பொண்ணு செஞ்சா குத்தம்… அம்மா செஞ்சா?!

 

வாஷிங்மெஷின் துவைத்து முடித்த துணிகளை இப்போது அலசத் துவங்கியதால், அதன் குரல் மாறி இருந்தது.

தோசையை மடக்கி எடுத்து வந்த ரத்னா, தட்டில் இருந்த தோசையை அனு இன்னும் சாப்பிட்டு முடிக்காததைப் பார்த்து, ”ஏய்… எங்கடி யோசனை?” என்றாள்.

”எனக்குப் போதும்மா…”

”என்ன போதும்? ரெண்டு தோசைதான் சாப்புடுவியா?”

”போதும்னா விடேன்.”

”எப்பவும் நாலு சாப்புடுவியே? ஏன் பசிக்கலையா?”

பதில் சொல்லாமல் அனு எழுந்து கை கழுவி வர… எதிரே நின்றாள் ரத்னா.

”என்னாச்சு உனக்கு? ஒரு வாரமாவே நீ சரியா சாப்பிடுறதில்லை. ஈவினிங் காலேஜ்ல இருந்து சீக்கிரம் வா. டாக்டர் கிட்ட போகலாம்!”

”என் உடம்புக்கு ஒண்ணுமில்லம்மா. வழியை விடறியா? பஸ் வந்துடும்!”

அனு தன் கல்லூரி பேக்கைத் தோளில் மாட்டிக்கொண்டு, ரத்னா நீட்டிய டிபன் பாக்ஸை வாங்கிக்கொண்டு ஓட்ட நடையில் விரைந்தாள்.

”போய்ட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போக மாட்டியா?”

”போய்ட்டு வர்றேன்!” என்று திரும்பாமல் சொன்னபடியே வெளியேறி நடந்த அனுவைக் கவலையோடு பார்த்தபடி நின்றாள் ரத்னா.
ஏதோ பிரச்னை… எதையோ மறைக்கிறாள்! கேட்டால் ஒன்றுமே இல்லை என்று மழுப்புகிறாள். என்ன வாக இருக்கும்? எப்படித் தெரிந்துகொள்வது?

ஒலித்த போனை எடுத்தாள்.

”நான்தான் பேசறேன். அவ புறப் பட்டுட்டாளா?”

”இப்பதான் புறப்பட்டாங்க…”

”நீ சாப்ட்டியா?”

”இனிமேதாங்க. நீங்க எப்ப வர்றீங்க?”

”இப்ப லீவு எதுவும் இல்லையேம்மா. தீபாவளிக்குத்தான் வர முடியும். ஏன்?”

”அனுவுக்கு இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும் ஜாதகம் எடுத்துடலாங்க..!”

”என்ன பேசறே? அவ டிகிரி முடிச்சுட்டு பி.ஜி. பண்ணப் போறா. அப்புறம் எம்.ஃபில்., பி.ஹெச்டின்னு பிளான் வெச்சிருக்கா. தெரியுமில்ல?”

”அவளுக்கென்ன? ஆயிரம் சொல்வா. கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன வேணாலும் படிக்கட்டும். நீங்க பெங்களூர்ல உக்காந்துக்கிட்டு ஈஸியாச் சொல்லிடறீங்க. அவளை வெச்சுக்கிட்டு நான் படறபாடு எனக்குத்தான் தெரியும். எப்ப, என்ன குண்டைத் தூக்கிப் போடுவாளோனு பயமா இருக்குங்க…”

”மெகா சீரியல்ஸ் பார்த்துக் கெட்டுப் போய்ட்டே. எனக்கு அனுவை உன்னைவிட நல்லாத் தெரியும். அவ ரொம்ப மெச்சூர்ட். நீயா எதாச்சும் கற்பனை பண்ணிக்காத!”

”சரி, தீபாவளிக்கு முன்னாடி ஒரு வீக் எண்ட் வந்துட்டுப் போங்களேன். எங்களுக்கு மூஞ்சே மறந்துடும் போலயிருக்கு. இங்க அனு காலேஜ் போய்ட்டா திரும்பி வர்ற வரைக்கும் ஒரு வேலையும் இல்லாம தூங்கித் தூங்கி வெயிட் போட்டுஇருக்கேன்.”

எதிர்முனையில் பிரசன்னா நகைச்சுவை போலச் சிரித்து முடித்து, ”ரொம்ப போரடிச்சா கரெஸ்பாண்டன்ஸ்ல எதாச்சும் கோர்ஸ் படின்னு சொன்னேனே…”

”படிக்கிற வயசெல்லாம் தாண்டியாச்சுங்க.”

”அனுகிட்ட கம்ப்யூட்டர் கத்துக்கோன்னு சொன்னேனே…”

”அனுகிட்டதானே? அவளுக்குப் பொறுமையே கிடையாது. அவ அளவுக்கு என்னால ஃபாஸ்ட்டா செய்ய முடியுமா? இதான் சாக்குன்னு அதட்றா…”

”டி.வி-ல நல்ல புரொகிராம்ஸ் எவ்வளவு வருது!”

”எவ்வளவு நல்ல புரொகிராமும் அரை மணி நேரத்துக்கு மேல தனியா பாக்க முடியாதுங்க.”

”என்னை என்னதாம்மா பண்ணச் சொல்றே?”

”டிரான்ஸ்ஃபருக்கு தீவிரமா முயற்சி பண்ணுங்கன்னு சொல்றேன்.”

”ஓ.கே. ஓ.கே. காலைல கம்பெனிக்காகக் கொஞ்ச மாச்சும் உழைக்கட்டுமா?”

”வெச்சுடுன்னு சொல்ல வேண்டியதுதானே?”

ரத்னாவுக்கு அனுபற்றி தான் அநாவசியமாகக் கவலைப்படுகிறோமோ என்று கேள்வி வந்தது.கொஞ்ச நாட்களாக அவள் அறையில் இரவில் அதிக நேரம் விளக்கு எரிகிறது. காலையில் கேட்டால், காலேஜ் அசைன்மென்ட் என்கிறாள். காலேஜில் இருந்து வந்ததும் கம்ப்யூட்டரில் உட்கார்ந்துவிடுகிறாள். கேட்டால் ஆர்குட் என்கிறாள். ஃபேஸ்புக் என்கிறாள். யூ டியூப் என்கிறாள். பிளாக்ஸ் என்கிறாள். என்ன எழவு புரிகிறது?

எது கேட்டாலும் முகம் பார்த்துப் பொறுப்பாக பதில் சொல்வதில்லை. சொன்னாலும் எடக்கு மடக்கான பதில்கள். வாக்குவாதங்கள். அன்றைக்கு வழக்கத்தைவிடத் தாமதமாக வந்ததற்குக் காரணம் கேட்டால், ”லைப்ரரில கொஞ்சம் நோட்ஸ் எடுக்க வேண்டியிருந்திச்சி” என்றாள்.

”போன் பண்ணிச் சொல்லக் கூடாதா?”

”மறந்துட்டேம்மா…”

”அம்மான்னு ஒருத்தி வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு வீட்ல உக்காந்திருப்பாளேங்கிறநினைப்பு இருக்காடி உனக்கு?”

”சினிமா டயலாக் எல்லாம் பேசி அறுக்காதம்மா. அதென்ன வயத்துல நெருப்பு? நான் என்ன சின்னக் குழந் தையா? கமர்கட் குடுத்து என்னைத் தூக்கிட்டுப் போயிடுவாங்களா? இடியாட்டிக்!”

”நீ சின்னக் குழந்தை இல்ல அனு. அதான் பயம்.”

”கம் ஸ்டிரெய்ட்! என்ன உன் பயம்?”

”வயசுப் பொண்ணுடி நீ!”

”தாங்கலை. ஸோ?”

”உனக்கு நல்லது கெட்டது தெரியாது.”

”ஓஹோ! உனக்குத் தெரியுமா?”

”விதண்டாவாதம் பண்றதே உனக்கு வழக்கமாகப் போச்சிடி! பெத்தவளாச்சேன்னு கொஞ்சம்கூட மரியாதையே இல்ல.”

”புல்ஷிட்! வாட் டு யூ மீன்? தினம் நான் கால்ல விழுந்து கும்புட்டுட்டுப் போகணுமா? கை கட்டி நிக்கணுமா? நான் என்ன செஞ்சா உன்மேல மரியாதை வெச்சிருக்கறதா அர்த்தம்?”

”முதல்ல இப்படி வார்த்தைக்கு வார்த்தை பேசறதை நிறுத்து!”

”நீ முதல்ல 24 அவர்சும் எனக்கு அட்வைஸ் பண்றதை நிறுத்து! ரொம்பப் படுத்தறேம்மா நீ!”

இப்படியெல்லாம் முகத்துக்கு நேராக வெடுக் வெடுக்கென்று பேசுகிறவள் இல்லை அனு. கொஞ்ச நாட்களாகத்தான். என்ன பிரச்னை என்றும் நேராகச் சொல்லித் தொலைக்க மாட்டேன் என்கிறாள். எப்படித்தான் தெரிந்துகொள்வது?

வியர்வைக் கசகசப்பில் கண் விழித்தபோது… மின்விசிறி நின்றிருந்தது. மின்சாரம் போயிருப்பதை உணர்ந்து எழுந்து டார்ச் அடித்து மணி பார்த்தாள் ரத்னா. மணி 2.10. ஜன்னலின் கதவுகளை இன்னும் விரியத் திறந்துவைத்து, தண்ணீர் குடித்து மீண்டும் படுக்கச் சென்றபோது மின்விசிறி சுழலத் துவங்கியது.

ஓர் உந்துதலில் அனுவின் அறைக்கு வந்து, சின்னத் தயக்கத்துக்குப் பிறகு ஓசையில்லாமல் கைப்பிடி அழுத்திக் கதவைத் திறந்தாள். அனுவின் முதுகு மெலிதாகக் குலுங்குவதைப் பார்த்துத் திடுக்கிட்டாள். சன்னமான விசும்பல் ஒலியும் வந்தது. பதறி டியூப்லைட்டைப் போட… அதிர்ந்து போய் எழுந்த அனு அவசரமாக விழிகளைத் துடைத்துக்கொண்டாள்.

”அனு, என்னடி இது? அர்த்த ராத்திரியில இப்படி அழுதுக் கிட்டிருக்கே?”

”அது… நத்திங். ஒரு கெட்ட கனவும்மா. நீ போய்ப் படு.” அருகில் வந்து கட்டிலில் அமர்ந்தாள் ரத்னா.

”இதப் பாரு. நீ பொய் சொல்ற அனு. உனக்கு என்னடி பிரச்னை? எதா இருந்தாலும் சொல்லு. நான் கோபிச்சுக்கலை.”

”ஒண்ணும் இல்லேன்னு சொல்றேன்லம்மா…”

”இல்லடி. நான் நம்ப மாட்டேன். எனக்குப் பதறுது. உங்கப்பாட்ட எதுவும் சொல்லலை. தைரியமாச் சொல்லு. எதாச்சும் லவ்வுல மாட்டிட்டு இருக்கியா? பரவால்ல… சொல்லுடி!”

”ஐயோ! அம்மா… அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஆறு மாசம் முன்னாடி வினோத் எங்கிட்ட லவ் ப்ரபோஸ் பண்ணான். ‘என் மனசுல கேரியர் பிளான்ஸ் நிறைய இருக்கு. லவ் பண்ற மன நிலைல நான் இல்ல, ஸாரிப்பா’ன்னு தெளிவாச் சொன்னவம்மா நான்!”

”காலேஜ்ல புரொபஸர்ஸ் எதாச்சும் திட்டிட்டாங்களா?”

”சேச்சே!”

”பின்னே என்ன பிரச்னை? எவனாச்சும் உன்னை போட்டோ எடுத்துவெச்சிக்கிட்டு பிளாக்மெயில் எதுவும் பண்றானா?”

”ரொம்ப கற்பனை பண்றே!”

”ஒண்ணுதான் பாக்கி. அதையும் கேட்டுடறேன். இப்பதான் ஃபேஷன், அது இதுன்னு சொல்லிக்கிட்டு வரைமுறை இல்லா மப் பழகறீங்களே… எதாச்சும் தப்பாயிடுச்சா? வயித்துல எதாச்சும் வாங்கித் தொலைச்சுட்டியாடி? சொல்லித் தொலை! ரகசியமா சரி பண்ணித் தொலைச்சிடலாம். பேசுடி!”

அம்மாவையே உற்றுப் பார்த்தாள் அனு.

”ச்சீ! இவ்வளவுதானா நீ என்னைப் புரிஞ்சிவெச்சிருக்கறது? எப்படில்லாம் கேக்கறே! என்னை அசிங்கப்படுத்தாம போய்ப் படு, போ!”

அனு படுத்துக்கொண்டு திரும்பிவிட… ரத்னா சமாதானம்ஆகாமல் மேற்கொண்டு எப்படிக் கேட்பது என்றும் தெரியாமல் எழுந்தாள்.

கோயில் வாசலில் ஆட்டோ வந்து நின்றதும் ரத்னா இறங்கிக்கொண்டு, ”இறங்கு. இங்கேயே நில்லு. அர்ச்சனைத் தட்டு வாங்கிட்டு வந்துடறேன்” என்று அனுவிடம்சொல்லி விட்டுச் சென்றாள். இருவரும் உள்ளே நடந்தபோது, ”எதாச்சும் சத்தியம் கித்தியம் பண்ணச் சொல்லப் போறி யாம்மா?” என்றாள் அனு.

”பேசாம வாடி!”

சந்நிதியில் அர்ச்சனைத் தட்டைத் தந்து, ”அனு, ரேவதி நட்சத்திரம்” என்றாள் ரத்னா. கண் மூடிப் பிரார்த்தித்தாள். டியூப்லைட் உபயம் செய்தவரின் பெயரைப் படித்துக்கொண்டு இருந்த அனுவை இடித்து, ”தீபாராதனைடி” என்றாள். இவளே விபூதி, குங்குமம் வைத்து விட்டு அவள் கையால் உண்டி யலில் 100 ரூபாய் போடச் செய்தாள்.

பிராகாரத்தில் ஒரு மண்டப நிழலில் சௌகரியமாக அமர்ந்ததும், ”அனு… இந்தக் கோயிலைவிட்டு வெளில போற வரைக்கும் நான் உன் அம்மா இல்ல. என்னை உன் நெருக்கமான தோழின்னு நினைச்சுக்கோ… மனசு திறந்து பேசு. நீ என்ன சொன்னாலும் உன்னை வெறுத்துட மாட்டேன்! நான் சரியாத் தூங்கிப் பல நாள் ஆச்சுடி!” என்றாள் ரத்னா.

”நானும்தாம்மா” என்று தூரத்து கோபுரத்தைப் பார்த்தாள் அனு.

”ஏன்டி ராஜாத்தி? என்னடி பிரச்னை?”

”நீதாம்மா! நீதான் பிரச்னை.”

”அப்பா பக்கத்தில் இல்லாததால ரெண்டு மடங்கு பொறுப்புடி. அதனால அப்பப்ப திட்டறேன், கோவிச்சுக்கறேன். இது தப்பா?”

”நீ சொன்னதையே சொல்றேன். இப்ப பேசறது உன் பொண்ணுன்னு நினைக்காதேம்மா. உன் தோழின்னு நினைச்சுக்கோ. மனம் திறந்து பேசு! நீ என்ன சொன்னாலும் நான் உன்னை வெறுத்துட மாட்டேன்மா!”

”என்ன அனு, என்னடி கேக்கறே?” என்றாள் ரத்னா புரியாமல்.

”நம்ம குடும்பம் அழகான குடும்பம்மா. நமக் காகத்தான் அப்பா அங்க தனியா உழைச்சுட்டு இருக்கார். அப்பா ரொம்ப நல்லவரும்மா. ஹி லவ்ஸ் யூ ஸோ மச்! அப்படி இருக்கறப்ப…”

மேற்கொண்டு பேச முடியாமல் அனுவுக்குத் தொண்டை அடைத்தது.

”எனக்கு எதுவும் புரியல அனு” என்றாள் ரத்னா.

”போன மாசம் ஒரு நாள் எனக்கு அரை நாளோட காலேஜ் முடிஞ்சிடுச்சிம்மா. நான் வீட்டுக்கு வந்தப்ப வாசல்ல நம்ம ஹவுஸ் ஓனரோட கார் நின்னுட்டு இருந்திச்சி. வெளில அவரோட செருப்பு இருந்திச்சி. கதவு வேற சாத்தி இருந்திச்சி.”

”அடிப்பாவி! என்னடி பேசறே?”

”நான் முடிச்சிடறேன். வாடகை வாங்க வந்தாருன்னா, அதிகபட்சம் ரெண்டு நிமிஷம்தான் அவர் இருப்பாரு. நான் சங்கடப்பட்டு பக்கத்துல ஒரு ஷாப்பிங் மால்ல சுத்திட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வந்தப்பவும் கார் நின்னிருந்திச்சி!”

”போதும் நிறுத்துடி! அசிங்கம் பிடிச்சவளே! இதை மனசுல வெச்சிக்கிட்டுதான் எங்கிட்ட ஒரு மாதிரியா நடந்துக்கிட்டிருக்கியா நீ? அன்னிக்கே மனசுவிட்டுக் கேட்டிருந்தா விவரத்தைச் சொல்லித் தொலைச்சிருப்பேனடி! அன்னிக்கு வாடகை வாங்க வந்த மனுஷனுக்குத் திடீர்னு ஹை பி.பி. வந்துருச்சி. தலை சுத்துதுன்னாரு. ஹால்லயே சோபால படுத்துட்டாரு. கொஞ்ச நேரம் தூங்கிட்டு காபி சாப்டுட்டுப் புறப்பட்டுப் போய்ட்டாரு! அதைப் போயி… ச்சீ! படுபாவி! பெத்த அம்மாவையே சந்தேகப்பட்டுட்டியேடி!”

ரத்னா அழத் துவங்கினாள்.

”ஸாரிம்மா. என்னை மன்னிச்சிடும்மா. நான்தான் லூசு மாதிரி ஏதேதோ கற்பனை பண்ணித் தொலைச்சுட்டேன். ஏம்மா… நான் கர்ப்பமா இருக்கனான்னு நீ சந்தேகப்படலயா? அந்த மாதிரிதானேம்மா? மனசுல வெச்சுக்காம கேட்டதாலதானே இப்ப உண்மை புரிஞ்சது! ப்ளீம்மா… ஸாரிசொல்லிட் டேன்ல!”

”போடி! என்னதான் கேக்கறதுன்னு ஒரு வரை முறையே இல்லையா?”

”இப்ப என் மனசு கிளியராய்டுச்சி. பாரம் இறங் கிடுச்சி. நம்ம அம்மாவா இப்படின்னு நினைச்சி புழுங்கி தினம் அழுதிட்டு இருந்தேன்மா. உன்னைச் சந்தேகப்பட்டதுக்கு அந்த மன உளைச்சலே பெரிய பனிஷ்மென்ட்தான். வாம்மா, போகலாம். இனிமே உன் மனசு நோகற மாதிரி நடந்துக்க மாட்டேன்… பேச மாட்டேன். என் செல்ல மம்மி இல்ல…”

ரத்னா கன்னத்தில் முத்தமிட்டாள் அனு.

இருவரும் எழுந்து கோயிலுக்கு வெளியே நடக்கத் துவங்க.. திரும்பி ஒருமுறை கோபுரம் பார்த்தாள் அனு.

‘என் சந்தேகத்துக்கு இதைத் தவிரவும் வேறு ஒரு சம்பவம் காரணம் என்பதை என்னால் வெளிப் படையாகச் சொல்ல முடியாது. அம்மா சொன்ன விளக்கத்தை நான் நம்பிவிட்டதாகத்தான் நடித்தாக வேண்டும். அம்மா மனதைச் சுத்தம் செய்ய வேண்டியது கடவுளே, உன் பொறுப்பு! நான் தவறு செய்தால் மன்னிக்கத் தயாராக இருக்கிற என் அம்மாவை, நானும் மன்னிப்பதுதானே முறை? எதற்காகவும் என் அம்மாவை என்னால் வெறுக்க முடியாது. ஏன் என்றால், இவள் என் அம்மா.’ என்று நினைத்தபடி நடந்தாள்.

மறுநாள் கணவனுக்கு போன் செய்தாள் ரத்னா.

”என்னங்க… புதுசா கம்ப்யூட்டர் கிளாசும், எம்ப்ராய்டரி கிளாசும் சேர்ந்திருக்கேன். அனுவோட கல்யாணத்தைப்பத்தி நான் இனிமே பேச மாட்டேன். அவ தெளிவாத்தான் இருக்கா. குழப்பம் எல்லாம் எனக்குத்தான். சீக்கிரம் டிரான்ஸ்ஃபருக்கு ஏற்பாடு பண்ணுங்க. வெச்சிடறேன்…”

பேசி முடித்துவிட்டு, தன் மொபைல் போனில் ஓர் எண்ணைத் தேர்வுசெய்து அதை டெலிட் செய்தாள் ரத்னா!

- ஆகஸ்ட், 2009 

தொடர்புடைய சிறுகதைகள்
முதலாம் காதல் யுத்தம்
''மனோ, நாம பிரிஞ்சிடலாமா?'' என்றாள் தீப்தி. எதிர்பாராத விபத்து போலவோ... எதிர்பாராத மழையைப் போலவோ, திடீரென்று அவள் இதைக் கேட்டுவிடவில்லை என்பது எனக்குத் தெரியும். எதிர்பார்த்த கேள்விதான் இது. சில நாட்களாகவே அவள் மனதில் அசை போட்டு ஒத்திகை பார்த்த கேள்விதான் இது. 'காபி சாப்பிடலாமா?’ ...
மேலும் கதையை படிக்க...
துப்பாக்கி துப்பாக்கியைக் கையில் எடுத்தான். பார்த்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு, இதற்கு வேலை. கடைசி நேரத்தில் எந்தத் தப்பும் நிகழ்ந்து விடக்கூடாது. புறப்பட்டான். இதோ, இப்போது செயல்படும் நேரம். கைக்கடிகாரத்தை ஒரு முறை பார்த்துக்கொண் டான். துப்பாக்கியை மெதுவாக உயர்த்தினான். சுட்டான். மைதானத்தில் தயார் நிலையில் ...
மேலும் கதையை படிக்க...
ஈகோ…
மைதிலி ஸ்கூட்டியை மர நிழலில் நிறுத்தினாள். கைகடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள். நேரமிருக்கிறது! அமைதியாக நின்றாள். அவளைச் சுற்றிலும் எல்லா திசைகளிலும் கறுப்பு கோட் அணிந்த, கைகளில் கட்டுகள் சுமந்த வக்கீல்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். செல் சிணுங்கியது. "ஆமாம்மா... கோர்ட்லதான் இருக்கேன். அரை நாள் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு காபி குடிக்கலாமா?
மழையின் தடயம் சாலையில் இருந்தது. ஈரம் காற்றில் இருந் தது. நடப்பது சுகமாக இருந்தாலும் ஷூவை சகதிக் குளியலி லிருந்து காப்பாற்ற சாகசம் செய்ய வேண்டியிருந்தது. ஒரு சைக்கிளை நகர்த்திவைத்து, மாட்டை செல்ல மாகத் தட்டி, கோலத்தை மிதிக்காமல் தாண்டி, குப்பைக் ...
மேலும் கதையை படிக்க...
கட்டிக்கொண்டிருந்த மேம்பாலத்தில் வெல்டு வைத்து, நெருப்புப் பூக்களை உதிர்த்துக் கொண்டிருந்தார்கள். வெட்டிப் போட்ட மணல் மேடுகளின் மேல் படகுகளாக அசைந்தசைந்து கார்கள் ஊர்ந்தன. ஓர் ஏராள் அசைவில் பரத்மேல் சரிந்து நிமிர்ந்த சுசிலா, "எத்தனை மணிக்கு வரச் சொன்னார் பரத்...?" "மணியெல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
'ஹலோ புல்லாங்குழல்! ஹலோ புல்லாங் குழல்! உன்னால் சத்தம். உள்ளே சுத்தம். நீயும் ஒரு அரசியல்வாதி!' - என் வேதாவின் கவிதைகளில் இது ஒன்று. எனக்கு ஒரு இழவும் புரியவில்லை. புல்லாங்குழல் ஜடம், அரசியல்வாதி உயிருள்ள மனிதன். இவள் எப்படி இரண்டையும் ஒப்பிடுகிறாள்? எனக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஆனந்தவல்லியின் காதல்
எந்தப் பேரரசுக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக மன்னர் விஜயநந்தன் நல்லாட்சி புரியும் அழகான கடற்கரை நாடு சுந்தரபுரம். காண்போர் வியக்கும் பிரமாண்டமான, மான் கொடி பறக்கும் அரண்மனையின் உப்பரிகையில் கவலை தடவிய முகத்துடன் நின்று கொண்டிருந்த மன்னரின் பார்வை, கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட ...
மேலும் கதையை படிக்க...
9-9-99 கம்ப்யூட்டர் துப்பிய கார்டில் அந்தத் தேதியைப் பார்த்த குமாஸ்தா கவுண்ட்டரின் இந்தப் பக்கம் தவிப்புடன் காத்திருந்த என் முகத்தைப் பார்த்தான். "பரவாயில்லை சார். உங்களுக்கு இன்னும் ஒரு வருஷம் டைம் இருக்கு. இந்தாங்க" அரசாங்க முத்திரை பதித்த அந்த அட்டையை என்னிடம் ஒப்படைத்தான். நான் வாங்கி ...
மேலும் கதையை படிக்க...
போக்குவரத்தின் நெரிசல் அதிகமாக இருந்ததாலும், தனது போசைக்கிளின் பிரேக் மேல் அவ்வளவாக நம்பிக்கை இல்லாததாலும், இறங்கி ஓரமாக தள்ளிக் கொண்டு நடந்தார் விநாயகம். ஆற்றுப் பாலத்தின் மேல் தள்ளிய போது, ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு இரும்புக் கிராதிகள் மேல் கையூன்றி பாலைவனமாய் ...
மேலும் கதையை படிக்க...
கான்ஃபரன்ஸ் அறையில் இருந்து என் மேஜைக்குத் திரும்பி சார்ஜில் போட்டிருந்த போனை எடுத்துப் பார்த்தபோது, 'தவறிய அழைப்புகள் மூன்று’ என அறிவிப்பு இருந்தது. மூன்றுமே குரு மாமாதான்... இரண்டு நிமிட இடைவெளிகளில். காத்திருக்காமல் உடனே உடனே அழைக்கிறார் என்றால், அத்தைக்கு வேறு ...
மேலும் கதையை படிக்க...
முதலாம் காதல் யுத்தம்
பட்டுகோட்டை பிரபாகர் நிமிடக் கதைகள்!
ஈகோ…
ஒரு காபி குடிக்கலாமா?
பரத் VS சுசிலா
நான் – A அவள் – Z
ஆனந்தவல்லியின் காதல்
இது ஒரு முற்றும் துறந்த கதை
ஆகஸ்ட் 15
குரு மாமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)