மகன் வீட்டு விசேஷம்!

 

அடேயப்பா மகன் வீட்டை பார்த்து மலைத்து போய் நின்றார் பெரியவர் கதிரேசன். பக்கத்தில் இருந்த அவர் மனைவியிடம் எம்மாம் பெரிய வீடா கட்டியிருக்கான் பாரு உன் மகன். மனைவி உடனே சும்மா கண் வைக்காம வாங்க, உள்ளே போய் பாக்கலாம்.

ஹூம்..ஹூம் நான் இருந்த காலத்துல ஒண்டு குடித்தனத்துல உன்னைய வச்சு குடும்பம் நடத்தினேன், வருத்தத்துடன் சொன்ன கதிரேசனை சும்மா அதையே சொல்லி புலம்பாதீங்க, அன்னைக்கு நாம் அப்படி இருந்தோம், அதுக்கோசரம் பையனும் ஒண்டு குடித்தனத்துல கஷ்டப்படணும்னு என்ன தலை எழுத்து..

எல்லாம் சரி முதல்ல நம்ம பையன் நம்மளை உள்ளே விடுவானா? மனைவியிடம் கேட்டார், அவள் முகம் சுருங்கியது.. பரவாயில்லை, வா தெரியாமயாவது உள்ளே போய் பார்த்துடுவோம்.

வீட்டு வாசலில் நான்கைந்து நாற்காலிகளில் உறவினர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் வாசலில் நின்று பார்த்து விட்டு மெல்ல பின் புறமாய் வந்தனர். புதிதாக கட்டி முடிக்கப்பட்டிருந்த வீடாகையால், பின் புறம் காம்பவுண்டில்லாமல் இருந்தது. அங்கு யாரும் இருப்பதாக தெரியவில்லை. இவர்கள் இருவரும் அதன் வழியாக உள்ளே வந்தனர். வீட்டு பின்புற கதவு சாத்தப்படாமல் இருந்ததால் மெல்ல அதன் வழியாக உள்ளுக்குள் வந்தனர்.

பின்புறம் இவர்கள் நுழைந்த பகுதியில் பாத்ரும் இருந்தது. இரு புறமும் பாத்ரூமும், நடப்பதற்கு நடுவில் அகலமாக வழி விடப்பட்டு இருந்தது. நடப்பதற்கு வழு வழுவென்று இருந்த அந்த தரை தளத்தில் இவர்கள் கால் படவே கூசியது.

பாத்ரும் எப்படி இருக்குன்னு பாத்துட்டு வரட்டா, ஆசையாய் கேட்ட மனைவியை ஏண்டி இவ்வளவு பிரமாதமா வீட்டை கட்டி வச்சிருக்கான், முதல்ல பாத்ரூமை போய் பாக்கணும்ங்கறயே? இருந்தாலும் மனைவியின் ஆசையை தட்ட முடியாமல் இடது புறம் இருந்த பாத்ரூமை நோக்கி நடந்தார்.

தாளிடப்படாமல் இருந்த அந்த அறைக்குள் நுழைந்தவர்கள் இது பாத்ரூமா இல்லை படுக்கை அறையா என்று வாய் பிளந்து நின்றனர். அப்படி ஒரு மினு மினுப்பு. சுவரெங்கும் நீல நிற சலவை கற்கள் பதிக்கப்பட்டு அங்கிருந்த அத்தனை இடங்களும் மின்னின.

குளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியை ஆசையுடன் தடவி பார்த்த மனைவியின் கையை தட்டி விட்டார். சே குளிக்கற தொட்டியை எதுக்கு இவ்வளவு தடவுறே.

ஐயோ பேசாம இருங்க. உங்களுக்கு ஞாபகம் இருக்கா? இவன் வயித்துல இருந்த சமயம், நாம ஒரு வீட்டுக்கு புதுசா குடி போனேமே, அந்த வீட்டுல தண்ணீர் தொட்டின்னு சொல்லி ஒண்ணை கட்டி, குடியிருக்கற ஏழு வீட்டுகாரங்களும் அதைத்தான் உபயோகப்படுத்தணும்னு வீட்டுக்காரர் சொல்லிட்டாரு. நீங்களோ சுத்தம் பாக்கற ஆளு. உங்களுக்காக தனியா நாலு குடம் தண்ணிய வச்சு,அதுலயே குளிச்சு துவைச்சு புழங்கனீங்களே.. இப்படி சுத்தம் பார்த்தே நாலஞ்சு வீடு மாறினோம். பெருமூச்சுடன் மனைவி சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த கதிரேசன் அதுக்காகத்தான் உன் பையன் இப்படி கட்டி விட்டிருக்கானே.நல்லா அனுபவி.

எங்க நீங்கதான் உங்க முன்கோபத்தால அவன் கூட சண்டை போட்டு விரட்டிட்டீங்களே.

பாத்தியா கடைசியில இந்த பொம்பளைங்க ஆம்பளங்க மேலே பழியை போட்டுடுவீங்க.

கொஞ்சம் மனசாட்சியோட சொல்லு, அவன் யார் பேச்சையோ கேட்டு உன்னை அடிக்க வரலை. உன்னை கண்டபடி பேசுனானே, இதையெல்லாம் பாத்துகிட்டு என்னைய சும்மா இருக்க சொல்லறையா. இப்பக்கூட நீ சொன்னதுனாலதான் இங்க வந்தேன். வந்து மட்டும் என்ன பிரயோசனம், நம்மளை என்ன வெத்தலை வச்சா கூப்பிடறான். இப்படி பயந்து பயந்து பாத்ரூம் வழியாத்தான வரவேண்டி இருக்கு. பட படவென் பொரிந்தார் கதிரேசன்.

அடடா உங்க கோபத்தை காட்ட ஆரம்பிச்சிட்டீங்களா, சொல்லிக்கொண்டிருக்கும்போதே வெளியே யாரோ நடக்கும் அரவம் கேட்டு இவர்கள் இருவரும் அந்த தொட்டிக்கு பின்னாலேயே ஒளிந்து கொண்டனர்.

உள்ளே வந்த ஒரு இளம் பெண் ஒரு பாடலை முணங்கியவாறு முகம் கை கால் கழுவி உடை மாற்றி சென்றாள். அதுவரை அங்கு ஒளிந்திருந்த இருவரும் அவள் போன பின் வெளியே வந்தனர். இந்த பொண்ணை பாத்தியா நம்ம பையன் மூஞ்சி அப்படியே இருக்கு.

நம்ம பேத்தியாத்தான் இருக்கணும். என்னமா வளர்ந்திட்டா, அவ பிறந்தப்ப ஒருக்கா நம்ம வீட்டுக்கு வந்து காண்பிச்சான். அதுக்கப்புறம் ஸ்கூலுக்கு போகும்போது பாத்தது. இப்ப அஞ்சு வருசம் ஓடியிருக்குமா> ம்…இருக்கும். மனைவி தனக்குள் முணங்கிக்கொண்டிருந்த்தை கேட்டுக்கொண்டிருந்த கதிரேசனுக்கு மனசு நிறைய வருத்தம்.

இப்பொழுது இவர்கள் மெல்ல அடுத்த அறைப்பக்கம் வந்தனர். அங்கு ஏராளமான பெண்கள் நகையும் நட்டுமாக, பளபளக்கும் காஞ்சீபுர பட்டு புடவைகளுடன் அங்குள்ள சோபாக்களில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் கண்ணில் படாமல் இடது

பக்கமாய் இருந்த அறைக்கதவு திறந்திருந்ததால் அதற்குள் புகுந்து கொண்டனர். அங்கு ஒரு இளைஞன் தொலைக்காட்டியில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் நிற்பதை கூட லட்சியம் செய்யாமல் அவன் அப்படி உற்று பார்த்துக்கொண்டிருந்தான்.இவர்கள் அவன் முகத்தை பார்த்து மெல்ல கிசு கிசுப்புடன் இவன் நம்ம பேரன், இவனும் எப்படி வளர்த்தி ஆயிட்டான் பார்த்தியா, மனைவியிடம் பெருமையாக சொன்னார்.

வினோத்..வினோத்..மெல்ல அந்த அறையில் எட்டி பார்த்து ஒரு பெண் குரல் கூப்பிட இவர்கள் சட்டென்று அங்கிருந்த ஒரு பீரோவின் பின்னால் ஒளிந்து கொண்டனர்.

ஏண்டா எவ்வளவு நேரமா உன்னை கூப்பிடறது? அங்க எல்லாரும் உனக்காக காத்துகிட்டு இருக்காங்க. இங்க உட்கார்ந்து டி.வி பாத்துகிட்டு இருக்கே? பூஜைக்கு நேரமாச்சு, நீ போனாத்தான் பூஜை நடக்கும்.

அம்மா இந்த மாதிரி எல்லாம் என்னை கஷ்டப்படுத்தாத. அப்பாவையே கும்பிட்டுக்க சொல்லு. ப்ளீஸ்மா கெஞ்சலும், கொஞ்சலுமாய் சொன்னவனை அந்த பெண் டேய் இதை சொன்னா உங்கப்பா கோபிச்சுக்குவாரு. போய் கற்பூரம் காட்டற வரைக்கும் இருந்திட்டு உடனே வந்திடு.. மத்ததெல்லாம் அவங்க பாத்துக்குவாங்க..

சே..என்று முணுமுணுத்தவாறு, அந்த பெண்ணுடன் எழுந்து சென்றான். அவர்கள் போனபின் இவர்கள் இருவரும் வெளியே வந்து ‘பாரு’ பேரனை எப்படி வளர்த்து வச்சிருக்கா உன் மருமகள், வருசத்துக்கு ஒரு நாள் பூஜை பண்ணறதுக்கு கூட சலிச்சுக்கறாங்க. கோபத்துடன் சொன்ன இவரை சமாதானப்படுத்தினாள் மனைவி. விடுங்க, அது அவங்க பிரச்சினை, சரி வெளியே ஆளுக நடமாட்டம் அதிகமா இருக்கு. நாம முதல்ல எங்கயாவது ஒதுக்குபுறமான இடமா பாத்து உட்கார்ந்துக்கலாம்.

அதுவும் சரிதான், என்று இவர்கள் முன்னறை பக்கம் கூட்டம் அதிகமாக இருந்ததால் அதன் பக்கத்து அறையில் ஒரு வாகான இடம் தேடி அமர்ந்து கொண்டனர்.

உள்ளே மணி அடிக்கும் ஓசை கேட்டது. ஆட்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். அரை மணி நேரம் ஒரே இரைச்சலாக இருந்தது. காக்காய்க்கு படையல் கொண்டு போய் வச்சிட்டீங்களா? யாரோ ஒருவர் கத்திக்கொண்டிருந்தார்.

எல்லாரும் சாப்பிட வாங்க ! இப்பொழுது அந்த கூட்டம், கலைந்து வெளிப்புறமாக அமைக்கப்பட்டிருந்த பந்தலை நோக்கி நகர ஆரம்பித்தனர்.

சத்தம் எல்லாம் ஓய்ந்த பின் இவர்கள் இருவரும் மெல்ல எழுந்து பூஜை நடந்த அறையை எட்டி பார்த்தனர். இவர்கள் இருவரின் போட்டோ வைக்கப்பட்டு சுற்றிலும் பூக்களால் நிறைக்கப்படிருந்தது

வெளியே யாரோ ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார் வருசமானாலும் உங்க அப்பா அம்மாவுக்கு “திதி” கரெக்டா கொடுத்து நல்லா கிரேண்டா பண்ணிடறீங்க.

என்னைய இவ்வளவு தூரம் வளர்த்து ஆளாக்கி விட்டவங்களுக்கு இதை கூட ஒழுங்கா செய்யலையின்னா அப்புறம் அவங்களுக்கு மகனா பிறந்து என்ன பிரயோசனம்.இது மகனின் குரல் என்பது இவர்கள் இருவருக்கும் நன்றாக புரிந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
எதிரில் உட்கார்ந்திருந்த நண்பருடன் வியாபாரம் சம்பந்தமாக பேசி முடித்து அவரை அனுப்பி விட்டு ஆசுவாசமாய் உட்கார்ந்திருந்த போது, பேரன் விடுமுறைக்கு அப்பா வீட்டிற்கு வந்திருந்த என் பெண் அப்பா உன் பீரோவை சுத்தம் பண்ணப்ப இந்த பேப்பர் கட்டு கட்டி இருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
“கர்ணபுரம்” என்னும் ஒரு சிற்றூர்.அது நகர வளர்ச்சி பெற்ற ஊர் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு ஊருக்கு உண்டான அடிப்படை வசதிகள் கொண்ட ஊராகத்தான் இருந்தது. நூலகம் முதல் பள்ளி வரை எல்லாமே இருந்தது.அந்த ஊரில் காலை நேரத்தில் இந்த கதையை ...
மேலும் கதையை படிக்க...
அம்மா அந்த இஞ்சீனியர் வந்தார்னா முதல்ல இந்த மண்ணை எல்லாம் எடுத்து அக்கட்டா போட சொல்லிடு, சொல்லிவிட்டு அம்மாவை பார்த்த மாலதி, அவள் எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து அம்மா அம்மா என்று உரக்க கூப்பிட்டாள். திடுக்கிட்டு விழித்த அம்மா என்ன? ...
மேலும் கதையை படிக்க...
நாய் குரைக்கும் சத்தம் கேட்டவுடன் வெளி வாசலை பார்த்தார் ரிட்டையர்ட் ஜட்ஜ் மகாதேவன்.பங்களா கேட் அருகில் ஒரு ஆள் நின்று கொண்டிருப்பதை பார்த்தார், தொலைவில் பார்க்கும்போது முகம் சரியாக தெரியவில்லை, ஆனால் ஆள் நல்ல கட்டு மஸ்தாக இருப்பது தெரிந்த்து. குரைக்கும் ...
மேலும் கதையை படிக்க...
பேரூர் வந்து, பேருந்தை விட்டு மெல்ல இறங்கிய மீனாட்சி கோயில் வாசலில் கண்ட கூட்டத்தை கண்டு மிரண்டாள். எப்படி வாகன நெரிசலை கடந்து கோயில் வாசலை அடைவது என்று திகைத்தவள் பக்கத்தில் ஒரு குடும்பம் இவளைப்போல் பாதையை கடக்க முயற்சித்துக்கொண்டிருந்தது. அதில் ...
மேலும் கதையை படிக்க...
மறைந்த இலக்கணம், படைத்த இலக்கியம்
ஆசிரியரை புரிந்து கொண்ட மாணவர்கள்
அம்மா ஏன் இப்படி இருக்கிறாள்?
முன்னால் கைதியின் வாதமும் முன்னால் நீதிபதியின் தீர்ப்பும்
பிராப்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)