கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 15,600 
 

காலை வெயிலின் கடுமையை குறைத்துக் கொள்ள வீட்டு முற்றத்திலிருந்த மாமரத்து நிழலில் அடைக்கலமாகி, அன்றைய தினசரியை படித்துக் கொண்டிருந்தார் சங்கரன். பெட்ரோல் விலை ஏற்றம், தங்கம் விலையில் இறக்கம் இப்படி பல பல சூடான செய்திகளுக்கு நடுவில் ”இந்தாங்க காபி” ஆவி பறக்க கோப்பையை நீட்டிய விசாலம்,

”என்னங்க இது என்ன மாசம்”

”அக்டோபர்”

”ஞாபகம் இருக்கா”

”காலையிலயே உம் புராணத்த ஆரம்பிச்சிட்டயா சொல்லித் தொலை”

”இந்த கோபம் உங்கள விட்டுப் போகாதா”

’வயசான காலத்துல கோபத்தக் கொறடா. இந்தக் கோபம் மனசையும் உடம்பையும் கெடுத்துருண்டா. இந்த உடம்பு இப்படியே இருக்காது. அது எப்ப படுக்கும்னு நமக்கே தெரியாது. அப்ப உன்ன பார்க்கிறது விசாலம் மட்டுந்தான். நீ வேலையில இருக்கும்போதுதான் அத காரணங்காட்டி வாழ்நாள் முழுக்க அவள சந்தோசமா வச்சுக்கல. இனிமேலாவது அவள சந்தோசமா வச்சுக்கடா. பாவண்டா அந்தப் பொண்ணு.’

இரண்டு நாட்களுக்கு முன் நண்பன் சிவராமன் சொன்ன வார்த்தைகளின் வீரியமும், ’நீ குடுத்துவச்சவண்டா. விசாலம் மனைவியா கிடைசதுக்கு’ உறவுகளும் நட்புகளும் அடிக்கடி சொன்னதை நினைத்த சங்கரன் முகம் முழுக்க சிரிப்புடன்,

”சொல்லு விசாலம்”

”இது வரையில நானு கோபத்தக் காட்டல. இனிமே நீங்களும் அத பாக்கணும்னா அதுக்கும் தயாராத்தான் இருக்கேன். என்ன சொல்றீங்க.

முகத்தில் அசடு வழிய ”சரி குறைச்சுக்கிறேன்.”

”விட்டுர்றேன்னு வருதா பாரு வாயிலயிருந்து.”

”சரி விட்டுர்றேன்.”

”இந்த வார்த்தைய தாமிரபரணி தண்ணியில எழுதுறதா இல்ல உங்க மனசுலயா?”

”மனசுலதான்”

”நம்பலாமா?”

”நம்பலாம், இப்ப நீ சொல்லவந்தத சொல்லு”

”இது முப்பந்தஞ்சாவது வருசம். அதுவாவது ஞாபகம் இருக்கா?”

’கல்யாண நாள ஞாபகம் வச்சுக்காதவன்லாம் மனுசனே இல்ல” சிவராமன் திட்டியது ஞாபகம் வர ”கண்ணன் ஒரு கைக்குழந்தை” என ஒலித்த கைபேசியில் ”சங்கரா கல்யாணநாள் வாழ்த்துக்கள்” சாட்சாத் சிவராமனின் குரல். ஒவ்வோர் ஆண்டும் தவறாது வரும் முதல் வாழ்த்து அவனிடமிருந்துதான்.

”நன்றிப்பா” .

”அடுத்த வாரம் சென்னை வரும்போது உன்ன பாக்கிறேன்டா”

சிவராமன் நண்பனாகக் கிடைத்தது அவர் செய்த பாக்கியம். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவனது ஆலோசனைதான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியதென்றால் அது மிகையில்லை.

”அண்ணனா போன்ல”

”ஆமா. அடுத்த வாரம் வர்றானாம். என்ன மன்னிச்சுடு விசாலம்”

”எதுக்கு”

”ஒவ்வொரு வருசமும் நீயும் சிவராமனும் சொல்லி நினைவுக்கு வர்த நினைச்சா எனக்கே வெக்கமா இருக்கு.”

”இதுநாள் வரைக்கும் இத பெருசா எடுத்துக்கல. இதுக்காக நானு வருத்தமோ கோபமோ பட்டதுமில்ல. ஆனா இனிமே கண்டிப்பா கோபப்படுவேன். ஏன் தெரியுமா? இதுவரையில வேலயையும் வேலைப்பளுவையும் காரணங்காட்டி, மறந்திட்டேன்னு சொன்னத நானும் நம்பிட்டேன். அதுவும் முப்பத்தஞ்சு வருசமா. அதுவே பெரிய விசயம். இனிமே உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. ஏன்னா இப்ப ரிடையராயாச்சு. அதனால உங்க மனசு முழுக்க இனிமே நாந்தான் இருக்கணும். விடிஞ்சதுல இருந்து அடைஞ்சது வரையில இந்த வீடே கதின்னுதான இத்தன வருசமா இருந்திருக்கேன். வருசத்துல ரெண்டு நாள்ல மட்டுந்தான் நாம சேர்ந்து போறது அதுவும் கோயிலுக்கு மட்டுந்தான். ஒன்னு கல்யாண நாள் இன்னொன்னு உங்க பிறந்த நாள். ஒரு சினிமா, பீச்சுன்னு நம்ம சேர்ந்து போன நாள் உண்டா சொல்லுங்க. எல்லாப் பெண்களையும் மாதிரி நானும் ஒரு பொண்ணு தானங்க. காசு பணமா உங்ககிட்ட கேக்கிறேன். உங்ககிட்ட எதிர்பாக்கிறதே அந்த அன்பு மட்டுந்தானங்க.” இத்தனை வருசமா மனசுக்குள் அடக்கிவைத்திருந்த வார்த்தைகள் மடை திறந்த வெள்ளமாய் வந்தது விசாலத்திடமிருந்து.

அவளது கையை இறுகப்பற்றிக் கொண்டவர், “ஆமா விசாலம் இத்தன வருச வாழ்க்கையில உனக்கு ஒரே ஒரு சந்தோசத்த தவிர, வேற எதையும் நாங்குடுக்கல. இன்னொண்ணுக்கு நீ கெஞ்சுனத இப்ப நினைச்சாலும் எனக்கே எம்மேல வெறுப்பும் கோபமும் வருது”

“முடிஞ்சு போனத இப்ப ஏன் ஞாபகப் படுத்துறீங்க. அவனாவது ஆயுளோட நோய் நொடி இல்லாம இருக்கணும். தினமும் நானு ஆண்டவங்கிட்ட வேண்டிக்கிறது அது ஒண்ணத்தான்.”

“கார்த்திகாவ பாக்கும் போதெல்லாம், நமக்கும் இப்படி ஒரு பொண்ணு இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைக்கத் தோணுது. அந்த விசயத்துல உனக்கு நாஞ் செஞ்சது மிகப் பெரிய துரோகந்தான்.”

“இனிமேலாவது என்னோட நினைப்பு இருக்கட்டும்”

”அன்போ பாசமோ இல்லாம இல்ல உம்மேல. பாழாப்போன மறதிதான்.”

”அப்படி சொல்லாதீங்க பாசம்னு இருந்தா மறதிங்கிறது நிச்சயமா வராது. அந்த பாசத்தையும் அன்பையும் மனசுக்குள்ள வச்சிருந்தா எப்படி?. அத வெளியில காட்டுறதுதான் நீங்க எனக்கு கொடுக்கிற சந்தோசம்”

இருவரும் புத்தாடை அணிந்து, அவரிடம் ஆசி பெற்றுக்கொண்ட விசாலாட்சி ”அடுத்த வருசம் நமக்கு அறுபதுக்கு அறுபது.” கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு அதையாவது ஞாபகம் வச்சுக்கங்க.

”என்னப் பார்த்தா அறுபது வயசு மாதிரியா தெரியுது.”

”எல்லாம் என் கைவண்ணந்தான். சரி சாப்பிடலாம்”

”என்ன ஸ்பெஷல் இன்னிக்கு”

”இட்லி, இடிசாம்பார், சட்னி, சர்க்கரைப் பொங்கல்”

”வயித்துல இடம் இருக்குமா தெரியலையே?”

அவள் சமையலில் மட்டுமல்ல. ஓய்வு நேரங்களில் வாசிப்பு, ஓவியம், தையல் அதோடு சமூகசேவையாக ஏழைப் பிள்ளைகளுக்கு டியூசன் என்று தன்னை உடலளவிலும் உள்ளத்தளவிலும் இன்றுவரையில் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டிருக்கிறாள். இப்போதெல்லாம் சீரியல், செல்போன், அரட்டை என அலையும் பெண்களுக்கு நடுவில் விசாலம் வித்தியாசமானவள்தான்.

நான் பணிக்காலத்தில் அவளோடு நேரத்தை செலவழிக்காமல் இருந்ததால் தான், இது போன்ற சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாளோ என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது.

”ரிடையர் ஆன நாளிலிருந்து பார்க்கிறேன். நேரத்த வீணடிச்சிக்கிட்டு வெட்டியா எப்படி உங்களால இருக்கமுடியுது. இதனால மனசும் உடம்புந்தான் கெட்டுபபோகும்.”

அவள் சொல்வது உண்மைதான்,

இப்படியிருந்தால் மனசும், உடலும் சோர்வாகி தேவையற்ற எண்ணங்கள்தான் மனசை ஆக்கிரமித்துக்கொள்ளும்.

ஆகவே சமூகசேவையாக இந்த சமூகத்தில் இருக்கும் என்னைப் போன்ற சுய நலமிகளை மாற்றும் வேலையைச் செய்யத்தான் வேண்டும். அதுதான் நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம், மனசுக்குள் தீர்மானித்துக் கொண்டார்.

”அங்கிள் ஆண்டி வரலாமா”

இருவரும் ஒருமித்த குரலில் ”அடடே கார்த்திகாவா வாம்மா வா. எப்படிம்மா இருக்க..குழந்தைங்க, கண்ணன் சவுக்கியந்தான?”.

”உங்க ஆசீர்வாதம். நல்லா இருக்கோம். கல்யாண நாள் வாழ்த்துக்கள். இந்தாங்க நா பண்ணின பாதாம் அல்வா”

.”இன்றைக்கு முதல் வாழ்த்து உங்க அப்பாவோடதுதான். அடுத்தது நீ . அதோட அல்வாவும். நன்றிம்மா”

”ஆண்டி அங்கிள் ஆசீர்வாதம் பண்ணுங்க.”

விபூதி குங்குமமிட்டு “நலமோடும் வளமோடும் தீர்க்கசுமங்கலியா இருக்கணும்மா”

”நா போயிட்டு வர்றேன்”

”ஏம்மா வந்ததும் கிளம்பிட்ட. சாப்பிட்டுப் போகலாம்மா”

”பதினோரு மணிக்கு சர்வேஷ் வந்துருவான் ஸ்கூல்ல இருந்து.”

”சரிம்மா இந்த சர்க்கரைப் பொங்கல குழந்தைகளுக்கு கொண்டுபோய் குடு. கண்ணன கேட்டதா சொல்லு. எல்லாரும் ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்கு வாங்க.”

”சரி ஆண்டீ. அங்கிள் வர்றேன்”

வாசல் வரை வந்து இருவரும் கார்த்திகாவை வழியனுப்பியதும் கோவிலுக்கு கிளம்பினார்கள்.

வழி நெடுக. உறவுகளிடமிருந்தும் நட்புகளிடமிருந்தும் செல்போனில் ஒரே வாழ்த்து மழை.

”விசாலம் நானு எதிர்பார்த்த போன்கால் வரலியே”

”யாரச் சொல்றீங்கன்னு தெரியுது. வீட்டுக்கு வாங்க சொல்றேன்.”

”வெயிலும் மேக மூட்டமும் மாறி மாறி வந்தாலும் வேர்த்து கொட்டுது விசாலம்”

”ஆட்டோவுல போகலாம்னா கேக்குறீங்களா. அந்த காசுல பங்களா கெட்டப்போற மாதிரி வேண்டாம்ங்கிறது. அப்புறமா வேகுது வேர்க்குதுங்கிறது. வயசான காலத்துல உடம்புக்கேத்த மாதிரி நடந்துக்கணும்னா கேட்டாத்தான”

”ரெண்டு நேரம் நடக்கிறதுனாலதான் அய்யாவுக்கு உடம்பு ஆரோக்கியமா இருக்கு.”

”தெரியுது”

”விசாலம் வீட்டுக்கு வந்ததும் சொல்றேன்னயே”

”கொஞ்சம் பொறுங்க. மிச்சமிருக்கிற டிகாசன்ல காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்.”

”இந்த வேகாத வெயிலுக்கு காபி வேண்டாம். ஒரு தம்ளம் மோரு குடு போதும்”

”விசாலம் இந்தப் புடவையில நீ அழகாயிருக்க.”

”நீங்களுந்தான்”

”அத மட்டும் ஒத்துக்கமாட்டேன். ஏந் தெரியுமா. பொண்ணுக்கேத்த மாப்பிளையா இதுன்னு எங்காதுபட நம்ம கல்யாணத்துல சொன்னது இப்பவும் கேக்குது”

”இப்ப எதுக்கு அதெல்லாம் பேரன் பேத்தி வரப்போற நேரத்துல. நம்ம இளங்கோவத்தான கேட்டீங்க. அவனும் தேன்மொழியும் வந்துக்கிட்டிருக்காங்க”

”அம்மாவும் பையனும் இப்படி கமுக்கமா செய்றதுல கெட்டிக்காரங்க”

”ஆமா. அதுகூட நல்லதுக்காத்தான் இருக்கும்.”

”ரயில்ல வந்தா இந்நேரம் வந்திருக்கணும். எதுல வர்றாங்க”

”பறந்து வர்றாங்க”

”இந்தாருக்க பெங்களூருல இருந்து சென்னைக்கு வர்றதுக்கு ஆயிரெத்தெட்டு ரயில் இருக்கு“

“புள்ள வர்றானேன்னு சந்தோசப்படாம. ஆயிரத்தெட்டு நொறநாட்டியக் கேள்வி. அவங்க ரெண்டு பேரும் சம்பாதிக்கிறாங்க. வர்றாங்க. அதுவும் நம்ம கல்யாணநாள கொண்டாடுறதுக்குத்தான”

“சரி சரி. நம்ம வீட்ல முப்பெரும் விழான்னு சொன்னியே. அது என்ன?”

”இன்னிக்கு நம்ம கல்யாண நாள் அதோட நீங்க பிறந்த நட்சத்திரம்”

“ஓ அப்படியா. சொல்லவே இல்ல”

“வழக்கமா கல்யாணநாளன்னிக்கு சாமி பேருக்குத்தான அர்ச்சனை வைபோம். இன்னிக்கு உங்க நட்சத்திரத்தையும் சேர்த்து அர்ச்சகர்ட்ட சொன்னத கவனிக்கல”

“போன வருசம் இதே நாள்ல வேண்டிக்கிட்டதுக்கு அடுத்த ஒரு மாசத்துலயே பலன் கிடைச்சது. அதே மாதிரி இப்பவும் இன்னொன்னுக்காக வேண்டிக்கிட்டேன். அதனால நீ சொன்னத கவனிக்கல. சரி இன்னொண்ணு”

“இளங்கோ வந்து சொல்வான்”

அவள் சொல்லி முடித்ததும் போர்ட்டிகோவில் வந்து நின்ற காரிலிருந்து இளங்கோவும், தேன்மொழியும் இறங்குவதும் ஏதோ சொல்லி வைத்ததுபோல் நிகழ்ந்தது.

மகன் மருமகளின் வருகையால். வீடு முழுக்க சந்தோசமும், சிரிப்பும் விசாரிப்புமாக நிரம்பி வழிந்தது.

“பரிசாக வேட்டி, புடவை சட்டையைக் கொடுத்து இருவரின் பாதம் தொட்டு வணங்கி வாழ்த்துச் சொன்ன இளங்கோ, அப்பா இந்த ஸ்வீட்ட எடுங்க”

‘எதுக்குப்பா’ எனும் கேள்வி அவரிடமிருந்து வருவதற்கு முன் முந்திக்கொண்ட இளங்கோ,

“உங்கள தாத்தான்னும் அம்மாவ ஆச்சின்னும் கூப்பிட இந்த வீட்டுக்கு ஒரு குட்டி வரப்போறாங்கப்பா”

முகம் முழுக்க மகிழ்ச்சியோடு மனைவியைப் பார்த்த சங்கரன்,

“விசாலம் முப்பெரும் விழாவில இதுவும் ஒண்ணா. இது தெரிஞ்சும் நீ ஏன் சொல்லவே இல்லே?

“இத நீங்க காதால கேக்கணுங்கிறதும், அந்த சந்தோசத்த உங்க முகத்தில பாக்கணுங்கிறதும் எங்களோட ஆசை. அதோட அன்பு பாசம் இதுதாங்கிறதும் அத இப்படித்தான் காட்டணும்ங்கிறதயும் நீங்க தெரிஞ்சுக்கணும். அதுக்காகத்தான்”

இன்று மாறி வரும் கலாச்சாரத்தில் விசாலத்தைப் போல் உள்ள பெண்களினால்தான் நமது பண்பாடும், கலாச்சாரமும் இன்னும் உயிரோடு இருக்கிறது.

தாத்தா ஆகப் போகிற சந்தோசத்தில் மகனை உச்சிமுகர்ந்து, மருமகளின் கைபிடித்து தனது மகிழ்ச்சியைக் கொண்டாடினார் சங்கரன். கோவிலில் தெய்வத்திடம் மனமாற வேண்டியது கிடைத்ததை நினைத்த அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர். இந்த வீட்டிற்கு வரப்போகும் புதுவரவும் இக் கொண்டாட்டத்தில் சேர்ந்து கொண்டதை நினைத்த விசாலத்தின் முகத்திலும் சிரிப்பும் ஆனந்தமும் பொங்கி வழிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *