பிருந்தாவனில் வந்த கடவுள்

 

ஏற்கனவே அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்ததற்கு மரியாதை செய்யும் பொருட்டு சரியாக முப்பது நிமிடங்கள் மட்டுமே தாமதமாக வந்து சேர்ந்தது பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸ்.

தூரத்தில் வரும்போதே உட்கார்ந்திருந்த பலர் தங்கள் பிருஷ்டங்களை அள்ளிக்கொண்டு எழுந்தார்கள். ரயிலை நோக்கி முன்னேறினார்கள். அமீர் உட்கார்ந்திருக்கவில்லை. நின்றுகொண்டுதானிருந்தான். உட்காருவதில் அவனுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும் அவனால் உட்காரமுடியாமல் போனது என்பதுதான் உண்மை.

ஆங்காங்கு ‘சிமெண்ட் பென்ச்’கள் இருந்தன என்றாலும் அவன் நின்றுகொண்டிருந்த இடத்தில் அப்படி ஏதும் இல்லை. ஆனால் மேல் கூரையிலிருந்து இறங்கிய இரும்புத் தூண்களைச் சுற்றி திண்ணை மாதிரி அறுகோணவடிவில் சிமென்டில் கட்டியிருந்தார்கள். அதன்மீது மக்களும் தங்கள் லக்கேஜுகளையும் வைத்து அவர்களும் உட்கார்ந்து கொண்டார்கள்.

அவர்களைப் போல அவனும் செய்ய முயன்றபோதுதான் ஒரு உண்மை புரிந்தது. அதாவது சூரியன் என்பது வானத்தில் இருப்பது மட்டுமல்ல, ரயில்வே நிலையங்களின் அறுகோணவடிவ சிமென்ட் தரையின் கீழும் இருப்பதுதான் என்பதுதான். மாலையைக் கடந்து அன்றைய நாள் இரவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோதும் காற்றில் கலந்திருந்த வெம்மையில் ஏற்கனவே தலைபூரா உள்ளுக்குள் அழுதுகொண்டிருந்தது. இதில் அந்த தரையில் உட்கார்ந்து தன் பின்பக்கத்தையும் வெந்துபோகவிடுவதில் விருப்பமில்லாமல்தான் அவன் நின்றுகொண்டிருந்தான்.

ஆனால் எந்த உணர்வும் அற்றவர்களைப்போல பெண்களும் அந்த அறுகோணத் திண்ணையில் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டு இருந்ததுதான் அவனை ஆச்சரியப்படுத்தியது. பெண்கள் மென்மையானவர்கள் என்று எதை வைத்து சொல்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. நிச்சயமாக ‘அதை’ வைத்துமட்டும் இருக்காது என்பது புரிந்தது.

வழக்கம்போல அந்த பிச்சைக்காரன் “தம்பி, தம்பி” என்று சொல்லிக் கொண்டு ஊனமான ஒரு கையைத் தூக்கிக் காட்டிக்கொண்டு வந்து காசுகேட்டான். கிட்டத்தட்ட இருபது வருஷமாக அவனைப் பார்க்கிறான் அமீர். எந்த மாற்றமும் இல்லை. அவனுடைய கையைப் போலவே அவனுடைய வாழ்க்கையும் ஒரு இன்ச்கூட வளரவில்லை.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் அமீருக்கு ரொம்ப கோபம் வந்தது. அவனை அப்படியே ரயில் வரும்போது உதைத்து சாகடித்தால் என்ன என்று தோன்றியது அமீருக்கு. சோம்பேறி நாய். பிச்சையெடுப்பதில் சுகம் கண்டுவிட்டது. சும்மா பேண்ட் ஷர்ட் போட்டிருந்தால் ‘அண்ணே’, ஜீன்சும் டீ ஷர்ட்டும் போட்டிருந்தால் ‘தம்பி’. கையாலேயே அவனுக்கு இல்லை என்று சொல்லி வழக்கம்போல விரட்டினான். அப்போதுதான் ரயில் வந்து சேர்ந்தது.

ஏற்கனவே நினைவுப் பெட்டியில் போட்டுவைத்திருந்த அனுபவங்களிலிருந்து ஒன்றை உருவிப் பார்த்துவிட்டு, இந்த இடத்தில்தான் எஸ்.சிக்ஸ் கோச் வந்து நிற்கும் என்று அனுமானித்தவனாக ஒரு இடத்தில் போய் நின்றான் அமீர். அந்த இடத்தில் சரியாக எஸ்.ஒன் கோச் வந்து நின்றதும் தண்டவாளங்கள் அவனைப் பார்த்து நகைத்து ஒலியெழுப்பின.

அதை உதாசீனப் படுத்தியவனாக தன் செவ்வக வடிவ ‘பேக்’கை தூக்கிக்கொண்டு ஓடினான் எஸ்.சிக்ஸை நோக்கி. தோள் பை இடது தோளிலேயே எப்போதும் இருந்ததால் அதைத் தனியாக தூக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. பெட்டிக்கு உள்ளே போனதும்தான் மூச்சே வந்தது. இனி அடுத்த வேலை எழுபத்தி இரண்டாம் எண்ணுள்ள இருக்கையைத் தேடிக்கண்டு பிடிக்க வேண்டியதுதான். அப்பாடா என்றது மனது. முன்பொருமுறை – இல்லையில்லை பலமுறை – ‘ரிசர்வ்’ செய்யாமல் போய் பட்ட கஷ்டம் ஞாபகம் வந்தது.

ரயில் கிளம்பிவிட்டது. அவனைப் போலவே பல பயணிகள் இடம் கண்டுபிடிக்கும் வேட்டையில் மும்முரமாக இருந்தார்கள். ஒருவழியாக அவன் கண்டுபிடித்தபோது அவனது இருக்கையில் தெனாவெட்டாக ஒரு மார்வாடி அம்மா சம்மணம் கொட்டி உட்கார்ந்து சாவகாசமாக இரண்டு மூன்று சப்பாத்திகளை உள்ளுக்கு தள்ளிக்கொண்டிருந்தது.

மகாவீரர்தான் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணியவனாக தனது டிக்கெட்டைக் காட்டினான். நல்ல வேளையாக அதற்கு மேல் எதுவும் பிரச்சனை ஏற்படவில்லை. எதிரில் உட்கார்ந்திருந்த அவளது குடும்பத்தினர் ஏதோ சொல்ல அவள் உடனே எழுந்து அங்கு சென்றுவிட்டாள். அங்கு போய் உட்கார்ந்ததும் சப்பாத்தியைத் தொடர்ந்தாள்.

வழக்கம்போல தன் ‘பேக்’கை காலுக்குக் கீழே கால் படும்படியாக வைத்துக்கொண்டு தோள்பையை தொடையின் மீது போட்டுக்கொண்டு அமர்ந்தான். வியர்த்து விட்டிருந்தது. பின்பக்க பாக்கெட்டில் இருந்த சென்ட் தடவிய கர்சீஃபை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். வியர்வையைத் துடைக்கும்போது ஒருவித குளிர்ச்சியை கழுத்து உணர்ந்தது. அது இன்பமான உண்மையான குளிர்ச்சி அல்ல. ப்ளாஸ்டிக் பூக்களிலிருந்து வாசம் வருவது மாதிரி.

சுற்றிமுற்றிப் பார்த்தான். தன் பக்கத்தில் ஒருவரும் அவர் பக்கத்தில் ஒரு பெண்ணும். எதிரில் ஒரு அம்மா ஒரு குழந்தையுடன். அவள் பக்கத்தில் ஒருத்தர். ஒரு இடம் காலியாகத்தான் இருந்தது. அந்த மார்வாடி அம்மா ஏன் அந்த இடத்தில் உட்காராமல் தன்னுடைய இடத்தில் உட்கார்ந்தாள் என்று பதிலில்லாத ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டான்.

அந்த அம்மாவை மீண்டும் பார்த்தான். அவளுக்கு எப்படியும் ஐம்பத்தெட்டிருக்கும். கழுத்தில் டாலர் செயின், கைகளில் வளையல்கள் மோதிரங்கள், பாதங்களில் கொலுசு, வாயில் சப்பாத்தி. பாவாடை கட்டி தாவனி போட்டிருந்தாள். அந்த உடை வேண்டுமென்றே வயதைக் குறைத்துக் காட்டும் முயற்சியாகத் தோன்றவில்லை. என்னவோ ஒரு பொருத்தம் அவளுக்கும் அந்த உடைக்கும் இருந்தது. அது உடலை மீறிய பொருத்தமாக இருந்தது. ஒரு வயதான மார்வாடிக் குழந்தை போலத்தான் அவள் இருந்தாள்.

கொஞ்ச நேரம் கண்களை மூடிக்கொண்டான். கண்களை மூடி இந்த உலகத்தைப் பார்க்காமல் இருப்பதுதான் எவ்வளவு அற்புதமான விஷயம் என்று தோன்றியது. ஆனால் அதை இந்த உலகம் பார்க்காமல் இருக்கும்போதுதான் செய்ய வேண்டும் என்பதுபோல அவன் கண்ணை மூடிய அந்தக் கணமே யாரோ அவன் தொடையில் இடித்துப் புரியவைத்தார்கள். தன் பக்கத்து சீட்டில் இருந்தவர்தான். ஏதோ அவசரம் போல. எழுந்து சென்றவர் போகும் அவசரத்தில் அவனைக் கலைத்து விட்டுச் சென்றிருக்கிறார். மறுபடியும் நிம்மதியாகக் கண்களை மூடவேண்டுமெனில் அவர் திரும்பி வராமல் இருக்க வேண்டும்.

அது சொல்ல முடியாது. அப்படியே வராவிட்டாலும் ஓரத்தில் அவன் உட்கார்ந்திருந்ததால் காஃபி டீ போன்ற போகின்ற வருகின்ற எல்லாருமே அவனை இடித்துக்கொண்டு போகின்ற வாய்ப்பு உண்டு என்பதால் கண்களை மூடுவதை ஒத்திப்போட்டான். இருக்கவே இருக்கிறார் ஜே.கிருஷ்னமூர்த்தி என்று தோள்பையைத் திறந்து “தெரிந்ததிலிருந்து விடுதலை” என்ற சமீபத்தில் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய அவருடைய புத்தகத்தை வெளியில் எடுத்தான்.

அழகான அட்டை. கரும் பச்சையில் கீழ்ப்பகுதி. லைட்டான பச்சையில் மேல் பகுதி. கீழே கட்டம் கட்டி ஜே.கே.யின் படம். பக்கவாட்டில். அவரைப் பார்க்க ரொம்ப அழகாக இருந்தது. ஜாதி மதங்கள் போன்ற எல்லாம் அடையாளங்களையும் மீறிய முகங்கள் அவை. உண்மையின் அழகு மட்டுமே அதில் தெரிகிறது. தனக்குள் புன்னகைத்தபடி புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான்.

“சார், இது என்ன புக் பாக்கலாமா?”.

கேள்வி கேட்டவர் எதிரில் இருந்தவர்தான். இப்போதுதான் புத்தகத்தையே திறந்திருந்தான். அதற்குள் என்ன உபத்திரவம் இது என்று தலையைத் தூக்கினான். ஒன்றும் சொல்லாமல் புத்தகத்தை அவரிடம் கொடுத்தான். அவர் அதன் தலைப்பை ஒரு நோட்டம் விட்டவுடனேயே “அடடே, Freedon from the Known அருமையான புத்தகமாயிற்றே. சார் நான் ஜே.கே.யோட ரசிகன் சார். அவரோட முப்பது புஸ்தகம் இதுவரைக்கும் படிச்சிருக்கேன் சார். கேஸட்ஸ்கூட கேட்டிருக்கேன். ரொம்ப அருமையா இருக்கும் சார். நீங்க ஜே.கே. விரும்பி படிப்பிங்களா சார்?”

படபடவென பேசிவிட்டார். மனிதர்களின் அறிவுத்தாகம் அவன் மண்டையைக் காய வைத்தது. என்ன சொல்வதென்று ஒரு கணம் யோசித்தான். “நானும் படிச்சிருக்கேன்” என்றான் பட்டும்படாமல்.

அவர் விடுவதாக இல்லை. ‘’பார்த்திங்களா சார், இதுதான் தெய்வத்தோட அருள்ங்கறது. எப்படி நாம ரெண்டு பேரும் சந்திச்சிருக்கோம் பாத்திங்களா?” என்றார்.

அவனுக்கு எரிச்சலாக வந்தது. அவரை எப்படி உடைப்பது என்று யோசித்தான். மனிதர்களை கடவுளை வைத்து எளிதாக உடைத்துவிடலாம் என்று தோன்றியது.

“தெய்வமாவது மண்ணாங்கட்டியாவது. எனக்கதிலெல்லாம் நம்பிக்கை இல்லை” என்றான் கடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு.

அவருக்கு கொஞ்ச நேரம் ஒன்றுமே தோன்றவில்லை. ஆடித்தான் போய்விட்டார். திடீரென்று வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு மவுனம் அவரைக் கவ்வியது. கடவுளை மண்ணாங்கட்டி என்று சொல்லிவிட்ட ஒரு நன்றிகெட்டவன் கையால் தொட்ட புத்தகத்தை வாங்கிவிட்டோமே என்று தோன்றியது போலிருந்தது அவர் மேற்கொண்டு அமீரைப் பார்த்த பார்வை.

திடீரென்று அவரது கண்களில் ஒரு ஒளி தோன்றியது. அவனை மடக்குவதற்கான ஆயுதம் கிடைத்துவிட்டதைப் போலிருந்தது. சற்று நிமிர்ந்து கொண்டார். தைரியமும் நம்பிக்கையும் வரும்போது மனிதர்களின் உடல் தானாகவே நிமிர்ந்துகொள்கிறது.

“சார், தப்பா நெனச்சுக்காதிங்க, அப்ப நீங்க ஏன் ஜே.கே.யைப் படிக்கிறீங்க?”

எங்க படிச்சேன்? படிக்க ஆரம்பிச்ச உடனேயேதான் கேள்வி கேட்டு நிறுத்திவிட்டீர்களே என்று சொல்லமுடியவில்லை. ஒரு கணம் அமீரும் யோசித்தான்.

“ஏன் ஜே.கே.யைப் படிக்கிறேன்னா கேட்டிங்க? அவர் ரொம்ப அழகா இருக்காரு. அதனாலதான்” என்றான்.

கடவுளாவது மண்ணாங்கட்டியாவது என்று சொன்ன பதிலைவிட மோசமான பதிலாக அது இருந்தது அவருக்கு. கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை அவருக்கு. கண்ணாடியைக் கழற்றினார். துடைத்துக் கொண்டார். ஒரு மோசமான நீள நிறத்தில் ஒரு பேன்ட் போட்டிருந்தார். சட்டையை வெளியில் விட்டிருந்தார். அரைக்கை சட்டை. அது ரொம்பவும் அழுக்காக இருந்தது. அவர் கைகள்கூட அழுக்காகத்தான் இருந்தன. குளித்தாரா என்பது தெரியவில்லை. அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. அவருக்குள் இருந்த கடவுளும் அழுக்காகத்தான் நிச்சயம் வியர்வையில் புழுங்கிக்கொண்டிருப்பார் என்று தோன்றியது அமீருக்கு.

“அப்ப அசிங்கமா இருந்தா ஜே.கே. படிக்க மாட்டிங்களா? கடவுள் இல்லைன்னு முடிவுக்கே வந்துட்டிங்களா சார்?”

அவருடயை அம்புகளைப் பார்த்தால் அவர் யுத்தத்துக்குத் தயாராகிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது. வேறு வழியில்லாமல்தான் அவர் போனால் போகுதென்று கடைசியில் ‘சார்’ போட்டுப்போட்டு பேசினார் என்பதும் விளங்கியது. ஆனால் ஒரு நாத்திகனை இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் ஆத்திகனாக மாற்றிவிட்ட சந்தோஷத்தை அடையாமல் அவர் ரயிலை விட்டு இறங்க மாட்டார் என்று தோன்றியது. சரி அழுக்குக் கடவுளா சுத்தமான சாத்தானா பார்த்துவிடலாம் என்று அவனும் முடிவு செய்து கொண்டான்.

ஒவ்வொரு சாப்பாட்டு அய்ட்டமாக எடுத்தெடுத்து இலையில் வைப்பதைப் போல இருவரும் கடவுளைப் பற்றிய தங்களது கருத்துக்களை எடுத்தெடுத்து வைத்தனர். கடவுள் சார்பாகப் பேசியவர் பரமஹம்சர், விவேகானந்தர், முகமது நபி, வேதங்கள், கீதை, பைபிள், குர்ஆன் என்று எல்லா நூல்களிலும் ஞானிகளின் வாழ்விலிருந்தும் உதாரணங்களையும் வசனங்களையும் அடுக்கிக்கொண்டே சென்றார்.

ஃப்ரெட்ரிக் நீட்சேயின் மறுப்புக்கும் வெறுப்புக்கும் தக்க பதில் சொல்லும் இயேசு கிறிஸ்துவைப் போல அவர் பேசிக்கொண்டே சென்றார். நேரம் போனதே தெரியவில்லை. இன்னும் பத்து நிமிஷத்தில் சென்ட்ரல் ஸ்டேஷன் வந்துவிடும் என்று தோன்றியதால் அதோடு கடவுளை ‘கட்’ பண்ணுவது நல்லது என்று அமீர் முடிவு செய்தான். அந்த நேரத்தில்தான் அந்த உலக அதிசயம் நடந்தது.

ஒரு சின்ன பையன். ஒரு ஐந்தாறு வயதுக்குள்தான் இருக்கும். ஒரு காலியான பிஸ்லேரி பாட்டிலின் மீது ஏறி அதை இழுத்து இழுத்து சவாரி செய்துகொண்டே வந்தான். ஊனமுற்ற சின்னப்பையன். கூட யாருமில்லாமல் தனியாகத்தான் பிச்சை கேட்டுகொண்டே வந்தான். பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது. ஒல்லியான தனது கைகளை தூக்கிக்காட்டி “பசிக்கிது” என்று சொல்லிக்கொண்டே வந்தான். சிலர் சில்லரை போட்டனர். சிலர் சும்மா பார்க்காதமாதிரி இருந்தனர். அவனுக்கு ஏதாவது பணம் தரலாம் என்று எண்ணி அமீர் தன் தோள்பையைத் திறந்து காசைத்தேடியபோதுதான் அது நடந்தது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் அதை அந்த அம்மா செய்தாள். அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அம்மாதான். சட்டென்று அந்தப் பையனை வாரி எடுத்தாள். அணைத்த மாதிரி தூக்கி எதிரில் உட்காரவைத்தாள். தனது பிஸ்லேரி பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தைக் கழுவினாள். பின் ஒரு துணியை எடுத்து அவன் முகத்தை தான் பெற்ற பிள்ளையின் முகத்தை துடைப்பதைப் போல துடைத்தாள்.

முகம் சுத்தமான பிறகு ஒரு ‘யூஸ்-அன்-த்ரோ’ தட்டை எடுத்து தன் எவர்சில்வர் தூக்குச் சட்டியைத் திறந்து அதிலிருந்து சோறு கீரை கறி எல்லாம் எடுத்து வைத்தாள். பிசைந்து ஊட்டி விட்டாள். இப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத பையனும் ஒரு எதிர்ப்பும் காட்டாமல் சாப்பிட ஆரம்பித்தான். ரொம்ப பசி போல.

எல்லா வாய்களும் விவாதங்களும் நின்று போயிருந்தன. இந்த காட்சியை அந்த ‘கோச்’சே ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருந்தது.

ஊட்டும்போது அவள் யாரையும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஏதோ தன் கடமையைச் செய்வது போலச் செய்தாள். ஊட்டி முடித்த பிறகு பையன் வாயை அவளே கழுவி விட்டு பின் தனது கர்சீஃபால் துடைத்து விட்டாள். அதற்குள் சென்ட்ரல் வந்துவிட்டிருந்தது. அவனை இறக்கி அந்த பிஸ்லேரி பாட்டில் வாகனத்தின் மீது மறுபடி ஏற்றிவிட்டு அவள் தன் அடிடாஸ் என்று போட்ட பையைத் தூக்கிக் கொண்டு இறங்கிப் போனாள்.

கடவுள் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விகளையும் விவாதங்களையும் அழித்துவிட்டு அவள் சென்றிருந்தாள். இதுதான் சமயம் என்று அமீரும் ஜே.கே.யின் ரசிகரிடமிருந்து தப்பித்து வெளியில் வந்தான்.

ஆனால் பட்டுப்புடவை கட்டி நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து தன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த கடவுளோடு பிருந்தாவனில் பிரயாணம் செய்வோம் என்று அமீர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அடிடாஸ் பையோடு கடவுள் இறங்கிப் போன திசையையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்றான்.

- அமரர் கல்கி சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது (04.09.11) 

தொடர்புடைய சிறுகதைகள்
மூன்றாவது நாளாக சிவநேசன் வீட்டுக்கு தூரமாகிப் போயிருந்தான். முதல் நாள் நடந்தது இன்னும் பிசுபிசுவென மனம் பூரா ஒட்டிக்கொண்டிருந்தது. ஆபீஸ¤க்குக் கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தான். கொடியில் வெறுப்போடு அதற்கு முதல் நாள் கழட்டி எறியப்பட்ட குழாயை எடுத்து, லுங்கியைத் தூக்கி தன் ...
மேலும் கதையை படிக்க...
புடவைத் தலைப்பை எடுத்து இடுப்பில் சொருகிவிட்டாள் தங்கப்பாப்பா. அதன் அர்த்தம் உடனே புரிந்துவிட்டது முருகராசுக்கு. அது புரிவதற்கு அவன் எந்தப் பிரயத்தனமும் செய்யத் தேவையில்லை. அதற்கு அவசியமும் அவனுக்கு இல்லை. அவள் பொறுமைக்கோட்டைத் தாண்டிவிட்டதற்கு அடையாளம் அது. அடுத்து அவள் என்ன செய்வாள் என்று ...
மேலும் கதையை படிக்க...
1 பின் சீட்டின் இடது ஓரமாக நான். வலது பக்க ஓரமாக நஜீ. முன் சீட்டில் தம்பி தீனும் நண்பர் பிலாலும். நஜீ இன்னும் ஓய்ந்தபாடில்லை. அது இப்போது ஓயவும் செய்யாது. 'என்னட வாப்பாவே ' என்று கொஞ்ச நேரம். 'எனக்கு வாப்பா ...
மேலும் கதையை படிக்க...
“இதோ நாம் நம்மோட புனித கங்கையின் கரைக்கு வந்துட்டோம். இந்த புனித நகரம் நம்மோட பாவங்களையெல்லாம் போக்க நமக்கு உதவி செய்யும்”. காசிக்கு டூர் வந்தவர்களையெல்லாம் கங்கையின் கரைக்கு அழைத்து வந்து சொல்லிக் கொண்டே போனார் எஸ்கார்ட். அவர் முகத்தில் ஒருவித ...
மேலும் கதையை படிக்க...
1 மணல் மேடுகளின்மீது அமர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். மண்ணின் ஒத்தடம். எல்லாரையும்விட உயரத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு. கடல் காற்று. ஆனால் இது இன்னும் எத்தனை நாளைக்கென்று தெரியவில்லை. ஏற்கனவே நாலைந்து மணல்மேடுகளை புல்டோஸர்களைக் கொண்டு கற்பழித்துவிட்டார்கள். இந்த ஹாஜி மணல்மேடுதான் பாக்கி. ...
மேலும் கதையை படிக்க...
தூரம்
மழையில் பூத்த மத்தாப்பு
குட்டியாப்பா
கங்கா ஸ்நானம்
அவரோகணம்

பிருந்தாவனில் வந்த கடவுள் மீது ஒரு கருத்து

  1. Santhana Gopalan says:

    அருமை… வாழ்க வளமுடன்..

Leave a Reply to Santhana Gopalan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)