புகை ஓவியம்

 

கிட்டத்தட்ட இருபத்தொன்பது வருடங்களுக்குப் பிறகு பிறந்து வளர்ந்த சொந்த கிராமத்திற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு இப்போதுதான் வாய்த்தது. அதற்கும் கூடக் காரணம் என் ரிடையர்மெண்ட்தான்.

ஈரோட்டிற்கு அருகில் உள்ள சிவகிரி கிராமத்தில் பிறந்து பள்ளி வாழ்க்கையை அங்கும். கல்லூரி வாழ்க்கையை ஈரோட்டிலும் முடித்த எனக்கு உத்தியோகம் சென்னையில் அமைய இருபத்தொன்பது வருடங்களுக்கு முன் இடம் பெயர்ந்தேன். அதற்குப் பிறகு கல்யாணம் காட்சியெல்லாம் சென்னையிலேயே முடிந்து குடும்பம் மனைவி குழந்தை ஆபீஸ் என்கிற நடைமுறை யதார்த்தங்களில் மூழ்கிப் போனேன். ஆனாலும் அவ்வப்போது அடிமனதில் சொந்த ஊரின் மண்ணைத் தரிசிக்கும் ஆசையும் ஏற்படும் அதற்கான முயற்சியிலும் ஈடுபடுவேன். ஆனால் ஒரு பெரிய நிறுவனத்தில் பொறுப்பான உத்தியோகத்தில் இருந்த எனக்கு அது அவ்வளவு எளிதில் சாத்தியப்பட வில்லை. அந்த ஆசைகளும் முயற்சிகளும் ஏதோவொரு காரணத்தால் அடிபட்டுப் போய்க் கொண்டேயிருந்தன. ஆதனால்தான் இப்போது உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றதும் முதல் வேலையாக பிறந்த மண்ணைத் தரிசிக்க சொந்த கிராமத்தின் சுகந்த காற்றைச் சுவாசிக்கப் புறப்பட்டுவிட்டேன்.

‘ஏங்க என்னையும்தான் கூடக் கூட்டிட்டுப் போங்களேன் ” என் மனைவி சுதா கோரிக்கை வைக்க, யோசித்தேன்.

எங்களுடைய ஒரே மகன் அரவிந்த் சாப்ட்வேர் இஞ்ஜினியராக பெங்களுருவில் இருக்கான். நாங்கள் இருவரும் மட்டும்தான் இங்கே சென்னையில் இருக்கிறோம். இப்ப நான் மட்டும் கிளம்பி விட்டால் இவள் தனியாகத்தான் இருக்க வேண்டும் பேசாமல் இவளையும் கூட அழைத்துச் சென்றால் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த மாதிரியும் இருக்கும் இவளையும் திருப்திப் படுத்திய மாதிரியும் இருக்கும்.

‘ஓ.கே. சுதா நாளைக்கு நைட் டிரெயின்ல கிளம்பறோம் தயாராயிரு”

அவள் சந்தோஷ முகம் காட்டி நகர, நான் என் நினைவுகளை பின்னோக்கி நகர்த்தினேன்.

முட்டி சப்பை, கும்மாயி, முர்ரே , கெண்டி, பப்பியான்

இவையெல்லாம் என் பிள்ளைக் காலத்து நண்பர்களின் பட்டப் பெயர்கள். உண்மையான பெயரே மறந்து போய்விடும் அளவிற்கு பட்டப் பெயர்கள்தான் அன்று பிரசித்தம். ஓவ்வொருவரின் முகங்களும் நினைவுத்திரையில் வந்து போக ‘முட்டி”யின் முகம் வந்த போது மட்டும் வாய் விட்டுச் சிரித்து விட்டேன்.

‘இதென்னது தனியா சிரிச்சிட்டிருக்கீங்க,” எதற்கோ திரும்பி வந்த சுதா என்னை விநோதமாய்ப் பார்த்தபடி கேட்க,

‘என்னோட சின்ன வயசுச் சிநேகிதர்களைப் பத்தி நெனைச்சிட்டிருந்தேன் .அதுல..’முட்டி”ங்கற ஒருத்தனைப் பத்தி நெனைச்சப்பதான் என்னையே அறியாமச் சிரிச்சுட்டேன் அவனுக்கு இன்னொரு பேர் கூட உண்டு ‘பேடி முட்டி”ன்னு..”

‘என்னது பேடி முட்டியா?” கேட்டு விட்டு அவளும் சிரித்தாள்.

‘ஆமாம் சரியான பயந்தாங்கொள்ளி அவன் .ஒரு தடவை பலத்த காத்தடிச்சு பள்ளிக் கூடத்து வேப்ப மரத்துல இருந்த காக்கா கூட்டுலயிருந்து ஒரு காக்கா குஞ்சு கீழ விழுந்து கெடந்திச்சு அதைக் கவனிக்காம அந்த வழியா நடந்து போன இந்த பேடி முட்டி தெரியாத்தனமா அதை மிதிச்சுட்டான் .என்னன்னு குனிஞ்சு பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டவன் கத்தின கத்துல பள்ளிக்கூடக் கட்டிடமே அதிர்ந்து போச்சு அவனோட கத்தலை யாராலும் நிறுத்தவே முடியலை கடைசில அவன் வீட்டுக்கு ஆளனுப்பிச்சு பேரண்ட்ஸை வரவழைச்சு அவங்க கைல அவனை ஒப்படைச்சாங்க அப்பப்பா ஹீனக்குரல்ல கத்திக்கிட்டு அவன் மண்ணுல புரண்டதை இப்ப நெனைச்சாலும் சிரிப்பு நிக்க மாட்டேங்குது..” கைகால்களையும் முகத்தையும் கோணலாக்கி அவன் செய்தது போல நானும் அபிநயித்துக் காட்ட சுதாவும் விழுந்து விழுந்து சிரித்தாள்.

‘அதுல இன்னும் தமாஷ் என்னன்னா .அதுக்கப்புறம் ஒரு வாரம் சரியான காய்ச்சல்ல விழுந்து இளைச்சுப் போயி அவன் ஸ்கூலுக்கு மறுபடி வந்த போது உண்மையிலேயே அவனைப் பார்க்க காக்கா குஞ்சு போலவே இருந்தான் .”

‘சரியான ஆளுதான் போங்க உங்க பால்ய சிநேகிதர்”

‘இது மட்டுமில்ல சுதா இது மாதிரி நெறைய இருக்கு அந்த பேடி முட்டி பயந்து போய் பண்ணின கோமாளித்தனங்க ஒரு தடவை ஸ்கூல்ல பக்கத்து டெண்ட் கொட்டகைக்கு ‘ஆப்ரிக்கன் சஃபாரி”ங்கற ஒரு மிருகங்கள் பத்தின படத்துக்கு எல்லா ஸ்டூடண்ஸையும் கூட்டிக்கிட்டு போனாங்க அந்தப் படத்துல மான் கூட்டத்துல சிறுத்தையொண்ணு பூந்து ஒரு மானை மட்டும் துரத்திட்டுப் போய்க் கடிச்சுக் குதறுகிற மாதிரி ஒரு சீன் வந்தது அதைப் பாத்துட்;டு அந்தப் பேடி முட்டி பண்ணின ஆர்ப்பாட்டம் கொஞ்ச நஞ்சமல்ல .படத்தையே நிறுத்திட்டு எல்லாரும் வந்து ‘பயப்படாதப்பா அது நிஜமில்லை சும்மா .படம்” ன்னு சொல்லியும் அமைதியாகாம..’அய்யோ..அந்த மான் பாவம் யாராவது அதைக் காப்பாத்துங்க சிறுத்தைய சுடுங்க..” ன்னு கத்திக் கதறி விழுந்து புரண்டு அப்பப்பா பயங்கர கலாட்டா..”

‘அவரு இப்ப இருக்காரா? என்ன வேலை பண்ணிட்டிருக்கார் ஏதாவது தகவல் தெரியுமா?” என்னை விட ஆர்வமானாள் சுதா.

உதட்டைப் பிதுக்கினேன் ‘ம்ஹ_ம் ஒரு தகவலும் இல்லை ஆள் இருக்கானா..இல்லையான்னே தெரியாது ஊருக்குப் போய்த்தான் விசாரிக்கனும் இருந்தா கண்டிப்பா பாத்துப் பேசிட்டுத்தான் வரணும் கரப்பான்பூச்சி பல்லி மரவட்டை இதுகளையெல்லாம் கண்டா பயந்து அவன் பண்ற அலப்பரை காமடியாயிருக்கும் நாங்கெல்லாம் வேணுமின்னே எங்காவது இருந்து அதுகளைப் பிடிச்சிட்டு வந்து அவன் மேலே போட்டு செம ரகளை பண்ணுவோம் .ம்ம்ம்..அதையெல்லாம் இப்ப நெனச்சுப் பாத்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியமா?”

மறுநாள் இரவு ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போதும் கூட எங்கள் பேச்சு அந்த பேடி முட்டியைப் பற்றியே இருந்தது.

‘அந்தக் காலத்துக்கு சரிங்க இந்தக் காலத்துல அந்த மாதிரியெல்லாம் பயந்தாங்கொள்ளியா இருந்தா அவ்வளவுதான்” என்றாள் சுதா.

‘பின்னே தைரியமான ஆளுங்களுக்கே தண்ணி காட்டுற காலமாச்சே இது ”

அதிகாலை ஐந்தே முக்காலுக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் வந்து சிவகிரி பஸ்ஸில் ஏறினோம்.

ஊருக்குள் பஸ் நுழையும் போதே எனக்குள் ஆச்சரியம் விரிந்தது. ‘அடடா நம்ப கிராமமா இது? தார் ரோடும் வாகனப் போக்குவரத்தும் பங்;களாக்களும் .அடேங்கப்பா ஒரு நகரத்துக்கு இணையாக மாறி விட்டதே ”

சிவகிரி பேருந்து நிலையத்தில் பஸ் நிற்க இறங்கினோம். பேருந்து நிலையத்தை ஒட்டியிருந்த கற்பகம் லாட்ஜ் எங்களை வரவேற்க அதை நோக்கி நடந்தோம்.

‘பரவாயில்லையே நம்ப ஊருக்கு லாட்ஜெல்லாம் வுட வந்திருச்சே”என்று உள்ளுக்குள் வியந்து கொண்டிருந்த என்னை மேலும் வியப்பாக்கியது அந்த லாட்ஜ் அறையின் ஆடம்பரத்தனம்.

காலை டிபனை அறைக்கே வரவழைத்து சாப்பிட்டு விட்டு இருவரும் ஊருக்குள் கிளம்பினோம்.

என்னுடைய ஞாபகச் சிலேட்டிலிருந்த பழைய ஊருக்கும் எதிரில் தெரியும் நவீன ஊருக்கும் சம்மந்தமேயில்லாமல் இருந்தது. சில தெருக்களையும் சில இடங்களையம் என்னால் அடையாளமே புரிந்து கொள்ள முடியாமல் போனது. ‘அந்தக் காலத்தில் இந்த இடத்தில் என்ன இருந்தது?” யோசித்துப் பார்த்துக் குழம்பினேன்.

‘என்னங்க ஒண்ணுமே பேசாம வர்றீங்க .இதுக்குத்தானா இத்தனை வருஷமா காத்திட்டிருந்தீங்க?”

‘இல்ல சுதா என்னால நம்பவே முடியலை எனக்கு ஒரே பிரமிப்பாயிருக்கு எல்லாமே மாறிட்டுது..மனுஷங்க கூட மாறிட்டாங்க .அப்பவெல்லாம் ஊருக்குள்ளார யாராவது வேத்து மனுஷங்க வந்தா சம்மந்தம் இருக்கோ இல்லையோ எல்லாரும் விசாரிப்பாங்க .’ஆரு வீட்டுக்கு வந்திருக்கீங்க? ஓ மேட்டுத்தெரு கோவிந்து வீட்டு ஒரம்பரையா நீங்க?”ன்னு பார்க்கறவங்க எல்லாரும் கேப்பாங்க கேட்டுத் தெரிஞ்சுக்குவாங்க இப்ப என்னடான்னா நானும் நீயும் மணிக் கணக்கா தெருவுல நடந்திட்டிருக்கோம் யாரும் கண்டுக்கற மாதிரியே தெரியலை”

அவள் அமைதியாய்ப் புன்னகைத்தாள்.

வெயில் சுரீரென்று உறைக்க ஒரு கூல் டிரிங்ஸ் கடையில் நின்றோம்.

அந்தக் கடைக்காரரிடம் பழைய ஆட்களின் பெயரைச் சொல்லி மெல்ல விசாரித்தேன். நான் குறிப்பிடும் எந்த நபரையுமே அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடைசியில் அந்த பேடி முட்டியின் நிஜப் பெயரை சிரமப்பட்டு யோசித்து ‘மூர்த்தின்னு ஒருத்தரு அவங்க அப்பா கூட விறகுக்கடை வெச்சிருந்தாரு”

‘இந்த ஊர்ல ஒரே ஒரு விறகுக்கடைதான் இருந்திருக்கு அதுவும் இப்ப இல்ல”

‘சரிங்க அவங்க வீடு அந்த மனுஷங்க..இருப்பாங்கல்ல?” விடாமல் கேட்டேன்.

‘அதோ எதிர்ல தெரியுது பாருங்க அந்தக் கடைல விசாரிங்க அவங்கப்பாதான் இந்த ஊர்ல விறகுக் கடை நடத்திய ஒரே ஆளு”

எனக்கு பிடி கிடைத்த மாதிரி இருந்தது. எதிர்க் கடைக்கு ஓடினேன்.

அது ஒரு மட்டன்-கம்-சிக்கன் ஸ்டால்.

அங்கிருந்த பையனிடம் மூர்த்தியின் பெயரைச் சொல்லிக் கேட்டேன்.

‘அண்ணனா? உள்ளாரதான் வேலையா இருக்காரு போய்ப் பாருங்க”

சுதாவை வெளியில் நிறுத்தி விட்டு நான் மட்டும் உள்ளே போனேன். நெஞ்சில் ஒரு இனம் புரியாத கனம் ஏறிக் கொண்டது. இருபத்தொன்பது வருஷங்களுக்குப் பிறகு என் பால்ய நண்பனைச் சந்திக்கப் போகிறேன் அதுவும் யாரை?..நானும் சுதாவும் ரெண்டு நாளாய்ப் பேசிப் பேசித் தீர்த்த அந்த பேடி முட்டியை

எப்படி இருப்பான்?

என்னை அடையாளம் தெரிந்து கொள்வானா?

இன்னும் அதே பயந்தாங்கொள்ளித் தனத்தொடுதான் இருப்பானா? இல்லை மாறியிருப்பானா?

நெஞ்சு ‘திக் தி;க்”கென்று அடித்துக் கொள்ள ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து மெல்ல நடந்தேன்.

அங்கே

பெரிய கிருதா மற்றும் கொடுவாள் மீசையோடு ஒரு நபர் ஒரு பெரிய ஆட்டின் மீது அமர்ந்து அதன் கழுத்தை மும்முரமாக அறுத்துக் கொண்டிருக்க தயக்கத்துடன் கேட்டென். ‘மூ…ர் த் தி ?”

தலையைத் தூக்கி ‘ஆமா..நாந்தான் மூர்த்தி என்னா வோணும்? என்று கர்ண கடூரக் குரலில் கேட்டவரின் முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். அதில் பழைய பேடி முட்டியின் சாயல் தெரிய நொந்து போனேன.;

‘விறகுக் கடைக்காரர் மகன் மூர்த்தி நீங்களா?” நம்ப முடியாமல் மீண்டும் கேட்டேன்.

வேலையை நிறுத்தி விட்டு எழுந்து என் அருகே வந்து நின்ற அந்த ஆஜானுபாகு மனிதரை மேலிருந்து கீழ் வரை பிரமிப்பு நீங்காமல் பார்த்தேன்.

‘நீங்க யாரு? அதச் சொல்லுங்க மொதல்ல” கர்ணகடூரம் கேட்டது.

‘நான் நான் திவாகரன் உங்க கூட காமாட்சியம்மன் கோயில் பள்ளிக் கூடத்துல ஒண்ணாப் படிச்சேன் சப்-ரிஜிஸ்தரார் பையன்..”

அவர் விழிகளை விரித்துப் பார்த்து விட்டு ‘ஆஹ்ஹா .திவாகரா நீங்க?” என்று கத்தலாய்க் கேட்டு விட்டு இடியாய்ச் சிரிக்க,

நான் துவண்டு போனேன்.

‘என்னப்பா நல்லா இருக்கியா? டவுனுக்காரனாயிட்டே அதான் ஊர்ப்பக்கமே வராம இருந்திட்டே ” முரட்டுப் பாசம் பேச்சில் தெறித்தது.

‘அப்படியில்லை வேலை அந்த மாதிரி ”

பேசிக் கொண்டிருக்கும் போதே கடையின் முன் புறம் பார்த்த பையன் உள்ளே நுழைந்து ‘அண்ணே சுலைமான் பிரியாணி ஸ்டால் ஆள் வந்திருக்கு பத்து வேணுமாம்”

‘ம்ம் இருந்து வாங்கிட்டுப் போகச் சொல்லுடா ” என்று பையனிடம் சொல்லி விட்டு என் பக்கம் திரும்பி ‘அப்பறம் ரிடையர்டு ஆயாச்சா இல்ல இன்னும் வேலைல இருக்கறாப்பலயா?” கேட்டவாறே கையை பின் புறம் செலுத்தி கோழி;க் கூண்டுக்குள் நுழைத்து வரிசையாய் பத்து கோழிகளை எடுத்து ‘படக்..படக்” கென கழுத்தை திருகி பக்கத்திலிருந்த டிரம்முக்குள் போட்டான் அந்த மூர்த்தி.

எனக்கு அச்சமூட்டியது அவன் செயல். ‘பேடி முட்டியா இவன்? ஒரு காலத்துல காக்கா குஞ்சுக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்து கால் டிரவுசர்ல மூத்திரம் போன பேடியா இவன்?”

‘என்னப்பா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ பேசவே மாட்டேங்குறே ”

‘இல்ல அது வந்து .நீ நீங்க .எப்ப ப்ரீயா இருப்பீங்கன்னு சொல்லுங்க நான் அப்ப வந்து உங்க கிட்ட சாவகாசமா பேசறேன்..”

‘அப்படின்னா சாயங்காலம் ஆறு மணிக்கு மேல்தான் பேச முடியும்”

‘ஓ.கே. நான் அப்பவே வர்றேன்” சொல்லி விட்டு அவசரமாய் வெளியேறி சுதாவையும் அழைத்துக் கொண்டு லாட்ஜூக்கு வந்தேன்;.

‘ஏங்க என்னாச்சு அந்த பேடிமுட்டியப் பாத்தீங்களா?”

‘ம்ம் பாத்தேன்” சுவாரஸியமேயில்லாமல் சொன்னேன்.

‘ஏங்க? ஒரு மாதிரியா சொல்றீங்க .அவரு சரியா பேசலையா?”

அவளுக்கு பதில் சொல்லாமல் நீண்ட நேரம் மௌனம் சாதித்து விட்டு கடைசியில் ‘சுதா நமக்குள்ளார புதைஞ்சு கிடக்குற பழைய நினைவுகளை பழைய ஊரை பழைய ஆளுகளை அப்படியே உள்ளுக்குள்ளாரவே பத்திரமா அடைகாத்து வெச்சுக்கிட்டு அப்பப்ப அதுகளை ஞாபகப்படுத்திப் பார்த்து ரசிக்கலாமே தவிர அவற்றை நேரில் பார்க்கனும்னு ஆசைப் படக் கூடாது அப்படி ஆசைப் பட்டா அந்தப் பழைய நினைவுகள் என்கிற மாபெரும் பொக்கிஷத்தை நாம் இழக்க வேண்டி வரும்”

‘என்னங்க சொல்றீங்க..எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது அந்த பேடி முட்டி இருந்தாரா? ”

மெலிதாய்ச் சிரித்து விட்டு ‘இருந்தார் ..ஆனா இல்லை ” என்றேன்.

அவள் என்னை விநோதமாய்ப் பார்க்க,

முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு உள்ளுக்குள் குமுறிக் குமுறி அழுதேன்.

ஏனென்று தெரியவில்லை எதற்கென்று புரியவில்லை. ஆனால் எதையோ இழந்து விட்ட உணர்வு என்னையும் மீறி எனக்குள் வியாபித்திருந்தது.

- ஆகஸ்ட் 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
அறை வாசலில் நிழலாட 'யாரது?" படுக்கையிலிருந்தவாறே கேட்டார் ரங்கசாமி அய்யா. நடுத்தர வயதுக்காரனொருவன். 'அய்யா நீங்கதானே ரங்கசாமி அய்யா. தமிழாசிரியர்?" கேட்டபடி உள்ளே வந்தான். 'ஆமாம் நீ யாரு?" 'நான் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து வர்றேன், கலெக்டர் கோபிநாத் அய்யா அனுப்பிச்சார். போன வாரம் அவர் ...
மேலும் கதையை படிக்க...
அரசு விருந்தினர் மாளிகையின் பால்கனியில் நின்று கொண்டு தனக்கு அளிக்கப் பட்டிருந்த காவல் துறை பந்தோபஸ்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் மத்திய மந்திரி தேவநாதன். கீழே பந்தோபஸ்துக் குழுவினருக்கு வெகு தீவிரமாய் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்த அந்த உயரதிகாரியைச் சில நிமிடங்கள் ...
மேலும் கதையை படிக்க...
பஸ்ஸிலிருந்து கண்ணீருடன் இறங்கிய கண்ணன் பஸ் நகrந்ததும் 'ஹா..ஹா..” வென்று உரத்த குரலில் வாய் விட்டுச் சிரித்தான். 'டேய்... டேய்… என்னாச்சுடா உனக்கு? இப்பத்தான் பஸ்ல செல்போனை யாரோ அடிச்சிட்டதாச் சொல்லிக் கத்திக் களேபரம் பண்ணி… ஆர்ப்பாட்டம் பண்ணி அழுதே… இப்பக் கீழே ...
மேலும் கதையை படிக்க...
அவசர அவசரமாகக் கிளம்பி வேக வேகமாக பெடலை மிதித்துத் தொழிற்சாலையை அடைந்தான் சக்திவேல். தொழிலாளர்கள் அனைவரும் கும்பலாய்க் கேட்டருகே நின்றிருக்க உள்ளே மெஷின்கள் எதுவும் ஓடாமல் அமைதியாயிருந்தது. "அண்ணன் வெகு வேகமா வர்றாப்பல இருக்கு… இன்னிக்கு ஸ்டிரைக்… உள்ளார போக முடியாது” “ஸ்டிரைக்கா?..எதுக்கு திடீர்ன்னு,” ...
மேலும் கதையை படிக்க...
தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. அரசியல் கட்சிகளின் பிரச்சார அலையில் ஊரே அமர்க்களப்பட்டது. பெரும் ரசிகர் கூட்டத்தைத் தன் பின்னால் வைத்துள்ள சூப்பர் ஹீரோ செல்வகுமாரை எப்படியோ வளைத்து சீட் கொடுத்து தேர்தல் களத்தில் இறக்கியிருந்த அந்தக் கட்சி பல நடிகர் ...
மேலும் கதையை படிக்க...
சர்வீசுக்கு வந்திருந்த யமஹாவை வேலை முடித்து சோதனை ஓட்டம் ஓட்டிப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினான் தண்டபாணி. “என்ன முதலாளி யோசிக்கறீங்க?…ஏதாவது வேலை பாக்கியிருக்கா இதுல?” தயக்கமாய்க் கேட்டான் கடைப்பையன். “ம்ம்ம்...ஏதோ வித்தியாசமாத் தெரியுதே?”.. “சொர..சொர” தாடியைத் தேய்த்தபடியே யோசித்தவன் “அது சரி... ஆயில் ...
மேலும் கதையை படிக்க...
'ஹூம்…வயசு அம்பத்தி நாலாச்சு….வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணுங்க ரெண்டு கல்யாணத்துக்கு நின்னுட்டிருக்குதுக… இந்தாளு என்னடான்னா இங்க ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கான்... எல்லாம் காலக் கொடுமைப்பா” இது செக்சன் ஆபீசர் சீனிவாசன். 'அட... வேற ஆளா கெடைக்கலை… ஒரு ஜி.எம்… போயும் போயும் ஆபீஸைக் கூட்டிப் ...
மேலும் கதையை படிக்க...
ராமகிருஷ்ணனால் நம்பவே முடியவில்லை. 'நம்ம அப்பாவா இப்படி ஒரே வார்த்தையில் ஓ.கே.சொன்னது?” சமையலறைக்குள் நுழைந்து அம்மாவிடம் கேட்டான், 'ஏம்மா…அப்பாவுக்கு உடம்பு..கிடம்பு சரியில்லையா?” என்று. 'ஏன்டா இப்படிக் கேட்கறே?” 'இல்லை…சினிமாவுக்குப் போக எப்ப பர்மிசன் கேட்டாலும் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பாரு….ஆயிரத்தெட்டு சந்கேங்களைக் கௌப்புவாரு…கடைசிலே 'வேண்டாம்”ன்னோ…இல்லை..'இன்னிக்கே போகணும்னு என்ன?…அடுத்த ...
மேலும் கதையை படிக்க...
தான், தன் மாணவிகளுக்கு பரத நாட்டியம் சொல்லிக் கொடுப்பதை ஒளிந்து நின்று வேடிக்கை பார்த்த சேரிச் சிறுமியை ஆரம்பத்தில் வெறுத்துத் துரத்திய பிரபல நாட்டியத் தாரகை பத்மா ரகுநாதன் நேற்று மொட்டை மாடியிலிருந்து அந்தக் காட்சியைக் கண்டபின் தன் வெறுப்பு மனத்தை ...
மேலும் கதையை படிக்க...
அந்த அறைக்குள் ஒரு கனத்த அமைதி வெகு நேரமாய் சப்பணமிட்டு அமர்ந்திருந்தது. ஈஸிசேரில் சாய்ந்தபடி மேலே சுழலும் மின் விசிறியைப் பார்த்தவாறே அமர்ந்திருந்த நாகராஜனின் மூளைக்குள் சிந்தனைப் பூச்சிகள் தாறுமாறாய் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. தரையில் அவர் மனைவி பார்வதி சுவற்றில் சாய்ந்து கால்களை நீட்டியபடி ...
மேலும் கதையை படிக்க...
நேரில் கடவுள்
காவல்
போடா பைத்தியக்காரா…!
நூத்தம்பது ரூபா
இதுதான்யா நெஜம்?
கபாலி கடன் வராமலிருக்கு!
அந்தப் பெண்ணிடம் மட்டும்…?
பாறைக்குள் பசுஞ்சோலை
கலையின் விலை?
இன்று முதல் இவள் செல்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)