Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

பழைய காலண்டரில் இரு தினங்கள்

 

இருவரும் இன்றைய தமிழ்

தினம் 1:

யாசகம் கேட்பதற்குச் சற்றும் குறைந்ததில்லை, வேலைக்கான பரிந்துரைக்காக ஒருவர் முன் காத்து நிற்கிற தருணம். ஒவ்வொரு கணமும், உலகின் ஏதோ ஒரு மூலையில் அப்படியான ஒரு நிகழ்வு நடந்துகொண்டே இருக்கிறது.

சென்னை, சி.ஐ.டி. நகரில் இருந்தது ஜெகதீசன் சார் வீடு. அவரைப் பார்த்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருந்தார். காலை எட்டு மணிக்கெல்லாம் ஜெகதீசன் சார் வீட்டை விட்டுக் கிளம்பியிருக்க மாட்டார் என்கிற நம்பிக்கையில், அவர் வீட்டுக்குப் போனேன். வெளிப்புற ‘கேட்’டில் அழைப்பு மணி இல்லை. அது உட்புற வாசல் நிலைப்படி அருகே இருந்தது. கேட்டுக்கும் உட்புற வாசலுக்கும் நடுவே ஒரு நாய் படுத்துக் கிடந்தது.

இரண்டு மூன்று முறை ”சார்… சார்…” என்று குரல் கொடுத்துப் பார்த்தேன். பதில் இல்லை.

சங்கிலியில் நாய் கட்டப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, கேட்டைத் திறந்து உள்ளே போனேன். அதுவரை பேசாமல் படுத்துக் கிடந்த நாய் எழுந்து நின்று பயங்கரமாகக் குரைத்தது. சத்தம் கேட்டு ஒரு அம்மாள் வெளியே வந்தார்.

”யாருப்பா?” என, ஒரு விரோதியைப் பார்ப்பது போலப் பார்த்தார்.

”தாம்பரத்துலேர்ந்து வரேன். சாரைப் பார்க்கணும், ஒரு வேலை விஷயமா…”

”அவர் வெளியில போயிருக்காரு. திரும்பி வர்றதுக்கு ஒன்பது மணிக்கு மேல ஆகும்” சொல்லிவிட்டு, என் பதிலைக்கூட எதிர்பார்க்காமல், வாசல் கதவைப் படாரென்று அடித்துச் சாத்திக்கொண்டு உள்ளே போய்விட்டார் அந்தப் பெண்மணி.

நான் திகைத்துப் போனேன். இப்படியுமா ஒருவர் நடந்துகொள்வார்! ஒருவேளை, நகரம் குறித்துத் தொன்றுதொட்டு இருந்துவரும் பிம்பம், சக மனிதர்கள் குறித்தான பயம் இப்படி வெளிப்படுகிறதா?

எவ்வளவு நேரமானாலும் ஜெகதீசன் சாரைப் பார்த்துவிட்டே போவது என்ற முடிவோடு, வெளியில் வந்து காத்திருந்தேன். பசித்தது. அவர் வருவதற்குள் ஒரு டீயாவது குடித்துவிடலாம் என்று பக்கத்தில் இருந்த டீக்கடைக்குப் போனேன். ஒரு டீயும் வடையும் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்தேன்.

வீடு அமைதியாக இருந்தது. நாய் பழைய இடத்தில் படுத்துக் கிடந்தது. சுளீரென்று விழுந்த காலை வெயிலைப் பொருட்படுத்தாமல் காத்திருந்தேன்.

மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. ஜெகதீசன் சார் வரவில்லை. ஒன்பதே முக்கால் வரைக்கும்கூட வரவில்லை.

ஒருவேளை நான் டீ குடிக்கப் போயிருந்த நேரத்தில் அவர் வந்திருப்பாரோ!’ இந்த எண்ணம் தோன்றியதும், எனக்கு இருப்புக்கொள்ளவில்லை.

கார்..? அவரை இறக்கி விட்டுவிட்டு வேறு வேலையாகப் போயிருக்கலாம். எனக்குத் தவிப்பு அதிகமானது. ஒரு முடிவோடு கேட்டைத் திறந்தேன். சங்கிலியிலிருந்து நாய் அவிழ்த்துவிடப்பட்டிருப்பதைக் கவனிக்கவில்லை. என் குரல்வளையைக் கடிப்பதுபோல அது வேகமாகப் பாய்ந்து வந்தது. அடி வயிற்றிலிருந்து குரைத்தபடி, முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி என் மார்பு மீது வைத்தது. பயத்தில் என்னால் அலறக்கூட முடியவில்லை.

அந்த அம்மாள் வெளியே வந்தார்.

”ஏம்ப்பா! உனக்கு எத்தனை தடவை சொல்றது? அறிவு வேணாம்? நாய் இருக்குல்ல. இப்பிடி சடார்னு உள்ளே நுழையுறியே? போப்பா. அவரு இல்ல..!”

அந்த அம்மாள் நாயைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார். நான் தலைகுனிந்தபடி வெளியே வந்தேன். முதல் தடவை நான் வந்து போனபின், அந்த அம்மாள்தான் சுதாரிப்பாக நாயை அவிழ்த்து விட்டிருக்க வேண்டும் என்று நினைக்கும்போதே, என் உடம்பு நடுங்கியது.

இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? அல்லது, இப்படித்தான் மனிதர்கள் இருப்பார்களா?

தினம் 2:

வாழ்வின் குரூரப் பக்கங்களை சென்னை எனக்குப் புரட்டிப் போட்ட வருடம் அது. ஜெகதீசன் சார் வீட்டுக்குப் போய்விட்டு வந்த பிறகு, ரொம்பவே ஒடிந்து போயிருந்தேன். அடுத்து என்ன என்கிற கேள்வி சதா உள்ளுக்குள் ஒலித்துக்கொண்டு இருந்தது. என்ன செய்கிறோம் என்கிற பிரக்ஞையே இல்லாமல் கால் போன போக்கில் திரிந்தேன். இலக்கில்லாமல் சுற்றிவிட்டு, ஒரு கோயிலில் உட்கார்ந்திருந்தபோதுதான், உத்திரகுமாருக்கு போன் செய்யலாம் என்று தோன்றியது.

கேரளாவில் இருக்கும் அடிமாலியில், உத்திரா அப்போது இருந்தார். எல்லாவற்றையும் அவரிடம் கொட்டினேன். ஆறுதலாகப் பேசிவிட்டு, அவர்தான் அந்த யோசனையைக் கூறினார்…

”சென்னையை விட்டு வெளியில் எங்கேயாவது கொஞ்ச நாள் போயிட்டு வாயேன்!”

எனக்கும், எங்கேயாவது போனால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால், எங்கே போவது?

அவரே ஒரு யோசனையும் சொன்னார்… ”திருவண்ணாமலையில் என் நண்பர்கள் சில பேர் இருக்காங்க. நாளன்னிக்கி கலை நிகழ்ச்சி மாதிரி ஒண்ணு நடத்தறாங்க. விடிய விடிய நடக்கும். போயிட்டு வா. மனசுக்கு ஆறுதலா இருக்கும்” என்று சொல்லி, நண்பர்களின் பெயர்களையும் முகவரியையும் கொடுத்தார்.

நான் திருவண்ணாமலையில் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது, இரவு இரண்டு மணி. உத்திரா சொல்லியிருந்த ‘பல்லவன்ஆர்ட்ஸ்’ பூட்டிக்கிடந்தது.

இனி என்ன செய்வது?

திக்குத் தெரியாமல் நின்றுகொண்டு இருந்தேன். பக்கத்தில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில்இருந்து ஒரு டிரைவர் இறங்கி வந்தார்.

என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ”பல்லவன் ஆர்ட்சுக்கு வந்தீங்களா?” என்றார்.

”ஆமா!”

”அடடா! எல்லாரும் இப்ப தான் போனாங்க. அட்ரஸ் தெரியுமா?”

”தெரியாது.”

”சரி, வாங்க!”

எங்கே கூப்பிடுகிறார், ஆட்டோவில் போக எவ்வளவு கேட்பார் என்று எதையும் யோசிக்காமல், அவர் பின்னால் போனேன். ஆட்டோ வளைந்து வளைந்து ஊரைத் தாண்டிப் போனது. எனக்குப் பயமாக இருந்தது. இவர் என்னை எங்கே அழைத்துப் போகிறார்? வழியில் நிறுத்திக் கத்தியைக் காட்டினால், என்னிடம் கொடுப்பதற்குக்கூட ஒன்றும்இல்லையே!

இருட்டைக் கிழித்துப் பார்க்க முயன்று தோற்றுப்போனது ஆட்டோவின் முன்விளக்கு வெளிச்சம். பதினைந்து நிமிடம் ஓடிய பின், ஒருவழியாக ஆட்டோ நின்றது. அது ஒரு சிறிய வீடு. ஆட்டோ டிரைவர் இறங்கிப்போய், அந்த வீட்டுக் கதவைத் தட்டினார்.

கன்னங்கரேலென்று இருட்டு நிறத்தில் ஒரு மனிதர் வெளியே வந்தார். அடர்த்தியான தாடி வேறு. கைலியை இறுக்கிக்கொண்டு, ”யாரு?” என்று கேட்டார்.

”உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்காரு. வரட்டா?” ஆட்டோ டிரைவர் காசுகூட வாங்காமல் திரும்ப, அந்த மனிதர் சொன்னார்…

”காலையில கொஞ்சம் வீட்டுக்கு வந்துட்டு போப்பா! வேலையிருக்கு.”

”சரி.”

ஆட்டோ கிளம்பிப் போனது.

பின்பு, அந்த மனிதர் சிரித்த முகமாக என் பக்கம் திரும்பினார்… ”சொல்லுங்க?”

”உத்திரா அனுப்பினாரு.”

அவ்வளவுதான்… அதற்குப் பிறகு அவர் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. உள்ளே அழைத்துப் போனார்.

”சாப்பிட்டாச்சா?” என்று கேட்டார்.

நான் தலையசைத்தேன். ஒரு கட்டிலைக் காண்பித்தார். போர்வையையும் தலையணையையும் கொண்டுவந்து கட்டிலில் போட்டார். ஒரு செம்பில் தண்ணீர் கொண்டுவந்து தலைமாட்டுக்கருகே இருந்த திண்டில் வைத்தார். டேபிள் ஃபேனின் காற்று நன்கு மேலே விழும்படி திருப்பி வைத்தார்.

”நல்லா தூங்குங்க. காலையில பேசிக்கலாம்.”

அவர் கட்டிலுக்கருகே தரையில் படுத்தார். உடனே தூங்கிப் போனார்.

அடுத்த நாள் காலையில்தான் அவருடைய பெயரே எனக்குத் தெரியும்.

இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? அல்லது, இப்படித்தான் மனிதர்கள் இருப்பார்களா?

- 04th ஜூன் 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
நான் இன்று ஒரு கழுதையைப் பார்த்தேன். 'அடச்சீ... கழுதை! இதெல்லாம் ஒரு விஷயமா?’ என உங்களுக்குத் தோன்றலாம். ஏதோ ஒரு கிராமத்தில், அன்றாடம் கழுதை அல்லது கழுதைகளைப் பார்ப்பவராகக்கூட நீங்கள் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், ஒரு மாலை வேளையில், ...
மேலும் கதையை படிக்க...
பெரியம்மை வாகனம்

பழைய காலண்டரில் இரு தினங்கள் மீது ஒரு கருத்து

  1. Visu says:

    நன்றாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)