Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

பேயும் இரங்கும்

 

நடுச்சாமத்தைத்தாண்டிய நேரத்தில் அமாவாசை இரவைக் கிழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்த பஸ் வண்டி,பாதையின் வளைவின் திருப்பத்தில் சட்டென்று நின்றபோது அதில் வந்த பிரயாணிகள் ஒருத்தரை ஒருத்தர் கேள்விக்குறியுடன் பார்த்துக் கொண்டனர். ஏன் இந்த பஸ் வண்டி நின்றது என்று அவர்கள் யோசிக்கும்போது, ‘எல்லோரும் கொஞ்ச நேரம் இறங்கி நின்று களைப்பாறுங்கோ. வண்டியில என்ன பிழை எண்டு பார்ப்பம்’. பஸ் கண்டக்கர் உரத்த குரலிற் சொன்னார்.

‘இந்த நேரமா பஸ் முரண்டு பிடிக்கவேணும்’? வண்டியிலிருந்த மற்றவர்களுடன் மாதவன்,வண்டிக்கு அப்பால் அவர்களைச்; சுற்றிக் கிடந்த இருளில்ப் பார்வையைப் பதித்துக்கொண்டு தனக்குள் முணுமுணுத்தான்.இரவு பன்னிரண்டைத்தாண்டி விட்டது. மாதவன் தனது தங்கையையும்; கணவரையும் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த கடைசி பஸ்ஸில் ஏதோ ஒரு பிழை, சட்டென்று நின்றுவிட்டது. அதுவும் சுடலைக்குச் சற்று தூரத்தில்; நின்றுவிட்டது. சுடலையில் இன்று பின்னேரம் யாரையோ எரித்திருக்கவேண்டும் என்பதற்கடையாளமாகச் சுடலையிலிருந்து சிறு பொறிகள் அவ்வப்போது காற்றில் பறந்து கொண்டிருந்தன.

மாதவன்,தனது பிரயாணப்பையைத் தோளில் போட்டுக் கொண்டு கீழே வந்ததும்,தன்னைச் சுற்றிய இடத்தை நோட்டம் விட்டான். ஏதோ ஒரு பெரிய விபத்து நடந்ததற்கு அடையாளமாகச் சற்று தூரத்தில் ஒரு கார் சிதிலமடைந்து கிடந்தது. நேற்றோ அல்லது ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் அந்த விபத்து நடந்திருக்கவேண்டும் என்பதற்கு அடையாளமாகக் காற்றில் பறந்து போகாமல் அங்கு சில துண்டு துணிகளும்,அதையொட்டி, உடைந்து கிடந்த காரின் சில உதிரிப் பாகங்களும் கிடந்தன.

வண்டியிலிருந்த இறங்கியவர்கள்,அவனைப் போன்றே அந்த இடத்தை நோட்டம் விட்டனர்.’ பெரிய விபத்து போலக் கிடக்கு, இந்தக் காரின் சிதிலமடைந்த நிலையைப் பார்த்தால் அதில் வந்தவர்கள் பிழைத்திருக்க மாட்டார்;கள் போலத் தெரியுது’ வந்த பிரயாணிகளில் ஒருத்தர் பெருமூச்சுடன் சொன்னார்.

‘ ஏதோ அவசரத்தில் வந்திருக்கலாம். இந்த வளைவு ஒரு அபாயமான இடம். எத்தனையோ விபத்துக்கள் நடந்திருக்கின்றன’ இன்னொருத்தர் முணுமுணுத்தார்.அவர் குரலில் சில மனிதர்கள் வாழ்க்கையை அவசரமாக நகர்த்தக் கூடாது என்ற தொனி சாடையாகத் தெரிந்தது.

‘நல்ல காலம், இந்தத் திருப்பத்தில் சட்டென்று பஸ்வண்டி நின்றபோது எதிர்த் திசையிலிருந்து ஒரு பெரிய லாறி வந்திருந்து மோதியிருந்தால் இந்த வண்டியில் வந்த எங்களின் கெதி என்னவாகியிருக்கும்’ மாதவன் தனக்குள் யோசித்தான்.

சிதிலமடைந்த காரைப் பார்த்தபோது இரக்க சுபாவம் கொண்ட அவனுக்கு அந்த வண்டியில் பிரயாணம் செய்து அடிபட்ட மனிதனில் அல்லது மனிதர்களில் பரிதாபம் வந்தது.

‘எத்தனை கனவுகள், எதிர்பார்ப்புகள்,அத்தனையும் ஒரு நிமிடத்தில் விதியின் கொடுமையால் அழிக்கப் பட்டு விட்டது’ மாதவன் தனக்குள் யோசித்துக் கொண்டான்.அவன் கிராமதிற் பிறந்தவன் உறவுகள், சொந்தங்கள், சினேகிதங்கள் என்ற பிரமாண்டமான பரிமாணத்திற்குள் ஒரு தனிமனிதன் ஒருநாளும் தனிமையானவனல்ல என்று கோட்பாட்டுக்குள் வளர்ந்தவன். இந்த விபத்தில் யாரும் இறந்திருந்தால் அவர்களின் குடும்பம் உன்ன துயர் படும்’? அவன் மனம் நெகிழ்ந்தது.

இந்த விபத்தில் அகப் பட்டு யாரும் இறந்திருந்தால் அவர்களுக்குத் தன் இறுதி மரியாதையைசை; செய்வதுபோல் உடைந்து கிடந்த அந்தக் காரில்ச்; சில நிமிடங்கள் அவனையறியாமல் அவன் பார்வை சில வினாடிகள் தாமதித்தன. இறந்தவனை நினைத்துப் பெருமூச்சு விட்டபடி எப்படி ஊருக்குப் போய்ச் சேருவது என்று யோசிக்கத் தொடங்கினான்.

வண்டி நின்ற இடத்திற்கும் மாதவனின் ஊருக்குமிடையிலிருக்கும் சிறு ஆற்று ஓடையில் எருமைமாடுகள் கூட்டமாகப் படுத்திருப்பது சட்டென்று அவர்களைத் தாண்டிப்போகும் வண்டிகளின் வெளிச்சத்தில் வந்து மறைந்தன. ஆற்றுக்கு அப்பாலிருக்கும் அவனின் ஊரில் வெளிச்சங்கள் அதிகம் தெரியவில்லை. ஊரிலுள்ளவர்கள் பெரும்பாலும் ஒன்பது அல்லது பத்துமணியானதும் படுக்கைக்குப் போகும் பழக்கத்தைக் கொண்டவர்கள். ஆனால் ஏதோ ஒரு வெளிச்சம் மட்டும் ஒரு வீட்டிலிருந்து தெரிந்தது. அந்த வீட்டில் யாருக்கும் சுகமில்லாமலிருக்கலாம் என்று அவன் மனம் சொன்னது.

கடைசி பஸ் என்றபடியால் அதிக பிரயாணிகள் இல்லை. வரும் வழியில் இறங்க வேண்டிய பலர் இறங்கிக் கொண்டதால் கடைசியாக இறங்கவேண்டிய ஒருசிலரே இருந்தனர். ட்;ரைவரும் கண்டக்கரும் இறங்கி நின்று என்ன செய்வது என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் தெரு வெளிச்சம் கிடையாது. எப்போதாவது அவர்களைத் தாண்டிப்போகம் வாகனங்களிலிருந்து வரும் ஒளியைத் தவிர வானத்து நட்சத்திரங்களின் ஒளிமட்டும் அமாவாசைக்கு முன்னிரவான அந்தநேரத்தில் அங்கிருந்தது. நேரம் நடுச் சாமத்தைத் தாண்டியதால் தூரத்திலிருந்த ஒரு தேனிர்க்கடை மூடப்பட்டுக் கொண்டிருந்தது.

பஸ் கடைசியாக நிற்கவேண்டிய சிறுநகரின் இரண்டு மைல்களுக்கப்பால் இந்த நிகழ்வு நடந்ததால் பஸ் ட்ரைவரும் கண்டக்கரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.ஏனென்றால் தங்களால் வண்டியைத்திருத்த முடியாது என்றால் அங்கிருக்கும் பிரயாணிகள் கால் நடையாகத் தங்கள் ஊர்களுக்குப் போவார்கள் என்று அவர்களுக்குத் தெரியும்.அவர்களால் முடிந்தவரை ஒரு கொஞ்ச நேரம் வண்டியைத் திருத்தத் தங்களால் முடிந்தவரைக்கும் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள்.

இனி இந்தப் பக்கம் எந்த வண்டியும் வராது. தனியார் வாகனங்கள் வந்தாலும் முன் பின் தெரியாதவர்களை ஏற்றிக் கொணடு போவார்களோ தெரியாது.

வண்டியைத் திருத்துவார்களா?வண்டி திருத்த எவ்வளவு நேரமெடுக்கும்? மாதவன் குழப்பத்துடன் தலையைச் சொறிந்துகொண்டான்.நேரம் நகர்ந்துகொண்டிருந்தது.இறங்கியவர்களில் பலர் இருளில் தங்கள் ஊர்களுக்கு நடையைக் கட்டத் தொடங்விட்டது தெரிந்தது..

ஒன்றிரண்டாகச் சேர்ந்து வண்டியில் வந்தவர்கள் வண்டியின் நிலையைத் தெரிந்துகொண்டதும் தங்கள் ஊர்களுக்குப்போக ஆயத்தமானார்கள்.அவர்களை மாதவனுக்குத் தெரியாது. அவர்கள் அண்மையிலுள்ள சிறுநகரத்தவர்களாயிருக்கலாம். வண்டி நின்ற கொஞ்ச நேரத்தில் ஒரு சிலர் தங்கள் சாமான்களுடன் அவனைக் கடந்து சென்றார்கள். மாதவனின் ஊர் ஆற்றுக்கு அப்பாலிருக்கிறது.பகல் நேரமாயிருந்தால் இந்த ரோட்டுக்கும் ஊருக்குமிடையிலிருக்கும் காலளவு தண்ணீருடைய அந்த சிறிய ஆற்றைக் கடந்து போகலாம். ஆனால் இந்த நேரத்தில் பாம்புகள் நிறைந்த புல்லையும் புதர்களையும் கடந்து இரவில் ஆற்றைக் கடந்து ஊருக்குப் போவது அபாயம்.

மாதவன் தனக்குள் யோசித்தபடி தனியாக நடந்தான்.அவன் சுடலைக்கு முன்னால் பிரிந்துபோகும் றோட்டால் திரும்பி நடந்து அவனது ஊருக்குப் போகவேண்டும். செல் போன் இல்லாத காலமது. அருகில் எந்த வீடும் கிடையாது. இருந்தாலும் அவர்கள் வீட்டில் போன் இருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமாகும்.

வண்டி பழுதாகிக் கிடக்குமிடம் ஆளரவமற்ற இடம். போதாதற்கு சுடலைக்கு அண்மையிலுள்ள இடம்.

அவன் கிராமத்தைச் சேர்ந்தவன். படித்தவன் என்றாலும் அவனின் சிறு வயது முதல் கேட்டு வளர்ந்த பேய்க் கதைகள் அவனுக்குத் தெரியும்.பன்னிரண்டு மணிக்குப்பின் துஷ்ட தெய்வங்கள் வெளிவருவதாகவும் அந்த நேரத்தில் இரவிற் தனியாகத் திரிந்து பேய்களைக் கோபப்படுத்தினால்ச் சில எதிர்வினைகளைப் பேய்களால் வரும் என்றும் அவனது பாட்டி அவனது இளவயதில் சொல்லியிருக்கிறாள்.சுடலையை அண்டும்போது தனது பார்வையை றோட்டில் பதித்தான். தனியாகச் சுடலைப் பக்கம் இருண்ட நேரத்தில் யாரும் நடந்து திரிவது கிடையாது என்பது அவனுக்குத் தெரியும். அவனது பயத்தைக் காட்டிக் கொள்ளாமல்,அவன் வாயில் ஸ்கந்த ஸஷ்டி பாடலொன்றை முணுமுணுத்தபடி நடந்தான்.

இறக்கும் வயது வந்து,அல்லது வருத்தம் வந்து பலகாலம் துன்பப்பட்டு இறந்தவர்களின் ஆவி உடனடியாக மேலுலகம் செல்லுமென்றும், விபத்தில் சட்டென்று இறந்தவர்கள்,அல்லது அநியாயமாகக் கொலை செய்யப் பட்டவர்களின் ஆவிகள் அவர்கள் உயிருடன் இருந்தால் அவர்கள் வாழவேண்டிய கால கட்டம் வரையும் ஆவியாய் அலைந்து திரிவார்கள் என்றும் அவன் கேள்விப் பட்டிருக்கிறான்.

காதலிற் தோல்வியுற்றுத் தற்கொலை செய்தவர்கள் தாங்கள் விரும்பியவர்களைச் சுற்றியலைவதாகவும், கொலை செய்யப்பட்டவர்கள் அவர்களைக் கொலை செய்தவர்களைப் பழிவாங்க அலைவதாகவும் முதியோர்கள் சொல்வதுண்டு. அத்துடன் இந்த ஆவிகளை விட,மேலதிகமாகப் பல கொடுரமான ஆவிகள், தங்களுக்கான இந்த குறிப்பிட்ட நேரத்தில் வெளியே தனியாக வரும் மனிதர்களைப் பல வழிகளிலும் விரட்டுவதாகப் பாட்டி சொல்லியிருக்கிறாள்.

இந்த நேரத்தில் சுடலையில் வாழும் சுடலைமாறன்,சுடலைக்காளி, பிணந்தின்னிப் பேய்கள் இப்போது வெளி வந்து நடமாடுவார்கள்; என்பதும் பாட்டியின் பேய்கள் பற்றிய தகவல்களில் மிக முக்கியமானவை. அதுவுமில்லாமல்,அவன் போகும் வழியில் பேய்கள் குடிகொண்டு வாழும் பல மரங்கள் உள்ளன. தூரத்தில் தெரியும் ஆலை மரத்துப் பேய் பற்றிக் கதைகள் ஊரில் அடிபடும். ஆலை மரத்தில் மரமேறிப் பேய்கள்,அத்துடன் இன்னும் மேலுலகம் செல்லாத ஆவிகள்,வாகை மரத்தில் காடேறிப் பேய்,வேப்ப மரத்தில் உச்சியில் பிடித்த பேய்,ஆற்றங்கரைப் பக்கம் போனால்; ஆண்களைத் துரத்தும் கொள்ளிவாய்ப் பேய் என்று பல பேய்கள் பல மரங்களிற்; குடியிருக்குமாம்.

தனது ஊர்ப் பக்கம் போகும் தனக்குப் பின்னால் வேறு பிரயாணிகள் யாரும்; தொடர்ந்து வருகிறார்களா என்று திரும்பிப் பார்த்தான். அவனின் பார்வைக்கு எட்டும் வரையிலும் யாரும் வரவில்லை. அவன் மனதில் அவனையுமறியாத ஒரு பீதி.நடையின் வேகத்தைக் கூட்டினான். சுடலை தாண்டிய சந்தி வந்ததும் தன் ஊருக்குப் போகும் வழியில் திரும்பி,தன்னால் முடியுமட்டும் வேகமாக நடந்தான். பேய்களிலுள்ள பயத்தில் தனது மைத்துனரதை; தாறுமாறாகத் தன் மனதுக்குள் திட்டினான்.

மாதவன் மூன்று நாளைக்கு முன் தனது தங்கை வசந்தியையும் மைத்துனர் கிருஷ்ணனையும் பார்த்து, தனது மைத்துனர் தன்னிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்;க இருபது மைல்களுக்கு அப்பாலிருக்கும் அவர்களின் வீடு தேடி சென்றான். அந்தக் கடன் ஐந்து வருடங்களுக்கு முன் தனது மைத்துனர் ஒரு கடை போடப் பணம் தேவைப் படுகிறது என்ற கடன் கேட்டபோது கொடுத்த கடனாகும்.

வசந்திக்கும் கிருஷ்ணனுக்கும் ஆறுவருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரே ஒரு சகோதரிக்குத் தங்களாலான சீர்வரிசை செய்து மாதவனும் வெளிநாட்டிலிருக்கும் அவனின் சகோதரனும் தங்கள் கடமைகளைச் செய்தார்கள். அதன் பின் தனது கடையை விருத்தி செய்யவேண்டும் என்ற மாதவனிடம் கிருஷ்ணன் கடன் கேட்டான்.

ஆனால் இதுவரையும் மாதவன் எத்தனையோதரம் அந்தக் கடனைத் திருப்பித் தரச் சொல்லிக் கேட்டும் மைத்துனர் ஏதோ சாட்டுச் சொல்லித் தட்டிக்கழித்துக்கொண்டு வருகிறார்.

ஆனால் இந்த முறை மாதவனின் வயல் செய்யப் பணம் தேவைப் படுகிறது. அவன் கஷ்ட காலத்துக்குத் தேவை என்று சேர்த்து வைத்த பணம் அவனது தாய்க்கு முழங்காலில் சத்திரசிகிச்சை செய்த வைத்திய செலவுக்குப் பாவிக்கப்பட்டு விட்டது. மாதவனுக்கு வெளிநாட்டில் இருக்கும் தம்பியிடமிருந்து கொஞ்சம் உதவி கிடைக்கும்.தம்பிக்கு அண்மையிற்தான் கல்யாணம் நடந்தது அத்துடன் தாயின் வைத்திய செலவுக்கும் நிறையப் பண உதவி ஏற்கனவே செய்திருக்கிறான்.இனி தம்பியிடம் அடிக்கடி உதவி கேட்கக்கூடாது என்று மாதவன் நினைத்தான்.

தனக்குத் திருப்பித்தர வேண்டிய கடனைக் கிருஷ்னண் தந்தால் தம்பியிடம் பல்லைக் காட்டத் தேவையில்லை என்று மாதவன் நினைத்தான். கடந்த மூன்று நாட்களாகத் தங்கை வசந்தி அவளின் வாழ்க்கையில் நிறைய உதவிகள் செய்தமூத்த தமயனான மாதவனை அன்புடன் பார்த்துக் கொண்டாள். மாதவன் ஏன் வந்திருக்கிறான் என்று அவளுக்குத் தெரியும்.வயலில் விதைபோடும் காலமென்றபடியால் தமயனுக்குப் பணம் தேவைபபடுகிறது என்று அவளுக்குத் தெரியும்.ஆனாலும் அவளின் கணவன் கிருஷ்னண் தான் மாதவனிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் யோசனையில் இல்லை என்பது மாதவனுக்கும் வசந்திக்கும் விளங்கியது.

மாதவன் தங்கையிடம் சென்ற முதல் நாள் மத்தியானம் அவளின் கணவன் கிருஷ்ணன் கடைக்குச் சென்ற விட்டான்.மாதவன் தங்கையையும் அவளின் பெண்குழந்தைகள் இருவரையும் பாசத்துடன் அணைத்து முத்தமிட்டான்.அவனுக்கு வசதியான வாழ்க்கையிருந்தால் தங்கையின் கணவருக்குக் கொடுத்த கடனை அவன் திருப்பிக் கேட்க மாட்டான்.மாதவன் தன்னால் முடிந்தவரைக்கும் மற்றவர்களுக்கு உதபுவன்.அவனிடம் கடன் வாங்கியவர்களில் எத்தனைபேர் கடனைத் திருப்பித் தந்தார்கள் என்று அவனுக்குத் தெரியாது.

அன்று மதிய சாப்பாட்டுக்கு வந்த கிருஷ்ணன்,சம்பிரதாயமாகக் குடும்ப விடயங்களைப் பேசிவிட்டு, மாதவனுக்கு விரும்பிய உணவுகள் செய்து கொடுக்கும்படி வசந்திக்குச் சொல்லி விட்டுச் சென்றான்; கிருஷ்னன்;. நீண்ட பிரயாணம் செய்து வந்த களைப்பில் கடையிலிருந்து அன்றிரவு கிருஷ்ணன் திரும்பி வந்தபோது மாதவன் நித்திரையாகி விட்டான்.

அடுத்த நாள் காலையில் அவனது கடைக்கு அதிகாலையிற்போன கிருஷ்ணன்; இரவு பத்துமணி வரைக்கும் வீடு திரும்பவில்லை.கடையில் வேலைக்கு வருபவன் ஒருத்தன் வராததால் மதிய சாப்பாட்டுக்கும் வீட்டுக்கு வரமுடியாமல் கிருஷ்ணன் தனியாக மாரடிக்கவேண்டியிருந்தது என்று மனைவியிடம் சீறி விழுந்தான். அந்த நேரத்தில் கடன் விடயத்தைப்பேச மாதவனால் முடியவில்லை. மூன்றாம் நாள்க் காலையிலும் மாதவன் எழும்ப முதலே கிருஷ்ணன் கடைக்குப் போய்விட்டான்.

அடுத்த நாள்,இனியும் தாமதிக்க முடியாது,இன்று வீடு திரும்பவேண்டும் என்று நினைத்த மாதவன் தங்கையிடம் தன் கடன் விடயத்தைப் பற்றிப் பேசினான்.கிருஷ்ணனுக்கப் போன் பண்ணி எப்படியும் தனது கடனை கிருஷ்ணன் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரும்போது தரச்சொன்னான்.

மதிய சப்பாட்டுக்கு கிருஷ்னண் வந்தான். வரும்போது ஒரு மதுப்போத்தலுடன் வந்திருந்தான். நேற்று மதிய சாப்பாட்டுக்கு வராத கணவனுக்கும் விருந்தாளியாக வந்திருக்கும் தமயனுக்கும் வசந்தி பெரிய தடபுடலான சமயல் செய்தாள்.மைத்துனர் கிருஷ்ணன் மதுப்போத்தலையுடைத்துத் தாராளமாகத் தனது விருந்தாளிக்குப் பரிமாறினான். மாதவன் அதிகம் குடிக்காதவன். அதிலும் இன்று பின்னேரம் ஊர் திரும்பவேண்டும் என்று முடிவு கட்டியிருக்கிறான். ஆனால் மைத்துனர் விருந்தாளியான அவனுக்கு மதுவை நீட்டியபோது மறுக்க முடியவில்லை.

அதைத் தொடர்ந்து,மது குடித்த புதிய தென்பில் வயல்விதைக்க வேண்டியபடியால் அதற்குப் பணம் தேவைப்படுவதைப் பற்றியும் தாயின் சத்திர சிகிச்சையால் கையிலிருந்த பணம் செலவழிந்து விட்டதாகவும் மாதவன் தனது மைத்துனருக்குச் சொன்னான்.

‘நான் உங்களிடம் வாங்கிய கடனை எப்படியும் தருகிறேன்’ என்று கிருஷ்ணன் சொல்வான், அவனிடமிருந்து மாதவன் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனுக்கு,கிருஷ்ணன் சொன்ன பதில் தூக்கிவாரிப்போட்டது. ‘என்ன பஞ்சப்பாட்டுப் பாடுறியள்? வெளிநாட்டில இருக்கிற உங்கட தம்பியைக் கேட்டா இல்லையென்டா சொல்லப் போறான்’ என்று கிருஷ்ணன் தூக்கியெறிந்து பேசினான்.

‘வெளிநாட்டில் இருக்கும் தம்பிக்கு இப்போதுதான் கல்யாணம் நடந்தது. அத்தோட அம்மாவின்ர ஆபரேசனுக்கும் நல்லாச் செலவழித்தான். அவன் என்ன குபேரனா நினைத்தவுடன் பணப் பெட்டியைத் திறந்து தருவதற்கு’? மது தந்த தைரியத்தில் மைத்துனருடன் தர்க்கம் செய்தான் மாதவன்.

கிருஷ்ணன் மாதவனின் விளக்கத்தைப் பெரிதாக எடுக்கவில்லை என்பது அவன் மதுவை ஊற்றிய தாராளத்தால் புரிந்தது. ‘என்ன நினைக்கிறான் கிருஷ்ணன்? மதுவைத் தந்து எனது மதியைக் குழப்பி வீட்டுக்கு அனுப்பப் பார்க்கிறானா?’ குழப்பத்துடன் குமுறினான் மாதவன். கிருஷ்ணன் கடனைத் திருப்பித்தரவில்லை. மதிய சாப்பாட்டு முடிந்ததும் அவனது கடைக்குப் போய்விட்டான். அவன் இரவு பத்து மணிக்குத் திரும்பி வரும்வரையும் மாதவனால் காத்திருக்க முடியாது. வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் மழுப்பல் பேச்சுடன் இழுத்தடிக்கும்; கிருஷ்ணனில் மாதவனக்குக் கோபம் வந்தது.

அப்போது மாதவனின் மனைவி கலா சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. ‘கடன் வாங்கி விட்டுச் செத்துப்போன ஒரு கவுரமானவனின் ஆவி வந்து அவன் வாங்கிய கடனைத் திருப்பித் தந்தாலும், உங்கள் கடனைத் திருப்பித் தராமல் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் மகா தந்திரியான உங்கள் மைத்துனர் கிருஷ்ணன் உங்கள் கடனை ஒருநாளும் தரமாட்டார்.’
கலா சொன்னதை நினைத்ததும், மாதவனுக்குத் தாங்க முடியாத கோபம் வந்தது. மைத்துனரில் வந்த ஆத்திரத்தில் மிகுதியாகவிருந்த மதுவைக் கட கடவெனக் காலியாக்கினான். அதைத் தொடாந்து தன்னையறியாமல் தூங்கிப் போய்விட்டான். எழும்பிப் பார்த்தால் இரவாகியிருந்தது.’ ஏன் என்னை எழுப்பவில்லை?’ தங்கையிடம் எரிந்து விழுந்து விட்டு, பஸ் எடுக்கச் சென்றால் வண்டி போய்விட்டது. இனிக்; கடைசி பஸ் எடுத்துக் கொண்டு ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற நினைத்தபோது இன்னும் மதுவெறி ஒட்டுமொத்தமாகக் குறையாத அவன் மனதில் மைத்துனரை நம்பியதை நினைத்து அவமானம் வந்தது. அந்த விரக்தியில் வந்தனுக்கு வண்டியும் வழியில் நின்று விட்டது.

மாதவன் ஒரு சாதாரண குடும்பஸ்தனைவிட வித்தியாசமானவன்.பெரும்பாலான மனிதர்கள், தங்களுக்கு வைத்துக்கொண்டுதான் மற்றவர்களுக்குத் தானம் செய்வார்கள்.ஆனால் இளகிய மனம் படைத்த மாதவன் அப்படியில்லை. யாரும் கேட்டால் தன்னால் முடிந்த அளவு உதவி செய்தான்.அவன் இளவயதிலேயே அப்படித்தான் இருந்தான். அந்த இரக்க மனபாவம் அவனின் தாய்க்கு அவ்வளவாகப் பிடிக்காவிட்டாலும், ‘இல்லாதவர்களுக்குத் தானம் கொடுத்தால் அது எப்படியொ ஒரு நாள் உனது கைக்கு ஏதோ ஒரு வழியில் வரும் மகனே, மற்றவர்களின் துயர் தீர்க்க உதவும் உன்னைப் போன்ற நல்லவர்களுக்குச் சிலவேளைகளில் பேயும் இரங்கும்’ என்ற சொல்லி அவனைத் தேற்றுவாள்.

ஆனால் அவனின் மனைவி கலா அவனின் ‘அப்பாவித்’தனத்தைக் கண்டு ‘பெருந்தன்மை.இரக்கமனப்பான்மை’ என்பவற்றிற்கப்பால், கொடுத்தவர்களிடம் கறாராகப் பணத்தைத் திருப்பி வாங்கத் தெரியாத அவனைச் சில வேளைகளல் திட்டித்தீர்ப்பாள். மாதவன் தனக்குள் ஏதோவெல்லாமோ நினைத்துக் கொண்டு நடந்தான்.

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்களே,இப்போது அவனுக்குப் பணம் தேவைப் படுகிறது.வழியில் யாரோ மாயமாக வந்து குதித்து அவன் கையில் பணத்தைத் திணிக்கப் போகிறார்களா? மாதவன்; பெருமூச்சு விட்டான். மைத்துனரின் நடத்தையால் அவனின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி விட்டது. மாதவனின் இரக்க குணத்தால் அவனை யாரும் மதிப்பதில்லை என்று கலா நினைக்கிறாள் என்று அவனுக்குத் தெரியும். வீட்டுக்குப் பணமில்லமல் போனதும் கலாவை எப்படித் தேற்றுவது என்ற அவனுக்குத் தெரியவில்லை.

மாதவன் குழப்பமான யோசனைகளுடன் தனியாக நடந்து கொண்டிருந்தான். மத்தியானம் மைத்துனருடனிருந்த கோபத்தில் அவன் சரியாகச் சாப்பிடவில்லை.அத்துடன் அந்த நேரம் குடித்த மதுவின் விளைவால் மிகவும் வேகமாக நடக்க முடியாமல் சாடையாகத் தள்ளாட்டமும் வந்தது. எவ்வளவு சீக்கிரமாகப் போகமுடியுமோ அவ்வளவு தூரம் செல்லத் தன்னை உசார் படுத்திக் கொண்டு தனக்கு முன்னாலுள்ள பாதையைக் கவனித்தான்.அவனுக்கு முன்னால் இருளான பாதையும் ஆங்காங்கே சில மரங்களும் அவற்றிலிருந்து அவ்வப்போது வரும் பறவைகளின் சிறு சப்தங்களும் தவிர எந்த ஒலியும் கிடையாதுஅந்த அசாதாரண அமைதியை அவன் ஒருநாளும் அனுபவித்தில்லை.சட்டென்று எங்கிருந்தோ ஒரு நரியின் ஊழை அவன் காதைப் பிழந்தது. அதைத் தொடர்ந்து பக்கத்துப் பற்றையில் சர் சர் என்று பாம்பு ஊர்ந்து நகரும் சப்தம். பயத்தில் அவன் ஓட்டமும் நடையுமாக விரைந்தான்.

ஒரு சொற்ப தூரத்தில் பல விழுதுகளைப் பரப்பிய ஆலைமரம் விரிந்து பரந்து தெரிந்தது. ஆலை மரத்தைச் சுற்றி அண்மையிலிறந்த மனிதர்கள் பஞ்சமிப் பேயாக உலவுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறான். இப்போதுதான் ஏதோ ஒரு பிணத்தை எரித்திருக்கிறார்கள். அந்தப் பிணத்தின் ஆவி இப்போது மேலுலகம் போயிருக்குமா அல்லது ஆலைமரத்தடியில் சுற்றித் திரியுமா?

அவன் தனக்குள் நினைத்துக் கொண்டிருக்கும்போது, சட்டென்று பெரும்காற்று அவனைத் தாண்டிப் போனது.அத்தோடு சேர்ந்து வந்த மணம் அவனின் நாசியைக் குடைந்தது. இதுதான் பிணவாடையா, சுடலையில் எரிந்து கொண்டிருக்கும் பிணத்திலிருந்தா வருகிறது? அவனுக்கு வயிற்றைக் குமட்டியது.ஆலை மரம் பெரும் காற்றில் ஆடியது. அந்த ஆரவாரத்தில் ஆலைமரத்தில் நித்திரையாயிருந்த பல தரப்பட்ட பறவைகள் சிறகடித்துக் கூக்குரலிட்டன.

அவன் பயத்துடன் எட்டி நடை போட்டான்.

அந்த நேரம், அவனுக்குப் பின்னால் யாரோ வருவதற்கான மெல்லிய நடைக்கான அறிகுறிகள் தெரிந்தது. வண்டியிலிருந்து இறங்கி அவனுடன் சேர்ந்து இந்தப் பக்கம் வரவில்லையே? அவனால்த் திரும்பிப் பார்க்க முடியவில்லை.

பயத்தில் அவன் தொண்டை வரண்டது. ஸ்கந்த சஷ்டிப் பாடல்கள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டன. இன்னும் அவனைத் திக்கு முக்காட வைக்கும் மதுவெறியிலும் தாங்க முடியாத பயத்திலும் கால்கள் தடுமாறின. மூச்சு வாங்கியது,தொண்டை அடைப்பதுபோலிருந்து. தண்ணீர் குடிக்கவேண்டும்போலிருந்தது. அவனுடைய கை அவனின் பிரயாணப் பையைத் திறந்து தண்ணீர்ப் போத்தலை எடுக்கத் தேடியது. மைத்துனரிலுள்ள கோபத்தில் சரியாகச் சாப்பிடவில்லை,பசியிலும் மது குடித்ததாலும் உடம்பு தளர்ச்சியடைவதுபோலிருந்தது.

கடவுளே இந்த நேரத்தில் யாரும் காரில்அல்லது பைசிக்கிளில் இந்தப் பக்கம் வரமாட்டார்களா?

பின்னால் வந்த காலடிகள் அவன் ஆலைமரத்தையண்டியபோது அவனருகில் தெளிவாகக் கேட்டன. விழுதுகளைப்; பூமியில் பதித்தபதி ஒரு பெரும்காற்றில் பூதமாகப் பேயாட்டம் போடும் ஆலை மரம் அவனை எதிர்கொண்டது.

‘வந்த வண்டியில பிரச்சினை வந்ததால பெரிய கஷ்டமாக இருக்கு. நல்லகாலம் ஊர்; பக்கத்தில இருக்கிறதால பிரச்சினையில்ல’

பின்னால் வந்த கொண்டிருந்தவனின் குரல் மாதவனுக்குத் தெரிந்த யாரையோ நினைவில் கொண்டு வந்தது. அருகில் வந்தவனைத் திரும்பிப் பார்த்தான்.இருளில் முகம் சரியாகத் தெரியவில்லை. சட்டென்று அடித்த பெரும்காற்று அடங்கிவிட்டது. மாதவன் தனக்குப் பக்கத்தில் வந்தவனைத் தயக்கத்துடன் ஏறிட்டுப்பார்த்தாலும் அவனின் முகத்தைச் சரியாகப் பார்க்கமுடியாமல் இருள் பரவியிருந்து.

‘என்ன யோசிக்கிறியள், என்னைத் தெரியல்லயா, நான்தான் சிவராசா’

பின்னால் வந்தவன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ‘ஓ,சிவராசா,எப்ப ஊருக்கு வந்தனீங்கள்?’ மாதவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இனிப் பேய்களைப் பற்றிப் பயப்படாமல் தனது பழைய சினேகிதனுடன் பேசிக்கொண்டு வீடு போய்ச் சேரலாம்.

‘மூன்று நாளைக்கு முன்னால வந்தன்’

‘இந்த நேரத்தில என்ன இந்தப் பக்கம்’ மாதவன் சிவராசாவைப் பார்த்துக் கேட்டான் சிவராசாவின் முகம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அந்தக் குரல் நிச்சயமாகச் சிவராசாவுடையதுதான்.

‘ என்ன மாதவன், நீங்க வந்த வண்டியிலதான் நானும் வந்தன். நீங்கள் முன்னுக்கு நித்திரையில் தூங்கி வழிந்துகொண்டிருந்தீர்கள். உங்களக் குழப்ப விருப்பமில்லை.வண்டி பிரச்சினை தந்தவுடனே நீங்க நடையைக் கட்டிவிட்டிPர்கள். வண்டியைத் திருத்துவார்களா என்று நான் கொஞ்ச நேரம் நிண்டு பார்து விட்டு உங்களுக்குப் பின்னால வருகிறேன்’ என்றான்.

மாதவன் ‘ மூண்டு நாளாகச் சரியாகத் தூக்கமில்ல,அதுதான் வண்டியில ஏறின உடனே கொஞ்சம் கண்ணயர்ந்து போனன்’ என்று சொன்னான்.மாதவனின் மனதில்; நிம்மதி;.அவனுக்குத் தெரிந்த இன்னொருத்தன் பக்கத்தில் வரும்போது ஏன் பேய்களையும் ஆவியையும்பற்றிப் பயப்படவேண்டும்?

மாதவனின் சினேகிதனான சிவராசாவுக்குப் பல உறவினர்கள் சுற்றிவளைத்த கிராமங்களில் வாழ்கிறார்கள். வெளி நாட்டிலிருந்து வந்த சிவராசா,அவர்களைப் பார்த்து விட்டு வரும் வழியில் மாதவன் வந்த வண்டியில் ஏறியிருக்கலாம். அந்த நேரம் மாதவன் தூங்கி வழிந்துகொண்டிருந்திருக்கலாம்.

‘வசந்தி எப்படியிருக்கிறாள்’ சிவராசா சட்டென்று கேட்டான். அவன் குரலில் தயக்கம்.

சிவராசாவின் கேள்வி மாதவனுக்குத் தர்மசங்கடமாகவிருந்தது. மாதவனும் அடுத்த தெருவிலிருந்த சிவராவும் நகரத்தில் ஒரே பாசாலையில் படித்த காலத்தில் நல்ல சினேகிதர்கள். நண்பன் மாதவனைப் பார்க்க சிவராசா அவனின் வீட்டுக்கு வந்தபோது வசந்தியில் ஈர்ப்பு கொண்டவன். சிவராசா வசந்தியைத் திருமணம் செய்ய மிகவும் விரும்பியவன். அது மாதவனுக்குத் தெரியும்.ஆனால் வசந்தியின் பெற்றோர் அதை விரும்பவில்லை. அவர்களின் நீண்டகாலமாக வசந்திக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்திருந்த தூரத்துச் சொந்தமான கிருஷ்ணாவுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். தாய் தகப்பனை மீறி மாதவனால் சினேகிதனுக்குத் தனது தங்கையைத் தனது நண்பனுக்குத் திருமணம் செய்து வைக்க முடியவில்லை.

அந்தத் தோல்வியில் சிவராசா நீண்ட காலம் மன உளைச்சலில் ஊரில் வாழ்ந்து கொண்டிருந்தான். அந்தக் காலத்தில் சிவராசாவைப் பார்க்க மாதவனுக்குப் பரிதாபம் வரும். சிவராச ஒரு நாளும்,அவன் வசந்தியை மனமார விரும்பியதையோ அல்லது இப்போது துயர் படுவதையோ போன்ற சிக்கலான தனது உள்ளக் கிடக்கையைத் தனது நண்பனுக்குச் சொல்லவில்லை. மாதவனும் ஒரு நாளும் சிவராசாவிடம் எதையும் பேசவில்லை. நண்பர்கள் இருவரும் கவுரமாகப் பழகிக் கொண்டார்கள்.

சில காலத்தின் பின் சிவராசா,வெளிநாடு போய்விட்டான்.அவன் வெளிநாடு செல்ல மாதவனிடம் பண உதவி கேட்டபோது உதவி கேட்கும் எவருக்கும் தன்னால் முடிந்ததைக் கொடுக்கும் மாதவன் சிவராசாவுக்கும் உதவினான். ஆனால் சிவராசா கடந்த நான்கு வருடங்களின் பின் இன்றுதான் சினேகிதனைக் காண்கிறான்.

‘வசந்தி சுகமாகவிருக்கிறாள்.இரண்டு பிள்ளைகள்.அவர்களைப் பார்த்து விட்டுத்தான் வருகிறேன்’ மாதவன் சொன்னான்.சிவராசவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

சிவராசா மத்தியதரைக்கடல் நாடொன்றில் வேலை செய்வது மாதவனுக்குத் தெரியும். மாதவனின் உதவியுடன் வெளிநாடு சென்றவன், ஆனால் மாதவனுடன் தொடர்வை வைத்திருக்கவில்லை. மாதவனுடன் தொடர்பற்றிருந்தது வசந்தியை மறப்பதற்கான சிவராசாவின் செயற்பாடாக இருக்கலாம் என்று மாதவன் யோசித்தான். மாதவனின் பணத்தை அவன் ஊர் திரும்பும்போது மாதவனுக்குத் திருப்பிக் கொடுத்து விடுவதாகச் சொன்னதாகச் சிவராசாவின் தாய் சொல்லியிருந்தாள். மாதவன் அந்தப் பணம் தனக்கு எப்படியும் திரும்பி வரும் என்று நினைத்தான். சிவராசா இப்போது தன்னுடன் வருகிறான். கொடுத்த கடன் பற்றிக் கேட்கலாமா? அந்த யோசனை வந்ததும் மாதவன் தடுமாறிப் போனான்.

நடுச் சாமத்தில் சட்டென்ற சந்தித்த தனது பழைய நண்பனிடம் கடன் பற்றிக் கதைக்க அவன் மனம் கூசியது. அதைப் பற்றிய யோசனை வந்ததற்குத் தன்னைத் தானே கடிந்து கொண்டான். நாளைக்கு சிவராசராவைச் சந்தித்து அது பற்றிப் பேசலாம் என்று தனக்குள்ச் சொல்லிக் கொண்டான்.

அதன் பின் இருவரும் சம்பிரதாயத்திற்கு ஊர்பற்றிச் சில வார்த்தைகளைப் பேசிக் கொண்டார்கள். ஆனால் சிவராசா ஏனோ அந்தப் பேச்சில் அக்கறை காட்டவில்லை என்று மாதவன் நினைத்தான். சிவராசா மேற்கொண்டு எதுவும் பேசாமல் வந்து கொண்டிருந்தான்.பழைய ஞாபகங்களில் மூழ்கியிருக்கலாம். கொஞ்ச தூரம் இருவரும் ஒன்றும் பேசாமல் வந்து கொண்டிருந்தார்கள்.

‘என்ன வேடிக்கை, இத்தனை நாளைக்குப் பின் இந்த நடுச்சாமத்தில் சந்திக்கிறம்’ இருவரும் அவர்களின் வீடுகளுக்குப் ; போகும் பாதையின் சந்தியை வந்தடைந்தபோது சிவராசாவிடம் சொன்னான்.,’சரி நான் என்ர வீட்டுக்குப்போகவேணும்’ சிவராசா நடையைத் தொடர்ந்தான்.

சிவராசாவின் வீடு மாதவனின் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்திலிருக்கிறது.’சரி நேரமிருந்தால் வீட்ட ஒருதரம் வந்து பார்’ மாதவன் இருளில் நகரும் சிவராசாவைப் பார்த்துச் சொன்னான்.
தன் வழியிற் போக திரும்பிய சிவராசா மாதவனைப் பார்த்து,’ ஓ மாதவன் நான் உங்களிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தரவேணும்’ என்று சொல்லிய சிவராசா அவசரமாகத் திரும்பி வந்து ஒரு கனமான வெள்ளை என்வலப்பை மாதவனிடம் நீட்டினான்.

திடிரென்று சிவராசா நீட்டிய கனமான வெள்ளைக்கவரில் மாதவனின் பார்வை பதிந்திருந்தால் அவன் தனக்கு முன்னால் நிற்கும் சிவராசாவின் முகத்தை நேரடியாகப் பார்க்கவில்லை..
‘அய்யையோ என்ன இந்த நேரத்தில் கடனைப் பற்றிப் பேசுவதா’

மாதவன் தர்ம சங்கடத்துடன் தவித்தான்.

‘வாங்கிய கடனைத் திருப்பித்தர நேரகால நல்ல நேரம் பார்க்கவேணுமா?’ சிவராசா நீட்டிய பணத்தை வாங்க மாதவன் தயங்கியபோது, கொஞ்ச நேரத்திற்கு முன் மாதவனுக்கு நா வரண்டபோது தண்ணி எடுப்பதற்காக அவன் திறந்த அவனின் பிரயாணப் பையில் பணத்தைத் திணித்து விட்டு சிவராசா இருளில் மறைந்தான்.

வந்த வழியில் தற்செயலாக வந்து மாதவன் எப்போதோ கொடுத்த கடனைத் திருப்பித்தந்த சிவராசாவை போவதை மாதவன் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டு நின்றான்.சிவராசா வாழும் அடுத்த தெருவில் யாரோ அழும் குரல் கேட்டது.

கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு சிவராசா மூலம் நள்ளிரவில் வந்து கொடுத்ததா? கலாவின் திட்டுகளிலிருந்து தப்பிவிட்ட திருப்தி அவன் முகத்தில் புன்னகையாய் மலர்ந்தது.ஆனாலும் மாதவனிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காத மைத்துனரை நினைத்ததும் அவன் புன்னகை மறைந்து முகம் கடுகடுப்பாகியது.

வீட்டுக்குப் போனபோது அவன் மனைவி கலா தூக்கக் கலக்கத்தில் கண்களைக் கசக்கிக்கொண்டு கதவைத திறந்தாள். ‘அந்த தந்திரவாதி கிருஷ்ணனுடன் படும்பாடு போதும்’ மாதவன் மனைவிக்குச் சொல்லிக் கொண்டு அவன் கொண்டு வந்த பிரயாணப் பொதியை இறக்கி விட்டு பாத்றூம் போனான். மைத்துனர் கடனைத் திருப்பிக் கொடுக்காத கோபத்தில் கணவர் இருக்கிறார் என்று அவன் மனைவி கலாவுக்கு உடனே விளங்கியது. அவனுக்கு ஏதும் சாப்பிடக் கொடுக்கச் சமயலறைக்குள் சென்றாள்.

மாதவன் பாத்றூமிலிருந்து திரும்பி வந்தபோது அடுத்து தெருவிலிருந்து வந்த அழுகை கொஞ்சம் உரத்துக் கேட்டது. ஓலமாகக் கேட்கும் ஒப்பாரியிலிருந்து அடுத்த தெருவில் யாரோ இறந்து விட்டார்கள் போலிருக்கிறது என்று மாதவன் யோசித்தபடி வெளியே வந்த மாதவன்,’அடுத்த தெருவில் யாரும் இறந்து விட்டார்களா?’ என்ற கேட்டான்.

அவள் மாதவனுக்கு அவசரமாக ஏதோ சமைத்துக் கொண்டிருந்த கலா,அவனைப் பார்க்காமல் ‘அந்தப் கொடுமையை என்னட்டு வாய்விட்டுச் சொல்றது?’ என்ற பெருமூச்சுடன் சொன்னாள்.

உடுப்பு மாற்ற அறைக்குள்ச் சென்றவன்,,’ ஏன் என்ன நடந்தது?’ என்று கேட்டுக் கொண்டு, அவனின் மனைவி மைத்துனர் கிஷ்ணன் பற்றிய கதை எடுக்க முதல் சிவராசா தந்த பணத்தை அவள் கைகளிற் திணித்து சந்தோசப் படுத்த வேண்டும் என்று யோசித்தபோது,

‘உங்கட பிரண்ட் சிவராசா வெளிநாட்டில இருந்து நீங்க உங்கட தங்கச்சி குடும்பத்தப் பார்க்கப் புறப்பட்டுப்போன சொஞ்ச நேரத்தில எங்கட வீட்டுக்கு வந்தார்.நீங்க வசந்தி வீட்ட போனதை அவருக்குச் சொன்னன். ‘அப்படியா, என்ர அண்ணாவின்ர காரை வாங்கிக்கொண்டுபோய் வசந்தி வீட்டிலிருந்து மாதவனைக் கூட்டிக்கொண்டு வாறன்’ என்று போன அவருடைய கார்; சுடலைக்குப் பக்கத்தில ஒரு லாறியில மோதினதால அந்த இடத்திலேயே இறந்து போயிட்டார்.மூன்று நாளைக்கு முதல் செத்த பிணத்தைப் பாசோதனை செய்துவிட்டு இன்றுதான் குடும்பத்துக்குக் கொடுத்தார்கள்.இன்டைக்குப் பின்னேரம்தான் பிணத்தை எரிச்சினம்.அதுதான் அவரின்ர தாய் ஓயாது ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்கிறாள்’

சுடலைக்கருகில் சிவராசா கார் விபத்தில் இறந்து விட்டானா?

சுடலையடியில் வண்டி பழுதடைந்ததற்கும் வசந்தி வீட்டுக்கு வந்து கொண்டிருந்த சிவராசாவின் கார் அவ்விடத்தில் இறந்ததற்கும் ஏதும் தொடர்புண்டா? அமானுஷ்யத்தில் நம்பிக்கையுள்ள(?) அவன் மனம் கேள்வி கேட்டது. வசந்தியைப் பற்றி சிந்தித்துக் கொண்டு வந்து சிவராசா அடிபட்டானா அந்த இடத்தில்?

அப்படியென்றால் ஆலையடி மரத்தடியிலிருந்து அவனுடன் பேசிக் கொண்டு வந்தது யார்?

அவனுக்கு வெள்ளை என்வலப்பில் பணம் தந்தது யார்?

உடைகள் மாற்ற அறைக்குள்ச் சென்ற மாதவனுக்க அதிர்ச்சியில் வியர்க்கத் தொடங்கியது.உடம்பு நடுங்கியது.

மாதவன் வெளியில் வராமல் கொஞ்ச நேரம் அறைக்குள் நின்றபடி யோசித்தான். தன்னில் அன்பும் மதிப்புமுள்ள சிவராசாவின் ஆவி அவனுக்கு உதவி செய்ய வந்ததா?

அவன் வந்த வழியில் சிவராசாவைக் கண்டதாகவும் அவன் பணம் தந்ததாகவும் மனைவிக்குச் சொல்ல முடியாது.

‘மைத்துனருக்கத் தெரியாமல் வசந்தி பணம் தந்தாள் என்று கலாவுக்குச் சொன்னால் சரி’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சிவராசா? (ஆவி ) கொடுத்த பணத்தை எடுக்க அவனின் பிரயாணம் பையில் கைவிட்டான்.

அங்கு சிவராசா (?) தந்த கனமான வெள்ளை கவருமில்லை. பணமுமில்லை!

அவன் மனைவி வருவது தெரிந்தது. அவன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு அவளைப் பார்த்தான்.

அவளின் கையில் கனமான ஒரு வெள்ளை என்வலப்புடன் நின்றாள்.அது சிவராசா மாதவனுக்குக் கொடுத்த பணம்!

அவள் எப்போது மாதவனின் பிரயாணப் பொதியிலிருந்து பணத்தை எடுத்தாள்?

மாதவன் பாத்றும் போனபோது சமயலறைக்குள் போனவள் வெளியில் வரவில்லையே?

மாதவன் குழம்பிப் போனான். ‘வெளியூரால் வந்ததும் வராததுமாக உங்களிடம் வாங்கிய கடனைத் தர சிவராசா வந்திருந்தார். நீங்கள் கொடுத்தத விடக் கூடப்பணம் தந்திருக்கிறார் வட்டியோட தந்திருக்கிறார் என்ற நினைக்கிறன்’ கலா கணவனின் பேயடித்தமாதிரி அதிர்ச்சியான முகத்தைப் பார்க்காமல் மிக மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருந்தாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
சித்திரை 1985, இலங்கையின் கிழக்குக் கிராமம். சித்திரை மாதக் கொடும் வெயிலின் உக்கிரம் அதிகாலை என்பது மணிக்கே பிரதிபலித்தது. எங்கள் வீட்டுப் பெட்டைநாய் டெய்ஸி; தன் குட்டிகளுடன் வாழைமரத் தோட்டத்தில் நிழல் தேடியது.போனகிழமை,குஞ்சுகள் பொரித்த வெள்ளைக்கோழி,பல நிறங்கள் படைத்த தனது பத்துக் குஞ்சுகளுக்குக் ...
மேலும் கதையை படிக்க...
'புது உலகம் எமை நோக்கி பிரசுரம்'- ஆடி 99 லண்டன்-97. ஜனட் மிகவும் ஒய்யாரமாக அமர்ந்திருந்து,கண்ணாடியிற் தன் அழகை ரசித்தபடி சிவப்பு லிப்ஸ்டிக்கைத் தன் இதழ்களுக்குப் பூசிக் கொண்டிருந்தாள் அவளின் செய்கை அவளது காதலன் பீட்டருக்கு எரிச்சலைத் தந்தது. கொஞ்சக் காலமாக அவள் தன்னை அளவுக்கு ...
மேலும் கதையை படிக்க...
இலட்சுமியம்மா படலையடியில் நின்று கொண்டு தன் வீட்டைத் திரும்பிப்பார்த்தாள். அவளின் பெருமூச்சு காற்றுடன் கலந்தபோது அவளின் கண்கள் வெள்ளமாய் நிரம்பின. 'இது என்வீடு,நான் பிறந்த வீடு,இனிய நினைவுகளுடனும்,உணர்வுகளுடனும் நான் வளர்ந்த வீடு, இந்த வீட்டை விட்டு எப்படிப்போவேன்?' இப்படி எத்தனையோதரம் தன்னைத்தானே கேட்டுவிட்டாள் இலட்சுமியம்மா. அவளுக்கு இப்போது ...
மேலும் கதையை படிக்க...
லண்டன் 1999 'ஏப்ரல்மாதத்திலும் இப்படி ஒரு குளிரா?'ஜெனிபர்,அந்தப் பஸ்சின் கொண்டக்டர்,மேற்கண்டவாறு முணுமுணுத்துக்கொண்டு பஸ்சில் ஏறிய ஒரு முதிய ஆங்கிலப் பெண்ணுக்குக் கைகொடுத்து அவள் பஸ்சில் ஏற உதவி செய்தாள். அந்த ஆங்கிலேய மூதாட்டி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள்,அவளுக்கு எழுபது வயதாகவிருக்கலாம். சுருக்கம் விழுந்த முகத்தோற்றம். ...
மேலும் கதையை படிக்க...
சிவா தனது மனைவி கலாவின் சின்னம்மா தேவராணியை அன்று பினனேரம் சென்று பார்ப்பதாக முடிவு கட்டிய விடயம் அவனது நண்பன் ஒருத்தனின் எதிர்பாராத வருகையால் தடைபட்டுக் கொண்டிருக்கிறது. வந்திருந்த நண்பனுக்குத் தேனீர் கொண்டு வந்த கலாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைச் சிவா ...
மேலும் கதையை படிக்க...
வானத்திற்கும் பூமிக்கும் என்ன சண்டையாம்? விடிந்த நேரத்திலிருந்து பூமித்தாயை நனைத்துக்கொட்டும் வருணபகவானுக்குத் துணைசெய்ய வாயுபகவானும் இணைந்து விட்டார். பெரும்காற்றடித்து,அடைமழைபெய்து லண்டன் தெருக்கள் இயற்கையின் தாண்டவத்தில் அல்லோல கல்லோப்பட்டுக்கொண்டிருந்தது. நடந்துசெல்வோர் பிடித்திருக்கும் குடையைச் சட்டை செய்யாமல் மழை அவர்களை நனைத்துத் தளளுவதையும் பொறுத்துக்கொண்டு அவர்கள் தங்கள் விடயங்களைப் ...
மேலும் கதையை படிக்க...
மூர்த்தி அவசரமாக வேலைக்குப் புறப்படுகிறான். அவனுக்குத் தேவையான மதியச் சாப்பாட்டை அவன் மனைவி லலிதா கட்டிக்கொண்டிருக்கிறாள். அவனுக்குப் பிடித்த சாப்பாடுகளைச் செய்து கொடுப்பதில் அவள் முக்கிய கவனம் எடுக்கிறாள். அவர்களின் குழந்தை அகிலா, தனது தாய் தகப்பனின் ஆரவாரத்தால் குழம்பாமல் அயர்ந்த நித்திரையிலிருக்கிறாள். ...
மேலும் கதையை படிக்க...
லண்டன்-11.9.19 துளசி என்னும் மனநல வைத்தியர்,மகாதேவன் என்னும் மனித உரிமை வழக்கறிஞர்; என்பவர்களின்;; மேன்மை மிகு தந்தையும், கலிகாலக் கடவுளாகிய ஸ்கந்தனின் அருளில் அதி மிக பக்தியுள்ள தாட்சாயணியின் கணவருமான திருவாளர் சுந்தரலிங்கம் கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வாகவிருக்கிறார்.அவருக்கு உடல்நலம்; சரியாக ...
மேலும் கதையை படிக்க...
லண்டனிலிருந்து விமானம் புறப்படக் கொஞ்ச நேரம் இருக்கும்போதுதான் அவள் வந்தாள். தனது கையில் போர்டிங்கார்ட்டை வைத்துக்கொண்டு,தான் இருக்கவேண்டிய இடத்தைத் தேடினாள். அவசரப் பட்டு வந்ததால் அவளது சுவாசம் அதிகமாகவிருந்தது. நீல நிறத்தில் சிவப்புக் கரை போட்ட ஷிபோன் சேலை அவள் உடலைத் ...
மேலும் கதையை படிக்க...
(வாசர்களின் கவனத்திற்கு, கதையில் சில பகுதிகள் 18+ வயதிற்கு மேற்பட்டவர்க்கு மட்டுமே) பாவம் அந்த மாடு! சூடு தாங்காமல் அலறிக்கொண்டிருக்கிறது.அதன் கால்களைக் கட்டி,மாடு அசையமுடியாமற் பண்ணியிருக்கிறார்களா? அல்லது,கழுத்தில் கயிறு மாட்டி,மரத்துடன் பிணைத்திருக்கிறார்களா? அந்த மாட்டுக்குச் சொந்தக்காரர்,தன் உரிமையின் பிரதிபலிப்பை நிலை நாட்ட வாயில்லாப் பிராணிக்குக் குறி ...
மேலும் கதையை படிக்க...
ரவுண்ட் அப்
எய்தவர் யார்
‘என் வீடும் தாய்மண்ணும்
பயணிகள்
சின்னம்மாவின் ‘அவர்’
இயேசுவுக்கு போலிஸ் காவல்
இப்படியும் கப்பங்கள்
மாக் டொனால்டின் மகன்
அப்பாவின் சினேகிதி
முதலிரவுக்கு அடுத்தநாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)