளை. சின்ன வயசிலிருந்தே அப்பாவின் மேல் அவ்வளவு பயம். அப்பழுக்கு இல்லாதவனாக, நேர்மையானவனாக, ஒழுக்கமும், இரக்க சிந்தனையும் உள்ளவனாக இருந்தவனுக்கு இடையில இந்த குடிப்பழக்கம் எப்படி வந்தது?.ஏன் உடைந்து போனான்?.`லா’ படிக்கணும்னு பெரிய கனவாக இருந்தானே,அது அப்பாவால்மறுக்கப்பட்டு ரைஸ்மில் நிர்வாகம் பார்க்கப் போனானே அதனாலா?.தெரியவில்லை

“டேய்! ஒரு வேலைக்கு துப்பா?. கல்யாணமாயி ரெண்டு குட்டியும் போட்டாச்சி. ஒடம்பை எருமை மாடுமாதிரி வளர்த்து வெச்சிருந்தா போதுமா?. அதுக்கேத்த பொறுப்பு வேணாம்?. என்னா ஜென்மமோ? முனியன் அரிசி லோடு ஏத்தினானே அவன்கிட்ட பாக்கிய வசூல் பண்ணியா?. இப்ப அவனை எங்க போயி புடிக்கிறது?. இப்பிடியே பொலி எருதாட்டம் குடிச்சிக்குணு ஊர்சுத்து.” —-அன்றைக்கு -குணசேகரனை அவங்கப்பா திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நானும் அவனுடந்தான் இருந்தேன். அவன் எதுக்கும் வாயைத் திறக்க வில்லை. படிக்கும் காலத்திலேயே அவங்கப்பா இப்படித்தான். டென்த் படிக்கிற வயசில கூட ஸ்கூல் விட்டு பத்து நிமிஷம் லேட்டானால் கூட ஸ்கூலுக்கே வந்துடுவார்.திட்டி,அடிச்சித் துவைச்சி இழுத்துட்டு போவார். அவ்வளவு கட்டுப்பாடு. ”நீ அந்நேரத்துக்கு இங்க இல்லையாமே. எங்க புடுங்க போன?. வேறென்ன குடிக்கப் போயிருப்ப இதான பொழுதுக்கும் தொழிலு. உன் கூட்டாளிங்க இன்னைக்கு காத்தாலயே வாங்கிக் குடிக்க வந்துட்டானுங்களா?..”—– இன்னும் சொல்ல வாய்கூசும் அசிங்கமான சொற்பிரயோகங்களும் வந்து விழுந்தன. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. விசாரித்ததில் இப்படிப்பட்ட அவருடைய கீழ்த்தரமான வசவுகள் அடிக்கடி இருந்துக் கொண்டேதான் இருக்குமாம். கூலிக்காரர்களை திட்டித் திட்டி எப்பவுமே அவர் வாயைத் திறந்தால் கலீஜு பேச்சாகத்தான் வரும். அடாவடியும், முரட்டுத்தனமும் உள்ள மனிதர். என்னதான் அப்பன்னாலும் தோளுக்கு மேல வளர்ந்த கல்யாணமான பிள்ளையை இப்படியா பொதுஇடத்தில வெச்சி திட்றது?. இவன் மேலேதான் எனக்கு அப்படி ஆத்திரம் வருது. கொஞ்சமாவது எதிர்ப்பைக் காட்டக் கூடாதா?. அப்பத்தானே அவர் அடங்குவார்.அப்புறந்தான் எனக்குத் தெரிஞ்சது, அரிசி லோடு ஏத்தின முனியன் கிட்ட பைசா பாக்கியில்லாம மொத்த பணத்தையும் வசூல் பண்ணிட்டுத்தான் லாரியை அனுப்பியிருக்கான். அதை ஏண்டா அவர் கிட்ட சொல்லாம அப்படி திட்டு வாங்கினே?.என்று ஆத்திரத்துடன் கேட்டேன். “அவரை உனக்குத் தெரியாதுடா அதை சொல்லியிருந்தா அவன் நம்மகிட்ட தொழில் பண்றவன், வெச்சிப் பார்த்திருக்கணும்.அதுக்குள்ள என்னா அவசரம்?. ஏன் வாங்கினே?. குடிக்க கையில பணமில்லையா?. அப்படீன்னு திட்டியிருப்பாரு. அவருக்கு என்னைத் திட்டணும், அதுவும் நாலு பேரு முன்னால திட்டணும். தான் என்ற அதிகார புத்தி… விடு. இதனால அவருடைய ஈகோ சேடிஸ்ஃபை ஆகுதில்ல?.”— எவ்வளவு தெளிவாக யோசிக்கிறான் பார்த்தீங்களா? அதான் குணா. அந்த வார விடுமுறை நாளில் நான் மளிகை சாமான் வாங்க கடைத்தெருவுக்கு போனப்ப எப்படியும் மணி ஆறு ஆறைரை இருக்கும். அம்மன் கோவில் பக்கம் ஒரே கும்பலாய் இருந்தது. என்னவென்று பார்த்தால் குணசேகரன். மிதமிஞ்சிய குடியில் தெருவோரம் வாந்தியெடுத்துவிட்டு விழுந்துக் கிடக்கிறான். நான் ஓடிப்போயி வாட்டர் பாட்டில் ஒன்று வாங்கிவந்து, அவன் முகத்தில் அடித்து கழுவி விட்டு, சட்டை மேலெல்லாம் வாந்தி. எல்லாவற்றையும் கழுவி விட்டு, ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு கிளம்பினேன். அந்த நேரத்துக்கெல்லாம் போதை தெளிந்து விட்டிருந்தது. மெதுவாக கண்களைத் திறந்து என்னைப் பார்த்தான்.

“டேய்…டேய்!…வேணு!”—–அப்படியே அழ ஆரம்பித்து விட்டான். “டேய் ச்சீ! செய்யறதையும் செஞ்சிட்டு இப்ப என்னத்துக்கு அழுவறே?. இப்படி பொறுப்பில்லாம குடிச்சிக்கிட்டே கிடந்தா, குடிகாரன எவன் மதிப்பான்?..” “ டேய்! இந்த நேரங்கள்லதாண்டா நான் ஹேப்பியா இருக்கேன் தெரியுமா?. எவனும் எங்கிட்ட வந்து ஆட்டிக்க முடியாது. ஆமாம்டா ஹ..ஹ..இந்த நேரத்தில எங்கப்பன் கூட என்னை பார்த்தாலே பயப்படுவாப்பல. எங்க இப்ப அந்தாளை எங்கிட்ட வந்து வாயை திறக்கச் சொல்லு பார்ப்போம். ஹ…ஹ..ஹா…! டேய்! இன்னிக்கு சொல்றேன். அந்தாளு இப்படியே கண்டவனுங்க முன்னால திட்டிக்கிணே இருக்கட்டும், பார்த்துக்கினே இரு, ஒரு நாளைக்கு இல்லே ஒரு நாளைக்கு நான் யாருன்னு காட்றேன்.”—ஆத்திரமாய் கத்தினான்.

ஏன்?…ஏன்?…என்பதற்கான காரணம் பிடிபட்டது..அவனை நினைக்க நினைக்க பாவமாக இருந்தது ஒரு தவறான அணுகுமுறையினாலே .எப்படியோ வரவேண்டியவன், இப்படி ஆயிட்டானே. குண்சேகரனின் வேதனையின் அழுத்தம் இப்போது புரிகிறது. பெரிய பணக்காரரின் ஒரே பிள்ளை. ரைஸ்மில் ஓனர், நிலச்சுவான்தாரர். அழகான மனைவிக்குக் கணவன், இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன். இத்தனைக்கும் சொந்தக்காரனுக்கு நாலு பேரெதிரில் ஏற்படும் அசிங்கமும் அவமானமும் ஒருநாள், ரெண்டுநாள் என்றால் தாங்கிக் கொள்ளலாம். தினசரி எனும்போது அதிலிருந்து வெளிவர மார்க்கம் தேவைப் படுகிறது.. அதற்கு எல்லோரையும் போல இவனும் குடியை தேர்ந்தெடுத்துவிட்டான். இதற்காகவா ஒருத்தன் குடிப்பான்?, என்று நமக்கு தோன்றலாம். ஆனால் ஒருவனுக்கு சமூகத்தில் அவனுக்கான இடம் இல்லாததை விட பெரிய அவமானம் எதுவுமில்லை. எந்நேரமும் குடித்துக் குடித்து, அவர்களுடையது ஊரில் மதிப்பான குடும்பம். அதனாலேயே காலவோட்டத்தின் தொடர் விளைவு போல, மெதுமெதுவாக அவன் குடும்பம் அவனிடமிருந்து தூரமாய் விலகியிருக்கிறது. அதற்கப்புறம் அவனாலும் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை போல. இது போன்று வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் மனிதர்களை நல்லவனாகவோ, கெட்டவனாகவோ, உதவாக்கரையாகவோ செதுக்குகின்றன.

ஆயிற்று சவம் எடுக்கும் நேரம் நெருங்கிடுச்சி. பாடை பூ அலங்காரங்களுடன் ரெடியாக நிற்கிறது. உறவுகளும், ஊர் மக்களும் கும்பல் சேர ஆரம்பித்தார்கள். குளிப்பாட்டுவதற்காக குணசேகரன் உடல் வெளியே வந்துவிட்டது. எங்கும் அழுகை சத்தம். பறையடிப்பவர்கள் ஒப்பாரி பாடி சுபோஜயம் சொல்லி, வந்திருப்பவர்களிடம் காசு வாங்கிக் கொண்டிருந்தனர். குணாவின் அப்பா நடப்பவைகளை பார்த்தபடி இறுக்கமுடன் எதிர்வீட்டு திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டிருந்தார். குணசேகரனின் தாய்மாமன் அவருக்கு ஆதரவாக கூடவே இருந்ததைப் பர்க்க முடிந்தது.பெண்கள் பக்கமிருந்து ஒப்பாரியின் கூக்குரல். ஒரு வயசானவர் வழிமுறைகளை சொல்லிக் கொண்டேவர ஒவ்வொரு சடங்காக நடந்தேறி, எல்லாம் முடிய,அரைமணி நேரமாகியது. ஆயிற்று சவஊர்வலம் கிளம்பியது. ஊர்வலத்தில் என் பக்கத்தில்தான் குணசேகரனின் அப்பா வந்துக் கொண்டிருந்தார். தன் பக்கத்தில் வருபவரிடம் பாக்கியை நாளைக்குள்ள செட்டில் பண்ணலேன்னா உன் நெல்லு அரைவைக்கு வராது என்று மிரட்டிக் கொண்டிருந்தார். அவர் என்னை கவனிக்க வில்லை போல. பேசிக் கொண்டே தற்செயலாய் திரும்பியவர், என்னை பார்த்துவிட்டார். அவ்வளவுதான், சடக்கென்று வேகமாக விலகி நடந்தார். . “ஏண்டா வேணு! நீ இவ்வளவு தரவுசா ஊர்ல நாலுபேருக்கு மனுசனா இருக்கிறீயே, உன் சிநேகிதனுக்கு புத்தி சொல்ல மாட்டியா?.ஆதி நாள்ல இருந்து நீதானே அவன் கூட்டாளி?. தொழிலை பார்க்காம பொறுக்கியாட்டம் குடிக்கிறது, பொறுக்கிப் பசங்களோட ஊர் சுத்தறது. ராஸ்கல், ரெண்டு புள்ளைங்கள பெத்தப்புறமும் புத்தி வரலேன்னா இந்த குடும்பம் உருப்படுமாடா?.”—-நான் அமைதியாக இருந்தேன். “சரி..சரி…உன்னை சொல்லி என்ன பண்றது?. அவனுக்கு வாய்ச்ச சிநேகிதனுங்க எல்லாம் அவங்கிட்ட வாங்கித் தின்ற பசங்கதானே?. அவன் குடும்பம் எப்படி கெட்டால் என்ன?. சுருட்டுன வரைக்கும் லாபம்.”—அவர் ஆத்திரமாய் சொல்ல, அதற்குமேல் என்னால் அடக்க முடியவில்லை.

“போதும் வாயை மூடுங்க. அவன் இந்த கதிக்கு ஆளானதுக்கே நீங்கதான்யா காரணம்.”

“டேய்..டேய்! .நாந்தான் அவனை குடிக்க சொன்னேன் இல்லே?.”—அவர் ஆத்திரத்துடன் கத்தினார். ”சும்மா கத்தாததீங்க..குணசேகரன் எப்பேர்பட்ட மனுசன் தெரியுமா ?. அப்பா தான நீங்க?.அவனுக்கு என்னா புடிக்கும், அவன் ஆசை என்னா? அவன் லட்சியம் என்னா?.ஒண்ணு தெரியுமா உங்களுக்கு?. எனக்குத் தெரியும். ஒரு ஒழுக்கமான பையன் ஏன் குடிக்க ஆரம்பிச்சான்?. என்னைக்காவது நீங்க யோசிச்சிப் பார்த்திருப்பீங்களா?.”—-ஆவேசமாக என்னை முறைத்தார்.

“திமிர்றா…திமிரு. அப்பன் சம்பாரிச்சி வெச்ச சொத்து கெடக்குதில்ல, அப்புறமென்ன?. நோவாம நோம்பு கும்புட்றதுக்குத்தான புள்ளைங்க இருக்கிறது?.”

“அதுசரி. உங்க தப்பை யார் சொல்றதாம்?. தோளுக்கு மேல வளர்ந்த புள்ளையை எல்லார் முன்னாலேயும் அப்படி திட்றீங்களே. திட்ற வார்த்தையில ஒரு வரைமுறை வாணாம்?. ரைஸ்மில்ல ஒரு கழுதை மதிக்குதாய்யா அவனை?. ரெண்டு பசங்களை பெத்துட்டப்புறமும் பொறுப்பு இல்லாம ஊர் சுத்தறான்னு மூச்சுக்கு முப்பது வாட்டி வர்றவங்க போறவங்க கிட்டே எல்லாம் சொல்லி சொல்லி கரிச்சிக் கொட்றீங்களே. என்னைக்காவது பொறுப்பை அவன்கிட்ட குடுத்திருக்கீங்களா ?. சொல்லுங்க. நீங்களே ஆண்டுக்கிட்டு அவனை ஒரு கூலிக்காரன் மாதிரி தானே வெச்சிருக்கீங்க?.”

“அடச்சீ! ஆமாம்டா இந்த வயசான காலத்தில எல்லாத்தையும் என் தலையில சுமக்கணும்னு பிரார்த்தனைடா எனக்கு. குடுத்திருந்தா பொறுக்கிப் பசங்களோட சேர்ந்து குடிச்சி குடிச்சி இந்நேரத்துக்கு மிஷினையே காலி பண்ணிட்டிருப்பான். அவனைப்பத்தி என்னா தெரியும் உனக்கு?.பேச வந்துட்டான்..” “குடிக்கட்டும்யா, அழிக்கட்டும்யா. நாளைக்கு நீங்க மண்டையைப் போட்டப்புறம், மொத்தமா அழிக்கப் போறானே. அப்ப என்னா பண்ணப்போறீங்க?.இள வயசுல எல்லாரும் ஆட்றதுதான். யார் யோக்கியன்?. சொல்லுங்க. உங்க வயசுல நீங்க ஆடல?. நீங்க எப்படியெல்லாம் ஆடினீங்கன்னு எங்களுக்கு தெரியாம இருக்கலாம். உங்க மனசை கேட்டுப் பாருங்க. அப்புறம் அப்புறம்தான் நல்லது கெட்டதை தெரிஞ்சிக்கிறோம். நாலு நாளைக்கு, ஒரு மாசத்துக்கு, ஆறு மாசத்துக்கு, ஏன்? ஒரு வருஷத்துக்கு, ஃப்ரண்ட்ஸ்களோடு சேர்ந்துக்கிட்டு குடிச்சி அழிச்சாலும், பொறுப்பை ஏத்துக்கிட்டிருக்கிற அந்த காலகட்டத்தில்தான் ஒவ்வொருத்தனும் பாடத்தை கத்துக்கறான், சுதாரிக்கிறான்.. நல்லது, கெட்டதை தெரிஞ்சிக்கிறான். மனுசங்களை தரம் பிரிச்சிப் பார்த்து பழக ஆரம்பிக்கின்றான்.

நாட்டில எல்லாரும் அப்படித்தான் கெட்டிக்காரனாக பக்குவப் பட்றான்.. நீங்க கூட அப்படித்தான் வளர்ந்திருப்பீங்க. நாம எப்பவும் தவறுகள்ல இருந்துதான் சரியானதை கத்துக்கிறோம்.. சட்டம் படிக்கணும்ன்றது அவன் கனவு. கனவு போச்சி. ஊர்ல பெரிய பணக்காரன்னு பேரு. மிஷின்ல கூலி வேலை செய்யறவன் கூட அவன் சொன்னா கேட்கிறதில்லை. எல்லாத்துக்கும் நீங்கதான் சொல்லணும். அதுவே பெரிய இன்சல்ட். தினசரி உங்கிட்ட திட்டு வாங்கி வாங்கி… அப்புறம் குடிக்காம என்ன பண்ணூவான்?. குடிச்சாதாண்டா எங்கப்பா என்னைக் கண்டு பயப்பட்றாருன்னு சிரிக்கிறான். ஏன்?னு இப்ப தெரியுதா?. தோளுக்கு மிஞ்சினா தோழன் ன்ற பழமொழியை ஏன் வெச்சிருக்காங்க?. என்னைக்காவது அவனை தோழனா பார்த்திருக்கீங்களா?. அவன் கிட்ட பொறுப்பை குடுத்துட்டு அப்பப்ப அவன் தப்புகளை தன்மையாகச் சொல்லி தட்டித் தட்டி அவனை வழிநடத்தியிருந்தா அவன் குடி பக்கமே போயிருக்க மாட்டான்யா. அதுக்கு மனசிருக்கணுமில்லே?.என் வீட்டில வந்து பாருங்க, நானும் எங்கப்பாவும் நல்ல எவ்வளவு நல்ல ஃப்ரண்ட்ஸா பழகுறோம்னு.”—–என் வார்த்தைகள் அவரை தாக்கியிருக்கக் கூடும். கோபத்துடன் சீறினார்.

“டேய்! போடா…போடா சர்தான். வேறெப்படி பேசுவே. அவனுக்கு சப்போர்ட்டா தானே நீ பேசுவ?. சொத்தை சம்பாரிச்சவனுக்குத்தாண்டா கஷ்டம் தெரியும். பொறக்கும் போது ஒரு மண்ணும் கெடையாது. மூணு வயசிலேயே அப்பன் போயிட்டான். அம்மா கூலிவேலை செய்றதில பொழப்பு..ஒரு ஓலை கொட்டாயிதான் ஆஸ்தி. ஒவ்வொரு பைஸாவா சேர்த்தேன். இவ்வளவு சொத்துக்களும் என் உழைப்பு. எம்மாம் கஷ்டப் பட்டிருப்பேன்?. ராவும் பகலும் தூங்காம உழைச்சேன். எம்மாம் மூட்டைய சொமந்திருப்பேன்?. ஹும்!சொம்மா ரோடுமேல போறவன் வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு சொல்றதுக்கு என்னா?. நேத்து பையன் எனுக்கு புத்தி சொல்ல வந்திட்ட இல்லே?.த்தூ!.”—

“அதுசரி பிள்ளைகளின் கவனிப்பின்றி வயசான சில பெத்தவங்க சிதைஞ்சி போறதை கண்கூடா பார்க்கிறோம். உங்க கதை அப்படியே உல்ட்டா. சிதைஞ்சது உங்க பிள்ளை. என்ன பண்றது? இப்படியுந்தான் நாட்ல நடக்குது..” —- ஊஹும் என் வார்த்தைகள் அவரை கொஞ்சம் கூட அசைக்கவில்லை. அன்னைக்கு இரைந்துவிட்டு கோபமாக போனவர்தான் ஒருவருஷமாச்சி பேசி.

இப்போது சவஊர்வலம் முடியும் கட்டத்துக்கு வந்துவிட்டது.. அரிச்சந்திரன் கோவில் எதிரில் பாடையை இறக்கி வைத்தார்கள். அரிச்சந்திரன் அகவலை ஒரு இருபது நிமிஷங்களுக்கு வெட்டியான் சொல்லி முடிக்க, பிணத்தை சிதையில் வைக்க தூக்கிக் கொண்டு போனார்கள். ஆயிற்று, வாய்க்கரிசி போடும் கட்டம் வந்து விட்டது. ஒவ்வொருத்தராய் வாய்க்கரிசி போட ஆரம்பித்தோம். இறுகிய முகத்துடன் தூரத்தில் ஒரு ஓரமாய் தலை கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்த, குணசேகரனின் அப்பாவை யாரோ கூப்பிட, அவர் தூரத்தில் எங்கோ வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தார்..

அப்புறமாக ரெண்டுபேர் அவரை வலுக்கட்டாயமாக எழுப்பி, கைத்தாங்கலாக பிடித்து கிட்டே அழைத்துச் சென்றார்கள். அப்பவே அவரை கவனித்து விட்டேன். மனுஷன் நார்மலா இல்லை .ஒருமாதிரி பிரமை பிடித்தாற்போல இருந்தார்.. இப்போது பறையின் சத்தமும் அடங்கிப் போக, அந்த இடம் நிசப்தமாக இருந்தது. வெட்டியான் அவர் கையில் வாய்க்கரிசியை வைத்தான். மவுனமாக குனிந்து இரண்டு கைகளையும் மகனின் வாயின் கிட்டே கொண்டுபோனதுதான் தாமதம் திடீரென்று அடித் தொண்டையில் ஊளையிடுவதைப் போல குழறலுடன் பெருத்த சத்தம் ஒன்று அவரிடம் எழுந்தது. அவ்வளவுதான் அப்படியே மரம் மாதிரி தடாரென்று தரையில் விழுந்தார்.. கண்கள் செருக, சுத்தமாக நினைவு தவறியிருந்தது. உறவுக்காரர்கள் அலறிக் கொண்டு ஓடி வந்து சூழ்ந்துக் கொண்டார்கள். முகத்தில் தண்ணீரடித்து ஆசுவாசப் படுத்தினார்கள். கொஞ்ச நேரங்கழித்து மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். அழவில்லை. மகனின் கன்னத்தை வழித்து வழித்து முத்தமிட்டார். “டேய்! ராஜா! குணா! கண்ணே! ஏண்டா கண்ணே இப்படி பண்ண?.!”—-. மடேர்..மடேர்.. என்று தலையில் அடித்துக் கொண்டார்..உயிரோடு இருக்கும் மகனிடம் பேசுவது போலவே இப்போது பேச ஆரம்பித்து விட்டார். அவர் நிலைமையைப் பார்த்து விட்டு சுற்றிலுமிருந்தவர்கள் அழுதார்கள். “மாமா!…மாமா… எழுந்திரு மாமா. “—சொந்தக்கார இளைஞன் ஒருத்தன் ஓடிவந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு அழுதான்.. “ ஏண்டா இவனைப் பார்ற. டேய்!கண்ணே! குணசேகரா! கண்ணே! .எனுக்கு நீ தண்டனை குடுத்துட்டியாடா செல்லம்! சொல்றா. கண்ணூ! இந்த கெழவனுக்கு இந்த வயசில தண்டனை குடுத்துட்டியா?.. எல்லாத்தையும் என் கால்ல கட்டிப்புட்டு கிடந்து பட்றா கெழவான்னு போய் சேர்ந்துட்டியே?. எனுக்கு ஆயுசு பத்தாதேடா..என்ன பண்ணுவேன்?. அதுங்கள எப்பிடி கரை சேர்க்கப் போறேன்? பெருமாளே! ”—– மனநலம் பிறழ்ந்தவர் போல மீண்டும் மீண்டும் தொட்டுத் தொட்டு மகனுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தார். இப்போது அவரை நினைக்க எனக்கும் கலங்கியது.. தன் ஒரே பிள்ளையின் சாவு துக்கத்திலும் ரைஸ்மில்தொழிலை பார்த்துக் கொண்டிருக்கும் நிஜமான ஒரு உழைப்பாளி. ஆமாம் இப்போது அப்படித்தான் அவரை யோசிக்க முடிகிறது. அவர் தோளை ஆதரவாய் பற்றினேன். எதையும் உணரும் நிலையில் அவரில்லை. ஒரு மாதிரி பித்து நிலையிலிருந்தார். அவருடைய பிதற்றலும், கதறலும் நிற்கவேயில்லை. சிலர் ஓடி வந்து அவரை தேற்றவும், வலுக்கட்டாயமாக தூர இழுத்துச் செல்லவும் முயற்சித்தார்கள்.. நான் அவர்களை விலக்கினேன். ”விட்ருங்க, ப்ளீஸ்!, கொஞ்சநேரம் மனம் விட்டு அழட்டும். தடுக்காதீங்க.”—— பிள்ளைகளை சான்றோனாக்குவதற்கு இதுதான் ஃபார்முலா என்று எதுவும் இல்லை. ஆனால் பெற்றோர்களின் அன்பு, கண்டிப்பு, கவனிப்பு,– இவை சரிவிகிதத்தில் இருக்க வேண்டுவது அவசியம் என்று எங்கியோ படித்திருக்கிறேன், எவ்வளவு நிதர்சனமான உண்மை.. இவற்றில் எது அளவை மீறினாலும் இப்படித்தான் பிள்ளை வளர்ப்பில் தோற்றுப் போய்விடுகிறோம். இப்போது வெட்டியான் தன் கடைசிப் பாட்டுக்கு குரலெடுத்தான்.

”மச்சு வீடு கச்சேரி, மாயவர்ண மாளிகை ——————– ஜடு…ஜட்…ஜடு…ஜம்
மைந்தன் நலங்கினதும், மாயமுடி தாங்கியதும் ————- ஜடு…ஜட்..ஜடு..ஜம்
மன்னவரும் தேவதையும் மருந்துவகை சிக்காம,————-ஜடு…ஜட்…ஜடு…ஜம்…
மைந்தனை பறிகொடுத்தோம் மாபாவி ஆனோமய்யா. டட்..டட்.. டடடடட்.. ஜினுக்கு… ஜிக்கா ஜினுக்குஜிக்கா…

நன்றி—-தாமரை—பிப்ரவரி 2016 இதழ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *