கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 15,845 
 

காலை எழுந்ததிலிருந்தே ரம்யா பதற்றமாக இருந்தாள்.

தான் பணிபுரியும் ப்ராஜெக்ட் இறுதி நிலையில் இருப்பதினாலும், அந்த IT நிறுவனத்தின் நற்பெயரை தக்கவைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடிய தருணமாகவும் இருந்ததினால் இரவு-பகல் பாகுபாடின்றி உழைத்துக் கொண்டிருந்தான் அவளது கணவன் ரமேஷ் கடந்த மூன்று மாதங்களாகவே. அவ்வகையில் அன்று வீட்டிலிருந்தவாறே நைட் ஷிப்ட் பார்த்துவிட்டு அதிகாலை ஐந்து மணிக்குதான் உறங்கச் சென்றிருந்தான்.

எப்போதும் ரமேஷ் உறங்கச் செல்லும்முன் ரம்யா எழுந்து அவனுக்கு காலை உணவாக இட்லியோ, தோசையோ தயார் செய்துக் கொடுத்து, அவன் உறங்கச் சென்ற பிறகு தனது தந்தையான பாண்டுரங்கனை எழுப்பி அவருக்கு காபி கொடுத்து தனது அன்றாடங்களில் தன்னைக் கரைத்துக் கொள்வாள். ஆனால், கடந்த இரு தினங்களாகவே அவளுக்கு அதிகரித்து வந்த முதுகு வலியால் ரமேஷ் அவனாகவே தனக்கு ‘அதிகாலை’ உணவை சமைத்து, சாப்பிட்ட பின்பு உறங்கச் செல்வது வழக்கமாயிருந்தது.

நிறைமதி பிறந்ததிலிருந்தே அவ்வப்போது வருகிற முதுகுவலிதான் என்றாலும் இம்முறை சற்றே அதிகமாகத்தான் இருந்தது ரம்யாவுக்கு. திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு பிறகும், இரண்டு கருச்சிதைவுகளுக்குப் பிறகுமாக தனது கைக்குள் தங்கியவள் நிறைமதி என்கிற நிறைவை, மகிழ்வை முழுமையாக அனுபவிக்க முடியாதபடியாக அவளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு இருப்பதாகவும், அவளது ஐந்து வயதுவரை மிகப்பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படியும் மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார். அதனாலேயே நிறைமதியை வெகு கவனமாக இருவரும் பார்த்துக் கொண்டனர். வெளியே செல்வதாக இருப்பினும் யாரோ ஒருவரின் முழு கவனமும் அவள் மீதே பதிந்திருக்கும். இரண்டே வயதுடையவளாதலால் நிறைமதிக்கு சிலது பழகியும், பலது புரியாமலும் குழந்தைமையுடன் விளையாட்டின் ஆர்வமிகுதியில் லயித்துப் போவதுண்டு.

அன்றைக்கு ரம்யா எழும்போது வலி வெகுவாக குறைந்திருந்தது. ஆனால், அவள் எழுவதற்கு முன்பாகவே ரமேஷ் வந்து படுத்துறங்கிப் போயிருந்தான். உழைத்த களைப்பு அவன் உறக்கத்தில் தெரிந்தது. நிறைமதி அவனின் மார்புச் சூட்டின் கதகதப்பில் கட்டியணைத்தவாறு உறங்கிக் கொண்டிருந்தாள். தன்னுடன் இருக்கும் வரை தன்பாலும், அப்பா வந்த மறுநிமிடமே தன்னைவிட்டு அவர்வசம் செல்வதும் இப்பெண்பிள்ளைகளின் இயல்பு போலும் என புன்னகைத்தவாறே படுக்கையைவிட்டு எழுந்தாள். தானும்கூட தன் சிறுவயதில் அப்படியிருந்தது அவள் நினைவுக்கு வந்தது. ஆனால், நிறைமதி தூக்கத்தில்கூட அவளது தந்தையை கண்டறிபவளாக இருப்பதை நினைத்தவாறே சமயலறைக்கு செல்லும்போது வீட்டின் பிரதானக் கதவு பூட்டப்படாமல் இருப்பதைக் கண்டு அதிர்ந்தாள். பிறகு உட்புறமாக தாளிட்டு தனது தந்தையை எழுப்ப சென்று அவரை அறையில் இல்லாதது கண்டு மீண்டும் வெளிக்கதவை திறந்து பார்த்தபோது அவரது செருப்பு அங்கில்லை என்றபோதுதான் அவளுக்கு பதற்றம் இன்னும் அதிகமாயிற்று.

பதற்றத்தின் ஒருபாதி அவர் இல்லாததற்கும், மறுபாதி தன் கணவன் எழும் முன் அவர் வந்துவிட வேண்டுமென்பதாக இருந்தது அவளுக்கு. அப்பா இவ்வாறு சொல்லிக்கொள்ளாமல் செல்வது இது முதற்முறையல்ல. இப்போதும்கூட ரமேஷ் வந்து படுப்பதற்கும், தான் எழுவதற்குமான இடைப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள்தான் அவர் சென்றிருக்க வேண்டும் என மனதில் கணக்கிட்டுக் கொண்டாள். அவர் போவதும், வருவதும் பிரச்சனையில்லை. ஆனால், தான் எங்கே செல்கிறார் என சொல்லிக்கொள்ளாமல் செல்வதால் எழுபது வயது முதுமையானவர் வீடுவந்து சேரும்வரை மனம் கொள்கிற பதற்றம் முன்பைவிட ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு அதிகரித்தவண்ணமிருந்தது.

“ஆனால், சாவி எப்படி அவர் கைக்கு கிடைத்தது?” என சட்டென அவள் மனதில் அந்த கேள்வி விஸ்வரூபமாய் எழுந்தது. அம்மா இறந்த பிறகு தங்களோடு வந்து தங்கிவிட்ட அப்பா கடந்த மூன்றாண்டுகளில் பத்துமுறைக்கும் மேலாக இப்படி சென்றதுண்டு. அதனாலேயே கடந்த முறை அவர் சென்றபோது இனி வீட்டின் நுழைவாயில் கதவை ஒவ்வொரு நாளும் பூட்டி சாவியை தங்கள் அறையில் வைத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டனர். ஆனால், தொலைக்காட்சி மேசையின் மேலிருந்த பூட்டையும், அதன் வயிற்றில் தனது தலையை சொருகி வைத்திருந்த சாவியையும் பார்த்த போது நேற்று தான் பூட்டாது தவறவிட்டதை நினைத்து தலையில் அடித்துக் கொண்டாள்.

ரம்யாவுக்கு ஒன்றும் ஓடவில்லை. பலமுறை வற்புறுத்தியும் வெளியே செல்லும் போது தனது அலைபேசியை தன்னுடன் எடுத்துச் செல்லாமல் இருப்பதால் அவரை தொடர்புகொள்ள முடியாது தவிப்பதை அவளால் இன்றுவரை தவிர்க்க முடியவில்லை. இரண்டாம் தளத்தில் இருக்கும் தனது வீட்டின் பால்கனிக்கும், தங்களது அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவாயில் தெரிகிற தனது வீட்டின் வெளிப்புற நடைபாதையின் முன்பகுதிக்கும் மாறி மாறி நடந்துக் கொண்டே இருந்தாள் – அவளது தந்தையின் வருகையை எதிர்பார்த்தபடி. கீழே சென்று குடியிருப்பின் காவலாளியை பார்த்து விசாரிக்கலாமா என அவள் யோசித்தபோதே நிறைமதி “அம்மா…” என அவர்களின் அறையைவிட்டு ரம்யாவை நோக்கி நடந்து வந்தாள். இனி தன் மகளை கவனிப்பதற்குத்தான் சரியாக இருக்குமென அவளை வீட்டின் கூடத்தின் மையத்திலிருக்கும் ஊஞ்சலில் அமர வைத்து ஒவ்வொரு வேலையாக பார்க்க ஆரம்பித்தாள்.

தனது அப்பா வருவதற்கு ஒருவேளை தாமதமானாலோ அல்லது அவர் வருவதற்குமுன் தன் கணவர் எழுந்துவிட்டாலோ நடக்கக்கூடிய சம்பவங்களை நினைத்துப் பார்க்கவே ரம்யாவுக்கு பயமாக இருந்தது.

எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது பாண்டுரங்கன் கடந்தமுறை சொல்லாமல் வெளியே சென்று வரும்வரை. சொல்லப்போனால், ரமேஷுக்கு தனது மாமனாரை வைத்துப் பார்த்துக் கொள்வதிலோ அவர் வயதின் வெளிப்பாடாக செய்கிற காரியங்களிலோ ஒரு புகாருமில்லை. தனது மச்சினன் ஜெகன் உதிர்த்த ஒரு சொல்தான் ரமேஷை இப்போது பிடித்து ஆட்டுகிறது.

“என்ன ரம்யா, நீங்க நல்லா பாத்துப்பீங்கதானே உங்க வீட்ல அப்பாவை விட்டுட்டு இப்படி கடல் கடந்து வந்து நாங்க கஷ்டபடுதோம். இப்படி ஒவ்வொரு முறையும் அவர் எங்க போனாருன்னே தெரியலைனு சொல்றீங்க? எங்க மனசு இங்க கெடந்து அடிச்சுக்கறது உங்களுக்கு எங்க தெரியப்போகுது?” என அவன் கனடாவிலிருந்து தொலைபேசியில் சொன்ன மறுநிமிடம் ரம்யாவின் அலைபேசியை சுக்குநூறாக ரமேஷ் உடைத்தெறிந்தான் .

ஆனால், அதே ஜெகன் தனது அம்மா இறந்தபோது நடந்துகொண்ட விதமும், இப்போது நடந்துக்கொள்கிற விதமும்தான் ரமேஷையும், ரம்யாவையும் வெகுவாக காயப்படுத்தியது.

மூன்றாண்டுகளுக்கு முன் ரம்யாவின் அம்மா – பகவதி – மாரடைப்பால் இறந்து போன போது எல்லாவற்றையும் முன் நின்று கவனித்துக் கொண்டது ரமேஷ்தான். கடைசி நேரத்தில் வந்து சேர்ந்த ஜெகன் செய்தவை இரண்டே விஷயங்கள்தான். ஒன்று இறுதிச் சடங்கு. மற்றொன்று பந்தல் முதல் சுடுகாடுவரை செய்யப்பட்ட செலவுகளை சரியாக இருக்கிறதா என மிகச் சரியாக கணக்குப் பார்த்து செலுத்தியது.

அப்போதும்கூட தனது மாமனாரின் எதிர்காலம் குறித்த பேச்சை ஆரம்பித்து வைத்தது ரமேஷ்தான். ரமேஷ் பேசாமலிருந்திருந்தால் ஜெகனும் அமைதியாக கனடாவிற்கு திரும்பியிருக்கக்கூடும். அதற்கு வழி வகுக்காமல் இருக்கவே ரமேஷே உரையாடலை தொடங்கி வைத்தான் பதிமூன்றாம் நாள் எல்லா காரிய நிகழ்வுகளும் முடிந்த அன்றிரவே.

“என்ன மச்சான்? அப்பாவை இப்படியே இங்க தனியா விட்டுட முடியுமா?”

“ஆமாங்க மாமா, எனக்கும் அதே யோசனைதான்” என்ற போது ஜெகனின் மனைவி சுந்தரி மிக சாதுர்யமாக ரமேஷின் பின்புறமுள்ள கதவுக்கு வெளியே நின்று கொண்டாள் தனது கண் ஜாடைகளுக்கு ஏற்றவாறு ஜெகனை ஆட்டுவிப்பதற்காக.

அதை எதிர்பார்த்த ரமேஷ் உடனே சமயலறையிலிருந்த ரம்யாவை அழைக்கவும், அவளும் தன் அண்ணி நின்றுக் கொண்டிருந்த கதவின் மறுமுனையில் வந்து நின்றாள்.

“ம்… என்ன முடிவு பண்ணிருக்கீங்கன்னு சொன்னீங்கன்னா அதுக்கு ஏத்த மாதிரி பண்ணிட்டு நாங்களும் சென்னைக்கு கெளம்பிடுவோம்”

“அது வந்து மச்சான்…. நானே உங்கள்ட்டயும், தங்கச்சிட்டையும் பேசணும்னு இருந்தேன். நீங்களே கேட்டுட்டீங்க……..” என இழுத்தவாறே தரையைப் பார்க்கவும் ரமேஷ் தான் எதிர்பார்த்ததுதான் என்பதை உறுதி செய்துக்கொண்டான்.

“எனக்கு இன்னும் ஆறு மாசத்துல ப்ராஜெக்ட் முடிஞ்சுடும். அதுக்கப்பறம் எப்படி பாத்தாலும் இந்தியாவுக்குத்தான் வந்தாகணும். அது வரைக்கும் அப்பாவை இங்க இருக்கிறதைவிட சென்னைல உங்ககூட இருந்தா அவருக்கும் ஒரு சேஞ்சா இருக்கும். நாங்களும் அங்க கொஞ்ச நிம்மதியா இருப்போம். அப்பறம் நாங்க இங்க வந்த பின்னாடி அப்பாவை எங்களோட கூப்பிட்டுக்கறோம். என்ன சொல்ற ரம்யா?” என லாவகமாக காயை ரமேஷிடமிருந்து தனது தங்கையிடம் நகர்த்தினான்.

“ஆமாங்க. அண்ணன் சொல்றதும் கரெக்ட்தான். அவரை இங்க தனியா விடறதுக்கு எனக்கும் பயமாதான் இருக்கு” என்ற ரம்யாவை திரும்பி பார்க்காமல் “சரி, அப்ப அண்ணன்-தங்கச்சி நீங்களே பேசி முடிவு பண்ணிக்கோங்க” என அந்த அறையைவிட்டு வெளியேறிய ரமேஷ் மொட்டை மாடிக்குச் சென்று ஒரு மூலையில் நின்றவாறே வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் – நிலவற்ற வானில் மேகங்கள் அதை தேடி அலைவதைப் போலிருந்தது அவனுக்கு.

அரைமணி நேரம் கழித்து மேலே வந்த ரம்யா, “என்னங்க… என்ன இங்க நின்னுகிட்டு இருக்கீங்க? கோவமா?” என்றபோது பதிலேதும் பேசாமல் திரும்பிக் கொண்டான்.

“கொஞ்சம் நான் சொல்றதை கேளுங்க” என்றவளை பார்க்காமலேயே “ம்ம்ம்…அதான் அண்ணன்-தங்கச்சி நீங்களே பேசி முடிவெடுத்தாச்சுல. இன்னும் என்ன கேக்கறதுக்கு இருக்கு?

“கொஞ்சம் கோவப்படாம கேளுங்க” என ரமேஷை தன் பக்கம் திருப்பி, “அப்பாவை இங்க தனியா விட்டுட்டு போய் நாளைக்கே ஏதாவது அவசரம்னா சென்னைல இருந்து திருச்சிக்கு நாமதான் கெளம்பி வரணும். அதுக்கு பேசாம அவரை நம்மளோட கூப்பிட்டு போய்ட்டா ஆறு மாசம் கழிச்சு ஒரேடியா அண்ணனோட அனுப்பிச்சிடலாம்”

“ம்… அதுவும் ஒருவகையில சரிதான். ஆனா, உங்க அண்ணனதான் எப்படி நம்பறதுன்னு மனசு ஓரத்துல ஒரு பல்லி கெடந்து கத்துது” என்ற தன் கணவனை ஒருவழியாக சம்மதிக்க வைத்து அடுத்த வாரத்தில் தன்னுடன் பாண்டுரங்கனை அழைத்துச் சென்றாள்.

ஆனால், அவர்கள் எதிர்பாராவிதமாக அடுத்த ஆறு மாதத்தில் கனடாவில் தனது குடும்பம் சகிதமாக குடியுரிமைப் பெற்று அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டான் ஜெகன். ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா வருவதுண்டு. அப்போதும்கூட பெயரளவில் இரண்டு நாட்கள் சென்னையில் தனது தங்கை வீட்டில் தங்கிவிட்டு மீதமிருக்கும் ஒரு மாத விடுமுறையில் பெரும்பாலும் அவன் மனைவியின் வீட்டிலிருப்பதும், ஊர் சுற்றுவதுமாக இருந்துவிட்டு திரும்பி விடுவான். மாதத்தின் முதல்நாள் ரமேஷுக்கு சம்பளம் வருகிறதோ, இல்லையோ விடிவதற்கு முன்பாகவே ஜெகனிடமிருந்து பணம் வந்துவிடும். பணத்தைக் கொண்டு பிறரது வாயடைக்கும் வித்தை தெரிந்தவன் அவன்.

அதன்பிறகு ரம்யாவால் ரமேஷிடம் தனது அப்பா குறித்தோ, அண்ணன் குறித்தோ ஒன்றும் சொல்ல முடிவதில்லை. அண்ணனுக்கு அவன் பையில் நிறைகிற பணமும், அவனது குடும்பமும், எதற்கும் பொறுப்பேற்காத தான்தோன்றித்தனமும்தான் பிரதானம்.

ஆனால், அப்பா ஏன் இப்படி இருக்கிறார்? அந்த காலத்திலேயே பொறியியல் படித்தவர். ரயில்வேயில் நல்ல பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். குடும்பத்திற்கு ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து செய்தவர். ஆனால், அம்மா இறந்தபின்பு முற்றிலுமாக மாறிப் போயிருந்தார். நேரத்திற்கு தனது வேலைகள் நடக்க வேண்டுமென பெரிதாக எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தார். காபி கொடுக்க பத்து நிமிடங்கள் தாமதமானாலும் தன்னை யாரும் இப்போது கவனித்துக் கொள்வதேயில்லை, “உங்கம்மா இருந்திருந்தா எனக்கு இந்த நெலமை வந்துருக்குமா?” என ஒவ்வொன்றாக புலம்பஆரம்பிப்பார்.

கடந்தகால கசப்பின் ஒவ்வொரு துளியையும் தனது நினைவுகளால் மீண்டும் ருசிக்கத் துவங்கியிருந்தார். உடலில் ஏற்படுகின்ற பலவீனம், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை என ஒவ்வொன்றாக தனது மனதில் வைத்து பலசமயங்களில் விஷமாக வார்த்தைகளை வெளிப்படுத்துவதுண்டு. அது அவரை மட்டுமல்லாது வீட்டிலேயே இருக்கும் ரம்யாவையும் வெகுவாக பாதித்தது. அதுகூட தனது ஒரு கருச்சிதைவுக்கு காரணமாக இருக்கக்கூடுமோ என அவள்எண்ணுகிற அளவுக்கு பாண்டுரங்கனின் செயல்களும், சொற்களும் வெகுவாக மாறியிருந்தன பச்சையம் இழந்த முதிர்ந்த செடியொன்றின் சாயலைப் போல.

இருப்பினும், அவளது தந்தையின் செய்கைகள் குறித்து ரமேஷிடம் எந்த புகார்களும் சொல்லாது தனக்குள்ளாகவே வைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டாள். ஏற்கனவே அவளது அண்ணனின் செய்கையால் கோபத்திலுள்ள ரமேஷ் இதனால் மேலும் கோபமடையாது நிலைமையை முடிந்தளவு தனது கட்டுக்குள் வைத்திருந்தாள்.

நிறைமதி பிறந்தபிறகு இவையனைத்தும் வெகுவாக மாறியிருந்தன. அவர் ரம்யாவைப் பார்த்துக் கொண்டதைப் போலவே தனது பேத்தியையும் பார்த்துக் கொண்டார். அதுகுறித்து ரமேஷுக்கும், ரம்யாவுக்கும் பெரும் நிறைவிருந்தது. ஒருவகையில் அவர் இங்கிருப்பதுகூட நல்லதுக்குதான் என அவர்கள் மனம் மாறிக்கொண்டிருந்த தருணத்தில்தான் ஜெகன் சொன்ன அந்தவொரு வார்த்தை எல்லாவற்றையும் கலைத்துப் போட்டது.

இனியொருமுறை பாண்டுரங்கன் சொல்லாமல் அவர் இஷ்டத்துக்கு வெளியே சென்றால் அவருக்கு அந்த வீட்டில் இடமில்லை என ரமேஷ் திட்டவட்டமாக ரம்யாவிடம் எச்சரித்திருந்தான். அதனாலேயே அனுதினமும் மிக ஜாக்கிரதையாக இருந்த ரம்யா இப்போது செய்வதறியாது தனது தந்தையின் வரவை எதிர்பார்த்து வீட்டின் வாசலை நோக்கியவாறு அமர்ந்திருந்தாள்.

மணி பதினொன்று ஆகியிருந்தது. நிறைமதிக்கு இட்லி கொடுத்து இரண்டு மணிநேரமாகியிருந்ததால் அவளுக்காக பால் காய்ச்சிக் கொடுத்தாள். அவ்வப்போது ரமேஷ் எழுகிற அறிகுறி தெரிகிறதா என அறைக் கதவின் இடைவெளியில் எட்டிப்பார்த்துக் கொண்டாள். தொலைக்காட்சியில் ஏதோவொரு கேலிச்சித்திரத்தை மெல்லிய சத்தத்துடன் போட்டுவிட்டு நிறைமதியின் கவனத்தை அதில் குவியச் செய்து சமயலறையில் மத்திய உணவை தயார் செய்தபடியே வெளிப்புற கதவுக்கும், பால்கனிக்கு மாறி மாறி முக்கோண வடிவில் நடந்துக் கொண்டிருந்தாள்.

நிமிடங்கள் அதிகரிக்க அதிகரிக்க சென்னையின் கோடையைத் தாண்டியும் அவளுக்கு வியர்த்தது . அப்போது எதிர்பாரா விதமாக ரமேஷின் அலைபேசிக்கு அழைப்பு வரவும் ரம்யா பதற்றமானாள். மெதுவாக அவர்களது அறைக்கதவின் இடைவெளியில் எட்டிப்பார்த்தபோது அவன் படுத்துக்கொண்டே பேசிக் கொண்டிருந்தான். பேசும் தன்மையால் அது அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு என்பதை இலகுவாக யூகித்துக் கொண்டாள். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் அழைப்பு நீடிக்கவே ரமேஷ் நேராக கூடத்திற்கு எழுந்து வரக்கூடும் என நினைக்க அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பேசாமல் தானாகவே ரமேஷிடம் சென்று சொல்லிவிடலாமா என மனம் அழைக்கழிந்த போது பாண்டுரங்கன் மிகச் சரியாக வீட்டுக்குள் நுழைந்தார்.

வெடித்துவந்த அழுகையை தனக்குள்ளாக அடக்கிக் கொண்டு, “எங்கப்பா போனீங்க?” என்றவளின் பதற்றத்தை கிரகிக்கத் தெரியாத பாண்டுரங்கன், “இல்லம்மா, ரொம்ப நாளாச்சேன்னு காலைல வாக்கிங் போய்ட்டு அப்படியே கோயம்பேட்டுல காய், பழமெல்லாம் சீப்பா கெடைக்குமேன்னு வாங்கிட்டு வந்தேன்” என்றவரை அவசரமாக அமரச் செய்து அவர் வாங்கி வந்த பைகளை ரமேஷ் கண்ணுக்கு புலப்படாதபடியாக சமையலறையின் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு கூடத்திற்கு வந்து, “நீங்க வெளிய போய்ட்டு வந்தது அவருக்கு தெரிய வேணாம். கொஞ்சம் அமைதியா இங்கேயே உக்காருங்க” என்ற போது மிகச் சரியாக ரமேஷ்,” ரம்யா……” என்றழைத்தான்.

பயந்தபடியே சென்று அறைக்கதவை அவள் திறந்த போது, “சாப்பாடு ரெடியாம்மா. ரொம்ப பசிக்குது” என சோம்பல் முறித்தவாறே கேட்கவும் அவளும் பெருமூச்சுவிட்டபடி, “பல் தேச்சுட்டு வாங்க. எடுத்து வைக்கறேன்” என எல்லாவற்றையும் கூடத்தில் அடுக்கிவைத்தாள்.

சில நிமிடங்கள் கழித்து வந்த ரமேஷ், “வாங்க மாமா, சாப்பிடலாம்” என பாண்டுரங்கனை பார்த்து அழைத்தவாறே தொலைக்காட்சியில் சேனலை மாற்றிக் கொண்டிருந்தான்.

“குட்டிம்மா, நீங்களும் வாங்க. தாத்தாவோட சாப்பிடலாம். தாத்தா உங்களுக்கு ஊட்டி விடறேன்” என தனது கையிலிருந்த பருப்பு சாத உருண்டையை நிறைமதியின் வாயில் திணித்த போதுதொலைக்காட்சியில் அச்செய்தி ஒளிபரப்பப்பட்டது.

“நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பின் அடுத்தகட்டமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்- தொற்றின் சங்கிலித்தொடராக இருக்கக்கூடுமோ என ஆய்வில் சந்தேகிக்கப்படுகிறது. கோயம்பேட்டில் பணியாற்றி வந்த 39 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் விரிவான செய்தி விளம்பர இடைவேளைக்குப் பிறகு…”

Print Friendly, PDF & Email

1 thought on “பதற்றம்

  1. மனம், முதியஇளைகர்களின் மனஒட்டம் மனைவி இறப்புக்கு பின்னால் மனநிலை ,ஆழ்மனதில் ஏற்படும்பாதுகாப்புகுறைபாட்டில் உள்ளார்ந்து இயங்கும்மனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *