கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 6,394 
 

தேதி19 – வெள்ளி. சென்னை

வாட்ஸ்அப் வீடியோ அழைத்தது. விடாமல் இசைத்த அதன் ஒலி சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அவனுடைய தூக்கத்தைக் கலைத்தது. இருட்டில் தடவி மேசை விளக்கைத் தட்டியதும் அறையில் ஒளி பரவியது. கைப்பேசியைப் பார்த்தான். அஞ்சுவிடமிருந்து அழைப்பு.

“தூங்கிட்டு இருக்கேனே, படுக்கறதுக்கு முன்னாடிதானே பேசினேன். என்ன அவசரம்?”

“இருக்கு. உன் தூக்கத்தை ஒட்டுமொத்தமாகத் தொலைக்கப்போறே.”

வலி நிவாரணத்திற்குச் சாப்பிட்ட மாத்திரையின் போதையும் விண்பயணத்தின் களைப்பும் கலந்து கசங்கிக் கிடந்தவனின் மனத்தினுள் மெல்லிய அச்சம் தோன்றி வயிற்றில் சர்ப்பம் ஊர்ந்தது. ஏதும் விபரீதமோ?

“ஷாக்கிங் நியூஸா? ஆக்ஸிடெண்ட்டா?” கலவரத்துடன் கேட்டான்.

“நோ. இது சர்ப்ரைஸ்” என்று ஒரு கையால் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தவளின் முகம் முழுவதும் பிரகாசம். அத்தகு மகிழ்ச்சியை அவள் முதன்முதல் தாய்மை அடைந்தபோது பார்த்திருக்கிறான். இது அடுத்ததோ?

“பிரெக்னெண்டா?”

“ஷட்டப். தலை நரைத்த வயசுல ஆசையைப் பாரு. இது வேற.”

சிறு ஆசுவாசத்துடன், “சரி சொல்லு” என்றான்.
சிறுகதை: புவிராஜசிங்கி

“கட்டிலை கெட்டியாகப் பிடிச்சுக்கோ, விழுந்துடுவே.”

“அம்மணியே! உனக்கு நண்பகல். எனக்கு நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அரைத் தூக்கம் சஸ்பென்ஸை ரசிப்பதற்கு ஒவ்வாத விஷயம். அதுவும் நான் மருந்தின் போதையில் இருக்கிறேன். சீக்கிரம் விஷயத்தைச் சொல்லு.”

“ஓக்கே. கூரியர் ஒன்று வந்தது. ஹாங்காங்கி லிருந்து ஒரு பப்ளிஷிங் கம்பெனி. உன்னுடைய புத்தகங்களையெல்லாம் உலகம் முழுக்கச் சந்தைப்படுத்த ஒப்பந்த ஆப்பர். அதுவும் ‘கரன்ஸி பிறந்த கதை’ ஆங்கிலத்திலும் இந்தியாவின் பல மொழிகளில் மொழிபெயர்த்தே ஆக வேண்டிய நூல் என்று ஏகப்பட்ட பாராட்டு. அவர்கள் அளிக்க விரும்பும் ராயல்ட்டி தொகையை நீ கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது.”

மூச்சுவிடாமல் அவள் படபடவென்று பகிர்ந்த தகவலை உள்வாங்கி, புத்தியில் ஏற்றிக்கொள்ள அவனுக்கு ஐம்பது நொடிகள் தேவைப்பட்டன.

“என்ன பேச்சைக் காணோம். அப்படிப் பார்க்கிறே?”

“நீ என்னிடம் உன்னுடைய கனவில் பேத்துகிறாயா? இல்லை இது என்னுடைய கனவா?” தொடையில் சொறிந்துகொண்டான்.

“கம் ஆன். உன் ஜெட்லேக்கை நாளைக்குச் சுமந்துக்கோ. இப்போ இந்த சர்ப்ரைஸ் நியூஸை மட்டும் உள்வாங்கு. அந்தக் காகிதங்களை ஸ்கேன் செய்து அனுப்புகிறேன். காலையில் முகத்தைக் கழுவியபின் படித்துப்பார்.”

“ம்ம்ம்…” என்றவன், அவசரமாக, “பப்ளிஷிங் கம்பெனி ஹாங்காங் என்றா சொன்னாய்? யார் கையெழுத்திட்டு அனுப்பியிருக்கிறார்கள்?”

“என்னவோ சிங்கி என்று இருந்தது. வெய்ட் எ மினிட்” பேப்பரைப் பார்த்துவிட்டு, “புவிராஜசிங்கி” என்றாள்.

“ஆ! இதென்ன புதுக்கதை” அலறினான்.

தேதி 17 – புதன். துபை

காபி வாங்க வரிசையில் நிற்கும்போதே நாலைந்து நபர்களுக்குப் பின் நின்றுகொண்டிருந்த முரட்டு மீசைக்காரர் தன்னையே கூர்ந்து பார்ப்பதை சந்தனக்கலை கவனித்தான். துளைக்கும் பார்வை. இப்பொழுது ஓர் ஓரமாக மேசையைத் தேர்ந்தெடுத்து, வலிக்கும் தாடையை ஒரு கையால் தாங்கி ஆசுவாசப்படுத்தியபடி மறுகையால் போனில் மனைவிக்கு டெக்ஸ்ட் அனுப்பிவிட்டு, கோப்பையிலிருந்த காபியை வாய் அதிராமல் இதமாக உறிஞ்சியபோது, எதிரே சில மேசைகள் தள்ளி மீண்டும் அந்த மீசை மனிதன். அதே முறைப்பான பார்வை.

அவருடைய தோற்றத்தைப் பார்த்தால் தமிழர் போல் இருந்தது. வயது ஐம்பது இருக்கலாம். ரேபான் ப்ரேம் கண்ணாடி, முன் வழுக்கை. ஆனால் பார்த்ததும் மனத்தில் பதிந்தது வீரப்பனை நினைவுறுத்தும் அந்த மீசைதான். தன் போனைப் பார்த்துவிட்டு மீண்டும் கண்ணை மட்டும் உயர்த்தி இவனைப் பார்த்தார்.

ஒருவேளை ரசிகரோ? அந்த எண்ணம் ஏற்படுத்திய மகிழ்ச்சியைத் தொடர் எண்ணங்கள் முறித்தன. இதுநாள் வரை பொதுவெளியில் அவனை அடையாளம் கண்டு ஆட்டோகிராப், செல்பி என்று சூழ்ந்தவர்களின் எண்ணிக்கை பூஜ்யம். தவிர ரசிகரின் பார்வை இப்படி விரோதத்தனமாகவா இருக்கும்? ஒருவேளை உளவாளியோ?

தான் இதுவரை எழுதியதை, சமூக ஊடகங்களில் பதிவிட்டதை எல்லாம் கிடுகிடுவென்று ஒருமுறை மனத்தில் ஓட்டிப்பார்த்தான். எல்லாம் அக்கப்போருக்கு அஞ்சிய சமர்த்து வகையறா எழுத்துகள். வேறு என்ன செய்திருப்பேன்?

யோசிக்க யோசிக்க அறிவுப் பற்களை இழந்த தாடை வலித்தது. மணியைப் பார்த்தான். மாத்திரை போட்டுக்கொள்ளும் நேரம்தான். குப்பியைத் திறந்து ஒன்றை எடுத்து மடக்கென்று காபியுடன் முழுங்கினான்.

“வலி இரண்டு, மூன்று நாள்கள் இருக்கும். அச்சமயத்தில் மட்டும் இந்த மாத்திரையைச் சாப்பிடுங்கள். ஓய்வெடுங்கள்” என்று சொல்லியிருந்தார் பல் மருத்துவர்.

அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் விடுப்புத் தகவலை அனுப்பிவிட்டு, பகல் முழுவதும் தூங்கினான். மனைவி தந்த சூப்பை உறிஞ்சிவிட்டு இரவும் தூக்கத்தைத் தொடர்ந்தபோது அகால நேரத்தில் சென்னையிலிருந்து அம்மா பேசினாள்.

“அப்பா மீண்டும் நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னார். இந்த முறை அட்மிட் செய்யச் சொல்லிவிட்டார்கள். எதுவும் சீரியஸ் இல்லை என்றுதான் டாக்டர் சொல்கிறார். அப்பாதான் உன்னை உடனே பார்க்க வேண்டும் என்கிறார். லீவு கிடைக்குமா கலை?”

சென்னை சென்று வந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இம்முறை செல்வதாகத்தான் திட்டம். முடிக்க வேண்டிய புராஜெக்ட் பயணத் தேதியை முடிவு செய்ய விடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. அவனுக்கும் அப்பாவின் நினைவாகவே இருந்தது. அவ்வப்போது நெஞ்சு வலிப்பதாகச் சொல்கிறார் என்பாள் அம்மா. அவர் இவனிடம் தமது உடல் குறையைச் சொன்னதே இல்லை. “எனக்கென்னப்பா, நல்லா இருக்கேன்” என்று சிரிப்பார்.

“உடனே வர்றேன்மா” என்று சொல்லிவிட்டான்.

மனைவி கேட்டாள், “உடனே எப்படிங்க? சத்யன் ஸ்கூல்?” ஒரே மகன் சத்யன் பத்தாம் வகுப்பில் இருந்தான்.

“மனசு சரியில்லை. நாளைக்கே கிளம்புகிறேன். இப்போ போட்டிருக்கிற லீவை இரண்டு வாரமா மாத்திக்கிட்டு அப்பாவைப் பார்த்துட்டு வந்துவிடுகிறேன். சத்யனுக்கு அடுத்த மாசம் வெகேஷன் ஆரம்பித்தபின் நீங்கள் இருவரும் போய் இரண்டு மாசம் இருந்துவிட்டு வாருங்கள்.”

“பல்லு எடுத்து முழுசா ஒருநாள்கூட ஆகலியே. தொந்தரவு கொடுத்தால்?”

“பெயின் கில்லர் கொடுத்தி ருக்கிறார். மற்றபடி ஓய்வும் உப்புத் தண்ணீர் கொப்பளிப்பும். அதை அப்பாவுக்குப் பக்கத்தில் இருந்தபடி பார்த்துக்கலாம்.”
சிறுகதை: புவிராஜசிங்கி

பாசம். அப்பாவின்மீது அப்படிப்பட்ட பாசம். நாட்டு மருந்துக் கடைகளுக்குச் சந்தனம், ஜவ்வாது, நறுமணப் பொருள்கள் விநியோகிக்கும் தொழில் அவருக்கு. அவனும் ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறந்த அவன் தங்கையும் வாரிசுகள். சொற்ப வருமானத்தில் மகனையும் மகளையும் சிறப்பாகப் படிக்க வைத்தார். அவளுக்குச் சென்னையிலேயே வரன் பார்த்துத் திருமணத்தை முடித்து வைத்தார். மேற்படிப்புக்கு மகனை விமானமேற்றினார். அமெரிக்கா வந்த சந்தனக்கலை அங்கேயே உத்தியோகத்தையும் தேடிக் கொண்டு விடுப்பில் சென்னை திரும்பியபோது, உறவுப் பெண் அஞ்சுவை அவனுக்குக் கட்டி வைத்து, ‘எங்கிருந்தாலும் நன்றாக இரு’ என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

“எங்களோடு வந்து விடுங் களேன். கிரீன் கார்டு எடுத்துத் தருகிறேன்” என்று பெற்றோரிடம் கெஞ்சினான்.

“சந்தன மணத்தையும் இந்த மண் மணத்தையும் விட்டுட்டு வர முடியாது கலை. நாங்க இருக்கிறவரை வந்துட்டுப் போ. பார்த்து சந்தோஷப்பட்டுக் கிறேன்” அப்பாவின் பேச்சு உறுதியாக இருந்தது.

ஆண்டிற்கு ஒருமுறை குடும்பத்துடன் சென்னை வந்துவிடுவார்கள். இம்முறைதான் இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. உறுத்திக்கொண்டே இருந்தது. அதற்குள் இப்படி ஒரு தகவல். மேனேஜருக்கு விவரமாகவும் தனது டீமிற்குச் சுருக்கமாகவும் மின்னஞ்சல் அனுப்பிவிட்டு செவ்வாய் மாலை எமிரேட்ஸ் விமானத்தில் கிளம்பிவிட்டான்.

கலிபோர்னியாவில் உள்ள மென்பொருள் நிறுவனமொன்றில் டேட்டா சயின்டிஸ்டாகக் கணினிகளுடன் மல்லாடும் அவனுக்கு ஓய்வு நேரப் பொழுதுபோக்கு எழுத்து. சில கதைகளும் கவிதைகளும் குமுதம், விகடன் என்று பிரசுரமானதும் பெரும் உற்சாகமாகி, சந்தனக்கலையைச் சுருக்கி சகலை ஆக்கி, ஆறு நாவல்கள் எழுதி, சென்னையில் ஒரு பிரசுரத்தைப் பிடித்து வெளியிட்டு சாதித்ததற்கு, பணத்திற்குப் பதிலாக எழுத்தாளன் என்ற பட்டம் கிடைத்தது. ஒரு நாவலுக்கு வார இதழ் ஒன்றில் வெளியான பாராட்டு விமர்சனம் மட்டும் உப சலுகை.

துபை வந்து இறங்கியபோது புதன்கிழமை மாலை ஆகிவிட்டது. சென்னை விமானத்திற்கு ஏழு மணி நேரம் இருந்தது. பல நாட்டுப் பயணிகள் பரபரப்புடன் நடமாடியபடி இருந்த விமான நிலைய உள் அரங்கில் ஷாப்பிங் மால்போல் விரிந்திருந்த கடைகளைப் பராக்குப் பார்த்தபடி நடந்தான். கோஸ்டா காபி அரங்கைக் கண்டதும் வரிசையில் நின்றுவிட்டான். அங்குதான் அந்த மீசைக்காரர் பார்வையில் சிக்கினான்.

அவனையே பார்த்தபடி அம்ர்ந்திருந்த அவர் இருக்கையிலிருந்து எழுந்து, சக்கரம் பொருந்திய சூட்கேசை நாய்க்குட்டி போல் இழுத்துக்கொண்டு அவனை நோக்கி வந்தார். சந்தனக்கலை அதை எதிர்பார்க்கவில்லை. என்ன கேட்கப்போகிறார், என்ன பதில் பேசுவது என்று யோசித்து முடிப்பதற்குள், அவனை நெருங்கி, “நீங்கள் சகலைதானே?” என்றார்.

“ஆமாம். நீங்கள்…?” என்று திகைத்தவனிடம், “நினைத்தேன். உங்களை ஃபேஸ்புக் ப்ரொபைல் போட்டோவில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம். அதான் யோசித்துக்கொண்டே இருந்தேன்” என்று வாய்விட்டுச் சிரித்தார்.

‘சிந்தனையின்போது உங்களது முகம் ஏன் முன் விரோதப் பார்வைக்கு மாறுகிறது’ என்று மனத்தில் தோன்றியதைக் கேட்காமல், “அது என் காலேஜ் காலத்து போட்டோ” என்றான்.

“நாக்கை அசைக்காமல் பேசுகிறீர்கள். காபி சுட்டு விட்டதா?”

“இரண்டு நாளைக்கு முன் இரண்டு விஸ்டம் டூத் நீக்கம். வாயை முழுதாகத் திறக்க முடியவில்லை. இன்னும் வலி இருக்கு.”

“அதற்குள் பயணமா?”

“ஒரு எமர்ஜென்சி.”

“இல்லை சார். என் அதிர்ஷ்டம். நான் உங்கள் எழுத்தின் தீவிர ரசிகன். உங்களது பிளாக், பிரசுரமான ஆக்கங்கள், எந்த எழுத்தையும் விட்டதில்லை. தேடித் தேடிப் படித்துவிடுவேன். நீங்கள் குடத்தில் இருக்கும் விளக்கு சார்”

நரம்பு மண்டலங்களில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் ஓட ஆரம்பிப்பதை உணர்ந்தான். முன் அறிமுகமில்லாத அந்நியர் அவனது எழுத்தை முகத்திற்கு நேராகப் பாராட்டுவது அவனுக்குப் புதுசு. உணர்ச்சியை மறைக்க காபிக் கோப்பையை வாயருகே உயர்த்திப் பிடித்து, யதார்த்தமாக இருக்க முயற்சி செய்தான்.

“உங்களுடைய ஒவ்வொரு நாவலும் ஜெம் சார். எனக்கு ஜெம் பிஸினஸ். துபையிலும் ஹாங்காங்கிலும் விற்பனை நிலையம் வைத்திருக்கிறேன். இங்கும் அங்கும் பறந்தபடி இருந்தாலும் வாசிப்பை விடுவதில்லை. பயணத்திலே படித்துவிடுவேன்.”

“என்னுடைய ஆறு நாவலையுமா?”

“கரன்ஸி பிறந்த கதை – பொருளாதார சப்ஜெக்ட்டை என்னமா ஒரு திரில்லர் நாவல் போல் ஆக்கியிருந்தீர்கள். மூன்று முறை வாசித்துவிட்டேன். படத்தை டப் செய்து வெளியிடுவதைப்போல் அதை ஆங்கிலத்திலும் பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிடணும் சார். நீங்கள் கொண்டாடப்பட வேண்டியவர். பத்திரிகைகளும் வாசகர்களும் உங்களைச் சரியாகக் கவனிக்கல.”

“உங்க அபிமானம் புரியுது. ஆனாலும் மொழியாக்கம் செய்யும் அளவிற்கு இருக்கு என்பது…”

“ஐயோ… நான் சத்தியமாகத்தான் சொல்றேன். உங்க வொர்த் உங்களுக்கே தெரியவில்லை.”

“உங்கள் பீடுபேக் எனக்கு ஏகப்பட்ட உற்சாகத்தைத் தருது. இதற்காகவாவது உருப்படியாக ஒரு நாவல் எழுதி வெளியிட வேண்டும்.”

“சந்தோஷம். நானே வெளியிடுகிறேன். இதுவரை அச்சானதையும் ரீப்ரின்ட் செய்கிறேன். என்ன பிரசுரம் சார் அது? உங்க புத்தகத்தின் ரேப்பர், பேப்பர் எல்லாமே அப்படி ஒரு மட்ட குவாலிட்டியில் போட்டிருக்கிறான். பாரீன் புக்ஸ் குவாலிட்டியில் நான் எல்லாத்தையும் ரீப்ரின்ட் செய்கிறேன்.”

“நீங்க பப்ளிஷிங் பிஸினஸும் பண்றீங்களா?”

“ஆரம்பிக்கிறேன். உங்களுக்காகவே ஆரம்பிக்கிறேன். செய்ய வேண்டும். குடத்தில் இருக்கும் ஜோதியை வெளி உலகுக்குக் காண்பிக்க வேண்டும். தமிழ் உலகுக்கு ஆற்ற வேண்டிய கடமையாக இதை நினைக்கிறேன்.”

அவரது புகழுரைகளும் ஆர்வமும் பேச்சும் அவனுக்கு நம்ப முடியவில்லை. குடித்திருப்பாரோ?

சட்டென்று எழுந்து, “சார், என் பெட்டியைப் பார்த்துக்குங்க. ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்துடறேன்” என்று அவர் அருகில் குனிந்தான், பர்ப்யூம் மணம் துளைத்தது. சுவாசத்தை இழுத்து விட்டு “என்ன பெயர்?” என்றான்.

“புவிராஜசிங்கி”

“அப்படி ஒரு பர்ப்யூமா?”

“ஹா ஹாஹ் ஹா. நான் என் பெயரைச் சொன்னேன். அது க்ரீட் அவென்டஸ்.”

“புவிராஜசிங்கி. பெயர் வித்தியாசமா இருக்கு. நீங்க இலங்கையா?”

“இல்லை. எனக்கு மாயவரத்துக்குப் பக்கம்.”
சிறுகதை: புவிராஜசிங்கி

“அடுத்த நாவலுக்கு உங்கள் பெயரையே வைத்துவிடலாம்.”

சிரித்துவிட்டு ரெஸ்ட்ரூமிற்குள் புகுந்தான். கண்ணாடியின் எதிரே நின்று ஐந்தாறு முறை இழுத்து மூச்சு விட்டான். பக்கத்து வாஷ்பேஸினில் கையைக் கழுவிக்கொண்டிருந்த ஐரோப்பியன், “யெஸ்! பயணம் ஸ்ட்ரெஸ். இந்தப் பயிற்சி உதவும்” என்று உடைந்த ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு நகர்ந்தான்

உலகின் ஒரு மூலையில் எனக்கு இப்படியொரு ரசிகரா? இவரது அறிமுகம் ஏற்பட வேண்டும் என்ற விதிதான் அறிவுப்பல், அப்பாவின் நெஞ்சு வலி என்று சோதனையோ? ஏதோ ஒரு மாற்றம் காத்திருக்கிறது சந்தனக்கலை. முகத்தைக் கழுவி, நிதானப்படுத்திக் கொண்டு வெளியே வந்து, இருக்கையை நெருங்கினால் மீசைக்காரரைக் காணவில்லை.

“ஐயோ! என் பெட்டி” என்று ஓடினான். வைத்த இடத்தில் அது பத்திரமாக இருந்தது. மேசையில் இவனது கோப்பை மட்டும் இருந்தது. அவரது கோப்பையும் இல்லை. ஆளும் இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தான்.

“மிஸ்டர் புவிராஜசிங்கி” என்று அழைத்தான்.

அடுத்த மேசையில் இருந்த வெள்ளைக்கார யுவனும் யுவதியும் போன் திரையிலிருந்து கணகளை விலக்கி இவனைப் பார்த்தனர்.

“இங்கே ஒருவர் அமர்ந்திருந்தாரே, அவர் எங்கு சென்றார் என்று பார்த்தீர்களா? பெரிய மீசை” பாவனையில் மீசையை முறுக்கிக் கேட்டான்.

“அப்படி யாரையும் பார்க்கவில்லை” என்றான் யுவன்.

“நறுமணத்துடன் இருந்தார். நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார். இந்தப் பெட்டியைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு பாத்ரூம் போய் வருவதற்குள் அவரைக் காணவில்லை.”

“நீங்கள் என்னிடம்தானே பெட்டியைப் பார்த்துக்கொள்ளச் சொன்னீர்கள்” ஆச்சர்யமாகப் புருவத்தை உயர்த்தினாள் யுவதி.

அவளது முகத்தில் தேடினான். மீசைக்கான அடையாளமே இல்லை. “உங்களிடமா?”

புருவத்தைச் சுருக்கி, “ஆமாம்” என்றாள்.

சந்தனக்கலை அதிர்ந்தான். “இதென்ன புதுக் கதை.”

தேதி 12 – வெள்ளி. கலிபோர்னியா

“வலிக்குமா டாக்டர்?”

“வலிக்கும். வலிக்காமல் இருக்க ஊசி போட்டு விடுவேன்.”

“இதைப் பிடுங்கிட்டா என் ஞானமும் போய்விடுமா? எனக்குக் கதை எழுதும் பழக்கம் இருக்கு. அதற்குக் கொஞ்சம் புத்தி வேணும்.”

முகமூடிக்குப் பின்னால் சிரித்தபடி அவன் தோளைத்தட்டி, “யூ ஆர் ஃபன்னி” என்றார் டாக்டர்.

ஆண்டிற்கு இருமுறை வழக்கமாக நடக்கும் பற்கள் சுத்திகரிப்புக்காகச் சென்றிருந்தான். மருத்துவக் காப்பீடு அதை இலவசமாக்கியிருந்தது. நாளொன்றுக்கு இருமுறை பல் விளக்குவான். வெற்றிலை, சிகரெட் பழக்கம் கிடையாது. என்ற போதும் இந்த முற்படு பல் மருத்துவச் சேவையை சந்தனக்கலை தவறவிடுவதில்லை. இரண்டு காரணம் இருந்தது.

வாயில் புற்று போன்ற பிரச்னை உருவாகும் என்றால் அதை மருத்துவர் முற்கூட்டியே கண்டுபிடித்துவிடுவார் என்று அச்சுறுத்தி எச்சரித்திருந்தது பல் மருத்துவக் காப்பீடு. அடுத்தது, படுக்கையாய்ச் சரியும் இருக்கையில் அமர்த்தி, பல்லிடுக்குகளில் உள்ள துகள்களை மெழுகு நூலால் நீக்கி சுத்தம் செய்து, அழுக்குகளைச் சுரண்டி எடுத்து, பல்லைத் துலக்கி விட்டு, பாலிஷ் போட்டு அவர்கள் செய்துவிடும் ராஜ உபசரிப்பு.

இரண்டாண்டிற்கு ஒருமுறை மருத்துவர் எக்ஸ்ரேயும் எடுத்து, இருக்கையின் தலைக்குமேல் இருக்கும் திரையில் கறுப்பு வெள்ளையில் பல் வரிசையைக் காட்டுவார். சுமாராகப் புரியும். ஓரிருமுறை பல்லில் சொத்தை கண்டுபிடிக்கப்பட்டு, அடைக்கப்பட்டது. மற்றபடி பெரிய பிரச்னை இருந்ததில்லை. கடைவாயின் இறுதியில் உள்ள அறிவுப்பற்கள் கோணலாக உள்ளது என்று மட்டும் ஒவ்வொரு முறையும் தெரிவிப்பார். இம்முறை அதுதான் முக்கிய விஷயமாகிவிட்டது.

“மிஸ்டர் சந்தன். கீழ் வரிசையில் கோணலாகப் படுத்துள்ள அதன் இடுக்கில் உணவுத் துகள் சேர்ந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது. விரைவில் வேறு உபாதைகள் ஏற்படும். அதனால் அவற்றை நீக்கி விட வேண்டும்.”

முளைத்த நாளாய் சமர்த்தாய் இருந்த அறிவுப் பற்களை இழப்பதைவிட அந்த வைத்திய முறையை நினைத்துத்தான் அவனுக்குச் சங்கடமும் சிறு அச்சமும் ஏற்பட்டன. நிறைய பதில் அளித்து, தேற்றினார்.

சமாதானமாகி, “எப்பொழுது செய்யவேண்டும்?” என்று கேட்டான்.

“ஓரிரு நாள் அலுவலுக்கு விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு வசதிப்படும் என்றால் திங்கள் 15ஆம் தேதி ஓப்பனிங் இருக்கு.”

திறன்பேசியில் அடுத்த வாரத்தின் அலுவலக மீட்டிங்குகளைக் கவனித்துவிட்டு சரி என்றான்.

“விடுப்பு எடுத்தே ஆக வேண்டுமா?”

“இது மேஜர் சர்ஜரி இல்லைதான். என்றாலும் முற்றிய உங்களது அறிவை நீக்குவது எளிய வைத்தியமில்லையே” சிரித்தார் டாக்டர்.

“நவ் யூ ஆர் ஃபன்னி டாக்டர்”

“ஓரிருநாள் வலி இருக்கும். ஆக்ஸிகோடான் தருவேன். நர்காட்டிக்ஸ். அதனால் நோ டிரைவிங்.”

“ஹா! வேறு ஏதும் சைடு எபெக்ட்ஸ் இருக்காதே?”

“வெகு சிலருக்கு தற்காலிக ஹாலிஸுனேஷன் இருக்கலாம். கற்பனை. மாயக்காட்சி.”

“எனக்கு வேறு தோன்றினால் சரி.”

“என்ன?”

“நல்ல கதை.”

– டிசம்பர் 2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *